Blog

  • நாசாவின் விண்ணுளவி பூமியைச் சுற்றி விண்வெளி எங்கும் எதிர்மின்னிகள் நடனம் புரிந்து வருவதை வெளிப்படுத்துகிறது

     

    aj

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா 

    Image result for Magnetospheric Multiscale MMS Mission

    நாசா விண்ணுளவி கண்ட துருவ ஒளிவண்ண நடனம்

    +++++++++++++++

    aj

     

    சூட்டு யுகப் பிரளயத்தை
    மூட்டி விடுவது
    சூரியத் தீக்கதிர்களா ?
    கிரீன் ஹவுஸ் விளைவில்
    திரண்டெழும்
    கரிப்புகை வாயுக்களா ?
    ஓஸோன் குடையில் விழும்
    ஓட்டைகளா ?
    பூமியைச் சூடாக்கி வருபவை
    சூழ்வெளி மண்டலத்தில்
    முகில் மூட்டம் உண்டாக்கும்
    அகிலக் கதிர்களா ?
    பரமாணுக்கள் என்னும்
    அக்கினிப் பூக்களா ?
    பம்பரமாய்ச் சுற்றும் பூமியின்
    அச்சாணியோ, சுற்றுவீதியோ
    சரிந்து போனதா ? அல்லது
    எரிமலைக் கண் திறந்து கக்கும்
    கரிப்புகை மண்டலமா ?
    ஆண்டு தோறும்
    நீண்ட மலைத் தொடர்
    மரக் காடுகள்
    எரிந்து புகை மூட்டம்
    எழுப்புவதா ?
    பனி யுகமும் கனல் யுகமும்
    மாறி, மாறி மீளும் சுற்றில்
    பரிதிக் கதிர்கள்  தாக்கித்
    திரிபு அடைவதா ?

    ++++++++++++++

    காந்தக் கோளப் பல்லடுக்கு  MMS [Magnetospheric Multiscale]  ஆய்வுகள் விண்வெளியில் காந்த மண்டல இணைப்புகள் [Magnetic Connection] எவ்விதம் நிகழும் என்னும் அற்புத மெய்ப்பாட்டை எமக்குக் காட்டின. பூமியைச் சுற்றியுள்ள காந்த கோளத்தில் எதிர் மின்னிகள் [Electrons] ஈக்கள் போல் மொய்த்து காந்தச் சூழ்வெளியில் ரீங்காரம் செய்கின்றன. அப்போது எதிர்மின்னிகள் சுருண்டும், புரண்டும், பாய்ந்தும் சிக்கலான முறையில், மின்சக்தியாலும், காந்த சக்தியாலும் தூண்டப்பட்டு நடனம் ஆடுகின்றன என்று முதன்முதல் நாசா விண்ணுளவி காட்டியுள்ளது.

    லி-ஜென் சென் [Li-Jen Chen]  [தலைமை ஆய்வாளர், MMS Scientist At NASA Goddard Space Center, in Greenbelt, Maryland]

    Image result for Magnetospheric Multiscale MMS Mission

    நாசா விண்ணுளவி கண்ட துருவ ஒளிவண்ண நடனம்

    வட துருவத்தில் ஈக்கள்போல் பாய்ந்து மொய்க்கும் விண்வெளி எதிர்மின்னிகள் காட்டும் ஒளிவண்ண நடனங்களை நாசாவின் விண்ணுளவி முதன்முதல் கண்டுள்ளது.  எதிர்மின்னிகள் வலுத்த காந்த தளத்தில் நுழையும் போது, சுழற்சி, சுருள் வடிவு [Spin & Spiral] போன்ற எளிய  விளைவுகளையே காட்டுகின்றன.  நலிந்த காந்த தளத்தில் எதிர்மின்னிகள் புகும்போது, சுதந்திரமாகத் தவ்வுவதும், திரும்புவதும் நிகழ்கின்றன.  அவ்வித விளைவுகள் ஸ்பைசர் நகர்ச்சி [Speiser Motion] என்று அழைக்கப்படும்.  2017 மே மாதம் 19 இல் முதன்முதல் நடுத்தரக் காந்த வலுவுள்ள தளத்தில், எதிர்மின்னிகள் புகும்போது என்ன நிகழ்கிறது என்று நாசா விண்ணுளவி கண்டுள்ளது. இப்புதிய எதிர்மின்னிகளின் புரியும் விளைவுகள் பூதளவியல் ஆராய்ச்சி இதழில் [Journal of Geophysical Research]  வெளிவந்துள்ளது.

    Solar Rays and cosmic rays

    செர்ன் விரைவாக்கி இயக்கத்தால் விளைந்த “முகில் மாளிகை” [Cosmics Leaving Out door Droplets, called as “CLOUD Chamber”] உருவாக்கும் நியதியின் முக்கியத்துவம் திட்டமிடப் பட்டது.   இந்த நியதி மூலம் கடந்த நூற்றாண்டில் நாம் கண்ட பூமியின் உஷ்ண ஏற்றம் பாதியளவு அல்லது முழு ஏற்றத்துக்கும் காரணம் அறியப் படுகிறது.   அதாவது பூகோளச் சூடேற்றத்துக்குப் பூமியின் உஷ்ண ஏற்ற இறக்க மீள் சுழற்சிக்கு ஓரளவு இயற்கைப் பங்கு உள்ளது.

    ஜாஸ்பர் கெர்க்பி [செர்ன் விரைவாக்கி விஞ்ஞானி]

    Solar Rays and cosmic rays -1

    “சூரியப் புயலடிப்புத் தீவிரத்துக்கு ஏற்ப அகிலக் கதிர்த் துகள்கள் பல்வேறு அதிர்வுகளில் எல்லாக் கோள்களையும் தாக்கி வருவதால் நமது பூமிக் கோளில் ஒப்பிய உயரத்தில் முகில் மண்டலங்கள் உண்டாகும். தற்போதைய ஆய்வு போல் முந்தைய ஆராய்ச்சி அத்தகைய முகில் கவசம் உயரத்துக்கு ஏற்பத் தோன்றும் என அறிவிக்க வில்லை !  சீரிய ஏற்பாட்டில் அமையும் முகில் கவசங்கள் பூகோளச் சூடேற்றப் போக்கை எப்போதும் மாற்றிவிடும் !  அதாவது அகிலக் கதிர்கள் தூண்டும் முகில் கவசங்களின் மாறுதல் அமைப்புதான் சூரியனையும் காலநிலைத் திரிபையும் இணைக்கும் நீண்ட காலத் தேடல் இயக்கமாகக் கருதப்படுகிறது.”

    ஃபாங்குவன் யூ (Fangqun Yu) (State University of New York & Albany) (July 2002)

    பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய காரணம் சூரிய ஒளிக்கதிர்கள் & அகிலவெளிக் கதிர்கள்

    2011 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பூகோளச் சூடேற்றத்தைப் பற்றி ஓர் அழுத்தமான,  உறுதியான விஞ்ஞானக் கருத்து சான்றுகளுடன் வலுவாகி வெளியிடப் பட்டது.  அதாவது  பூகோளம் சூடேற பிரதான காரணங்கள் இயற்கையான சூரிய ஒளிக்கதிர்களும், அகிலவெளிக் கதிர்களுமே [Cosmic Rays] தவிர மனிதரின் செயற்கை வினைகள் அல்ல என்பது முடிவானது.   இதை 1996 இல் பிரிட்டனில் நடந்த விஞ்ஞானப் பேரவையில் இரண்டு டேனிஷ் விண்வெளி ஆய்வக விஞ்ஞானிகள் முதன்முதல் அறிவித்தனர்.   அப்போது அந்தக் கோட்பாடுக்குப் பேரவையில் பல்வேறு எதிர்ப்புகள் இருந்தன.   ஆனால் அதை 1996 பேரவையில் முற்றிலும் ஆதரித்தவர் நைஜல் கால்டர் என்னும் பௌதிக விஞ்ஞானி.   அதற்கு அடுத்த ஆண்டில் செர்ன் விரைவாக்கி யந்திர தளத்தில் பேரவையில் செர்ன் விஞ்ஞானி, ஜாஸ்பர் கெர்க்பி “முகில் மாளிகை”  [Cosmics Leaving Out door Droplets, called as “CLOUD Chamber”]  ஒன்றை உருவாக்கி நியதியை நிரூபித்துக் காட்டினார்.

    fig-1-cosmic-rays-cause-the-global-warming1

    செர்ன் விரைவாக்கி இயக்கத்தால் விளைந்த “முகில் மாளிகை” [Cosmics Leaving Out door Droplets, called as “CLOUD Chamber”] உருவாக்கும் நியதியின் முக்கியத்துவம் திட்டமிடப் பட்டது.   இந்த நியதி மூலம் கடந்த நூற்றாண்டில் நாம் கண்ட பூமியின் உஷ்ண ஏற்றம் பாதியளவு அல்லது முழு ஏற்றத்துக்கும் காரணம் அறியப் படுகிறது.   அதாவது பூகோளச் சூடேற்றத்துக்குப் பூமியின் உஷ்ண ஏற்ற இறக்க மீள் சுழற்சிக்கு ஓரளவு இயற்கைப் பங்கு உள்ளது என்று ஜாஸ்பர் கெர்க்பி கூறினார்.

    அனுதினம் மனிதரைத் தாக்கும் அகிலவெளிக் கதிர்கள் !

    மனிதரைத் தாக்கும் இயற்கையான பின்புலக் கதிரியக்கம் இருவகைப் பட்டவை.  ஒன்றாவது: விண்வெளிப் பொழிவான அகிலக் கதிர்கள் !  இரண்டாவது: நீர், நிலம், பாறை, தானிய உணவுப் பண்டங்கள் மூலம் மானிடர் கொள்ளும் பூதளத் தொடர்புகள் !  அனுதினமும் ஒவ்வொரு வினாடியும் ஆயிரக் கணக்கான அகிலக் கதிர்கள் தணிந்த கதிரியக்கத்தில் மனிதர் உடம்பைத் தாக்கி ஊடுருவிச் செல்கின்றன !  மனிதர் வாங்கிக் கொள்ளும் தணிவான பின்புலக் கதிரிக்கக் கதிரடி சுமார் 7%-10% (Background Radiation Dose).  அகிலக் கதிர்களில் பிரதானமாக நேர்முகக் கதிர் ஏறிய புரோட்டான் முதல், இரும்பு அணுக்கரு போன்றவை உள்ளது ஒரு காரணம்.  அடுத்து இரண்டாம் விளைவுக் கதிரியக்க அலை/துகளான எக்ஸ்-ரே, காமாக் கதிர், எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான், ஆல்ஃபாத் துகள், மியூவான், பையான் போன்றவை இருப்பது.

    Primary Rays

    அகிலக் கதிர்கள் என்பவை உயர்ச்சக்தி ஏறிய துகள்களை (High Energy Particles) ஏந்திக் கொண்டு விண்வெளியிலிருந்து பூமியில் வீழுகின்ற கதிர்கள்.  அந்தத் துகள்கள் ஏறக்குறைய ஒளி வேகத்துடன் பூமியை எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்குகின்றன !  அகிலக் கதிர்களில் பிரதானத் துகள்களாகப் புரோட்டான்கள், எலெக்டிரான்கள், அடுத்து இரண்டாம் விளைவாகச் சதுர மீட்டரில் வினாடிக்குச் சராசரி 100 எண்ணிக்கைத் திரட்சியில் பெரும்பான்மையாக மியூவான்கள் (Muons) பொழிகின்றன.  பூமியில் விழும் அகிலக் கதிர்களின் அடர்த்தி சிறிதா யினும், விண்வெளியில் அவற்றின் பொழிவு அடர்த்தி மிகையானதால் விண்வெளி வீரருக்குப் பெருங்கேடு விளைவிக்கும்.  அதே சமயத்தில் பூமியில் பொழியும் சிறிதளவுக் கதிரடி அகிலக் கதிர்களால் என்ன பாதகம் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.  அந்தத் துறையில் இதுவரை ஆராய்ச்சிகள் புரிந்து மனிதருக்கு ஏதேனும் அகிலக் கதிர்கள் தீங்குகள் விளைவிக்கின்றனவா என்பது அறியப் படவில்லை !

    பூகோளக் காலநிலை வேறுபாடுகளை அறியச் செய்யப்படும் மின்கணனி முன்னறிவிப்புகள்  (Computer Forecasts) நம்பத் தக்கவை அல்ல !  இந்த யுகம் “அகிலக் கதிர்வீச்சுக் காலநிலை யியல்,” “காலாக்ஸி பௌதிகத் துறைகளில்” (Cosmo-Climatoloy & Galactic Physics) பெரும் புரட்சி செய்திருக் கிறது !  பூமியின் தட்ப-வெப்ப மாறுதல்கள் அறியும் “காலநிலை விஞ்ஞானம்” (Climate Science) வெறும் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் சேமிப்பில் வடிக்கப் படுகிறது என்பது நேர்மையான விஞ்ஞான மில்லை !

    நைஜெல் கால்டர் (Co-Author – The Chilling Stars – A New Theory of Climate Change)

    Primary Rays -1

    பரிதி விண்மீன் உதிர்க்கும் அகிலவெளிக் கதிர்கள் [Cosmic Rays]

    இங்குமங்கும் அகிலக் கதிர்களைப் பொழியும் ஓர் உற்பத்திச் சாதனமாக சூரியனும் இருந்து வருகிறது.  அவற்றின் கதிரியக்க அணுக்கருவும், எலெக்டிரானும் சூரிய தீ வீச்சுத் தோரணங் களின் (Solar Corona) அதிர்ச்சி அலைகளாலும், காந்த சக்தியாலும் விரைவாக்கம் (Acceleration) பெறுகின்றன.  அகிலக் கதிர்களின் சூரியத் துகள்கள் கூடிய பட்சம் 10 முதல் 100 MeV (Million Electron Volt Energy) சக்தி பெற்றவையாக உள்ளன. சில சமயம் உச்சநிலை ஏறி 1-10 GeV (Gega Electron Volt Energy) சக்தி கொண்டவையாக எழுகின்றன !

    விண்வெளியில் வீழும் அகிலக் கதிர்கள் விண்மீன் மந்தைகளின் காந்த மண்டலம் வளைத்து விட்டவையே !  சூரிய மண்டலத்தில் நுழையும் அகிலக் கதிர்கள் அதே போல் தீப்பிழம்பும்   எலெக்டிரானும் நிரம்பிய சூரியப் புயலால் (Solar Wind with Plasma & Electrons) வளைத்து (240 மைல்/வினாடி) 400 கி.மீ/வினாடி வேகத்தில் அனுப்பப் பட்டவை.  ஆனால் அந்தக் கதிர்கள் பரிதி மண்டலத்தின் உள் அரங்கில் புகுந்திட வலுவில்லாதவை !  விண்வெளியில் சூரிய மண்டலத்தின் விளிம்பைத் தாண்டும் விண்கப்பல்கள் காலாக்ஸிகளின் அகிலக் கதிர்களின் தாக்குதலில் பாதிக்கப் படுகின்றன !

    Solar Rays

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    “கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது பூமண்டலம் சூடேறி விட்டதென்று, ஆழ்ந்து செய்த காலநிலை வரலாற்று ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன!  அதற்குக் காரணம் ஓரளவு இயற்கைச் சம்பவங்களே தவிர, மனிதரியக்கும் தொழிற்சாலை வெளியேற்றும் துர்வாயுக்கள் அல்ல என்று கூறும் மறுப்புவாதிகள் கொள்கைக்கு எதிர்ப்புத் தரும் முறையில் பறைசாற்றப் படுகிறது.”

    இயான் ஸாம்பிள் [Ian Sample, “Not Just Warmer: It’s the Hottest for 2000 Years” Guardian Unlimited (Sep 1, 2003)]“

    Cosmic Rays Shielding

    3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது.  ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனிமதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்!”

    ஆன்டிரூ ரெவ்கின் [Andrew Revkin, The New York Times (23 September 2003)] “

    வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (ஜூன் 23, 1999)]

    fig-3-intergalactic-cosmic-rays-effects

    பூகோளத்தைச் சூடேற்றும் மூலக் காரணங்கள் மூன்று !

    21 ஆம் நூற்றாண்டின் முககியப் பிரச்சனைகளில் ஒன்று பூகோளச் சூடேற்றம் (Global Warming).  அதன் மூல காரணங்களை நூற்றுக் கணக்கான உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.  அவற்றுள் முக்கிய காரணமாக மனித இனமும், தொழிற் துறைகளும் அனுதினம் உண்டாக்கி வரும் “கிரீன் ஹவுஸ் வாயுக்கள்” (பெரும்பான்மையாக கார்பன் டையாக்ஸடு வாயு) என்று தீர்மானம் செய்யப் பட்டுள்ளது.  அதற்கு “ஹாக்கி விளையாட்டுத் தண்டு போல்” உள்ள உஷ்ணப் பதிவுகளை (Hockey Stick Temperature Chart) வரைந்து காட்டி வெர்ஜீனியா பல்கலைக் கழகப் பேராசியர் மைக்கேல் மான் (Michael Mann) அதை முதலான காரணமாகக் கூறுகிறார். ஆனால் அந்த முடிவைச் சவாலாக ஏற்றுக் கொண்டு தர்க்கமிடு வாரும் புறக்கணிப்பாரும் பலர் இருக்கிறார்கள்.  பூகோளச் சூடேற்றத்துக்குக் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் மட்டும் அல்ல, வேறு மூலக் காரணங்களும் இருப்பதாகக் கூறுவோரும் இருக்கிறார். அதில் இரண்டாவது காரணம் : பிரபஞ்சத்தின் காலாக்ஸி விண்மீன்கள் தோற்ற மூலத்தால் (Stellar Origin) பூமி சூடாகிறது என்று டாக்டர் சூன், டாக்டர் பலிவுனாஸ் (Dr. Soon & Dr. Baliunas) இருவரும் 2003 ஆம் ஆண்டில் வெளியான “காலநிலை வரலாறும் சூரியனும்” என்னும் விஞ்ஞான வெளியீட்டில் கூறியிருக்கிறார்கள்.

    How cosmic rays make clouds

    தர்க்கத்தில் மூன்றாவது காரணமாக ஜெரூஸலம் பௌதிகக் கூடத்தின் வானியல் பௌதிக விஞ்ஞானி டாக்டர் நிர் ஷாவிவ் (Nir Shaviv) ஆட்டவா பல்கலைக் கழகத்தின் பூகோள இரசாயனப் பேராசிரியர் யான் வைஸெர் (Jan Veiser) இருவரும் பூகோளச் சூடேற்றத்தைப் பெருமளவில் பாதிப்பவை பூமியில் பொழியும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) என்று அறிவித்தனர்.  அகிலக் கதிர்கள் என்பவை பொதுவாகப் புரோட்டான், எலெக்டிரான்கள் கொண்ட அணுக்கருக்கள் (Atomic Nuclei). அவை பூமியின் வாயு மண்டலத்தை உயர்ந்த சக்தியோடு மோது கின்றன.  அவ்விதம் தாக்கி வாயு மண்டல மூலக்கூறுகள் வெளியேறிப் பெரும்பான்மை சக்தி வெப்பமாக விடுவிக்கப் படுகிறது. பூகோளச் சூடேற்றம் என்பது மனிதன் உண்டாக்கிய நிகழ்ச்சியன்று !  அது பிரபஞ்சத்தில் சுற்றி மீளும் ஓர் இயற்கை நிகழ்ச்சியாகும் என்பது அவரது முடிவு !

    பூமியில் பொழியும் அகிலக் கதிர்களின் போக்கு

    வரைபடத்தைப் பாருங்கள் :

    பூமியில் விழும் “அகிலக் கதிர்களின் திரட்சி” (Cosmic Ray flux) மிகையாகும் போது, பூகோளத்தின் உஷ்ணம் இறங்குகிறது !  அதுபோல் அகிலக் கதிர்களின் திரட்சி குறைவாகும் போது பூகோளத்தின் உஷ்ணம் ஏறுகிறது.  அகிலக் கதிர்களின் திரட்சி அளவு மாறு படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு காரணம் சூரியப் புயல் !  பூமியைப் பொருத்த மட்டில் “சூரியப் புயல்” (Solar Wind) மாறுபாடு புரியும் ஒரு விண்ணியல் நிகழ்ச்சியாய்க் கருதப்படுகிறது.  விண்வெளி யில் சூரியப் புயல் அடிப்புச் சமயங்களில் பூமியின் மேல் பொழியும் அகிலக் கதிர்களின் எண்ணிக்கைக் குறைகிறது.  சூரியப் புயல் அடிப்புப் பலவீனமாகும் போது அகிலக் கதிர்களின் திரட்சி மிகையாகிறது.  அப்போது அதற்கேற்ப பூமியின் சூடேற்றமும்  மாறுபடுகிறது !

    Fig 6 Cloudy Outlook of Global Warming

    அண்டவெளியில் அகிலக் கதிர்களின் திரட்சிப் போக்குகளை அனுதினமோ, மாதத்திலோ அல்லது வருடமாகவோ கண்காணித்துக் கணக்கெடுத்துப் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட கால ஆண்டு களுக்கு இடையே விஞ்ஞானிகள் பூமியில் வீழ்ந்த அகிலக் கதிர்த் திரட்சியானது கீழ் உயர வாயு மண்டலத்தில் ஆக்கிய மேகக் கவசத்தை (Cloud Cover in the Lower Atmosphere) கணித்திட முடியும்.  சுருக்கமாகச் சொன்னால் மிகையான அகிலக் கதிர் திரட்சி மிகையான மேக மண்டலத்தை உண்டாக்கி சூரிய வெப்பத்தை திருப்பி மேலே எதிரனுப்பும் !  அதாவது மிகையான மேக மண்டலம் பூகோளச் சூடேற்றத்தைக் குறைக்கும்.  அதுபோல் அகிலக் கதிர் திரட்சி குறையும் போது மேக மண்டலத் தோற்றம் குறைந்து சூரிய வெப்பம் மிகையாகப் பூமியைச் சூடேற்றுகிறது. முகில் கவசம் கூடும் போதோ அல்லது குன்றும் போதோ அந்த மாறுதல் பூமியின் “பரிதி ஒளிப் பிரதிபலிப்பைப்” (Earth’s Albedo) பாதிக்கிறது !  சூரிய ஒளி முகில் மண்டலத்தைத் தாக்குக் போது ஓரளவு சூரிய சக்தி (சூரிய வெப்பம்) பிரதிபலித்துத் திருப்பி விண்வெளியில் அனுப்பப் படுகிறது. மேகக் கவசங்கள் கூடுதலாக இருந்தால் மிகையான சூரிய வெப்பம் பிரதிபலித்துத் திருப்பப் படுகிறது.  அப்போது உஷ்ணம் குன்றி பூகோளச் சூடேற்றம் தணிகிறது.  வரைபடத்தில் கார்பன் டையாஸைடு (CO2) அளவைப் பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால் பூகோளம் சூடேறப் பெரும்பான்மைக் காரணம் CO2 என்பது தெளிவாகத் தெரிகிறது.

    Fig 9 Voyager Findings

    மிகையான CO2 சேரும் போது பூமியில் சூடேற்றம் மிகுதியாக ஏறுகிறது.  அப்படியானால் பூர்வ வரலாற்று உஷ்ணக் கணக்கீடுகளோடு (Phanerozoic Temperature Measurements) ஒப்பிட்டால் CO2 அளவு மாறுபட வேண்டுமல்லவா ?  அவ்விதம் மாறவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.  CO2 அளவுகள் உஷ்ணப் பதிவுக் கோட்டுக்கு ஒப்பாக ஏறாமல் தணிகின்றன.  ஷாவிவ்-வைஸெர் வெளியீட்டின்படி CO2 பூகோளச் சூடேற்றத்துக்குப் பங்கேற்றாலும் அந்த மதிப்பளவு முன்பு எண்ணயதை விடக் குறைந்ததாகவே கருதப்படுகிறது !

    கால நிலைக் கோளாறை விளக்க ஒரு புதிய நியதி !

    “பூகோளச் சூடேற்றம்” ஓர் விஞ்ஞான நிகழ்ச்சி என்பது சமீபத்தில் (செப்டம்பர் 2007) கண்டுபிடிக்கப் பட்டு வெளியான ஒரு தகவல் மூலம் தெரிகிறது !  மனிதர் உற்பத்தி செய்யும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் ஓரளவு வெப்ப ஏற்றத்துக்கு உதவினாலும் பெரும்பான்மை விளைவு இயற்கையின் கோளாறுகளால் நிகழ்கிறது.  ஹென்றிக் ஸ்வென்ஸ்பார்க் & நைஜெல் கால்டர் எழுதிய புதிய நூலில் பூகோளச் சூடேற்ற விளைவுகளைப் பற்றிக் கூறுகிறார்.  அவர்கள் ஆராய்ச்சிகள் புரிந்த ஆய்வுக்கூடம் : டேனிஷ் தேசீய விண்வெளி மையம்.  ஸ்வென்ஸ்மார்க் முயற்சிகள் கோடான கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் அகிலக் கதிர்வீச்சு, சூரியப் புயல் வேறுபாடு, முகில் மந்தை அமைப்பாடு, பூகோள வெப்ப ஏற்ற இறக்கம் ஆகியவற்றுக்குள் இருக்கும் ஓர் உடன்பாட்டு இயக்கத்தைக் கண்டறிந்தன !  அந்த நூலின் முன்னுரையில் “சூரியப் புயலைக்” கண்டுபிடித்த விஞ்ஞானி யுஜீன் பார்க்கர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.  “ஸ்வென்ஸ்மார்க் பூகோளச் சூடேற்ற வெப்பக் கட்டுப்பாட்டில் முகில் மண்டலக் கவசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.  ஏனெனில் சூரியன் வெளிவிடும் ஒளிக்கற்றை முகில் கூட்டம்தான் பிரதிபலிக்க வைத்து திருப்பி அனுப்புகின்றன !

    Galactic cosmic rays

    [Click to Enlarge]

    மேலும் அவர் கண்டது முகில் மண்டலத்தை உண்டாக்கும் நீர்த் துளிகள் பெரும்பான்மையாக “அயனிகள்” எனப்படும் மின்கொடை ஏறிய துகள்கள் (Ions or Charged Particles) !  அந்த மின் அயனிகளை உண்டாக்குபவை அண்டவெளியில் உள்ள அகிலக் கதிர்கள் !  அந்த நிகழ்ச்சியே அகிலக் கதிர்த் திரட்சி பூமியின் வாயு மண்டத்தில் சூரிய ஒளியை மீள் திருப்பும் முகில் மந்தைகளை உண்டாக்குவது !  அந்தக் கொள்கையே அகிலக் கதிர்களுக்கும், பூகோளச் சூடேற்றத்துக்கும் ஒரு பிணைப்பைப் படைத்திருக்கிறது.  அதாவது பூமியின் மேல் மிகையான அகிலக் கதிர்கள் பொழிவு நேர்ந்தால், அதிகமான முகில் கூட்டம் பெருகிக் காலநிலை தணிந்த வெப்பத்தில் அமைப்பாகிறது.  மனிதர் உண்டாக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்களால் பேரளவு பூகோளம் சூடாவது மீண்டும் செம்மையாக ஆராயப்பட வேண்டும் என்பது நூலாசிரியர்கள் கருத்து.  அதற்கு நூலாசிரியர் நைஜெல் கால்டர் கூறும் காரணம் இதுதான் : பூகோளக் காலநிலை வேறுபாடுகளை அறியச் செய்யப்படும் மின்கணனி முன்னறிவிப்புகள் (Computer Forecasts) நம்பத் தக்கவை அல்ல !  இந்த யுகம் “அகிலக் கதிர்வீச்சுக் காலநிலையியல்,” “காலாக்ஸி பௌதிகத்” துறைகளில் (Cosmo-Climatoloy & Galactic Physics) பெரும் புரட்சி செய்திருக்கிறது !  பூமியின் தட்ப-வெப்ப மாறுதல்கள் அறியும் “காலநிலை விஞ்ஞானம்” (Climate Science) வெறும் கீரீன் ஹவுஸ் வாயுக்களின் சேமிப்பில் வடிக்கப் படுகிறது என்பது நேர்மையான விஞ்ஞான மில்லை என்று ஆலோசனை கூறுகிறார் நைஜெல் கால்டர் !

    அகிலக் கதிர்கள் பூகோளச் சூடேற்றத்தைப் பற்றி விளக்குவ தில்லை !

    அகிலக் கதிர்கள் பூமி சூடாவதைப் பற்றிச் செம்மையாக விளக்குவ தில்லை என்று சில விஞ்ஞானிகள் புதிய நியதிக்கு எதிர்ப்புக் கூறியிருக்கிறார்கள்.  அதாவது அகிலக் கதிர்களால் முகில் மந்தைகள் உண்டாகி சூரிய வெப்பத்தை மீள்திருப்பிச் சூடேற்றத்தைக் கூட்டுவதோ குறைப்பதோ மிகச் சிறிதளவு என்பது அவர்கள் 2008 டிசம்பர் 17 ஆம் தேதி வெளியிட்ட சில விஞ்ஞானிகளின் கருத்து !  ஆஸ்லோ பல்கலைக் கழகத்தின் நார்வே வாயு மண்டல ஆய்வகத்தின் விஞ்ஞான வெளியீட்டில் “அகிலக் கதிர்கள் பூகோளச் சூடேற்றத்தைப் பாதிக்கின்றன” என்பது நிகழ முடியாத ஒரு சம்பவம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது !

    fig-7-causes-of-global-warming

    பூகோளச் சூடேற்றத்திற்கு முக்கிய காரணம் பரிதியும் பூமியும் !

    பூகோளச் சூடேற்றத்திற்கு முக்கிய காரணம் பரிதி, கார்பன் டையாக்ஸைடு அல்ல என்னும் புது நியதி பரவி வருகிறது!  அவ்விதிப்படி மனிதர் உண்டாக்கும் கார்பன் டையாக்ஸைடு இரண்டாம் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது!  4.6 பில்லியன் ஆண்டுகளாக நாமறிந்த பூகோளத்தின் வரலாற்றில் பரிதியை வலம்வரும் பூமியின் பாதை மாற்றம், சுழலச்சுத் திரிபு போன்ற மாறுதல்களே பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய காரணம் என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது.  சுழலச்சின் கோணம் 23.5 டிகிரி என்பதும், பூமிக்கும் பரிதிக்கும் உள்ள தூரம் 90 மில்லியன் மைல் என்பதும், பூமி வலம்வரும் பாதை வட்டவீதி என்பதும் நிலையான பரிமாணக் கணிப்புகள் அல்ல!  அவை மூன்றும் மெதுவாக ஆமை வேகத்தில் விண்வெளியில் மாறி வருகின்றன.  அம்மாறுதல்களே பூகோளத்தின் வெப்ப மீறல், பனிப்படிவுக்கு முக்கிய காரணம் என்பது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் உறுதி செய்யப் பட்டன!  கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளாக தற்காலப் பனியுகத்தில் ஏற்பட்ட தோற்றம், அழிவுக் கோளாறுகள், பரிதியை வலம்வரும் பூகோளத்தில் மாறி, மாறி மீளும் வட்டவீதி நீட்சி, சுழலச்சின் சாய்வு, துருவத் தலையாட்டம் [Eccentricity, Axial Tilt, Precession] எனப்படும் மூவகைத் திரிபுகளால் நேருகின்றன என்பது 20 ஆம் நூற்றாண்டின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  பூகோள நகர்ச்சியின் அந்த மூன்று சுழற்திரிபுகளே “மிலான்கோவிச் சுழற்சிகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன.  சுழற்திரிபுகளின் பரிமாணத்தையும், மீளும் காலத்தை ஆண்டுகளில் கணக்கிட்டுக் காட்டியவர் செர்வியாவின் வானியல் விஞ்ஞானி [Serbian Astronomer] மிலான்கோவிச்.  பரிதியை வலம்வரும் வட்டவீதி சிறிது நீண்டு நீள்வட்டமாகி மீண்டும் வட்டவீதியாகும் காலப் பரிமாணம் சுமார் 100,000 ஆண்டுகள் என்றும்,  பூகோளத் துருவத் தலையாட்ட மீட்சி 25,800 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றும், சுற்றும் அச்சு 21.5 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை திரிபு எய்தி மீண்டும் வர சுமார் 41,000 ஆண்டுகள் ஆகும் என்றும் மிலான்கோவிச் கணித்து அறித்தார்.

    Fig 8 Earth Rotating Axis Tilt

    பூகோளச் சுழலச்சின் சாய்வு [Earth’s Axial Tilt]

    பூகோளச் சுழலச்சு, சுற்றுப் பாதை மட்டத்துக்குச் சரிந்துள்ள கோணமே சாய்வுக் கோணம் [Tilt Angle]  எனப்படுகிறது.  அந்தச் சரிவுக் கோணம் 22.5 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை 41,000 ஆண்டுகளில் மாறி, மாறி மீண்டும் பழைய கோணத்துக்கே வருகிறது.  பூமியின் நான்கு காலநிலை மாறுதல்களுக்குப் பூமியின் சுற்றச்சின் சரிவே கரணம்.  குன்றிய சரிவுக் கோணம் பூமத்தியப் பகுதிக்கும், துருவப் பகுதிக்கும் உள்ள வெப்ப உறிஞ்சல் வேறுபாட்டை மிகையாக்குகிறது.  குன்றிய சரிவுக் கோணத்தில் அதிகமான பனித்தட்டுகள் துருவங்களில் உருவாகின்றன.  அதாவது சூடான குளிர்காலத்தில், சூடான வாயு மிகையான நீர்மை ஆவியை [Moisture] உட்கொண்டு, பிறகு பனிப் பொழிவாகப் பெய்கிறது.  மேலும் வேனிற் காலம் மித வெப்பத்தில் நிலவி, பனிப்பாறை உருகுதல் வேகம் குறைகிறது.  தற்போது சரிவுக் கோணம் [23.5] சுமாராக நடுவில் உள்ளது.  பூகோளத் தலையாட்டம் துருவ நட்சத்திரம், வேகா நட்சத்திரம் என்னும் இரண்டு விண்மீன்களின் [Pole Star & Vega Star] இடையே நிகழ்கிறது.  அந்தத் தலையாட்டம் 23,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீள்கிறது.  சுற்றும் பம்பரத்தின் தலையைப் போல் பூமியின் சுற்றச்சும் சுழல்கிறது!  அந்தத் தலை யாட்டத்தால், பூகோளத்தின் வடகோளம், தென்கோளம் ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க வெப்பக் குளிர்ச்சி மாறுபடுகள் உண்டாகுகின்றன.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Does Anti-Matter Exist ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Science Daily – Cosmic Rays Linked to Global Warming (July 31, 2002)
    21 A Cloudy Outlook of Global Warming (Aug 22, 2003)
    22 No Link Between Cosmic Rays & Global Warming By : Fraser Cain (July 3, 2007)
    23 Cosmic Rays Blamed for Global Warming By : Richard Gray (Feb 11, 2007)
    24 The Chilling Stars – A New Theory of Climate Change By : Henrik Svensmark & Nigel Calder  (Sep 26, 2007) Totem Books (256 Pages $ 15.95)
    25 Discover Magazine : Cosmic Rays & Global Warming By : Phil Plait Danish National Space Center (July 3, 2007)
    26 Environmental Research Web : Could Cosmic Rays Cause Global Warming ? [Apr 3, 2008]
    27  Physorg.com – Space & Earth Science – Cosmic Rays Do Not Explain Global Warming [Dec 17, 2008]

    28  http://www.skepticalscience.com/cosmic-rays-and-global-warming-advanced.htm

    29  http://www.sott.net/article/234213-Global-Warming-Caused-by-Cosmic-Rays-and-the-Sun-Not-Humans  [August 26, 2011]

    30  http://www.popsci.com/science/article/2011-08/cern-experiment-finds-fragile-link-between-cosmic-rays-and-cloud-formation-climate-change  [August 25, 2011]

    31http://blogs.telegraph.co.uk/news/tomchiversscience/100136713/cosmic-rays-not-causing-global-warming/ [February 10, 2012]

    32  http://www.spacedaily.com/reports/Cosmic_ray_finding_999.html [September 5, 2013]

    33 http://www.dailygalaxy.com/my_weblog/2013/09/ecoalert-milky-ways-cosmic-rays-have-direct-impact-on-earths-weather-climate.html  [September 4, 2013]

    34 http://www.spacedaily.com/reports/A_Danish_experiment_suggests_unexpected_magic_by_cosmic_rays_in_cloud_formation_999.html  [September 9, 2013]

    35.  https://www.eurekalert.org/pub_releases/2017-03/nsfc-reu031517.php  [March 15, 2017]

    36.  https://www.nasa.gov/feature/goddard/2017/nasa-mission-uncovers-dance-of-electrons-in-space   [May 18, 2017]

    37.  https://svs.gsfc.nasa.gov/4568  [May 18, 2017]

    38.http://www.sciencedirect.com/science/article/pii/0032063372901821 [Octover 12, 1972]  [Speiser Motion]

    39.http://www.spacedaily.com/reports/NASA_Mission_Uncovers_Dance_of_Electrons_in_Space_999.html  [May 19, 2017]

    ******************

    S. Jayabarathan (jayabarathan@gmail.com)  May 20, 2017  [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”அன்னை அடிப்பாளோ! ,அச்சத்தால் கோகுலன்
    தன்னைக்காப் பாற்றும் திரைக்கதையை -எண்ணியவர்,
    மந்திதான் தின்னதென மாதாமுன் நாடகம்:
    சந்திர வம்ஸநட்வர் சிங்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”மந்திக்கும், பால்பசு மாட்டுக்கும், வித்தியாசம்,
    சிந்திக்கா கண்ணா, சமத்துவ -நந்தன்
    சுகுமாரன் நெய்வெண்ணை சோரன்பி ரேமை,
    வெகுமானம் கேசவ் வரைவு’’….!கிரேசி மோகன்….!

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி–13

    மீனாட்சி பாலகணேஷ்

    எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
    எட்டாத பேராசைக் கோட்டை கட்டி
    புண்ணாக நெஞ்சம் புலம்பும் வண்ணம்…….. (பாபநாசம் சிவன்)

    ^^^^^^^^^^^^^^^^^^^^

    ame

    ஞாயிறு மாலை. மணி மூன்று என கடிகாரம் மூன்றுமுறை அடித்துத் தெரிவித்தது. பங்களா முழுவதும் நிலவிய நிசப்தத்தில் அந்த மணி ஓசை மண்டையில் ஓங்கி அறைவது போல ஒலித்தது.

    பத்மாசனமிட்டுத் தன்னறையில் கார்ப்பெட்டில் அமர்ந்து கண்களை மூடியபடி, தன்னுள் ஆழ்ந்து, எதையோ தேடிக் கொண்டிருந்த ஷீலாவின் விழிகள் மெல்லத் திறந்தன. இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி ஒரு தியானத்தில் அவள் ஆழ்ந்து விடுகிறாள். உள்ளத்தைத் துருவித் துருவித் தேடுகிறாள். இப்போது தான் ஆரம்பித்த தேடல்- விடை அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுமா என்ன?

    எழுந்து, பெரிய ஜன்னல்களை விரியத் திறந்து தோட்டத்தைப் பார்த்தாள். மாலையின் மஞ்சள் வெயிலில் எல்லாமே பொன்னிறம் கொண்டு துலங்கின. பளபளத்த பெரிய பொன்வண்டு ஒன்று தென்னம் பாளைகளில் ரீங்காரம் செய்தபடி மது அருந்தியது. இரு குருவிகள் ‘சிர்ப்’, ‘சிர்ப்’ என்றபடி ஒன்றை ஒன்று துரத்தி விளையாடின. ஒரு அணில்பிள்ளை கருமமே கண்ணாக பாதாம் கொட்டையைக் கடித்துக் கொண்டிருந்தது. உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது!

    ‘எத்தனை நாட்களாக நான் என்னைச் சுற்றி இருப்பவைகளை ரசிக்க மறந்திருக்கிறேன். ‘நான்’ என்பது தான் உயர்வு என்று அதைப் பிரதானமாக்கி நெஞ்சம் புண்ணாகும் வரை பேதலித்துப் போயிருந்தேனே. என்று நான் என் உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அன்பு பூண்ட கணவனையும் குழந்தையையும் விட்டு விட்டு எதையோ நாடி ஓடி வந்தேனோ,அன்றல்லவோ இந்தத் துயரத்தின் தொடக்கம்-

    ‘எதை நாடி வந்தேனோ, இன்னும் அது கிடைக்கவில்லையே. ஆனால் அதைத் தேடிக் கொண்டே இருந்தால், முடிவற்ற இந்தத் தேடலில் என் வாழ்வு முடிந்து விடும். பின்பு மிச்சம் இருப்பது என்ன?’ எங்கோ ஒரு தனிமைக் குயில் கூவியது. கும்’மென்று ஒருமுறை அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

    முதலில் நாளைக்கு வக்கீலைப் பார்த்து சில முக்கியமான விஷயங்களை முடிவு செய்து பதிவும் செய்ய வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள். லேசான ஒரு நிம்மதி பிறந்தது.

    ‘ஜிம்மின் கேள்விக்கு என்ன விடை தரப் போகிறேன்? கீதாஞ்சலி, என் அருமைக் கண்மணி என்னிடம், தன் தாயிடம் என்ன எதிர் பார்க்கிறாள்? ஆடலரசுடன் இது பற்றிப் பேச வேண்டும்,’ என எண்ணிக் கொண்டாள்.

    போர்டிகோவில் ஆடலரசின் பெரிய மெர்சேடிஸ் வண்டி வந்து நிற்பது தெரிந்தது. குழந்தைகள் இறங்கி உள்ளே ஓடி வந்தனர். அமுதாவும் ஆடலரசும் பின்னால். அமுதாவின் கையில் ஒரு ‘நல்லி சில்க்ஸ்’ பை.

    “ஆன்ட்டி, நீங்க இன்னும் ரெடியாகலையா?” என்றபடி ரொம்ப சுவாதீனமாக மாடியேறி வந்த குட்டி சுமதி கேட்டது. ஒரு பழைய ஜீன்ஸ் பான்ட், சாயம் போன கதர் சட்டை சகிதம் நின்ற ஷீலா முறுவலித்தாள்.

    “அமுதா, மேலே வாம்மா,” எனக் குரல் கொடுத்தாள். ஷீலாவின் சாம்பியன் நாய் டெபி, நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது. ஆடலரசு மகன் சுரேஷுடன் நாய்க்குட்டிகளைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தான்.

    “சைலா, இது உங்களுக்கு- பிரிச்சு உடுத்திக்கிட்டு, டிரெஸ் செஞ்சுக்கிட்டு வாங்க,” நல்லிப் பையை நீட்டினாள் அமுதா. பட்டுப் புடைவையும் நகைகளுமாக மின்னினாள். காதில் கல் ஜிமிக்கிகள் ஆடின. ஷீலாவின் மனம் துடித்தது. ஜிமிக்கி அவளுக்கு மிகவும் பிடித்த நகை. சிறு வயதில் எப்போதும் அதைப் போட்டுக் கொண்டே தான் இருப்பாள். அதைத் துறந்து எத்தனை வருடங்களாகி விட்டன! அமுதாவின் காதில் தொங்கிய ஜிமிக்கியை லேசாக விரலால் தட்டியபடி, “யூ லுக் ப்ரெட்டி அமுதா,” என்று மென்மையாகக் கூறினாள்.

    “ஆன்ட்டி, இந்த பாக்ஸ்ல புடைவை இருக்கு. அப்பாவும் அம்மாவும் உங்களுக்காக வாங்கியிருக்காங்க. ப்ளீஸ், போய் உடுத்திட்டு வாங்க, டைம் ஆகுது ஆன்ட்டி,” என்று சிணுங்கினாள் சுமதி.

    “எனக்கெதுக்கும்மா புடைவை இப்போ? இருக்கிறதையே நான் கட்டிக்கிறதில்லே,” என்ற சைலாவிடம் விடை கூறுமுன் அமுதா மகளை நோக்கி, “நீயும் போய் நாய்க்குட்டிகளைப் பார்த்துவிட்டு வாயேன். நான் ஆன்ட்டியோட கொஞ்சம் பேசணும்,” என்று அனுப்பி விட்டு, உரிமையுடன் ஷீலாவின் கரங்களைப் பிடித்து அழைத்துப் போய் சோபாவில் அமர்த்தினாள்.

    “சைலா, நவராத்திரிக்கு துணி எடுக்கப் போனோம். உங்களுக்கு நல்ல குங்கும கலரில் ஒரு ஜரிகைப் பட்டுப் புடைவை எடு என்று அரசு தான் சொன்னார். ஏன் தெரியுமா? ஏற்கெனவே நான் அப்பப்ப சொல்லியிருக்கேன் இல்ல- அவங்க உங்களைத் தன் மனதிலே ஒரு தேவதையா, ஏன், கோவில்ல இருக்கிற அம்பிகை மாதிரி இருக்க வெச்சுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    “சின்ன வயசிலிருந்தே உங்ககிட்ட அப்பிடி ஒரு அபிமானம், அன்பு- அவர் மனைவியான என் கிட்டயே விளக்கமாச் சொல்லியிருக்கார். அவர் வார்த்தையிலேயே சொல்லணுமின்னா, ‘இது பாரதியாரோட லக்ஷ்மி காதல், சரஸ்வதி காதல், காளி காதல் மாதிரி சைலஜா காதல்,’ என்பார். அவர் வாழ்க்கையிலே இவ்வளவு முன்னேறி இருக்கக் காரணம் நீங்க தான், உங்க மேலே அவர் வச்சிருக்கிற பிரியம், அந்தப் பிரியத்தை வாழ்க்கையில் உயர உயரப் போகிறதுக்கு ஒரு படிக்கட்டா வச்சிருக்கார்.
    “திரும்ப இந்தியா வந்து உங்களைச் சந்திச்சதுல எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? கொஞ்ச நாட்களுக்குள்ளேயே ஒரே குடும்பம் போல நெருங்கிப் போயிட்டோம். திலகா கிட்ட வச்சிருக்கிற பாசம் மாதிரின்னு கூட சொல்ல மாட்டேன் சைலா. அண்ணன் தங்கைன்னு ஏதாவது சும்மாச் சொல்லி இந்தப் புனிதமான அன்பை நான் கொச்சைப் படுத்த மாட்டேன் சைலஜா-

    “அதனால தான் இன்னிக்கு நவராத்திரி கொலுவுக்குப் போகிறப்ப நீங்க இந்தப் புடைவையை உடுத்திக்கிட்டு தேவதை மாதிரி வருவீங்களான்னு என்னை விட்டுக் கேட்கச் சொன்னார். நீங்க சம்மதிப்பீங்கன்னு நான் காரண்டி குடுத்திருக்கேன். ப்ளீஸ்,” என்றாள் அமுதா.

    சைலஜாவுக்குத் தொண்டையில் பந்து உருண்டது. இது எந்த விதமான அன்பில் சேர்த்தி? அவளைப் போன்ற ஒரு இழிந்த பெண்ணை, அவல வாழ்வு வாழ்ந்து சமூகம் அவள் பின்னால் கைகொட்டிச் சிரிக்கும்படியான நிலையிலுள்ள அவளையா இவன் இவ்வளவு உயர்ந்த இடத்தில் தூக்கி வைத்திருக்கிறான்?

    “நானா தேவதை… அமுதா- நான்… நான்…” சொற்கள் தொண்டைக் குழியிலேயே தடுமாறி உருண்டன. உடல் நடுங்கியது.

    ‘நீ தான் சைலஜா. உன் கடந்த காலம் ஒரு மாயை. அது உன் உள்ளம் சம்பந்தப் பட்டதல்ல. நீ ஆழ்ந்து உன்னையே தேடிய தேடலின் ஒரு அத்தியாயம் அது. கணவனை விட்டுப் பிரிந்ததும், அருணுடன் வாழ்ந்ததும், தேடிய பொருள் என்ன என்று விளங்காததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள போட்டுக் கொண்ட மாயத்திரை. உன் மனது பூப்போன்றது. பிறருக்கு அது உற்சாகத்தின் சுரங்கம். நம்பிக்கையின் அஸ்திவாரம். இதை நீ உன்னையறியாமல் உன் அன்பன் ஒருவனுக்கு வழங்கியிருக்கிறாய்- இன்னும் உன்னுடைய தேடல் என்னவென்று புரியவில்லையா?’ உள்மனம் உரிமையுடன் கூறியது.

    கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. மிகவும் குழம்பிப் போயிருந்தாள். சிலை போலச் சிறிது நேரம் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தவளை, அமுதா தான் எழுப்பிச் சென்று, முகம் கழுவிக் கொள்ள வைத்தாள். அலமாரியைக் குடைந்து புடைவைக்கு ஏற்ற சில அணிமணிகளை எடுத்துக் கொடுத்து விட்டு, “பத்து நிமிஷம் தான் தருவேன். வெளியிலேயே இருப்பேன், வந்துடணும்,” என்று செல்லமாகக் கூறி விட்டு வந்தாள்.

    “அம்மா, நாய்க்குட்டி எல்லாம் ரொம்ப அழகும்மா. நம்ப ஒண்ணு எடுத்துக்கலாமா? அப்பா உன்னைக் கேட்டுக்கச் சொன்னார்மா,” மூச்சிரைக்க ஓடி வந்தனர் குழந்தைகள். பின்னாலேயே வந்த ஆடலரசு மனைவியை முகத்தில் கேள்விக்குறியுடன் நோக்க, அவளோ அவனைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையை வீசினாள். அவளருகே அவனும் அமர்ந்தபடி தன் தேவதையின் எழுந்தருளலுக்காகக் காத்திருந்தான்.

    கதவு திறந்தது.

    அமுதாவுக்கும் ஆடலரசுக்கும் தங்கள் கண்களை இமைக்கக் கூட முடியவில்லை. இது எத்தகைய தெய்வீகப் பேரெழில் இவளிடம்? உடலை அரவணைத்த குங்கும வண்ணப் பட்டு. சம்பிரதாயமான வைரத்தோடு, கழுத்தோடு உறவாடிய மெல்லிய நெக்லஸ், கண்மை, நெற்றிக் குங்குமம், ‘பாப்’ செய்த தலைமுடியை அழுந்த முடித்து, ஒரு கொண்டை மாதிரி ஆக்கி, அதில் சிறிது ஜாதி முல்லைச் சரத்தையும் சுற்றியிருந்தாள். “சைலஜா…..,” குரல் தழுதழுத்தது ஆடலரசுக்கு. “நீங்க என்னை விடச் சின்னவங்க. இல்லாட்டி, உங்க காலில் விழுந்து கும்பிட்டிருப்பேனம்மா. அம்பிகை மாதிரி நிக்கிறீங்க,” குழந்தைகள் பார்த்து விடாதபடி அவசரமாக அறையை விட்டு வெளியேறியபடியே ‘கர்சீப்’பை எடுத்து கண்களை ஒற்றிக் கொண்டான்.

    எல்லாரும் காரில் ஏறிக் கொண்டு நகரின் பிரபல வக்கீல் சுந்தரராஜனின் பங்களாவை அடைந்தார்கள். அவர்கள் வீட்டில் நவராத்திரி பெரிய திருவிழாவாகவே கொண்டாடப்படும். பதினோரு படிகள் தவிர, பார்க், ராக்கெட் தளம், மிருகக் காட்சி சாலை, தேர் ஊர்வலம் எல்லாமாகப் பெரிய கொலு- குழந்தைகளுக்கு, ஏன் பெரியவர்களுக்குமே பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கலைவிருந்து. மூன்று நான்கு அறைகளில் கொலு வைத்திருப்பார்கள்!

    இவர்கள் உள்ளே நுழைந்ததும், சுந்தரராஜனின் பெரிய பெண் வரவேற்றுக் கூட்டிக் கொண்டு போனாள். கூட்டம் அவ்வளவாக இல்லை. ஐந்தாறு பெண்கள், அவர்களது கணவர்களும் குழந்தைகளுமாக முன்னறையில் சிலபேர்- அவ்வளவு தான்.

    வருடாவருடம் சுந்தரராஜன் வீட்டிலிருந்து அழைப்பு வரும். ஷிவா வேண்டுமென்றே வராமல் இருந்து விடுவாள். ஒருமுறை சில பிரெஞ்சு விருந்தாளிகளைக் கூட்டிக் கொண்டு வந்தாள். பட்டும் நகைகளுமாகப் பளபளத்த பெண்கள் கூட்டத்தின் நடுவே, ‘லெதர் டிரௌசரும்’ முன்னால் இடையில் முடிந்து கொண்ட ஒரு ‘லொட லொட’ டாப்ஸுமாக வந்து எல்லாரையும் விழி பிதுங்க வைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கினாள்.

    சாந்தா சுந்தரராஜனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. சைலஜாவின் அரசி போன்ற கம்பீரமான தோற்றத்தில் தன் மனதைப் பறி கொடுத்தவள், உரிமையுடன் அவள் கரத்தைப் பற்றி அழைத்துப் போய் கொலுவில் அந்த வருடத்து விசேஷ அமைப்புகளை விளக்கலானாள்.

    அமுதாவும் ஆடலரசும் கொலுவின் அமைப்புகளை குழந்தைகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர்.

    சைலஜாவின் வீட்டில் கொலு பெரிதாக வைப்பார்கள். அக்கம் பக்கம் எல்லாரையும் கூப்பிட்டு மஞ்சள் குங்குமமும், சுண்டலும் வினியோகிப்பார்கள். ஒரு வருடம் ஆடலரசு தான் சைலாவின் பார்க்குக்கு திலகாவின் சிபாரிசின் பேரில் கேழ்வரகு தெளித்து முளைக்கட்டி, கோவில் குளம் எல்லாம் அமைத்துக் கொடுத்தான்.

    அவர்கள் வீட்டில் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வரும் பெண்கள் தாங்கள் பாடுகிறார்களோ என்னவோ, சைலஜாவைப் பாடச் சொல்லி ரசிப்பது வழக்கம்.

    இன்றும் இங்கு மற்ற பெண்கள் பாடிக் கொண்டிருந்தனர். “நீங்கள் பாடுகிறீர்களா ஷீலா?” என்றார் சுந்தரராஜன்.

    அந்த மாலை நேரத்து இனிமையை, விழாக்காலத்துக்குரிய கலகலப்பு நிறைந்த அனுபவத்தை, தன்னைச் சுற்றி உள்ளவர்களின் தோழமையை, வெகு நாட்களுக்குப் பின் ரசித்து, பரவசமடைந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், பக்தனின் தவத்தில் மகிழ்ந்து வரம் தரத் தயாராக இருக்கும் அம்பிகையைப் போல், சைலஜா, “அதனால் என்ன, பாடினால் ஆயிற்று,” என்றதும், ஒரு பவ்யமான மௌனம் நிலவி, அவள் பாடுவதைக் கேட்க எல்லாரும் தயாரானார்கள்.

    ஃபாஷன் மாடல் போல் உடையணிந்து ஊரை வலம் வந்த ஷீலா ராபர்ட்ஸா இது? விஸ்கியின் போதையில் வெட்கம் இல்லாமல் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ‘லாபி’யில் அருணுடன் வெட்கமின்றிச் சரசமாடிய ஷீலாவா இது? ஏதோ ஒன்றைத் தேடிக் களைத்து, கீழே விழுந்து புழுதியில் புரண்ட குழந்தையைக் கையைப் பிடித்துத் தூக்கி, தூசியைத் தட்டி, அன்பு வார்த்தைகள் சொன்னதும், அது மகிழ்ந்து சிரிப்பது போல, இசை அவள் வாயிலிருந்து அருவியெனப் பொழிந்தது. பழைய பழைய பாடல்களும், அம்பாள் மீதான ஸ்லோகங்களும், விருத்தங்களும் அழகாக அணிவகுத்து நடைபயின்றன.

    மதுவுண்ட வண்டு போல, மற்ற பெண்கள் எல்லாம், “இதைப் பாடுங்கள், அதைப் பாடுங்கள்,” என்று வேறே கேட்டுக் கேட்டு உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்களின் பின்பு, “மிகவும் நாட்களாகி விட்டன நான் பாடியே- இனி முடியாது. தொண்டை கரகரக்கிறது. கடைசியாக ஒரே ஒரு பாட்டு- எனக்கு ரொம்பப் பிடித்தது,” என அமுதாவிடம் கிசுகிசுத்தாள் ஷீலா. “வருகலாமோ ஐயா,” எனப் பாட ஆரம்பித்தாள்.

    சரணத்தைப் பாடும்போது அது தன்னுடைய நிலைக்கு எவ்வளவு பொருத்தம் என மனம் உணர்ந்ததோ என்னவோ, குரல் தழதழத்தது.

    “சாமி உன் சந்நிதி வந்தேனே, பவ சாகரம் தன்னையும் கடந்தேனே, கரை கடந்தேன் சரணம் அடைந்தேன் தில்லை வரதா, என் பரிதாபமும் பாபமும் தீரவே நான் அங்கே வருகலாமோ ஐயா?”

    மனக்கண்ணில் அபிநயம் பிடித்து ஆடியவளாக சைலஜா என்ற ஷீலா பாடினாள். ஜிம் முன்பு தான் தயங்கி நிற்பது எதற்கு என மனம் துடித்தது. குரலில் உலகத்துத் துயரை எல்லாம் இழைத்து வடித்து வைத்தது போலத் தோன்றியது. உடல் ‘குப்’பென வியர்த்தது. கண்முன் இருந்த எல்லாம் தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது. பாட்டு ஒருவழியாக முடிய, “ஆஹா ஷீலா, எத்தனை அற்புதமாகப் பாடுகிறீர்கள்?” என்றாள் சாந்தா சுந்தரராஜன்.

    அமுதா அவளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஷீலா கண்களை மூடிக் கொண்டு திவானில் சாய்ந்து தொய்வதைக் கண்டு, அவளைத் தாங்கிக் கொண்டு, “மாமி, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்,” என்றாள். ஷீலாவின் உடல் கட்டை போல் சில்லித்துக் கிடந்தது. தண்ணீர் பட்டதும் மெல்லக் கண்களை விழித்தவள், உயிரற்ற புன்னகை பூத்தபடி சுதாரித்துக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள்.

    ஆடலரசு, மருத்துவர் என்ற முறையில் நிலைமையைக் கச்சிதமாகக் கையாண்டான். “உற்சாகமாக ரொம்ப நேரமாகப் பாடினாங்க. வருஷக் கணக்காகப் பாடாதவங்க- டயர்டாகப் போயிருப்பாங்க. நானும் அமுதாவும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறோம்,” என்றபடி கிளம்பத் தயார் செய்தான்.

    அவனுக்கும் அமுதாவுக்கும் அல்லவோ தெரியும்- இது அவளுடைய உள்மனத்தின் புலம்பல், இப்போது வார்த்தைகளாக உருவம் தந்து வெளிப்படுத்தியதும், அவற்றின் பரிமாணமும் கனமும் தாங்காத உள்ளம், உடலையும் சேர்த்து அயர்ச்சியில் வீழ்த்தி விட்டது என்று.

    ஷீலாவை அவளுடைய பங்களாவின் அறையில் படுக்க வைத்தபடி, “இரண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் சைலா உங்களுக்கு. நீங்க சிந்தித்து மூளையைக் குழப்பிக்கிறதை கொஞ்சம் நிறுத்துங்க. ஜிம்மும் கீதாவும் வரும்போது ‘ஹெல்த்தி’யாக இருந்தால் தானே எல்லாம் சரியாக இருக்கும்? நான் இப்ப உங்களுக்குத் தூங்குவதற்கு ஒரு ஊசி போடப் போகிறேன். ரமணி அம்மா கிட்ட என்ன ஆகாரம் என்று சொல்லிட்டுப் போறேன். நிம்மதியாகத் தூங்குங்கள். சலனமற்ற, கவலைகளற்ற, குழப்பமற்ற உறக்கம் வேண்டும். உங்கள் சிந்தனைகளுக்கும் குழப்பங்களுக்கும் ஒரு நல்ல முடிவு காத்திருக்கிறது. இப்போ வேண்டியது ஓய்வு. ஸ்லீப் வெல், மை டியர் ஏஞ்சல்,” என்று கூறியபடி அவளுக்கு ஊசியைப் போட்டவன், அவள் கரங்களை அழுந்தப் பற்றி ஆறுதல் கூறி விடை பெற்றான்.

    காரை ஸ்டார்ட் செய்தவன், ” அமுதா….” என்றபடி குரல் கம்ம, அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

    “என்னங்க இது? நீங்க ஒரு டாக்டர். இப்படி உணர்ச்சிவசப் படலாமா? அவங்க நல்லாயிடுவாங்க,” என்றாள் அந்த இனிய மனைவி.

    (தொடரும்)

    மறு பகிர்வு: தாரகை இணைய இதழ்

    **********************

    Share
  • மூன்று ஆண்டுக்கால ஆட்சியில் நடந்துள்ளது என்ன?

    பவள சங்கரி

    தலையங்கம்

    நம் இந்தியப்  பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மத்திய அரசின் மூன்றாண்டுகள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில் அவர்தம் பணியையும் அவர் ஆட்சியில் மற்ற அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் நோக்கத்தக்கது.

    பிரதமரின் ஆட்சியில் பல்வேறு பிரிவுகளான, நிதி, நீதி, கல்வி, உள்நாட்டு பாதுகாப்பு, இராணுவம், விண்வெளி, தொழிலாளர் நலம், மருத்துவம், நகர் கட்டமைப்பு போன்ற முக்கியமான பத்து துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே அதன் வெற்றியை நிர்ணயிக்கக்கூடியது . அந்த வகையில் முன்னேற்றப்பாதையில் செல்வதற்குரிய பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை மறுக்கவியலாது. நம் இந்தியப்பிரதமரின் இந்த மூன்றாண்டு கால ஆட்சியை அரசியல் பின்னணியில் ஊடுறுவதைக்காட்டிலும், பாரபட்சமற்று நாட்டு நலனில் அக்கறைகொண்ட ஒரு பிரதமரை நாம் பெற்றிருக்கிறோமா என்பதே நம் மக்களின் இன்றைய சிந்தையாக குழப்பமேற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனை முழுமையாகக் களையவேண்டிய முக்கிய பொறுப்பு நம் இந்தியப்பிரதமருக்கு உள்ளது என்பதையும் மறுக்கவியலாது.

    நிதித்துறை : இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாரு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக உயர் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தலும், ஜிஎஸ்டி முறையை செயல்படுத்த இருப்பதும் பாராட்டிற்குரிய அம்சமாகவே கருதப்படுகிறது. கருப்புப்பணம் முற்றிலுமாக ஒழிந்தது என்று மகிழ்ச்சிகொள்ள முடியாவிட்டாலும், இவை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். அதிலுள்ள சில குறைபாடுகளை களைந்தாலே நிதித்துறையில் மேலும் வெற்றியை அடையமுடியும் என்பதும் திண்ணம். வருங்காலத்தில் அதற்குரிய முயற்சிகளும் எடுக்கப்படுவதற்கான முகாந்திரமும் தெளிவாகவே உள்ளதை வரவேற்கலாம்.

    நீதித்துறை: நமது நீதித்துறையானது மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது பாராட்டிற்குரிய விசயம். அரசுத் துறைகளோ அல்லது பொதுமக்கள் பிரச்சனைகள் என எந்தவிதமான சட்டப்பிரச்சனையாக இருந்தாலும் அதற்குரிய சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதும் வரவேற்கத்தக்கது.

    கல்வி: கல்வித் துறையைப் பொருத்தமட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டபோதும், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சில வருத்தங்களைப் போக்கும்விதமாக மனிதவள மேம்பாட்டுத்துறையில் மேலும் பல மாற்றங்கள் செயல்படுத்தப்படவேண்டியதும் அவசியமாகிறது. போதுமான ஆய்வகங்கள் இன்மையும், ஆய்வுகள் ஊக்கப்படுத்துதலில் உள்ள பின்னடைவுகளும் சரிசெய்யப்படவேண்டிய தேவையும் உள்ளது. தனிப்பட்ட ஆய்வாளர்களை உற்சாகப்படுத்துவதும் அவசியமாகிறது.

    உள்நாட்டு பாதுகாப்பு / இராணுவம்: இராணுவத் தேவைகளுக்கு கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தும் அரசு அதன் ஒரு பகுதியை உடனடித் தேவைகளுக்கு தளவாடங்களாக வாங்குவதும், மீதிப்பகுதிகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கு ஏற்ப வழிமுறை செய்து உள்நாட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கியிருப்பதும் பாராட்டிற்குரியது. பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ என்ற வெற்றிகரமான திட்டத்தை நினைவுகூர்ந்து மகிழச்செய்கிறது.  புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ள மிக நவீன டாங்கிகளும் இதற்குரிய எடுத்துக்காட்டுகளாகக்கொள்ளலாம். விமானத்துறையிலும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருப்பது பாராட்டிற்குரியது. தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், எல்லைப்புறப் பாதுகாப்பு போன்றவைகளிலும் மேலதிக கவனம் செலுத்தி, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியதும் அவசியமாகிறது.

    விண்வெளி: விண்வெளித் துறையில், இஸ்ரோவின் மேம்படுத்தப்பட்ட செயல்கள் போன்று பல பாராட்டத்தக்க செயல்பாடுகளைக் காணமுடிகிறது. தொலைத்தொடர்புத் துறைகளில் மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதும் சிறப்பு.

    தொழிலாளர் நலம்: தொழிலாளர் நலம் குறித்த பெரும் முன்னேற்றங்கள் இல்லாவிட்டாலும் பிரச்சனைகள் இல்லாத வகையில் செயல்படுத்தி வருவதைக் காணமுடிகிறது. பெருமளவில் வருமானம் வரக்கூடிய ஐ.டி. துறையில் அதிக அளவில் பணியாளர்களை நீக்கும் முயற்சியில் மிகப்பெரிய பத்து நிறுவனங்கள் இறங்கியுள்ளது ஏற்புடையதன்று. அந்த வகையில் பணியிலுள்ள ஐ.டி பொறியாளர்களுக்கு தக்க பணிப்பாதுகாப்பை வழங்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசிற்கு  கூடுகிறது.

    மருத்துவம் : மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்கும்வகையில் பல திட்டங்களை முன்னெடுத்திருப்பது பாராட்டிற்குரியது. என்றாலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதும் அவசியமாகிறது. ஸ்டெண்ட் போன்ற இருதய சிகிச்சைக்குரிய முக்கியமான சிகிச்சைக் கருவியே இதற்கு உதாரணம்.

    நகர் கட்டமைப்பு: இத்துறைக்காக பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், அந்தந்த மாநிலங்களின் செயல்பாட்டில் உள்ள நகர் கட்டமைப்புகளை சரியான முறையில் மேற்பார்வையிட்டு அதனை தகுந்த காலங்களில் முடிவுறச்செய்து, மக்களின் பயன்பாட்டிற்கு வரும்வகையில் விரைவுபடுத்தப்படவேண்டியதும் மத்திய அரசின் கடமை.

    ஆக இன்றியமையா இந்த பத்துத்துறைகளிலும் மத்திய அரசின் செயல்பாடுகள்   அனைத்தும் குறையின்றி பாராட்டிற்குரியதாக  இருப்பினும் உள்நாட்டு பாதுகாப்பு, இராணுவம், மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் மேலும் சிறப்பான செயல்பாடுகளை எதிர்நோக்கும் இந்த நேரத்தில் பெரிய அளவில் ஊழல் புகார்கள் வெளியே வராமல் இருப்பதும் ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது. நாட்டில் உள்ள கருப்புப்பணம் வெளியில் கொண்டுவருவதில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மத்திய அரசு இதை அரசியல் நோக்கில் பார்க்காமல் நாட்டு நலனில் உண்மையான அக்கறைகொண்டு செயல்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும். ஆக இந்த மூன்றாண்டு ஆட்சி நல்ல வளமான விதைகளைத் தூவியுள்ளதன் மூலம் மேலும் சிறந்த விருட்சமாக உருவாகும் என்ற நம்பிக்கையை வளர்ப்பதாகவே உள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”புதியன எண்ணும் பழைய விரும்பி,
    மதிவழி எல்லாமே மாயை: -பதிநூற்றி(108 திருப்பதி)
    எட்டில் வளர்கண்ணா , என்னத் தவம்செய்தாள்
    எட்டவளை(கண்ணன் -எட்டாவது பிள்ளை) அம்மாவாய் ஏற்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி (2)

    பவள சங்கரி

    சிறுவர் இலக்கியம்

    கிரீச்சென்ற ஒலியுடன் சர்ரென்று இழுத்துக்கொண்டு சடாரென வண்டி நின்ற இடம் அடர்ந்த வனம் இருக்கும் பாதை. இருண்ட பின்னிரவு நேரம். கோடை விடுமுறை சுற்றுலாவாக இரண்டு குழந்தைகளும் அப்பா, அம்மாவுடன் குதூகலமாக கிளம்பிய பயணம். காரின் வலது புற பின் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்பது முன் இருக்கையில் அப்பாவுடன் இருக்கும் அம்மாவிற்கும் தெரிந்தது. வனப்பகுதியில் இரவு வேளையில் வெட்டவெளியில் வெகு நேரம் இருப்பது ஆபத்தானது என்று உணர்ந்தபோது குழந்தைகளும் அச்சத்தில் நடுங்க ஆரம்பித்துவிட்டனர். ஒரே வழி அப்பா இறங்கி ஸ்டெப்னியை எடுத்து மாற்றி அங்கிருந்து விரைவில் அகன்றுவிட வேண்டியதுதான். மனதை திடப்படுத்திக்கொண்டு அப்பா இறங்க முடிவெடுக்க, அம்மாவும் உதவ முன்வர, அந்த நேரம் பார்த்து வெகு அருகில் நெஞ்சம் உறையச்செய்யும் உறுமல் சத்தம். தன்னிச்சையாக கைகள் கார் கதவின் பூட்டுகளை சரிபார்த்துக்கொண்டன. சற்று தூரத்தில் எதிர் புறத்தில் மங்கிய ஒளியில் தீப்பொறியென மின்னும் இரு கண்கள் மட்டும் நெருங்கி வருவது தெரிந்தது. வண்டியின் மொத்த விளக்குகளையும் அணைத்துவிட்டு மூச்சையும் இழுத்துப்பிடித்து, குழந்தைகளை பின்னிருக்கையின் காலடியில் சுருண்டுவிடச் செய்துவிட்டு முன்னிருக்கையில் காலடியில் சுருண்டுகொள்ள வழியின்றி அப்படியே மூச்சைப்பிடித்து பக்கவாட்டில் கியரின் இருபுறமும் இருவரும் இருக்கையோடு அழுந்திக்கொண்டனர். ஓரக்கண்ணால் உயர்த்திப் பார்த்தபோது பிரம்மாண்டமாக நிற்கும் சிறுத்தைப் புலியின் காட்சி! அவ்வளவுதான் .. அடுத்த நொடி

    காக்க .. காக்க கனகவேல் காக்க
    நோக்க .. நோக்க நொடியினில் நோக்க

    என்று இதயம் சத்தமில்லாமல் கூக்குரலிட ஆரம்பித்துவிட்டது. தன் வழித்தடத்தை மறைத்தவாறு ஏதோ கிடப்பதை மோப்பம் பிடித்தவாறு சிறுத்தையொன்று சுற்றிச்சுற்றி வருவது தெரிகிறது. அவ்வப்போது இலேசான உறுமலுடன் முன்னங்காலைத் தூக்கி வண்டியின் மீது தாக்குகிறது. ஒருவேளை கண்ணாடியில் அதன் பலமான மோதல் நடந்துவிட்டால் அத்தோடு என்ன நடக்கும் என்று கடவுளுக்கே வெளிச்சம் என்ற நிலை. படபடக்கும் இதயம் துள்ளி வாய் வழியே வெளியே வந்துவிடுமோ என்ற நிலை. ஆனாலும் குழந்தைகளும் அந்தச் சூழலை வெகு நேர்த்தியாகக் கையாண்டனர். ஒரு மணி நேரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. திடீரென்று காரின் வலது பக்கவாட்டில் பலமான யானைப்பிளிரல் ஒலி காதைப்பிளந்தது. அதுவும் ஒற்றை யானை என்றால் துவம்சம்தான் என்று நினைத்தபோதும் ஒன்றும் பேச வழியில்லை. இந்தப் பிளிரல் அந்த சிறுத்தையையும் கலங்கச் செய்திருக்கும் போல. காரின் முன்பகுதியின் பானட் மீது முட்டும் அளவிற்கு ஒரே தாவலாக எதிர்புறமாகப் பாய்ந்து வனத்தினுள் சென்று மறைந்துவிட்டது. அடுத்து யானை நெருங்கி வருமோ, குட்டி ஜென் காரைத் தூக்கி சுழட்டி பந்தாடிவிடுமோ என்ற பேரச்சத்தில் நா வறண்டு கிடக்க, என்ன நடந்ததோ, எங்கு சென்றதோ அந்த யானையின் சுவடு ஏதும் இல்லை. இந்த களேபரத்தில் பொழுது மெல்ல புலர ஆரம்பித்தது பறவைகளின் மெல்லிய கீச்சுகளினால் உயிர் மீண்டது.

    சுள்ளி பொறுக்க வந்தவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என ஒரு சிறு கூட்டம் கூடிவிட நடந்தது அனைத்தையும் மூச்சுவிடாமல் விளக்கும் அம்மாவை கண்கொட்டாமல் குழந்தைகள் பார்த்தவாறு இருக்கிறார்கள். சுற்றி இருந்தவர்கள் அதை அப்படியே உணர்ந்து மெய் சிலிர்க்கின்றனர். உடல் நடுங்கியவாறு, தாங்கள் அதிசயமாக உயிர் தப்பிய நிகழ்வை அப்படியே ஒன்றுவிடாமல் அம்மா சொன்னபோது குழந்தைகளுக்கே நம்ப முடியாதவாறு வைத்த கண் வாங்காமல் வெறித்துக்கிடந்தனர். ஆதிகாலத்தில் நடந்த பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் இப்படித்தான் கதை சொல்லிகள் மூலமாக வழிவழியாகத் தொடர்கின்றன.

    8bb4bfc8f3701cdec9ac6dfe93b864a5
    2,500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன பஞ்ச தந்திர கதைகள், பாட்டி சொன்ன கதைகள், ஹோமர் உருவாகிய ‘ஒடிசி’ என்ற கிரேக்க நாட்டு டிரோஜான் கதைகள், அரேபிய இரவுகள், ஹேம்லட் & சிண்ட்ரெல்லா போன்றவைகள் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பல்வேறு வடிவங்களில், மொழிகளில், சூழல்களில் பரம்பரையாகத் தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொண்டுதான் உள்ளன.

    காகிதங்கள் கண்டுபிடிக்கப்படாத ஆதிகாலங்களிலும், நம் முன்னோர்கள் களிமண் திட்டைகள், பானை ஓடுகள், சுவர் ஓவியங்கள், குகைச்சிற்பங்கள் என்று பலவகையில் கதைகளை வடிவமைத்து நல்ல கதைசொல்லிகளாக உணர்த்திவிட்டனர்.

    வரலாறு முழுவதும் கதைகள் வாயிலாகவே இறந்த காலங்களை பெருமைகொள்ளவும், நிகழ் காலங்களை ஒளியூட்டவும், எதிர்காலங்களை ஊடுறுவவும் வகை செய்கிறது. நம் முன்னோர்கள் இதுபோன்ற மாய வார்த்தைஜாலங்கள் மூலமாகவே அறிவைப் புகட்டவும், அகண்டமாக்கவும், அனுபவங்களைப் பாடமாக்கவும் முனைந்தனர். அவர்கள் கட்டுக்கதைகளைப் புனைந்து அதன் மூலம் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தனர். குழந்தைகள் மட்டுமன்றி பெரியோர்கள் என்ற பெருங்கூட்டத்தையுமே உற்சாகப்படுத்தியிருந்தனர். போர் ஏற்படுத்தவும், சமாதானம் பேசவும், தற்காப்பு செய்யவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் அனைத்து முக்கியமான செயல்பாடுகளையும் கதைகள் மூலமாகவே பாடமாக்கினர். ஆபத்துகளை எச்சரிக்கை பெறவும், எதிரிகளை இனம் காணவும், நாயகர்களைக் கொண்டாடவும் கதைகள் பயிற்றுவிக்கின்றன. கதைகள் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன.

    கற்காலம் கடந்த 20,000 ஆண்டுகளுக்குப் பிறகும் பெரிதான மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. இன்றும் பொழுதுபோக்கிற்காகவும், அறிவு வளர்ச்சி, சுகமான அனுபவங்களுக்காகவும் கதைகளையே நாடியிருக்கிறோம் என்பதே நிதர்சனம். நம் பழங்கதைகள், அந்த எழுத்துகளையும் கடந்து, நம் முன்னோர்களின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்திருக்கச் செய்கின்றன. இந்த உன்னத உணர்வுகளே நாம் யார், நாம் வந்த பாதை எது, நாம் செல்லப்போவது எங்கே போன்ற வினாக்களுக்கு விடையளிப்பதோடு மதிக்கவும் செய்கின்றன.

    மகாகவி காளிதாசன் பற்றி அறியாதவர் இலர். கல்வி ஞானம் துளியும் இல்லாத தற்குறியாக இருந்த காளிதாசனை, அகிலமே புகழும் மாகவியாக்கி, கலைவாணி நிகழ்த்திய அற்புதங்களை அனைவரும் அறிவர். ஏடும் எழுத்தும் அறியாக் காளிதாசன் நாவில் நாமகள் அருள்மழை பொழிந்ததன் பயனாக அவர் சம்பு இராமாயணம் இயற்றி புகழ் பெற்று விளங்கினார். ஊமையாக இருந்த குமரகுருபரருக்கு ஞானப்பால் புகட்டி பேச வைத்ததுமல்லாமல் பன்மொழிப்புலமை பெறச் செய்திருக்கின்றாள். நாமகள் அருள் பெற்று இவர் பாடிய சகலகலாவல்லி மாலை சரசுவதி தேவியைத் துதித்துப் பாடியவை. இது மட்டுமன்றி காசிக்குச் சென்று மன்னனிடம் வடமொழியில் பேசி மனதைக் குளிரச்செய்து சைவமடம் நிறுவ இடமும் பொருளும் பெற்ற அதிசயம் இலக்கியத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது. கல்விக்கடவுள் என்பதற்கு அடையாளமாகக் கையில் ஏடு தரித்திருக்கின்றாள் கலைமகள்! இவள் அருளில்லாமல் போயிருப்பின் காளிதாசனும், குமரகுருபரனும் இருண்ட உலகில் சிறைபட்டிருந்திருப்பர்.

    எழுத்து என்பது கலைவாணியின் ஒரு வரம். அதுவும் குழந்தைகளுக்காக இலக்கியம் படைப்பதென்பது மாபெரும் வரம் எனலாம். குழந்தை இலக்கியம் படைப்பதை என்றுமே குறைத்து மதிப்பிடல் உகந்ததன்று. குழந்தைகளுக்காக இலக்கியம் படைக்கும்பொழுது மொழியற்ற அந்த பிஞ்சுகளின் மொழியாகிவிடுவதை உணரமுடியும். அவர்களுக்கான புதிய உலகம் படைக்கப்படுவதோடு, அவர்தம் சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கி, அவர்களை அறிவொளியின் எல்லைக்கே இட்டுச்செல்ல முடிகிறது. இதுவே கதையின் வல்லமை மற்றும் தேவையுமாக உள்ளது. ஒரு நல்ல கதைசொல்லியால் மட்டுமே இத்தகைய வெகுமதியை குழந்தைகளுக்கு அளிக்கமுடியும்.

    சிலருக்கு இந்த கதை சொல்லும் ஞானம் பிறவியிலேயே வாய்த்திருக்கும். ஊர் வம்பு பேசி அடுத்தவரின் கவனத்தை எளிதாக ஈர்த்துவிடும் வல்லமை பெற்றவர் பலர். எந்த இடத்தில் நிறுத்தவேண்டும், எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கவேண்டும், எந்த இடத்தில் விரிவான விளக்கம் கொடுக்கவேண்டும் போன்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பர். வெகு இயல்பாக கதை சொல்லும் ஆற்றல் பெற்றிருப்பர். அனைவருமே இதுபோன்ற ஆசிர்வாதம் பெற்றவர்களாக இல்லாவிட்டாலும், கதைகளை வாசித்தும், கேட்டும் ஞானம் பெற்றவர்களும் உள்ளனர்.

    கதை சொல்வதென்பது ஒரு வரம் மட்டுமன்று. அது ஒரு கலை.

    கலை என்பது உள்ளுணர்வு, பாராட்டுகளின் அடிப்படையில் உருவாகக்கூடியது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அந்த உள்ளுணர்வு இருக்கத்தான் செய்கிறது. அப்படி இல்லாவிட்டாலும் அதை விதைத்துக்கொள்ள முடியும். எப்படி?

    தொடருவோம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  88

    -முனைவர் சுபாஷிணி

    டெ வாக் விண்ட்மீல் அருங்காட்சியகம், லைடன், நெதர்லாந்து

    விண்ட்மில் என்பவை காற்றின் மூலம் கிடைக்கக்கூடிய சக்தியைக் காற்றாடிகளின் சுழற்சியின் வழி உருவாக்கி, அதன் வழி கிடைக்கும் சக்தியை ஒரு குறிப்பிட்ட வகைப் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. பண்டைய காலத்தில் விண்ட்மில்கள் பயிர்களை அரைத்துத் தூளாக்கி மாவாக்கவும் தேங்கிய தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. நாளடைவில் விண்ட்மில்கள் உருவாக்கும் சக்தியை மின்சார சக்தியாக மாற்றலாம் என்பதை அறிவியல் துறை ஆய்வுகள் கண்டுபிடித்ததன் விளைவாகப் பெருவாரியாக விண்ட்மில்கள் உலகளாவிய அளவில் மின்சார உற்பத்திக்குப் பயன்படுகின்றன. 

