பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

18136919_1302695336451329_1279855610_n

9446955@N02_rசத்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – (109)

 1. மனிதனால்…

  காடு கொன்று
  கட்டிடப் பயிர் வளர்த்ததில்,
  கண்டுமுதல் அமோகம்..

  கூடுகட்டி
  மாடிகளில் வாழும்
  பறவை வாழ்க்கைக்கு
  மாறிவிட்டான் மனிதன்..

  கூடுகட்டி
  குடும்பமாய் வாழ்ந்த
  பறவையெல்லாம்
  கூண்டோடு காலி..

  இருக்கும் ஒன்றிரணடும்
  இருப்பிடம் தேடுகின்றன-
  இலக்கில்லாமல் பறந்து…!

  -செண்பக ஜெகதீசன்…

 2. யாதும் ஊரே யாவரும் கேளீர்

  மானுட தர்மத்தில்,
  எல்லை தாண்டிய நேயம் பேச்சில் தான்
  எள்ளளவும் இல்லை மூச்சில் தான்
  பாரளவை சிறையெடுக்கும் பறவைகளின்
  சிறகுகளுக்குத் தெரிவதில்லை பேதங்கள்
  வெண்புறாவின் விலாசம் தேடினால்
  பிரபஞ்சம் முழுவதுமே பறத்தலின் சுதந்திரம்
  வாழ்தலின் போது வானமே எல்லை
  சிதறிய கண்டங்களில்
  சிதறுண்ட நெஞ்சங்கள்
  மானிட வம்சாவழியின் வகுக்கப்பட்டச் சட்டங்கள்
  சமாதனப் புறவிடம் தூது சொல்லி
  சம்மட்டியால் அடிக்கும் ராஜ தந்திரம்
  மனிதநேயம் காட்டி மாயை செய்வதும்
  மானுட தர்மம் ஆதலால்
  வெண்சிறகசைவில்,
  உலக உருண்டையின் மொத்தமும்
  உயிரின நேயத்தைச் சொல்லிடும்
  சின்னஞ்சிறு மழலையின் மொழிகளில் செப்பிடும் கீதங்கள்
  யாதும் ஊரே யாவரும் கேளீர்!

 3. உயர்வு விண்ணைத் தொடும் கட்டிடங்கள்!
  மனித வெற்றியின் பட்டயங்கள!
  உழைப்பு என்பது ஒரு சிறகு!
  முயற்சி என்பது மறு சிறகு!
  இவ்விரண்டு சிறகாலே !
  உச்சம் தொடலாம் மறக்காதே!
  பிள்ளையின் உயர்வு தாயின் மகிழ்ச்சி!
  கவிதையின் உயர்வு மொழியின் மகிழ்ச்சி!
  நீரின் உயர்வு நிலத்தின் மகிழ்ச்சி!
  மழையின் உயர்வு மரத்தின் மகிழ்ச்சி!
  மரத்தின் உயர்வு பறவையின் மகிழ்ச்சி!
  நிறைவின் உயர்வு வாழ்க்கையின் மகிழ்ச்சி!
  செல்வத்தின் உயர்வு கொடையின் மகிழ்ச்சி!
  வெளிச்சத்தின் பின்னே இருள் இருக்கும்!
  உயர்வின் பின்னே தாழ்வு இருக்கும்!
  இரண்டையும் ஒன்றாய் நினைப்பவர்க்கு !
  வாழ்க்கையில் என்றும் மகிழ்விருக்கும் !

 4. இறுதிப் பயணம்

  சி. ஜெயபாரதன், கனடா.

  கரிவாயு நிரம்பி
  நகரெங்கும் புகைமூடிப்
  போச்சு !
  மூச்சுவிடத் தூய
  காற்றில்லை !
  நரகமாய்ப் போச்சு நானிருந்த
  நகரமெல்லாம் !
  குடிநீரில்லை !
  குடியிருக்க மரமில்லை !
  மரமிருந்தால்
  பச்சை இலையில்லை !
  தின்னக்
  காய் கனிகள் இல்லை !
  தரையில் கிடக்கும்
  காய்ந்த இலைகளை
  எலும்பான மாடுகள் தின்னும் !
  துப்பாக்கி ஏந்தி வருகிறான்
  சுட்டுத் தின்ன
  என்னை !
  நகர் விட்டுப் போகிறேன் !
  மனிதன் தின்பதற்கு
  இரையாவேனா ?
  இல்லை,
  கரிவாயுச் சூட்டில் வெந்து
  எரிந்து போவேனா ?
  தவிப்பெனக்கு இந்தப்
  புவி வாழ்வில் !
  வாழ்வில்லை ! போகிறேன் !
  பட்டினியில்
  மீளா உலகுக்கு !

  +++++++++++++!

Leave a Reply

Your email address will not be published.