கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”நீந்தித், தவழ்ந்து, நடந்துவிரைந்(து) ஓடியாடி,
ஏந்தினாய் வேடங்கள் எத்தனை, -சாந்தி,
உனக்களிக்க வெண்பாவில், உட்கார்நீ ஓய்வாய்,
எனக்களிப்பாய் வேலை எழுத்து”….
”எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,
வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,
கவியாக்கி(டு) என்னை, குறையொன்றும் இல்லாப்,
புவிவாழ்வை கோவிந்தா போடு”….
”மாற்ற உடையின்றி, மானமே கூரையாய்க்,
காற்றைப் புசிப்போரும் காணாத, -நாற்றத்,
துழாய்மணி மார்பா, திருவருளை இந்தக்,
குழாய்வழி சோவென்று கொட்டு”….
”கொட்டும் மழைக்குக், குடையாகக் குன்றினைச்,
சுட்டு விரலால் சுமந்தவா, -திட்டம்,
உனக்குண்டோ என்னை, உருப்படியாய் ஆக்க!,
குணக்குன்றே கொள்ளுந்தன் கீழ்”….கிரேசி மோகன்….

