நீர்நிலை ஆதாரங்களும் மாநில அரசுகளின் செயல்பாடுகளும்

0

பவள சங்கரி

இன்று இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. ஒவ்வொரு முறை பருவகால மாற்றங்கள் ஏற்படும்போதும் நாம் வாயளவில் கூறிக்கொண்டிருக்கும் வரும்முன் காப்போம் என்ற திட்டங்களை உண்மையிலேயே செயல்படுத்தி வந்துள்ள சில மாநிலங்களில் நீர் ஆதார விகிதாச்சாரங்கள் மேம்பட்டிருப்பதை அறிந்து பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. கேரளா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் இதில் அடங்கும். ஆந்திரா மாநிலம் இன்று வறட்சியில் தவித்தாலும் வரும் ஆண்டுகளில் தங்களுடைய வாழ்வாதாரங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் அனைத்து நதிகளையும் இணைக்கும் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேரள மாநில மக்களோ, அரசை மட்டுமே நம்பி இருக்காமல், அங்குள்ள கிராம நிர்வாகங்களே அந்தந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 200 கிணறுகள் வரை தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவும், தெலுங்கானாவும் ஆழ்துளை கிணறு போடுவதைத் தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கர்நாடக அரசாங்கமோ ஒரு படி மேலேபோய் இஸ்ரோவின் உதவியுடன் சாட்டிலைட் மூலமாக நீர் ஆதாரங்களைக் கண்டுபிடித்து அந்தந்த இடங்களில் மட்டும் ஆழ்துளை கினறுகள் தோண்ட திட்டமிடுகின்றது. 800 மீட்டர் ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, அபரிமித நீராதாரங்களைக் கண்டுபிடித்து தங்களின் சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் 12.5 கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் இத்திட்டம் எந்த அளவிற்கு வெற்றியடையும் என்று கணிக்க முடியாதவகையில் இதனுடைய செலவினங்களும் அதிகம் என்பதோடு, அதிக அளவில் ஆழம் தோண்டுவதால் நில அதிர்வு போன்ற பின் விளைவுகளையும் சந்திக்க நேரலாம் என்று இயற்கைவள மேம்பாட்டு ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளதையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

நமது தமிழக அரசு இப்பொழுதுதான் தூர் வாரும் பணியை மெல்ல முன்னெடுத்துள்ளது. முதல் கட்டமாக மேட்டூர், பெருஞ்சாணி போன்ற 5 அணைக்கட்டுகளில் தூர் வாரும் பணியை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் நேற்று அறிவித்துள்ளார். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தூர் வாரப்படும் இந்த வண்டல் மண் ஏக்கருக்கு 1 டன் என்ற விகிதத்தில் அவர்களுக்கேக் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார். இதில் எந்தவித குளறுபடியும் இல்லாமல் அனைத்து விவசாயப்பெருமக்களுக்கும் வளம் நிறைந்த இந்த வண்டல் மண் குறை இல்லாமல் கிடைக்க வழி செய்யவேண்டும். வாழ்வாதாரம் காக்கப்போராடும் விவசாயப் பெருமக்கள் தங்கள் கவனத்தை இதன்பாலும் செலுத்தி பயன்பெற வேண்டியதும் அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் நம் தமிழகம் பருவகால மாற்றங்களை எதிர்கொள்ள ஏதுவாக வரும் முன் காப்போம் என்ற செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறுவதால் ஏற்படும் இழப்புகள் மற்ற மாநிலங்களைவிட அதிகமாகவே உள்ளதை மறுக்க இயலவில்லை. இன்று வறட்சியில் அவதியுறும் மக்கள், மழைக்காலங்களில், மலைப்பிரதேசங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்புகளையும், போக்குவரத்து இடையூறுகளையும் ஏற்படுத்துவதையும் பற்றி கவலைகொள்வதே இல்லை. மண் பிடிப்பைத் தரக்கூடிய பெரிய மரங்களை வெட்டிவிட்டு தேயிலை பயிரிடுவோர் அந்த இடங்களில் பாதுகாப்புக்காக தடுப்புச்சுவர்கள் கட்டுவதில்லை. அதே மரங்களால்தான் மழைவளம் பெறுகிறோம் என்பதையும் கவனம் கொள்வதில்லை என்பதும் வறட்சிக்குக் காரணமாகிவிடுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *