இந்தவார வல்லமையாளர் விருது! (221)
செல்வன்
இவ்வார வல்லமையாளர்: இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி (மன்னர் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை உருவாக்கியதற்கு)
இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 1000 கோடி ரூபாய் வசூலை இவ்வாரம் கடந்து சாதனை படைத்துள்ளது பாகுபலி: 2 திரைப்படம்.
இந்திய திரையுலக வரலாற்றின் மைல்கல் ஆன படங்கள் என ஷோலே, மதர் இந்தியா போன்ற பாலிவுட் படங்களே இருந்து வந்த நிலையில் அப்படங்கள் படைத்த வரலாற்றுசாதனையை ஒரே வாரத்தில் தாண்டி அசகாய சாதனை படைத்துள்ளது பாகுபலி.
ஒரு படைப்பாளி தன் படைப்பின் வணிகரீதியான வெற்றியால் மட்டும் சிறப்படைவதில்லை. தன் பாத்திரப்படைப்பாலும், கலைநேர்த்தியாலுமே சிறப்பை அடைகிறான். அவ்விதத்தில் இத்திரைப்படக் கதாப்பாத்திரமான அமரேந்திர பாகுபலியை உருவாக்கிய இயக்குனர் ராஜமவுலியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஏன் அமரேந்திர பாகுபலி பாத்திரத்தின் தந்தையான இயக்குனர் ராஜமவுலியை விருதுக்கு தேர்வு செய்தோம்?
அமரேந்திர பாகுபலி மக்கள் நலனில் அக்கறை கொண்ட மன்னர். அவர் சகோதரன் பல்வாள்தேவன் ஆண்மை நிரம்பிய மாவீரன். ஆனால் ஆண்மையுடன் தயாளகுணமும் அன்பும் சேர்கையில் மனிதன் பேராண்மை கொண்டவன் ஆகிறான். அத்தகைய பேராண்மை கொண்ட மாவீரர் அமரேந்திர பாகுபலி. போர்க்களத்தில் வெற்றியை விட மக்கள் உயிர் மேல் என சாதுர்யமாக மக்களை காத்தவர். அதனால் மகிழ்மதி மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மிகப்பெரும் சாம்ராஜ்யத்தின் மன்னராக ஆனபின், தேவசேனா எனும் இளவரசியை காதலிக்கிறார். காதலியா, மணிமகுடமா என வருகையில் காதலிக்காக மணிமகுடத்தை விட்டுத்தந்து தன் சகோதரனை ஆள அனுமதிக்கிறார்.
ஆட்சி அதிகாரத்திற்காக கொலைகளை செய்யத் தயங்காத, பலதார மணம் புரியும் மன்னர்களைக் கண்டுள்ளோம். ஆனால் பாகுபலி காதலுக்காக நாட்டை விட்டுத்தருகிறார். தாய் மேல் உயிரையே வைத்திருந்தாலும், தாய் தவறு செய்கையில் ஜால்ரா போடாமல் தட்டிக் கேட்கிறார். மக்களுக்கு பிரச்சனை என வருகையில் அவர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதனால் இறுதியில் கொலை செய்யவும்படுகிறார். “பெண்களை அவமதித்தால் வெட்டப்படவேண்டியது கை அல்ல, தலை” எனவும் உறுதிபடக்கூறுகிறார்,
அக்காலத்தில் காணப்பட்ட பரம்பரை அடிமைக் கோட்பாட்டின் சின்னம் கட்டப்பா. அவரை பல்வாள்தேவன் “நாய்” போல கருதி அவமதிக்கையில், தன் தாய்மாமனாக கருதி தன் பிள்ளையை அவர் ஆசிர்வதிக்கவேண்டும் எனக் கேட்கிறார் பாகுபலி. தனக்கென பிரத்தியேக அரசவம்ச உணவிருக்க, அதைத் தவிர்த்து படைவீரர்களுக்கு அளிக்கப்படும் உணவையே உண்கிறார்.
அவரிடம் ஆன்மிக நம்பிக்கை உள்ளது. ஆனால் மூடநம்பிக்கை இல்லை. போர்க்களத்தில் எருமையை பலியிட மறுத்து, தன் இரத்தத்தை தந்து ஒரு எருமையின் உயிரைக் காக்கிறார்.
பாகுபலி தன் வளர்ப்புத் தாயான ராஜமாதா சிவகாமி தேவியால் வளர்க்கப்படுபவர். ஆனால் வளர்ப்புத்தாயை பெற்ற அன்னையாக கருதுகிறார். இது இராமன் கைகேயி மேல் இறுதிவரை வைத்திருந்த நன்மதிப்பை நினைவூட்டுகிறது. ஒருமனிதன் நன்றாக வாழ்கையில் அவன் பேசும் நியாய, தருமங்களை விட அவன் வீழ்கையில் அவன் கடைபிடிக்கும் கோட்பாடுகளே அவனது நன்மதிப்பை நிர்ணயிப்பவை. அவ்வகையில் தன் மரணத்தருவாயிலும் தன் தாயைக் காப்பாற்றும்படி கட்டப்பாவிடம் கூறி கம்பீரமாக உயிர்விடுகிறார் பாகுபலி. தான் அரசபதவியை இழந்தபின்னரும், கோட்டையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னரும் மக்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்கிறார்.
மேலும் திரைப்பட நாயகர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞர்கள் கொண்ட நாட்டில் பாகுபலி உடல்வலிமை மிக்கவராகக் காட்டப்பட்டிருப்பது இளைஞர்களிடையே ஆரோக்கியமான உடல்வலு கலாச்சாரத்தை உருவாக்கும் எனவும் நம்புகிறோம்.
தொழிலாளர் தினம் மற்றும் அன்னையர் தினம் ஆகியவை வரும் மே மாதத்தில் அனைத்து தொழிலாளர்களும் விரும்பும் ஒரு முதலாளியாக, மக்கள் நலனை மனதில் கொண்ட தலைவனாக, அனைத்து தாய்மார்களும் போற்றும் பண்பு நிரம்பிய இலக்கிய கதாபாத்திரமாக மன்னர் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை படைத்த முற்போக்குச் சிந்தனையாளரான இயக்குனர் ராஜமவுலியை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
வல்லமையாளர் ராஜமவுலி அவர்களுக்கு வாழ்த்துகள். அரைத்த மாவையே அரைக்காமல், புதிய பாதையில்
அர்த்தமுள்ள படைப்பின் மூலம் உச்சம் தொட்டிருக்கும் அவர், இன்னும் வளர்க.