    விண்ட்மில் ஒன்றினை நம் மனக்கண்ணில் நாம் நிறுத்திப் பார்த்தால் உடனே நம் சிந்தனைக்கு வரும் நாடு நெதர்லாந்து தானே. நெதர்லாந்து நாட்டை ஹோலந்து என்ற பெயரிலும் அழைப்பது வழக்கம். இதற்குக் காரணம் உண்டு. தாழ்மையான நிலப்பரப்பு என்பதைப் பிரதிபலிப்பதாகவே இந்தப் பெயர் அமைந்தது. நெதர்லாந்துக்குச் சென்றிருப்பவர்கள் இந்த நாட்டின் நில அமைப்பினை நன்கு கவனித்திருந்தால், நிலப்பகுதி தாழ்வாக இருப்பதையும் எங்கெங்கு காணினும் குட்டைகளும், குளங்களும், ஏரிகளும், ஆறுகளும் என ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஆக, இப்படித் தேங்கிப் போய் இருக்கும் நீரை வெளியேற்றி நிலத்தைச் சமப்படுத்தும் கருவியாகப் பெரும்பாலான விண்ட்மில்கள் முன்னர் அமைக்கப்பட்டன. இது மட்டுமல்ல… விளை நிலங்களில் விவசாயத்தின் வழி கிடைக்கின்ற தானியங்களை உடைத்து மாவாக்கும் இயந்திரத்தை விண்ட்மில்லுடன் பொருத்தி அதனை மாவு அரைக்கும் இயந்திர ஆலையாகவும் நெதர்லாந்து நாட்டில் புழக்கத்தில் கொண்டு வந்தனர். இன்றளவும் நெதர்லாந்தில் தானியங்களை மாவாக அரைக்கவும், நீரைத் தாழ் நிலங்களிலிருந்து வெளியேற்றவும் விண்ட்மில்கள் பயன்படுத்தப் படுகின்றன. 

    suba1

    இதே முறை ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் புழக்கத்தில் இருந்தன, இன்றும் இருக்கின்றன. உதாரணமாக ஜெர்மனியின் லியோன்பெர்க்கில் எனது இல்லம் இருக்கும் பகுதியில் ஓடும் க்ளெம்ஸ் நதி பாயும் பகுதியில் இந்த ஆற்று நீரில் இத்தகைய இயந்திரங்களை அமைத்து தானியங்கள் அரைக்கும் ஆலைகளை உருவாக்கியிருக்கின்றார்கள். ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மாவு அரைக்கும் ஆலைகள் இவை. இப்படி ஆற்றங்கரையோரத்தில் ஐரோப்பாவின் பல இடங்களில் இவ்வகை இயந்திரங்களையோ அல்லது பழமையான விண்ட்மில்களையோ காணலாம். இன்று பரவலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் விண்ட்மில்கள் ஏராளமாக வந்துவிட்டன. ஆயினும் இந்தப் பழமையான மரத்தால் ஆன விண்ட்மில்களுக்குள்ள அழகும் நேர்த்தியும் அந்த இயந்திரத்தன்மை கொண்ட விண்ட்மில்களுக்கு இல்லை என்றே சொல்லலாம். 

    நெதர்லாந்தை எடுத்துக் கொண்டால், அந்தச் சிறிய நாட்டில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ட்மில்கள் இருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா? இந்த விண்ட்மில்களில் ஒன்றுதான் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. ’டெ வாக் விண்ட்மில்’ என அழைக்கப்படும் இந்த விண்ட்மில் நெதர்லாந்தின் தெற்குப் பகுதி நகரான லைடன் நகரில் அமைந்துள்ளது. நீராவி எந்திரம் 19ம் நூற்றாண்டில் பரவலான பயன்பாட்டிற்கு வந்த பின்னர் விண்ட்மில் இயந்திரத்தைப் பயன்படுத்தி தானியங்களை அரைப்பது என்பது குறைந்து விட்டது. லைடன் நகரை எடுத்துக் கொண்டால், நீராவி இயந்திரங்களின் வருகைக்குப் பின்னர் எஞ்சி நிற்கும் ஒரே ஒரு பழமையான, பயன்பாட்டில் இருந்த ஒரு விண்ட்மில் இது எனச் சொல்லலாம். 

    1883ம் ஆண்டில் லைடன் நகரில் De Sleutels என்ற பெயர் கொண்ட மாவு உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவர் இந்த டெ வாக் விண்ட்மில்லின் உரிமையாளராவார். இந்த De Sleutels தான் லைடனிலேயே மிகப் பெரிய மாவு உற்பத்திசாலை என்ற சிறப்புடன் திகழ்வது. 

    லைடன் நகரை எடுத்துக் கொண்டால் 16ம் நூற்றாண்டு தொடக்கம் வரை விண்ட்மில் மாவு ஆலைகள் அனைத்தும் நகருக்கு வெளிப்புறத்தில் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஆக, மாவு அரைத்துக் கொண்டு வருவதற்கோ அல்லது வாங்குவதற்கோ மக்கள் நகருக்கு வெளியே சென்று வாங்கி வரும் நிலையே இருந்தது. பின்னர் 1573 வாக்கில் நகருக்கு உள்ளேயே புதிய விண்ட்மில்கள் கட்டப்பட்டன. இதற்கு மக்களின் பாதுகாப்பு அம்சங்களே முக்கியக் காரணமாக அமைந்தன. லைடன் நகர் போரில் வெற்றிபெற்றுத் தனி நகரமாக வளரத் தொடங்கிய 1574ம் ஆண்டில் இந்த நகரம் புதுப் பொலிவுடன் வளர்ச்சியைக் காணத்துவங்கியது. சோள மாவு ஆலை, தானிய ஆலை எனப் பல தொழிற்கூடங்கள் முளைக்கத் தொடங்கின. ஆலைகளுடன் துணிகளும் ஆடைகளும் தயாரிக்கும் தொழிற்கூடங்களும் உருவாக்கம் கண்டன. 

    suba2

    1611ம் ஆண்டில் லைடன் மாநகரம் சீரமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட சமயத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த டெ வாக் விண்ட்மில். பயன்பாட்டில் இருந்த இந்த விண்ட்மில் 1743ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. மரத்தால் செய்யப்பட்ட விண்ட்மில் காற்றாடிகள் மட்டும் இருக்க, அதன் உடல் பகுதி முழுமையும் மரத்திற்குப் பதிலாக கற்களைக் கொண்டு கட்டப்பட்டன. இப்பணி இரண்டரை மாதத்தில் நிறைவு பெற்றது. 1869ம் ஆண்டு வரை இரண்டு குடும்பங்கள் இந்த விண்ட்மில்லின் உரிமையாளராக இருந்திருக்கின்றனர். அதன் பின்னர் இது வான் ரெயின் குடும்பத்தாருக்குச் சொந்தமாகியது. பீட்டர் வான் ரெயின் இந்த ஆலையைத் திறமையுடன் நடத்தி வந்தார். இங்கு முக்கியமாகச் சோளம் உடைத்து மாவாகச் செய்யும் பணி நடந்து வந்தது. அவரது மேற்பார்வையில் இருந்த சமயத்தில், அதாவது 1869 முதல் 1889 வரை மிகுந்த லாபத்தை ஈட்டித்தந்த மாவு ஆலையாக இந்த விண்ட்மில் இருந்தது. 

    suba3

    இந்தக் காலகட்டத்தில் தான் மாவு உற்பத்தி செய்யும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் பல நிறுவப்பட்டன. இது டெ வாக் போன்ற விண்ட்மில் மாவு அரைக்கும் இயந்திரங்களுக்குப் போட்டியை உருவாக்க ஆரம்பித்தது. இந்தப் போட்டியைச் சமாளிக்க எலெக்ட்ரிக் இயந்திரங்கள் இந்த டெ வாக் மாவு இயந்திரத்தில் 1923ம் ஆண்டு முதல் இணைக்கப்பட்டது. ஆனால் அது நல்ல பலனை உருவாக்கவில்லை. 

    முழுமையான புது வடிவமைப்புப் பணிகள் 1947ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.இதன் தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் இந்த மாவு ஆலை பயன்பாட்டில் இருந்து வந்தது. 1965ம் ஆண்டு இதன் உரிமையாளர் வில்ஹெல்ம் வான் ரெயின் காலமான பின்னர் இந்த டெ வாக் விண்ட்மில் அருங்காட்சியகமாக உருபெற்றது. 

    suba4

    ஆறு தளங்களில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. உள்ளே நுழைந்தால் முதலில் வருவது அலுவலகம். அங்குக் கட்டணம் செலுத்திவிட்டு டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு தளமாக மரப்படிகளில் ஏறிச் சென்று இதனை முழுமையாகக் காணலாம். முதல் தளத்தில் நல்லதொரு தங்கும் விடுதி அறை போல ஓர் அறை அமைந்திருக்கின்றது. ஒரு விண்ட்மில்லின் உள்ளே இருக்கின்றோம் என்ற சிந்தனையே எழாதவாறு இந்தத் தளத்தின் அமைப்பு அமைந்துள்ளது. மேசை நாற்காலிகள், சுவர் சித்திரங்கள், அதன் உரிமையாளரின் பழைய புகைப்படங்கள் என இங்குள்ள அனைத்துமே இத்தகைய சிந்தனையை எழுப்புவதாக உள்ளன. 

    suba5

    அடுத்தடுத்த தளங்களில் இந்த அருங்காட்சியகத்தில் மாவு அரைக்கப் பயன்படுத்தப்பட்ட கல் இயந்திரங்கள், மற்றும் பல கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படியே படிப்படியாக விளக்கக்குறிப்புக்களை வாசித்துக் கொண்டே ஆறாவது தளத்தைக் கடந்து சென்றால் விண்ட்மில் காற்றாடி இருக்கும் தளத்தின் வெளிப்புறத்திற்கு அங்குள்ள கதவினைத் திறந்து அதன் வழியே வரலாம். வெளியே நின்று காற்றாடியின் முழுப் பரிமாணத்தையும் மிக அண்மையில் நின்று நாம் காண முடியும். காற்றின் வேகத்தைப் பொறுத்து காற்றாடிச் சுற்றிக்கொண்டிருப்பதை மிக அண்மையில் இருந்தவாறு நாம் பார்த்து ரசிக்கலாம். மேலிருந்து நோக்கும் போது லைடன் நகரையும் கண்களுக்கு எட்டிய தூரம் வரைப் பார்த்து ரசிக்கலாம். 

    நெதர்லாந்து நாட்டிற்கு வருபவர்கள் தவறாமல் சென்று பார்க்க வேண்டிய ஓர் அருங்காட்சியகம் இது என்று சொல்வேன். ஏனெனில் நெதர்லாந்துக்கே சின்னமாகத் திகழும் விண்ட்மில் பற்றிய தெளிவான விளக்கங்களைத் தரக்கூடிய, இன்றைக்கு ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

    Share
  • தமிழ் சமுதாயம் 2067

    இன்னம்பூரான்
    14 05 2017

    ama

    தமிழகம் என்பது தரணி முழுதும் பரவியுள்ள தமிழர் உலகம். தமிழ் நாடு என்பது திருவேங்கட மலையை வட எல்லையாகவும், மூன்று கடல்களை மற்ற மூன்று எல்லைகளாகவும் கொண்ட பிராந்தியம். தமிழ் தமிழர்களின் தாய்மொழி. எனவே, தமிழ் சமுதாயத்தை உலகளாவிய மக்கள் கூட்டமாகவும் , தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் மட்டுமே என்று இரு கோணங்களில் காணமுடியும். டாக்டர் சுபாஷிணி தமிழர் என்பதில் ஐயமில்லை. அவர் தமிழ் நாட்டில் பிறக்கவும் இல்லை; அங்கு வசிக்கவும் இல்லை. தமிழின் மேலாண்மையை உணர்ந்த மதுரையில் வாழும் டாக்டர் பாண்டியராஜா, தமிழ் மொழிக்கே தன்னை அர்ப்பணித்த தமிழர் என்பதில் ஐயமில்லை.

    சூழ்நிலை பொருட்டு தமிழே அறியாத தமிழர்களும் உண்டு. பல இடங்களில், அவர்களின் தமிழார்வத்தை காண்கிறேன். மற்ற நாடுகளிலிருந்து வந்து தமிழராக மாறி விட்டவர்களும் உண்டு.

    நம்மிடம் மொழி பற்று இருப்பது நியாயம் தான். மொழி வெறி தான் கூடாது. தமிழர் என்ற இனப்பற்று இல்லாவிடின், நாம் தாய்மொழியை இழந்துவிடுவோம். அதுவே இனவெறியாக மாறினால், நம்மையும் கூட இழந்து விடுகிறோம். சுருங்கச்சொல்லின், பற்றுக்கோல் வழி நடத்தும். வெறியாட்டம் வழியை மறிக்கும். இந்த தொடரின் மைய கருத்து இது தான்.

    தமிழகம் தமிழரை பற்றியும், தமிழ்நாட்டை பற்றியும் அன்றாடம் நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளவேண்டும், விழிப்புணர்ச்சியுடன் நுட்பங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டும். அவ்வப்பொழுது தமிழ் நாட்டுக்கு பல வகைகளில் உதவவேண்டும். தமிழ் நாட்டுமக்களுக்கு தற்காலம் நன்றாக அமையவில்லை. ஆட்சியில் பல இன்னல்கள். செங்கோலாட்சியை தவறவிடுவதில், மக்கள் மிகுந்த ஈடுபாடுடன் செயல் பட்டுள்ளனர், ஐம்பது வருடங்களாக, படிப்படியாக சல்லிக்காசிலிருந்து பல கோடி ரூபாய் வரை. நாட்டிலும், உலகிலும் நமக்கு நல்ல பெயர் இல்லை. இங்கே என்ன என்ன தடுமாற்றங்களும், குழப்பங்களும் நடக்குமோ என்று மற்றோர் கவனித்து வருகிறார்கள். எல்லா துறைகளிலும் தலை குனிவு. முதற்கண்ணாக தமிழ் மொழியை பேணுவதில் செயல்படாத ஆணைகளும், தீர்மானங்களும். அதற்கு காரணம் உதட்டசைவை காரியத்தில் காட்டாத நடப்பு. அத்தகைய போலி வாழ்க்கையை எங்கும் காண்கிறோம். போலி மருத்துவர்களை சமுதாயம் காப்பாற்றுகிறது. கலப்படம் செய்பவர்கள் – பாலுடன் நீர், நீருடன் மாசு, மாசு கலந்த காற்று. ஐம்பூதங்களையும் கலங்க அடிக்கும் மனித பிசாசு, நமது சமுதாயத்தில், நம் கண் முன் அட்டூழியங்கள் செய்தவாறு, பீடு நடை போடுகிறான். கல்வித்துறையில் காலூன்றிய பணமுதலைகள், ‘படிப்பு தான் முக்கியம்’ என்று வாழ்ந்த மக்களை, பல ஊழல்களில் இழுத்து வைத்து, கல்வி என்ற சொல்லையே அவமதித்து விட்டனர். இத்தகைய சிலந்தி பின்னலில் தன்னை மாட்டிக்கொண்ட தமிழ் சமுதாயம் ஐம்பது வருடங்களுக்கு பிறகு எப்படி இருக்கும் என்ற வினா எழுவது இயல்பே. இப்படியே எழுதி கொண்டு போனால், அது எத்தனை தேவையான வினா என்பதை தெரிந்தும், வாசகர்களில் சிலர் ஓடி விடலாம் என்ற அச்சத்தில் ஒரு நற்செய்தியை பற்றி குறுக்கு சால் ஓட்டிவிட்டு, அடுத்த தொடரில், பின்னூட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தொடருவோமாக.

    நற்செய்தி:

    ஶ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தின் அருகில் உள்ள கோபால ஐயங்கார் மெஸ் மிகவும் பிரபலம். திரு.கோபாலன் கல்லாபெட்டி மேஜை மீது மிகவும் புனிதமாக கருதி வைத்திருப்பது இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகள் (இன்று கலைக்டர் மார்க்கட்டில் அதற்கு மவுசு அதிகம்!); அத்துடன் ஜனாப் பாஹவுதீந் கபியா பேகம் நிழற்படங்கள். ஐம்பது வருடங்கள் முன்னால், மதுரை காஜிமார் தெரு இஸ்லாமியருக்கு இவர்கள் குடும்பம் நெருக்கம், இரு வீட்டு குழந்தைகளும் இரு வீட்டிலும் வளர்ந்தனர். அத்தகைய பாசம், மதவெறி இல்லாத, மதப்பற்றை விடாமல் போற்றி வந்த மதநல்லிணக்கம் திரும்ப வரவேண்டும். முழுவிவரம் 16 05 2017 தேதியிட்ட தி இந்து இதழில் கிடைக்கும்.

    என் சிறுவயதில் அண்டை வீடு தலைமை ஆசிரியர் யாகூப் கான். பொதுக்கிணறு. அவருடைய மகள் நம் வீட்டு சமைலறையிலிருந்து சுவாதீனமாக வாப்பாவிற்கு ரசம் எடுத்துச்செல்வாள். இது நடந்தது அறுபது வருடங்கள் முன்னால். அண்மையில் பாண்டிச்சேரியில் தமிழாய்வு செய்து வரும் முனைவர் விஜயவேணுகோபால் என்னிடம் எங்கள் தலைமை ஆசிரியர் யாகூப் கான் என்று பெருமிதமாக கூறிய போது, நான் அவருக்கு சீனியர் என்றறிந்து, இருவரும் எங்கள் ஆசானை போற்றினோம்.

    மத நல்லிணக்கம் எல்லா நல்லிணக்கங்களுக்கும் அடிதளம். தமிழ் சமுதாயத்தில் தற்காலம் சகிப்புத்தன்மை குறைவு. காழ்ப்புணர்ச்சி வெள்ளம். சாதிப்பிரிவினை அரசியலை ஆண்டு வருகிறது. சாதி பேதம் எங்கும் தென்படுகிறது. 2067ல் நாம் எப்படி இருப்போம்? முன்னோட்டம் என்னவாக இருக்கும்? பின்னடைவு என்னவாக இருக்கும்?

    சித்திரத்துக்கு நன்றி:

    http://gbgerakbudaya.com/home/wp-content/uploads/2017/03/9789814695756.jpg

    Share
  • எழிலரசி கிளியோபாத்ரா -11

    -சி. ஜெயபாரதன்

    jaya1

    அங்கம் -2 பாகம் -11

    மேலங்கியை மாட்டு! எனக்கு மகுடத்தைச் சூட்டு!

    மேலோங்கி எழுகிற தெனக்குள் தெய்வீக வேட்கை! …

    (கிளியோபாத்ரா)

    கடவுளுக் களிக்கும் சுவைத் தட்டு
    மடந்தை யவள் என்று நானறிவேன்,
    உடல் மீது பிசாசு அவளுக்கு
    ஆடை அணியா விட்டால்!

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

    “ஆத்ம உள்ளுணர்வுக் கைகளோடு ஒன்றி உழைக்கா விட்டால், உன்னதக் கலைகளைப் படைக்க முடியாது.”

    “மேதையர் சில சமயங்களில் பணிப்பாரம் குறைவாக உள்ள போது மேலானவற்றைச் சாதிப்பார்! அப்போதுதான் அவர் தமதரிய கண்டுபிடிப்புகளைச் சிந்தித்து, ஓர் உன்னதக் கருவை விரிவாக்கி அவரது கைகள் அதனைப் பிறகு ஓவியமாக்கி வெளிப்படுத்துகின்றன.”

    லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

    “பளிங்குக் கல்லில் ஒரு தேவதையை (ஞானக் கண்ணில்) நான் பார்த்தேன். அதனைக் கல்லில் செதுக்கி அவளுக்கு விடுதலை அளித்தேன்.”

    “அழகுணர்ச்சியைப் புறக்கணிப்பது போல அல்லது அதைப் பற்றி அறிய மறுப்பது போல, கவர்ச்சியான ஒன்று மாந்தருக்குத் துயர் கொடுப்பது வேறு எதுவு மில்லை!”

    மைக்கேலாஞ்சலோ ரோமானிய ஓவிய மேதை (1475-1564)

    ++++++++++++++++++

    கதைச் சுருக்கம்:

    கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

    முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

    ++++++++++++

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

    காட்சி அமைப்பு:

    கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள்.

    ++++++++++++++++++

    கிளியோபாத்ரா: [அருகில் நெருங்கி மிக்கக் கனிவுடன்] ஆனாலும் அவன் உங்கள் மகன்! ரோமானிய மாது கல்பூர்ணியா அளிக்க முடியாத ஆண் பரம்பரையை, எகிப்தின் கிளியோபாத்ரா ஆக்கித் தருகிறாள்! மாவீரர் சீஸரே! நீங்கள் ரோமுக்கு மீள்வதைச் சற்று தள்ளிப் போடுங்கள்! எனக்கு உங்கள் கையால் எகிப்து மகாராணி என்று முதலில் மகுடம் சூட வேண்டும்! என் மாளிகையில் எனது சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும்! எனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகவை உங்கள் ஆசைக் கரங்களில் முத்தமிடக் கொடுத்து நான் ஒப்படைக்க வேண்டும்! அதன் பிஞ்சு வாயில் தவழும் புன்னகையை நீங்கள் மனதில் படமெடுத்துக் கொண்டு ரோமாபுரிக்குச் செல்ல வேண்டும்.

    ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்கிறேன். எனக்கு ஆண்பிள்ளை வேண்டுமென்று வெகு நாட்களாக ஆசை யிருப்பது உண்மை. அந்த ஆசையை என் மனைவி கல்பூர்ணியா பூர்த்தி செய்ய முடியவில்லை. அந்த ஆசையை நீ நிறைவேற்றுவாய். ஆனால் என் ஏக மகனை ஆசை நாயகியின் மோகப் பிள்ளை எனப் பலர் ஏசுவதை நான் விரும்பவில்லை.

    jaya2

    கிளியோபாத்ரா: அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறேன். உங்களை நான் மணந்து நமக்குப் பிறக்கும் பிள்ளை சட்டப்படி உதித்த உங்கள் மகனென்று சரித்திரம் சொல்ல வைப்பேன். கிளியோபாத்ராவுக்கும், சீஸருக்கும் பிறந்த பட்டத் திளவரசன் என்று எகிப்தின் மாந்தர் பாராட்டுவார்! ரோமாபுரியின் எதிர்கால வேந்தன் என்று ரோமானியர் கொண்டாடுவார்! அது மட்டுமல்ல, உங்களை நான் எகிப்தின் மன்னராகவும் அறிவித்து விடுகிறேன்!

    ஜூலியஸ் சீஸர்: [மன மகிழ்ச்சியுடன் ஆனால் சற்று தயக்கமுடன்] கண்ணே கிளியோபாத்ரா! என்னை மணந்து நீ ஓர் ஆண்மகனைப் பரிசாக அளிப்பதே எனக்குப் போதும்! நான் ஒரு ரோமன்! நான் ·பாரோ கடவுள்களின் பரம்பரையில் வந்தவன் அல்லன்! என்னை எப்படி எகிப்துக்கு மன்னன் ஆக்குவாய் நீ! அந்த மதிப்பு எனக்குத் தேவையு மில்லை! எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ரோமாபுரிக்கு யார் அதிபதியாயினும் அவரே எகிப்துக்கும் தளபதி! அதை நீ அறிவிக்கத் தேவையில்லை! பிறக்கும் மகனைப் பார்த்த பிறகே நான் ரோமாபுரிக்குப் போக ஏற்பாடு செய்யவேன். அங்கே நிரம்ப வேலை இருக்கிறது எனக்கு!

    கிளியோபாத்ரா:  ஃபெரோ மன்னரின் பரம்பரைப் பாவையான நான், உங்களை எகிப்துக்கு மன்னராக்குவேன், கவலைப்பட வேண்டாம். அலெக்ஸாண்டிரியாவில் சில நாட்கள் ஓய்வெடுங்கள். மாபெரும் வேந்தர் சீஸரின் அருகில் நான் உள்ள போது, நீங்கள் ஒரு வேலையும் செய்யத் தேவை யில்லை! மன்னர்களுக்கு வேலை யில்லை! மன்னர்கள் வேலை செய்யக் கூடாது!

    ஜூலியஸ் சீஸர்: யார் சொல்வது, மன்னருக்கு வேலை யில்லை என்று? வாலிப ராணி கிளியோபாத்ராவுக்கு வேலை யில்லை! அதே போல் வயோதிக சீஸருக்கும் வேலை யில்லை என்பதா? வேடிக்கையாக இருக்கிறதே!

    கிளியோபாத்ரா: எகிப்தில் என் தந்தை சில ஆண்டுகள் மன்னராக இருந்தார்; அவர் என்றைக்கும் வேலை செய்ததில்லை. அவர் மாபெரும் மன்னரே! ஆனால் மிகவும் பொல்லாதவர்! புரட்சி செய்து நாட்டைப் பிடுங்கி அரசாண்ட, என் மூத்த சகோதரியின் கழுத்தை அறுத்தவர்!

    ஜூலியஸ் சீஸர்: அப்படியா? பிறகு நாட்டை மீண்டும் எப்படிக் கைப்பற்றினார், உன் தந்தை?

    கிளியோபாத்ரா: [கண்களில் ஒளிவீசப் புன்னகையுடன்] எப்படி என்று சொல்லவா? பாலை வனத்தைக் கடந்து பராக்கிரமம் மிக்க ஒரு மன்மத வீரன் பல குதிரைப்படை ஆட்களோடு வந்தார்! தமக்கையின் கணவரைக் கொன்றார்! தந்தையை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமரச் செய்தார்! அப்போது எனக்கு வயது பன்னிரண்டு! அந்த வாலிபர் என் கண்ணுக்குள்ளே நின்று காட்சி அளிக்கிறார்! மீண்டும் இப்போது வந்தால் ஆனந்தம் அடைவேன்! நானிப்போது பட்டத்து அரசி! அப்படி வந்தால் அவரை என் கணவராக்கிக் கொள்வேன்!

    ஜூலியஸ் சீஸர்: [ஆர்வமுடன்] அப்படியானால் என்கதி என்னவாகும்? நான் உன்னைத் திருமணம் செய்யப் போகிறேனே! ஆண்மகவு ஒன்றைக் கூட எனக்குப் பரிசாக அளிப்பதாகக் கூறுகிறாய்!

    கிளியோபாத்ரா: அந்த வாலிபர் என் வயதுக் கேற்றவர்! நீங்கள் என் வயதுக்கு மீறிய வயோதிகர்! பிறக்கும் என் ஆண்மகவின் தந்தை நீங்கள்! ஆனால் எனக்குப் பொருத்த மில்லாதவர்! பிறக்கப் போகும் நமது மகனுக்குத் தந்தை சீஸர் என்பதை ரோம சாம்ராஜியத்துக்கு அறிவிக்கவே உங்களைத் திருமணம் செய்ய உடன்படுகிறேன்! ரோமாபுரியில் உங்கள் மனைவி கல்பூர்ணியா, உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கிறாள். வயோதிகரா அல்லது வாலிபரா என்று என்னைக் கேட்டால், யாரை நான் கணவனாக தேர்ந்தெடுப்பேன்? ஐயமின்றி ஓர் வாலிபரைத்தான்!

    ஜூலியஸ் சீஸர்: [சட்டென] உன் கற்பனை வாலிபனும் ஏற்கனவே திருமணம் ஆனவன்தான்!

    கிளியோபாத்ரா: அப்படியா? மீன் குஞ்சிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவை யில்லை! அவளுடைய இடத்தைப் பிடிக்க எனக்குத் தெரியும். அந்த வாலிபர் என் கண்வலையில் சிக்கி விட்டால், மீண்டுமவர் தன் மனைவியைக் கண்டு கொள்ள மாட்டார்! என் மந்திரக் கண்களின் தந்திரப் பிடியிலிருந்து அவர் தப்ப முடியாது! விளக்குத் தீயை ஆராதிக்கும் எந்த விட்டிலும் தீபத்திலே எரிந்து சாம்பலாகும்! [மிக்க ஆர்வமுடன்] அவரது உண்மைப் பெயரென்ன? உங்களுக்குத் தெரியுமா? மீண்டும் அவரை அலெக்ஸாண்டிரியாவுக்கு அழைத்து வரச் செய்ய முடியுமா?

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] முடியும், என்னால் முடியும். முதலில் உன் தந்தைக்கு உதவி செய்ய அந்தக் கவர்ச்சி வாலிபனை அனுப்பியவன் நான்தான்!

    கிளியோபாத்ரா: [சீஸரை நெருங்கி] அப்படியா? அந்த வசீகர வாலிபனை உங்களுக்குத் தெரியுமா? அவர் பெயரென்ன கூறுவீரா? உங்களை விட வயதில் சிறியவர்தானே! உங்களுடன் இப்போது வந்திருக்கிறாரா?

    ஜூலியஸ் சீஸர்: இல்லை! என்னுடன் வரவில்லை. ஆம், அவன் என்னை விட வயதில் சிறியவன்தான். அந்த வாலிபன் பெண்களின் வசீகரன்! உன்னைப்போல் அவன்மீது கண்வைத்திருக்கும் பெண்கள் அநேகம்! நீ அவனை மோகிக்கிறாய்! அவனுக்கு உன்னைப் பிடிக்குமா என்பது எனக்குத் தெரியாது! வசீகர வாலிபருக்கு ஒரு வனிதைமேல் மட்டும் வாஞ்சை உண்டாகாது! அவருக்கு ஆயிரம் வனிதைகள் உள்ளார்! ஆயிரத்தில் ஒருத்தியாக நீ யிருக்க விரும்புகிறாயா?

    jaya3

    கிளியோபாத்ரா: நான் ஆயிரத்தில் ஒருத்தியான ஆசைநாயகி யில்லை! ஆயிரத்தில் முதல்வி, அவரது ஆசை மனைவியாக வாழ்வேன்! அவர் என்னைக் காதலித்தால், அவரை என் வசப்படுத்தி மற்ற ஆசை நாயகிகளைக் கொல்லும்படிச் செய்வேன். சொல்லுங்கள் அவர் பெயரை! சொல்லுங்கள் எங்கிருக்கிறார் என்று! நான் அவரை நேசிக்கிறேன். அவர் என்னை விரும்புகிறாரா என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஜூலியஸ் சீஸர்: அவன் ஒரு காப்டன். குதிரைச் சவாரி வீரன்! ரோமாபுரிப் பெண்டிரின் கனவு மைந்தவன் அவன்!

    கிளியோபாத்ரா: [கெஞ்சலுடன்] அவர் உண்மைப் பெயரென்ன கூறுங்கள்! அவர் என் தெய்வம். நான் அவரை அழைப்பது, “ஹோரஸ்” [*1] என்றுதான்! எங்களுடைய கடவுள்களில் ஹோரஸ்தான் மிக்க எழிலான கடவுள். ஆனால் அவரின் உண்மைப் பெயரை அறிய ஆவல்.

    ஜூலியஸ் சீஸர்: அவன் பெயர்தான் மார்க் ஆண்டனி! ரோமின் மாவீரன் மார்க் ஆண்டனி! என் பிரதமச் சீடன், மார்க் ஆண்டனி! எனக்காக உயிரைக் கொடுக்கவும் அஞ்சாத மார்க் ஆண்டனி!

    கிளியோபாத்ரா: [மனம் நெகிழ்ந்து இசையோடு உச்சரித்து] ஆஹா! மார்க் ஆண்டனி! என்ன அழகிய பெயர்! மார்க் ஆண்டனி! உங்களுக்குச் சீடன்! ஆனால் எனக்குத் தேவன்! மார்க் ஆண்டனி! உங்களுக்காக உயிரைக் கொடுப்பவர்! ஆனால் மார்க் ஆண்டனிக்காக நான் உயிரைக் கொடுப்பேன்! எங்கே உள்ளார் மார்க் ஆண்டனி? அழைத்து வாருங்கள் மார்க் ஆண்டனியை! சீஸர், கனல் பற்றி எரியும் நெஞ்சில், பாலை வார்த்தீர்கள்! அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்து என்னைக் காண ஏற்பாடு செய்வீரா?

    ஜூலியஸ் சீஸர்: [சற்று தயக்கமுடன்] மார்க் ஆண்டனி ரோமாபுரியில் உல்லாசமாக இருக்கிறான்! அலெக்ஸாண்டிரி யாவுக்கு ஆண்டனியை அழைத்து வருபது எளிய தில்லை! நான் போனால்தான் அவன் வருவான். ரோமாபுரிக்கு நான் போய்த்தான் அவனை அனுப்ப வேண்டும்! நான் ரோமுக்குப் போனால் எகிப்துக்குத் திரும்ப மாட்டேன்! ஆண்டனி எகிப்துக்கு வந்தால், அவன் ரோமுக்கு மீள மாட்டான்!

    *********************

    [*1] “ஹோரஸ்” [Horus is the Sun God of the Egyptians]

    +++++++++++++++++++

    Share
  • வல்லமைக்கு வாழ்த்து..!

     

    எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “வல்லமைக்கு” வாழ்த்து::

    =============

    av

    சிந்தனை செயல் முன்னேற்ற மெனும்..
    சீரிய நோக்கில் ஆண்டேழைக் கடந்து..

    எடுத்துக் கொண்ட மூன்றிலக்கை முற்றாக..
    எட்டுமுன் நோக்கோடு பட்டுச் சிறகுவிரித்து..

    எட்டா மாண்டிற்குள் நுழைந்து மேலும்
    எட்டு திக்கிலும்நீ பறக்க வேண்டும்..!

    மின்னி தழோடு நில்லாமல் தழைத்துமேலும்..
    மின்னு மிதழாக நானிலத்தில்நீ வரவேண்டும்..!

    எட்டாதிருக்கும் இனியபல கனியை இனி..
    எட்டிப் பறித்திட இணைந்து முயல்வோம்..!

    மற்றை ஒவ்வொன்றாக எட்டும் முன்னே..
    ஒற்றை எட்டில் அடுத்ததை எட்டுவோம்..!

