மீனாட்சி பாலகணேஷ்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
எட்டாத பேராசைக் கோட்டை கட்டி
புண்ணாக நெஞ்சம் புலம்பும் வண்ணம்…….. (பாபநாசம் சிவன்)

^^^^^^^^^^^^^^^^^^^^

ame

ஞாயிறு மாலை. மணி மூன்று என கடிகாரம் மூன்றுமுறை அடித்துத் தெரிவித்தது. பங்களா முழுவதும் நிலவிய நிசப்தத்தில் அந்த மணி ஓசை மண்டையில் ஓங்கி அறைவது போல ஒலித்தது.

பத்மாசனமிட்டுத் தன்னறையில் கார்ப்பெட்டில் அமர்ந்து கண்களை மூடியபடி, தன்னுள் ஆழ்ந்து, எதையோ தேடிக் கொண்டிருந்த ஷீலாவின் விழிகள் மெல்லத் திறந்தன. இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி ஒரு தியானத்தில் அவள் ஆழ்ந்து விடுகிறாள். உள்ளத்தைத் துருவித் துருவித் தேடுகிறாள். இப்போது தான் ஆரம்பித்த தேடல்- விடை அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுமா என்ன?

எழுந்து, பெரிய ஜன்னல்களை விரியத் திறந்து தோட்டத்தைப் பார்த்தாள். மாலையின் மஞ்சள் வெயிலில் எல்லாமே பொன்னிறம் கொண்டு துலங்கின. பளபளத்த பெரிய பொன்வண்டு ஒன்று தென்னம் பாளைகளில் ரீங்காரம் செய்தபடி மது அருந்தியது. இரு குருவிகள் ‘சிர்ப்’, ‘சிர்ப்’ என்றபடி ஒன்றை ஒன்று துரத்தி விளையாடின. ஒரு அணில்பிள்ளை கருமமே கண்ணாக பாதாம் கொட்டையைக் கடித்துக் கொண்டிருந்தது. உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது!

‘எத்தனை நாட்களாக நான் என்னைச் சுற்றி இருப்பவைகளை ரசிக்க மறந்திருக்கிறேன். ‘நான்’ என்பது தான் உயர்வு என்று அதைப் பிரதானமாக்கி நெஞ்சம் புண்ணாகும் வரை பேதலித்துப் போயிருந்தேனே. என்று நான் என் உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அன்பு பூண்ட கணவனையும் குழந்தையையும் விட்டு விட்டு எதையோ நாடி ஓடி வந்தேனோ,அன்றல்லவோ இந்தத் துயரத்தின் தொடக்கம்-

‘எதை நாடி வந்தேனோ, இன்னும் அது கிடைக்கவில்லையே. ஆனால் அதைத் தேடிக் கொண்டே இருந்தால், முடிவற்ற இந்தத் தேடலில் என் வாழ்வு முடிந்து விடும். பின்பு மிச்சம் இருப்பது என்ன?’ எங்கோ ஒரு தனிமைக் குயில் கூவியது. கும்’மென்று ஒருமுறை அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

முதலில் நாளைக்கு வக்கீலைப் பார்த்து சில முக்கியமான விஷயங்களை முடிவு செய்து பதிவும் செய்ய வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள். லேசான ஒரு நிம்மதி பிறந்தது.

‘ஜிம்மின் கேள்விக்கு என்ன விடை தரப் போகிறேன்? கீதாஞ்சலி, என் அருமைக் கண்மணி என்னிடம், தன் தாயிடம் என்ன எதிர் பார்க்கிறாள்? ஆடலரசுடன் இது பற்றிப் பேச வேண்டும்,’ என எண்ணிக் கொண்டாள்.

போர்டிகோவில் ஆடலரசின் பெரிய மெர்சேடிஸ் வண்டி வந்து நிற்பது தெரிந்தது. குழந்தைகள் இறங்கி உள்ளே ஓடி வந்தனர். அமுதாவும் ஆடலரசும் பின்னால். அமுதாவின் கையில் ஒரு ‘நல்லி சில்க்ஸ்’ பை.

