நாளெலாம் போற்றுவோம் !
( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )
ஊசிமுதல் உணவுவரை
உழைப்பாலே வருகிறது
உழைக்கின்றார் வாழ்வெல்லாம்
உயர்வுபெற மறுக்கிறது
காசுள்ளார் கைகளிலே
உழைப்பெல்லாம் போகிறது
கவலையுறும் உழைப்பாளி
கண்ணீரில் மிதக்கின்றான் !
சமத்துவங்கள் பேசுகிறார்
சங்கங்கள் அமைக்கின்றார்
நினைத்தவுடன் மாநாடு
நிறையவே வைக்கின்றார்
அனைத்துமே உழைக்கின்றார்
அனுசரணை என்கின்றார்
ஆனாலும் உழைக்கின்றார்
அல்லலிலே இருக்கின்றார் !
நிலத்தில் வியர்வை சிந்தியே
நித்தம் உழைக்கும் மக்களின்
நலத்தை மனதில் எண்ணியே
நடத்தல் நீதி அல்லவா
பணத்தை முடக்கி வைத்திடும்
குணத்தை உடைய மனமெலாம்
உழைப்பை மதிக்கும் நிலையினை
உலகில் வந்திடச் செய்குவோம் !
பாடுபடுவார் பலவற்றைப் பெறுதல் வேண்டும்
பக்குவமாய் அவர்வாழ்வு மலர்தல் வேண்டும்
நாட்டினிலே அவருழைப்பு போற்றல் வேண்டும்
நலம்விளைக்கும் நாளாய் மே திகழவேண்டும் !
உழைப்பினை நல்குவார்
உயர்ந்திடச் செய்குவோம்
உழைப்பினை நினைவுறும்
நாளதைப் போற்றுவாம்
நலத்துடன் உழைப்பவர்
வாழ்ந்திட வாழ்த்துவோம்
நாட்டிலே உழைப்பாரை
நாளெலாம் போற்றுவோம் !