-சி. ஜெயபாரதன்

jaya1

அங்கம் -2 பாகம் -11

மேலங்கியை மாட்டு! எனக்கு மகுடத்தைச் சூட்டு!

மேலோங்கி எழுகிற தெனக்குள் தெய்வீக வேட்கை! …

(கிளியோபாத்ரா)

கடவுளுக் களிக்கும் சுவைத் தட்டு
மடந்தை யவள் என்று நானறிவேன்,
உடல் மீது பிசாசு அவளுக்கு
ஆடை அணியா விட்டால்!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

“ஆத்ம உள்ளுணர்வுக் கைகளோடு ஒன்றி உழைக்கா விட்டால், உன்னதக் கலைகளைப் படைக்க முடியாது.”

“மேதையர் சில சமயங்களில் பணிப்பாரம் குறைவாக உள்ள போது மேலானவற்றைச் சாதிப்பார்! அப்போதுதான் அவர் தமதரிய கண்டுபிடிப்புகளைச் சிந்தித்து, ஓர் உன்னதக் கருவை விரிவாக்கி அவரது கைகள் அதனைப் பிறகு ஓவியமாக்கி வெளிப்படுத்துகின்றன.”

லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

“பளிங்குக் கல்லில் ஒரு தேவதையை (ஞானக் கண்ணில்) நான் பார்த்தேன். அதனைக் கல்லில் செதுக்கி அவளுக்கு விடுதலை அளித்தேன்.”

“அழகுணர்ச்சியைப் புறக்கணிப்பது போல அல்லது அதைப் பற்றி அறிய மறுப்பது போல, கவர்ச்சியான ஒன்று மாந்தருக்குத் துயர் கொடுப்பது வேறு எதுவு மில்லை!”

மைக்கேலாஞ்சலோ ரோமானிய ஓவிய மேதை (1475-1564)

++++++++++++++++++

கதைச் சுருக்கம்:

கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

++++++++++++

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.

காட்சி அமைப்பு:

கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா: [அருகில் நெருங்கி மிக்கக் கனிவுடன்] ஆனாலும் அவன் உங்கள் மகன்! ரோமானிய மாது கல்பூர்ணியா அளிக்க முடியாத ஆண் பரம்பரையை, எகிப்தின் கிளியோபாத்ரா ஆக்கித் தருகிறாள்! மாவீரர் சீஸரே! நீங்கள் ரோமுக்கு மீள்வதைச் சற்று தள்ளிப் போடுங்கள்! எனக்கு உங்கள் கையால் எகிப்து மகாராணி என்று முதலில் மகுடம் சூட வேண்டும்! என் மாளிகையில் எனது சிறப்பு விருந்தினராகச் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும்! எனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகவை உங்கள் ஆசைக் கரங்களில் முத்தமிடக் கொடுத்து நான் ஒப்படைக்க வேண்டும்! அதன் பிஞ்சு வாயில் தவழும் புன்னகையை நீங்கள் மனதில் படமெடுத்துக் கொண்டு ரோமாபுரிக்குச் செல்ல வேண்டும்.

ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்கிறேன். எனக்கு ஆண்பிள்ளை வேண்டுமென்று வெகு நாட்களாக ஆசை யிருப்பது உண்மை. அந்த ஆசையை என் மனைவி கல்பூர்ணியா பூர்த்தி செய்ய முடியவில்லை. அந்த ஆசையை நீ நிறைவேற்றுவாய். ஆனால் என் ஏக மகனை ஆசை நாயகியின் மோகப் பிள்ளை எனப் பலர் ஏசுவதை நான் விரும்பவில்லை.

jaya2

கிளியோபாத்ரா: அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறேன். உங்களை நான் மணந்து நமக்குப் பிறக்கும் பிள்ளை சட்டப்படி உதித்த உங்கள் மகனென்று சரித்திரம் சொல்ல வைப்பேன். கிளியோபாத்ராவுக்கும், சீஸருக்கும் பிறந்த பட்டத் திளவரசன் என்று எகிப்தின் மாந்தர் பாராட்டுவார்! ரோமாபுரியின் எதிர்கால வேந்தன் என்று ரோமானியர் கொண்டாடுவார்! அது மட்டுமல்ல, உங்களை நான் எகிப்தின் மன்னராகவும் அறிவித்து விடுகிறேன்!

ஜூலியஸ் சீஸர்: [மன மகிழ்ச்சியுடன் ஆனால் சற்று தயக்கமுடன்] கண்ணே கிளியோபாத்ரா! என்னை மணந்து நீ ஓர் ஆண்மகனைப் பரிசாக அளிப்பதே எனக்குப் போதும்! நான் ஒரு ரோமன்! நான் ·பாரோ கடவுள்களின் பரம்பரையில் வந்தவன் அல்லன்! என்னை எப்படி எகிப்துக்கு மன்னன் ஆக்குவாய் நீ! அந்த மதிப்பு எனக்குத் தேவையு மில்லை! எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு! ரோமாபுரிக்கு யார் அதிபதியாயினும் அவரே எகிப்துக்கும் தளபதி! அதை நீ அறிவிக்கத் தேவையில்லை! பிறக்கும் மகனைப் பார்த்த பிறகே நான் ரோமாபுரிக்குப் போக ஏற்பாடு செய்யவேன். அங்கே நிரம்ப வேலை இருக்கிறது எனக்கு!

கிளியோபாத்ரா:  ஃபெரோ மன்னரின் பரம்பரைப் பாவையான நான், உங்களை எகிப்துக்கு மன்னராக்குவேன், கவலைப்பட வேண்டாம். அலெக்ஸாண்டிரியாவில் சில நாட்கள் ஓய்வெடுங்கள். மாபெரும் வேந்தர் சீஸரின் அருகில் நான் உள்ள போது, நீங்கள் ஒரு வேலையும் செய்யத் தேவை யில்லை! மன்னர்களுக்கு வேலை யில்லை! மன்னர்கள் வேலை செய்யக் கூடாது!

ஜூலியஸ் சீஸர்: யார் சொல்வது, மன்னருக்கு வேலை யில்லை என்று? வாலிப ராணி கிளியோபாத்ராவுக்கு வேலை யில்லை! அதே போல் வயோதிக சீஸருக்கும் வேலை யில்லை என்பதா? வேடிக்கையாக இருக்கிறதே!

கிளியோபாத்ரா: எகிப்தில் என் தந்தை சில ஆண்டுகள் மன்னராக இருந்தார்; அவர் என்றைக்கும் வேலை செய்ததில்லை. அவர் மாபெரும் மன்னரே! ஆனால் மிகவும் பொல்லாதவர்! புரட்சி செய்து நாட்டைப் பிடுங்கி அரசாண்ட, என் மூத்த சகோதரியின் கழுத்தை அறுத்தவர்!

ஜூலியஸ் சீஸர்: அப்படியா? பிறகு நாட்டை மீண்டும் எப்படிக் கைப்பற்றினார், உன் தந்தை?

கிளியோபாத்ரா: [கண்களில் ஒளிவீசப் புன்னகையுடன்] எப்படி என்று சொல்லவா? பாலை வனத்தைக் கடந்து பராக்கிரமம் மிக்க ஒரு மன்மத வீரன் பல குதிரைப்படை ஆட்களோடு வந்தார்! தமக்கையின் கணவரைக் கொன்றார்! தந்தையை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமரச் செய்தார்! அப்போது எனக்கு வயது பன்னிரண்டு! அந்த வாலிபர் என் கண்ணுக்குள்ளே நின்று காட்சி அளிக்கிறார்! மீண்டும் இப்போது வந்தால் ஆனந்தம் அடைவேன்! நானிப்போது பட்டத்து அரசி! அப்படி வந்தால் அவரை என் கணவராக்கிக் கொள்வேன்!

ஜூலியஸ் சீஸர்: [ஆர்வமுடன்] அப்படியானால் என்கதி என்னவாகும்? நான் உன்னைத் திருமணம் செய்யப் போகிறேனே! ஆண்மகவு ஒன்றைக் கூட எனக்குப் பரிசாக அளிப்பதாகக் கூறுகிறாய்!

கிளியோபாத்ரா: அந்த வாலிபர் என் வயதுக் கேற்றவர்! நீங்கள் என் வயதுக்கு மீறிய வயோதிகர்! பிறக்கும் என் ஆண்மகவின் தந்தை நீங்கள்! ஆனால் எனக்குப் பொருத்த மில்லாதவர்! பிறக்கப் போகும் நமது மகனுக்குத் தந்தை சீஸர் என்பதை ரோம சாம்ராஜியத்துக்கு அறிவிக்கவே உங்களைத் திருமணம் செய்ய உடன்படுகிறேன்! ரோமாபுரியில் உங்கள் மனைவி கல்பூர்ணியா, உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கிறாள். வயோதிகரா அல்லது வாலிபரா என்று என்னைக் கேட்டால், யாரை நான் கணவனாக தேர்ந்தெடுப்பேன்? ஐயமின்றி ஓர் வாலிபரைத்தான்!

ஜூலியஸ் சீஸர்: [சட்டென] உன் கற்பனை வாலிபனும் ஏற்கனவே திருமணம் ஆனவன்தான்!

கிளியோபாத்ரா: அப்படியா? மீன் குஞ்சிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவை யில்லை! அவளுடைய இடத்தைப் பிடிக்க எனக்குத் தெரியும். அந்த வாலிபர் என் கண்வலையில் சிக்கி விட்டால், மீண்டுமவர் தன் மனைவியைக் கண்டு கொள்ள மாட்டார்! என் மந்திரக் கண்களின் தந்திரப் பிடியிலிருந்து அவர் தப்ப முடியாது! விளக்குத் தீயை ஆராதிக்கும் எந்த விட்டிலும் தீபத்திலே எரிந்து சாம்பலாகும்! [மிக்க ஆர்வமுடன்] அவரது உண்மைப் பெயரென்ன? உங்களுக்குத் தெரியுமா? மீண்டும் அவரை அலெக்ஸாண்டிரியாவுக்கு அழைத்து வரச் செய்ய முடியுமா?

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] முடியும், என்னால் முடியும். முதலில் உன் தந்தைக்கு உதவி செய்ய அந்தக் கவர்ச்சி வாலிபனை அனுப்பியவன் நான்தான்!

கிளியோபாத்ரா: [சீஸரை நெருங்கி] அப்படியா? அந்த வசீகர வாலிபனை உங்களுக்குத் தெரியுமா? அவர் பெயரென்ன கூறுவீரா? உங்களை விட வயதில் சிறியவர்தானே! உங்களுடன் இப்போது வந்திருக்கிறாரா?

ஜூலியஸ் சீஸர்: இல்லை! என்னுடன் வரவில்லை. ஆம், அவன் என்னை விட வயதில் சிறியவன்தான். அந்த வாலிபன் பெண்களின் வசீகரன்! உன்னைப்போல் அவன்மீது கண்வைத்திருக்கும் பெண்கள் அநேகம்! நீ அவனை மோகிக்கிறாய்! அவனுக்கு உன்னைப் பிடிக்குமா என்பது எனக்குத் தெரியாது! வசீகர வாலிபருக்கு ஒரு வனிதைமேல் மட்டும் வாஞ்சை உண்டாகாது! அவருக்கு ஆயிரம் வனிதைகள் உள்ளார்! ஆயிரத்தில் ஒருத்தியாக நீ யிருக்க விரும்புகிறாயா?

jaya3

கிளியோபாத்ரா: நான் ஆயிரத்தில் ஒருத்தியான ஆசைநாயகி யில்லை! ஆயிரத்தில் முதல்வி, அவரது ஆசை மனைவியாக வாழ்வேன்! அவர் என்னைக் காதலித்தால், அவரை என் வசப்படுத்தி மற்ற ஆசை நாயகிகளைக் கொல்லும்படிச் செய்வேன். சொல்லுங்கள் அவர் பெயரை! சொல்லுங்கள் எங்கிருக்கிறார் என்று! நான் அவரை நேசிக்கிறேன். அவர் என்னை விரும்புகிறாரா என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜூலியஸ் சீஸர்: அவன் ஒரு காப்டன். குதிரைச் சவாரி வீரன்! ரோமாபுரிப் பெண்டிரின் கனவு மைந்தவன் அவன்!

கிளியோபாத்ரா: [கெஞ்சலுடன்] அவர் உண்மைப் பெயரென்ன கூறுங்கள்! அவர் என் தெய்வம். நான் அவரை அழைப்பது, “ஹோரஸ்” [*1] என்றுதான்! எங்களுடைய கடவுள்களில் ஹோரஸ்தான் மிக்க எழிலான கடவுள். ஆனால் அவரின் உண்மைப் பெயரை அறிய ஆவல்.

ஜூலியஸ் சீஸர்: அவன் பெயர்தான் மார்க் ஆண்டனி! ரோமின் மாவீரன் மார்க் ஆண்டனி! என் பிரதமச் சீடன், மார்க் ஆண்டனி! எனக்காக உயிரைக் கொடுக்கவும் அஞ்சாத மார்க் ஆண்டனி!

கிளியோபாத்ரா: [மனம் நெகிழ்ந்து இசையோடு உச்சரித்து] ஆஹா! மார்க் ஆண்டனி! என்ன அழகிய பெயர்! மார்க் ஆண்டனி! உங்களுக்குச் சீடன்! ஆனால் எனக்குத் தேவன்! மார்க் ஆண்டனி! உங்களுக்காக உயிரைக் கொடுப்பவர்! ஆனால் மார்க் ஆண்டனிக்காக நான் உயிரைக் கொடுப்பேன்! எங்கே உள்ளார் மார்க் ஆண்டனி? அழைத்து வாருங்கள் மார்க் ஆண்டனியை! சீஸர், கனல் பற்றி எரியும் நெஞ்சில், பாலை வார்த்தீர்கள்! அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்து என்னைக் காண ஏற்பாடு செய்வீரா?

ஜூலியஸ் சீஸர்: [சற்று தயக்கமுடன்] மார்க் ஆண்டனி ரோமாபுரியில் உல்லாசமாக இருக்கிறான்! அலெக்ஸாண்டிரி யாவுக்கு ஆண்டனியை அழைத்து வருபது எளிய தில்லை! நான் போனால்தான் அவன் வருவான். ரோமாபுரிக்கு நான் போய்த்தான் அவனை அனுப்ப வேண்டும்! நான் ரோமுக்குப் போனால் எகிப்துக்குத் திரும்ப மாட்டேன்! ஆண்டனி எகிப்துக்கு வந்தால், அவன் ரோமுக்கு மீள மாட்டான்!

*********************

[*1] “ஹோரஸ்” [Horus is the Sun God of the Egyptians]

+++++++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *