உழவும் தொழிலே!

பவள சங்கரி

ஒவ்வொரு முறையும் இயற்கையின் சீற்றத்தால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் நம் விவாசாயப் பெருமக்களே. விவசாயத்தை ஒரு தலையாயத் தொழிலாக எடுத்துக்கொண்டு, ஏனைய மற்ற தொழில்களைப்போலவே இதனையும் கருதி அதற்கேற்ப நம்முடைய தொழில்சார்ந்த திட்டமிடல்களை செயல்படுத்தவேண்டியது அவசியமாகிறது. முதலாவதாக பருவகால மாற்றங்கள் குறித்த வானிலை ஆய்வாளர்களின் நவீன தொழில்நுட்பம் மூலம் வெளியிடப்படும் கருத்துகளை உள்வாங்கி அதற்கேற்ப நம் திட்டமிடல்களை ஆரம்பிக்கவேண்டும். பல நேரங்களில் புறக்கணிக்கப்படும் முக்கியமான கருத்துகளே பல நட்டங்களுக்கு காரணமாகிவிடுகிறது. புதிய பாசனத் திட்டங்களைக் கையாண்டால் வறட்சியிலும் 60% மகசூலை எடுக்கமுடியும். செயற்கை உரங்களை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ற சரிவிகிதத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்துதலும் அவசியம். முதலில் பயிர் பாதுகாப்பு காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியம். அதில் ஒரு பகுதி மான்யமாக அரசு வழங்கிவிடுகிறது. இதற்கு நாம் செய்யவேண்டியது விதை நெல், உரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை கொள்முதல் செய்யும்போது அந்த இரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும். அப்படிச் செய்யும்போது இதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது நாம் எவரிடமும் கையேந்த வேண்டியதில்லை. உரிமையோடு நமது இழப்பீட்டைப் பெறமுடியும். இத்தனைப் பிரச்சனைகளையும் தாண்டி விவசாய விளைபொருட்கள் விற்பனைக்குச் செல்லும்போது இடைத்தரகர்களால் விவசாயிகளின் உழைப்பு உரிஞ்சப்படுகிறது. உதாரணமாக முட்டைகோசு, முள்ளங்கி போன்றவை கிலோ ஒன்று மூன்று ரூபாய்க்கு வாங்கி பொதுமக்களை சென்றடையும்போது பத்து மடங்கு விலையேற்றத்துடன் சென்றடைகிறது. நடுவில் உள்ள ஒன்பது மடங்கு இலாபம் இடைத்தரகர்களால் அனுபவிக்கப்படுகிறது. பரிட்சார்த்த முறையில் ஒரு பெண் விவசாயி ஆந்திர மாநிலத்தில் அனைத்து விவசாயப் பொருட்களையும் மொத்த விற்பனைக்கு தாங்களே கொண்டுசென்று விற்பனை செய்ததில் பன்மடங்கு இலாபம் சம்பாதித்துள்ளனர். அனைவருக்கும் இலட்சக்கணக்கில் இலாபத்தைப் பிரித்துகொடுத்து நல்ல வழியும் காட்டியுள்ளார். குளிர்ப்பதப்படுத்தும் கிடங்குகள் அதிகளவில் தேவை என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க அரசு உதவியை கோரிப்பெறலாம். தமிழ் நாட்டிலேயே மேட்டுப்பளையத்தில் மட்டுமே இதுபோன்று குளிப்பதனப்படுத்தும் கிடங்கு இருப்பதாகத் தெரிகிறது. ஒசூர், மதுரை, திண்டுக்கல், பெருந்துறை, சேலம், கிருட்டிணகிரி, ஈரோடு போன்ற விவசாயப் பெருநகரங்களில் குளிர்சாதனக் கிடங்குகள் அதிகளவில் உருவாக்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பன்மடங்கு உயரும் என்பது உறுதி. இதோடு கிருட்டிணகிரியில் உள்ளதுபோன்று விவசாய உபப்பொருட்கள் தயாரிக்கும் நிலையங்கள், உதாரணமாக மாம்பழம் அதிகமாக விளைச்சல் காணும் சேலம், கிருட்டிணகிரி போன்ற இடங்களில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் ஆலைகளைக் கூட்டு முயற்சியில் விவசாயிகளே செய்ய முனைந்தால் பன்மடங்கு இலாபங்களைப் பெறலாம். பருத்தி விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை சிறிது காலம் வைத்திருந்து விற்றாலே மூட்டைக்கு பல ஆயிரம் ரூபாய் அதிக இலாபம் கிடைக்கும்.இந்த விளைப்பொருட்கள் மீதே வங்கியில் பணம் பெற்று அந்த இடைக்காலத்தை சமாளிக்கலாம். அதுபோன்றே கரும்புச்சக்கை வைக்கோல் போன்றவைகளிலிருந்து தயாரிக்கக்கூடிய, காகித அட்டை, சணல், நூல் போன்ற பலவகைப் பொருட்களைத் தயாரித்து பல இலட்சங்கள் வருமானங்களைப் பெறலாம். இப்படி பல வகையில் நம் தன்மானம் கெடாத வகையில் உரிமையோடு, நம் சொந்த உழைப்போடு சுதந்திரமாக பெருமிதத்தோடு வாழ வழிகள் நிறையவே உள்ளன என்பதே யதார்த்தம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.