மீனாட்சி பாலகணேஷ்

யசோதை மிகவும் களைத்துப் போயிருந்தாள். பொழுது புலரும் முன்பே எழுந்து, இரவு தோய்த்து வைத்திருந்த தயிர்ப்பானைகளைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு, அவற்றினைக் கடைந்து வெண்ணையெடுத்து, சிலவற்றைத் தயிராகவே வைத்து, சட்டிகளில் மோரை ஊற்றி, உறிகளில் கட்டி, கள்ளச்சிறார்களின் கைக்கெட்டாதபடி உறிகளை உயரே ஏற்றிக்கட்டி……. பொழுது போனதே தெரியவில்லை.

ame
குழந்தை கிருஷ்ணன் இவள் தயிர் கடையும்போது பக்கத்தில் தான் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். சின்னதாக ஒரு வெண்ணெய் உருண்டையைக்கூட அவனுடைய குட்டிக்கையில் கொடுத்தாளே! அரைநொடியில் அதைத்தின்றும் விட்டான் குழந்தை! இன்னும் கேட்டான். இவளுக்குத்தான் பயம். இத்துணை சிறிய குழந்தை வெண்ணெயாகத் தின்றுகொண்டே இருந்தால் வயிறு என்னாகும் என்று பயந்தாள். அவனும் சிறிது நேரம் அவளுடைய முகத்தையே நோக்கியபடி இருந்துவிட்டு, எங்கோ தவழ்ந்து சென்றுவிட்டான்.

அன்று இப்படித்தான், எங்கேயாவது போய்விடுகிறான்; சட்டிபானைகளை உருட்டி விஷமம் செய்கிறான் என்று அவனை உரலில் கட்டிப்போட்டிருந்தாள். அவனோ அந்த உரலையும் இழுத்துக்கொண்டுபோய் இரண்டு மருதமரங்களுக்கிடையே புகமுடியாமல் புகுந்து, இழுத்துச் சாய்த்து…….. அந்த நினைப்பில் “கண்ணா!” என்று நெட்டுயிர்த்தாள் அந்த அன்னை.

அந்தக் குட்டனைத்தான் இப்போது எங்கே எனத் தேடினாள்.

அதோ! ‘சல், சல்,’ எனக் காற்சதங்கைகளும், அரையில் கட்டியுள்ள மாணிக்கச் சதங்கையும் ஒலிக்க வருகிறான் கிருஷ்ணன். ஆணிப்பொன் சதங்கை ஒன்று இடையில்… நேற்றுதான் தந்தை நந்தகோபன் அதனைப் புதியதாக தனது அருமைக் குழந்தைக்கு செய்து அணிவித்திருக்கிறான்.

என்னவொரு காட்சி, தாயான யசோதையின் கண்களையும் கருத்தையும் குழந்தையின் அழகுவடிவம் நிறைக்கிறது. குழந்தைக்கும் அம்மாவைப் பார்த்துவிட்ட ஆனந்தம், தலையை நிமிர்த்தி, வாயில் முத்துப்போன்ற பற்கள் பளிச்சிடப் புன்னகை புரிகிறான். அவனை அள்ளியணைக்கக் கைகளை அவன்பால் நீட்டுகிறாள். பிஞ்சுக்கைகளை இணைத்துக் கொட்டுகிறான் கிருஷ்ணன். தலையை மகிழ்ச்சியில் அப்படியும் இப்படியும் அசைக்கும்போது சுருண்ட கரிய குழல்கற்றைகள் புரண்டாடுகின்றன. தாயின் மனம் பாகாய் உருகி வழிகிறது…

ame2
நாம் கவிதையில் ரசிக்கும் இந்தக் கண்கொள்ளக் காட்சியை, பெரியாழ்வார் மனக்கண்ணில் கண்டு சிலிர்க்கிறார். “கண்ணா! அன்று (பண்டு) மகாபலியிடமிருந்து மூன்று அடி நிலத்தை தானமாகப் (காணி) பெற்றுக் கொண்ட உன்னுடைய சின்னஞ்சிறு கைகளால் சப்பாணி கொட்டுவாய்!” என வேண்டுகிறார். யசோதைக்குத் தன் குட்டன் அந்தப் பரந்தாமனே என்பதை உணர முடியாது. அவன் அவளுடைய கண்மணியான சிறுகுழந்தை. அவள் ரசிப்பதனை ஆழ்வார் தமது நோக்கில் தாமும் இறையனுபவமாகக் கொண்டு ரசிக்கிறார்; போற்றுகிறார்; பாடி மகிழ்கிறார்.

இதுவே இறைவனைக் குழந்தையாகக் கொண்டாடும் அடியாருள்ளம்!

வாழ்த்திப்போற்றும் வைபவம்!

அன்பில் பொங்கிப்பெருகும் பக்திப்பிரவாகம்!

பிள்ளைத்தமிழுக்கு அடிகோலிட்ட அழகிய பாசுரம்!

இதுவே பெரியாழ்வார் திருமொழி காட்டும் கிருஷ்ணனின் சப்பாணிப்பருவம். குழந்தை கிருஷ்ணனின் விளையாட்டுகளை எல்லாம் பட்டியலிட்டுப் பாடிய பாசுரங்களே பெரியாழ்வார் திருமொழி!

பிள்ளைத்தமிழ் எனும் அற்புதமான ஒரு சிற்றிலக்கியத்தின் முன்னோடி!

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப, மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால் செய்த ஆய்ப்பொன் உடைமணி
பேணிப் பவள்வாய் முத்திலங்கப் பண்டு,
காணிகொண்ட கைகளால் சப்பாணி,
கருங்குழல் குட்டனே! சப்பாணி.
(பெரியாழ்வார் திருமொழி-75- திவ்வியப்பிரபந்தம்)

*****

காட்சி மாறுகிறது!

நிலாமுற்றத்தில் நந்தகோபனும் யசோதையும் அமர்ந்துகொண்டு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வானில் முழுநிலா பளீரிடுகிறது. குழந்தை கிருஷ்ணன் தாயின் மடியிலமர்ந்து கைகளைக் சேர்த்து சப்பாணி கொட்டுகிறான். அவனை மெல்லத் தன் மடியினின்றும் எழுப்பி, எதிரே அமர்ந்துள்ள நந்தகோபனின் மடியில் உட்கார அனுப்புகிறாள் யசோதை. அவன் அணிந்துள்ள மாணிக்கக் கிண்கிணியும் அரைநாணும் அசைந்தாடுகின்றது ஒரு அழகாக உள்ளது; தத்தித் தத்தி நடக்கும்போது நெற்றிச்சுட்டி தாழ்ந்தாடுவது இன்னொரு அழகாக உள்ளது. யசோதையின் தாயுள்ளம் பெருமிதத்தில் விம்முகிறது.

“உன் தந்தையின் மடிமீது சென்று ஏறி அமர்ந்துகொண்டு சப்பாணி கொட்டு குழந்தாய்!” என ஆசைபொங்க குழந்தையிடம் வேண்டுகிறாள் அவள்.

“……………………..உங்கள் ஆயர்தம்
மன்அரைமேல் கொட்டாய் சப்பாணி!

மாயவனே கொட்டாய் சப்பாணி,” என்பன பாசுர வரிகள்.

தன் மடியில் வந்தமர்ந்து மழலைபேசி, சப்பாணி கொட்டி மகிழும் குழந்தையை உச்சிமுகர்ந்து, கட்டியணைத்து மகிழும் நந்தகோபன் குழந்தையை ஆசைபொங்கப் பார்த்து ரசிக்கிறான். காதணிகள் ஒளிவீசிப் பிரகாசிக்கின்றன. அதற்கும் மேலே முல்லையரும்புப் பற்கள் முத்துப்போல ஒளிவீசிப் பளீரிடுகின்றன. இப்போது அவன் கிருஷ்ணனை யசோதையின் மடியிலிருத்தி அழகுபார்க்க ஆசைப்படுகிறான்.

எப்போதுமே குழந்தையை அணைத்து, உச்சிமுகர்ந்து, முத்தமிட்டு மகிழும் தாயோ தந்தையோ, அக்குழந்தையைத் தாய் அல்லது தந்தையின் மடிமீதிருத்தி, அது செய்யும் குறும்புகளை ரசித்து அழகுபார்க்கவும் விரும்புவர். அதனால்தான் இப்போது நந்தகோபன், “உன் அம்மையின் மடிமீதமர்ந்து சப்பாணி கொட்டாய்,” என வேண்டுகிறான் போலுள்ளது.

‘நின்மணி வாய்முத்து இலங்க,நின் அம்மைதன்
அம்மணி மேல்கொட்டாய் சப்பாணி
ஆழியங் கையனே! சப்பாணி.’ என்பன பெரியாழ்வார் திருமொழி வரிகள்.

வானில் நிலவெழுந்து இப்போது உலா வருகின்றது. பால்போன்ற முழுநிலா. “வானத்து அம்புலியைப்பார் கண்ணா! உனக்குப் பால்சோறு தரும் வெள்ளித்தட்டு போல இல்லையா?” எனக்கூறுகிறாள் யசோதை. குழந்தைக்கு அது அஃறிணைப்பொருளல்ல. தனது விளையாட்டுத் தோழன். “அம்புலி மாமா! என்னோடு விளையாட இங்கே வா,” எனப் பிஞ்சுக்கையை ஆட்டி ஆட்டி அழைக்கிறான் கிருஷ்ணன்.

