நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி 110-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

 

sky

திரு. ஜமீல் ரியாஸ் எடுத்திருக்கும் இந்த வித்தியாசமான புகைப்படத்தை இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்.

வானத்தின் அடர்நீல வண்ணமும், வெண்ணிலவைக் கம்பளியாய்ப் போர்த்தியிருக்கும் கருமேகக் கூட்டங்களும், கீழே தெரியும் மணற்குவியலும், பாறைகளும் ஏதோ கனவுலக் காட்சிபோல் கவினோடு தெரிகின்றன.

இந்தக் காட்சியைத் தம் கவித்திறனால் மிளிரச் செய்ய நம் கவிஞர்களும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கவிதையையும் படித்துச் சுவைத்து வருவோம்.

*****

”நீலவான், வெண்ணிலவைப் பொட்டாய் வைத்துக்கொண்டதைச் சற்றும் விரும்பாத காளமேகம் அதனைப் பட்டென மறைத்து, வான வயலில் விண்மீன்களை விதைக்க, அவை தாரகையாய்ச் சுடர்விடுகின்றன” என்ற சுவையான கற்பனையைத் தன் கவிதையில்  விதைத்திருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

முளைத்தது…

நீல வானம்
நிலவை வைத்துக்கொண்டது-
பொட்டாய்..

மேகத்துக்குப் பிடிக்கவில்லை,
மறைத்தது நிலவை..

வான வயலில்
விதைத்தது,
விண்மீன் விதைகளை..

விதை முளைத்து
வெளிச்சமாய்-
கண்சிமிட்டும் தாரகைகள்…!

*****

”நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்த நிலவே! ஈசனின் சிரமேறிய உனக்கு அச்சமெதற்கு? காதலர்க்குத் தூதானாய்; மழலையர்க்கு மாதாவானாய்! இதயத்தில் கொலுவிருக்கும் எழில்நிலவே! உதயம்வரை ஒளிதருவாய் நீ எமக்கு!” என்று அம்புலியோடு அன்பாய் உரையாடுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

நிலாப்பாடம்!

மேகத்தின் பின்னால் உன் முகத்தை
ஏன் மறைத்தாய் வெண்ணிலாவே!
நட்சத்திரத் தோழிகள் உடனிருக்க
என்ன பயம் உனக்கு வெண்ணிலாவே!
ஈசன் சூடியதால் வெண்ணிலாவே!
உனக்கு ஈடு இணை எதுவுமில்லை
வெண்ணிலாவே!
காதலர்க்கு தூது செல்லும் வெண்ணிலாவே! அவர்
உன்னைக் காணாமல் கலங்கிடுவார் வெண்ணிலாவே!
கவிஞர்களின் கற்பனைக்கு அடித்தளம் நீ
வெண்ணிலாவே!
உன்னைக் காணாமல் மொழி மறப்பார்
வெண்ணிலாவே!
மழலைக்கெல்லாம் மாதா நீ வெண்ணிலாவே!
உன்னைக் காணாமல் தவித்திடுவார்
வெண்ணிலாவே!
மேகத்திரை விலக்கி வெண்ணிலாவே!
உன் எழில் முகத்தை காட்டிடுவாய் வெண்ணிலாவே !
இருளின் துயர் நீக்கி வெண்ணிலாவே!
ஒளியைத் தந்திடுவாய் வெண்ணிலாவே!
நீ சிந்தும் சிறு துளி ஒளியில் வெண்ணிலாவே !
மலை அரசி மிளிரும் எழிலைப் பார் வெண்ணிலாவே!
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில் வெண்ணிலாவே!
பூமித்தாயின் புன்னகையைப் பார் வெண்ணிலாவே!
இதமாய் ஒளி வீசும் வெண்ணிலாவே!
உடனே வெளியில் வா வெண்ணிலாவே!
இதயத்தில் கொலுவிருக்கும் வெண்ணிலாவே!
உதயம் வரும் வரை ஒளி தருவாய்
வெண்ணிலாவே!
சாதி, மதம் பார்க்காத வெண்ணிலாவே!
சடுதியில் வந்திடுவாய் வெண்ணிலாவே!
வளர்வதும், தேய்வதும் , மறைவதும்
வெண்ணிலாவே!
மரபென்று வாழ்ந்து காட்டுகிறாய்
வெண்ணிலாவே!
இதை மறக்காமல் மனதில் கொள்வோம்
வெண்ணிலாவே!

*****

”ஆகாயமே! நிலவுக்கு அதன் அழகைக் காட்டும் நிலைக்கண்ணாடி நீ. கன்னியரின் கார்குழலென அசைந்தாடும் கருமேகம்; அம் மேகத்துக்கு உன் நெருக்கம் தரும் மோகம். ஆகா! ஆகாயமொரு தமிழ்த்தோட்டம்; அதில் விண்மீன்களென மின்னுவதோ புலவர்களின் பாக்கூட்டம்” என்று தன் எண்ணத்தேரை அழகாய் ஓட்டி விண்ணைப் புகழ்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

”ஆகாயம் ஓர் ஆல்பம்!”

மண்ணிலிருந்து ஆகாயத்தைப் பார்…நம்
எண்ணமும் விண்ணைத் தொடுமப்பா..!

வான வெளியை வியந்து நோக்கின்..
மனதுக்குள் சிந்தனைபல கிளர்த்தெழும்..!

விண்ணும் முகிலும் காதல்கொண்டு விளையாட..
மண்ணும்மலையும் மறைந்திருந்து பார்க்கும்..!

மேகம் நாணமுடன் விண்ணை நெருங்கி..
மோகம் கொள்ளு மப்போது..!

மண்ணில் வாழும் மனிதரை நோக்கி..
கண் சிமிட்டும் விண்மீன்கள்..!

கவர்ச்சிமிகு கன்னியரின் கார்குழல்போல்
அசைந்தாடும் மேகக் கருங்கூட்டம்..!

மதிமயக்கும் விண்ணை மனதார வாழ்த்த
மலையேறிச் செல்லும் வெண்முகிலழகு..!

எதிரொலி கொடுக்கும் இடியின் வாழ்த்தால்
மறுஒலிகேட்டு மகிழு மனைத்தும்..!

சின்னக் குழந்தைகள் கிறுக்கிய ஓவியமாய்
மின்னல் கோடுகளின் மாலைதெரியும்..!

மலை முகட்டை மழைத் துளியால்
தலை நனைக்கும் வானமாவாய்நீ..!

நிலவுக்கு அதன் அழகைக் காட்டும்
நிலைக் கண்ணாடி போல்நீ..!

வானமுனது ஓங்கார இரைச்சலில் ஆழ்ந்ததில்
மனமெனது அகங்காரம் மெளனமாகிறது..!

மலையின் மலைப்பான இயற்கைச் செழிப்பில்
மலைத்தெழும் கற்பனைகள் ஏராளம்..!

உவமை தேடும் கவிஞருக்கு..ஆகாயம்
உன்னை விட்டால் வேறு ஆருமில்லை..!

உச்சிவானம் பற்றியே உறக்கமிலாச் சிந்தனையுடன்
மெச்சியுனைப் புகழாத கவிஞரிலர்..!

ஆகாயமொரு தமிழ்த்தோட்ட மதில்…விண்மீன்கள்
ஆகும் புலவர்களின் பாக்கூட்டம்..!

அத்துணைக் கவிஞனின் கற்பனைக்கு விருந்தாகிய
ஆகாயம்…நீயொரு “ஆல்பம்”

*****

விண்ணும் அதில் விளையாடும் நிலவும், அந்நிலவைத் துகிலென மறைக்கும் முகிலும் நம் கவிஞர்களின் கற்பனைக்குத் தீனியாய் அமைந்ததைத் தீஞ்சுவைக் கவிதைகள்வழிக் காணமுடிகின்றது. பாராட்டுக்கள் பாவலர்களே!

*****

”கணினி யுகத்தில் பால்வீதியும் பொரிஉருண்டாய் உருமாறிப்போனது. அடடா! அண்டகோளத்தை இயற்கை அன்னை தன் கைகளில் அம்மானை ஆடுகிறாள். நீர்க் கோளமான புவியில் மட்டும் புல்லினமும், புள்ளினமும் தோன்றிச் சிந்தை மயக்கும் விந்தையை  என்னென்பது?” என்று பிரபஞ்சச் சிற்பியின் கைத்திறனைப் பஞ்சமின்றி அன்பு நெஞ்சமொடு போற்றும் கவிதை ஒன்றைக் கண்ணுற்றேன்! 

பொரி உருண்டை

பிரம்மாண்டமான நமது
பால்வீதிப்
பிரபஞ்சம் கலியுகத்தில்
கணினி யுகத்தில்
ஒரு படமாய்ப்
பொரி உண்டையாய்ப்
போனது!
அண்ட கோளங்களை இயற்கை
அன்னை கைகளில்
அம்மானை ஆடுகிறாள்!
சூரியக் கோள்கள் புரியும்
சர்க்கஸ் போல்
கோடான கோடிப்
பரிதி மண்டலங்கள்
குடை ராட்டினம் சுற்றும்,
ஒளிமந்தைகள்
நளின நடம்புரியும்
பிரபஞ்சத்தைக் காணக்
கோடிக் கண்கள்
வேண்டும்!
சூரியக் கதிர்ப் பொழிவில்
நீரியக் கோளாம்
பூமியில் மட்டும் ஏன்
புள்ளினம், புல்லினம், பூவினம்
துள்ளி முளைத்தன?
இயற்கை அன்னை
வயிற்றில்
வாரிசாய்த் தோன்றிய
ஆறறிவு மாந்தர்
உன்னதப் படைப்பென்ன?
தாரகை வானிலே
இடியும், மழையும், மின்னலும்
கடல் மடியிலே
எரிமலை பொங்கி
வெடிப்பும், துடிப்பும் எழுந்து
பூகம்பத்தில்
சுனாமி அலைகள்
அடிப்ப தென்ன?
மனிதர் வாழ்வெல்லாம்
கதையாய்க்
கனவாகிப் போவதென்ன?
ஆயினும்
கற்றதனால் நாம்
பெற்ற பயன் என்ன? என்ன?
பிரபஞ்சச் சிற்பியின்
கைத்திறனை,
கலைத்திறனை, கவினைக்
காணாத போது?

அறிவியலோடு அழகியலையும் சேர்த்துக் குழைத்து, வானில் தெரியும் அற்புதக் காட்சியைப் பொற்புடன் விவரித்திருக்கும் இக்கவிதை சிறப்பு! இதனை இயற்றிய கவிஞர் திரு. சி. ஜெயபாரதன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் கனிவான பாராட்டு!

 

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Avatar

    மகத்தான கடவுள் படைப்பான இவ்வழகிய பிரபஞ்சத்தைப் பற்றிக் கவிதையாய் முதன்முதல் வல்லமையில் எழுத வாய்ப்பளித்த படத்தேர்வாளர் திருமிகு சாந்தி மாரியப்பன், படமெடுப்பாளர் திரு ஜமீல் ரியாஸ், சிறப்புக் கவிதையாய்த் தேர்வு செய்த நடுவர் திருமிகு. மேகலா இராமமூர்த்தி ஆகியோர் மூவருக்கும் எனது பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சி. ஜெயபாரதன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க