“ஆன்ட்டி, நீங்க இன்னும் ரெடியாகலையா?” என்றபடி ரொம்ப சுவாதீனமாக மாடியேறி வந்த குட்டி சுமதி கேட்டது. ஒரு பழைய ஜீன்ஸ் பான்ட், சாயம் போன கதர் சட்டை சகிதம் நின்ற ஷீலா முறுவலித்தாள்.

“அமுதா, மேலே வாம்மா,” எனக் குரல் கொடுத்தாள். ஷீலாவின் சாம்பியன் நாய் டெபி, நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது. ஆடலரசு மகன் சுரேஷுடன் நாய்க்குட்டிகளைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தான்.

“சைலா, இது உங்களுக்கு- பிரிச்சு உடுத்திக்கிட்டு, டிரெஸ் செஞ்சுக்கிட்டு வாங்க,” நல்லிப் பையை நீட்டினாள் அமுதா. பட்டுப் புடைவையும் நகைகளுமாக மின்னினாள். காதில் கல் ஜிமிக்கிகள் ஆடின. ஷீலாவின் மனம் துடித்தது. ஜிமிக்கி அவளுக்கு மிகவும் பிடித்த நகை. சிறு வயதில் எப்போதும் அதைப் போட்டுக் கொண்டே தான் இருப்பாள். அதைத் துறந்து எத்தனை வருடங்களாகி விட்டன! அமுதாவின் காதில் தொங்கிய ஜிமிக்கியை லேசாக விரலால் தட்டியபடி, “யூ லுக் ப்ரெட்டி அமுதா,” என்று மென்மையாகக் கூறினாள்.

“ஆன்ட்டி, இந்த பாக்ஸ்ல புடைவை இருக்கு. அப்பாவும் அம்மாவும் உங்களுக்காக வாங்கியிருக்காங்க. ப்ளீஸ், போய் உடுத்திட்டு வாங்க, டைம் ஆகுது ஆன்ட்டி,” என்று சிணுங்கினாள் சுமதி.

“எனக்கெதுக்கும்மா புடைவை இப்போ? இருக்கிறதையே நான் கட்டிக்கிறதில்லே,” என்ற சைலாவிடம் விடை கூறுமுன் அமுதா மகளை நோக்கி, “நீயும் போய் நாய்க்குட்டிகளைப் பார்த்துவிட்டு வாயேன். நான் ஆன்ட்டியோட கொஞ்சம் பேசணும்,” என்று அனுப்பி விட்டு, உரிமையுடன் ஷீலாவின் கரங்களைப் பிடித்து அழைத்துப் போய் சோபாவில் அமர்த்தினாள்.

“சைலா, நவராத்திரிக்கு துணி எடுக்கப் போனோம். உங்களுக்கு நல்ல குங்கும கலரில் ஒரு ஜரிகைப் பட்டுப் புடைவை எடு என்று அரசு தான் சொன்னார். ஏன் தெரியுமா? ஏற்கெனவே நான் அப்பப்ப சொல்லியிருக்கேன் இல்ல- அவங்க உங்களைத் தன் மனதிலே ஒரு தேவதையா, ஏன், கோவில்ல இருக்கிற அம்பிகை மாதிரி இருக்க வெச்சுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

