குறளின் கதிர்களாய்…(166)
செண்பக ஜெகதீசன்
இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
-திருக்குறள் -314(இன்னா செய்யாமை)
புதுக் கவிதையில்…
துன்பம் நமக்குச் செய்தவரைத்
தண்டிப்பது,
தலைகுனிந்து அவர் நாணும்படி
அவருக்கு
நன்மையே செய்திடலாகும்…!
குறும்பாவில்…
துன்பம் செய்தவரைத் தண்டித்தல்,
துணிந்து அவர் வெட்கமுற
நன்மை செய்திடலே…!
மரபுக் கவிதையில்…
கெட்ட யெண்ணம் கொண்டேதான்
கேடு நமக்குச் செய்தவரைத்
தட்டித் தண்டனை வழங்கிடவே
துன்ப மவர்க்குத் தரவேண்டாம்,
திட்ட மிட்டே அரவர்நாண
தீங்கு யேதும் செய்யாமல்,
கிட்டும் நன்மை செய்திடல்தான்
கொடுமை மிக்க தண்டனையே…!
லிமரைக்கூ..
செய்வோர் சிலர்நமக்குக் கேடு,
நாணமுறத் தண்டனையாயத் தீங்கின்றி
நிறைவேற்ற நன்மையையே நாடு…!
கிராமிய பாணியில்…
கெடுதல் செய்யாத கெடுதல் செய்யாத
கேடுநமக்குச் செஞ்சவனுக்கும்
கெடுதல் ஏதுஞ் செய்யாத..
கெடுதல் நமக்குச் செஞ்சவனும்
கண்டு வெக்கப்படுமளவு
அவுனுக்குக்
கூடுதல் நன்ம செய்யிறதுதான்
குடுக்கிற பெரிய தண்டனயே..
அதால,
கெடுதல் செய்யாத கெடுதல் செய்யாத
கேடுநமக்குச் செஞ்சவனுக்கும்
கெடுதல் ஏதுஞ் செய்யாத…!
–செண்பக ஜெகதீசன்…