    வலிய தமிழாலே உறவெமக்கு உண்டென்றாலது..
    வல்லமைக்கு ஈடாக வேறேதும் இல்லையன்றோ..!

    தேன்தமிழை தேசம்விட்டு தேசம் சென்று..
    மின்இதழால் வாசம் பரப்பும் வலையன்பருக்கும்..

    வல்லமைக்கும் வாழ்த்துச் சொல்லி தமிழால்..
    வலு சேர்க்கும் வண்ணம்நாம் ஒன்றிணைவோம்..!

    வல்லமையெனும் தமிழ்த்தேர் உலகெலாம் வலம்வர..
    வளமிக்க தமிழுடன் வடம்பிடிக்க வாரிர்வலிமையுடன்..!

    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

    Share
  • பெண்ணடிமை

     

     

    தலையாட்டி பொம்மைகளா நினைக்கும் நிலைமையா ?

    தாய்க்குலத்தின் வாய் பேசா வனிதையா ?

    சாவி கொடுத்தால் சலங்கை ஒலி தாலமிடத்

    தாவி ஓடும் பாவைகளா!

     

    தன் ஆசைகளை, புதைத்து வைத்து வெளியிடமுடியாத ஊமை

    பணம் இருந்தும், அதனை செலவு செய்ய முடியாத நிலைமை

    திரைப்படங்களில் வரும் தேனிலவு ,

    வானிலவுத் தேவதைகளா !

     

    தொப்புள் கொடி அறுந்ததும் அப்பனுக்கு அடிமை,

    தாலிக்கொடி யேறியதும் கணவனுக்கு அடிமை,

    வேலைக்கு போன ஊழியத்தில் மேலதிரிகாரிக்கு அடிமை,

    முதுமையடைந்ததும், பிள்ளைகளுக்கு அடிமை !

     

    வாழ்க்கையில் உனக்கு இல்லாத பட்டமா !

    விதவை, மலடி, உடன்கட்டை ஏறுடி,

    வரதட்சணை வர்த்தகி !

     

    வரதட்சணை கொடுக்காதவளை கண்டாலே காஸ் அடுப்பு வெடிக்கும்

    தட்டிக் கேட்க யார் வந்தாலும் பணத்தினால் மூடி மறைக்கும்!

     

    புகுந்த வீட்டில் மாமியாருக்கு அடிமை,

    ஆணைப் பெற்றவளும் நீதான்

    பெண்ணைப் பெற்றவளும் நீதான்

    ஆயினும், வீடும்,நாடும் உனக்கு பொல்லாத சிறைதான் !

     

    தலையாட்டம் நின்று, தலை நிமிர்ந்து

    என்று வீதியை எதிர்க்கின்றாயோ

    அன்றுதான் உனக்கு விடுதலை பெண்ணே !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

     

    ’’புள்ளேறி சாரங்க பாணி வருகின்றார்-
    கள்ளூறும் கூந்தலாள் கோமள -வல்லிகேள்வர் –
    ஆரா அமுதர் அடியேன் குலக்கடவுள்: –
    வாராய் வினைதீர்க்கும் வில்’’….கிரேசி மோகன்….எனது தாத்தா ‘’கும்பகோணம் கோமளவல்லி நாயிகா சமேத ஆரா அமுதா’’ என்று சொல்லாமல் இரவு உறங்கியது கிடையாது….நன்றி கேசவ்….!

    தனந்த தானனத்த தனந்த தானனத்த
    தனந்த தானனத்த -தனதான
    கும்பகோணம்

    ———————

    பெருமாள் திருப் புகழ்….

    “அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்
    கிருந்த வாறிருக்க -ரமணேசர்
    புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை
    நெருங்க ஞானவித்தை -அருள்வாயே
    அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
    அமைந்த யோகநித்ரை, -வனமாலி
    சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய
    இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே
    தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு
    இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
    தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள்
    முகுந்த வாவகத்துள் -குடியேற
    புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில்(கருட வாகனத்தில்)
    பறந்து வாயெனக்கு -துணையாக
    உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும்
    குடந்தை மாநிலத்து -பெருமாளே”….

    Share
  • பிள்ளைத்தமிழின் அழகின் அலைகள்

    மீனாட்சி பாலகணேஷ்

    மூவுலகங்களையும் தன் கருணையினால் ஆளும் அன்னை பராசக்தி இரத்தின சிம்மாசனத்தில் கொலுவீற்றிருக்கிறாள். சாமரம் வீசும் சேடியர் ஒருபுறம். அவளுடைய தரிசனத்துக்காக அலைமோதும் மற்ற அரசர்களின் கூட்டம் இன்னொருபுறம். ஈரேழு உலகங்களும், வானும் புவியும் வணங்கியெழும் அன்னை பராசக்தி இவளல்லவோ? இவளுடைய கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்கின்றது அடியார் கூட்டமும், முனிவர்கள், தொண்டர் குழாமும். அடியார் குறைகளைக் கேட்டு அக்குறைகள்தீர தீயரை வீட்டி, தன்னை மேவினர்க்கின்னருள் செய்துகொண்டிருக்கிறாள் அன்னையிவள்! ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்கிறாள்!

    ame

    இவளது இச்செய்கையை பாரதியாரும்,

    ‘அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய்- தனைச்
    செறுவது நாடி வருபவரைத் துகள் செய்து கிடத்துவள் தாய்,’ எனப் போற்றுகிறார். அத்துணை புகழ்வாய்ந்தவள் இந்தப் பேரரசியான அன்னை!

    திடீரென இவளுடைய அரண்மனை வாயிலில் பரபரப்பு. ஏவலரும் சேவகரும், வாய்பொத்தி, கைகட்டி வழிவிட்டு விலகுகின்றனர். பொலியும் கம்பீரமும், யாரையும் சட்டை செய்யாத தன்மையும் கொண்ட ஒருவன், புலித்தோலாடையும், சடைமுடியும், கையிலேந்திய திரிசூலமும், நீறுபூசிய உடலும், அவ்வுடலெங்கும் தவழ்ந்து அணிசெய்யும் நாகங்களுமாக இதழ்களில் தவழும் குறுநகையுடன் அரசவைக்குள் நுழைகிறான். இவன் முப்புரங்களையும் எரித்த சிவபிரானல்லவா?பிரமனும் திருமாலும் அடிமுடி தேடியறியாப் பரம்பொருள். அந்தப் பேரரசிக்கும் பேரரசன். அவளைத்தேடி வருகிறான்…….!

    பணிப்பெண்களும், சேவகர்களும் சிவபெருமான் வருகையை அறிவிக்க அன்னையை நோக்கி விரைகின்றனர். உலகின் எந்த மூலையில் நிகழும் செயலையும் அறிந்தவளல்லவா அவள்? தன் தலைவன் வருகையை அறியமாட்டாளா என்ன? அத்துணை பரபரப்பின் இடையிலும் அவள் கண்கள் அவன்வரவைக் கண்டுவிட்டன. அரசியானால் என்ன?

    ‘கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் கைதொழு வாள் எங்கள்தாய் – கையில்
    ஒற்றைத் திகிரிகொண்டேழுல காளும் ஒருவனை யுந்தொழுவாள்,’
    என்று பாரதி பாடிய அன்னையல்லவோ இவள்?

    அத்தகைய அன்னை தானே தனது காதற்கொழுநனை வரவேற்க எழுந்து விரைகிறாள். அது அவ்வளவு எளிதான செயலாக இல்லை!! ஏனென்றால் வழிதோறும் பணிந்துகிடக்கும் தேவர்களின் தலைகள்! அவற்றில் மணிமகுடங்கள்! பிரமனின் கிரீடம்! மது, கைடபன் எனும் அரக்கர்களைக் கொன்ற பெருமைகொண்ட திருமாலின் கனமான நவரத்தினங்கள் பதித்த மணிமுடி! இந்திரனின் மணிமுடி வேறொரு பக்கம்! இவற்றில் அவள் இடறிக்கொண்டு விட்டால் என்னாவது? கவலை கொண்ட சேடியர் அவளை எச்சரிக்கை செய்கின்றனர். “தாயே! பார்த்துச் செல்லுங்கள்! இவை எதிலாவது காலை இடறிக்கொண்டு விடப்போகிறீர்கள்,” என்கின்றனராம். யாராலுமே சிந்தித்தும் பார்க்க இயலாத இனிமையான பொருள்செறிந்த கற்பனை இதுவே!

    பொருட்செறிவு எதனால்? எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும் பணிவும் அடக்கமும் அன்பும் குறையாது நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அன்னையின் செயல் சான்றாகும். ‘மனையாள் அரசியானால் என்ன? நான் என் எளிமையில் இருந்து கொள்கிறேன்,’ எனப் புலித்தோலாடையணிந்து அலட்சியமாக நடந்து வரும் சிவபிரான், யாரும் வந்து தன்னை எதிர்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கவுமில்லை.
    சரி, நமது கட்டுரைக்கு வருவோம்.

    அழகின் அலைகள்- சௌந்தர்ய லஹரி- எனும் பெயர்கொண்ட நூறு ஸ்லோகங்களாலான இந்நூல், அன்னையின் அழகினை வருணித்து ஆதிசங்கரரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீரை கவிராஜபண்டிதர் எனும் தமிழ்ப்புலவர் இதனைப் பொருள்பிறழாது தமிழில் அழகுற மொழிபெயர்த்துள்ளார்.

    முதுமறைசொல் இளவனிதை அயனொடு அரிகுலிசன் உனை
    முறைபணியும் நெறியின் இடையே
    பதறி உனது அருகுவரும் அரனையெதிர்கொள
    பரிசனம் உன்னடி வளமையால்
    இதுபிரமன் மகுடம் அரிமகுடம் இது குலிசன்முடி
    இதுகடினம் மிடறும் இருதாள்
    சதியமர அமரவழி விலகிவர வர எமது
    கடவுள் எனும் மொழி தழைகவே.
    (சௌந்தர்யலஹரி-29- வீரை கவிராஜ பண்டிதர்)

    இத்தகைய அருமையான ஸ்லோகங்கள் கொண்ட இந்நூல் கற்பனை வளம் செறிந்து விளங்குவது. தொன்மங்களை இணைத்து, அன்னையின் பிரதாபங்களைக்கூறி வாழ்த்துவது ஒருவித நயமெனில், தமது நுண்ணுணர்வினால் மேலும் சிறந்த சில கற்பனை நிகழ்வுகளைப் புனைந்து இலக்கியத்திற்குச் சுவை சேர்ப்பது இன்னொரு நயம். வடமொழியிலிருந்து கருத்துக்களை எடுத்து இணைத்துக்கொண்டு தமிழில் இத்தகைய பாடல்கள் சிறந்து விளங்கி வருகின்றன. ஒரு சிறந்த கற்பனைக்கருத்தை, அக்காலக்கவியுலகம் ‘காபிரைட்’, செய்யவில்லை! இக்கருத்தினைச் சிறிது மாற்றம்செய்து தாமியற்றியுள்ள சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் நூலில் இணைத்துள்ளார் கோவை கவியரசு நடேச கவுண்டர் எனும் புலவனார்.

    அத்தகையவொரு பாடலே கீழே நாம் காணும் இப்பிள்ளைத்தமிழ்ப் பாடலாகும். இந்நூலில் இப்பாடல் சப்பாணிப்பருவத்தில் காணப்படுகிறது. இங்கு எவ்வாறு பொருந்துமென எண்ணி வியக்கிறோம். சப்பாணிப்பருவமானது வளர்ந்துவரும் சிறுகுழந்தையை இருகைகளையும் இணைத்துக் கொட்டி ஒலியெழுப்புமாறு தாய் வேண்டுவதாக அமையும்.

    அன்னை உமையின் அரசவை நிகழ்வுக்கும் கைகளைக்கொட்டி மகிழும் குழந்தைக்கும் என்ன சம்பந்தமிருக்கும்? இங்குதான் புலவரின் மதிநுட்பம் புலனாகிறது. சப்பாணிப்பருவத்தில் குழந்தையின் கைகளே பாடுபொருளாகின்றன. இப்பெரும் செயலைச் செய்த கைகளைக்கொண்டு சப்பாணி கொட்டுக! என வேண்டுவதே வழக்காகும். அதற்கேற்ப அன்னை தன் கைகளால் செய்த செயலை விளக்குகிறார் புலவர்.

    ‘பிரமனுடன் திருமால், இந்திரன் ஆகிய அமரர்கள் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் நீ உனது பொற்பாதங்களை வைத்திருக்கும் பீடத்தின்முன்பு நெடுஞ்சாண்கிடையாக, தங்கள் விலைமதிப்பற்ற மணிமுடிகள் தரையைத் தொடும்வண்ணம் பணிந்துகிடக்கிறார்கள்.

    ‘அச்சமயம் அரனாகிய சிவபிரான் உனைநாடி வருகின்றான்; நீயும் அரியணையினின்றும் எழுந்து அவனை வரவேற்க விரைகின்றனை அம்மையே! அவ்வாறு அவசரமாக நீ செல்லும் வேளையில் ‘உன்னை வழிபட்டுக் கிடப்போரின் மணிமுடிகள் காலில் இடறுமே,’ எனப் பணிப்பெண்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அந்த அமரர்களோ ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்; எழுந்திருப்பதாகக் காணோம்!

    ‘இதனாய் அன்னையே! நீ உன் பவளவாயால் அவர்களை, “எழுந்திருங்கள்,” என உரப்பி ‘படபட’வெனப் பங்கயச்செங்கை மலர்களைத் தட்டி எழுப்புவதுபோல, இப்போதும், சரசுவதி போற்றி வணங்கும் புகலி (சீர்காழி) நகரின் தலைவியே! சப்பாணி கொட்டியருளுகவே!

    ‘அனைத்து நலன்களையும் அடியார்க்கு அருளும் எம் அம்மையே! சப்பாணி கொட்டியருளுகவே!’ என வேண்டுவதாக அமைந்துள்ள நயம் வியப்பிற்குரியதாம்.

    சப்பாணி கொட்டும் குழவியாக அன்னையைப் பார்க்க வேண்டுமெனில் அவள் கைகளைத் தட்டும் நிகழ்ச்சியொன்றைத் தெரிவு செய்ய வேண்டும். தமது கற்பனையை சௌந்தர்யலஹரிப் பாடலில் சிறிது மாற்றம்செய்து இணைத்து இதனைக் கூறியுள்ளது பிரமிக்க வைக்கிறது.

    பிரமனொடு மால்புரந் தரனாதி யமரருன்
    பொற்பாத பீடிகைமுனர்ப்
    பெருவிலைய மணிமுடியின் மிசைவைத்த வஞ்சலி
    பிறங்கவீழ்ந் தேத்துகாலை
    அரனுன்முன ரணுகவர வரியணையி னின்றெழுந்
    தவனைவர வேற்குமாநீ
    அவசரப் படும்வேலை முடிகளடி யிடறுமென்
    றரமகளி ரெச்சரிக்கப்
    பரவசப் படுமமரர் அறியார் கிடப்பவுன்
    பவளவாயா லுரப்பிப்
    படபடத் தெழுமாறு கைதட்டு மாறெனப்
    பங்கயச் செங்கைமலரால்
    சரசுவதி பரசுமொண் புகலிநக ரமர்முதல்வி
    சப்பாணி கொட்டியருளே!
    சகலதல மெலாமுதவு திருநிலைச் செல்வியொரு
    சப்பாணி கொட்டியருளே!
    (சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- நடேச கவுண்டர்)

    இவ்வாறே இன்னும் சில புலவர்களும் பாடியுள்ளனர். அடுத்த அத்தியாயங்களில் கண்டு மகிழலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”அன்றானை காத்தவன், இன்றாவைக் காத்திட
    நின்றான்கோ வர்த்தனக் குன்றேந்தி -வென்றவன்,
    வேடமிட்டு வந்ததே வேந்திர ஆனையை
    மாடமர்த்தி ஏற்புமன்னிப் பூ(கமல மலர்)”….!

    “இம்மி அசையா(து) இமையோன் அகந்தை
    DUMMYயா கும்வரை தூக்கினான் -MUMMYயை;
    COUNT -DOWN கர்வபங்கம் காணும் வரைநின்றான்
    MOUNT -BATTLE FEILDல் மணி(மணி வண்ணன்)”….
    MUMMYயை -கோமாதாவை
    இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….

    “அகர முதலவன் ஆக்களைக் காக்க,
    சிகரமதை சுண்டுவிரல் சேர்த்து, -தகரமாட்.
    டுக்கொட்டாய் வேய்ந்தது, தேவர்கோன் கர்வபங்கம்:
    அக்குட்டன் பாகவதம் அன்று’’….கிரேசி மோகன்…

    Share