“யசோதை நங்காய்! இதனைப்பார்! உன்மகன் செய்யும் குறும்புகளைப்பாராய்!. அவன் தன்னோடு விளையாட அம்புலியை அழைக்கிறான் பார்,” எனக்கூறி, குழந்தையின் சமர்த்தைக் கண்டு அவனை அணைத்துக் கொண்டு கொஞ்சி மகிழ்கிறான் நந்தகோபன். கைகளைக் கொட்டியவண்ணம் ‘கலகல’வெனச் சிரிக்கிறான் கண்ணன்.

பாசுரத்தைப் பாடும் நாம் புளகம்கொண்டு மகிழ்கிறோம். தம் மனக்கண்ணில் கிருஷ்ணனின் இவ்விளையாட்டுகளைக்காணும் பேரருள் பெற்றவரல்லவோ பெரியாழ்வார்?

‘தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வான்நிலா அம்புலி சந்திரா! வாஎன்று
நீநிலா, நின்புகழா நின்ற ஆயர்தம்
கோநிலாவு, கொட்டாய் சப்பாணி,
குடந்தைக் கிடந்தானே சப்பாணி,’ என்பன புல்லரிக்கவைக்கும் பாசுர வரிகள்.

வளரும் சிறுகுழந்தை ஒவ்வொரு விளையாட்டாகப் பயின்று, கை, கால் முதலியவற்றை அசைத்துச் செய்யும் செயல்களால் நம்மை மகிழ்விக்கிறது. இந்தச் செயல்களை வரிசைப்படுத்திப் பாடுவதே பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம். சப்பாணிப்பாருவத்தில் கைகளை மட்டுமே கொட்டவேண்டுமென்பதில்லை. தவழுதல், தளர்நடை நடத்தல் ஆகிய பிற செயல்களையும் செய்யும். தாயும் சப்பாணிகொட்டும் குழந்தைக்கு அம்புலிமாமாவை ஒரு விளையாட்டுத் தோழனாகப் பரிச்சயப்படுத்தி வைப்பாள். ஆகவே அம்புலிப்பருவமும், சப்பாணிப்பருவமும் இணைந்ததொரு பாடலை இங்கு நாம் கண்டு மகிழ இயன்றது.

பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இவ்வாறே பாடல்களைக் காணலாம்.

சப்பாணிப்பருவத்தைப் பாடும்போது புலவர்களுக்குக் குழந்தையின் கைகள் பாடுபொருளாகின்றன. அச்சிறுகைகள் இறைவன் கைகளாகச் செய்த பெருஞ்செயல்களை எல்லாம் கூறிப் பாடிப் போற்றுவது அடியார் வழக்கம். பெரியாழ்வாரும் ஒரு பாடலில் தன் சிறுகுட்டனின் கைகள் பஞ்சபாண்டவர்களுக்குத் தேரோட்டிய பெருமையைப் பாடிப்பரவுகிறார்.

ame1
நூற்றுவரான கௌரவர்கள் இந்த உலகம் முழுவதனையும் தாமே அரசாளப் பேராசை கொண்டனர். உலகிற்கே தந்தையானவர் திருமால்; அவர் சொற்பேச்சினைக் கேட்காமல் பஞ்சபாண்டவர்கள் மீது போர் தொடுத்தனர் நூற்றுவர். அவர்கள் அனைவரும் மாண்டுபோகும்படிச் செய்து தனது கைகளால் குதிரையின் கடிவாளங்களைப் பற்றி அர்ச்சுனனுக்குத் தேரோட்டியவன் கண்ணன். அத்தகைய கைகளால் சப்பாணி கொட்டுவாயாக என வேண்டுகிறார். ‘இந்த உலகத்து நிகழ்வுகள் அனைத்துமே இறைவன் திருவுள்ளப்படி நடக்கும்,’ அல்லவா? அதன்போலவே உலகத்தோருக்கு நீதியையும் அறத்தையும் விளக்க எழுந்ததே மகாபாரதம் எனும் இதிகாசம். அது காட்டும் செயல்களனைத்துமே கிருஷ்ணனால் நிகழ்த்தப்பட்டது என்பது அடியவர் கருத்து.

‘தாரித்து நூற்றுவர் தந்தைசொற் கொள்ளாது
போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்த மன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி
தேவகி சிங்கமே! சப்பாணி,’ என்பன பாசுர வரிகள்.

இதன் கடைசிவரி மிக்க நயமும் பொருளும் வாய்ந்தது. ‘தேவகி சிங்கமே,’ என்கிறார். யசோதையும் நந்தகோபனும் கண்டுகளிக்கச் சப்பாணிகொட்டிய கிருஷ்ணன் உண்மையில் தேவகியின் வயிற்றுப் பிறந்த குழந்தை. சந்தர்ப்பவசத்தால் யசோதையிடம் வளர்கிறான். அவளையும் மறக்காமல், ‘தேவகியின் மகனான சிங்கமே!’ எனப் போற்றிப் பாடுகிறார் பெரியாழ்வார்.

இதுபோலும் எத்துணையோ நயங்கள்! இன்னும் கண்டு களிப்போம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.