மீனாட்சி பாலகணேஷ்

மூவுலகங்களையும் தன் கருணையினால் ஆளும் அன்னை பராசக்தி இரத்தின சிம்மாசனத்தில் கொலுவீற்றிருக்கிறாள். சாமரம் வீசும் சேடியர் ஒருபுறம். அவளுடைய தரிசனத்துக்காக அலைமோதும் மற்ற அரசர்களின் கூட்டம் இன்னொருபுறம். ஈரேழு உலகங்களும், வானும் புவியும் வணங்கியெழும் அன்னை பராசக்தி இவளல்லவோ? இவளுடைய கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்கின்றது அடியார் கூட்டமும், முனிவர்கள், தொண்டர் குழாமும். அடியார் குறைகளைக் கேட்டு அக்குறைகள்தீர தீயரை வீட்டி, தன்னை மேவினர்க்கின்னருள் செய்துகொண்டிருக்கிறாள் அன்னையிவள்! ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்கிறாள்!

ame

இவளது இச்செய்கையை பாரதியாரும்,

அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய்- தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள் செய்து கிடத்துவள் தாய்,’ எனப் போற்றுகிறார். அத்துணை புகழ்வாய்ந்தவள் இந்தப் பேரரசியான அன்னை!

திடீரென இவளுடைய அரண்மனை வாயிலில் பரபரப்பு. ஏவலரும் சேவகரும், வாய்பொத்தி, கைகட்டி வழிவிட்டு விலகுகின்றனர். பொலியும் கம்பீரமும், யாரையும் சட்டை செய்யாத தன்மையும் கொண்ட ஒருவன், புலித்தோலாடையும், சடைமுடியும், கையிலேந்திய திரிசூலமும், நீறுபூசிய உடலும், அவ்வுடலெங்கும் தவழ்ந்து அணிசெய்யும் நாகங்களுமாக இதழ்களில் தவழும் குறுநகையுடன் அரசவைக்குள் நுழைகிறான். இவன் முப்புரங்களையும் எரித்த சிவபிரானல்லவா?பிரமனும் திருமாலும் அடிமுடி தேடியறியாப் பரம்பொருள். அந்தப் பேரரசிக்கும் பேரரசன். அவளைத்தேடி வருகிறான்…….!

பணிப்பெண்களும், சேவகர்களும் சிவபெருமான் வருகையை அறிவிக்க அன்னையை நோக்கி விரைகின்றனர். உலகின் எந்த மூலையில் நிகழும் செயலையும் அறிந்தவளல்லவா அவள்? தன் தலைவன் வருகையை அறியமாட்டாளா என்ன? அத்துணை பரபரப்பின் இடையிலும் அவள் கண்கள் அவன்வரவைக் கண்டுவிட்டன. அரசியானால் என்ன?

‘கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் கைதொழு வாள் எங்கள்தாய் – கையில்
ஒற்றைத் திகிரிகொண்டேழுல காளும் ஒருவனை யுந்தொழுவாள்,’
என்று பாரதி பாடிய அன்னையல்லவோ இவள்?

அத்தகைய அன்னை தானே தனது காதற்கொழுநனை வரவேற்க எழுந்து விரைகிறாள். அது அவ்வளவு எளிதான செயலாக இல்லை!! ஏனென்றால் வழிதோறும் பணிந்துகிடக்கும் தேவர்களின் தலைகள்! அவற்றில் மணிமகுடங்கள்! பிரமனின் கிரீடம்! மது, கைடபன் எனும் அரக்கர்களைக் கொன்ற பெருமைகொண்ட திருமாலின் கனமான நவரத்தினங்கள் பதித்த மணிமுடி! இந்திரனின் மணிமுடி வேறொரு பக்கம்! இவற்றில் அவள் இடறிக்கொண்டு விட்டால் என்னாவது? கவலை கொண்ட சேடியர் அவளை எச்சரிக்கை செய்கின்றனர். “தாயே! பார்த்துச் செல்லுங்கள்! இவை எதிலாவது காலை இடறிக்கொண்டு விடப்போகிறீர்கள்,” என்கின்றனராம். யாராலுமே சிந்தித்தும் பார்க்க இயலாத இனிமையான பொருள்செறிந்த கற்பனை இதுவே!

பொருட்செறிவு எதனால்? எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும் பணிவும் அடக்கமும் அன்பும் குறையாது நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அன்னையின் செயல் சான்றாகும். ‘மனையாள் அரசியானால் என்ன? நான் என் எளிமையில் இருந்து கொள்கிறேன்,’ எனப் புலித்தோலாடையணிந்து அலட்சியமாக நடந்து வரும் சிவபிரான், யாரும் வந்து தன்னை எதிர்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கவுமில்லை.
சரி, நமது கட்டுரைக்கு வருவோம்.

அழகின் அலைகள்- சௌந்தர்ய லஹரி- எனும் பெயர்கொண்ட நூறு ஸ்லோகங்களாலான இந்நூல், அன்னையின் அழகினை வருணித்து ஆதிசங்கரரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீரை கவிராஜபண்டிதர் எனும் தமிழ்ப்புலவர் இதனைப் பொருள்பிறழாது தமிழில் அழகுற மொழிபெயர்த்துள்ளார்.

முதுமறைசொல் இளவனிதை அயனொடு அரிகுலிசன் உனை
முறைபணியும் நெறியின் இடையே
பதறி உனது அருகுவரும் அரனையெதிர்கொள
பரிசனம் உன்னடி வளமையால்
இதுபிரமன் மகுடம் அரிமகுடம் இது குலிசன்முடி
இதுகடினம் மிடறும் இருதாள்
சதியமர அமரவழி விலகிவர வர எமது
கடவுள் எனும் மொழி தழைகவே.
(சௌந்தர்யலஹரி-29- வீரை கவிராஜ பண்டிதர்)

இத்தகைய அருமையான ஸ்லோகங்கள் கொண்ட இந்நூல் கற்பனை வளம் செறிந்து விளங்குவது. தொன்மங்களை இணைத்து, அன்னையின் பிரதாபங்களைக்கூறி வாழ்த்துவது ஒருவித நயமெனில், தமது நுண்ணுணர்வினால் மேலும் சிறந்த சில கற்பனை நிகழ்வுகளைப் புனைந்து இலக்கியத்திற்குச் சுவை சேர்ப்பது இன்னொரு நயம். வடமொழியிலிருந்து கருத்துக்களை எடுத்து இணைத்துக்கொண்டு தமிழில் இத்தகைய பாடல்கள் சிறந்து விளங்கி வருகின்றன. ஒரு சிறந்த கற்பனைக்கருத்தை, அக்காலக்கவியுலகம் ‘காபிரைட்’, செய்யவில்லை! இக்கருத்தினைச் சிறிது மாற்றம்செய்து தாமியற்றியுள்ள சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் நூலில் இணைத்துள்ளார் கோவை கவியரசு நடேச கவுண்டர் எனும் புலவனார்.

அத்தகையவொரு பாடலே கீழே நாம் காணும் இப்பிள்ளைத்தமிழ்ப் பாடலாகும். இந்நூலில் இப்பாடல் சப்பாணிப்பருவத்தில் காணப்படுகிறது. இங்கு எவ்வாறு பொருந்துமென எண்ணி வியக்கிறோம். சப்பாணிப்பருவமானது வளர்ந்துவரும் சிறுகுழந்தையை இருகைகளையும் இணைத்துக் கொட்டி ஒலியெழுப்புமாறு தாய் வேண்டுவதாக அமையும்.

அன்னை உமையின் அரசவை நிகழ்வுக்கும் கைகளைக்கொட்டி மகிழும் குழந்தைக்கும் என்ன சம்பந்தமிருக்கும்? இங்குதான் புலவரின் மதிநுட்பம் புலனாகிறது. சப்பாணிப்பருவத்தில் குழந்தையின் கைகளே பாடுபொருளாகின்றன. இப்பெரும் செயலைச் செய்த கைகளைக்கொண்டு சப்பாணி கொட்டுக! என வேண்டுவதே வழக்காகும். அதற்கேற்ப அன்னை தன் கைகளால் செய்த செயலை விளக்குகிறார் புலவர்.

‘பிரமனுடன் திருமால், இந்திரன் ஆகிய அமரர்கள் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் நீ உனது பொற்பாதங்களை வைத்திருக்கும் பீடத்தின்முன்பு நெடுஞ்சாண்கிடையாக, தங்கள் விலைமதிப்பற்ற மணிமுடிகள் தரையைத் தொடும்வண்ணம் பணிந்துகிடக்கிறார்கள்.

‘அச்சமயம் அரனாகிய சிவபிரான் உனைநாடி வருகின்றான்; நீயும் அரியணையினின்றும் எழுந்து அவனை வரவேற்க விரைகின்றனை அம்மையே! அவ்வாறு அவசரமாக நீ செல்லும் வேளையில் ‘உன்னை வழிபட்டுக் கிடப்போரின் மணிமுடிகள் காலில் இடறுமே,’ எனப் பணிப்பெண்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அந்த அமரர்களோ ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்; எழுந்திருப்பதாகக் காணோம்!

‘இதனாய் அன்னையே! நீ உன் பவளவாயால் அவர்களை, “எழுந்திருங்கள்,” என உரப்பி ‘படபட’வெனப் பங்கயச்செங்கை மலர்களைத் தட்டி எழுப்புவதுபோல, இப்போதும், சரசுவதி போற்றி வணங்கும் புகலி (சீர்காழி) நகரின் தலைவியே! சப்பாணி கொட்டியருளுகவே!

‘அனைத்து நலன்களையும் அடியார்க்கு அருளும் எம் அம்மையே! சப்பாணி கொட்டியருளுகவே!’ என வேண்டுவதாக அமைந்துள்ள நயம் வியப்பிற்குரியதாம்.

சப்பாணி கொட்டும் குழவியாக அன்னையைப் பார்க்க வேண்டுமெனில் அவள் கைகளைத் தட்டும் நிகழ்ச்சியொன்றைத் தெரிவு செய்ய வேண்டும். தமது கற்பனையை சௌந்தர்யலஹரிப் பாடலில் சிறிது மாற்றம்செய்து இணைத்து இதனைக் கூறியுள்ளது பிரமிக்க வைக்கிறது.

பிரமனொடு மால்புரந் தரனாதி யமரருன்
பொற்பாத பீடிகைமுனர்ப்
பெருவிலைய மணிமுடியின் மிசைவைத்த வஞ்சலி
பிறங்கவீழ்ந் தேத்துகாலை
அரனுன்முன ரணுகவர வரியணையி னின்றெழுந்
தவனைவர வேற்குமாநீ
அவசரப் படும்வேலை முடிகளடி யிடறுமென்
றரமகளி ரெச்சரிக்கப்
பரவசப் படுமமரர் அறியார் கிடப்பவுன்
பவளவாயா லுரப்பிப்
படபடத் தெழுமாறு கைதட்டு மாறெனப்
பங்கயச் செங்கைமலரால்
சரசுவதி பரசுமொண் புகலிநக ரமர்முதல்வி
சப்பாணி கொட்டியருளே!
சகலதல மெலாமுதவு திருநிலைச் செல்வியொரு
சப்பாணி கொட்டியருளே!
(சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- நடேச கவுண்டர்)

இவ்வாறே இன்னும் சில புலவர்களும் பாடியுள்ளனர். அடுத்த அத்தியாயங்களில் கண்டு மகிழலாம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.