Blog

  • பிரியா விடை

    –துஷ்யந்தி.

    பாலர் வகுப்பிலிருந்தே சுகந்தனும் ரவியும் இணைபிரியா நண்பர்கள். காரணம் அவ்களின் பெற்றோரும் நட்பிலே இணைந்தவர்கள். ஒரே பள்ளிக்கூடத்திலேயே இருவரும் ஒன்றாகவே கல்வியைத் தொடர்ந்தனர். கலைமகள் கண்பார்வையில் பூத்த மலர்களாய் திறமையில் கொஞ்சமும் இருவரும் சளைத்ததில்லை. மாலை நேரம் கைகோர்த்து விளையாட்டில் ஈடுபடும் அதேவேலை, வீட்டுப் பாடங்களையும் செவ்வனே செய்து முடிப்பதில் இருவரும் என்றும் முதன்மையே.

    சின்னதாய் செல்லச் சண்டையிடுவதும், சிறிது நேரத்தில் சேர்ந்துகொள்வதும் வழமையாகிப்போனது அவர்களினிடையே. ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளி பெற்று இருவரும் பாடசாலைக்கு நற்பெயர் வாங்கித்தந்து, நகரத்துப் பெரிய பாடசாலைக்குத் தெரிவாகினர். அங்கும் திறமையில் குறையாமல் பயின்று சாதாரண தரப் பரீட்சை வரை சென்று பரீட்சையை எதிர்நோக்கினர். அங்கேயும் வெற்றி அவர்களை விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து இருவருக்கும் சிறந்த பெறுபேறுகள். இருவரும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று உயர்தரத்தில் காலடி எடுத்து வைத்தனர்.

    பெற்றோருக்கு தாங்கொனா மகிழ்ச்சி வெள்ளம் மனதிலே. ரவியையும் சுகந்தனையும் பாராட்டிச் சேர்த்தனர் உயர்தரத்தில். இருவரும் ஒருமனதோடு விஞ்ஞானப் பிரிவைத் தெரிவு செய்தனர். வைத்தியர்களாவதே இருவரினதும் கனவாக இருந்தது அன்று. பேரானந்தத்துடன் உயர்தரத்தில் கல்வி கற்கத் தொடங்கினர். விசேட வகுப்புக்களையும் குழுவகுப்புககளையும் தொடர்ந்து கற்றதோடு , தெரியாத கேள்விகளை தம் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவாக்கிக்கொள்ள இருவரும் என்றும் பின்வாங்கியதில்லை. “முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்” என்ற பெரியோரின் வாக்கிற்கமைய உயர்தரப் பரீட்சையை சிறப்பாக எழுதி முடித்தனர். பரீட்சை முடிந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பல கற்பனைகளை பகிர்ந்துகொண்டனர்.

    இப்படி நடவடிக்கைகள் ஓடிக்கொண்டிருக்கையில், ரவியின் தந்தை சற்று சுகவீனமுற்றார். வைத்தியப் பரிசோதனைகள் செய்தனர். பரிசோதனைகளின் முடிவில் இதயத்தின் மூன்று வால்வுகள் “கொலஸ்டரோல்” அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தாமதித்தால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படுமென வைத்தியர் குழு தெரிவித்தனர்.

    இருள் சூழ்ந்த நிலையில் ரவியின் குடும்பம் … ரவியின் குடும்பத்தில் ஐந்துபேர். மூத்தவன் ரவி. தாய் தந்தை மற்றும் இரண்டு இளைய தங்கைகள். அனைவரின் பொறுப்பும் ரவியின் கையிலே. குடும்ப சுமையை சுமந்த தந்தை நினைவின்றி படுக்கையிலே இருக்கும் நிலை பார்த்து இடிந்துபோன நிலையிலே நிற்கின்றான் ரவி. நண்பன் சுகந்தனின் அன்பான வார்த்தைகளாலே ஒரளவு தெளிவு பெற்றான்.

    வைத்தியக்குழுவோ சத்திரசிகிச்சைக்கான திகதியை முடிவு செய்தது. பணத்தை எல்லோருமாக சேர்ந்து தேடி ஒருமாதிரியாகக் கட்டிவிட்டனர். அதற்கு ரவியின் பாடசாலை மற்றும் நகரத்து வணிகர்கள் சிலர் என உதவியும் செய்தனர். இறைவனை வேண்டிக்கொண்டு குறித்த நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரவியின் தந்தை. இதற்கிடையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் நாளும் நெருங்கியது. எதுவுமே ரவியின் மனதில் நினைவில் இல்லை. தந்தையைக் காப்பாற்றுவதே ஒரே நோக்கமாக இருந்தது. கவலையிலேயே அன்றைய தினம் முடிந்தது. மறுநாள் அவசர அழைப்பொன்று வைத்தியசாலையிலிருந்து கிடைத்தது.

    உடனே ரவியும் சுகந்தனும் அவசர அவசரமாக எழுந்து ஓடோடிச் சென்றனர் வைத்தியசாலைக்கு. அங்கே ஓர் பேரதிர்ச்சி! தந்தை வைத்திய சிகிச்சைப் பலனின்றி காலமானார் என்ற செய்தி ….. இடிந்துபோனான் ரவி. உலகமே இருள் சூழ்ந்தது. துயரம் சொல்லில் அடங்கவில்லை. ஒருவாறு தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தனர். ரவியின் குடும்பம் நிர்க்கதியான நிலைக்குள்ளானது. இரண்டு மூன்று தினங்களின் பின் பெறுபேறுகள் வெளியாகின. ரவியும் சுகந்தனும் உயர்தரத்தில் உயர் புள்ளிகள் பெற்று மருத்துவப் பீடம் தெரிவாகினர். பேராதனைப் பல்கலைக்கழகம் இவர்கள் இருவருக்கும் கிடைத்தது. ஒருபக்கம் மகிழ்ச்சி, மறுபக்கம் துக்கம்.

    இதற்கிடையில் ரவி தவித்துப்போனான். குடும்ப சுமையை சுமக்க வழி தெரியாது தடுமாறினான். அப்போது பத்திரிக்கையில் வெளியான ஒர் விளம்பரத்தைப் பார்த்தான் ரவி.”வேலை ஆட்கள் தேவை” தனியார் வெளிநாட்டு நிருவனமொன்றின் விளம்பரமது. உடனே விண்ணப்பிக்கின்றான். இது பற்றி சுகந்தனிடமும் சொல்கின்றான். சுகந்தனுக்கு ஒன்றுமே செய்யமுடியவில்லை. நண்பனுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதைத் தவிர. சில நாட்களில் வேலையும் கிடைத்தது. உடனே வருமாறு வெளிநாட்டுத் தூதரகம் பணித்தது. வறுமையை தன்மேல் சுமையாக்கிக்கொண்டு வெளிநாடு போக ரவி முடிவு செய்தான். கண்களில் கண்ணீர் நிறைய பெற்ற பெறுபேறுகளையும் விட்டுவிட்டு வெளிநாடு போக தயாராகினான். பிரிவின் ரணம் அவனை கொஞ்சம் கொஞ்சமாய் வாட்டத் தொடங்கியது. ரவியின் ஆசிரியர்களும் சுகந்தனும் அவனை மருத்துவ பீடம் போகச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இருந்தும் அவன் அதற்கு உடன்படவில்லை. குடும்பத்தை காப்பாற்றுவதே கடமை என நினைத்தான். நண்பன் சுகந்தனை அழைத்தான்.

    “நல்லதோர் வைத்தயனாக வெளியேறுவாய் என் நண்பனே” என்று அவனிடம் கூறிவிட்டு தன் பொதிகளை அடுக்கத் தொடங்கினான். சுகந்தன் கண்ணீரோடு ரவிக்கு பிரியாவிடை வைக்க ஒழுங்கு செய்தான். மனதில்சுமையோடு ரவியும் இதற்கு ஒத்துக்கொண்டான். மறுநாள் சுகந்தனின் வீட்டுக்கு ரவி வந்தான். சுகந்தனின் வீட்டில் எல்லோரும் ரவிக்கு வாழ்த்துச் சொன்னார்கள். நண்பன் சுகந்னின் கண்களில் கண்ணீர் மழை. நண்பனை கட்டித் தழுவி உயிரையே இழந்ததாய் “ஓ ” வென்று கதறி அழுதான். இருவருக்கும் தாங்களை சுதாகரித்துக் கொள்ள முடியவில்லை.

    இரு உள்ளங்களும் பிரியாதே வார்த்தைகளால் விடைகொடுத்துக் கொண்டனர். சுகந்தனின் நினைவுச் சின்னமாக அழகிய கைக் கடிகாரமொன்றை பரிசாகக் கொடுத்தான். “ஓடுவது முற்களில்லை நண்பா உன்னை நான் மீண்டும் காண்பதற்கான கால இடைவெளி” என்று கூறி அவன் கையிலே கொடுத்தான். இன்று இரவு முழுதுமே ரவியின் ஞாபகம் தான் சுகந்தனுக்கு. அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு ரவி வீட்டைவிட்டு புறப்பட்டான். முதல் முறை பிரிவை சந்திப்பதில் என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு. மீண்டும் ரவியும் சுகந்தனும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். ரவியின் தாயும் தங்கைகளும் கண்ணீரோடு நின்றனர். ரவி இப்போது உள்ளே பொதிகளை சரி பார்க்கச் சென்றாகவேண்டும். ஒன்றாய்த் தட்டி ஓசை வந்த இரு கைகளும் பிரியாவிடை கொடுத்தன. தொலைவில் கையசைத்த நண்பனின் விம்பம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்தது.

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    வேலையும் நல்ல வேளையும் கூடிவரும்
    மேலவன் தானெழுதி வையகம் தந்திட்டத்
    தூயநூல் வள்ளுவம் பற்றிடக் காண்பீர்                valluvar
    மெய்யென வாழும் உலகு!

    எதுவரின் வந்தது நல்லவை நிற்கும்
    கொடுசெய் நீக்கும் திருக்குறள் வல்லமை
    தானறிவர் அவ்வழிசெல் ஆன்றோர் – மற்றார்
    தான்தேடித் தாள்பணி வர்!

    தெளிவுநற் சிந்தனைக்குத் தேடுதினம் வள்ளுவம்
    சேர்க்கும் அறிவுடை நெஞ்சம் – சிறந்திடும்
    வாழ்வும் போற்றிநல் மூத்தோர் விளங்கச்
    செய்திடும் நன்னூல் குறள்!

    தன்வலி தானறிய மாற்றான் வலியுணரத்
    தேற்றிடும் வாழ்வைத் திருக்குறள் – சேயுயிர்த்தாய்
    போல அணைக்கும் மந்திரம் சொல்லப்
    பொசுக்கும் துன்பம் அழித்து!

    பல்லுயிர் பேணும் மனதில் தெய்வமும்
    தங்கித் தடைகளை ஓட்டித் – திருக்குறள்
    ஓதும் பழக்கத்தைக் காட்டித் தினமும்
    ஒற்றுமை ஓங்கிடக் காண்!

     

    Share
  • அக்கம் பக்கம்

    ஸ்ரீதரன்

     

    காலை நேரத்தில் ரயில் வண்டி செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. ராமேஸ்வரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் வண்டி அது. ஒரு இளைஞன் ரயிலில் ஏறி எஸ் 7 கம்பார்ட்மெண்டில் அமர்ந்தான். அவன் முகம் குழப்பமாக இருந்தது. அவனுக்கு எதிரே ஒரு வயதான தம்பதியர் அமர்ந்திருந்தனர்.

    அப்போது அலைபேசி ஒலித்த்து. அவன் எதிரே இருந்த பெண்மணி அதை எடுத்துப் பேசத் தொடங்கினாள்.

    “ ஹலோ, வித்யாவா ? நான் அம்மா பேசறேன். திருச்சியில் சந்துரு மாமா பேத்தி கல்யாணத்திக்குப் போய்விட்டு ரயில் நானும் அப்பாவும் வந்து கொண்டிருக்கோம். கல்யாணத்தில் எல்லோரும் உன்னை விசாரித்தார்கள். ஆமாம் உன் புருஷன் விச்சு ஊருக்குப் போய்விட்டானா? குழந்தை ராது சமுத்தா இருக்காளா? “

    “……………………….”

    ” என்ன? விச்சு  பெங்களுரு போய் வேலையிலேச் சேர்ந்து விட்டானா ? நீ எப்போ பெங்களுரு போகப் போறாய்? “

    “………………………..”

    “ நீ இப்போ காஞ்சிபுரத்தில் உன் மாமியார் வீட்லே இருக்கியா? அங்கிருந்தே பெங்களுரு  போகப்  போறயா? உன் சாமான்களையெல்லாம் எப்படி அனுப்புவே?

    “……………………….”

    “ சாமான்களையெல்லாம் உன் வீட்லே கட்டி வச்சிருக்கியா ? பெங்களூரு அட்ரெஸ் அட்டை பெட்டி மேலே எழுதியிருக்கியா ? நான் அப்பாகிட்டே சொல்லி லாரியில் அங்கு  அனுப்பி வைக்கிறேன். உன் நகையை லாக்கரில் வைச்சுட்டயா?”

    “…………………”

    “ உன் நகையெல்லாம் பத்திரமாய் எவர்சில்வர் சம்படத்தில் வைச்சிருக்கியா? நான் எடுத்து லாக்கரில் வைச்சுடறேன்.

    “……………….”

    ” உன் வீட்டு அட்ரெஸ்தானே? முதல் மாடி, 22, நடுதெரு , நங்க நல்லூர் என்க்கு நல்லா தெரியுமே. ஆமாம் சாவி  யார் கிட்டே இருக்கு ? “

    “………………….”

    எதிர் பிளாட்டிலே இருக்கிற பட்டாபி சார் வீட்டிலே இருக்கா. வித்யா சாவியை வாங்கிக்கச் சொன்னான்னு சொன்னா சாவியைக் கொடுப்பாரா . ரொம்ப சரி.”

    “……………………”

    “ நீ எதுக்கும் கவலைப்படாதே. வீட்டுக்குப் போனதும் அப்பா குளிச்சி , சாப்பிட்டு விட்டு ஒரு லாரியை ஏற்பாடு செய்துண்டு உன் வீட்டுக்குப் போவார். இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ளே சாமானை எல்லாம் பெங்களுரு அனுப்பி விடுவார்.”

    “………………………”

    “ தாம்பரம் வந்தாச்சு. பேசினது போதும். அலைபேசியைக் கொடு” என்றார் அந்தப் பெண்மணியின் கணவர்.

    ” நான் சமத்தா எல்லா விவரமும் கேட்டுத் தெரிஞ்சுண்டேன் பார்த்தேளா” என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

    எதிரே அந்தப்  பெண்மணி பேசியதை எல்லாம் தன் மனத்தில் பதிவு செய்து கொண்ட அந்த இளைஞன் அப்போதுதான் செங்கல்பட்டு சிறைச்சாலையிலிருந்து விடுதலை ஆகி வந்தவன். பிழைப்புக்கு என்ன வழி ? என்று யோசித்துக் கொண்டிருந்தான். ” நேராக போய்  லாரியை வாடகைக்கு எடுக்க வேண்டும் ” என முடிவு செய்து கொண்டு  தாம்பரம் ரயில் நிலையத்தில் மகிழ்ச்சியோடு இறங்கினான்.

                      ********  நிறைவு  ******************

    Share
  • வாஷிங்டனில் வசந்தம் !

    -ரா. பார்த்தசாரதி

    எங்களை வரவேற்றது வாஷிங்டன் விமான நிலையம்
    பன்னீர்த்துளியெனத்  தெளித்தது  பனித்துளி
    சற்றே தயக்கமும் நடுக்கமும் அடைந்தோம்
    அமெரிக்காவின் மழைத்துளிக்கா? பனித்துளிக்கா?

    இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்
    மலர்கள் பல நிறங்களில்  மிளிர்வதைக் காண்கின்றோம்
    மனிதர்கள்முகமலர்ச்சியுடன் வரவேற்பதைக்  கண்டோம்
    எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்!

    பூத்துக் குலுங்கும்  புதுமலர்கள் அசையப்
    புதிதாய்த்  தளிர்த்துப்  புன்னகை புரிய
    மகிழ்ச்சியில்   நாங்கள்  பூரிப்பு அடைய
    வரவேற்றதே   வசந்தமே  வருக  வருக  என!

     

    Share
  • மெல்ல … மெல்ல மெல்ல …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    மெல்ல … மெல்ல மெல்ல …

    அஞ்சுதலும் கெஞ்சுதலும் ஆசையினால் கொஞ்சுதலும் காதலிலே காணும் நிலை! உள்ளமலர் சிலிர்த்திடும் ஒவ்வொரு நொடியிலுமே பெண்மையங்கே பேசாமல் தவித்திருக்கும்! கண் வரைந்த ஓவியத்தைக் கண்ணெதிரே கண்டாற்போல் கவிதை சொல்லத் தித்திக்கும்! இருவரல்ல நாம் இனி ஒருவரென்றே ஓடிவந்து ஒன்றையொன்று சந்திக்கும்! வார்த்தைகளே வாராமல் சொல்லெடுக்க முயலும்போது வெட்கமது திரையிடும்! இத்தனைக்கும் இடையினில் காதலனின் கரங்கள் தன்னைப் பற்றிட முற்படும்போது…

    மெல்ல மெல்ல மெல்ல2மெல்ல… மெல்ல மெல்ல
    எந்தன் மேனி நடுங்குது மெல்ல
    சொல்ல… சொல்லச் சொல்ல
    நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல

    பணமா பாசமா திரைப்படத்திற்கா, திரை இசைத் திலகம் கே. வி.மகாதேவன் அவர்களின் இசையில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கவியரசு கண்ணதாசன் இயற்றிய காதல் நீலாம்பரி ஒலிப்பது டி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா குரல்களில்!

    உச்சி முதற்கொண்டு பாதம் வரை – இங்கு
    ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…
    மிச்சம் இருப்பதை நாளை என்று – நெஞ்சில்
    மின்னிடும் ஆசையை என்ன சொல்ல

    மெல்ல மெல்ல மெல்லஅன்பின் மடியில் ஆசைக்கிளிகள் ஆலோலம் பாட..
    இன்ப மழையில் இதயம் நனையும் ‘சுகம்’ சுகம்தான் என்ன?
    பட்டுத் தெறிக்கும் முத்தைப் போல சொற்கள் ஓடி வர – அதைக்
    கட்டும் படுத்திக் காட்டும் இங்கே பாருங்களேன்!

    தாமரைப் பூவினில் வண்டு வந்து
    தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள …
    உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
    உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்..

    ஆண்டுகள் பல ஆனபோதும் மாண்டுவிடாத பாடல்!
    இன்பத் தேன்வார்க்கும் நிலைகள் பரவிக்கிடக்கும் சூழல்!
    கைகள் படுவதற்கும் கட்டியணைப்பதற்கும் இதமானபோது
    சொல்ல இனிக்கின்ற சுகமான பாடல்! சொர்க்கத்தின் தாழ் திறக்குமன்றோ?

    மெல்ல… மெல்ல மெல்ல …

    மெல்ல… மெல்ல மெல்ல
    மெல்ல… மெல்ல மெல்ல
    எந்தன் மேனி நடுங்குது மெல்ல
    சொல்ல.. சொல்லச் சொல்ல
    நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
    மெல்ல…

    உச்சி முதற்கொண்டு பாதம் வரை – இங்கு
    ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…
    மிச்சம் இருப்பதை நாளை என்று
    மிச்சம் இருப்பதை நாளை என்று – நெஞ்சில்
    மின்னிடும் ஆசையை என்ன சொல்ல
    மெல்ல…

    அத்திப் பழத்துக்கு மேலழகு – உந்தன்
    ஆசை பழத்துக்கு உள்ளழகு …
    தத்தித் தவிக்கின்ற பொன்னழகு
    தத்தித் தவிக்கின்ற பொன்னழகு – உன்னைத்
    தழுவத் துடிக்கின்ற பெண்ணழகு
    மெல்ல…

    தாமரைப் பூவினில் வண்டு வந்து
    தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள …
    உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
    உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
    உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்..
    ஆடுகின்றாய்.. ஆடுகின்றாய்..
    மெல்ல…

    மேலைத் திசையினில் போய் உறங்கும் – கதிர்
    மீண்டும் வரும் வரை நம் உலகம் …
    காலைப் பொழுதினில் சிந்தனைகள்
    காலைப் பொழுதினில் சிந்தனைகள் – மறு
    மாலை வரும் வரை கற்பனைகள்
    மெல்ல…

    ஒன்றிலிருந்தே ஒன்று வரும் அந்த
    ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்…
    ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
    ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
    நாம் ஒன்று இரண்டு என்பதுமில்லை
    மெல்ல…

    காணொளி: https://www.youtube.com/watch?v=1J0ixlJPt5U

    Share
  • வட்டங்களில் வட்டம் …

    –கவிஜி.

     

     


    வட்டம், நிலா வட்டம், பலா வட்டம், தோசை வட்டம், இட்லி வட்டம், பானையின் வாய் வட்டம், சக்கரம் வட்டம், மின் விசிறி வட்டம், மைதானம் வட்டம், மாநகரம் அடக்குவது வட்டம், மா வட்டம், கழிவறை குழி வட்டம், கணக்கின் பூஜ்யம் வட்டம், தட்டு வட்டம், தட்டை முறுக்கு வட்டம், கருவிழி வட்டம், கால் கொலுசு வட்டம், பொட்டு வட்டம், தோட்டா வட்டம், மாங்கல்ய கயிறு வட்டம், மத்தளம் வட்டம், ரோஜா பூ வட்டம், தேன் அடை வட்டம், சூழ்ச்சிப்படை வட்டம், புள்ளி வட்டம், மல்லி வட்டம், குறுந்தகடு வட்டம், மூடி வட்டம், சுழற்காற்று வட்டம், நியூட்ரினோ வட்டம், பூமி வட்டம், பால்வீதி வட்டம், கோள்கள் வட்டம், பந்து வட்டம், இப்படி வட்டங்களில் சுழல்கிறது வாழ்க்கை. வாதிட வாதிட வாதங்கள் முடிவது வட்டங்களில். வெற்றிகள் தோல்விகள் சுழலுவது, சந்திப்பது வட்டங்களில். நீ நான் என்பது ஆரம்பிப்பது வட்டங்களில். நீ நான் என்பது முடிவது வட்டங்களில். மனக் கிணறு வட்டம், எழும் குமிழிகளில் வட்டம்.

    சிந்தனையின் சங்கமம் வட்டம். உற்று பயணிக்கையில் தூக்கம் மூழ்கி போவது வட்டங்களில். உண்மை, பொய், தத்துவம், இருப்பது, இல்லாமல் போவது யாவும் வட்டங்களில் என்பதான தோற்றம் வர வைக்கும் வட்டம். வட்டம் ஒரு மாயை என்று ஒரு ஆரம்பம் தளைக்கட்டும். வட்டம் பற்றிய சிந்தனை விழுந்த நொடி நின்று போன ஒரு வட்டமாக இருக்கலாம்,விழுகின்ற மழைத்துளி வட்டம், என்று வளர ஆரம்பித்த வட்டங்களில் சுற்றி விளையாடும் மனநிலைக்குள் ஊறிக் கொண்டிருக்கும் புதையல் பானைகள் வட்டமாக இருக்கின்றன.

    புத்தன் ஏசுவின் கால் தடங்களில் வாழ்க்கை சூட்சுமம் வட்டமாக படிந்து கிடப்பதாகவே எண்ணுகிறது. இந்த வட்ட மேசை மாநாடு, மாநாடு நடத்தும் மனிதனின் மௌனங்கள் வட்டங்களில் இருந்தே திட்டம் தீட்டுவதாக நம்புகிறது. ஒரு வட்ட புகை மண்டலம் ஆதி மனிதனையும், நாளைய மனிதனையும் இணைக்கும் சங்கிலி வட்டமாகத்தான் இருக்க முடியும். பெரிய பெரிய ஞானிகளின் சிந்தனை வடிவம் வட்டத்தின் விரல் பிடித்தே நடக்கிறது. பெரிய பெரிய அழிவுகளின் கோரம் வட்டங்களின் வழியாகவே தாண்டவமாடுவதாக ஒரு வட்ட முடிவு ஏற்படுகிறது.

    ஆக்சிஜனின் அறிவியல் பெயர் வட்டத்தில்தான் இருக்கிறது. மரணம் என்ற சொல்லில் மறைந்திருக்கிறது வட்டங்கள். வட்டங்களாய் தெறித்து விழும் குமிழ்களின் ஈரத்தில் அகன்று சுருங்கும் விழிகளுக்குள் உருள்கிறது வட்டங்கள். உருவமில்லாத வட்டங்களே காதலிலும் உருள்கிறது. விரலிலும், விதியிலும் வட்டம் இருப்பதை வரைந்து சொல்கிறது. படைப்புகளும் படைப்பாளிகளும் பயணப்படும் கூற்றுகளில் வட்டம் இருப்பதை வட்டமடித்து சொல்லும் கழுகு.

    வட்டமாய் சுருண்டு கிடக்கும் காகிதத்துக்குள் வாதங்களின் தொகுப்பாய் இந்த வட்டக் கட்டுரை. வட்டம் இல்லை என்பவர்கள் ஒரு முறை கண்களை சுழற்றிக் கொள்ளுங்கள் …

    Share
  • படக்கவிதைப் போட்டி 24-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படம் தந்தவருக்கும் அதனைத் தேர்ந்தெடுத்துத் தந்தவருக்கும் வல்லமையின் நன்றி!

    lady with veena

    காந்தள் மெல்விரல் சிவப்பப்
       -பாந்தமாய் யாழ்மீட்டும் பெண்ணே!
    காந்தமாய் உன்னெழில் ஈர்க்கப்
       -பாய்கிறது கவிதையெனும் வெள்ளம்! என்று பாடுமளவிற்குக் கவிமழை பொழிந்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள் இவ்வாரம்!

    இனி, கவிவெள்ளத்தில் நீந்துவோம் வாரீர்!

    ’நங்கையிவள் நளின விரல்கள், நம்மில் இல்லாமல் போன இசைவரிகளைப் பதிந்துகொண்டிருக்கின்றன இப்பொன்மாலை வேளையில்…’ என்கிறார் திரு. கவிஜி.

    …தீப் பிடித்துக் கொண்ட
    தலை விரித்தலில்
    இருண்மைத் தத்துவ
    புறாக்களின் அணைந்த
    வாசத்தோடு
    ஒரு மாலையை
    பதிந்து கொண்டிருந்தது…
    நம்மில் இல்லாமல்
    போன
    இசை வரிகள்…

    ***

    ஆத்மாவுக்கு உயிரூட்டும் இசையில்லையேல் புவியும் பாலையாகும்; இசைவெள்ளம் பாய்கையில் பாறையும் பாதைவிடும்; கல்லும் கரையும் என்று உணர்ச்சிப்பெருக்கோடு அற்புதக் கவி வடித்திருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    இசைதான் ஆத்மாவுக்கு
    உயிரூட்டும் !
    […]
    கான
    வெள்ளம்
    ஓடும் போது
    கல்லும் கரையும் !
    புல்லும் பசுமை யாகும் !
    பாதை விடும்
    பாறையும் !
    பிறவிப் பயனே
    நாத வீணையில் எழும்
    கீதம் கேட்பது !
    ‘
    நலந்தானா,’ எனும் கண்ண தாசன்
    நாதஸ்வர இசைப் பாடல்
    காதில் விழும் போது
    இனிக்குது ! இனிக்குது !
    தேனாய் இனிக்குது !
    […]
    இசைக்கலை
    இல்லையேல்
    இப்புவியும்
    பாலையாய்ப்  போகும் !

    ***

    மடிதவழும் வீணையை மங்கையவள் மீட்டுகையில் அசையும் விரல்களின் அழகை வியக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    மடிதவழும் வீணையை மங்கையவள் மீட்ட 
    கடிதுவரும் கூட்டமுடன் காக்கை –பிடித்த 
    இசையில் லயிக்க இனிமை ததும்ப
    அசையும் விரல்கள் அழகு. 

    ***

    மணமேடைக் கோலத்தைத் தன் மனமேடையில் அழகாய் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த ஆரணங்கு, கையில் வீணையுடன் கல்யாண ராகங்களையும் இசைத்துப்பார்க்கிறாள் என்கிறார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.

    மணமேடைப் பயணமது  
    தொலை தூரமில்லையென 
    நாணமுகத் தாமரையும்  
    சற்றே குனிந்து  சிவந்திட 
    காற்றலைந்த கார்கூந்தல்  
    ஏதோ ரகசியம் சொல்லிட 
    மடியேந்திய மரகதத்தை  
    மோகனத் தளிர்விரல்கள் 
    மௌனத்தந்திகளைத் தழுவிடவே   
    […]
    கன்னியவள்
    மனமேடை 
    கண்ணிறைந்த சிருங்காரம் 
    காலமெனும் மணல்மேடையில் 
    உயிர்த்தந்திகள் மீட்டெடுக்கும் 
    கல்யாணராகங்கள் இசைத்திடும் 
    ஆனந்த வேளையிது….!

    ***

    ’உன் கார்மேகக் கூந்தலும், குளிர்மதி முகமும், படபடக்கும் இமைச்சிறகுகளும் என்னை வேரோடு சாய்க்கின்றனவே’ என்றுக் காதல் சொட்டும் கவிதையொன்றைத் தந்திருக்கிறார் திருமிகு. கார்த்திகா.

    …செஞ்சாந்துக் குழம்புகள் 
    தொடாமலே விரல்நுனிகள் 
    சிவக்குமடி ….கீதங்கள் தோற்கும்!

    பூவொன்று வந்தமர்ந்ததாலே 
    நிலமிங்கு மலர்ச் சொரியுதே..
    புள்ளினங்கள் ஆனந்த பள்ளு
    பாடித் திரியுதடி!
    […]
    மேகங்கள் உடுத்தி 
    வானவிற் கவிதையாய் 
    குளிர் முழுமதிக்  
    கண்களில் படபடக்கும் 
    இமைச் சிறகுகளால் 
    எனை சாய்ப்பது ஏனடி!!

    ***

    ’கருநிறப் புறாவே! நீ வெண்புறாவாய் மாறிச் சாந்தியும் சமாதானமும் நிலவும் உலகைப் படைக்கமாட்டாயா?” என்று பூவையொருத்தி தன் ஏக்கத்தை வீணையில் விளம்புவதைக் காண்கிறோம் திருமிகு. லட்சுமியின் கவிதையில்.

    …வான்வெளியில் சிறகடிக்க
    தனக்குரிய  இடத்தை 
    எந்நாளும் தாரைவார்க்க
    அமைதிப்பூங்கா அதிபதி
    தமிழ்ப்பேடை அனுமதியாள்!
    […]
    இன்னொருமுறை
    வெடிகுண்டுப் பாடம்
    படிக்க தமிழ்ப்பேடை தயாரில்லை!
    அமைதிப்பூங்காவில் தமிழ்மகள் ரோஜாக்கள்
    அமைதியாக உறங்குகின்றன!
    அனாதைகள் யாரும் அவர்களாய்
    பிறப்பதில்லை!
    […]
    பறந்துவிடு
    ! உரிமையான
    பங்கிருந்தால் உணர்ந்து
    வெள்ளைப்புறாவாய் மாறி
    அதனை வென்றுவிடு!
    அர்த்தமற்ற அனர்த்தங்கள்
    இனியாவது இல்லாமலிருக்க
    மனதை மாற்றிப் பறந்திடுவாய்!
    […]
    தமிழ்ச்சுவையால் மட்டுமே
    ஒருங்கிணைந்தோமன்றி
    வேறெதாலும் அல்ல
    என்றே உணர்ந்திடுவாய்!…

    ***

    ’மாசில் வீணையை மீட்டிக் கானல்வரியிசைக்கும் காரிகை மாதவியை ஒத்த மாதிவள்!’ என்று இப்பெண்ணைப் போற்றுகிறது திரு. ரா. பார்த்தசாரதியின் கவிதை.

    மாசில் வீணையும் மாலை மதியமும்,
    வீசு தென்றல் விளங்கிடவே
    நாவுக்கரசின்  சொல்லிசை செப்பிடவே
    வீணையில் எழும் நாத  இன்பம்
    கலைமகள் எழுப்பிடும் கைவண்ணம்
    வாணியை நினைந்து காரிகை வீணை மீட்டுகிறாள்
    தன் விரலால் இன்னிசையை கூட்டுகிறாள்
    மாதவி போல் கடற்கரையில் கானல்விரி பண் இசைக்கின்றாள் !

    ***

    ’கைகள்முளைத்து வீணையிசைக்கும் இச்செந்தாமரை கண்டு கரகோசம் செய்கின்றன பறவைகள்!’ என்ற திரு. சாக்கிரின் சுவையான கற்பனை நன்று!

    தரையினில் செந் தாமரை இதழிற்குக்
    கைமுளைத்து
    வீணையையேந்தி விரலசைத்து – அதன்
    நரம்புகள் துடிக்கவைத்து
    காற்றின் அணுக்கள் அதிர வைத்து
    அதன் அமைதியை அ லங்கரிக்க
    சிறகடித்து படபடத்து கரகோசம் செய்தாடுதே பட்சிகள் அவளருகே

    ***

    பெண்ணையும் வீணையையும் அழகாகச் சிலேடையாக்கியிருக்கின்றார் திரு. பழனிச்சாமி.

    தேன்போல் மொழிவதால் தெய்வீகம் உள்ளதால்
    வான்போல் பொழிந்திடும் வன்மையால் – மேன்மையாய்
    வல்லவர்கை சேர்ந்து சிறப்புறும் தன்மையால்
    நல்லதோர் வீணையாம் பெண்.

    ***

    ’பொன்னகையை நிறமிழக்கச் செய்யும் புன்னகைச் செல்வியின் மென்கைகள் எனைத் தழுவ என் நரம்புகள் மெல்லிசையை வார்க்கும்’ என்கிறது வீணை திரு(மிகு?). மணிச்சிரலின் கவிதையில்.

    மென்விழியால் பொன்னகையும் தன்னிறமிழக்கும்
    மாடந்துறந்து ஆண்புறாவும் உன்பின்னலையும்
    மதிமயக்க உன்கரங்கள் என்மேல்தவழும்
    மங்கையின் மென்மடிபடர்ந்த என்னையிசைக்கும்
    மென்னொளியில் மெல்லிசையில் என்நரம்பதிரும்

    ***

    இசைக்குள் நீயும் உனக்குள் இசையுமாக ஓர் அத்வைதம் இங்கே அரங்கேறுகிறதே’ என்று வியந்துபோகிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    …வீணையின் மீதான
    உன் விரல் ஸ்பரிசம்
    ஞானத்தை ஆக்கும்
    நல் இசையாகி
    வெளியில் விரிந்து
    வேதனைத் தவிர்க்கும்

    இசைக்குள்  நீ
    உனக்குள் இசை
    அத்வைதம் ஒன்று
    அழகாய் இங்கே அரங்கேறுகிறது!

    ***

    பெண்ணிவளின் விரலெனும் குழந்தை வீணையை மீட்டக் கிடைக்கிறதே இசையெனும் சிணுங்கல் என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்; மெய்தானோ?

    இவளின் விரல்குழந்தை வீணை நரம்பில் 
    தவழ்கின்ற வேளை இசையாய் சிணுங்கும் 
    இவளின் மனமென்னும் வீணையை மீட்ட 
    எவருண்டு என்பதைக் கேட்டு.

    ***

    வீணை நரம்புகள் கொஞ்ச, கல்யாணி ராகம் கெஞ்ச, அணங்கிவளின் ராக வேள்வியில் நாகம்கூட மயங்கிப் படமெடுக்கும் என்பது திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் நம்பிக்கை.

    கலை மகள் கைப் பொருளாம் வீணை
    கையிலெடுத்து மீட்டிடுவாய் இசைத் தேனை
    கேட்போருக்கு உன் இசை தேவகானம்
    கவி விரித்து இசைக்கின்றாய் அமுதகானம்
    இசை பாடும் வீணை நரம்புகள் கொஞ்ச கொஞ்ச
    […]
    ஆடிவரும் தென்றலோ துஞ்ச துஞ்ச
    ஒப்பில்லா உன் மீட்டலுக்கு நாகம் கூடபடமெடுக்கும்

    ***

    விரகதாபத்தில் வீணைமீட்டும் வனிதையின் இசைவழியே தூது செல்லும் புறா, நல்ல சேதி கொண்டு வருமா? என்று வினவுகிறார் திரு. இளவல் ஹரிஹரன். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

    …தொட்டுத்தடவி மீட்டும் விரல்கள்
    இட்டுக்காட்டும் இசையின் இசைவில்
    தொலைதூரப் பணியில் இருக்கும்
    கணவன் காதுகளை எட்டும் விழைவில்…

    நெஞ்சக் கூட்டில் படபடக்கும் சிறகுகளால்
    கொஞ்சும் புறாவாய்த் துடிதுடிக்கும் மனதால்….

    விரகதாபத்தில் வீணைமீட்டும்
    இசைவழியே தூது செல்லும் புறா
    நல்ல சேதி கொண்டு வருமா……
    […]
    சோகத்தின் சுக ராகங்களில்
    தீரா விரகப் பெரு மூச்சுடன்…..
    இசைக்க மறந்த இராகம்
    எதுவென்று புரிந்ததா பெண்ணே…..!

    ***

    ’அச்சம் மடத்தையெல்லாம் துச்சமெனத் தூக்கியெறியச் செய்துவிட்ட என் விரகத்தின் உச்சம் இவ்வீணையின் வழியே இசையாய்க் கசிவது உன் காதில் விழவில்லையா?’ என ஏக்கப்பெருமூச்சுவிடும் ஏந்திழையைக் காட்டுகிறார் திருமிகு. புனிதா கணேசன்.

    …கம்பீரமான உன் நடையின் ஞாபகங்கள்
    கம்பீர நாட்டையாகி என் வீணைத் தந்திக்
    கம்பிகளின் நாதமாய் கலந்தே நடமிட்டு ……….
    […]
    அச்சம் மடம் நாணம் பயிர்ப்பிழந்து என் காதல்
    கச்சிதமாய் உன் சிருங்கார நினைவுடனே……….
    […]
    காலைப் பனியின் உருக்கம் கதிரவன் வரவில்
    சோலைக் குயிலின் கீதம் முகாரியாக நின்
    மேலான வரவின்றி என் வீணைத் தந்திகளில்…………
    ஆதலினால் பூங்காற்றுச் சுமந்து வரும் என்
    காதலின் கதன குதூகலங்கள் இன்னும் உன்
    காதில் கனிந்தே விழவில்லையோ?

    ***

    ’குடும்ப வாழ்க்கை எனும் வீணையையும் பெண்ணிவள் இசைவாய் மீட்டிட, நல்லிசை பிறக்கும்; துயரங்கள் பறக்கும்’ என்பது திரு. செண்பக ஜெகதீசனின் எண்ணம்.

    வீணை மீட்டிப் பண்பாடும்
    வாணி யொத்த பெண்மகளே,
    பேணும் குடும்ப வாழ்க்கையையும்
    பண்புடன் வீணையாய் மீட்டிடுவாய்,
    காணுவாய் கணக்கிலா ராகங்களை
    களிப்பெலாம் கொண்டு வந்திடுமே,
    துணென ஆவாய் குடும்பத்திலே
    துயரதைப்  போக்கிடும் உன்னிசையே…!

    ***

    பொன்னிகர்த்த பெண்ணின் கரத்தில் இலாவணியமாய்த் தவழும் தஞ்சாவூர் வீணையின் சிறப்பை நம் செவியினிக்கப் பேசுகிறார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    … தஞ்சையை
    ஆண்ட ரகுநாத மன்னன் காலத்திலுருவாகி
    ஈண்டது தஞ்சாவூர் வீணை என்றும்
    ஆண்டது ரகுநாத வீணை என்றும்.
    சக்தி அம்சம் சிவ அம்சமும்
    பொத்திய மெல்லிசை, நரம்புக் கருவி
    இலயித்திங்கு இரசித்து இலயம் தவறாது
    இலாவணியமாய் வாசிக்கிறாள் இளம் கோதை.
    […]
    பலாமரத்தி
    லுருவகமான அழகிசைக் கருவி.
    விலாவாரியான நுட்பங்கள் தத்துவங்கள் நிறையிசை.
    உலகளவு புவிசார் குறியீடு இதற்கு!
    ஆம்! தஞ்சாவூர் வீணையென அழைப்பு.

    ***

    ’கடலலைகளோடு போட்டியிடும் நாத அலைகளில் திளைக்கவே புறாவும் பறந்தோடி வந்ததோ?’ என்று ஐயமுறுகிறார் திருமிகு. தமிழ்முகில்.

    விரலின் ஸ்பரிசம் பட்டதும்
    இசையாய்
    தந்திகள் புன்னகைக்க
    கடல்
    அலைகளுக்கு போட்டியாய்
    நாத
    அலைகளும் – காற்றினில்
    கலந்து
    தவழ்ந்து வர
    எங்கும்
    நீக்கமற நிறைந்திருக்கும்
    இசையின்
    வாசம் தனை
    சுவாசிக்க
    – புறாவும் கூட
    பறந்தோடி
    வந்ததுவோ ? …

    ***

    ’ஆயிழை இவளின் இசையொலி கேட்டு ஆதவனும் மயங்குகிறான்’ என்பது திரு. செ. பாரதியின் கணிப்பு.

    குழந்தை யென வீணை
    மடி மீது தவழ
    சித்திரமாய் யுவதி யொருத்தி
    இசைத்துக் கொண்டிருகிறாள்
    சமுத்திர மணற்  துகள்களில்
    பகலை ஆண்டிட்ட
    ஆதவனும்
    புலம்பி அலையும்
    மேகக் கற்றைகளில்
    மயங்கிக் கொண்டிருக்கிறான்… 

    ***

    விரல் புண்ணுற வீணை மீட்டியபடிப் பெண்ணொருத்தி எழுப்பும் வினாக்களின் பட்டியலைக் காண்கிறோம் திரு. சத்தியமணியின் கவிதையில்.

    மடியினில் தவழ்ந்திடும் பொன்வீணையே  – பெண்
    மனதினில் எழுந்திடும் பலகேள்வியே
    விரல்கள்    புண்ணுறவே உனைமீட்டினேன் – மென்
    தந்திகள் அதிர்வினில் விடைகேட்கிறேன்  ()

    பேருடன் பிறந்தகத்தில் அலைமகளா பின்
    சீருடன் புகுந்தகத்தில் விலைமகளா
    கல்லான மனங்கண்டேன் மலைமகளா – மதி 
    இல்லாமல்  உனைமீட்டும் கலைமகளா
    இல்லற வாழ்க்கைதர கல்யாணமா ? – இல்லை
    இதுவும் ஒருவியாபார வைபோகமா ?   ()
    […]
    பெண்பாதி  ஆண்பாதி  சிவனாகினான்
    பெருமாட்டி  தன்நாவில் அயனேந்தினான்
    தாயாரை   தன்மார்பில் மால்தாங்கினான்
    ஓயாமல் சக்தியென புகழ்பாடினார்
    கற்பழிப்பு கருசிதைவு  இவை ஏற்பதா ?-  இனும்
    அவமதிப்பு ஆபாசம்! பெண் தோற்பதா? ()

    ***

    நல்ல சிந்தனைகளைக் கவிதைகளில் பெய்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தெரிவு செய்திருப்பதை இப்போது உங்களுக்கு அறியத் தருகிறேன்.

    ’நல்லதோர் வீணைகொண்டு நல்லிசையை நாளும் பயின்றால் மனமது தூய்மையுறும்; செயலது செம்மையுறும்; அகவிருள் அகன்றோடி அறிவொளி துலக்கமுறும்’ என்று வீணையின் வழியே வாழ்வியல் தத்துவத்தைப் பாங்காய்ப் பாய்ச்சியிருக்கின்றது பின்வரும் கவிதை…

    நாதம் தருமின்பம் நாளும் சுகமென்பேன்
    போதும் எனும்சொல்லே போகும் மொழியின்றி
    நானும் விரல்கொண்டு மீட்ட வரும்நாதம்
    வீணை விளக்கும் ஒருவாழ்க்கைத் தத்துவமே!
    வாழும் உலகினிலே வாழ்வும் பொருளாக
    எந்தன் ஓலிபோல இன்பம் பரப்பிடுக!

    மண்ணும் மயங்கிடுமே புள்ளும் உணர்ந்திடுமே
    மானுடம் போற்றும் இசையின் வடிவமெலாம்
    மங்கை உளத்தினிலே தெய்வம் குடிகொண்டு
    மாறும் உலகிற்கே வேராய் இருந்திடுமே
    பண்பு நெறிகளெலாம் தானாய் வளர்ந்திட்டு
    எண்ணம் மலர்வண்ணம் எங்கும் விரிந்திடவே!

    சொல்லில் வருமோசை கூட்டும் சுவைதனையே
    சுற்றம் வளர்ந்தோங்கி நல்லுறவும் பெற்றிடவே
    சுத்தம் மனதேகி உச்சம் செயலாக்கி
    சூழும் இருளகற்றும் நாதம் நமக்கென்றும்
    நல்லவை நாடுமென்றும் அல்லவை விலக்கிடும்
    நல்லிசை பயின்றிடுவோம்  நீடு உயிர்வாழ!

    தானும் தலைக்கேறா வீணை மனதிருந்தால்
    தானாய்த் தகைசேரும் நாதம் இணையாக!

    இக்கவிதையை இயற்றியிருக்கும் கவிஞர் திரு. சுரேஜமீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்துள்ளேன். பாராட்டுக்கள் கவிஞரே!

    ***

    வீணை ராகங்கள் வழியே தன் காதலை ஓதிடும் மங்கையொருத்திக்கு ஏழிசைச் சுரங்கள்கூடத் தன் காதலனின் நகைப்பெனக் காதில் விழுகின்றதாம்! விந்தைதான் அல்லவா!

    அக்கவிதை…

    …சத்தமில்லா மலென்
    உள்வளர்ச் சங்கது,
    என்மனக் காதலை
    ஓத வரும்…!

    நல்மனக் காதலன் 
    கள்தரும் காதலை
    புள்ளது பாடவே
    தேடி வரும்…!

    வாதமும் காதலின்
    தேனதைக் கோதவென்
    கார்குழல் தோளிலே
    ஆடி விழும்…!

    கைமுதற் கால்வரை
    ஊறுமென் காதலை
    வீணையின் தந்திகள்
    பாடிடு மோ?

    தீண்டினேன் தீண்டவும்
    வீணையும் தந்ததே
    நாயகன்  நகைக்கின்ற
    ஏழு சுரம்……!

    திரு. சுந்தர் புருஷோத்தமனின் இப்புதுக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

    ***

    உற்சாகத்தோடு தொடர்ந்து கவியெழுதுங்கள் தோழர்களே! மீண்டும் சந்திப்போம்!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”எத்தனை ஜென்மங்கள் யாமெடுத் தாலுமே,
    அத்தனே ஆயர் அணிவிளக்கே, -இத்தரையில்,
    கேசவ் கரங்களில் வாசம் புரிந்திடுவாய்
    தேசம்நூற் றெட்(டு)எமக்க தான்’’….கிரேசி மோகன்….

    தேசம் நூற்றெட்டு-திவ்ய தேசம் 108….

    Share
  • TIMES OF INDIA – Interview

    Crazy Mohan

     

    crazy1

     

    crazy

    crazy3

     

    crazy4

     

     

    Share
  • அறுபடையோன் புகழ்….

    images (2)
    “சொந்தப்பாக்(கு) ஆரணம் தந்தப்பா தென்பழனி
    கந்தப்பா சோணை கிரிநாதர் -சந்தப்பா ,
    என்தப்பா வெண்பா எழுத்தில் தளைதட்டல் !
    குந்தப்பா என்நாவுக் குள்”….கிரேசி மோகன்….

    ஆரணம் -வேதம்….

    அறுபடையோன் புகழ்….
    ——————————————
    திருவேரகம்(சுவாமி மலை)….
    ————————————-
    ”குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட
    தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள்
    வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
    ஏரகச் செல்வனை ஏத்து’’….(1)

    பழமுதிர்சோலை
    ——————–
    ”கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
    தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
    கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
    பழமுதிர் சோலைக்குள் புகு’’….(2)

    திருத்தணி
    ————–
    ”விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
    திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
    வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
    பொய்தீசல் சேராது போக்கு’’….(3)

    திருச்செந்தூர்
    ——————-
    ”மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
    கூறுபட வைத்த குருநாதா -சீறுகடல்
    செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
    சிந்தூர வண்ணனைச் சேர்’’….(4)
    பழனி
    ——–
    ”மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
    தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
    குன்றினில் கண்டு களித்திட காட்சிதரும்
    நின்றிடும் ஆண்டி நமக்கு”….(5)

    திருப்பரங்குன்றம்
    ———————–
    ’’குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
    தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
    தெய்வானை கைப்பிடித்த தேவ சகாயனை
    கைவாய்மெய் கொண்டு கருது’’….(6)….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    கேசவ், பிரமாதம்….ஓங்கி உலகளந்த ஓவியம்….

    ‘’கன்றதன் உச்சியைக் கண்ணன் முகர்தலும்,
    நின்றது நெஞ்சம் நெகிழ்தலும், -நன்றிது(சூப்பர்),
    கீதை ‘அ’வுக்களித்து, ஆதரவு ‘ஆ’வுக்கும்,
    காதல் ‘இ’வுக்கும் கொடுப்பு’’….கிரேசி மோகன்….

    ‘அ’வுக்கு கீதை-அருச்சுனர்க்கு கீதை
    ‘ ஆ’வுக்கு ஆதரவு-பசுவுக்கு வாத்சல்யம்
    ‘இ’வுக்கு-இராதை EVEவுக்கு காதல்…’ஈ’வுக்கு-ஈன்றவளுக்கு விஸ்வரூபம்….’உ’வுக்கு-உரலுக்கு மோட்ஷம்…. இப்படியாக பாகவத ஹரிச்சுவடி….

    Share
  • நினைவு நாள் : [August 5, 1945] Hiroshima Day ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

    ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

    [ஆகஸ்டு 6, 1945]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.dailymotion.com/video/x2e5ikv_hiroshima-nuclear-atomic-bomb-usa-attack-on-japan-1945_travel

    http://www.dailymotion.com/video/x259uwy_hiroshima-nuclear-atomic-bomb-usa-attack-on-japan-1945_people

    அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்!

    ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார். அவர்தான் அணுகுண்டின் பிதா! யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி! ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்! அணுகுண்டு ஓர் புதிய மரண யந்திரம்! வெடிக் கோளம்! விஷக் கோளம்! கதிர்க் கோளம்! கனல் கோளம்! ஒளிக் கோளம்! அழிவுக் கோளம்! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கி மடிவது பாமர மக்கள்! அணுகுண்டு வெடிப்பின் விளைவு, முடிவற்ற முடிவான மரணக் கோலம்!’

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் 1945 ஆகஸ்டு 6, அடுத்து 9 ஆம் தேதிகளில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் முதன் முதல் அமெரிக்கா மூர்க்க சக்தி பெற்ற அணு ஆயுதக் குண்டுகளைப் போட்டு, யுத்த அழிவுச் சரித்திரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கியது! ‘எநோலா கே ‘ [Enola Gay] என்னும் B-29 வெடி விமானத்திலிருந்து, காலை 9:14 மணிக்கு ‘லிட்டில் பாய் ‘ [Little Boy] என்னும் யுரேனியக் குண்டு [Uranium235] ஹிரோஷிமாவை நோக்கி விழுந்தது. பத்தரை அடி நீளமும், இரண்டரை அடி விட்டமுடன், 9700 பவுண்டு எடையுள்ள 15 கிலோ டன் TNT வெடிச்சக்தி கொண்ட அணுக்குண்டு 2000 அடி உயரத்தில் ஹிரோஷிமா நகரின் மையத்திலே வெடித்தது! சில நிமிடங்கள் கழித்து, பரிதிபோல் ஒரு பேரொளிச் சிவப்புக் கோளம் பொங்கி எழுந்தது! அதைத் தொடர்ந்து பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளந்து, ஒரு பிரளயமே உண்டானது! பதினொன்று மைல் தூரத்தில் திரும்பிச் சென்ற எநோலா கே வால் புறத்தை வெடி அதிர்ச்சி அலைகள் தாக்கி விமானத்தை ஆட்டியதாம்! நூறு மைல் தூரம் சென்ற பின்னும், கோள முகில் விமானியின் கண்களுக்குத் தெரிந்ததாம்! பிரம்மாண்டமான முகில் காளான் [Mushroom Cloud] தோற்றத்தில் பொங்கிக் குமுறி எழும் புகை மண்டலம்! நடுவே சிவப்பு நிறக் கோளம்! கோளத்தின் உட்கருவில் பொருட்கள் எரியும் கோரமான அனல் பிழம்பு! எங்கெங்கு பார்க்கினும், குவியல் குவியலாய்த் தீப்பற்றி அழிக்கும் கோரக் காட்சிகள்!

    ‘Little Boy ‘ யுரேனியக் குண்டு

    ஹிரோஷிமாவில் மட்டும் 160,000 பேர் உயிர் இழந்தனர்! அதில் 60,000 பேர் பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்து கரிந்து போயினர். 130,000 பேர் காய முற்றனர். இதில் 43,500 பேர் படு காயப் பட்டனர். குண்டு வெடிப்புக்குப் பிறகு ஐந்து வருட மரண எண்ணிக்கை மொத்தம் 200,000 ஆக ஏறியது. மரணக் கணக்குப்படி, இரண்டு நகரிலும் 20%-30% அனல் வீச்சில் மாண்டனர். 50%-60% மற்ற அபாயத்தால் செத்தனர். 15%-20% கதிரியக்க நோயால் காலமானார்கள். நான்கு சதுர மைல் பரப்பில் 68% நகரக் கட்டிடங்கள் மற்றும் 24% பகுதிகள் சில நிமிடங்களில் தூள் தூளாகித் தரை மட்டமாயின! எண்ணிக்கையில் 70,000 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன! நகர மாளிகை, தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம், தபால் நிலையம், ரயில்வே நிலையம், பள்ளிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள், தெரு மின்சார வண்டிகள், மின்சக்தி நிலையங்கள் முழுவதும் தரை மட்டமாயின! 13,000 அடித் தொலைவில் இருந்த தொலை பேசிக் கம்பங்கள் கரிந்து போயின! நகரின் மருத்துவ டாக்டர்கள் 200 பேர் [90%] செத்து மாண்டனர்; அல்லது முடமாகிப் போயினர்! நகரில் இருந்த 1780 நர்ஸ்களில் 1654 பேர் கொல்லப் பட்டார்கள்: அல்லது காய மடைந்தார்கள். இருந்த 45 ஆஸ்பத்திரிகளில் 44 முழுமையாகவோ, அன்றிப் பகுதியாகவோ தகர்க்கப் பட்டன.

    ‘Fat Man ‘ புளுட்டோனியக் குண்டு

    ‘ஃபாட் மான் ‘ [Fat Man] என்னும் 22 கிலோ டன் TNT அழிவுச் சக்தி கொண்ட புளுட்டோனியக் குண்டு [Plutonium239] நாகசக்கியில் விழுந்து, 1945 ஆண்டு முடிவு எண்ணிக்கைப்படி 70,000 பேர் செத்து மடிந்தார்கள்! 33% நகரப் பகுதி தரை மட்டமானது!

    வெடி அதிர்விலும், வெடிப்பு அலையிலும், வெப்பக் கனலிலும் அழிந்தவர் போக, மற்றும் ஊடுருவிப் பாய்ந்த அணுக் கதிரியக்கம் தாக்கிப் பல்லாயிரம் பேர் பட்ட தொடர் வேதனைதான் எல்லாவற்றிலும் மிக முக்கியமானது! மூர்க்கமானது! முடிவில்லாதது! ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் வெடியும், வெப்பக் கனலும் தாக்காமல் கடவுள் புண்ணியத்தில் தப்பியவர்கள், கடைசியில் கதிரியக்கம் தாக்கப்பட்டு, ‘கதிர்எமன் ‘ கையில் மெதுவாகச் செத்து மடிந்தார்கள்!

    மாபெரும் நகரம், நிமிடத்தில் மானிட நரகம் ஆனது!

    குண்டு வெடித்தபின் உஷ்ணம் 1 மில்லியன் ஏறும் என்றும், ஒளித் தீக்கோளம் 800 அடி விட்டம் விரியும் என்றும், ‘முகில் காளான் ‘ [Mushroom Cloud] 9 மைல் மேலே உயரும் என்றும், பின்பு உஷ்ணம் 15,000 ஊF ஆகக் குறையும் என்றும், அணுகுண்டு விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். வெடிமையத்தைச் [Hypocenter] சுற்றி 2 மைல் ஆரச் சுற்றளவில் உஷ்ணம் 5400 ஊF ஆகித் தீயில் எரிந்து கூடான மனிதரும், தீப்புண்களில் கரிந்து போனவர்களும் பலர்! வெடி அலைகள் வினாடிக்கு 2 மைல் வேகத்தில் அடித்து மனிதர்களைக் குப்புறத் தள்ளியது! மானிடரின் முகம் தீய்ந்து கருத்து, தலை மயிர் யாவும் எரிந்து பலர் புத்த பிச்சுக்கள் போல் காணப் பட்டனர்! அவர்கள் மேனியில் தோலுரிந்து, கரும் பிசாசுகள் நகர்ந்து செல்வது போல் நடமாடி, பாதையில் செத்துக் கிடந்தார்கள்!


    மானிட நரகம் ஹிரோஷிமா

    பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலே எரிந்து சாம்பலாயின! ஓடிய அணில்கள், வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின! நகர் முழுவதும் ஒளி மயத்தில் பளிச் சென்று ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது! மரங்கள் யாவும் எரிந்து பாலை வனக் கரும் நிழற் படங்களாய் நின்றன! தொலைபேசி, மின்சாரக் கம்பங்கள் யாவும் கரிந்து வளைந்து போயின! காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும், மனிதச் சடலங்கள் கணக்கில் அடங்கா!

    விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியோர் கண்கள் அவிந்து போய்க் குருடாயின! ஒரு குமரிப் பெண் கூறினாள், ‘ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும் எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்! எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்! ‘ ஒரு இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டது. அவள் முதுகு பூராவும் எரிந்து, கூனிப் போய்க் கதறிக் கொண்டிருந்தாள். உதவி ஆட்கள் அவளுடைய தாயைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தாயின் முகமும், உதடுகளும் வீங்கிப் போய், கண்கள் மூடியபடி இருந்தன! இரு கைகளிலும் தோல்கள் உரிந்து, ரப்பர் கையுறைபோல் தொங்கின! அவள் இடுப்புக்கு மேல் உடம்பில் எல்லா இடங்களும் கோரமாய் எரிந்து போயிருந்தன!

    மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது! ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்! எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்! குளத்தின் நீர் சூடாக இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன! அனலில் கரிந்த மாது ஒருத்தி, எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்!

    ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது! உள்ளிருந்த மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்! ஓரிடத்தில், கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது! அணு ஆயுதம் ஹிரோஷிமாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே இடம் போதாது!

    வெடியின் விளைவை நேரில் கண்ட இரு ஜப்பானியரின் நிஜக் கதை!

    Dr. மிச்சிஹிகோ ஹசியா [Dr. Michihiko Hachiya]: ‘பொழுது புலர்ந்து எழிலுடன் இலைகள் சலசலக்க, காலை இளம் பரிதி முகிலற்ற கீழ் வானில் மெதுவாய் எழுந்தது. மருத்துவக் கூடத்திற்குப் போக உடை அணிந்து கொண்டு புறப்படும் சமயம், யுத்த அபாயச் சங்கு ஊதியது! பறக்கும் விமானச் சத்தம் கேட்டது. திடீரென மாபெரும் மின்னல் ஒளிமயம் வெட்டிக் கண்ணொளியைப் பறித்தது! அடுத்து ஓர் பேரொளி! தோட்டத்தில் இருந்த லாந்தல் உலோக விளக்கு என்று மில்லாத பிரகாசத்தில் ஓளிர்ந்தது! வெளிச்ச மயமாய் இருந்த வானத்தில் விரைவில் இருள் கவ்வியது. சட்டென அருகில் நின்ற தூண் ஒன்று சாய்ந்து, வீட்டுக் கூரை சரிந்து அபாய நிலையில் தொய்ந்தது! வீட்டிலிருந்து தப்பி ஓட முயலும் போது, மரக் கம்பங்களும், இடிந்த கட்டிடக் குப்பைகளும் வீதியில் நிறைந்து, பாதையில் தடையாயின! எப்படியோ தாண்டிப் போய் தோட்டத்தினுள் நுழைந்தேன். ஏதோ தாங்க முடியாத ஓர் பெருங் களைப்பு என்னை ஆட்கொண்டது! திடீரென நான் அமணமாய்ப் போனது எனக்குத் தெரிந்தது! என் கோட்டும், சூட்டும் என்ன வாயின ? என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்னுடலின் வலது புறம் யாவும் வெட்டுப் பட்டு, உதிரம் பீரிட்டது! கூரிய ஒரு நீண்ட இரும்பு ஆணி என் தொடையைக் குத்தி வலியை உண்டாக்கியது! என் கன்னம் கிழிந்து வாயில் இரத்தக் குளமானது! கழுத்தில் குத்திய ஓர் உடைந்த கண்ணாடி பீங்கானைக் கையால் எடுக்க, மேனி முழுதும் இரத்தக் குளிப்பில் நான் நடுங்கினேன்! முதல் அணு குண்டால் தாக்கப் பட்ட இந்த டாக்டர்தான், தன் காயத்துடன் காயம் பட்ட நூற்றுக் கணக்கான ஜப்பானியர் களுக்குச் சிகிட்சை செய்திருக்கிறார்!

    சுடோமு யமகூச்சி [Tsutomu Yamaguchi]: திடாரென மெக்னீஷியம் தீப்பிழம்பு போல் ஓர் ஒளிமயமான மின்னல் வெட்டியது! தொடர்ந்தது ஒரு பேரிடிச் சத்தம்! பூமிக்கு மேல் 2 அடி தூக்கப் பட்டேன்! அடுத்து பயங்கரக் காற்று என் மீது வீசிச் சென்றது. பேயடித்தது போல் வீதியில் எவ்வளவு நேரம் கிடந்தேன் என்று எனக்கே தெரியாது! எழுந்த போது, இருள் சூழ்ந்து, கண்ணுக்கு எதுவும் தென் படவில்லை. வெக்கை யுள்ள பட்டப் பகல் திடாரென நள்ளிராப் பொழுது போல் ஆனது. என் கண்கள் இருட்டுக்கு இணங்கிப் போனபின், தூசிக் குப்பைகள் தொடர்ந்து வேகமாய் வீசின! தூசி குறைந்த பின், சூழ்வெளி தெரிந்தது. எங்கெங்கு நோக்கினும், உடைந்த பொருட்களின் குவியல்! எரியும் தீமயம்! நகர்ப் புறம் பார்த்தால், பிரம்மாண்டமான ஒரு ராட்சதக் காளான் [Mushroom] தோற்றத்தில் வானுயர்ந்த முகில் பூதம்! அந்த முகில் கோளம் பார்ப்பதற்கு பயமூட்டும் ஒரு பேயுருத் தூணாகத் தோன்றியது! அது சுற்றியுள்ள எல்லா பொருட்களின் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தது. மிக்க வலுவில்லாமல், முகத்திலும் கையிலும் பற்றிய நெருப்புடன், தீராத வேதனையோடு அருகே இருந்த உருளைக் கிழங்கு வயலை நோக்கித் தடுமாறிக் கொண்டு சென்றேன். சில சமயம் என்னால் ஊர்ந்து செல்லத்தான் முடிந்தது! பிறகு எனக்குப் பயங்கரத் தாகம் உண்டானது. எதிரே ஐந்து வாலிபப் பையன்கள் அமணமாகக் கிழிந்த துணிகளு டன் இருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாவரும் வெளுத்துப் போய், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் இத்தகையக் கோரக் காட்சியை இதுவரைக் கண்டதில்லை! மேனி எங்கும் வெட்டுக் காயத்தால் உதிரம் ஆறாக ஓடிக் கொண்டி ருந்தது! கொதிக்கும் எண்ணெயில் வெந்தது போல் சிவந்து, தோலுரிந்து வேர்வை சொட்டச் சொட்ட வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார்கள்! வெடி அதிர்வால் தீய்ந்த புண்களில் பச்சைப் புல் கொத்தாய் ஒட்டிக் கொண்டிருந்தது. முதுகில் எல்லா இடங்களிலும் சாட்டையால் அடித்தபோல் காயங்கள்!

    உயிர் பிழைத்தோர் பெற்ற கதிரியக்க நோய்கள்

    உயிர் தப்பியவர்கள் பலர் புதுவிதக் கதிர் நோய்கள் [Radiation Sickness] தம்மைத் தாக்குவதை உணர்ந்தார்கள். தலைச்சுற்று, மயக்கம், வயிற்று வலி, வாந்தி, பசியில்லாமை, வயிற்றாலை, மலத்தில் இரத்தம், கடுஞ் சுரம், வலுவின்மை, தோலில் சிவப்புப் பொட்டுகள், மேனியில் வீக்கம், வாய் கழுத்து பல்லணை [Gum] இவற்றில் அல்ஸர், இரத்தக் கசிவு, மலத் துவாரம், சிறுநீர்த் துவரங்களில் இரத்தக் கசிவு, தலை மயிர் உதிர்ப்பு போன்ற உடற் பழுது அறிகுறிகள் தோன்றி, நோய் வருகையை முன்னறி வித்தன! மிகையான கதிரடி [Radiation Dose] வாங்கியோர் உதிரத்தில், வெள்ளை செல் [White Blood Cells] எண்ணிக்கை, மிகக் கீழாக குறைந்தது! அதிகமான ‘மரண அடிக் ‘ [Lethal Dose] கதிரியக்கம் தாக்கப் பட்டோர் சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களுக்குள் செத்து மடிந்தனர். மரண அடிக்கும் குறைந்த அளவு கதிரடி பட்டோர், சிறுகச் சிறுகச் சாவை அண்டி வந்தனர்.

    வெடிப்பிளவின் நேரடிக் காமாக் கதிரடி [Direct Gamma Radiation] பட்டோர், பட்ட இடத்தில் தசைகள் சமைக்கப்பட்டு ஆறாத கதிர்ப் புண்களாகி வேதனையில் துடித்தனர். இவ்விதத் தாக்குதலால், இறுதியில் ஆழமான தசை அழிவு ஏற்பட்டு, மாபெரும் இரத்தக் கசிவு [Hemorrhage] தொடர்ந்து, அவர்கள் யாவரும் மரணத்தைப் போய்த் தழுவிக் கொண்டார்கள்!

    ajay

    போர் முடிந்த பின்பு, ஹிரோஷிமா, நாகசாகியில் தப்பினோர்களின் மார்பு எக்ஸ்ரேயைச் சோதித்த போது, ஆயிரக் கணக்கான பேர் புற்றுநோயிலும் [Cancer], லுக்கீமியாவிலும் [Leukemia], முலைப் புற்றுநோயிலும் சாகப் போகி றார்கள் என்று அறியப் பட்டது. டாக்டர் நார்மன் கென்ட்நர் [Dr. Norman Gentner, Senior Scientist, Health and Environmental Sciences, Atomic Energy of Canada Ltd] விஞ்ஞானி வெளியிட்ட 1997 கணக்கிதழ் அறிக்கைப்படி, இரண்டு நகரிலும் மொத்தம் 15405 பேர் [1950-1990] புற்றுநோயில் செத்திருக்கிறார்கள். லுக்கீமியாவில் இறந்தவர் எண்ணிகை இதுவரை 249 பேர். புற்றுநோய் மரணங்கள் இன்னும் பல்லாண்டுகள் தொடரும்!

    கதிரடிக் காயம் [Radiation Injury] பெறும் கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காமாக் கதிர்கள் பாதித்துப் பெருமளவில் முரண்பாடுகளை உண்டு பண்ணுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதக் கதிரியக்கம் தாக்கிய கர்ப்பிணிப் பெண்கள் பெற்ற பிள்ளைகள், நரம்பு அமைப்பாட்டில் பழுதுகள் ஏற்பட்டு, சிறிய தலைவுடன் மூளை சிறுத்துப் போய், கண்கள் குறுகி வளர்ச்சி அடையாது, அங்க ஈனமுடன், மனக் கோளாறுகள் [Mental Retardation] நிரம்பிப் பிறந்ததாக அறியப்படுகிறது!

    உலக அணு ஆயுத வல்லரசுகளுக்கு ஓர் வேண்டுகோள்!

    ஓர் அணுகுண்டு ஆயிரம், ஆயிரம் உயிர் இனங்களைத் தாக்கிச் சித்திரவதை செய்து அழிக்கும் ஓர் அபாய ஆயுதம்! அதன் கோரக் கொடுமைகள் தப்பியோரையும், தப்பினோர் சந்ததிகளையும் விடாது பற்றிக் கொண்டு, பல்லாண்டு காலம் நிழல் போலத் தொடர்ந்து பாதிப்பவை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1955 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் [Bertrand Russell] தயாரித்த ‘அணு ஆயுதப் போர்த் தடுப்பு ‘ விண்ணப்பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானிகளோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! ‘எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகிறது! அதை அகில நாடுகள் உணர வேண்டும்! பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப் போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் ‘.

    அணு ஆயுத வல்லரசுகளே! உங்கள் அறிவுக் கண்கள் திறக்கட்டும்! ஜப்பானில் முதன் முதல் போட்ட அணுகுண்டுகளே, உலகின் இறுதியான முடிவு அணுகுண்டுகளாக இருக்கட்டும்!

    ஆதாரம்:

    1. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

    2. Oppenheimer, By: James Kunetka

    3. HandBook of World War II, Abbeydale Press

    4. The Deadly Element, By: Lennard Bickel

    5. Canadian Nuclear Society Bulletin, June 1997

    6. http://www.marts100.com/radiation.htm (About Atomic Radiations)

    7. http://www.marts100.com/Classifying.htm (Effects of Radiation)

    8. http://www.marts100.com/Radioactivity.htm (Radioactive Decay)

    9.  http://www.marts100.com/NIeffects.htm (Biological Effects)

    10. The Impact of Atomic Energy (A History of Responses By Govements, Scientists & Religious Groups) By : Erwin N. Hiebert (1961)

    11. http://nucleararmageddon.blogspot.com/2009/03/hiroshima-nagasaki-glimpse-of-what-was.html (Nuclear Armageddon in Hiroshima & Nagasaki)

    12.  http://en.wikipedia.org/wiki/Atomic_bombings_of_Hiroshima_and_Nagasaki

    13. http://www.cfo.doe.gov/me70/manhattan/hiroshima.htm (The Manhatten Project)

    14. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B7581-4N7YJVJ-N&_user=10&_coverDate=02%2F28%2F2007&_rdoc=1&_fmt=high&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=fa83c18df87d2d60a84731c12eee9b02(Long Term Health Hazards of Atomic Bombs)

    15. http://www.nrc.gov/reading-rm/doc-collections/fact-sheets/bio-effects-radiation.html (Biological Effects of Radiation By Nuclear Regulatory Commission, USA)

    16. http://library.thinkquest.org/3471/radiation_effects_body.html (Hiroshima, Nagasaki, Three Mile Island & Chernobyl Events)

    17. http://www.kickassfacts.com/25-interesting-facts-about-hiroshima-and-nagasaki/ [September 4, 2013]

    18.  http://www.pewresearch.org/fact-tank/2015/08/04/70-years-after-hiroshima-opinions-have-shifted-on-use-of-atomic-bomb/  [August 4, 2015]

    ***************************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com)  August 5, 2015 [R-1]

    Share
  • கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி – நினைவூட்டல்

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி

    kamarajar

    வணக்கம். அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும்.

    நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது. எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு! கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் – இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்…. இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் மேக்கர்! தன்னிகரில்லாப் பெருந்தலைவர்! ஈடில்லா உழைப்பாளி! மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே தியாக வாழ்வேற்று மறைந்த மா மனிதர் இவர் என்பதை இவரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் சாட்சி சொன்னது!

    அந்த நன்றிப் பெருக்கோடு உளம் கனிந்து அத்திருமகனாரை நினைவில் நிறுத்தும் பொருட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கர்மவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும். வெற்றி பெறும் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு உண்டு. தேர்வு பெறும் கட்டுரைகள், நூல் வடிவம் பெறும்.

    இக்கட்டுரைப் போட்டியின் நடுவர் பொறுப்பினைத் தமிழறிஞரும் சிறந்த சொற்பொழிவாளரும் காமராசர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரும் பண்பட்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் ஏற்றுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியை முன்மொழிந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும் நமது நன்றிகள்.

    15.07.2015, காமராசர் பிறந்த இந்த நன்னாளில் இந்தக் கட்டுரைப் போட்டியை நடத்துவதில் பெருமை கொள்கிறோம். படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று, பரிசுகளை வெல்ல அழைக்கிறோம்.

    உங்கள் கட்டுரையை யூனிகோடில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, 15.08.2015க்குள் vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

    பரிசுத் தொகை – முதல் பரிசுகள் மூன்று …. ரூ.1000 வீதமும்

    இரண்டாம் பரிசுகள் இரண்டு ரூ.750 வீதமும் மற்றும் மூன்றாம் பரிசுகளாய் மூன்று ரூ.500 வீதமும் வழங்கப்படும்! (மொத்தப் பரிசுகள் – ரூ.6 ஆயிரம்)

    மேற்கண்ட பரிசுகளைத் தவிர, பங்கேற்கும் அனைத்துக் கட்டுரைகளும் பரிசீலித்து, தகுதியுள்ள படைப்புகள் நூல் வடிவம் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்!

    ஒருவரே ஒரு கட்டுரைக்கு மேல் அனுப்பலாம்; எந்தத் தடையும் இல்லை..

    கட்டுரைப் போட்டி முடிவுகளைப் பொறுத்தவரை, நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

    போட்டியில் அனைவரும் பங்கேற்று, பரிசுகளை வெல்லுமாறு அன்போடு அழைக்கிறோம். வாழ்த்துகள் நண்பர்களே.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_7727

     

    ”நீந்தித், தவழ்ந்து, நடந்துவிரைந்(து) ஓடியாடி,
    ஏந்தினாய் வேடங்கள் எத்தனை, -சாந்தி,
    உனக்களிக்க வெண்பாவில், உட்கார்நீ ஓய்வாய்,
    எனக்களிப்பாய் வேலை எழுத்து”….

    ”எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,
    வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,
    கவியாக்கி(டு) என்னை, குறையொன்றும் இல்லாப்,
    புவிவாழ்வை கோவிந்தா போடு”….

    ”மாற்ற உடையின்றி, மானமே கூரையாய்க்,
    காற்றைப் புசிப்போரும் காணாத, -நாற்றத்,
    துழாய்மணி மார்பா, திருவருளை இந்தக்,
    குழாய்வழி சோவென்று கொட்டு”….

    ”கொட்டும் மழைக்குக், குடையாகக் குன்றினைச்,
    சுட்டு விரலால் சுமந்தவா, -திட்டம்,
    உனக்குண்டோ என்னை, உருப்படியாய் ஆக்க!,
    குணக்குன்றே கொள்ளுந்தன் கீழ்”….கிரேசி மோகன்….

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

    அன்பினிய நண்பர்களே,

    வணக்கம். சென்ற [ஜூலை, 2015] மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள்.

    Google_Appliance

    ஐயப்பன் கிருஷ்ணன்

    மூன்று கட்டுரைகளில் இரண்டின் பேசு பொருள் ஒன்றாக இருக்கிறது.

    திருமதி. சிவானந்தம் கனகராஜ். மற்றும் ​– எஸ். நித்யலக்ஷ்மி. இருவரும் இணையத்தில் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தல் குறித்து தங்கள் பார்வையை வைத்திருக்கிறார்கள். இதில் திருமதி சிவானந்தம் கனகராஜ் தெளிவாக பல இணையத் தளங்களைக் குறித்து விளக்கமான பார்வையை வைத்திருப்பது சிறப்பு.

    இதையும் தவிர்த்த மிக முக்கியமான தளங்கள் உள்ளன. அவற்றையும் கட்டுரைகளில் கொண்டு வந்திருக்கலாம்.

    நித்தியலக்ஷ்மி தன்னுடைய இன்னொரு கட்டுரையில் தேடுபொறியின் நுட்பங்களை விவரித்துச் சென்றிருப்பது மிகுந்த பயனளிக்கும் ஒன்றாகும்.

    நித்தியலக்ஷ்மி மற்றும் திருமதி. சிவானந்தம் கனகராஜ். இருவரின் கட்டுரைகளுமே பயனுடையவை. ஆகவே இவ்விருவருக்கும் இந்த வெற்றியை சமமாக பகிர்ந்து அளிக்க விரும்புகிறேன்.

    வாழ்த்துகள்.

    Share