படக்கவிதைப் போட்டி 109-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
பறக்கும் புறவினைப் படப்பெட்டிக்குள் மடக்கிவந்திருப்பவர் திரு. சத்யா. இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.
இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம்!
’காடுகொன்று கட்டடப் பயிர் வளர்த்த மனிதனால் பறவையினங்கள் உயிர்வாழ்வதே கேள்விக்குரியாகிவிட்டதே!’ என வேதனைப்படுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
மனிதனால்…
காடு கொன்று
கட்டிடப் பயிர் வளர்த்ததில்,
கண்டுமுதல் அமோகம்..
கூடுகட்டி
மாடிகளில் வாழும்
பறவை வாழ்க்கைக்கு
மாறிவிட்டான் மனிதன்..
கூடுகட்டி
குடும்பமாய் வாழ்ந்த
பறவையெல்லாம்
கூண்டோடு காலி..
இருக்கும் ஒன்றிரண்டும்
இருப்பிடம் தேடுகின்றன-
இலக்கில்லாமல் பறந்து…!
*****
’மனிதனிடம் உயிர்நேயம் பேச்சில் மட்டுமே; மூச்சில் இல்லை. ஆனால் பாரை அளந்துவரும் பறவையின் சிறகுகளுக்கு அத்தகு பேதம் ஏதுமில்லை!’ என்கிறார் மா. பத்ம பிரியா.
யாதும் ஊரே யாவரும் கேளீர்
மானுட தர்மத்தில்,
எல்லை தாண்டிய நேயம் பேச்சில் தான்
எள்ளளவும் இல்லை மூச்சில் தான்
பாரளவை சிறையெடுக்கும் பறவைகளின்
சிறகுகளுக்குத் தெரிவதில்லை பேதங்கள்
வெண்புறாவின் விலாசம் தேடினால்
பிரபஞ்சம் முழுவதுமே பறத்தலின் சுதந்திரம்
வாழ்தலின் போது வானமே எல்லை
சிதறிய கண்டங்களில்
சிதறுண்ட நெஞ்சங்கள்
மானிட வம்சாவளியின் வகுக்கப்பட்டச் சட்டங்கள்
சமாதானப் புறவிடம் தூது சொல்லி
சம்மட்டியால் அடிக்கும் ராஜ தந்திரம்
மனிதநேயம் காட்டி மாயை செய்வதும்
மானுட தர்மம் ஆதலால்
வெண்சிறகசைவில்,
உலக உருண்டையின் மொத்தமும்
உயிரின நேயத்தைச் சொல்லிடும்
சின்னஞ்சிறு மழலையின் மொழிகளில் செப்பிடும் கீதங்கள்
யாதும் ஊரே யாவரும் கேளீர்!
*****
’சுற்றுச்சூழல் சீர்கேடும், பொழில்களின் அழிவும் எழிலார் பறவையினங்களின் வாழ்வை அழித்துவிட்டன. இதோ… மீளா உலகை நோக்கிப் புறப்பட்டுவிட்ட ஒரு பறவையின் இறுதிப்பயணத்தைப் பாருங்கள்!’ என்று வருத்தத்தோடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் திரு. சி. ஜெயபாரதன்.
இறுதிப் பயணம்
கரிவாயு நிரம்பி
நகரெங்கும் புகைமூடிப்
போச்சு!
மூச்சுவிடத் தூய
காற்றில்லை!
நரகமாய்ப் போச்சு நானிருந்த
நகரமெல்லாம்!
குடிநீரில்லை !
குடியிருக்க மரமில்லை!
மரமிருந்தால்
பச்சை இலையில்லை!
தின்னக்
காய் கனிகள் இல்லை!
தரையில் கிடக்கும்
காய்ந்த இலைகளை
எலும்பான மாடுகள் தின்னும்!
துப்பாக்கி ஏந்தி வருகிறான்
சுட்டுத் தின்ன
என்னை!
நகர் விட்டுப் போகிறேன்
மனிதன் தின்பதற்கு
இரையாவேனா?
இல்லை,
கரிவாயுச் சூட்டில் வெந்து
எரிந்து போவேனா?
தவிப்பெனக்கு இந்தப்
புவி வாழ்வில்!
வாழ்வில்லை! போகிறேன் !
பட்டினியில்
மீளா உலகுக்கு!
*****
பறவையின் விண்வெளிப் பயணத்தைக் கவிஞர்கள் தமக்கே உரிய கவிக்கண்கொண்டு இரசனையோடு விளம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டு!
***
மனிதவாழ்க்கையின் வெற்றி இரகசியம் உழைப்பிலும் முயற்சியிலுந்தான் ஒளிந்துகிடக்கின்றது. அதனைக் கண்டுணர்ந்த வள்ளுவர்,
”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்” என்று ஊழை வெல்லும் உழைப்பின் உயர்வை உலகுக்கு உணர்த்தினார். அதை நினைவுறுத்தும் வகையில் வானில் சிறகுவிரித்துச் செல்லும் புறவின் சிறகுகள் இரண்டையும் உழைப்பு மற்றும் முயற்சியின் குறியீடுகளாக உருவகித்த கவிதை ஒன்று கருத்துக்கு விருந்தாய் அமைந்தது.
அக்கவிதை…
உயர்வு விண்ணைத் தொடும் கட்டிடங்கள்!
மனித வெற்றியின் பட்டயங்கள்!
உழைப்பு என்பது ஒரு சிறகு!
முயற்சி என்பது மறு சிறகு!
இவ்விரண்டு சிறகாலே
உச்சம் தொடலாம் மறக்காதே!
பிள்ளையின் உயர்வு தாயின் மகிழ்ச்சி!
கவிதையின் உயர்வு மொழியின் மகிழ்ச்சி!
நீரின் உயர்வு நிலத்தின் மகிழ்ச்சி!
மழையின் உயர்வு மரத்தின் மகிழ்ச்சி!
மரத்தின் உயர்வு பறவையின் மகிழ்ச்சி!
நிறைவின் உயர்வு வாழ்க்கையின் மகிழ்ச்சி!
செல்வத்தின் உயர்வு கொடையின் மகிழ்ச்சி!
வெளிச்சத்தின் பின்னே இருள் இருக்கும்!
உயர்வின் பின்னே தாழ்வு இருக்கும்!
இரண்டையும் ஒன்றாய் நினைப்பவர்க்கு
வாழ்க்கையில் என்றும் மகிழ்விருக்கும்!
’உயர்வும் தாழ்வும் வாழ்வெனும் நாணயத்தின் இருபக்கங்கள். தாழ்விலே துவளாது, மனிதனும் பறவையைப் போல் அயர்வின்றி உழைத்தால் வாழ்விலே வெல்லலாம்!’ என்று நம்பிக்கையூட்டும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
நடுவர் திருமிகு. மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு,
சிறந்த கவிதையாய்த் தேர்ந்தெடுத்த கவிதையில் முதல் ஆறுவரிகளே படத்தைப் பற்றிச் சொல்கின்றன. அடுத்த பனிரெண்டு வரிகள் குறிப்பிட்ட போட்டிப் படத்துக்கு ஏற்ற வரிகள் அல்ல.
பாஸ்மார் : 33%
சி. ஜெயபாரதன்.
அன்புமிகு ஜெயபாரதன் ஐயா,
தங்கள் ஐயம் நியாயமானதே!
”உழைப்பு என்பது ஒரு சிறகு!
முயற்சி என்பது மறு சிறகு!
இவ்விரண்டு சிறகாலே
உச்சம் தொடலாம் மறக்காதே!” என்ற அடிகள் என்னைக் கவர்ந்ததாலேயே திரு. பழ. செல்வமாணிக்கத்தைச் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்தேன். முதல் ஆறு அடிகளைத் தொடர்ந்துவருபவை படத்தில் இருக்கும் பறவை சிறகை விரித்ததுபோல கவிஞரும் தன் கற்பனைச் சிறகை (படத்தைத் தாண்டி) அகல விரித்ததால் எழுந்தவையாகத் தெரிகின்றன. 🙂
ஐயா, எத்தனையோ கவிதைகளை ’ஓரிரு வரிகளில் ஈர்க்கப்பட்டே’ நான் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்ததுண்டு. அவ்வரிசையில் இக்கவிதையையும் சேர்த்துக்கொள்ளலாம்.
நன்றி!
அன்புடன்,
மேகலா
நான் எழுதிய இந்த கவிதையை திறனாய்வு செய்து எழுதிய கவிஞர் திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு என் நன்றி.
உயர்வை மையமாக கொண்ட நிழற்படம் என்பதால், எது உயர்வு என்று சொல்ல முற்பட்டேன் .உயர்வு என்றால் தாழ்வும் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை சொல்லி இருக்கிறேன்.தாங்கள் வழங்கிய மதிப்பெண்களை நன்றியுடன் பெற்றுக் கொள்கிறேன்.
நடக்க ஆரம்பிக்கும் குழந்தை தடுமாறி விழுந்தாலும், ஊக்கம் கொடுக்கும் தாய் என, நான் எழுதிய கவிதையை சிறந்த கவிதையாக தேர்வு செய்த திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.