“சின்ன வயசிலிருந்தே உங்ககிட்ட அப்பிடி ஒரு அபிமானம், அன்பு- அவர் மனைவியான என் கிட்டயே விளக்கமாச் சொல்லியிருக்கார். அவர் வார்த்தையிலேயே சொல்லணுமின்னா, ‘இது பாரதியாரோட லக்ஷ்மி காதல், சரஸ்வதி காதல், காளி காதல் மாதிரி சைலஜா காதல்,’ என்பார். அவர் வாழ்க்கையிலே இவ்வளவு முன்னேறி இருக்கக் காரணம் நீங்க தான், உங்க மேலே அவர் வச்சிருக்கிற பிரியம், அந்தப் பிரியத்தை வாழ்க்கையில் உயர உயரப் போகிறதுக்கு ஒரு படிக்கட்டா வச்சிருக்கார்.
“திரும்ப இந்தியா வந்து உங்களைச் சந்திச்சதுல எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? கொஞ்ச நாட்களுக்குள்ளேயே ஒரே குடும்பம் போல நெருங்கிப் போயிட்டோம். திலகா கிட்ட வச்சிருக்கிற பாசம் மாதிரின்னு கூட சொல்ல மாட்டேன் சைலா. அண்ணன் தங்கைன்னு ஏதாவது சும்மாச் சொல்லி இந்தப் புனிதமான அன்பை நான் கொச்சைப் படுத்த மாட்டேன் சைலஜா-

“அதனால தான் இன்னிக்கு நவராத்திரி கொலுவுக்குப் போகிறப்ப நீங்க இந்தப் புடைவையை உடுத்திக்கிட்டு தேவதை மாதிரி வருவீங்களான்னு என்னை விட்டுக் கேட்கச் சொன்னார். நீங்க சம்மதிப்பீங்கன்னு நான் காரண்டி குடுத்திருக்கேன். ப்ளீஸ்,” என்றாள் அமுதா.

சைலஜாவுக்குத் தொண்டையில் பந்து உருண்டது. இது எந்த விதமான அன்பில் சேர்த்தி? அவளைப் போன்ற ஒரு இழிந்த பெண்ணை, அவல வாழ்வு வாழ்ந்து சமூகம் அவள் பின்னால் கைகொட்டிச் சிரிக்கும்படியான நிலையிலுள்ள அவளையா இவன் இவ்வளவு உயர்ந்த இடத்தில் தூக்கி வைத்திருக்கிறான்?

“நானா தேவதை… அமுதா- நான்… நான்…” சொற்கள் தொண்டைக் குழியிலேயே தடுமாறி உருண்டன. உடல் நடுங்கியது.

‘நீ தான் சைலஜா. உன் கடந்த காலம் ஒரு மாயை. அது உன் உள்ளம் சம்பந்தப் பட்டதல்ல. நீ ஆழ்ந்து உன்னையே தேடிய தேடலின் ஒரு அத்தியாயம் அது. கணவனை விட்டுப் பிரிந்ததும், அருணுடன் வாழ்ந்ததும், தேடிய பொருள் என்ன என்று விளங்காததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள போட்டுக் கொண்ட மாயத்திரை. உன் மனது பூப்போன்றது. பிறருக்கு அது உற்சாகத்தின் சுரங்கம். நம்பிக்கையின் அஸ்திவாரம். இதை நீ உன்னையறியாமல் உன் அன்பன் ஒருவனுக்கு வழங்கியிருக்கிறாய்- இன்னும் உன்னுடைய தேடல் என்னவென்று புரியவில்லையா?’ உள்மனம் உரிமையுடன் கூறியது.

கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. மிகவும் குழம்பிப் போயிருந்தாள். சிலை போலச் சிறிது நேரம் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தவளை, அமுதா தான் எழுப்பிச் சென்று, முகம் கழுவிக் கொள்ள வைத்தாள். அலமாரியைக் குடைந்து புடைவைக்கு ஏற்ற சில அணிமணிகளை எடுத்துக் கொடுத்து விட்டு, “பத்து நிமிஷம் தான் தருவேன். வெளியிலேயே இருப்பேன், வந்துடணும்,” என்று செல்லமாகக் கூறி விட்டு வந்தாள்.

“அம்மா, நாய்க்குட்டி எல்லாம் ரொம்ப அழகும்மா. நம்ப ஒண்ணு எடுத்துக்கலாமா? அப்பா உன்னைக் கேட்டுக்கச் சொன்னார்மா,” மூச்சிரைக்க ஓடி வந்தனர் குழந்தைகள். பின்னாலேயே வந்த ஆடலரசு மனைவியை முகத்தில் கேள்விக்குறியுடன் நோக்க, அவளோ அவனைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையை வீசினாள். அவளருகே அவனும் அமர்ந்தபடி தன் தேவதையின் எழுந்தருளலுக்காகக் காத்திருந்தான்.

கதவு திறந்தது.

அமுதாவுக்கும் ஆடலரசுக்கும் தங்கள் கண்களை இமைக்கக் கூட முடியவில்லை. இது எத்தகைய தெய்வீகப் பேரெழில் இவளிடம்? உடலை அரவணைத்த குங்கும வண்ணப் பட்டு. சம்பிரதாயமான வைரத்தோடு, கழுத்தோடு உறவாடிய மெல்லிய நெக்லஸ், கண்மை, நெற்றிக் குங்குமம், ‘பாப்’ செய்த தலைமுடியை அழுந்த முடித்து, ஒரு கொண்டை மாதிரி ஆக்கி, அதில் சிறிது ஜாதி முல்லைச் சரத்தையும் சுற்றியிருந்தாள். “சைலஜா…..,” குரல் தழுதழுத்தது ஆடலரசுக்கு. “நீங்க என்னை விடச் சின்னவங்க. இல்லாட்டி, உங்க காலில் விழுந்து கும்பிட்டிருப்பேனம்மா. அம்பிகை மாதிரி நிக்கிறீங்க,” குழந்தைகள் பார்த்து விடாதபடி அவசரமாக அறையை விட்டு வெளியேறியபடியே ‘கர்சீப்’பை எடுத்து கண்களை ஒற்றிக் கொண்டான்.

எல்லாரும் காரில் ஏறிக் கொண்டு நகரின் பிரபல வக்கீல் சுந்தரராஜனின் பங்களாவை அடைந்தார்கள். அவர்கள் வீட்டில் நவராத்திரி பெரிய திருவிழாவாகவே கொண்டாடப்படும். பதினோரு படிகள் தவிர, பார்க், ராக்கெட் தளம், மிருகக் காட்சி சாலை, தேர் ஊர்வலம் எல்லாமாகப் பெரிய கொலு- குழந்தைகளுக்கு, ஏன் பெரியவர்களுக்குமே பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கலைவிருந்து. மூன்று நான்கு அறைகளில் கொலு வைத்திருப்பார்கள்!

இவர்கள் உள்ளே நுழைந்ததும், சுந்தரராஜனின் பெரிய பெண் வரவேற்றுக் கூட்டிக் கொண்டு போனாள். கூட்டம் அவ்வளவாக இல்லை. ஐந்தாறு பெண்கள், அவர்களது கணவர்களும் குழந்தைகளுமாக முன்னறையில் சிலபேர்- அவ்வளவு தான்.

வருடாவருடம் சுந்தரராஜன் வீட்டிலிருந்து அழைப்பு வரும். ஷிவா வேண்டுமென்றே வராமல் இருந்து விடுவாள். ஒருமுறை சில பிரெஞ்சு விருந்தாளிகளைக் கூட்டிக் கொண்டு வந்தாள். பட்டும் நகைகளுமாகப் பளபளத்த பெண்கள் கூட்டத்தின் நடுவே, ‘லெதர் டிரௌசரும்’ முன்னால் இடையில் முடிந்து கொண்ட ஒரு ‘லொட லொட’ டாப்ஸுமாக வந்து எல்லாரையும் விழி பிதுங்க வைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கினாள்.

சாந்தா சுந்தரராஜனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. சைலஜாவின் அரசி போன்ற கம்பீரமான தோற்றத்தில் தன் மனதைப் பறி கொடுத்தவள், உரிமையுடன் அவள் கரத்தைப் பற்றி அழைத்துப் போய் கொலுவில் அந்த வருடத்து விசேஷ அமைப்புகளை விளக்கலானாள்.

அமுதாவும் ஆடலரசும் கொலுவின் அமைப்புகளை குழந்தைகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர்.

சைலஜாவின் வீட்டில் கொலு பெரிதாக வைப்பார்கள். அக்கம் பக்கம் எல்லாரையும் கூப்பிட்டு மஞ்சள் குங்குமமும், சுண்டலும் வினியோகிப்பார்கள். ஒரு வருடம் ஆடலரசு தான் சைலாவின் பார்க்குக்கு திலகாவின் சிபாரிசின் பேரில் கேழ்வரகு தெளித்து முளைக்கட்டி, கோவில் குளம் எல்லாம் அமைத்துக் கொடுத்தான்.

அவர்கள் வீட்டில் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வரும் பெண்கள் தாங்கள் பாடுகிறார்களோ என்னவோ, சைலஜாவைப் பாடச் சொல்லி ரசிப்பது வழக்கம்.

இன்றும் இங்கு மற்ற பெண்கள் பாடிக் கொண்டிருந்தனர். “நீங்கள் பாடுகிறீர்களா ஷீலா?” என்றார் சுந்தரராஜன்.

அந்த மாலை நேரத்து இனிமையை, விழாக்காலத்துக்குரிய கலகலப்பு நிறைந்த அனுபவத்தை, தன்னைச் சுற்றி உள்ளவர்களின் தோழமையை, வெகு நாட்களுக்குப் பின் ரசித்து, பரவசமடைந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், பக்தனின் தவத்தில் மகிழ்ந்து வரம் தரத் தயாராக இருக்கும் அம்பிகையைப் போல், சைலஜா, “அதனால் என்ன, பாடினால் ஆயிற்று,” என்றதும், ஒரு பவ்யமான மௌனம் நிலவி, அவள் பாடுவதைக் கேட்க எல்லாரும் தயாரானார்கள்.

ஃபாஷன் மாடல் போல் உடையணிந்து ஊரை வலம் வந்த ஷீலா ராபர்ட்ஸா இது? விஸ்கியின் போதையில் வெட்கம் இல்லாமல் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ‘லாபி’யில் அருணுடன் வெட்கமின்றிச் சரசமாடிய ஷீலாவா இது? ஏதோ ஒன்றைத் தேடிக் களைத்து, கீழே விழுந்து புழுதியில் புரண்ட குழந்தையைக் கையைப் பிடித்துத் தூக்கி, தூசியைத் தட்டி, அன்பு வார்த்தைகள் சொன்னதும், அது மகிழ்ந்து சிரிப்பது போல, இசை அவள் வாயிலிருந்து அருவியெனப் பொழிந்தது. பழைய பழைய பாடல்களும், அம்பாள் மீதான ஸ்லோகங்களும், விருத்தங்களும் அழகாக அணிவகுத்து நடைபயின்றன.

மதுவுண்ட வண்டு போல, மற்ற பெண்கள் எல்லாம், “இதைப் பாடுங்கள், அதைப் பாடுங்கள்,” என்று வேறே கேட்டுக் கேட்டு உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்களின் பின்பு, “மிகவும் நாட்களாகி விட்டன நான் பாடியே- இனி முடியாது. தொண்டை கரகரக்கிறது. கடைசியாக ஒரே ஒரு பாட்டு- எனக்கு ரொம்பப் பிடித்தது,” என அமுதாவிடம் கிசுகிசுத்தாள் ஷீலா. “வருகலாமோ ஐயா,” எனப் பாட ஆரம்பித்தாள்.

சரணத்தைப் பாடும்போது அது தன்னுடைய நிலைக்கு எவ்வளவு பொருத்தம் என மனம் உணர்ந்ததோ என்னவோ, குரல் தழதழத்தது.

“சாமி உன் சந்நிதி வந்தேனே, பவ சாகரம் தன்னையும் கடந்தேனே, கரை கடந்தேன் சரணம் அடைந்தேன் தில்லை வரதா, என் பரிதாபமும் பாபமும் தீரவே நான் அங்கே வருகலாமோ ஐயா?”

மனக்கண்ணில் அபிநயம் பிடித்து ஆடியவளாக சைலஜா என்ற ஷீலா பாடினாள். ஜிம் முன்பு தான் தயங்கி நிற்பது எதற்கு என மனம் துடித்தது. குரலில் உலகத்துத் துயரை எல்லாம் இழைத்து வடித்து வைத்தது போலத் தோன்றியது. உடல் ‘குப்’பென வியர்த்தது. கண்முன் இருந்த எல்லாம் தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது. பாட்டு ஒருவழியாக முடிய, “ஆஹா ஷீலா, எத்தனை அற்புதமாகப் பாடுகிறீர்கள்?” என்றாள் சாந்தா சுந்தரராஜன்.

அமுதா அவளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஷீலா கண்களை மூடிக் கொண்டு திவானில் சாய்ந்து தொய்வதைக் கண்டு, அவளைத் தாங்கிக் கொண்டு, “மாமி, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்,” என்றாள். ஷீலாவின் உடல் கட்டை போல் சில்லித்துக் கிடந்தது. தண்ணீர் பட்டதும் மெல்லக் கண்களை விழித்தவள், உயிரற்ற புன்னகை பூத்தபடி சுதாரித்துக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள்.

ஆடலரசு, மருத்துவர் என்ற முறையில் நிலைமையைக் கச்சிதமாகக் கையாண்டான். “உற்சாகமாக ரொம்ப நேரமாகப் பாடினாங்க. வருஷக் கணக்காகப் பாடாதவங்க- டயர்டாகப் போயிருப்பாங்க. நானும் அமுதாவும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறோம்,” என்றபடி கிளம்பத் தயார் செய்தான்.

அவனுக்கும் அமுதாவுக்கும் அல்லவோ தெரியும்- இது அவளுடைய உள்மனத்தின் புலம்பல், இப்போது வார்த்தைகளாக உருவம் தந்து வெளிப்படுத்தியதும், அவற்றின் பரிமாணமும் கனமும் தாங்காத உள்ளம், உடலையும் சேர்த்து அயர்ச்சியில் வீழ்த்தி விட்டது என்று.

ஷீலாவை அவளுடைய பங்களாவின் அறையில் படுக்க வைத்தபடி, “இரண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் சைலா உங்களுக்கு. நீங்க சிந்தித்து மூளையைக் குழப்பிக்கிறதை கொஞ்சம் நிறுத்துங்க. ஜிம்மும் கீதாவும் வரும்போது ‘ஹெல்த்தி’யாக இருந்தால் தானே எல்லாம் சரியாக இருக்கும்? நான் இப்ப உங்களுக்குத் தூங்குவதற்கு ஒரு ஊசி போடப் போகிறேன். ரமணி அம்மா கிட்ட என்ன ஆகாரம் என்று சொல்லிட்டுப் போறேன். நிம்மதியாகத் தூங்குங்கள். சலனமற்ற, கவலைகளற்ற, குழப்பமற்ற உறக்கம் வேண்டும். உங்கள் சிந்தனைகளுக்கும் குழப்பங்களுக்கும் ஒரு நல்ல முடிவு காத்திருக்கிறது. இப்போ வேண்டியது ஓய்வு. ஸ்லீப் வெல், மை டியர் ஏஞ்சல்,” என்று கூறியபடி அவளுக்கு ஊசியைப் போட்டவன், அவள் கரங்களை அழுந்தப் பற்றி ஆறுதல் கூறி விடை பெற்றான்.

காரை ஸ்டார்ட் செய்தவன், ” அமுதா….” என்றபடி குரல் கம்ம, அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

“என்னங்க இது? நீங்க ஒரு டாக்டர். இப்படி உணர்ச்சிவசப் படலாமா? அவங்க நல்லாயிடுவாங்க,” என்றாள் அந்த இனிய மனைவி.

(தொடரும்)

மறு பகிர்வு: தாரகை இணைய இதழ்

**********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *