பவள சங்கரி

சிறுவர் இலக்கியம்

கிரீச்சென்ற ஒலியுடன் சர்ரென்று இழுத்துக்கொண்டு சடாரென வண்டி நின்ற இடம் அடர்ந்த வனம் இருக்கும் பாதை. இருண்ட பின்னிரவு நேரம். கோடை விடுமுறை சுற்றுலாவாக இரண்டு குழந்தைகளும் அப்பா, அம்மாவுடன் குதூகலமாக கிளம்பிய பயணம். காரின் வலது புற பின் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்பது முன் இருக்கையில் அப்பாவுடன் இருக்கும் அம்மாவிற்கும் தெரிந்தது. வனப்பகுதியில் இரவு வேளையில் வெட்டவெளியில் வெகு நேரம் இருப்பது ஆபத்தானது என்று உணர்ந்தபோது குழந்தைகளும் அச்சத்தில் நடுங்க ஆரம்பித்துவிட்டனர். ஒரே வழி அப்பா இறங்கி ஸ்டெப்னியை எடுத்து மாற்றி அங்கிருந்து விரைவில் அகன்றுவிட வேண்டியதுதான். மனதை திடப்படுத்திக்கொண்டு அப்பா இறங்க முடிவெடுக்க, அம்மாவும் உதவ முன்வர, அந்த நேரம் பார்த்து வெகு அருகில் நெஞ்சம் உறையச்செய்யும் உறுமல் சத்தம். தன்னிச்சையாக கைகள் கார் கதவின் பூட்டுகளை சரிபார்த்துக்கொண்டன. சற்று தூரத்தில் எதிர் புறத்தில் மங்கிய ஒளியில் தீப்பொறியென மின்னும் இரு கண்கள் மட்டும் நெருங்கி வருவது தெரிந்தது. வண்டியின் மொத்த விளக்குகளையும் அணைத்துவிட்டு மூச்சையும் இழுத்துப்பிடித்து, குழந்தைகளை பின்னிருக்கையின் காலடியில் சுருண்டுவிடச் செய்துவிட்டு முன்னிருக்கையில் காலடியில் சுருண்டுகொள்ள வழியின்றி அப்படியே மூச்சைப்பிடித்து பக்கவாட்டில் கியரின் இருபுறமும் இருவரும் இருக்கையோடு அழுந்திக்கொண்டனர். ஓரக்கண்ணால் உயர்த்திப் பார்த்தபோது பிரம்மாண்டமாக நிற்கும் சிறுத்தைப் புலியின் காட்சி! அவ்வளவுதான் .. அடுத்த நொடி

காக்க .. காக்க கனகவேல் காக்க
நோக்க .. நோக்க நொடியினில் நோக்க

என்று இதயம் சத்தமில்லாமல் கூக்குரலிட ஆரம்பித்துவிட்டது. தன் வழித்தடத்தை மறைத்தவாறு ஏதோ கிடப்பதை மோப்பம் பிடித்தவாறு சிறுத்தையொன்று சுற்றிச்சுற்றி வருவது தெரிகிறது. அவ்வப்போது இலேசான உறுமலுடன் முன்னங்காலைத் தூக்கி வண்டியின் மீது தாக்குகிறது. ஒருவேளை கண்ணாடியில் அதன் பலமான மோதல் நடந்துவிட்டால் அத்தோடு என்ன நடக்கும் என்று கடவுளுக்கே வெளிச்சம் என்ற நிலை. படபடக்கும் இதயம் துள்ளி வாய் வழியே வெளியே வந்துவிடுமோ என்ற நிலை. ஆனாலும் குழந்தைகளும் அந்தச் சூழலை வெகு நேர்த்தியாகக் கையாண்டனர். ஒரு மணி நேரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. திடீரென்று காரின் வலது பக்கவாட்டில் பலமான யானைப்பிளிரல் ஒலி காதைப்பிளந்தது. அதுவும் ஒற்றை யானை என்றால் துவம்சம்தான் என்று நினைத்தபோதும் ஒன்றும் பேச வழியில்லை. இந்தப் பிளிரல் அந்த சிறுத்தையையும் கலங்கச் செய்திருக்கும் போல. காரின் முன்பகுதியின் பானட் மீது முட்டும் அளவிற்கு ஒரே தாவலாக எதிர்புறமாகப் பாய்ந்து வனத்தினுள் சென்று மறைந்துவிட்டது. அடுத்து யானை நெருங்கி வருமோ, குட்டி ஜென் காரைத் தூக்கி சுழட்டி பந்தாடிவிடுமோ என்ற பேரச்சத்தில் நா வறண்டு கிடக்க, என்ன நடந்ததோ, எங்கு சென்றதோ அந்த யானையின் சுவடு ஏதும் இல்லை. இந்த களேபரத்தில் பொழுது மெல்ல புலர ஆரம்பித்தது பறவைகளின் மெல்லிய கீச்சுகளினால் உயிர் மீண்டது.

சுள்ளி பொறுக்க வந்தவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என ஒரு சிறு கூட்டம் கூடிவிட நடந்தது அனைத்தையும் மூச்சுவிடாமல் விளக்கும் அம்மாவை கண்கொட்டாமல் குழந்தைகள் பார்த்தவாறு இருக்கிறார்கள். சுற்றி இருந்தவர்கள் அதை அப்படியே உணர்ந்து மெய் சிலிர்க்கின்றனர். உடல் நடுங்கியவாறு, தாங்கள் அதிசயமாக உயிர் தப்பிய நிகழ்வை அப்படியே ஒன்றுவிடாமல் அம்மா சொன்னபோது குழந்தைகளுக்கே நம்ப முடியாதவாறு வைத்த கண் வாங்காமல் வெறித்துக்கிடந்தனர். ஆதிகாலத்தில் நடந்த பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் இப்படித்தான் கதை சொல்லிகள் மூலமாக வழிவழியாகத் தொடர்கின்றன.

8bb4bfc8f3701cdec9ac6dfe93b864a5
2,500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன பஞ்ச தந்திர கதைகள், பாட்டி சொன்ன கதைகள், ஹோமர் உருவாகிய ‘ஒடிசி’ என்ற கிரேக்க நாட்டு டிரோஜான் கதைகள், அரேபிய இரவுகள், ஹேம்லட் & சிண்ட்ரெல்லா போன்றவைகள் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பல்வேறு வடிவங்களில், மொழிகளில், சூழல்களில் பரம்பரையாகத் தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொண்டுதான் உள்ளன.

காகிதங்கள் கண்டுபிடிக்கப்படாத ஆதிகாலங்களிலும், நம் முன்னோர்கள் களிமண் திட்டைகள், பானை ஓடுகள், சுவர் ஓவியங்கள், குகைச்சிற்பங்கள் என்று பலவகையில் கதைகளை வடிவமைத்து நல்ல கதைசொல்லிகளாக உணர்த்திவிட்டனர்.

வரலாறு முழுவதும் கதைகள் வாயிலாகவே இறந்த காலங்களை பெருமைகொள்ளவும், நிகழ் காலங்களை ஒளியூட்டவும், எதிர்காலங்களை ஊடுறுவவும் வகை செய்கிறது. நம் முன்னோர்கள் இதுபோன்ற மாய வார்த்தைஜாலங்கள் மூலமாகவே அறிவைப் புகட்டவும், அகண்டமாக்கவும், அனுபவங்களைப் பாடமாக்கவும் முனைந்தனர். அவர்கள் கட்டுக்கதைகளைப் புனைந்து அதன் மூலம் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தனர். குழந்தைகள் மட்டுமன்றி பெரியோர்கள் என்ற பெருங்கூட்டத்தையுமே உற்சாகப்படுத்தியிருந்தனர். போர் ஏற்படுத்தவும், சமாதானம் பேசவும், தற்காப்பு செய்யவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் அனைத்து முக்கியமான செயல்பாடுகளையும் கதைகள் மூலமாகவே பாடமாக்கினர். ஆபத்துகளை எச்சரிக்கை பெறவும், எதிரிகளை இனம் காணவும், நாயகர்களைக் கொண்டாடவும் கதைகள் பயிற்றுவிக்கின்றன. கதைகள் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன.

கற்காலம் கடந்த 20,000 ஆண்டுகளுக்குப் பிறகும் பெரிதான மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. இன்றும் பொழுதுபோக்கிற்காகவும், அறிவு வளர்ச்சி, சுகமான அனுபவங்களுக்காகவும் கதைகளையே நாடியிருக்கிறோம் என்பதே நிதர்சனம். நம் பழங்கதைகள், அந்த எழுத்துகளையும் கடந்து, நம் முன்னோர்களின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்திருக்கச் செய்கின்றன. இந்த உன்னத உணர்வுகளே நாம் யார், நாம் வந்த பாதை எது, நாம் செல்லப்போவது எங்கே போன்ற வினாக்களுக்கு விடையளிப்பதோடு மதிக்கவும் செய்கின்றன.

மகாகவி காளிதாசன் பற்றி அறியாதவர் இலர். கல்வி ஞானம் துளியும் இல்லாத தற்குறியாக இருந்த காளிதாசனை, அகிலமே புகழும் மாகவியாக்கி, கலைவாணி நிகழ்த்திய அற்புதங்களை அனைவரும் அறிவர். ஏடும் எழுத்தும் அறியாக் காளிதாசன் நாவில் நாமகள் அருள்மழை பொழிந்ததன் பயனாக அவர் சம்பு இராமாயணம் இயற்றி புகழ் பெற்று விளங்கினார். ஊமையாக இருந்த குமரகுருபரருக்கு ஞானப்பால் புகட்டி பேச வைத்ததுமல்லாமல் பன்மொழிப்புலமை பெறச் செய்திருக்கின்றாள். நாமகள் அருள் பெற்று இவர் பாடிய சகலகலாவல்லி மாலை சரசுவதி தேவியைத் துதித்துப் பாடியவை. இது மட்டுமன்றி காசிக்குச் சென்று மன்னனிடம் வடமொழியில் பேசி மனதைக் குளிரச்செய்து சைவமடம் நிறுவ இடமும் பொருளும் பெற்ற அதிசயம் இலக்கியத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது. கல்விக்கடவுள் என்பதற்கு அடையாளமாகக் கையில் ஏடு தரித்திருக்கின்றாள் கலைமகள்! இவள் அருளில்லாமல் போயிருப்பின் காளிதாசனும், குமரகுருபரனும் இருண்ட உலகில் சிறைபட்டிருந்திருப்பர்.

எழுத்து என்பது கலைவாணியின் ஒரு வரம். அதுவும் குழந்தைகளுக்காக இலக்கியம் படைப்பதென்பது மாபெரும் வரம் எனலாம். குழந்தை இலக்கியம் படைப்பதை என்றுமே குறைத்து மதிப்பிடல் உகந்ததன்று. குழந்தைகளுக்காக இலக்கியம் படைக்கும்பொழுது மொழியற்ற அந்த பிஞ்சுகளின் மொழியாகிவிடுவதை உணரமுடியும். அவர்களுக்கான புதிய உலகம் படைக்கப்படுவதோடு, அவர்தம் சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கி, அவர்களை அறிவொளியின் எல்லைக்கே இட்டுச்செல்ல முடிகிறது. இதுவே கதையின் வல்லமை மற்றும் தேவையுமாக உள்ளது. ஒரு நல்ல கதைசொல்லியால் மட்டுமே இத்தகைய வெகுமதியை குழந்தைகளுக்கு அளிக்கமுடியும்.

சிலருக்கு இந்த கதை சொல்லும் ஞானம் பிறவியிலேயே வாய்த்திருக்கும். ஊர் வம்பு பேசி அடுத்தவரின் கவனத்தை எளிதாக ஈர்த்துவிடும் வல்லமை பெற்றவர் பலர். எந்த இடத்தில் நிறுத்தவேண்டும், எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கவேண்டும், எந்த இடத்தில் விரிவான விளக்கம் கொடுக்கவேண்டும் போன்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பர். வெகு இயல்பாக கதை சொல்லும் ஆற்றல் பெற்றிருப்பர். அனைவருமே இதுபோன்ற ஆசிர்வாதம் பெற்றவர்களாக இல்லாவிட்டாலும், கதைகளை வாசித்தும், கேட்டும் ஞானம் பெற்றவர்களும் உள்ளனர்.

கதை சொல்வதென்பது ஒரு வரம் மட்டுமன்று. அது ஒரு கலை.

கலை என்பது உள்ளுணர்வு, பாராட்டுகளின் அடிப்படையில் உருவாகக்கூடியது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அந்த உள்ளுணர்வு இருக்கத்தான் செய்கிறது. அப்படி இல்லாவிட்டாலும் அதை விதைத்துக்கொள்ள முடியும். எப்படி?

தொடருவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி (2)

  1. பாராட்டுக்கள். மிகச் சிறப்பாக உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *