மூன்று ஆண்டுக்கால ஆட்சியில் நடந்துள்ளது என்ன?

0

பவள சங்கரி

தலையங்கம்

நம் இந்தியப்  பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மத்திய அரசின் மூன்றாண்டுகள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில் அவர்தம் பணியையும் அவர் ஆட்சியில் மற்ற அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் நோக்கத்தக்கது.

பிரதமரின் ஆட்சியில் பல்வேறு பிரிவுகளான, நிதி, நீதி, கல்வி, உள்நாட்டு பாதுகாப்பு, இராணுவம், விண்வெளி, தொழிலாளர் நலம், மருத்துவம், நகர் கட்டமைப்பு போன்ற முக்கியமான பத்து துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே அதன் வெற்றியை நிர்ணயிக்கக்கூடியது . அந்த வகையில் முன்னேற்றப்பாதையில் செல்வதற்குரிய பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை மறுக்கவியலாது. நம் இந்தியப்பிரதமரின் இந்த மூன்றாண்டு கால ஆட்சியை அரசியல் பின்னணியில் ஊடுறுவதைக்காட்டிலும், பாரபட்சமற்று நாட்டு நலனில் அக்கறைகொண்ட ஒரு பிரதமரை நாம் பெற்றிருக்கிறோமா என்பதே நம் மக்களின் இன்றைய சிந்தையாக குழப்பமேற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனை முழுமையாகக் களையவேண்டிய முக்கிய பொறுப்பு நம் இந்தியப்பிரதமருக்கு உள்ளது என்பதையும் மறுக்கவியலாது.

நிதித்துறை : இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாரு நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக உயர் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தலும், ஜிஎஸ்டி முறையை செயல்படுத்த இருப்பதும் பாராட்டிற்குரிய அம்சமாகவே கருதப்படுகிறது. கருப்புப்பணம் முற்றிலுமாக ஒழிந்தது என்று மகிழ்ச்சிகொள்ள முடியாவிட்டாலும், இவை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். அதிலுள்ள சில குறைபாடுகளை களைந்தாலே நிதித்துறையில் மேலும் வெற்றியை அடையமுடியும் என்பதும் திண்ணம். வருங்காலத்தில் அதற்குரிய முயற்சிகளும் எடுக்கப்படுவதற்கான முகாந்திரமும் தெளிவாகவே உள்ளதை வரவேற்கலாம்.

நீதித்துறை: நமது நீதித்துறையானது மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது பாராட்டிற்குரிய விசயம். அரசுத் துறைகளோ அல்லது பொதுமக்கள் பிரச்சனைகள் என எந்தவிதமான சட்டப்பிரச்சனையாக இருந்தாலும் அதற்குரிய சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதும் வரவேற்கத்தக்கது.

கல்வி: கல்வித் துறையைப் பொருத்தமட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டபோதும், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சில வருத்தங்களைப் போக்கும்விதமாக மனிதவள மேம்பாட்டுத்துறையில் மேலும் பல மாற்றங்கள் செயல்படுத்தப்படவேண்டியதும் அவசியமாகிறது. போதுமான ஆய்வகங்கள் இன்மையும், ஆய்வுகள் ஊக்கப்படுத்துதலில் உள்ள பின்னடைவுகளும் சரிசெய்யப்படவேண்டிய தேவையும் உள்ளது. தனிப்பட்ட ஆய்வாளர்களை உற்சாகப்படுத்துவதும் அவசியமாகிறது.

உள்நாட்டு பாதுகாப்பு / இராணுவம்: இராணுவத் தேவைகளுக்கு கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தும் அரசு அதன் ஒரு பகுதியை உடனடித் தேவைகளுக்கு தளவாடங்களாக வாங்குவதும், மீதிப்பகுதிகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கு ஏற்ப வழிமுறை செய்து உள்நாட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கியிருப்பதும் பாராட்டிற்குரியது. பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ என்ற வெற்றிகரமான திட்டத்தை நினைவுகூர்ந்து மகிழச்செய்கிறது.  புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ள மிக நவீன டாங்கிகளும் இதற்குரிய எடுத்துக்காட்டுகளாகக்கொள்ளலாம். விமானத்துறையிலும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருப்பது பாராட்டிற்குரியது. தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், எல்லைப்புறப் பாதுகாப்பு போன்றவைகளிலும் மேலதிக கவனம் செலுத்தி, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியதும் அவசியமாகிறது.

விண்வெளி: விண்வெளித் துறையில், இஸ்ரோவின் மேம்படுத்தப்பட்ட செயல்கள் போன்று பல பாராட்டத்தக்க செயல்பாடுகளைக் காணமுடிகிறது. தொலைத்தொடர்புத் துறைகளில் மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதும் சிறப்பு.

தொழிலாளர் நலம்: தொழிலாளர் நலம் குறித்த பெரும் முன்னேற்றங்கள் இல்லாவிட்டாலும் பிரச்சனைகள் இல்லாத வகையில் செயல்படுத்தி வருவதைக் காணமுடிகிறது. பெருமளவில் வருமானம் வரக்கூடிய ஐ.டி. துறையில் அதிக அளவில் பணியாளர்களை நீக்கும் முயற்சியில் மிகப்பெரிய பத்து நிறுவனங்கள் இறங்கியுள்ளது ஏற்புடையதன்று. அந்த வகையில் பணியிலுள்ள ஐ.டி பொறியாளர்களுக்கு தக்க பணிப்பாதுகாப்பை வழங்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசிற்கு  கூடுகிறது.

மருத்துவம் : மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்கும்வகையில் பல திட்டங்களை முன்னெடுத்திருப்பது பாராட்டிற்குரியது. என்றாலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதும் அவசியமாகிறது. ஸ்டெண்ட் போன்ற இருதய சிகிச்சைக்குரிய முக்கியமான சிகிச்சைக் கருவியே இதற்கு உதாரணம்.

நகர் கட்டமைப்பு: இத்துறைக்காக பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், அந்தந்த மாநிலங்களின் செயல்பாட்டில் உள்ள நகர் கட்டமைப்புகளை சரியான முறையில் மேற்பார்வையிட்டு அதனை தகுந்த காலங்களில் முடிவுறச்செய்து, மக்களின் பயன்பாட்டிற்கு வரும்வகையில் விரைவுபடுத்தப்படவேண்டியதும் மத்திய அரசின் கடமை.

ஆக இன்றியமையா இந்த பத்துத்துறைகளிலும் மத்திய அரசின் செயல்பாடுகள்   அனைத்தும் குறையின்றி பாராட்டிற்குரியதாக  இருப்பினும் உள்நாட்டு பாதுகாப்பு, இராணுவம், மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் மேலும் சிறப்பான செயல்பாடுகளை எதிர்நோக்கும் இந்த நேரத்தில் பெரிய அளவில் ஊழல் புகார்கள் வெளியே வராமல் இருப்பதும் ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது. நாட்டில் உள்ள கருப்புப்பணம் வெளியில் கொண்டுவருவதில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மத்திய அரசு இதை அரசியல் நோக்கில் பார்க்காமல் நாட்டு நலனில் உண்மையான அக்கறைகொண்டு செயல்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும். ஆக இந்த மூன்றாண்டு ஆட்சி நல்ல வளமான விதைகளைத் தூவியுள்ளதன் மூலம் மேலும் சிறந்த விருட்சமாக உருவாகும் என்ற நம்பிக்கையை வளர்ப்பதாகவே உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *