க. பாலசுப்பிரமணியன்

கேட்டல் ஒரு ஆற்றல் (Listening Skills)

education

பல இடங்களில் நாம் மற்றவர் பேச கேட்டுக்கொண்டிருந்திருக்கின்றோம். சில நேரங்களில் சொற்பொழிவுகளில் மேடையில் யாராவது பேசும்பொழுது அதில் சற்றும் விருப்பமும் அல்லது ஈடுபாடுமின்றி அமர்ந்தோ அல்லது உறங்கிக்கொண்டோ இருந்திருக்கின்றோம். பல நேரங்களில் வேலைபார்க்கும் இடங்களில் மற்றவர்கள் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுது நமது கவனம் எங்கோ இருந்திருக்கின்றது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும்பொழுது ஒரு கேள்விகேட்டால் நமது ஈடுபாடும் கவனமும் வேறு எங்கோ இருந்ததினால் பதில் சொல்லமுடியாமல் விழித்ததும் உண்டு. பல நேரங்களில் விவாத மேடைகளில் யாராவது பேசும்பொழுதும் பட்டிமன்ற பேச்சுக்களைக் கேட்கும் பொழுதும் அவைகளில் நாம் ஒன்றிப்போய் நம்மை மறந்து நேரத்தை மறைந்து அமர்ந்து அங்கே உட்கார்ந்துகொண்டிருந்திருக்கின்றோம்.

பேசுவது ஒரு கலை என்றால் அதைக்கேட்பதும் ஒரு கலை. பல நேரங்களில் மேடைப்பேச்சாளர்கள் “கூட்டம் கூடாவிட்டாலும் சரி, ஆழ்ந்து கவனிக்கக்கூடியவர்கள் ஐந்து பேராவது இருந்தாலும் போதும். பேசலாம்” என்று சொன்ன சொற்கள் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

கேட்டல் என்பது நாம் நம்முடன் பேசுபவருக்கு கொடுக்கின்ற மரியாதைக்கு அறிகுறி. நம்மில் பலர் காதுகளில் வாங்கிக்கொள்கிறோமே தவிர “கேட்பதில்லை” .  காற்று பேசுகின்றது.. அலைகள் பேசுகின்றன..பறவைகள் பேசுகின்றன. விலங்குகள் பேசுகின்றன, அத்தனையும் ஒலியின் வடிவங்கள்தானே?

கேட்டல் என்பது நாம் மனமுவந்து ஒருவருக்கோ பலருக்கோ காட்டுகின்ற ஆக்கப்பூர்வமான செயல்.

கற்றலில் கேட்டலுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் நாம் கேட்கும் பொழுது இருக்கவேண்டிய முக்கிய நிலைப்பாடுகள்:

 1.  நமது மனம் முழுவதுமாக அந்தச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

2.  அந்தக் கற்றல் நமக்குத் தேவையானது, பயன்படக்கூடியது என்ற மனப்பாங்கு இருக்கவேண்டும்.

 1. பேச்சாளரைப் பற்றிய சொந்த விருப்பு வெறுப்புக்கள் நம்மை பாதிக்கக்கூடாது
 2. சொல்லப்படும் கருத்துக்கே முதல் மரியாதை கொடுக்க வேண்டும்.
 3. கேட்கும் நேரத்தில் அதை உள்வாங்க வேண்டுமே தவிர, அதன் தரத்தையும் அதன் உண்மையையும் அவசரப்பட்டு ஆராயவோ அல்லது முடிவெடுக்கவோ கூடாது,
 4. சொல்லப்படும் கருத்துக்கள் நமக்கு விருப்பமற்றனவாக இருந்தால் அதற்கு உடன் எதிர்ப்புத் தெரிவித்தாலோ அல்லது முரண்படுதலையோ தவிர்க்கவேண்டும்.
 5. சொல்லப்படும் கருத்தை விருப்பத்துடன் உள்வாங்கி பின் உரிய நேரத்தில் அதை அலசி ஆராய்தல் அவசியம்.
 6. கற்கும் நேரத்திலும் கேட்கும் நேரத்திலும் கவனச் சிதறலை தவிர்க்க வேண்டும்.
 7. நல்ல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப் படும்பொழுது நடுவில் தனக்குத் தெரிந்ததையும் கூறவேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் தெரிவித்தல் தவறு.
 8. கேட்கும் நேரத்தில் அமைதி காத்தல் அவசியம்.

வீட்டிலும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்  கேட்கும் கலையையும் திறன்களையும் வளர்த்தல் மிக அவசியமாகின்றது. அதனால் மொழிப் பயிற்சியிலும் கற்றலிலும் ‘கேட்டலுக்கு” முதல் இடம் கொடுக்கப்படுகின்றது.

பல நேரங்களில் சரியாக காது கொடுத்துக் கேட்காமல் நாம் தவறான முடிவுகளுக்கும் வந்து விடுகின்றோம். பல நேரங்களில் நாம் மற்றவர்கள் பேசி கேட்கும் பொழுது அவர்கள் சொல்வதையும் அவர்களைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனால் நாம் அவர்கள் பேசி முடிக்கும் முன்பே அதற்கான பிரதிபலிப்புக்களைக் கொடுத்துவிடுகின்றோம். இது ஒரு தவறான செயல். பல நாடுகளில் இதை ஒரு தனி மனிதனின் திறனாய்வில் ஒரு பலவீனமாகக் கருதுகின்றனர். அது மட்டுமல்ல, பல நேர்காணல்களில் இதை ஒரு பலவீனமாகவே கருதுகின்றனர். எனவே, பள்ளிகளிலும் வீடுகளிலும் “கேட்கும் திறனை” வளர்த்தல் மிக அவசியம். பொதுவாக, குழந்தைகள் பேசும்பொழுதே பெற்றோர்கள் முழு கவனத்துடன் கேட்கும் பொழுது அதே “திறன்” வளரும் குழந்தைகளுக்கு ஓர் ஆற்றலாக வளர்கின்றது.

கேட்டல் திறனால் குழந்தைகளுக்கு என்னென்ன வளர்ச்சிக்குறிகள் தென்படுகின்றன என்பதை ஆராய்ச்சிகள் விளக்குகின்றன.

 1. கேட்டலின் பொழுது கற்பனை வளம் அதிகமாகின்றது
 2. கேட்கும் கருத்துக்கள் எண்ணங்களை வளப்படுத்துகின்றன.
 3. கேட்கும் கருத்துக்கள் நம்பிக்கையையும் வாழ்க்கைத் திறனையும் உறுதிப்படுத்துகின்றன.கேட்கும் திறன் மொழிவளத்தையும் கருத்தாற்றலையும் ஊக்குவிக்குகின்றன.
 4. கேட்கும் திறன் மற்றவர்களுடன் நல்லுறவையும் கருத்துப்பரிமாற்றங்களுக்கு நல்ல வழிகளையும் வாய்ப்பினையும் ஏற்படுத்துகின்றது                     ஆகவேதான் மழலைப் பருவத்தில் குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் நேரத்தில் கீழ்கண்ட திறன்களின் ஒருமைப்பாடு மற்றும் சமன்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.
 1. கேட்டல் – பார்த்தல்
 2. கேட்டல் – செய்தல்
 3. கேட்டல் – திருப்பிச் சொல்லுதல்
 4. கேட்டல் – அறிதல்
 5. கேட்டல் – புரிதல்

இந்தக் கேட்டல் என்ற செயல் மூளையில் எவ்வாறு மற்ற செயல்களோடு ஒருங்கிணைத்து வடிவெடுக்கின்றது என்பது பற்றிய மூளை-நரம்பியல் ஆராய்ச்சிகள் நம்மை வியக்க வைக்கின்றன. இதைத் தொடர்ந்து பார்ப்போம்

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *