இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 235 )

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பு நிறைந்த வணக்கங்கள். இனியதொரு வாரத்திலே இன்புறு வாசக நெஞ்சங்களோடு சங்கமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உலகத்தின் இயக்கம் நுட்பமானது, நுணுக்கமானது. தானும் சுற்றிக் கொண்டு ஆதவனையும் சுற்றி வருகிறது இப்பூமி. சுழலும் இந்த பூமியின் இயக்கத்தின் நுட்பத்தை உணர்ந்து கொள்ளாமல் இப்பூமியின் மீது ஏதோ சில ஆண்டுகள் மட்டும் வாழ்ந்து மடியும் நாம் எமது மனங்களுக்குள் எத்தனையோ ஆழமான ஆசைகளைத் தேக்கி வைத்துக் கொண்டு வாழ்கிறோம். எல்லாம் என் செயல் எனும் ஆணவமிக்க மனிதர்களுக்கும்,எல்லாம் அவன் செயல் எனும் ஆதாரமற்ற மனிதர்களுக்கும் மத்தியில் ஏதோ ஒரு தளத்தில் பல்லாயிரக்கணக்கான நாம் எமது வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறோம்..

இந்த வாழ்க்கை எனக்குக் கிடைத்த ஒரு பரிசு அதை மனமகிழ்வோடு வாழ்ந்து முடிப்பதுதான் எமது தார்மீகக் கடமை எனும் அடிப்படை உண்மையை பல சமயங்களில் மறந்து வாழத் தலைப்படுகிறோம். எம் ஒவ்வொருவர் மீதும் வாழ்க்கை தூக்கிப் போடும் சவால்கள் வித்தியாசமானவை, வினோதமானவை. அவை இனம்,மதம், ஜாதி, நிறம் என எவ்விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. ஆனால் அதை எதிர்கொண்டு வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் நாம் மட்டும் எமக்குள் இருக்கும் பேதங்களை பூதாகரமாக்கி அவற்றின் பேதமைகளை அடிப்படையாகக் கொண்டு வாழத் தலைப்படுகிறோம். அதற்கு ஏதுவாக நாம் சார்ந்துள்ள எமது மதங்களிலுள்ள விளங்கிக் கொள்ள முடியாத வியாக்கியானங்களுக்கு எமது பாணியில் விளக்கம் கொடுத்து எமது செயல்களை நியாயப்படுத்திக் கொள்கிறோம்அதற்கு கலாச்சாரம் என்று பெயரிட்டு எமது அடுத்த தலைமுறைகளின் கால்களில் விலங்குகளை மாட்டி விடுகிறோம்.

மனிதாபிமானத்துக்கு மதம் இல்லை, இனம் இல்லை, நிறம் இல்லை. அடுத்தவரை எம்மைப் போல மதித்து , அவர்களுக்குரித்தான கெளரவத்தைக் கொடுத்து வாழவேண்டும் எனும் உண்மை பலசமயங்களில் எமக்குப் புலப்படுவதில்லை. . எமது வாழ்வு இப்புவியினிலே எத்தனை காலம் நிலைக்கப் போகிறது என்பதை அறிந்தவர் எவருமிலர். குணப்படுத்தப்பட முடியாத நோய்கள் பல பலரைக் காவு கொள்கிறதுஓரிடத்தில் கொடுக்கும் இயற்கை ஓரிடத்தில் பறித்துக் கொள்கிறது. அதுதான் இயற்கையின் சமநிலைத் தத்துவமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படியான ஒரு சூழலில் தான் இங்கிலாந்தில் நடைபெற்ற இரு விசித்திரமான வழக்குகளை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளதுஸ்ரூஸ்பரி எனும் இடத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 67 வயதான விரிவுரையாளர் நோயல் கான்வே என்பவர். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இவர் குணமாக்கப்பட முடியாத மோட்டர் நியூரோன்எனும் வியாதியைக் கொண்டிருக்கிறார் என்று கண்டுபிடித்தார்கள். இந்நோயின் குணாம்சம் சிறிது சிறிதாக உடம்பின் தசைகளின் இயக்கத்தை குறைத்துக் கொண்டு இறுதியில் மரணத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று விடுவதேயாகும்வைத்தியர்களின் கணிப்பின் படி இவர் அநேகமாக இன்னும் ஒரு 19 மாதங்களுக்கு மேல் உயிர் வாழமாட்டார்.

தனது முடிவின் காலம் நியமிக்கப்பட்டு விட்ட இந்த மனிதர் தான் இறக்கப் போகும் நேரத்தைத் தாமே நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அதன் பிரகாரம் தனது உயிரை முடித்துக் கொள்ளும் நேரத்தை தாம் எடுக்க வேண்டியதற்கான ஆயத்தங்களைச் செய்தார். ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லைஇங்கிலாந்துச் சட்டத்தின்படி தீரா வியாதி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நோயாளி தனது உயிரை முடித்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கை தற்கொலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய ஒருவரது முடிவுக்குத் துணை போவோர்களும் தற்கொலைக்கு உதவியவர்கள் எனும் குற்றத்தின் பெயரில் சட்டமூலம் தண்டிக்கப்படுவார்கள். தனது முடிவைத் தானே எடுக்க வேண்டும் எனும் இவரது கோரிக்கையை இங்கிலாந்து வழக்குமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் இவரோ இன்னும் தளரவில்லை தான் தனது நோயினால் மிகவும் அவஸ்தைப் படுவதாகவும் ,தனது உடலின் அசைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நின்று கொண்டு போகிறது. இதனால் தான் மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ள உறவினர்கள் தனது அவஸ்தையைப் பார்த்துத் தவிப்பதைத் தன்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறி வழக்கு மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்வதற்காக தனது வழக்கீல்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒரு புறமிருக்க.

சார்ளி காட் எனும் ஏழுமாதக் குழந்தையொன்று தனது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அக்குழந்தையைப் பீடித்திருக்கும் நோய்கூட குணப்படுத்தக்கூடிய தொன்றல்ல என்று டாக்டர்கள் கூறியுள்ளார்கள். தானே சுவாசிக்க முடியாத அக்குழந்தை செயற்கைக் கருவிகளின் மூலம் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இக்குழந்தையைத் தொடர்ந்தும் இக்கருவிகளின் மூலம் வைத்திருப்பது மனிதாபிமானத்துக்குப் புறம்பானது என்று தெரிவிக்கும் டாக்டர்கள் இக்கருவிகளை நிறுத்தி குழந்தைக்கு இயற்கையான முடிவைக் கொடுக்க முயற்சித்தார்கள். அமெரிக்காவில் உள்ள டாக்டர்கள் ப்ருபுதுவிதமான் சிகிச்சை மூலம் இக்குழந்ந்தையை குணப்படுத்தக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தமையால் தமது குழந்தையை இறக்க விடக்கூடாது தாம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப் போகிறோம் என்று வழக்குமன்றத்தை நாடினார்கள் பெற்றோர்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி இதுவரை தான் சந்தித்த வழக்குகளில் மிகவும் துன்பகரமான வழக்கு இதுவென்றும் அக்குழந்தையை மேலும் அவஸ்தைக்கு உள்ளாக்கக்க கூடாது என்றும் தான் டாக்டர்கள் எடுத்த முடிவை ஆதரித்து தீர்ப்பளிப்பதாகவும் தெரிவித்தார். மனமுடைந்து போன  பெற்றோர் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்துள்ளார்கள்.

என்னே விந்தை 67 வயதான சாகத் துடிக்கும் ஒரு மனிதனை சாகக் கூடாது என்றும்,ஏழே மாதமான குழந்தையைச் சாக வேண்டும் எனும் சட்டம் அறிஞர் அண்ணா கூறியது போல ஒரு இருட்டறைதானோ ?

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

Leave a Reply

Your email address will not be published.