இலக்கியம்கவிதைகள்

பாரியும் கபிலரும்

வேதா இலங்காதிலகம்

 

 

பறம்பு நாட்டரசன்  குறுநில மன்னன்

பாரி  கடையெழு  வள்ளல்களில்  ஒருவன்.

பற்றிக் கொள்ள முல்லைக்குத் தேரீந்தவன்.

படைமடமற்றவன் கொடைமடம் உள்ளவன்.

 

பறம்புமலை  முன்னூறு  கிராமங்களடங்கிய  செழிப்புலகம்.

கலகலவெனச் சிரிப்பொலிக்கும் வெள்ளியருவி ஓசை

கனி குலுங்கும் மரங்கள், ஓடைகள்

மலர்ச்சோலைகள், தேன், இசைப் பறவைகளதிகம்.

 

அள்ளிக்  கொடுக்க  அத்தனைகள் உண்டு

பாரி கொடைமனமறிந்து கபிலர் பொருள்கொள்ள வந்தார்.

புலமையினிணையற்ற திறமையறிந்து கபிலரிடம் நட்பானார்.

பாரியை மட்டும் பாடும் நல்லிசைவாய்மொழிக் கவிஞரானார்.

 

கொடை மனத்தான்,  நாட்டுவளமனைத்தும் பாரெங்குமேக

மடைதிறந்த பாரிபுகழால் அழுக்காறடைந்தனர் அரசர்.

மூவேந்தர் படையெடுத்து பறம்புமலையைச் சூழ்ந்தனர்.

திறமையாம்  தற்காப்பு  முறையாற்போர் நீண்டது.

 

போரால் பாரியை வெல்லல்லரிதென விழிபிதுங்கினர்

படையடிவாரத்தில் விழுந்த கபிலர் கவியோலையால்

பாரியைத் தந்திரத்தால் வெல்லப் பெண்கேட்டுத் தூதாகி

முதுமை வேடத்தில் பாரியை யாழிசைத்துப் புகழ்ந்தனர்.

 

பரிசாக அவனுயிரைக் கேட்கத் தன்னுயிரிழந்தான்.

மக்களான அங்கவை  சங்கவை தனியானார்.

துயரத்துடன் கபிலர் பெண்களையழைத்து  வேறிடமேகினார்.

பார்ப்பனரிடத்தில் பெண்களையிணைத்துக் கபிலருயிர் நீத்தார்.

 

மூவேந்தர்  வஞ்சத்திற்குப் பாரி பலியானார்.

பறம்புமலை தனியானது. நட்பிலக்கணமாகினர்    பாரி – கபிலர்.

கபிலர் தென்பெண்ணையாறருகில்  வடக்கிருந்துயிர் துறந்தார்.

கபிலர் குன்றென அந்தவிடம் இன்றுமுள்ளது.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க