Blog

  • மளுக்கென்று முறியும்

    -தமிழ்த்தேனீ 

    எங்கேயோ ஒரு பெரிய   மரம் மளுக்கென்று முறியும் சப்தம் கேட்கவே  ஓடிப் போய் எட்டிப்பார்த்தார் பெரியவர். அங்கே என்ன வேடிக்கை பாக்கறீங்க? கேள்வி காதிலே  விழுந்தது  இல்லே என்றார்  மகன்.

    இல்லே  ஏதோ பெரிய மரம்  முறிஞ்சாப் போல சத்தம் கேட்டுது என்றார் பெரியவர்.

    எங்களுக்கெல்லாம் ஒரு சத்தமும் கேக்கலே;  உங்களுக்கு மட்டும்  எப்பிடி இந்தச்  சத்தமெல்லாம் கேக்குது. சரி அது இருக்கட்டும்  நான் கேக்கற கேள்விக்கு  பதில் சொல்லுங்க.  வேலையிலேருந்து  ரிடைர் ஆனதிலேருந்து  ரெண்டு வருஷமா சும்மாத்தான  வெட்டியா இருக்கீங்க எதையாவது உருப்படியா  செய்யலாம்னு உங்களுக்கு  தோணாதா என்றார் மகன்.

    மீண்டும் ஒரு முறை அவரை நோக்கி இந்தக் கேள்விக் கணை  அனுப்பட்டு நேராகவந்து சர்ர்ர்ர்ர்ர்ரக் என்று  மார்பிலே  குத்தி  அந்தக் கணையின் மேல்பக்கம் விரிந்து அங்கும் இங்கும் ஆடியது.

    ஏம்பா நானா மாட்டேங்கறேன்  நிறைய பேர்கிட்டே வேலை கேட்டேனே…  உடம்பிலே தெம்பு இருக்கறவனுக்கே  வேலை குடுக்க முடியலே;  போயி வீட்டுலே தூங்குங்க பெரியவரே  அப்பிடீன்னு கிண்டல் செய்யறாங்கப்பா  நான் என்னா செய்வேன் என்றார்.  மார்பிலே குத்திய கணையின் கூர்முனை உள்ளே உறுத்த உள்ளுக்குள்ளே  முழுவதும் வலிக்க  அதைத்தாங்கியபடி,
    ஏதோ என்னாலானது காலையிலே போயி பால் வாங்கிட்டு வரேன், ரேஷன் வாங்கிட்டு வரேன், காய்கறி வாங்கிட்டு வரேன்,  எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வரேன்,  பேரப் பிள்ளைங்களைப் பள்ளிக் கூடத்திலே விட்டுட்டு சாயங்காலம் கூட்டிகிட்டு வரேன்.  வேற என்னா செய்ய முடியும் என்னாலே  என்றார் அவர்.

    தெரியுது இல்லே  வெட்டியாத்தான்  இருக்கோம்னு;  நாந்தானே உங்களையும் காப்பாத்திகிட்டு இருக்கேன்னு; அப்போ யார் விஷயத்திலேயும்    அனாவசியமா தலையிடாமே  சும்மா இருக்கணும்  புரியுதா  என்றார்  மகன். பெத்து வளத்து ஆளாக்கி ஏதேதோ செஞ்சு வேலையும் வாங்கிக் குடுத்ததெல்லாம் மனதிலே நிழலாட  உள்ளுக்குள்ளே  உயிர்போகும்  வலியைப் பொறுத்துக்கொண்டு, கொஞ்சம் இருப்பா  என்றவர் ஓடிப்போய் கதவருகே காதை வைத்துக் கேட்டார்.  ஏதோ ஒரு பெரிய மரம் மளுக்குன்னு முறியறா மாதிரி  சப்தம் கேக்குதே என்றார்.

    மருமகள்  எதுக்கெடுத்தாலும்  இப்பிடி ட்ரஸ் பண்ணாதீங்க , இப்பிடி காசைக் கரியாக்காதீங்க  இப்பிடி பிள்ளைங்க  படிப்பைக் கெடுத்து  எப்போ பாத்தாலும் டீவீயைக் கத்த விடாதீங்கன்னு  எப்போ பாத்தாலும்  எதையாவது சொல்லிகிட்டு  உயிரெடுக்கறாரு என்றாள்.

    அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு பாத்ரூம் போக வந்த மருமகள் பயந்து போய் புருஷனை எழுப்பினாள்  அவன் ஓடி வந்து எட்டிப் பார்த்தான். பெரியவர்  இருட்டில் கதவருகே காதை  வைத்துக் கொண்டு எங்கியோ ஒரு மரம்  முறிஞ்சு போச்சு  என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

    மருத்துவப் பரிசோதனைகள்  எல்லாம் முடிந்து  மருத்துவர்  மகனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.  இவருக்கு  ஒரு வியாதியுமில்லே;  இதயம் நல்லா  இருக்கு;  மூளையிலே  எந்தப் ப்ரச்சனையும் இல்லே;  கிட்னி நல்லா வேலை செய்யுது; ஆரோக்கியமாத்தான் இருக்காரு. பயப்பட ஒண்னுமில்லே என்றார்

    வெளியே  கதவில் காதை வெச்சுகிட்டு  மரம் முறிஞ்சு போச்சு;  மரம் முறிஞ்சு போச்சு என்று கதறிக் கொண்டிருந்தார்  பெரியவர். அவர்  மனைவி வாயைப் பொத்திக் கொண்டு அவரையே பார்த்தபடி அழுது கொண்டிருக்கிறாள்.

    மனம் முறிஞ்சு போச்சுன்னு சொல்லத் தெரியலே அவருக்கு.

    மரம் முறிஞ்சு போச்சு என்று அலறுகிறார் பெரியவர். யாருக்குமே காதிலே விழவில்லை  மனம் முறிஞ்ச சப்தம். மனம் முறியும்  சப்தம் வெளியே கேட்காதே!

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி- 10

    மீனாட்சி பாலகணேஷ்

    மறுபகிர்வு: தாரகை இணைய இதழ்

    குழந்தையே ஆடு மரக்கிளையின் உச்சியில்
    காற்றடிக்கும் போது தொட்டில் நன்றாக ஆடும்
    மரக்கிளை உடைந்தால் தொட்டில் விழுந்து விடும்
    தொட்டிலும் குழந்தையும் எல்லாமும் கீழே வந்து விடும்-
    (நர்ஸரி ரைம்!)
    ^^^^^^^^^^^^^^^^^

    குழந்தை கீதா தன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் அமர்ந்து தான் படிக்கும் நாவலில் ஒரு கண்ணும், குழந்தை மேல் ஒரு கண்ணுமாக இருந்த ஷீலாவின் காதில் கீதாவுக்காகப் பாடிக் கொண்டு இருந்த காஸட்டில் இருந்து மேற்கண்ட ஆங்கில நர்ஸரி ரைம் பாடல் ஒலிப்பது விழுந்தது. நர்சரி ரைம்கள் எல்லாமே முக்கால்வாசி இந்த மாதிரி ஏன் அபத்தக் களஞ்சியங்களாக உள்ளன என்று எண்ணிக் கொண்டாள். முன் தலையிலும் லேசாகத் தட்டிக் கொண்டு, ‘அபத்தம்,’ என முனகினாள்.

    எதையோ எழுதிக் கொண்டிருந்த ஜிம் ‘கட கட’வென்று அவளைப் பார்த்துச் சிரித்தான். “ஷீலா டியர், அந்தக் காஸட்டை நிறுத்தி விட்டு நீ தான் நம் கண்மணிக்காக ஒரு இந்தியப் பாட்டுப் பாடேன்,” என்றான்.

    “ஆடாது அசங்காது வா கண்ணா,” என்று பாட ஆரம்பித்தாள் ஷீலா. கீதாக்குட்டி அம்மாவை வியப்புடன் நோக்கியபடி இருந்தவள், பாட்டு முடிந்ததும் ஜிம்மை முந்திக் கொண்டு ஒடோடி வந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கன்னத்தில் பதித்தாள். ஜிம் இருவரையும் ஒருசேர அணைத்துக் கொண்டான். ஷீலாவின் உடல் சிலிர்த்து அடங்கியது. குழந்தையை அணைத்தபடி ஜிம்மை நோக்கிப் பொங்கிப் பிரவகிக்கும் காதலுடன் புன்னகைத்தாள்.

    இவர்களுடைய இல்வாழ்வு ஒரு தெளிந்த நீரோடை போல சலனமற்று அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. பிறந்த குழந்தைக்குக் கூட இந்தியப் பெயராக வைக்க வேண்டும், அதற்கு ஒரு பொருளும் இருக்க வேண்டும் என ஜிம் விரும்பியதன் பயனாக, பெண் குழந்தைக்கு கீதாஞ்சலி என்று பெயரிட்டார்கள். இப்போது கீதாவுக்கு இரண்டு வயது நிரம்பி விட்டது.

    இந்த இனிய நீரோடையில் கல்லெறிந்து சலனப் படுத்தவே சீனு திரும்பவும் இவர்கள் வாழ்வில் குறுக்கிட்டானோ?

    இந்தியா சென்றவன், மாமா வெங்கடேசனைச் சந்தித்து, சைலஜாவைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டவன், திரும்பி வந்ததும் முதலில் அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

    “லிஸா, குழந்தைகளுடன் இந்த ஈஸ்டர் வாரக் கடைசியில் சிகாகோ வரப் போகிறேன். உனக்கு சௌகரியம் ஆனால் உன்னையும் ஜிம்மையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்,” மேல் பூச்சாக இனிமையும் பணிவும் அப்பிய பேச்சு! மறுப்புச் சொல்லத் தெரியவில்லை. தெரியாமல் அல்ல- முடியவில்லை. ஏனென்றால் ஜிம்மிற்கு ஷீலா தன் உறவினர்களைச் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. வாழ்க்கை என்பது இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, மரங்கள் கிளைகளும் வேர்களும் விழுதுகளுமாகப் படர்ந்து அடர்ந்திருப்பது போல, மனித வாழ்வும் உறவு, நட்புக் கிளைகளால் தான் பலப்பட்டு நிற்கின்றதென்பதி ல் அவனுக்கு அசையாத நம்பிக்கை இருந்தது.

    முதல் சந்திப்பு இரு குடும்பங்களுக்குமிடையே ஒரு சம்பிரதாயமான சந்திப்பாக இருந்தது. சீனுவின் இரு பெண் குழந்தைகளும் அமெரிக்க பாணியிலேயே வளர்க்கப் பட்டவர்கள்.

    “மெட்ராஸ் ரொம்ப ஹாட். மகாபலிபுரம் இஸ் நைஸ். எனக்கு அந்த பீச் ரொம்பப் பிடித்தது,” இந்த ரீதியில் தான் லிஸா பேசினாள். பெண்கள் இருவரும் குழந்தை கீதாவுடன் ஒட்டவே இல்லை.

    சீனுவும், “ஹாய் ஷீலா, ஜிம், நீங்கள் இரண்டு பேரும் நியூயார்க்கில் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். இப்போது ஸம்மர் வருகிறது. நன்றாக இருக்கும்,” என நுனிநாக்கு ஆங்கிலத்தில் அமெரிக்க உச்சரிப்பில் கூறியது மிகவும் செயற்கையாகப் பட்டது.

    ஜிம் இவர்களை சட்டென்று எடை போட்டு விட்டான். ஷீலாவின் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று சிறிது கூடத் தனது வெறுப்பை வெளியிடாமல் சுமுகமாகப் பழகினான்.

    அடுத்த முறை சீனு வந்தது ஏதோ மெடிக்கல் கான்ஃபரன்ஸ் என்று- “லிஸாவிற்கு ஹாஸ்பிடலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறது. அதனால் வர முடியவில்ல,” என்றான்.
    ஷீலா பண்ணியிருந்த பீன்ஸ் பொரியலையும் வெங்காய வற்றல் குழம்பையும் வக்கணையாக ஒரு கை பார்த்து விட்டு, “நான் சாதாரணமாக அமெரிக்கன் டைப் உணவு தான் சாப்பிடுவது. ஷீலா, எனக்கு ரொம்ப ஆச்சரியமக இருக்கிறது. யூ ஹாவ் நாட் கிராஜுவேட்டட் டு அமெரிக்கன் டைப் ஆஃப் லிவிங்- (அமெரிக்க பாணியில் வாழ நீ இன்னும் பழகிக் கொள்ளவில்லை). அமெரிக்கனைத் திருமணம் மட்டும் செய்து கொண்டிருக்கிறாய்,” எனச் சிறிது உரிமை எடுத்துக் கொண்டு கிண்டல் செய்யும் வரை வந்து விட்டான்.

    ‘அற்பத்துக்கு யோகம் வந்தால் அர்த்த ராத்திரி குடையோ?’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் ஷீலா. “ஜிம்மிற்கு இந்திய உணவு, கலாச்சாரம் எல்லாவற்றிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு,”என்று கூறினாள்.

    மூன்றாம் முறை சீனு வந்த போது ஜிம் ஏதோ ஒரு கான்ஃபரன்ஸுக்காக பாரிஸ் சென்றிருந்தான். பெட்டியோடு வந்து நின்ற சீனு, “சொந்தக்காரி நீ இருக்கும்போது நான் ஏன் ஹோட்டலில் தங்க வேண்டும்? இங்கேயே இரண்டு நாள் இருக்கிறேனே,” என்று ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டு கூறிய போது, “போடா வெளியே. எனக்கு உன்னுடைய நட்பே தேவையில்லை,” என்று வாசற் கதவில் இருந்து பிடித்துத் தள்ளவா முடியும்? ‘தொலைந்து போ,’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அனுமதித்தாள் ஷிவா. கண்ணியமாகத் தான் நடந்து கொண்டான் சீனு. ஆனால் அவன் பேச்சு தான் கண்ணியத்தின் எல்லையைப் பலமுறை கடந்து அவளைப் பொறுமை இழக்க வைத்தது.

    “இந்தியனான என்னை மணந்து கொண்ட பிறகும் கூட இத்தனை வருஷங்களில் ஒரு முறையாவது லிஸா புடைவை அணிய ஆசைப் பட்டதில்லை. நீ என்னடாவென்றால் புடைவையில் மாமி வேஷம் போடுகிறாய். வெஸ்டெர்ன் மாடர்ன் ட்ரெஸ்ஸில் உன் ஃபிகர் எத்தனை நன்றாக இருக்கும் தெரியுமா?” என்றபோது, கோபத்தில் முகம் சிவக்க, “சீனு, எனக்கு இந்த மாதிரிப் பேச்சுகள், அவை புகழுரைகளே ஆயினும், ரசிப்பதில்லை,” என்று முகத்திலடிப்பது போலக் கூறினாள்.

    மாலை டின்னர் தயாரிக்கும் பொழுது, “நீ ஏன் ரசம், சாதம், சப்பாத்தி என்று பண்ணிக் கொண்டு கஷ்டப்படுகிறாய்? உன் மடிசஞ்சி அமெரிக்க அகமுடையான் தான் ஊரிலில்லையே. வாயேன், போய் ஹாம்பர்கர் சாப்பிட்டு விட்டு வரலாமே,” என்றான்.
    “நான் ஜிம்மிற்காகவோ, ஜிம் எனக்காகவோ எங்களை ஒன்றும் மற்றிக் கொள்ள முயலவேயில்லை சீனு. நாங்கள் இயற்கையாக எங்கள் சுபாவப்படி இருக்கிறோம். நீ உன்னுடைய கண்ணியமான பேச்சின் எல்லைகளை மிகவும் மீறுகிறாய். என்னைக் கோபப்படுத்தாதே,” என்றாள் ஷீலா.

    சுரணையில்லாமல் “மன்னித்துக் கொள் ஷீலா,” என்றான். மனத்திற்குள் அவளை உயர்வாக ஒரு பீடத்தில் அல்லவோ அமர்த்தியிருந்தான். அதன் காரணமாகத் தானே அவளிடமிருந்து பயந்து ஓடினான். இன்னும் அந்தத் தாழ்வு மனப்பான்மையில் இருந்து அவன் விடுபடவில்லையே! அதன் வெளிப்பாடுகள் அல்லவோ இந்தப் போலி வேஷங்களும், அலட்டல் பேச்சுகளும்! தான் அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு இங்கேயே செட்டில் ஆகி விட்டதை வாழ்வில் ஒரு சாதனையாகக் கருதி இறுமாந்திருந்தான்.

    இதென்னடாவென்றால் இவளும் அல்லவோ ஒரு அமெரிக்கப் பேராசிரியரை மணந்து கொண்டு இருக்கிறாள். போதாக் குறைக்கு, தன் இந்தியக் கலாச்சாரத்திலிருந்து இவளுக்கு அதிகம் ஒன்றும் மாற வேண்டியிருக்கவில்லையே. இப்படி ஒரு போட்டி மனப்பான்மையில் சீனுவின் உள்ளத்தில் ஆத்திரம் பிறந்து வளர்ந்து வந்தது. “இவளை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும்,” என்று நினைத்துக் கறுவிக் கொண்டான்.

    கரைப்பார் கரைத்தால் கல்லும் தான் கரையுமே, ஷீலாவின் மனது மென்மையானது தானே- சீனுவைப் போன்ற வெற்றுப் பேச்சாளன் வாய்ச்சவடால் அடித்தே அவள் மனத்தில் ஒரு பெரும் புயலை உருவாக்கினான்.

    எத்தனையோ முறைகள் ஷீலாவின் வீட்டிற்கு வந்து போனான். ஒரு முறை சொன்னான், “தத்துவமும் வேதாந்தமும் பேசிக் கொண்டே வாழ்நாளைக் கழிக்கத் தான் நீ அமெரிக்கா வந்தியா ஷீலா? இந்த நாட்டில் ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் எத்தனையோ இருக்கிறது. இங்கே ஒரு சுதந்திரப் பறவையாகப் பறப்பதற்கு இயலும். தளைகளை உடைத்தெறிய முடியும்….’புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை,’ என்ற பாட்டை நீ கேட்டிருக்கிறாயா?”

    ஒருநாள் லேசான மதுவின் போதையுடன் இத்தகைய ஒரு வாக்குவாதத்தை ஷீலாவுடன் ஆரம்பித்தான். ஷீலாவுக்கு ஒருநாள் ‘சேஞ்ச்’ ஆக இருக்கட்டுமே என்று ஜிம் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து தனக்குத் தெரிந்த இந்தியச் சமையலைத் தயார் செய்து கொண்டிருந்தான்.

    மூன்று வயது கீதா ஜிம்மின் அருகில் ஒரு குட்டி நாற்காலியில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தது.

    “யாரைப் பற்றி இப்போது அந்தப் பாட்டை உவமை கூறுகிறாய்?’ என்று ஏளனமாக ஷீலா கேட்டதும், அடித் தொண்டையில் பேசினான் சீனு.

    “உன்னைப் பற்றித் தான் ஷீலா. பெருமைப் பட்டுக் கொள்ளாதே. உன் புத்தியும் அறிவுக் கூர்மையும் நீ விரும்பிய மெடிக்கல் காலேஜ் அட்மிஷனை உனக்கு வாங்கித் தந்ததா? இல்லையே- உன் பாட்டும் நடனமும் எல்லாம் நீ கலைவானில் ஒரு தாரகை என நிரூபிக்க உதவியதா? இல்லையே- இங்கே வந்து ஏதோ அமெரிக்கன் புரஃபஸருக்கு சாம்பாரும் இட்லியும் பண்ணிப் போட்டுக் கொண்டு நீ உன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். நீ எங்கே? உன் தனித்துவம் எங்கே? நான் உன்னிடம் கண்டு பயந்து ஓடிய சுடர் விடும் உன் புத்திசாலித் தனம் எங்கே?

    “உன் முன்பு நான் ஒரு சராசரி ஆள் தான் என்று எண்ணி உன்னை நிராகரித்தேன். இந்த இதயத்துள் நீ உயர்ந்த ஒரு இடத்தில் இருந்தாய். உன்னை நிமிர்ந்து பார்க்கவே எனக்குக் கூசும். ஆனால் என் தேவதை வெறும் மண்பொம்மை தான் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

    “தளைகளை உடைத்தெறி. சிறகுகளை விரித்துச் சுதந்திரமாக வானில் பறக்கக் கற்றுக் கொள்- நான் சொல்லித்………….”

    “சீனு, ஷட் அப்,” வீறிட்ட ஷீலாவின் குரலைத் தொடர்ந்து, கண்ணாடித் தம்ளர் ஒன்று விசிறியடிக்கப் பட்டு ஆரஞ்சு ஜூஸுடன் உடைந்து கார்ப்பெட்டில் வழிந்தது. ஜிம் கிச்சனில் இருந்து ஓடி வந்தான்.

    ஷீலாவின் உடல் ஹிஸ்டீரியா வந்தது போல ‘கிடு கிடு’வென்று நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் வெறுப்பும் வெறியும் தெரிந்தன. “கெட் அவுட் ஆஃப் மை ஹவுஸ், நௌ,” தடுமாறியபடி கைகளை ஆட்டிக் கொண்டு சீனுவை நோக்கிக் கத்தினாள். ஒன்றும் புரியாமல் நின்ற ஜிம்மிடம் சீனு ஏதோ விளக்கிக் கூற முற்பட்டான்.

    “ஷீலா, அமைதியாக இரு,” என்று அவளை அணைத்துக் கொண்டான் ஜிம். “கெட் ரிட் ஆஃப் ஹிம்,” என்று திரும்பவும் கத்தினாள் ஷீலா.

    “சீனு, தயவு செய்து நீ இப்போது இங்கிருந்து போய் விடு. அவள் மிகவும் ‘அப்ஸெட்’ ஆகி இருக்கிறாள். பிறகு பார்க்கலாம்,” அன்று அவனை வெளியே அனுப்பிய ஜிம், ஷீலாவை அமைதிப் படுத்த முயன்றான்.

    மனத்தின் நிலவறையில் இட்டு மூடி வைத்த புண்களைக் குரூரமாகக் கிளறி விட்டதால் அத்தனை ஊமை வலியும், எரிமலை போல் பொங்கி வழிந்து, ஆத்திரமும் வெறியுமாக மாறி ஷீலாவின் மென்மையான மனம் பாதிக்கப் பட்டிருந்தது.

    “ஜிம், நான் குழப்பத்தில் இருக்கிறேன். தலை சுற்றுகிறது. என்னை அணைத்துக் கொள்ளேன். யாரும் என்னை உன்னிடமிருந்து பிரிக்க முடியாதவாறு இறுகக் கட்டிக் கொள்ளேன்,” என்று பரிதாபமாக இறைஞ்சியபடி மயங்கிச் சாய்ந்தாள்.

    பயந்தபடி மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த குழந்தை கீதாவை ஒரு கையில் பிடித்தபடி, “அம்மாவுக்குத் தலைவலி டார்லிங். டாக்டரைக் கூப்பிட்டுக் காட்டலாமா?” என்றபடி சமாதானம் செய்து, ஷீலாவின் மயக்கத்தைத் தெளிவித்து, குழந்தையை அணைத்தது போல் அவள் பக்கத்தில் உட்கார்த்தி வைத்து விட்டு டாக்டருக்குப் ஃபோன் செய்தான் ஜிம்.

    ஜிம் எதிர்பார்த்த்து போல அது அவ்வளவு சாதாரணமான மயக்கமாக டாக்டருக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் விவரமாக ‘டிஸ்கஸ்’ செய்தவர், மனோதத்துவ நிபுணர் மற்றும் நரம்பியல் சம்பந்தமான டாக்டர்களையும் பார்க்கச் சொன்னார்.

    அத்தனை மருத்துவ ஆலோசனைகளுக்குப் பின் என்னவெல்லாமோ முழநீளப் பெயரைச் சொன்னார் நியூரோ ஸ்பெஷலிஸ்ட். மனோதத்துவ நிபுணர் தம் பங்குக்கு இன்னும் சிலவற்றையும் பட்டியலில் சேர்த்து, ‘ஷீலாவுக்குத் தேவை மன அமைதி. பழைய சலனம் தரும் எண்ணங்களைக் கிளறக் கூடாது,’ என்று கூறி எச்சரித்திருந்தார்கள். ‘தேவையானால் மருந்து தரலாம். இப்போது கொஞ்சம் ‘டிப்ரஷன்’ என்று மனம் நொந்து போயிருக்கும் நிலையில் இருக்கிறாள். ஆதரவாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றனர்.

    ஷீலாவின் பாட்டும் பேச்சும் குறைந்து போயின. ஒரு பொம்மை போல, குழந்தையின் தேவைகளைக் கவனித்தாள். அடிக்கடி ஒரு வெறுமை நிறைந்த பார்வை.

    ஜிம்மின் இதயம் துயரத்தில் கசிந்தது. வெங்கடேசனுக்கு ஒரு மாதிரியாக விவரம் தெரிவித்திருந்தான்.

    ஒருநாள் ஜிம் வேலைக்குச் சென்றிருந்த போது சீனு ஃபோன் செய்து பேச முயன்றிருக்கிறான். அவன் குரலைக் கேட்டதுமே கோபத்தில் வெறிபிடித்தது போல் ஷீலா ஃபோனைத் தூக்கி எறிந்து உடைத்திருக்கிறாள். ஜிம் வீடு வந்ததும் மோட்டுவளையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள், அழுதாள், சிரித்தாள், அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். திடீரென்று குழந்தை மீது முத்தமாரி பொழிந்தாள்.
    ஜிம்மின் நிலை பரிதாபகரமானது. குழந்தையை பேபி ஸிட்டரிடம் விட்டு விட்டு, ஷீலாவை மருத்துவமனையில் சேர்த்தான்.

    மருந்தும், ஓய்வுமாக நாட்கள் ஓடின. கிட்டத்தட்ட இரு மாதங்கள் கழிந்த பின்னரே, கொஞ்சம் கொஞ்சமாக சாதாரண நிலைக்குத் திரும்பினாள் ஷீலா.

    *********************************

    ஷீலா இப்போதெல்லாம் மிகவும் சிந்தனைக்கு உட்பட்டாள். மணிக்கணக்காக எதையோ யோசித்து மூளையைக் குடைந்து கொண்டிருந்தாள்.

    ஒரு வெள்ளிக்கிழமை மாலை- வார இறுதி ஆரம்பம் என எல்லாருமே உற்சாகமாக இருந்தனர்.

    “ஜிம், உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்,” என்றாள். ஜிம் வெளியே எட்டிப் பார்த்தான். குழந்தை கீதா பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் மணல் நிறைந்த தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைகளின் தாய் ஜேன் அவர்களைக் கண்காணித்தபடி சிறிது தொலைவில் அமர்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தாள்.

    “ஹாய் ஜேன்! என் கீதாவையும் ஒரு அரை மணி நேரம் கவனித்துக் கொள்ள முடியுமா? ஒரு முக்கியமான வேலை திடீரென வந்து விட்டது,” ஜிம்.

    “நோ பிராப்ளம்,” என்று ஜேன் சினேக பாவமாகப் புன்னகைத்தாள்.

    ஷீலாவின் முகம் சீரியஸாக இருந்தது. கடந்த இரு மாதங்களில் ரொம்பவே மாறிப் போயிருந்தாள். கண்களின் கீழே கருவளையங்கள், காய்ந்த, லிப்ஸ்டிக் காணாத உதடுகள், முனைந்து தீட்டிக் கொள்ளும் மேக்கப் இல்லாத கண்கள், இந்தியப் பாரம்பரியப் பண்புகளிலேயே ஜிம்மிற்கு மிகவும் பிடித்த நெற்றிப் பொட்டு கூட வைத்துக் கொள்வதில்லை ஷீலா.

    அவளையே சில கணங்கள் இரக்கத்துடன் பார்த்த ஜிம், “யெஸ், ஸ்வீட் ஹார்ட், டெல் மி, உன் ஜிம்மிடம் சொல், என்ன வேணும் சொல்…”

    பார்த்தாள். அப்படி அவன் கண் வழியே புகுந்து இதயத்தையே துழாவும் பார்வை. புகுந்த கண்களிலும் தான் மட்டுமே இருப்பதைக் கண்டாளோ என்னவோ! தன்னைத் தாங்க, தான் நீந்த ஒரு அன்புப் பிரவாகம் இருக்கக் கண்டாள். அந்த இருப்பு தான் அவளைப் பயமுறுத்தியது! ‘இதற்கு எனக்கு அருகதை உண்டா? என் மனம் விட்டு விடுதலையாகி சிட்டுக் குருவியைப்போல் பறக்கத் துடிக்கிறதே, உன் அன்புக்கு எனக்கு இனித் தகுதி இல்லை. நான் என் வழியில் போகத் துடிக்கிறேன். எனக்கு விடுதலை தா. என்னையே நான் தேடப் போகிறேன். இது தான் என் தலையெழுத்து என்றால் என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும். நான் தயார். என்னைப் பரிந்து காத்துப் போற்றாதே. நான் அதற்குத் தகுதி அற்றவள். உன் உள்ளம் கடல் போல விசாலமானது. அத்தனை விசாலத்திலும் என்னை நிரப்பி வைக்காதே. என்னை விட்டுவிடு. என் அன்பின் சின்னமான குழந்தையையும் என் நினைவாக வைத்துக் கொள். என்னால் உன்னத்தனை அன்பைச் செலுத்தி அந்தக் குழந்தையை ஒரு நல்ல மனித உயிராக வளர்க்க முடியாது. உரமிடப் படாத செடியைப் போல அது வாடி நசித்து விடும்.’

    எண்ணங்கள் பெரும் அலைகளென பொங்கிப் பொங்கி எழுந்தன.

    “ஷீலா, டார்லிங், சொல்லம்மா,” அவள் கைகளைப் பற்றித் தன் நெஞ்சில் பதித்துக் கொண்டான்.

    மெல்லத் தன் விரல்களை அவன் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டாள். “ஜிம், ஐ வான்ட் எ டிவோர்ஸ். உன்னை விட்டுப் பிரிய விரும்புகிறேன்,” அழுத்தமாக ஆனால் மெல்லிய குரலில் கூறினாள்.

    இது அவன் எதிர்பாராதது. “ஏன் ஷீலா?”

    “என்னால் விவரித்துச் சொல்ல இயலவில்லை. உன் வாழ்க்கையை நான் நரகமாக்கிக் கொண்டு இருக்கிறேன் என்று மட்டும் மிக நன்றாகத் தெரிகிறது எனக்கு. என் பாதை மாறி விட்டது ஜிம். என்னை நான் உணராததால் தான் இத்தனை கஷ்டங்களும் வந்தன. மனம் சிதைந்து போனேன். வாழ்வில் எனக்கு வேண்டியது என்ன என்று இனித்தான் நான் தேட வேண்டும். எனக்கு விடுதலை தா,” குழந்தையைப் போல யாசித்தாள்.

    அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஜிம்மின் கண்களில் இனம் புரியாத ஒரு கலக்கம்

    “நீ என்னிடமிருந்து ஓட வேண்டாம் ஷீலா. இப்படியே இருந்து கொண்டு உன் மனதில் உள்ளதைத் தேடி வெளிக் கொணரலாம் இல்லையா? நான் உன்னிடம் மனைவி என்ற உரிமைகளைக் கூட எதிர் பார்க்க மாட்டேன். தாயாகவும் நீ இருக்க வேண்டாம். இங்கு என் கண் எதிரே ஒரு தேவதையைப் போல் இருந்து கொண்டிரேன் அன்பே,” தழு தழுத்தன வார்த்தைகள்.

    எத்தனை அழகாகச் சிந்தித்து வைத்திருந்தாளோ, “முடியாது ஜிம், இங்கு இருந்து கொண்டிருந்தால் என் பொருட்டு நீ படும் துயரம் என்னால்ல் காணச் சகிக்காது. நான் தனியாக வெளியேற வேண்டும். இன்று, இப்போது எனக்கு தயவு செய்து விடுதலை கொடு. என்றேனும் நான் தேடும் பொருளுக்கு விடை கிடைத்தால், உன்னிடமே திரும்பி வருகிறேன்,” அழுத்தமாகச் சொல்லி விட்டு எழுந்து கீதாவைத் தேடி வெளியே போனாள் ஷீலா.

    ஜிம்முக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. அவள் திடமனதுடன் சிந்தித்து எடுத்த முடிவுடன் தான் இதைக் கேட்கிறாள்.

    அவளை ‘ட்ரீட்’ செய்த மனோதத்துவ நிபுணருடன் கலந்து பேசி, அவள் கேட்டபடி செய்வது தான் உசிதம் என்று பலவிதமான ஆலோசனைகளின் பின்பு முடிவு செய்தான். ஷீலாவுக்கு விவாகரத்து கொடுத்தான். கடந்த ஆண்டில் மிகவும் மன நோயால் அவதிப்பட்டதாலும், ஜிம் மிகவும் வேண்டிக் கொண்டதாலும் குழந்தை கீதாஞ்சலி தந்தையிடமே இருக்க கோர்ட் தீர்ப்பளித்தது.

    (தொடரும்)

    ***********************************************************

    Share
  • மாணவர்களுக்கு எளிதாகக் கல்விக்கடன்!

    பவள சங்கரி

    கால்கடுக்க, வங்கி வங்கியாக நடந்து காலவிரயம் ஆகாமல் எளிய முறையில் தகுதி வாய்ந்த மாணவர்கள் கல்விக்கடன் பெற்று சிரமமில்லாமல் பயின்றுவர ஒரு புதிய இணையத்தொடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வித்யாலஷ்மி – VIDYA LAKSHMI என்பது அனைத்தும் ஒருங்கிணைத்த ஒருவழி சாளரம். தேசிய, மாநில கல்வி உதவித் தொகைகள் வழங்கும் அனைத்து வங்கிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்விக்கடன் பெறவேண்டி இனி ஏதோவொரு வங்கி வாசலில் சென்று நிற்கத் தேவையில்லை. இந்த இணையதளத்தில் சென்று அங்கு உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்தாலே போதும். அனைத்து வங்கிகளும் தானே அதைப்பதிவிறக்கம் செய்து நடவடிக்கை எடுப்பார்கள். இதனுடைய நிலைபற்றி அவ்வப்போது அறிந்துகொள்ளும் வகையில் அந்தந்த விண்ணப்பப்படிவங்கள் பற்றிய நிலைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன.

    கல்வித்தகுதி அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு 7 1/2 இலட்சம் ரூபாய் வரை பெறுவதற்கு எந்தவிதமான செக்யூரிட்டியோ அல்லது மூன்றாம் நபர் உத்திரவாதமோ தேவையில்லை. கடன் தொகை 7 1/2 இலட்சத்திற்கும் மேல் இருந்தால் உத்திரவாதமும், மூன்றாம் நபர் உறுதிமொழியும் அளிக்கப்படவேண்டும். இதே நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் வரை மூன்றாம் நபர் உத்திரவாதமும், அல்லது சொத்து பணயமும் தேவை. படிக்கும்போதே தொகையை திருப்பிச்செலுத்த தொடங்குபவர்களுக்கு வட்டியில் 0.5 % , பெண்களுக்கு 0.5% வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது கூடுதல் நன்மை.

    The applicant should register and login to Vidya Lakshmi portal and then fill-up the Common Education Loan Application Form (CELAF). After filling the form, the applicant can search for suitable loans across banks and apply as per their needs, eligibility and convenience.
    All the best Students! Cheer up!

    https://www.vidyalakshmi.co.in/Students/

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (6)

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளும் வெளியும் ஒருவனே

    “நந்தவனத்திலோர் ஆண்டி அவன்

    நாலாறு மாதமாய்  குயவனை வேண்டி

    கொண்டுவந்தானொரு தோண்டி

    அதைக் கூத்தாடிகூத்தாடிப் போட்டுடைத்தாண்டி “

    திருமூலர்-1

    என்ற சித்தரின் தத்துவப்பாடல் இந்த மானிட வாழ்வின் நிலையற்றதன்மையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    இதே கருத்தை முன்னிறுத்தி “குளத்திலே இருக்கின்ற பானையின் உள்ளும் நீர் இருக்கின்றது. அதன் வெளியேயும் நீர் இருக்கின்றது. அந்தப் பானை உடைந்து விட்டால் உள்ளே இருக்கும் நீரும் வெளியே இருக்கும் நீரும் ஒன்றாகிறது. இதுதான் வாழ்க்கையின் உண்மைக் கதை”  என்கிறார் கபீர்தாஸ்.

    இந்த உடல் ஒரு மண்பாண்டம் போல..எவ்வாறு ஒரு மண் பானை உடைந்தால் உள்ளிருக்கும் பொருளும் வெளியிருக்கும் பொருளும் ஒன்றாகிறதோ அது போல இந்த உடலில் உள்ளே இருக்கும் ஆன்மா  அந்தப்  பரம்பொருளுடன் கலந்து விடுகிறது என்ற கருத்தை மேற்கூறிய பாடல் சித்தரிக்கின்றது.

    இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தி மற்றும் உடலின் நிலையற்ற தன்மையை வெளிச்ச்த்துக் கொண்டு வரும் வகையில் அமைந்துள்ள திருமூலரின் பாடல்

    வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்

    குளத்தின் மண்கொண்டு குயவன் வளைந்தான்

    குடமுடைந்தால் அவை ஓடென்று வைப்பர்

    உடலுடைந்தால் இறைப் போதும் வையாரே

    ஒரு குயவன் எவ்வாறு மண்ணை வடித்துப் பானை செய்கின்றானோ அவ்வாறே இந்த உடலையும் இறைவன்  வடித்திருக்கிறான். அந்த மண் குடம் உடைந்தால் அதை ஓடாகவாவது உபயோகிப்பர், ஆனால் இந்த உடல் உடைந்தால் கண் இமைக்கும் நேரம் கூட வைக்க மறுப்பார். .. என்னே! இந்த வாழ்வின் நிலை..!!

    இப்படிப்பட்ட வாழ்வில், மனிதனோ “நான், எனது, எனக்கு“ என்றெல்லாம் பொருள் சேர்த்து தனக்குத்தானே சுமைதாங்கியாக வாழ்கிறானே என்று வருத்தப்படுகின்றார்.

    ஒரு ஓடாகக் கூட பயன்படாத இந்த உடலை எவ்வாறெல்லாம் நாம் பாராட்டுகின்றோம்? இதனை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சக்தி எது? அந்த சக்தியின் ஆணையை ஏற்று இந்த உடலின் வெவ்வேறு இந்திரியங்கள் எப்படிப் பணி செய்கின்றன? இதன் பின் இருக்கின்ற மாயை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப்பாடல் :

    “புலன் ஐந்து புள் ஐந்து புட்ச்சென்று மேயும

     நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து

     குளமொன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்

     உலாவந்து போம்வழி யொன்பது தானே “

    ஐம்பொறிகளோடு நம் உயிர் ஆடுகின்ற இந்த நாடகத்தை நாம் அறிந்தோமோ? அல்லவே ! உண்மையை உணராத, அறியாத நெஞ்சம் எத்தனை வேடங்கள்தான் போடுகின்றது .. இதை உணர்ந்தாரில்லையே.. இந்த உண்மையை உணர்த்தும்  பட்டினத்தார் பாடல் இதோ:

    நீற்றைப் புனைந்தென்ன நீராடப்  போயென்ன நீமனமே

    மாற்றிப்பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்

    ஏற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டாய்

    ஆற்றிற் கிடந்துந் துறையறி யாம் வலைகின்றதே

    ஆற்றிற் கிடந்ததும் துறையறியாதவரைப் போல் இறைவனை உள்ளே அமர்த்திக்கொண்டும் அவனை நன்கு அறியாத மூடர்களாக இருந்துவிட்டோமே ! நாம் காலத்தையெல்லாம் வீணடித்து விடுகின்றோமே!

    இந்தத் துயரிலிருந்து பட்டினத்தாரும் விடுபட்டாரில்லை.

    என்னையறியாமல் யெனக்குள்ளே நீயிருக்க

    உன்னை யறியாம லுடலிழந்தேன் பூரணமே !

    என்று வேதனைப்படுகின்றார்.

    இவ்வாறு உடலை வெறும் கருவியாக உபயோகிக்கும் நம் உள்மனது எப்பொழுதும் இறையின் அளவில்லா அழகையும் பேராண்மையையும் தன்னையுமறியாமல் ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றது. வாழ்க்கை என்னும் நாடகம் முடியும் தருவாயில் “அடுத்து நான் எங்கே போவேன்? என் செய்வேன்?’ என்ற பயத்திலும் வேட்கையிலும் இறைவனின் தாள்களைத் தேடுகின்றது. நாம் வாழும் பொழுதே இந்த மாயையை அறிந்துகொண்டு விலக முயற்சித்தோமானால் வாழ்க்கையிலிருந்து விடுபடும் மாற்றம் நம்மை பாதிப்பதில்லை. இதோ கவீந்திரர் ரபீந்திரநாத் டாகுர் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார் என்றுபார்க்கலாமே

    I have had my invitation to this world’s festival, and thus my life has been blessed!

    My eyes have seen and my ears have heard.

    It was my part of this feast to play upon my instrument and I have done all I could.

    Now, I ask, has the time come at last, when I may go in and see thy face and offer thee my silent salutation?

    வாழ்வின் உண்மை நிலையை அறிந்து மாயையிலிருந்து விடுபடுகின்ற நிலையன்றோ இது?

    இறைவனின் இந்த மிகப் பெரிய கருணைக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த அளவில்லாக கருணை கண்டு மாணிக்க வாசகர் வியக்கிறார் ..

    தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச்

    சங்கரா யார் கொலோ சதுரர்

    அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்

    யாது நீ பெற்றது ஒன்று என்பால்

    சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

    திருப்பெருந்துறை உறை சிவனே

    எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய்

    யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே !

    தொடரும்..

    Share
  • சிறுவர்ப் பயந்த செம்மலோர்!

    -மேகலா இராமமூர்த்தி

    மனித சமுதாயத்தினர் மேற்கொண்டொழுகும் இரு அறங்கள் இல்லறமும் துறவறமும் ஆகும். இவற்றில் மற்றவர்களையும் வாழ்வித்துத் தானும் வாழும் பெற்றி பற்றி இல்லறமே சிறந்தது எனலாம்.

    வள்ளுவரும், ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்றுகூறி இக்கருத்துக்கு அரண் சேர்க்கிறார். இல்வாழ்க்கையின் நன்கலமாகத் திகழ்வது அறிவிற்சிறந்த மக்கட்பேறு. அதனால்தான்,

    ”பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற”
    என்று மக்கட்பேற்றின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துகின்றார் பேராசான்.

    இல்வாழ்க்கையில் எல்லா இணையருக்கும் மக்கட்பேறு விரைவில் வாய்த்துவிடுவதில்லை. சிலர் பலகாலம் தவமாய்த் தவமிருந்துதான் இப்பேற்றைப் பெறுகின்றனர். இதற்குத் தக்கதோர் சான்றாய்ச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுவது பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி. பொருட்செல்வம் மலையெனக் குவிந்துகிடந்தது அவனிடம். காலால் இட்டதைத் தலையால் செய்ய ஏவலர் பலர் இருந்தனர். ஆயினும் அவனுக்கு மனத்தில் நிறைவில்லை. காரணம்… மனத்தை மகிழ்விக்கும் மழலையொன்று அவன் மாளிகையில் அதுவரைத் தளர்நடை பயிலவில்லை. இதனை எண்ணி எண்ணியே துயில்தொலைத்தான் அவன்.

    வறண்ட பாலையில் திடீரென்று பெய்த மழை, பாலையைப் பசுஞ்சோலையாய் ஆக்குவதுபோல், வறண்டிருந்த அவன் வாழ்க்கையை வளமாக்கும் குழந்தைச்செல்வம், வாராதுபோல் வந்த மாமணியாய், அவனுக்கு வாய்த்தது ஒருநாள்! அவனடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை!

    அக்குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் ஆசையோடு கவனித்தான். தன் உள்ளத்து உணர்ச்சிகளை அழகியதோர் பாடலாய் வடித்தெடுத்தான் அவன்.

    படைப்புப்பல  படைத்துப்  பலரோடு  உண்ணும்
    உடைப்பெருஞ்  செல்வர்  ஆயினும்  இடைப்படக்
    குறுகுறு  நடந்து  சிறுகை  நீட்டி
    இட்டும் தொட்டும்  கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை  இல்லைத்  தாம்வாழும்  நாளே. (புறம் : 188 – பாண்டியன் அறிவுடைநம்பி)

    பல்வேறு வகையான செல்வங்களைப் பெற்று, பலருக்கும் உணவுபடைத்துத் தானும் உண்ணக்கூடிய வசதிபடைத்த செல்வரே ஆயினும், குறுகுறுவென நடந்து, சிறிய கைகளை நீட்டித் தனக்கெனப் பிசைந்து வைக்கப்பட்டிருக்கும் நெய்சோற்றைத் துழாவி, மெய்யெங்கும் பூசிக்கொண்டு காண்போர் மனம் மயக்கும் மக்கட்செல்வம் வீட்டில் இல்லையென்றால் அந்த இல்லறத்தின் பயன் குறைவுபட்டே போகும் என்று எழுதிநின்றது அவன் எழுதுகோல்.

    இன்பத்தைக் குவியல் குவியலாய்ப் பெற்றோர்க்கு அள்ளித்தருவதால்தான் ’bundle of joy’ என்று குழந்தையை ஆசையோடு அழைக்கிறார்களோ?

    மழலையர் இல்லறவாழ்விற்கு அணிகலனாய்த் திகழ்வதோடு மட்டுமல்லாமல், இல்லறத்தில் கணவன் மனைவியரிடையே ஏற்படும் பிணக்கையும் ஊடலையும் தீர்த்துவைக்கும் சமாதானத் தூதுவர்களாகவும் சிலநேரங்களில் செயலாற்றுகின்றனர். அதனை விளக்கும் அரிய பாடலொன்று அகநானூற்றில் இடம்பெற்றிருக்கின்றது.

    இல்லறவாழ்வில் இணைந்தனர் ஒரு தலைவனும் தலைவியும். அவர்களுக்கு அழகான  புதல்வன் ஒருவன் பிறந்தான். மகிழ்ச்சிக்குக் குறைவின்றிச் சிலகாலம்வரை அவர்களின் இல்லறம் நல்லறமாகத்தான் சென்றுகொண்டிருந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை…அந்தத் தலைவனின் ஒழுக்கத்தில் குறைபாடு ஏற்பட்டது. தலைவியையும் குழந்தையையும் துறந்து பரத்தையரோடு தொடர்புகொண்டான் அவன். இதற்கிடையில், இன்னொரு பெண்ணை மணக்கவும் முடிவுசெய்திருந்தான் அந்த உத்தமத் தலைவன்(!!).

    மணநாளும் வந்தது. புதுமாப்பிள்ளைக் கோலம்பூண்டு, பூமாலைகள் அணிந்துகொண்டு தலைவி வசிக்கும் தெருவழியே வந்தான் தேரேறி. வீதியில் தேர்நுழைந்ததும் தேரின் மணிகள் காற்றில் ஒலித்தன. அந்தச் சத்தம் வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்த தலைவனின் புதல்வன் காதில் விழுந்தது. அது என்ன சத்தம் என்று அறியவிரும்பிய பாலகன், வீட்டுவாயிலைக் கடந்து தெருவுக்கு ஓடிவந்தான். ஓடிவந்த குழந்தையைத் தலைவனும் கண்டான். உடனே தேரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்கியவன், மலரன்ன கண்களும், பவளச் செவ்வாயும் கொண்ட தன் புதல்வனை வாரியணைத்துக்கொண்டான். பின்னர், ”பெரும! நீ உள்ளே செல்!” என்று கூறி மீண்டும் தேரில் ஏற முற்பட்டான். புதல்வனோ தந்தையைவிட்டுச் செல்லமறுத்து அழவே, அவனை விடுத்துச்செல்ல இயலாது தவித்தது தலைவனின் ’தந்தை’யுள்ளம்!

    எனவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளிருந்த தலைவி, குழந்தையால்தான் தலைவனின் அவசரப் பயணம்(!) தடைப்பட்டுவிட்டது போலும் என்றெண்ணிக் குழந்தையைச் சிறுகோலால் அடிக்க வந்தாள். அதனை அனுமதிக்கவில்லை தலைவன். அப்போது, ’வா வா’ என்று தலைவனை அழைப்பதுபோல் அவனுக்குப் புதுமணம் நிகழவிருந்த வீட்டிலிருந்து மணமுழவு (கல்யாண மேளம்) ஒலித்தது.

    என்ன ஆச்சரியம்! தலைவன் மணம் செய்துகொள்ளப் புறப்படவில்லை அப்போது. தலைவியோடு தான்பழகிய அந்த இனிய நாட்களெல்லாம் அவன் நினைவில் நிழலாடின; ஆகவே மணம் தவிர்ந்தான்!

    தலைவன் குறித்த மேற்கண்ட நிகழ்வுகளையெல்லாம் தன் தோழியிடம் விவரித்த தலைவி, மேலும் தொடர்ந்தாள்…

    ”பகைவரும் விரும்பக்கூடிய அழகும் அறிவும் வாய்ந்த புதல்வரைப் பெற்றோர், புவி வாழ்விலும் புகழோடு விளங்குவர்; மறுமை உலகையும் மறுவின்றி எய்துவர் என்று பெரியோர் உரைத்த பழமொழிகளெல்லாம் வெற்றுமொழிகளல்ல…அவை உண்மைமொழிகளே! என்பதை என் சொந்த வாழ்விலேயே கண்டுவிட்டேன். ஆம், வாடியிருந்த என் வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தைக் கொணர்ந்தது என் புதல்வனே” என்று புளகாங்கிதத்தோடு புகன்றாள். தோழியும் அதனை ஆமோதித்தாள்!

    இம்மை  உலகத்து  இசையொடும்  விளங்கி
    மறுமை  
    உலகமும்  மறுவின்று  எய்துப
    செறுநரும்  விழையும்  செயிர்தீர்  காட்சிச்
    சிறுவர்ப்  பயந்த  செம்மலோர்  எனப்
    பல்லோர்  கூறிய  பழமொழி  எல்லாம்
    வாயே  ஆகுதல்  வாய்த்தனம்  தோழி
    நிரைதார்  மார்பன்  நெருநல்  ஒருத்தியொடு
    வதுவை  அயர்தல்  வேண்டிப்  புதுவதின்
    இயன்ற  அணியன்  இத்தெரு  இறப்போன்
    மாண்தொழில்  மாமணி  கறங்கக்  கடை கழிந்து
    காண்டல்  விருப்பொடு  தளர்புதளர்பு  ஓடும்
    பூங்கட்  புதல்வனை  நோக்கி நெடுந்தேர்
    தாங்குமதி  வலவ என்று  இழிந்தனன்  தாங்காது
    மணிபுரை  செவ்வாய்  மார்பகம்  சிவணப்
    புல்லிப்  பெரும  செல்இனி  அகத்து எனக்
    கொடுப்போற்கு  ஒல்லான்  கலுழ்தலின்  தடுத்த
    மாநிதிக்  கிழவனும்  போன்ம்  என மகனொடு
    தானே  புகுதந்  தோனே யான்  அது
    படுத்தனென்  ஆகுதல்  நாணி  இடித்து இவற்
    கலக்கினன்  போலும்  இக்கொடியோன்  எனச்சென்று
    அலைக்கும்  கோலொடு  குறுகத்  தலைக்கொண்டு
    இமிழ்கண்  முழவின்  இன்சீர்  அவர்மனைப்
    பயிர்வன  போலவந்து  இசைப்பவும்  தவிரான்
    கழங்குஆடு  ஆயத்து  அன்றுநம்  அருளிய
    பழங்கண்  ணோட்டமும்  நலிய
    அழுங்கினன்  அல்லனோ  அயர்ந்த தன்  மணனே!  (அகம்: 66 – செல்லூர் கோசிகன் கண்ணனார்)

    இப்பாடலிலிருந்து அன்றைய சமூகம் குறித்த பலசெய்திகள் நமக்குத் தெரியவருகின்றன. ஆண்மக்கள் தம் மனம்விரும்பியபடி எத்தனை மணம் வேண்டுமானாலும் செய்துகொள்ள அன்றைய சமூகம் அவர்களை அனுமதித்திருக்கிறது. மாறாகப் பெண்களோ, கல்லானாலும் கணவன், புல் (ஃபுல்?) ஆனாலும் புருஷன் என்று அவன் அன்பையும் அருளையுமே எதிர்பார்த்து வாழ்ந்திருக்கின்றனர். பொருளாதாரச் சுதந்திரமோ, ஒழுக்கம் பிறழ்ந்த கணவனைப் பிரிந்துவாழும் சுதந்திரமோ அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. அதனால்தான் தலைவன் பரத்தையரைத் தேடிச்சென்று அவர்களோடு வாழ்ந்துவிட்டுத் திரும்பிவந்தாலும் அவனைச் சிறு ஊடலோடு ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் அன்றைய தலைவியர். பெண்களை ஆடவரின் அடிமைகளாகவும், நுகர்பொருளாகவும், இரண்டாந்தரக் குடிமக்களாகவும் சமூகம் நடத்திவந்ததன் வெளிப்பாடே இவை எனில் மிகையில்லை.

    இத்துணை அவலங்களுக்கு இடையிலும், தலைவன் ஒருவனின் தவறான நடத்தையை அவனுடைய சின்னஞ்சிறு மழலை திருத்திவிட்டதை இப்பாடல்வழி அறியும்போது நாம் மனம் மகிழவே செய்கிறோம். சிற்றுளி ஒன்று பெரிய மலையையே பிளந்துவிடுவதுபோல், குடும்பப் பாசமற்று மலைபோல் இறுகியிருந்த தலைவனின் உள்ளத்தைத் தன் அன்பெனும் சிற்றுளியால் பிளந்து அதில் அருளைச் சுரக்கச் செய்துவிட்டானே இந்தப் ’பொடியன்’ என்று நம் உள்ளம் இக்குழந்தையைக் கொண்டாடவே செய்கிறது.

    Share
  • பரந்தமனம் எழவேண்டும் !

         ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

     

    குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்

    தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது

    அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்

    அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

     

    அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது

    ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது

    அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி

    ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

     

    ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்

    அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்

    ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்

    அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !

     

    நீரில்லா நிலையினிலே நிலம்வறண்டு வீணாகும்

    போர்வந்து சேர்ந்துவிடின் பொலிவெல்லாம் மறைந்தொழியும்

    பார்செழிக்க வேண்டுமெனில் பரந்தமனம் எழவேண்டும்

    ஊரழிக்கும் நினைப்பொழிந்தால் உலகவளம் உயிர்த்துவிடும் !

     

    குண்டுமழை பொழிவதனால் குடிதண்ணீர் பாழாகும்

    குடிதண்ணீர் இல்லையெனில் குடிகள்நிலை என்னாகும்

    வளங்கொழிக்கும் வயலனைத்தும் வறண்டவனம் போலாகும்

    நிலமிருக்கும் மாந்தர்நிலை நினைப்பதற்கே பயமாகும் !

     

    காடுகள் அழியும் களனிகளும் சேதமுறும்

    மாடுமனை அத்தனையும் மண்ணுக்குள் மாய்ந்துவிடும்

    கேடுநிலை அத்தனையும் கிடுகிடென வந்துவிடும்

    நாடுகின்ற ஆராய்ச்சி நல்வழியை மறந்துவிட்டால் !

     

    ஆணவத்தின் வசத்துக்கு ஆராய்ச்சி ஆள்பட்டால்

    அகிலத்தின் துன்பமெலாம் அப்பக்கம் தெரியாது

    ஆக்கத்தின் பக்கமாய் ஆராய்ச்சி அமைவதுதான்

    அகிலத்தில் வெளிச்சம்வர அருந்துணையாய் அமையுமன்றோ !

     

     

     

    Share
  • கோதை ஆண்டாள் – 2

    -தமிழ்த்தேனீ

    பாகம் 7

    “நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்னும் பத்தாவது பாசுரத்திலே நாற்றத்துழாய் முடி நாராயணன் என்கிறாள். நாற்றம் என்றாலே நாம் மூக்கைப் பொத்திக் கொள்கிறோம்  தமிழைச் சரியாக அறியாமல். நாற்றம் என்றால் மணம்; துர்நாற்றம் என்றால்தான் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும். துழாய்முடி என்கிறாள் துளசியின் வாசனை கொண்ட  நாராயணன் என்கிறாள் அவனைப் போற்றினால் ஸ்வர்கம் நிச்சயம் அப்படி இருக்க கும்பகர்ணன் போல் தூங்கலாமோ என்கிறாள். ஆச்சரியமாக இருக்கிறது இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு நாராயணனின்  சுருள் கேசம் துளசி வாசம் என்று எப்படிக் கண்டுகொண்டாள் இந்த ஆண்டாள்? கும்பகர்ணனைப் பற்றிச் சொல்லி நான் காலத்தைக் கடந்தவள் ராமாவதாரத்திலே  வந்த  கும்பகர்ணனைப் பற்றியும் தெரியும் என்று சவால் விடுகிறாள் ஆண்டாள். என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டாம் அவள்தானே மஹாலக்‌ஷ்மி அவளுக்குத் தெரியாதது உண்டா?

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்னும் பதினோராவது பாசுரத்திலே கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால்  கறப்பவனாக இருந்தாலும் எதிரிகளைப் பகைவர்களை பந்தாடும் தீரன் என்கிறாள் கண்ணனை. அப்படிப்பட்ட கண்ணனை தழுவத் துடித்தால் போதாது அதற்கு அவன் நாமத்தைப் பாடி அவனைப் புகழ்ந்து பாடினால்தான் அவனை அடைய முடியும் ஆகவே நாம் கூட்டாக அவனைப் பற்றிப் பாடலாம் வா என்று கூட்டுப் ப்ரார்த்தனையை விளக்குகிறாள் ஆண்டாள்.

    “கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிறங்கி
    நினைத்து முலைவழியே பால் சோர“

    என்னும் பன்னிரெண்டாம் பாசுரத்திலே  இறைவன் அருள் கன்றுக்கிறங்கும் பசுவின் மனதைப் போன்றது. அப்படிப்பட்ட ஶ்ரீராமன் போன்ற சீதையைக் கவர்ந்த  ராவணனை அழிக்க ராமாவதாரம் கொண்டு ராஜாதி ராஜனாக வந்த நாராயணனின் புகழைப் பாடுவோம் வா என்கிறாள்.

    “புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
    கிள்ளிக் களைந்தானை  என்னும் பதிமூணாவது பாசுரத்திலே பகாசுரன் வாயைப் பிளந்தவன் அவன். அப்படிப்பட்ட கிருஷ்ணனை நினைந்து பாடத்தானே வேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.

    பாகம் 8

    இப்படி முப்பது பாசுரத்திலும் கண்ணனின் புகழைப் பாடி மற்றவருக்கும்  அவன் புகழைப் பரப்பி நான் அவனைத்தான் சேரப் போகிறேன் என்று ஊர் முழுதும் சொல்லிவிட்டாள் ஆண்டாள். ஆனால் பெரியாழ்வாருக்குத் தெரியவில்லை. பெண்களின் காதல் எப்போதுமே ஊரிலுள்ளோர் அனைவருக்கும்  தெரிந்தபின்னும் பெற்றவர்களுக்குத் தெரியாமலிருக்கும். அப்படியே யாராவது உங்க பொண்ணை ஜாக்கிறதையாக பாத்துக்கங்க  என்று சொன்னால் என் பொண்ணைப் பத்தி இப்பிடியெல்லாம் பேசாதீங்க; அவ அப்பிடியெல்லாம் செய்யமாட்டா என்று சொல்லி அதீதப் பாசமும் நம்பிக்கையும் வைத்திருப்பவரே  பெற்றோர்கள்.  ஆனால் உண்மை தெரியும் போது அதிர்ந்தே போவார்கள்.

    அப்படித்தான் பெரியாழ்வாரும் அதிர்ந்தார். நாம் வளர்த்த ஆண்டாளா இப்படிச் செய்தாள்?  குழந்தை வளர வளரப்  பார்த்துப் பார்த்து தோளிலும் மார்பிலும் போட்டுக்கொண்டு வளர்த்து  ஒவ்வொரு வினாடியும் அரங்கனைப் பற்றி சொல்லிக் கொடுத்து இப்படியெல்லாம் வளர்த்த அந்த ஆண்டாளா  இப்படிச் செய்தாள். அரங்க சேவையை ஒவ்வொரு அணுவுக்குள்ளும் புகுத்தி வளர்த்தோமே அப்படியெல்லாம் வளர்த்த ஆண்டாளா இப்படிச் செய்தாள், அவரால் அவர் கண்ணையே நம்ப முடியவில்லை.

    அரங்கனுக்காகவே   பக்திமலர்களால் தொடுத்த  மாலையைத் தன் தோளிலே போட்டுக்கொண்டு அழகுபார்க்க  எப்படி முடிந்தது இந்தக் குழந்தையால்? அரங்கனின் பெருமைகளை சொல்லிச் சொல்லித்தானே  வளர்த்தோம்?  அப்படி இருக்க, அரங்கனுக்குக் கட்டிய  மாலையை அணிந்து கொண்டு நிற்கிறாளே !  தகுமா இந்தச் செய்கை என்று விதிர்விதிர்த்தார்.  எங்கே தவறு செய்தோம் என்றே புரியாமல் தடுமாறி நின்றார் பெரியாழ்வார்.

    சிறு வயது முதலே இவன் உன்னோட மாமா பிள்ளை, இவன் உன்னோட அத்தை பிள்ளை  இவங்க ரெண்டு பேருமே உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத் தகுதியான முறை கொண்டவர்கள் என்று சொல்லி அடிக்கடி அவர்களைப் பற்றிய  பெருமைகளை எடுத்துச் சொல்லி வளர்த்துவிட்டு  நான் அத்தானைத்தான்  கல்யாணம் செஞ்சுக்குவேன், மாமனைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவேன் என்று மகள் சொன்னால் அதிர்ந்து போகிறார்கள். அவர்கள் அந்தப் பிஞ்சு மனதிலே ஏற்றிய நினைவுகளின் விளைவுதான்  என்பதை அறியாத பெற்றோர். அது போலத்தான்  பெரியாழ்வாரும்!  அரங்கன் புகழைப் பற்றியே பேசிப் பேசி ஆண்டாள்  மனதிலே அரங்கனைப் பதிய வைத்துவிட்டு  என்ன உன் மனதிலே அரங்க இருக்கிறானா  என்று  அதிர்கிறார்.

    பாகம் 9

    அரங்கனை அடையத்தான் நான் குழந்தை  வடிவிலே உம்மிடம் வந்தேன் பெரியாழ்வாரே அந்த  தேவ ரகசியத்தை நீர் அறிய மாட்டீரா ஏதோ நாடகம் போல் நீரும் உணராதது போல்  நடிக்கிறீர். நீர் பெரியாழ்வார் அல்லவா?  உமக்குத் தெரியாத  தேவ ரகசியம் உண்டா? ஆனாலும் தெரியாததுபோல்  நடிக்கிறீர்! எனக்கு உபதேசம் செய்வது போல் நடிக்கிறீர். உமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின்  தன்மையை நன்கு உணர்ந்து  நடிக்கிறீர்.  என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு  ஆம் அப்பா  நான் அரங்கனை என் மனதிலே வரித்துவிட்டேன் . அவரைத் தவிர மானுடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்  என்கிறாள் ஆண்டாள்.

    பெரியாழ்வார் கனவில் வந்த அரங்கன், ”பெரியாழ்வாரே ஆண்டாள்  என்னிடம் சேரவே  உம்மிடம் வந்தாள்; ஆகவே அவளை என்னிடம் அழைத்து வாரும்!” என்று உத்தரவிடுகிறார். பெரியாழ்வாரும் ஆண்டாளை அழைத்துப் போகிறார். அங்கே  ஆண்டாள் அரங்கனுடன் இரண்டறக் கலக்கிறாள்.

    திருமணம் முடித்து மகிழ்ச்சியோடு பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் விட்டுவிட்டு  விடைபெற்று வீட்டுக்கு வந்தாலும் பெண் நினைவாகவே இருக்கும் பெற்றோர்களின்  மனம்போல்  ஆண்டாளின் நினைவாகவே இருக்கிறார் பெரியாழ்வார்.  நந்தவனத்துக்குச் சென்று துளசி மாடத்தையே ஏக்கமாகப் பார்த்துகொண்டு நிற்கிறார் பெரியாழ்வார். எல்லாமே  படம்போல் காட்சியாய் விரிகிறது அவர் மனதிலே.

    துளசி மாடத்தின் கீழே ஆண்டாள் குழந்தையாய்ப் படுத்துக்கொண்டு தன் குட்டிக் கால்களையும், கைகளையும் அசைத்துக்கொண்டு, செம்பஞ்சுக் குழம்பு பூசியதைப் போன்று உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும்  தாமரை மலர்கள் அசைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, கருணையும், கனிவும், கலந்த கருவிழிக் கண்களால் வா வா என்னை எடுத்துக்கொள் என்று அழைப்பது போலவும், இதழ்க் கடையோரம் இளநகையோடு நான்தான் பெரியாழ்வாரே  என்னைத் தெரியவில்லையா? எல்லாம் ஒரு காரணத்தோடுதான் நான் இங்கே வந்து உங்கள் நந்தவனத்தில் துளசிமாடம் அருகே வந்துதித்து பூமித்தாய் மடியிலே படுத்துக் கிடக்கின்றேன், வந்து என்னை எடுத்துக்கொண்டு உம்  மகளாய் வளர்க்க ஆசை வரவில்லையா உமக்கு? வாரும் வந்து என்னை எடுத்துக்கொள்ளும். பக்தன் ஆசைப்படுவதுண்டு பரம்பொருளின் அருகே வாசம் செய்ய வேண்டும் என்று. இங்கே நானே ஆசைப்பட்டுத்தானே , பேரருள் பெற்ற பெரியாழ்வாரே  உம் அருகிலே வாசம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டுத்தானே இந்த வாசம் மிகுந்த நந்தவனத்திலே துளசி மாடத்தின் அருகிலே  நானே  இங்கே வந்து கிடக்கிறேன்.

    பாகம் 10

    இன்னுமா புரியவில்லை, வாரும்  இந்தப் பிறப்பின் தந்தையே வந்து என்னை எடுத்துக்கொள்ளும் என்று உணர்த்தினாள் கோதை. பெரியாழ்வார் தன் சுய உணர்வுக்கு வந்து குழந்தையை அள்ளி அணைத்து, மார்போடணைத்து உடலும் உள்ளமும் உருக உருக முதன்முதலாய் ஒரு குழந்தையின் ஸ்பரிஸத்தை அனுபவித்து, அது குழந்தையா தெய்வமா என்று தடுமாறி, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று உணர்ந்து, என்ன பாக்கியம் செய்தேன்! இப்படிப்பட்ட ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க நான் என்ன பாக்கியம் செய்தேன்! என்று தனக்குதானே  தன்னுடைய அதிர்ஷ்டத்தை எண்ணி பூரித்துத் தாயானார். உடனே அவருக்கு  அடடே குழந்தைக்கு ஊதக் காற்று ஒத்துக்கொள்ளுமோ? என்று தன் மேல் உத்தரியத்தால் நன்றாக மூடி, தன் குடிலுக்கு எடுத்துச் சென்றார் பெரியாழ்வார்.

    ஒரு  வஸ்திரத்தில் அணைவாகக் குழந்தையை விட்டுவிட்டு எதிரே உட்கார்ந்து  குழந்தையைவிட்டுக் கண்ணகற்றாமல் பார்த்துக்கொண்டே இருந்தார் பெரியாழ்வார்.  மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.  மானுடர்க்கு எளிதில் கிடைக்காத ஒரு ஆச்சரியமான அபூர்வமான ஒரு குழந்தை தனக்கு கிடைத்திருக்கிறதே.  எனக்குக்  குழந்தை வளர்க்கும்  முறைகள் கூடத் தெரியாதே. நான் எவ்விதம் இந்தக் குழந்தையை வளர்க்கப் போகிறேன்? இந்தக் குழந்தைக்கு பசித்தால் அழுமா? அல்லது இந்தக் குழந்தைக்கு பசித்தால் நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? அப்படியே கண்டுபிடித்தாலும் இந்தக் குழந்தைக்கு அருந்த எதைக் கொடுப்பது? ஆயிரம் கேள்விகள்.

    ஆனால் அந்தக் குழந்தை அழவே இல்லை;  எதற்கெடுத்தாலும் பொக்கை வாய்திறந்து சிரிப்புதான்.  ஒரு கட்டத்தில் பெரியாழ்வாருக்கே பயம் வந்தது. இப்படிச் சிரித்துக் கொண்டே இருந்தால் எப்போது இந்தக் குழந்தைக்கு பசிக்கிறது என்றே தெரியாதே என்று. அழுத  பிள்ளைதானே பால் குடிக்கும்?. குழந்தை அழுவதே பசிக்கிறது என்பதை தெரிவிக்கத்தானே இந்தக் குழந்தை அழாமல் சிரித்துக் கொண்டே இருந்தால் எப்படி அறிவது இதற்கு பசிக்கிறதென்று என்ற யோசித்தார்.  அந்தக் குழந்தையின் சிரிப்புக்கு என்ன பொருள் என்று பெரியாழ்வார் அறியமாட்டாரா? அறியாதது போல் நடித்தார்.

    பாகம் 11

    உலகையே மகிழ்விக்க வந்த குழந்தை, அரங்கனையே மகிழ்விக்கவந்த குழந்தை. அரங்கன் மகிழ்ந்தால் அகிலமே மகிழும் என்றுணர்ந்த குழந்தை அழுமா? அழவே இல்லை. அதனால் பெரியாழ்வார் குழந்தைக்கு பசிக்கிறதோ இல்லையோ வேளா வேளைக்கு பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து பால் ஊட்டி வளர்த்தார். தாயுமானவன் என்றால் பெரியாழ்வார் தானே? அன்னைக்கே  தாயுமாகி தந்தையுமாகி நிற்கும் நிலை எத்துணை பேருக்கு வாய்க்கும்? பெரியாழ்வாருக்கு வாய்த்தாற் போல்.

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த மகளை ஒவ்வொரு கணமும் பார்த்துப் பார்த்து ரசித்து வளர்த்தார் பெரியாழ்வார். அகில உலகிற்கும் அன்னையான ஆண்டாளின் அணுக்கத் தொண்டராகவே வாழும் பாக்கியம் பெற்ற பெரியாழ்வார்.   குழந்தை சிணுங்கினாலே கைவேலைகளை அப்படியே போட்டுவிட்டு  பதறி ஓடிப்போய் குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டு  என்ன வேணும் என்று கொஞ்சும்  தாய்மார்களைப் போல ஒவ்வொரு நொடியும் அரங்கன் கைங்கர்யமும், சேவையும்  அதற்கடுத்து  குழந்தை ஆண்டாளுக்குச் சேவகமும்  அடடா என்னே பாக்கியம்!  தந்தைக்கும்  தாய்க்கும்  சேவை செய்யும்  பாக்கியத்தை விட உலகில்  வேறு எதுதான் உயர்ந்தது?  அவர்களைக் குழந்தையைப் போல் பாவித்துச் சேவை செய்வது எவ்வளவு புண்ணியம்? எங்கெல்லாம் ஒருவன் தன் தாய் தந்தையைக்  குழந்தைபோல் நினைத்து சேவை செய்கிறானோ  அங்கெல்லாம்  ஆண்டாளும்  அரங்கனுமே குழந்தைகளாய் வந்துவிடுவார்களே. பர ப்ரும்மும் லோக மாதாவுமே குழந்தைகளாய் வருவதற்கு எப்படிப்பட்ட பாக்கியம் செய்திருக்க வேண்டும் மானுடர்கள் நாம்!

    ஆண்டாள்  பிறக்கவே இல்லையே… உதித்தாள்! திருவாடிப்பூரத்து ஜெகத்துதித்தாள். ஆண்டாள் பிறந்தாளா  இல்லை கிடந்தாள் துளசிமாடத்தருகே அவளாகவே வந்து கிடந்தாள். சூரியன், சந்திரன் எல்லோரும் உதிக்கிறார்கள் பின் நம் கண்ணுக்கு  மறைகிறார்கள்.  அவ்வண்ணமே  ஆண்டாளும் விஷ்ணுசித்தர் பெரியாழ்வார் தோட்டத்தில் உதித்தாள்; வளர்ந்தாள்; பெரியாழ்வார் கண்ணுக்கு மறைந்தாள்  அரங்கனுக்குள் மறைந்தாள்.  உதிப்பதும் மறைவதும் எல்லோராலும் முடியுமா?

    அது ஒரு சுழற்சி அல்லவா? அப்படி சுழன்று கொண்டே வரும்போது எங்கே  அரங்கனைக் கண்டாளோ?  யார் அறிவார்! ஆண்டாள் அரங்கனைப் பிடித்தாளோ  அல்லது அரங்கன் ஆண்டாளைப் பிடித்தானோ யார் அறிவார்?

    பாகம் 12

    ஆண்டாள்  பிறந்தாளா அல்ல அல்ல உதித்தாள்!
    திருவாடிப்பூரத்தில் உதித்தாள் சூரிய சந்திரர் போலுதித்தாள்
    வில்லிபுத்தூர் நந்தவனத்  துளசிமாடம் தனிலே
    பெரியாழ்வார் பெண்ணாய் உதித்தாள் சிறியாழ்வார்
    ஆண்டாளாய் உதித்தாள்  மாடத்திலுதித்து கூடத்தில்
    வளர்ந்தாள் அரங்கனுடன் கூடத்தான் மலர்ந்தாள்!
    சுழலுகின்ற செஞ்சுடராய் உதித்தாள் உதித்தாள் உதித்தாள்!
    கோ புரத்துக் கண்ணனுடன் கோதையவள் கலந்தாள்
    உதிப்பதுவும் மறைவதுவும் ஒரு சுழற்சி என்றால்
    அச்சுழலில் அரங்கனுக்கே அச்சாணியாய் இருந்தாள்
    அச்சுதன் கண்ணனவன் அரங்கன் மன்னனவன்
    அச்சுவையை அறிந்திடவே அகமகிழ்ந்தே கலந்தாள்
    பிடித்தவனை ஆண்டாள் அனுதினமும் படித்தாள்
    தேன் வடியும் மலர்களையே  ஊன் உருக்கித் தொடுத்தாள்
    பா வடித்துப் பிடித்தாள் கோபாலனையே பிடித்தாள்
    அவளுதித்து வளர்ந்து அலங்கரித்து நிமிர்ந்தாள்
    அரங்கனவன் களிகொண்டான் அவன்தோளில்  கிளியானாள்

    பிடித்துவிட்ட அரங்கனையே மீண்டுமவள் பிடித்திடவே-
    தன் தாள் பதித்தாள் ஆழ்வாரைப் பிடித்தாள் ஆழ்வாரே
    அறியாமல்  அரங்கனைப் பிடித்தாள் மாலை பிடித்தாள்,
    திரு மாலை பிடித்தாள்  திருமாலைப் பிடித்தாள்.
    திருவரங்கன் தாள் பிடித்தாள் அரங்கனே அறியாமல்
    அரங்கனையே பிடித்தாள் உள்ளிருந்தே அவள்
    உலகையே பிடித்தாள் கள்ளிருக்கும் மலர்ச்சோலை
    பெரியாழ்வார் நந்தவனம் உள்ளிருக்கும் துளசி மாலை
    பெரியாழ்வார் தோளினிலே பெண்மானாய் வளர்ந்தாள்
    உரியவனாய் வந்தரங்கன் அந்தரங்கம்  புகுந்தாள்
    மாலையென்ன காலையென்ன முழுவதுமாய்ப் பிடித்தாள்
    காலையிலும் மாலையிலும் கணப் பொழுதும் நீங்காத
    கள்ளியவள் ஆண்டாள் கண்சிமிட்ட நேரமில்லை
    கண் கொள்ளா காட்சிதனை கண்டுவிட்ட ஒரு கணத்தில்
    ஆண்டவனைப் பிடித்தாள் இமைப்பொழுதும் நீங்காத
    இணையுடனே சேர்ந்தாள் அரங்கனையே துதித்தாள்
    அவளெங்கே பிறந்தாள்? உதித்தாள். துளசிமகள் தூயமகள்
    இளசிலேயே அரங்கன்தனை எண்ணி எண்ணி வாழ்ந்த மகள்-
    ஏகாந்த ரங்கனிடம் ஒருசேரக் கலந்த மகள்

    பாகம் 13

    கள்ளிருக்கும் மலர்களெல்லாம் பூச்சொரியும் நந்தவனம்
    தனிலே உள்ளிருந்த துளசி வனம்தனிலே ஶ்ரீவில்லிபுத்தூர்
    நந்தவனம்தனிலே பேறு பெற்ற பெரியாழ்வார் கண்டெடுத்த
    குழவி இவள் அதில் கண்டு அள்ளிக்கொண்ட ஆண்டாளென்னும்
    செண்டு இனம்  பூச்சூடி பூவைச் சூடி கொடுத்த பாவை சூடி
    பாச்சூடி பாவைச் சூடி கொடுத்த பாவைச் சூடிக் கொடுத்த  சுடர்க்கொடி
    துளசிமகள் தூயமகள்  இளசிலேய அரங்கனை எண்ணி எண்ணி
    வாழ்ந்த மகள் – ஏகாந்த ரங்கனிடம் ஒருசேரக் கலந்த மகள்
    கள்ளிருக்கும் மலர்களெல்லாம் பூச்சொரியும் நந்தவனம்
    உள்ளிருந்த துளசிவனம் வில்லிபுத்தூர் நந்தவனம்
    பேறுபெற்ற பெரியாழ்வார் கண்டெடுத்த குழவி இவள்
    அதில் கண்டு அள்ளிக்கொண்ட ஆண்டாளென்னும் செண்டு இனம்
    பூவாய் அவதரித்த மலர்க்கோதை செண்டாய் அலங்கரித்து
    அருமையாய் வளர்த்த மகள் அரங்கன் திருவடியின்
    அருளாலே அவனுக்கே தாயானாள்
    பெரியாழ்வார் மறுபடியும்  சேயானார்

    பாகம் 14

    பெரியாழ்வாரின் நிலை சொல்ல முடியுமோ? ஏதோ என்னாலானதைச் சொன்னேன்.  ஆண்டாளைப் பற்றிச் சொல்ல முடியுமோ ஏதோ என்னாலானதைச் சொன்னேன்,

    ஆண்டாளே உன்னைப்பற்றி யாரிடம் சொல்ல
    உன்னையன்றி வேறிடம் அல்ல
    கண்ணனிடம் நீ செல்ல  என்னைத்
    தேர்ந்தெடுத்து  மகளாய் உருக்கொண்டு
    உன் மன்னிடம் சேர்ந்தாய்
    உன்னைப்பற்றி யாரிடம் சொல்ல
    அரங்கன்  நாயகியே உன்னைப் பற்றி
    யாரிடம் சொல்ல கண்ணை விற்று
    சரித்திரம் சொல்ல என்னை விற்று
    பொய்யை வாங்கி  என் மனதை விற்று
    உன்னை  மகளாய் நான் நினைத்தேன்
    பேதமை கொண்டேன் நீ என் மகளென்று
    உன்னையே நினைந்திருந்து உன்னையே உணர்ந்திருந்து
    கனவிலும் நினைவிலும் உன்னையே
    நினைந்திருந்து நான் உன்னையன்றி
    உன்னைப் பற்றி யாரிடம் சொல்ல தாயே
    உன்னைப் பற்றி யாரிடம் சொல்ல
    பூச்சூடி பூவைச் சூடிக்கொடுத்த பாவை
    சூடிக் கொடுத்த  மாலை பாச்சூடி
    பாவைச் சூடி பூவைச் சூடிய பூவை
    கொடுத்த பாவைச் சூடி ஆண்டாளே
    மஹாலக்‌ஷ்மி உன்னைப் பற்றி
    யாரிடம் சொல்ல?

    ஆண்டாள் திருவடிகளே சரணம்!
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

    ஶ்ரீராமஜெயம்

     

     

    Share
  • Sri Ranganathar Jayanthi

     

    Today 25.04.2017 Sri Danvantri Arogya Peedam, Walajapet conducted Sri Ranganathar Jayanthi Special Pooja and Abhishekam for Sri Bala Ranganathar

    ad
    Share
  • படக்கவிதைப் போட்டி – (109)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    18136919_1302695336451329_1279855610_n

    9446955@N02_rசத்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • இந்தியாவின் தற்போதைய வறட்சி நிலை!

    பவள சங்கரி

    இயற்கை மாற்றங்கள் தட்பவெப்ப நிலையில் மாறுதல்கள், இந்தியாவில் ஏற்படும் வறட்சி போன்ற அனைத்திற்கும் காரணம் தர்மல் பவர் பிளாண்ட் தான் என்று இலண்டனிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம், தங்கள் ஆய்வின் முடிவாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தர்மல் பவர் பிளாண்ட் அதாவது நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களால், அதிக அளவு கார்பன் மற்றும் வெப்பங்கள் வெளியிடுதல், மேற்கு கிழக்கு காற்று சுழற்சியினால் அந்த பாதிப்பு இந்தியாவைத் தாக்குவதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் பல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விவரங்களும் அளித்துள்ளனர். இவர்கள் கூறியது உண்மை என்று எடுத்துக்கொள்ளும் வகையில் நெய்வேலி தர்மல் பவர் பிளாண்ட் மற்றும் தூத்துக்குடியிலுள்ள பவர் பிளாண்ட் போன்றவைகள் அதன் சுற்றுப்பகுதிகளையே வனாந்திரமாக மாற்றிவிட்டிருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. நெய்வேலியிலிருந்து சேலம் வரும் வழியில் உள்ள அனைத்துப் பகுதிகளும், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளும், அங்கிருந்து மதுரை வரும் வழியனைத்தும் தற்போது பாலைவனமாகவே காட்சியளிக்கின்றன. மத்திய அரசும், மாநில அரசும் இலண்டனிலுள்ள அந்த பல்கலைகழகத்தின் அறிக்கையையொட்டி ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் நமது இந்தியாவும், தமிழ்நாட்டின் பல பகுதிகளும் பாலைவனம் ஆவதை தடுக்கவியலாமல் போகலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் நெடுவாசல் போன்ற பகுதிகளில் பெட்ரோலியப்பொருட்களை எடுப்பதற்கு முன்பாகவும் ஆய்வு செய்யவேண்டியதும் அவசியமாகிறது.

    Share
  • மக்கள் விரும்பும் ஊழலற்ற ஆட்சி!

    பவள சங்கரி

    டிவீட்டர் மூலம் சமீபத்தில் எடுக்கப்பட்ட 4.2 இலட்சம் பேரின் வாக்கெடுப்பில் 70% பேர் ஊழலற்ற ஆட்சியை எதிர்பார்த்துள்ளனர். 17% பேர் சுத்தமான இந்தியாவையும், மூன்றாவது இடத்தில் உடல் ஊனமுற்றோருக்கான அங்கீகாரத்தை உறுதி செய்யவேண்டும் என்றும் வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களில் 87% ஆண்களும்,  13% பெண்களும் பங்குபெற்றுள்ளனர். 70% பேர் ஊழலற்ற ஆட்சியை எதிர்பார்த்துள்ள நிலையில் ஊழல் என்ற ஒன்று உருவாவதே பொதுமக்களாகிய நம்மிடமிருந்துதான்… கையூட்டு தருவதில்லை என்ற உறுதியான முடிவெடித்தால் 60% ஊழலை ஒழித்துவிடலாம். அனைத்தும் கணினிமயமாகிவிட்ட இன்றைய நிலையில் நமக்குத் தேவையான அரசு ஆதாரங்கள் அனைத்தும் கட்டணமின்றி தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இந்த ஆரம்பம் தொடர்ந்தால் 100% ஊழலற்ற ஆட்சிக்கு வழி பிறக்கும். மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை அலுவலகங்கள் ஆகியவைகளின் செயல்பாடுகள் அல்லது புகார்கள் இருப்பின் தொடர்புகொள்ள வேண்டியவர்களின் எண்கள்:

    SP CBI ACB,Chennai call
    044 28273186/0992 or SMS 9444442516
    Mail : hobacchn@cbi.gov.in

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (53)

    நிர்மலா ராகவன்

    நலம்-1-1-1

    சுய விமரிசனம்

    அபய முத்திரை

    இந்துக்கோயில் சிலைகளில் இந்த முத்திரையைப் பார்த்திருப்பீர்கள். பக்கவாட்டில் இருக்கும் வலது உள்ளங்கை வெளியில் தெரிய, விரல்கள் மேல் நோக்கி அமைந்திருக்கும்.

    பயம் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் அபயம். அதாவது, `பயமின்றி இரு, உன்னைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன்!’ என்று ஒருவருக்கு உணர்த்தி, அவரை அமைதிப்படுத்துவது இந்த அபய முத்திரை. இதைக்கொண்டு புத்தர் ஒரு மதயானையைக் கட்டுப்படுத்தினாராம். எல்லா புத்தர் சிலைகளிலும் இம்முத்திரையைக் காணலாம். இடக்காலைத் தூக்கி ஆடும் நடராஜரின் வலது கரமும் இப்படித்தான் அமைந்திருக்கும்.

    அபய முத்திரையைக் காட்டி, நமக்கு நாமே நல்லது செய்துகொள்ளலாம்.

    எதற்காக என்கிறீர்களா?

    நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, தவறிழைத்துவிட்டு அதையே நினைத்துக்கொண்டு ஆரோக்கியத்தைப் பாழடித்துக்கொள்ளாமலிருக்க. நம்மை நாமே மன்னித்துக்கொள்ள.

    சுய விமரிசனம்

    பொழுதைப்போக்க உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள் என்று பலரைப்பற்றியும் (வேண்டாத) விமரிசனங்கள் செய்வது பலரது பழக்கம். இதனால் தாம் பேசுவதிலும், செய்வதிலும் மற்றவர்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிப்பார்களோ என்ற பயம் எழுகிறது.

    எப்போதும் நம்மையே நாம் விமரிசித்துக்கொண்டு, நமது குறைபாடுகளை பறைசாற்றிக்கொண்டு இருக்க வேண்டுமா?

    நாம் செய்வது நமக்குச் சரி என்று பட்டால் போதாதா?

    குற்ற உணர்வு

    குற்ற உணர்வு சிறு பிள்ளைக்கும் உண்டு. அம்மாவுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்துவிட்டு, திருதிருவென குழந்தை முழிப்பது இதனால்தான்.

    `குழந்தை தெரியாமல் செய்துவிட்டது!’ என்று பெருந்தன்மையுடன் அதன் காரியத்தைப் பெரிதுபண்ணாது விட்டுவிட்டால், குழந்தை அநாவசிய பயமின்றி வளரும்.

    அதைவிட்டு, திட்டியோ, அடித்தோ, இன்னும் கூறப்போனால், `அவர்கள் வீட்டிலே நீ அழகான கண்ணாடி ஜாடியை உடைத்தாயே!’ என்று நீண்ட நாட்கள் அதையே சொல்லிக் காட்டிப் பழித்துக்கொண்டு இருந்தால் பெரியவர்கள் தம் பலம் பெருகிவிட்டதாக எண்ணலாம். ஆனால், நாளடைவில், தான் செய்வது எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் குறைவுள்ளது என்ற சிறுமை உணர்வு எழும். `நான் ஏனோ இப்படி இருக்கிறேனே!’ என்ற சுயபச்சாதாபமும் எழும்.

    பெற்றோர்கள் அன்பானவர்களாக இருந்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் குழந்தைகள் மனதில் நச்சை விதைத்துவிடுவார்கள். அண்மையில், ஒரு ஒன்பது வயதுச் சிறுவன் வகுப்பில் பேசினான் என்பதற்காக அவனுடைய ஆசிரியர் பிற மாணவர்களை அவனுடன் சேரக்கூடாது என்றாராம். அப்பையன் வாழ்க்கையை வெறுத்து, தற்கொலை முயற்சிவரை போய்விட்டான். இது நடந்தது மலேசியாவில். அவன் செய்தது அப்படி ஒன்றும் பழிக்கக்கூடிய காரியம் இல்லை, ஆசிரியர்தான் அதிகார பலத்தால் தவறிழைத்தவர் என்று புரியும் வயதாகவில்லை அவனுக்கு.

    உருவத்தில் கோளாறா?

    `குண்டு,’ `வழுக்கை’ என்றெல்லாம் பிறர் கேலி பேசும்போது சிரித்து வைத்தாலும், சிறுமை உணர்ச்சி எழுவதைத் தடுக்கமுடியுமா?

    அதை மறைக்க, தம்மைத்தானே கேலி செய்துகொள்வார்கள். இது தம்மையுமறியாது, பிறரை உயர்த்திப் பேசும் வழியும்கூட.

    பொதுவாக, எந்தக் குடும்பத்திலும் இரண்டாவது மகன் மூத்தவனைவிட உயரமாக இருப்பான். தங்கை அக்காளைவிட உயரமாக இருப்பாள். இதுவும் இயற்கைதான். இதற்கெல்லாம் அவமானத்தால் சுருங்குவது எதற்கு?

    கதை

    `நான் தனியா எங்கேயும் போகமாட்டேம்பா. எல்லாரும் என்னையே முறைச்சுப் பாப்பாங்க. அழுகை வரும்!’ பதினாறு வயதில் என்னுடன் படித்த அருள்மேரி கூறியது இது.

    அவளுடைய ஐந்தடி எட்டங்குல உயரத்தைப் பார்த்து சிநேகிதிகள் பிரமித்தாலும், அவளுக்கு வித்தியாசமான அந்த உயரமே பெரிய குறையாக, அவமானகரமாக இருந்தது. எப்போதுமே இரண்டு, மூன்று பேர் அவளுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வாள்.

    சராசரிக்கு அதிகமான உயரங்கொண்ட பெண்ணும், அதற்குக் குறைவான ஆணும் தங்களை ஏதோ விதத்தில் தாழ்ந்தவர்களாக நினைத்து வருந்துகிறார்கள்.

    கதை

    இந்திரன் அரசாங்க நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரி. உருவம் மட்டும் குள்ளம். எதற்காவது தப்பு கண்டுபிடித்து எல்லாருடனும் — பலர் பார்க்க — சண்டை போடுவார். `Shorty’ என்று எல்லாரும் அவரை முகத்திற்கு நேரேயே குறிப்பிட்டது அவரை அவ்வளவு தூரம் பாதித்திருக்கலாம்.

    தன்கீழ் வேலை செய்தவர்கள் எந்தவித தவறும் செய்யக்கூடாது என்று எதிர்பார்த்தார். நடக்கக்கூடிய காரியமா அது! யார்தான் தவற செய்யவில்லை?

    அலுவலகத்தில் மட்டுமில்லை. யார் வீட்டுக்குப் போனாலும், அங்கேயும் குற்றம் கண்டுபிடிப்பார். இதனால் அவருக்கு உற்ற நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை. எல்லாரும்தான் பயந்து ஓடினார்களே! மதுவே உற்ற தோழன் என்றாக, மனைவி, குழந்தைகளுக்குக்கூட அவரிடம் மரியாதை போயிற்று.

    அவருக்குக் கீழிருந்த ஒருவர் தன் நேர்மையான உழைப்பு, மற்றவர்களை அனுசரித்துப்போகும் குணம் ஆகியவற்றால் அரசாங்க விருதுகளைப் பெற்றபோது, `எனக்கு எதுவும் கிடைக்கவில்லையே!’ என்றார் ஆற்றாமையுடன், தான் எங்கு தவறு செய்தோம் என்று புரியாது.

    இந்திரன் போன்றவர்களுக்கு அபய முத்திரை அவசியம். `நான் குள்ளமாக இருந்தால் யாருக்கு என்ன வந்தது? இயற்கையை எதிர்த்துப் போராட முடியுமா!’ என்று, குறைகளுடன் தன்னைத்தானே ஏற்றால், பிறரையும் மதிக்கும் குணம் வருமே!

    கோபத்தை விடு, முன்னேறலாம்

    நாம் செய்த காரியத்தில் நிறைவு இல்லாவிட்டால், அதைச் சுட்டிக் காட்டுபவர்களிடம் ஆத்திரம் வருகிறது. சண்டை போடத் தோன்றுகிறது.

    நான் ஆங்கில தினசரி ஒன்றிற்கு இந்திய இசை, நாட்டிய விமரிசகராக இருந்தபோது, கலைஞர்களின் தரத்தை அலசி, பாராட்டத் தக்கவைகள் பலவற்றைக் குறிப்பிட்டிருந்தாலும், ஓரிரண்டு குறைகளைச் சுட்டிக்காட்டியதற்காக அவர்கள் கோபத்துக்கும், தீராப்பகைக்கும் ஆளாகி இருக்கிறேன். அதிலிருந்து, `உலகப் புகழ் வாய்ந்தவர்கள்’ என்ற பெயர்பெற்றவர்களைப்பற்றி மட்டும் எழுத ஒப்புக்கொள்வேன். எதற்கு வம்பு!

    சுமாரான ஒரு நடன ஆசிரியை தன் நிகழ்ச்சிக்கு வந்து அதைப்பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள், தொலைபேசிமூலம்.

    “நான் எப்படி எழுதுவேன்னு தெரியுமில்லையா?” என்று கேட்டு அவளை யோசிக்கவிட்டு, பிறகு, “எழுதணுமா?” என்று சமாதானமாகக் கேட்டேன்.

    அவள் பயந்து, “பரவாயில்லை. சும்மா வாங்க,” என்றாள். அவளுக்கே தன் திறமையில் நம்பிக்கை இல்லைபோலும்!

    பள்ளியில் படிக்கும்போது, `பிழைதிருத்தம்’ என்று பண்ணினோம். அடுத்த முறை அதே தவறுகள் வராது பார்த்துக்கொண்டபோது, மதிப்பெண்கள் கூடின. நாம் வளர்ந்து பெரியவர்களானதும் அக்குணம் ஏன் மாறியது?

    வயதான கோளாறா?

    வயதானவர்களுக்கு — தம்மைத் தாமே ஏற்க — அபய முத்திரை மிகவும் உபயோகமானது.

    `இளம் வயதில் இருந்த உடல் வலிமை, உத்தியோகம், வருமானம் எதுவுமே இப்போது இல்லையே!’ என்ற வருத்தம் ஏற்பட, அது மனைவியின்மேல் ஆத்திரமாக மாறுகிறது. அவள் எது சொன்னாலும், தன்னைப் பழிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

    “என் கணவருக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். ஓயாமல் படிப்பார்,” என்றாள் ஒரு சிநேகிதி.

    நான் சில இணையதளங்களைப்பற்றிக் கூறினேன்.

    பதிலாக, “அவ்வளவுதான்! கத்த ஆரம்பித்துவிடுவார். நான் என்ன சொன்னாலும் அவருக்குப் பிடிப்பதில்லை!” என்றாள்.

    மேற்கண்ட வசனத்தை வெவ்வேறு நாடுகளிலிருந்த பல பெண்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

    பெண்களுக்கு இயற்கை உபாதைகள் பன்னிரண்டு வயதிலிருந்தே ஆரம்பித்து, பிள்ளைப்பேறு காலங்களிலும் தொடர்வதால், முதுமையின் தளர்ச்சி அவர்கள் மனதை அவ்வளவாகப் பாதிப்பதில்லையோ?

    எழுத்தாளர்களும் சுயவிமரிசனமும்

    தன்னைத்தானே விமரிசித்துக்கொண்டு, தான் செய்தது நிறைவாக இல்லை என்று ஒப்புக்கொள்ளும் குணம் எழுத்தாளர்களுக்கு மிக அவசியம்.

    `இரவு பகலாக எழுதினேனே! இதில் சிலவற்றைக்கூட அடிக்க மனம் வரவில்லையே!’ என்று தான் எழுதியதன்மேல் காதல் கொள்பவர்களின் எழுத்து வாசகர்களுக்கு நிறைவைத் தராது.

    பத்திரிகை ஆசிரியர்களின் தொழிலே அதுதான் என்பதை புரிந்துகொள்ள விரும்பாது, `நான் கஷ்டப்பட்டு எழுதினதை கன்னாபின்னான்னு சுருக்கிட்டான்!’ என்று புலம்பும் எழுத்தாளர்கள் உண்டு.

    `இது அநாவசியம். அல்லது, தவறு!’ என்று நம்பகமான ஒருவர் விளக்கங்களுடன் சுட்டிக்காட்டும்போது அதை எப்படி சரிப்படுத்தலாம் என்று யோசித்தால்தானே முன்னேற முடியும்?

    ஒரு துறையில் எத்தனை ஆண்டுகால அனுபவமாக இருந்தாலும், தவறுகளைத் தவிர்க்க முடியாது. `நான் என்ன கடவுளா, தப்பே செய்யாமலிருக்க!’ என்று மன்னித்துக்கொள்ள வேண்டியதுதான். ஆரோக்கியமாவது கெடாமலிருக்கும். அபய முத்திரை இருக்கவே இருக்கிறது!

    தொடருவோம்

    Share
  • எழுத ஆசை

    எழுத ஆசை

    பெருவை பார்த்தசாரதி

     

    மையும் எழுதுகோலும்

    மணமக்கள் ஆனாலன்புடனே

    இரண்டும் இணைந்தால்தான்

    எழுத்தென்பது பிறக்கும்

     

    மனம் போன போக்கினிலே

    மணிக்கணக்கில் எழுதாமல்

    புவிக்குதவும் புதியசெய்திகளை

    புத்திகொண்டு நானெழுதவேண்டும்

     

    எப்படியும் எழுதுவேன்

    என்பதை விடுத்து

    இப்படியும் எழுதலாமெனஒரு

    குறிக்கோளுடன் நானெழுதவேண்டும்

     

    இளைஞருக்கு வழிகாட்ட

    எழுச்சிமிகு சிந்தனையோடு

    அவசரத்தில் எழுதாமல்நான்

    அவனிக்குதவுமாறு நானெழுதவேண்டும்

     

    இலக்கியங்கள் எடுத்துரைக்கும்

    இலட்சிய மேற்கோள்காட்டி

    இனியசெய்யுளாக எழுத்திலிட்டு

    இராப்பகலாய் நானெழுதவேண்டும்

     

    எழுத்திலே நான்பெரியவனேன

    இறுமாப்பு இடம்பெறாமல்

    எளியதமிழ் உரையுடனே

    என்றும் நானெழுதவேண்டும்

     

    அவனியில் புதையுண்ட

    அருந்தமிழ்க் காப்பியத்தை

    அகழ்வாராய்ந்து அர்த்தங்கள்பல

    அரிதாய்க் கொண்டுவரவேணும்

     

    வாய்மையும் நேர்மையும்

    தூய்மையாய் இடம்பெற

    எழுதுகோலும் மையுமிணைந்து

    நல்லெண்ணம்தனை நானெழுதவேண்டும்

     

    Share
  • அம்மாவின் நாட் குறிப்பிலிருந்து

    ராஜகவி ராகில்

     

     

    மகனே

    காகம் கரைந்தால் வீதியில் வந்து நிற்கின்றன

    என் கண்களடா

     

    உன் முகந்தான் தெரிகிறது

    நான் கண்ணாடி பார்க்கின்ற நேரமெல்லாம்

     

    என் பழைய சேலைகளிலும்

    உன் வாசந்தான் வாழ்கிறது மகனே

     

    அம்மா கண்களைப் பூக்களாக்க மாட்டாயா

    ஒரு தரம் வந்து

     

    மகனே

    சமைத்துத் தந்த சட்டி பானைகளுக்குள்ளும்

    உன் ஞாபகங்கள்தானடா

     

    பாசம் உயிரோடு கொல்லும்

    இதை உண்மையாக்கியவன் நீ

     

    பசி வரும் போது

    உனக்கும் சேர்த்து நிறையச்  சாப்பிட்டாலும்

    அடங்கியபாடில்லை மனப்பசிதான்

     

    நீ உப்பில்லாமல்தான் உண்கிறாய் போலும்

    உன் நாக்கிலும் செத்துப்போனதா

    அம்மா ஞாபகம்

     

    மகனே

    வீட்டில் விளக்கு எரிந்தாலும்

    இருளில் கிடக்கிறது என் மனசு

     

    காற்றோடு அதிகம் பேசுகிறேன்

    பழகுகிறேன்

    என்னை வாழவைத்துக் கொண்டிருப்பது அதுதானே

     

    மகனே

    வேர் கிளை ஒன்றாக இருந்தால்தான்

    விழுது விட முடியும்

     

    அங்கிருந்து ஆயுள் வரை

    நீ அம்மா குரல் கேட்க

    நான் சுசீலா அல்ல மகனே

     

    உன் அம்மா பாசம் தாகமாய்த் தவிக்கிறது

    கண்ணீர் கூட இல்லையடா

    நான் அருந்த

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்  -75

    க. பாலசுப்பிரமணியன்

     செவிச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

    education

    கற்றலுக்கான வழிமுறைகளை பற்றிய  ஆராய்ச்சிகளின் மூலம் கீழ்க்கண்ட நான்கு வழிகள் அதற்க்கு உறுதுணையாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. :

    அவையாவன:

    1. கேட்டல் (Listening)
    2. பேசுதல் (speaking)
    3. படித்தல் (Reading)
    4. எழுதுதல் (writing)

    தொல் காலம் முதற்கொண்டே கல்வி அறிவு நல்லாசிரியர்களிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் மாணவர்களுக்கும் சீடர்களுக்கும் கேள்வி ஞானம் மூலமாகவே கிடைத்து வந்தது. பண்டைய காலத்தில் இந்த முறையை வடமொழியில் “சுருதி’ என்றும் “ஸ்ம்ருதி ‘ என்ற சொற்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர். இந்திய துணைக்கண்டம் மட்டுமின்றி உலகளாவிய பல நாடுகளில் பிளாட்டோ, அரிஸ்டோட்டில் போன்ற பல பேரறிஞர்கள் தங்களுடைய சீடர்களுடன் உரையாடல் மூலமாகவும், கேள்வி பதில்கள் மூலமாகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு அறிவுக்கனலை வளர்த்து வந்தனர்.

    தமிழ்நாட்டில் இதன் பெருமையை திருக்குறள் தெள்ளத்தெளிவாக நம்முன் வைக்கின்றது.

    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
    செல்வத்து ளெல்லாந் தலை.

    என்று கேட்டு அறிந்து நம் அறிவை வளர்த்துக் கொள்ளும் திறனின் அவசியத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது

    அது மட்டுமல்ல, செவி இன்பத்தை சிறப்பித்துக் கூறும் வள்ளுவரின் கீழ்க்கண்ட குறள் நம் சிந்தனைக்கு ஒரு நல்ல விருந்து.

    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினு மென்.

    ஆனால் “கேட்டல்” என்பது வெறும் காதுகளில் ஒலித்துகள்களை வாங்கிக் கொள்வது மட்டுமல்ல.  நம்முடைய காதுகளில் விழுகின்ற ஒலி அலைகள் நம்முடைய மூளை வரை சென்று அதன் கருத்தை உள்வாங்கி அதற்குப் பொருள் கொடுத்து அதை உணர்வோடு ஒன்றிடவைத்து நமக்கு ஒரு செய்தியாக, ஒரு கருத்தாகத் தரும் பொழுதுதான் அந்தக் “கேட்டல்” என்ற செயலுக்கு ஒரு பொருளும் நிறைவும் கிடைக்கின்றது.

    “கேட்டல் ” என்ற செயலை நிறைவேற்றுவதில் மூளைக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காதில் விழுவதெல்லாம் வெறும் ஒலித்துகள்களே. அதை மூளைக்கு எடுத்துச் சென்று அதை உருவகித்து, சம்பந்தப்பட்ட மொழியுடனும், அதைச் சார்ந்த முன்னறிவுடனும், தக்க பொருளுடனும் இணைத்து மூளை நமக்கு ஒரு வினாடியில் மிகச்சிறிய விழுக்காட்டில் அறிவாகத் தருகின்றது. என்ன விந்தையான செயல்!. இப்படி இருக்கும் பொழுது இந்தக்காதுகளை நாம் எவ்வாறு உபயோகமுள்ளதாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்?

    கற்றலில் இந்த “செவிச்செல்வத்திற்க்கு” ஒரு அறிய இடம் உள்ளது. பல புத்தகங்களைப் படித்து நமக்கு கிடைக்கின்ற அறிவு சிறிது நேரத்தில் ‘செவிச்செல்வத்தின்’ மூலமாகக் கிடைக்கின்றது. இதனைப்  பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மன-நரம்பியல் அறிஞர் முனைவர். வீ,.எஸ்  ராமச்சந்திரா அவர்கள் தன்னுடைய “கதை சொல்லும் மூளை”  (The Tell- Tale Brain ) என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு கூறுகின்றார்,

    “Human language seems so complex, multi-dimensional, and richly evocative that one is tempted to think that almost the entire brain, or large chunks of it at least must be involved.  After all, even the utterance of a single word like “rose” evokes a whole host of associations and emotions: the first rose you ever got, the fragrance, rose gardens you were promised, rosy lips and cheeks, thorns, rose-colored glasses, and so on. Doesn’t it imply that many far-flung regions of the brain must cooperate to generate the concept of rose? Surely, the word is just the handle, or focus, around which swirls a halo of association, meanings and memories.”

    “ரோஜா” என்ற ஒரு வார்த்தை சொல்லப்படும்பொழுது அதைக் கேட்பவரின் உள்ளத்தின் எத்தனை விதமான கற்பனைகள் எண்ணங்கள் உண்டாகலாம்.. ஒருவர்க்கு கிடைத்த முதல் ரோஜா, அதன் மனம், அதன் நிறம், அத்தோடு சேர்ந்த முள், ரோஜாத் தோட்டம், அந்த வண்ணத்தில் பூசப்படும் நிறங்கள், அந்த வண்ணத்தில் அணியப்படும் கண்ணாடிகள் ..இன்னும் எத்தனை எத்தனை .. இவ்வை அனைத்தும் வெளிவுப்படுத்த மூளையின் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளும் உபயோகத்திற்கு வருகின்றன.

    ஆகவே கற்றலில் “கேள்வி அறிவு” ஒரு முக்கியமான ஒரு தனிமனிதனின் அறிவு வளர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நாம் எப்படிக் கேட்க வேண்டும்? இதற்க்கு ஏதாவது தனித்திறன்களோ அல்லது ஆர்வமோ தேவையா? பள்ளிகளில் ஆசிரியர்கள் எவ்வாறு கேள்வி அறிவை ஊக்கப்படுத்த வேண்டும் ? மேடைப்பேச்சில் கேட்பவர்களுக்கு மேலும் கேட்பதற்கான ஆர்வத்தை தூண்டுவிக்கும் வகையில் எவ்வாறு பேச வேண்டும்? – என்பதெல்லாம் நாம் அனைவரும் கற்று அறிந்துகொள்ளவேண்டிய இன்றயத் தேவை.

    இந்த கேள்வி அறிவின் சிறப்பை விளக்கும் வகையில் செகப்பிரியர் (Shakespere) தனது “ஹாம்லெட் ” (Hamlet) என்ற நாடகத்தில் ஒரு கட்டத்தில் பொலோனியஸ் என்ற ஒரு தந்தையின் வாயிலாக தன மகனுக்குத் தரும் அறிவுரையை கூறுகின்றார் :

    “Give everyman thy ear, but few thy voice.”

    கற்றலில் இந்தக் “கேட்டல்” திறனின் தாக்கங்களைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

    (தொடரும்)

    Share