Blog

  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 30 (கடைசிப் பகுதி )

    பெருவை பார்த்தசாரதி

    நமக்கு நேரம் கிடைக்கும் போது, அதை நல்வழியில் செலவழிக்க விரும்புவதையே அனைவரும் விரும்புவோம் அல்லவா!….  கேளிக்கை என்று வரும்போது சினிமா, நாடகம், கடற்கரை மணலில் காற்று வாங்குதல், அலைபேசியில் அரட்டை அடித்தல், டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தல், அனேகமாக இதுபோன்ற ஏதாவொதொன்றில் நேரம் கழிந்துவிடுவது சகஜம்.

    அனேகமாக எல்லா நாட்களும் இது போன்று கழிந்து விடுகின்ற நிலையில், ஒரு மாதத்தில், ஒரு நாளில், ஒரு 2 மணி நேரத்தை நல்ல விஷயங்களைக் கேட்க சத்சங்களுக்குச் சென்று வந்தால் என்ன என்று தோன்றும். அச்சமயத்தில், மற்றவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதே, இந்த சத்சங்கத்தின் நோக்கம். ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்பது போல. கண்ணால் பார்த்து களிப்படைவதும், வாயால் உண்டு மகிழ்வதும், மூக்கால் வாசனை முகர்ந்து மலர்வதும், மெய்யால் உற்றறிதலும், காதால் நன்னெறிகளைக் கேட்டலும் சரிவர நடைபெற்றால்தான் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஊக்கம் அளித்து உடலைச் சரிவர இயக்க முடியும்.

    ஏனைய மற்ற உடல் உறுப்புகளில் கண்ணுக்கும், காதுக்கும் தனிப்பட்ட சிறப்பு உண்டு. நாம் காணுகின்ற ஒரு பொருளின் ‘தோற்றம்’,  செவியின் மூலமாக வரும் ‘ஒலி’  இவையிரண்டும் மூளையில் பதிவு செய்யப்படுகிறது. செவிப்புலனுக்கு கண்புலனை விட சற்று மதிப்பு அதிகம். மனிதன் பெற்ற செல்வத்துள் செவிச்செல்வம் ஒப்பற்றது. அதனால்தான் “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்” என்ற சிறப்பை செவிப்புலன் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வாயால் கற்பித்தல் என்று வரும்போது காதால் கேட்டல் என்பதும் கூட வருகிறதல்லவா!….

    கற்பிப்பவரின் அறநெறிகள், அறிவுரைகள், போதனைகள், கேட்பவரின் செவி வழியே சென்று அறிவைப் புகட்டுகிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை வடிகட்டி, தீயவைகளைக் களைந்து, நல்ல எண்ணங்களுக்கு வழி வகுப்பது சிந்தனை ஒன்றுதான். கேட்டலும், சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. கேட்கும் திறன் குறைவாக இருந்தால் சிந்தனையும் குறைவாகத்தான் இருக்கும். நாம் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறோம், என்றைக்காவது யாராவது சொல்வதை நின்று நிதானித்துக் கேட்டதை காதில் வாங்கிக்கொண்டு சிந்தித்திருக்கிறோமா?.. முயற்சி செய்து பார்த்தால் கேட்டலின் திறம் சிந்தைனை மூலம் புலப்படும்.

    இந்தக் தொடரின் கடைசி பகுதியின் மூலம், எனக்குத் தோன்றிய ஒரு சிறிய கருத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலசமயங்களில் நாம் பேசுவதை சற்று நிறுத்திவிட்டு, அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் பலர் சொல்வதைக் காது கொடுத்து பொறுமையாகக் கேட்டாலே வாழ்க்கை முறைக்குப் பயனுள்ள தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் மிக எளிதாகப் பெற்றுவிட முடியும். நேரம் கிடைக்கும் போது, குடியிருப்புக்கு அருகில் நடந்து கொண்டிருக்கும் ஏதாவதொரு சத்சங்கத்திற்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதனால் ஏற்படும் எண்ணற்ற பலன்களையும், அனுபவங்களையும் எளிதாக உணர்ந்து கொள்ளமுடியும்.

    அனுதினமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு, சற்று நேரம் மன நிம்மதிக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் சத்சங்கங்கள் துணைபுரிகின்றன. நமது வாழ்க்கையில் இடம்பெரும் அத்தியாவசிய அங்கங்களில் சத்சங்கங்களும் விலக்க முடியாத ஒன்றாகி விட்டது என்பதே உண்மை.

    நன்னெறிகளைக் கேட்பதின் மூலம் சில சங்கடங்கள் கூடத் தீரும் என்பதற்கு பாகவதம் ஒரு சிறந்த உதாரணம். “இன்னும் ஏழு நாட்களே உயிரோடிருப்பேன், அதற்குள் ஞானம் பெறுவது எப்போது” என்று கேட்ட பரீட்சித்து மகராஜாவிற்கு, சுக முனிவரின் உபதேசம் சாந்தி அளித்து, முக்திக்கும், ஞானத்திற்கும் வழிகாட்டும் கருவியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு சுகர் சொல்வதை பரீட்சித்து பொருமையாக கவனித்து காதில் வாங்கிக்கொள்வதை கவனத்தில் கொள்ளவேண்டும். பரீட்சித்து மகராஜாவின் தொடர்ந்து வரும் கேள்விக்கெல்லாம், பதிலாக வருகின்ற சுகரின் பகவத் தத்துவத்தை விளக்குகின்ற முறையில் சொல்லும் விதமாகவும் கேட்கும் விதமாகவும், அமைந்த “ஸ்ரீமத் பாகவதம்” 18000 சுலோகங்கள் கொண்டது. வியாச பகவான் இயற்றிய இந்த உபதேசம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற அரிய பொக்கிஷங்கள் அடங்கிய 18 புராணங்களில் சிறந்த ஒன்று. பாரதத்தை ஒரே தேசமாக அடையாளம் காட்டிய பெருமை மகாபாரதத்துக்கும், இராமாயணத்துக்கும், 18 புராணங்களுக்கும் உண்டு.

    ‘சத்’ என்றால் உண்மை,    ‘சங்கம்’ என்றால் ‘சங்கமித்தல்’ அல்லது ஒன்றாகச் சந்திப்பது என்பது பொருள். பலர் ஒன்றாக, ஒரு இடத்தில் குழுமியிருந்து, செவிக்கு இனிமையான, இசையோடு கூடிய  சொற்பொழிவாற்றலை கேட்பது அல்லது கேள்வி, பதில் போன்றவற்றால் உரையாடுவது என்பதே “சத்சங்கம்” என்றழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம், அலுவலகத்தில் அல்லது வீட்டிலிருந்தபடியே, சத்சங்களில் நடப்பதை செலவில்லாமல் தொலைக்காட்சி மூலமாகவும் பார்க்க முடிகிறது. அதிகாலை ஒவ்வொரு தொலைக்காட்சியிலும், யாராவது ஒரு மஹான் அல்லது குருஜி, மக்கள் மத்தியிலே சத்சங்கம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் சத்சங்கங்களுக்கும், பண்டைய காலத்தில் நடத்தப்பட்டவைக்கும் இருந்த வேறுபாடு என்னவென்றால், பழங்காலத்தில் எவ்வித பலனும் இன்றி நேர்மையோடும், நாணயத்தோடும் சத்சங்கம் நடத்தினார்கள், ஆனால் இன்று அப்படி இல்லை, நம் கையில் கொஞ்சம் நாணயம்(பைசா)  இருந்தால்தான் இது போன்ற மஹாசத்சங்களில் பங்கேற்க முடியும் என்பதற்கு, தலா 200 ரூபாய் கொடுத்து வாங்குகின்ற நுழைவுச் சீட்டே ஆதாரம். கலந்து கொண்ட பிறகு பணவிஷயம் மேலும் தொடரலாம் என்பது நுழைவுச் சீட்டின் பின்புறம் மிகச்சிறிய எழுத்தில் படிக்கமுடியாதபடி அச்சடிக்கப்பட்டிருக்கும்.

    கோடானு கோடி மக்களுக்கு மானசீக குருவாகத் திகழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், தனது வாழ்நாள் முழுவதும் உஞ்சவிருத்தி செய்த படியே சத்சங்கம் நிகழ்த்தியதாகவும், சத்சங்கத்தின் அருமை, பெருமைகளை தனது பஜகோவிந்தத்தில் நிறைய இடத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் ஒரு நூலில் படித்திருக்கிறேன். இன்று பொருளாதார வசதியில்லாதவர்களுக்கென்றே, நகரத்தில் சில இடங்களில் நித்திய சத்சங்கள் நடத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. போதிய இடவசதி இல்லையென்றாலும், சாலையோரத்தில் ஓரமாக நின்று கொண்டு, நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளையும், தத்துவங்கள், போதனைகள் போன்றவற்றைப் பெற்றுவிடமுடியும்.

    சத்சங்களில் கலந்து கொள்வதால் என்ன பலன்?…என்று கேட்கிறவர்களுக்கு!….இறுகிய மனது இளகி, இயல்பான நிலைக்குத் திரும்ப வழி செய்கிறது என்பது மஹான்களின் ஆலோசனை.  அங்கிருக்கும் நிசப்தமான சூழ்நிலை, மெல்லிய இசை, உரை நிகழ்த்துபவரின் கூச்சல் இல்லாத பேச்சு இவையெல்லாம் எந்திரத் தன்மை பெற்ற நம் மனதை சிந்திக்க வைத்து, மனதுக்கு இதமளிக்கிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. இதுபோன்ற பல காரணங்களால், மனம் அமைதி பெற்று, மறுபடி செல்லவேண்டும் என்ற ஒரு வித ஈர்ப்பு சக்தியை நம்மிடம் பரவச் செய்யும்.

    ஒரு புத்திசாலிக்குக் கூட சில சமயம் முடிவு எடுக்க முடியாமல் தத்தளிக்கும் நேரம் வருவதுண்டு.  அச்சமயத்தில் அவருக்குச் சரியான பாதை தெரியாமல் விழிக்கும் போது, சாதுக்களும், ஞானிகளும் வழிகாட்டுகிறார்கள். கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரிகள் நடத்திய ஆன்மீகச் சொற்பொழிவில் வெளிவந்த, இக்கட்டுரைத் தொடருக்கு தொடர்புடைய தகவல் ஒன்றை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

    ஞானிகள் என்றுமே அசத் சங்கத்தை விரும்பாதவர்கள்.  அவர்களுடைய பேச்சு என்றுமே உண்மையானதாகவும், நேர்மையானதாகவும், ஆத்ம ஞானத்தைப் பற்றியே இருக்கும். தனது இயல்பு நிலையிலிருந்து, மனிதன் உயர்வு நிலைக்குச் செல்ல, வாழ்வில் சத்சங்கம் இருக்கவேண்டும், ஆனால் அசத்சங்கம் ஒரு போதும் இருக்கக் கூடாது.

    பொய் பேசும் மனிதனுக்கு மன நிம்மதி என்பது இராது.  ஒரு பொய்யைச் சொல்லி பிறகு அதை மறைக்க பல பொய்களை மேலும் சொல்லி, முடிவில் மன சஞ்சலத்தை அடைந்து அதிலிருந்து வெளிவரமுடியாமல் உழலும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். மன சஞ்சலத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் ஆளான மனிதன், ஞானிகளின் அறிவுரைப்படி நடந்தால், மனத்தெளிவு பெற்று நல்முடிவு எடுக்கும் நிலையை அடைந்து, மன ஆரோக்கியத்தை எளிதில் பெறமுடியும். ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், பிறருக்கு உதவி செய்தால், தனக்கு வேண்டிய உதவி பிறரிடமிருந்து தானாகவே வந்து சேரும் என்பதற்கு ஒரு சின்ன கதையையும் சொல்லி இருக்கிறார்.

    ஒரு ஏழை, தினமும் ஒரு ஞானிக்கு உணவளிப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் தன்னுடைய மூதாதையர்களுக்குத் திதி கொடுப்பதற்கு தன்னிடம் எவ்வித பொருளும் இல்லாததால், ஞானியிடம் சென்று உதவி கேட்கிறான்.  தன்னிடம் கொடுப்பதற்க்கு எதுவும் இல்லாத ஞானி, ஒரு காய்ந்த சுரைக்காயை அவனிடம் கொடுக்கிறார். மனைவியிடம் விபரத்தைச் சொல்லி வெறுப்போடு, அச்சுரைக்காயைக் வைத்து ஏதாவது செய் என்று சொல்கிறான். வேறு ஒன்றும் கைகொடுக்காததால், இருக்கின்ற சுரைக்காயை வைத்து திதி கொடுத்து விடலாம் என்று நினைத்து, மிகவும் சிரத்தையோடு சுரைக்காயை நறுக்குகிறாள் மனைவி.  அச்சமயத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. சுரைக்காய்க்குள் இருக்கும் விதைகள், வைரக் கற்களாகப் பளிச்சிடுகின்றன. இருட்டாக இருந்த அவனது வாழ்க்கைக்கு, ஞானியின் தவ சக்தியின் மூலமாக வெளிச்சம் கிடைத்தது. தன்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லாத ஞானி, இறைவனின் மூலமாக, நேர்மையோடும், நாணயத்தோடும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உதவி செய்த ஒருவனுக்கு, உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுகிறார். இது கதையாகத் தோன்றினாலும் “பிறருக்கு நீ உதவினால், மற்றவர் உனக்கு உதவுவார்” உண்மையைப் பிரதிபலிக்கிறது.

         தனி மனிதனுக்கு வரும் துன்பங்களுக்கும், அவசர யுகத்தில் அழுத்தம் நிரம்பிய அல்லல் வாழ்க்கைக்கு ஆறுதல் பெறவும், அருமருந்தாகச் செயல்படுவது ‘சத்சங்கம்’ என்ற கூடம். சமுதாயத்தைச் சார்ந்துதான் தனிமனிதன் வாழமுடியுமே தவிர, தனக்காக மட்டும் வாழ்வது என்பது இயலாத காரியம் என்பது சத்சங்கத்தின் விளக்கம். சத்சங்கங்களுக்கு சென்று உங்களுக்கு வரக்கூடிய சங்கடங்கள் சற்று விலகும் என்றும், பெரிய அளவில் வரும் ஆபத்துகள் தவிர்க்கப்படலாம் எனவும் ஸ்வாமி சின்மயானந்தர் அறிவுருத்துகிறார். சத்சங்கங்களில் மூலம் தங்களுக்குக் கிடைத்த அறிய செய்திகளை, இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள இயலாதவர்களுடன் பகிர்ந்து கொண்டால்?….சத்சங்கங்களுக்கு மட்டுமல்லாமல், அதை மற்றவர்களுக்கு தெரியப் படுத்தியவர்களுக்கும் பெருமைதானே?….

    சத்சங்கங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், அதிகாலையில் டிவி சேனல்களைத் திறந்து பாருங்கள். இனிமையான காலை வேளையில்,சத்சங்கங்களில் மனதுக்கு இனிமையான வார்த்தைகளால் சொற்பொழிவாற்றி, ஆன்மிக சம்பத்தப் பட்டசந்தேகங்களுக்கும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அவதாரம் செய்த இடங்களைத் தேர்ந்தெடுத்து, சத்சங்கம் நிகழ்த்துபவர் சிலர்.  இன்னொருவர், நாம சங்கீர்த்தனத்தோடு சத்சங்கத்தையும் சேர்த்து அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டேயிருக்கிறார். வெளிநாட்டவரையும், அண்டை மாநிலத்தவரையும்  ஒன்றாக்குகிறது இந்த சத்சங்கம். சத்சங்கத்தை உதாசீனப் படுத்தாமல், மதிப்பவர்கள் என்றுமே இறைவனுக்கு பிரியமானவர்கள் என்பது மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒரு மனதாகச் சொல்லும் அறிவுரை.      இவர்களில் சிலர் உலகில் அதிக இடங்களுக்குச் சென்று, மஹாசத்சங்கம் நிகழ்த்தியவர்களும் உண்டு. சைனாவில் சத்சங்கம் நிகழ்த்துவதற்காக, நம்நாட்டு பிரஜைக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒரு தனி இடத்தையே கொடுத்திருக்கிறது என்பது பத்திரிகைச் செய்தி. இவர்கள் அனைவரையும் விட, முக்கியமாக ஒருவர் சத்சங்கம் மூலம் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்திய பெருமை சுவாமி விவேகானந்தரைச் சாரும்.

    தாம் பெற்ற அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, மறைமுகமாக மற்றவருக்கு உதவி செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடுகிறது. சத்சங்கம் அதற்குத் உறுதுணையாக நிற்கிறது. ஒரு மனிதன் முழு அளவில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் ‘சத்சங்கங்களின்’ மூலம் கேட்டறிந்து கொண்டால், அது என்றும் நம் நல்வாழ்விற்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

    ஒர் அறிவிப்பு::

    இத்துடன் எனது “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” கட்டுரைத் தொடர் முடிவடைகிறது. தொடர்ந்து முப்பது (30) கட்டுரைகளுக்கும் மதிப்பளித்து, பொறுமையாகப் படித்து, தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்த அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     

    ******* முற்றும் *******

    Share
  • மனதின் உயரம்….

    ‘பார்வதி இராமச்சந்திரன்

    வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘ கண்டக்டர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சில திடீர் சமயங்களில், வெறும் நாலு இட்லி சாப்பிட்டதற்கே வயிறு நிரம்பி எருக்களிப்பது போல், விசேஷ நாள், விடுமுறை நாள் இல்லாத இன்று கூட ஏகக் கூட்டம் பஸ்ஸில். பிதுங்கி வழிந்தது.

    தாமரை, மல்லிகாவின் மடியிலிருந்து கொண்டு என்னைப் பார்த்து சிரித்தாள். வாயில் எச்சில் ஒழுக, என்னைப் பார்த்து, ‘ங்கா….’ என்றாள். ‘ப்ப்…’ என்று ஏதோ சொல்ல முயற்சித்து அது ‘ப்ரு’ வாகியது.

    ஏதோ சொல்ல வாயெடுத்த மல்லிகா, என் முகம் பார்த்து ‘கப்சிப்’ ஆனாள். ரயிலில் ரிசர்வேஷன் கிடைத்த பிறகு போகலாம் என்ற என்னை வற்புறுத்தி, கிடைத்த பஸ்ஸில் கிளம்பியே ஆக வேண்டும் என்று கிளம்ப வைத்தவள் அவள். ஜன்னலோர ஸீட்டில் அவளும் தாமரையும். நடுவில் நான். எனக்கடுத்தாற்போல் ஒரு சின்ன வயசுப் பையன். கிட்டத்தட்ட நெருக்கிக் கொண்டு அமரும் நிலை. கசகசவென்றிருந்தது. கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு மூச்சு வாங்கிய போது, நெருக்கடி பஸ்ஸில் மட்டும் அல்ல, மனதிலும் என்று புரிந்தேன்.

    என்னைப் பற்றிய செய்திச் சுருக்கம் முதலில். ஒரு விபத்தில் அப்பா, அம்மா இருவரும் மரணிக்க, காலன் கைக்குத் தப்பிய கைக்குழந்தையாய் இருந்த என்னை, என் அம்மாவின் தங்கையும் அவர் கணவரும், எனக்கும் என் சொத்துக்களுக்கும்(ஒன்றும் பெரிதில்லை. கொஞ்சம் ரொக்கம், என் அம்மாவின் ஏராள நகைகள், ஒரு வீடு மட்டும்) ஊரார் நியமித்த காப்பாளர்களாக இருந்து வளர்த்தெடுத்தனர். குழந்தையில்லாதிருந்த அந்த இருவரும், என் வீட்டுக்கே தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டனர். என் அம்மாவின் நகைகளை போட்டுக் கொண்டு, என் சித்தப்பாவின் தங்கை புகுந்த வீடு போனார். பெட்டியிலிருந்த ரொக்கம் ‘காக்கா ஓஷ்’ ஆகியதாகக் கேள்வி .

    நான் கிட்டத்தட்ட பத்து வயதாகியிருந்த போது என் சித்தி, காலம் தப்பிப் பெய்தாலும் கழனி விளைவிக்கும் மழை போல் உண்டானாள். முதலில் சுதாவும் அப்புறம் இரு வருடங்களில் ஹேமாவும்.

    இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாக இருந்த நான் ஒரிஜினல் சர்க்கரை வந்ததும், ஹாஸ்டலுக்கு மாற்றப்பட்டேன்.

    முதலில் கிட்டத்தட்ட வாழ்க்கையே வெறுப்பு மயமாகத் தான் இருந்தது. நண்பர்கள் என்னும் நல்லுறவுகள், என் வெறுமையை இட்டு நிரப்பி, எனக்கு எல்லாமுமாகினர். படிப்பு என்னை முழுமையாக ஆக்ரமித்தது. கவனம் முழுதும் அதில் குவிய,  பாராட்டுகள் தேடி வந்தன. பள்ளி, கல்லூரி இரண்டிலும் ‘ஸ்டார்’ ஆனேன்.

    கல்லூரியில் சந்தித்தவள் தான் மல்லிகா. பரஸ்பர அறிமுகம், நட்பு என்றெல்லாம் கதை விட எண்ணமில்லை. பளீரென பளிச்சிடும் அழகும் நிறமும் தான் என்னை முதலில் ஈர்த்தன‌. ‘என்னா அழகுடா, யாருக்கு அதிர்ஷ்டமோ’ என்கிற மாதிரியான புகழுரைகள் காதில் பட்டுப்பட்டு, அவள் பார்வையில் படுவதே கதிமோட்சம் போல் ஆகி, கிட்டத்தட்ட ஆண்கள் எல்லோரும் பித்துப் பிடித்துக் கிடந்தது தெரியும். அதனாலேயே அவள் என்னைப் பார்க்க ஆரம்பித்து, பேச ஆரம்பித்த போது, இரண்டடி உயரமாய் உணர்ந்தேன். தன் காதல் சொன்னதும் கனவில் மிதந்தேன்.

    ‘ஆளும் தோரணையும் நிச்சயமா பெரிய எடத்துப் பொண்ணு மாதிரி தான் தெரியுது மாப்ள… படக்குனு புடிச்சு செட்டிலாயிரு. ஒங்கப்பா காச ஒன் விதி எடுத்துக்கிட்டாலும், எப்படி திருப்புது பாத்தியா…’ என்று  ஏகத்துக்கும் நண்பன் ஏத்திவிட, ‘பொன்மகள் வந்தாள்’ பாடலை விஜய் ரேஞ்சில் ரீமிக்ஸில் பாடித் திரிந்தேன். மல்லிகாவை ஜொள்ளு விட்டவர்களெல்லாம், கண்களால் எனை எரிக்க, கழுத்து நிமிர்த்திய வெடைக்கோழியாய் அலைந்தேன்.

    ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது, நான் மெல்ல,’ ஒங்கப்பா பிஸினஸா பண்றாரு?’ என  ஆரம்பித்த போது தான்  அவளும் என்னைப் போல அதாவது பெற்றோர் அற்றவள் எனத் தெரிந்தது. எனக்கிருந்த அளவுக்கு சொத்து மட்டுமல்ல, இனிஷியல் கூட  இல்லாதவள் எனத் தெரிந்தது. ஒரு ஆஸ்ரமம் அவளை வளர்த்தெடுத்து, அவள் நன்றாகப் படித்ததால், ஒரு பெரிய மனிதர் உதவியுடன் கல்லூரியில் சேர்த்திருந்தது.

    ‘ஆஸ்ரமத்தை நடத்திட்டுருக்குற ஐயாவும் அம்மாவும் தான் எங்களுக்கு அப்பாவும் அம்மாவும். நானு இத யாருட்டயும் சொல்லல. அப்பாம்மா ஊருல இருக்காங்களான்னு கேட்டா ஆமான்னுருவேன். ஊரு பேரக்கேட்டா, ஆசிரமம் இருக்குற ஊரு பேர சொல்லுவேன். இத சொல்லுறது, எம்மேல தேவையில்லாத பரிதாபத்த ஏற்படுத்திருமோன்னு ஒரு பயம்’ என்றாள்.

    ‘சட்டி சுட்டதடா’ என்று காதருகில் ஒரு குரல் பாடினாலும், அடி மனசில் இருந்த ஏதோ ஒன்று, அது நிச்சயம் காதல் தானா என்று சொல்வதற்கில்லை. ‘நம்மைப் போல் ஒருவள்’ என்ற உந்துதலா, ‘காசில்லைன்னதும் கழட்டி விட்டுட்டான்’ என்ற ஏச்சுக்குப் பயந்தா, பெண்பாவம் பொல்லாது என்று மனதின் ஆழத்தில் ஊறியிருந்த நம்பிக்கை காரணமா ஏதென்று தெரியவில்லை. கைவிட மனமின்றிக் காதலைத் தொடர்ந்தேன்.

    ஒரு முறை, லீவுக்கு ஊருக்குப் போயிருந்த போது, சித்தியிடம் என் காதலைச் சொன்னேன்.

    ‘யாருமில்லாதவளா அந்தப் பொண்ணு?, ஒன் சித்தப்பா ஒனக்கு என்ன மாதுரி பொண்ணு பாத்து வச்சுருக்குறாங்கன்னு தெரியுமா?’

    ‘அதனால என்ன, நானும் அது மாதுரிதான’ என்றவன் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். வாய்க்கொழுப்பு, கிரகக் கோளாறு எல்லாமாகச் சேர்ந்து, ‘ஏன், எங்கப்பாம்மா காசு, நக எல்லாம் போதாதா?, எனக்கு வார வரதட்சணை வேற வேணுமாக்கும்’ என்று விட்டேன்.

    சித்தி வெறித்துப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்து விட்டுப் பிறகு, ‘ஒன் இஷ்டம்,  ஆனா அதுக்கப்புறம் இந்தப் பக்கம் வந்துராத’  என்றாள்.

    ‘வீட்டயும் வாயில போட்டுக்கவா’ என்று கேட்க நினைத்து, ஏனோ கேட்கவில்லை. கல்லூரிப் படிப்பின் கடைசி வருடம் அது. அதன் பின், கேம்பஸில் கிடைத்த வேலையில் சேர்ந்து, நண்பர்கள் சூழ மணம் முடித்து, தாமரை பிறந்து என மளமளவென வருடங்கள் மூன்று ஓடி விட்டன. எங்கள் இருவருக்கும் நல்ல வேலை. ‘டே கேர் சென்டரில்’ தாமரையை சீராட்டியபடி எங்கள் வாழ்க்கை,  லோனில் வாங்கிய ஃப்ளாட்,  பைக் சகிதம் ஓடிக் கொண்டிருந்தது.

    மல்லிகா, அடிப்படையில் உறவுகளுக்கு ஏங்குபவள். ‘ஒங்க சித்திக்கு என்னப் புடிக்குமா’ என்று காதல் காலத்தில் கோடி முறை திரும்பத் திரும்ப வினவியவள். ‘வெயிட் பண்ணலாம்பா’ என்று பல முறை சொல்லிப் பார்த்து, என் பிடிவாதத்துக்காக திருமணத்துக்கு ஒத்துக் கொண்டவள். அதன் பிறகு பலமுறை,  தாமரை பிறந்த பிறகும் கூட, ‘ஊருக்கு ஒருவாட்டி போயிட்டு வரலாம்பா’ என்று நச்சரித்தேயிருப்பாள்.

    அந்தச் சந்தர்ப்பம் விதி வழியே வந்து சேர்ந்தது. திடீர் ஹார்ட் அட்டாக்கில் சித்தப்பா மரணிக்க, சித்தியும் குழந்தைகளும் தனியாகியிருக்கிறார்கள். சித்தப்பாவுக்கு தனியாரில் வேலை.  சித்திக்கு சித்தப்பாவே உலகம். என்ன சம்பளம், என்ன சேமிப்பு என மனைவிக்கு எதையும் சொல்லாத ஆணாதிக்க சித்தப்பா.

    அவர்கள் நிலை கண்டு இரங்கிய என் உள்ளூர் நண்பன், என் கூடப் படித்தவனைத் தொடர்பு கொண்டு, அவனிடம் இருந்து என் முகவரியை வாங்கி, என்று  என்னைத் தேடிக் கண்டடையும் ரிலே ரேஸ் முடிந்த நேரத்தில், சித்தப்பா சிவலோகப் பதவி அடைந்து முழுசாய் ஒரு மாதம் ஆகியிருந்தது.

    ஏனோ எனக்கு எந்த வித பரிதாப உணர்வும் ஏற்படவில்லை. சித்தி என்ன செய்வாள் என்று தோன்றவில்லை. போனால், நம் தலையில் சுமையாக ஏறிவிட்டால் என்ன செய்வதென்றே தோன்றியது.

    ‘என்னருந்தாலும் ஒங்கள வளத்தாங்கல்ல. தூக்கியா போட்டாங்க?. நல்லா படிக்க வச்சாங்கல்ல?.  ஒங்க நெனப்பு தப்புங்க, போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம். முடிஞ்சா அவங்கள கூப்புட்டுட்டு வந்துரலாம். சித்திக்கு எங்கயாவது சின்னதா வேல வாங்கிக் கொடுக்கலாம். பொம்பளப் புள்ளங்கள வச்சுட்டு என்ன பண்ணுவாங்க பாவம்’   என்றவளை,  எப்படி முயன்றாலும் வாயடைக்க முடியவில்லை. கடைசி அஸ்திரமாக, ‘நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு பாத்துக்குங்க’  என்றதும், வாழ்வின் நிலையாமை எனக்கும் சேர்த்துத் தான் என்பது உறுத்த,  மீற முடியாமல், மனாசாகா மனசோடு இதோ கிளம்பியிருக்கிறேன். சும்மா பார்த்து விட்டு வந்து விடலாம். அப்புறம் தொடர்பு கொள்வதாகச் சொல்லி விட்டு, உடனே கிளம்பி விட வேண்டும் என்பது என் திட்டம்.

    ‘ஏம்ப்பு..  செத்தவடம் நகந்துக்கிருவீக….., கொஞ்சோணு,  நானு ஒண்டிக்கிருவேன்..’ கணீரென்ற குரல் கேட்டு, கலைந்து நிமிர்ந்தேன். 45, 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கையில் பெரிய கூடையோடு நின்றாள். என் பக்கத்திலிருந்த பையன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் ஒண்டிக் கொள்ள வேண்டுமானால், இடத்தையே கொடுத்தாக வேண்டும். கையில் சுமை  வேறு. செய்வதறியாமல் எழுந்து நின்றான்.

    ”மன்னிச்சுக்க தம்பி, கூடய வச்சுக்கிட்டு நிக்க முடியல. தப்பா நெனக்காதீக, மகராசனா இருங்க..’ என்று பையனை வாழ்த்திவிட்டு, ‘ஆத்தி… நீயி செத்த இங்கிட்டு வந்துருப்பா, தம்பி அங்கிட்டு போயிக்கட்டும்…’ என மல்லிகாவிற்கு உத்தரவிட்டாள். மல்லிகா, சட்டென தாமரையை என் மடியிலிருத்தி எழுந்து விட, வேறு வழியில்லாமல், நான் ஜன்னலோரம் நகர்ந்தேன். சற்று இறுக்கம் குறைந்தவனாக உணர்ந்தேனாயினும் அந்தப் பெண்ணின் தோரணை என்னை எரிச்சல்படுத்தியது. நன்றாக உட்கார்ந்து கொண்டு, வெற்றிலை காவியேறிய பற்களால் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

    ‘பக்கத்தூருல திருளா, சோலி இருக்குன்னு சொன்னாக… வந்தேங்…. தேர்க்கூட்டம் திருநாக்கூட்டமுன்னா சும்மாவா… கெளம்புறதண்டிக்குங் கூட்டந்தே.. ஒரு பஸ்ஸூ கெடைக்கல. எங்கூருக்கு ரண்டு பஸ்ஸூ மாறணுமுண்டாக. அங்கிட்டுருந்து இங்கிட்டு வந்து இந்த பஸ்ஸ புடிச்சே… இன்னுமேட்டு தொக்கூருல ஒருவாட்டி மாறணு.. நீங்க எங்கிட்டு போறீக?….’.

    நீளமாகப் பேசி நிறுத்தியவளை பார்க்கக் கடுப்பாயிருந்தது. என்ன இது, கொஞ்சங்கூட இங்கிதமில்லாமல்’ என்று தொடர்ந்த சிந்தனையை நிறுத்தியது மல்லிகாவின் பதில். ‘நாங்களுந் தொக்கூருதான் இறங்கணும்’.

    ‘அப்புடியா, நல்லதாயிருச்சு,    நானு கொங்கணியாபுரம் போணும். தொக்கூரு பஸ் ஸ்டாண்டுல நிக்கும் கொங்கணியாபுரம் பஸ்ஸூ’.

    ‘ஆமாங்க‌….சேந்தே எறங்கிரலாம்’ என்ற மல்லிகாவை பார்வையால் எரித்தேன். கொஞ்சங் கூட முன்யோசனையில்லாமல், பார்ப்பவர்களிடமெல்லாம் சொந்தம் கொண்டாடும் அவளைப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது.

    ‘ஒங்க புள்ளையா… என்னா பேரு’

    ‘தாமரை’

    ‘நல்ல பேருதே… எப்பா கண்டக்டரு தம்பி, இங்கிட்டு தொக்கூருக்கு ஒரு சீட்ட குடுத்துவுடுங்க…’ பணத்தை முன்னிருப்பவர் மூலம் கண்டக்டருக்குக் கடத்தினாள். சீட்டு வாங்கியதும் சொல்லி வைத்தாற்போல் பஸ் கிளம்ப, கூடையை மூடியிருந்த துணியை விலக்கி, கவர்களைப் பிரித்து, பூக்களை எடுக்க வசதியாக கவர்களின் ஓரம் சுருட்டி மடித்தாள். நூல் கண்டு எடுத்து நுனி தேடினாள். மளமளவென்று, ஒவ்வொரு கவரில் இருந்தும் ஒவ்வொரு வகைப் பூவை எடுத்து, சேர்த்துத் தொடுத்தாள். கண் முன்னே விரியும் வண்ணக் காட்சி போல் கதம்பம் உருவானது.

    பூவைப் பார்த்து முகம் மலர்ந்தாள் தாமரை. ‘ஹீஇ…’ என முன்னிருந்த இரண்டு பற்களைக் காட்டிச் சிரித்தாள். கைகளைத் தட்டினாள்.

    ‘ஏம் பாப்பா, பூ தாரே… தலெல‌  வச்சுக்கிறியா…’  முடி வளராத‌ அவள் தலையைப் பார்த்துக் கேட்க, புரிந்தது போல் மீண்டும் சிரித்தது குழந்தை.

    ‘பூ விக்கவா திருவிழாவுக்கு வந்தீங்க..?’

    ‘இல்லத்தா… பூப்பல்லாக்கு சோடிக்க கூலிக்கி வந்தே… எங்க ஊரு சின்னது. வெள்ளி செவ்வா, நாளு கெளம வந்தாத்தா கொஞ்சமாச்சு ஏவாரம் நடக்கு…… அக்கம்பக்கத்து ஊருல திருநா, சந்த, வந்தாத்தே நாலு காசு மீறு….   சாமி சோடன செய்யிறவக கூடமாட ஒத்தாசக்கி, பூக்கட்டக் கொள்ள எங்கள மானி(மாதிரி) பூக்கட்டறவுகள‌ கூப்புடுவாக. செஞ்சு குடுத்துட்டு, கூலியோட கூலியா அவுக கிட்டயே கொஞ்சப் பூவ உதிரியா கொறச்சு வெல வச்சு வாங்கிக்கிடுவோம். போற வார ஊரு நடுவுல கெட்டி வித்துப்புடுவோம். இப்ப அப்படித்தே வாங்கியாறே…, கெட்டி முடுச்சது இந்தப் பஸ்ஸூல இல்லாட்டி, தொக்கூரு பஸ் ஸ்டாண்டுல பூ விக்கிறவுக கிட்ட மொத்தமா வித்துப்புடுவே…’

    எனக்கு, ‘அத்தனை பூவையும் நானே வாங்கிக் கொள்கிறேன்’ என்று என் மனைவியாகப்பட்ட ‘வள்ளி’(வள்ளலுக்குப் பெண்பால்) சொல்லிவிட்டால் என்ன செய்ய‌ என்று பயம் வந்து விட்டது. அவர்கள் பேச்சில் நானும் கலக்கும் முகமாக,

    ‘ஒங்க புள்ளங்க வேல பாக்குறாங்களா?’ என்றேன்.

    ‘இல்லப்பு… ரண்டு பொட்டப்புள்ளெக… ஒண்ணு மூணாப்பு, இன்னொண்ணு ரண்டு படிக்குதுக….’

    ஆச்சரியமானேன். முன் உச்சியில் நரை திரண்டிருக்கும் இவளுக்கா சின்னக் குழந்தைகள்?. ஒரு வேளை சித்தி போல், வருடம் கடந்து பிறந்திருக்குமோ!!! சிந்தனை ஓடியது.

    மல்லிகா ‘புள்ளகள யாருட்ட விட்டுட்டு வ‌ந்திருக்கீங்க?’ என்றாள்.

    ‘தங்கச்சிட்ட..’

    ‘ஒங்க வீட்டுப் பக்கத்துலயே இருக்காங்களா?’

    ‘இல்லல்ல‌… ஒண்ணாத்தே இருக்குறோ…..’

    ‘அவங்களும் பூ விக்கிறாங்களா?’

    ‘இல்ல..  வூட்டுல புள்ளகளப் பாத்துக்குர்றா….’

    ‘ஓஹோ… அவங்களுக்கு எத்தன பசங்க?’

    ‘அதாஞ் சொன்னேனே… ரண்டு பொட்டப் புள்ளக…’

    திடீரென்று ஒரு இறுக்கம் கவிந்தாற்போல், பேச்சு திசையறியாமல் நடுவழியில் நின்றது. எனக்கு நிச்சயம் அவள் சொன்னதன் கோர்வை புரியவில்லை.

    என் நினைப்பு அந்தப் பூக்காரப் பெண்மணிக்குப் புரிந்திருக்கும் போல. அனிச்சைச் செயல் போல் பூக்கட்டிக் கொண்டே, எங்கோ வெறித்த பார்வையுடன் பேசலானாள்.

    ‘நாந் தங்கச்சின்னது எம் புருசெ ரண்டாவது சம்சாரத்தப்பா.  நாங் கல்யாணங் கெட்டுனது எந் தாய்மாமனத்தே. கொடுப்பின உள்ளவுகளுக்குத் தே கொலசாமி வரமா புருசங் கெடக்குன்னு சொல்லுறது அம்புட்டும் நெசந்தே. அவருக்கு ஆசன்னா ஆச அம்புட்டு உசுரு எம்மேல. வாளப்பள ஏவாரம் பாத்தாரு எங்கூட்டுக்காரரு. நானு மாடு வச்சு பாலு கறந்து விப்பே…. கூலிக்கி பூக்கெட்டிக் கொடுப்பே.., நாலு காசு சேர்த்து சின்னதா ஒரு  வூடு கூட கட்டுனோ.., வூடுன்னா என்னா.. நாலு சொவரு, ஒரு கூர, நடுவுல தடுத்து ஒரு சமயக்கட்டு, அம்புட்டுதே….. ஆனா சந்தோசமாயிருந்தோ நாங்க‌… ஒரே ஒரு கொற… ஒரு புள்ள இல்ல… கும்புடாத சாமி இல்ல, பண்ணாத வைத்தியமில்ல. ஒருவாட்டி டவுனு ஆசுபத்திரில, டாக்டரம்மா, என்னய படுக்க வச்சு, மொக்க மொக்கயா மிசினு வச்சு போட்டாப்படமெல்லா புடிச்சாக. எனக்குத் தே கொற அப்படின்னுட்டாக கடசியா..’

    அவள் முகத்தையே பார்த்தாள் மல்லிகா.

    ‘அன்னிக்கி நா அளுதேம்பாருத்தா அப்படியொரு அளுக… எங்கூட்டுக்காரரு, அதுனால என்னா இப்ப?, எனக்கு நீ கொளந்த, ஒனக்கு நா கொளந்த அப்படின்னுட்டாரு.. மேக்கொண்டு வைத்தியமெல்லா பாக்கலான்னாக, கொள்ளக் காசு கட்டச்சொன்னாக‌, எங்கூட்டுக்காரரு வேணான்னுட்டாரு.’

    ‘ஒரு வருசம் போல ஆச்சு… தெருஞ்சவுக வீட்டுல விசேசன்னுட்டு வெளியூரு போனாரு .. போயிட்டு வந்ததுலருந்து எங்கூட்டுக்காரரு ஆளு செரியில்ல. ஒருமானி இருந்தாரு. நாங்கேட்டு கேட்டுப் பாத்தே.. ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லன்னாரு. ஒரு நாளு, ஒரு ஆளு வீட்டு வாசல்ல வந்துட்டு எங்கூட்டுக்காரரு பேரு சொல்லிக் கேட்டாரு. நானு ஏவாரம் பாக்கப் போயிருக்காருன்னேன். ‘ஏம்மா, பொண்ணக் கெட்டிட்டு கெட்டுன ஊருலய விட்டுட்டு வந்துட்டாரே ஒம்புருசே.. நாங்க அங்க ஊருல எம்புட்டு நாளு பொண்ண வச்சுருக்க?’ ன்னு கேட்டாரு பாக்கணுமே…எனக்கு மயங்கியடிச்சுருச்சு..’

    ‘வந்தவரு மக்கா(மறு) நாளு வாரேன்னுட்டு போயிட்டாரு. நா இடி விளுந்த மானி ஒக்காந்திருந்தே. ஆனாலு மனசு சொல்லிச்சு அப்படியிருக்காதுன்னு. எங்கூட்டுக்காரரு ஏவாரம் பாத்துட்டு வந்தாரு. நாங் கேட்டே……..ஆமான்னாரு..’

    நிறுத்தினாள். எச்சில் கூட்டி விழுங்கினாள். ‘நிக்கிற தரைய தடார்னு புடுங்கி நவத்திப்புட்டா என்னா மானி இருக்குஞ் சொல்லுங்க? .    அப்படித்தேயிருந்திச்சு எனக்கு. என்ன செய்யிறதுன்னே புரியல. நெனப்பு தப்பிப்போச்சு. கொஞ்ச நேரமாச்சு வெவரமெல்லா வெளங்க’.

    ‘அதுக்குள்ள அவுரு கொஞ்சங் கொஞ்சமா எல்லாஞ் சொன்னாரு. பங்காளிப் பய, எங்க கொறைய பெரிசு பண்ணி அவர அசிங்கமாப் பேசீட்டான்னு மனசு வெந்து போயி, சேக்காளிப் பய பேச்சக் கேட்டு, அசலூருல போயி, பொண்ணு கேட்டுருக்காரு. அவுக கஞ்சிக்கே அலமோதுற குடும்பம். ஒத்தங் கெட்டுனா போதுன்னு நெலம. அவுககிட்ட எல்லா வெவரத்தையுஞ் சொல்லி, ‘எம் பொண்டாட்டி ரொம்ப நல்லவ. அவ கூடத்தே இருக்கணு, அவள அனுசரிக்கணுன்னெல்லா சொல்லி, அவுக சம்மதிச்சு, அந்த‌ ஊரு கோயில்ல தாலி கெட்டியிருக்காரு. எங்கிட்ட சொல்லீட்டு வந்து கூட்டிப் போறமுன்னு அவுக கிட்ட சொல்லி, அந்தப் பொண்ண அங்கனகுள்ளாறவே விட்டுப்புட்டு வந்துட்டாரு. எங்கிட்ட சொல்ல ரோசன பண்ணிட்டு இருந்திருக்காரு, ரம்ப நாளு ஆச்சின்னது, அவக ஊரு ஆளு கேட்டு வந்துருக்காரு.’.

    ‘நாம் போயி கூட்டு வாரே…. ஒரு மாசம் பாரு, சரிப்பட்டுச்சுன்னா சேந்து இருங்க, இல்லாட்டி வேற வீடு பாத்து வச்சுர்றே.. ஒனக்கு ஒரு கொறையும் வர வுட மாட்டேன்னாரு’.

    ‘எனக்கு எஞ்சொத்தே போன நெலம. என்ன செய்யன்னு தெரியல. பொறந்த வூட்டுக்குப் போயி அசிங்கப்பட முடியாது. வேற எங்க போக முடியு?.. அங்கனக்குள்ள தான இருந்தாகணு!!… எனக்கு மனசு ஆறல. இதுவே அவருக்கிட்ட கொற இருந்தா நா வுட்டுட்டிருப்பனா? என்னன்னாலு அவரு செஞ்சது பச்சத் துரோகம். ஆனா அதுக்கு வந்தவ என்ன பண்ணுவா?. அதும் நல்ல பொண்ணு. ஆனாலு மனசு கேக்காம, புடிப்பில்லாம திரிஞ்சே… எங்கூட்டுக்காரரு மேல இருக்குற கோவத்த நானு அவ மேல காட்டக் கூடாதுன்னு புடி சாதனயா இருந்தே.. எம்பாட்டுல வேல செய்வே… தோணிச்சுன்னா  சோத்தப் போட்டுத் தின்னுவே … இப்புடி நாளு ஓடுச்சு.

    கொஞ்ச நாளுல வந்தவ உண்டானா. மொதப்புள்ள பொறந்துச்சு. எடுத்துட்டு வந்து எங்கையில தே கொடுத்தாக மொதல்ல. எந் தங்கச்சி, ‘நாம் பெத்தாலும் புள்ளக்கி அம்மா அவுக தே’ண்டு சொல்லீட்டான்னாக. எனக்கு போன உசுரு திரும்ப வந்துருச்சு. மறு வருசமே அடுத்ததும் பொறந்துருச்சு. ரண்டு புள்ளங்களும் என்ன  அவுகளோடவே இறுக்கி வச்சுருச்சுக’.

    ‘ஆனா காலக் கொடும இருக்கு பாராத்தா, ரண்டாவது பொறந்து மூணு மாத்தைக்கெல்லா(மாசத்திற்கெல்லாம்) அவுரு நெஞ்சப் புடிச்சுட்டு சாஞ்சுட்டாரு. பெரிய பெரிய ஆசுபத்திரிக்கெல்லா கொண்டு காட்டுனோ….இருதயத்துல அடப்புண்டாக. கொள்ளக் காசு கேட்டாக ஆபரேசனுக்கு. எனக்கு ஈரக்கொல நடுங்கிருச்சு. தாலி தப்புச்சா போதுண்டு,  வூடு மாடு எல்லாத்தயும் வித்தே…, காசு கேக்குறப்பல்லா கொடுக்க சொல்ல நல்லாப் பேசுன டாக்டருக,  பணங்கெடக்காம நாங்கொஞ்சம் தவக்கம் காட்டவும் கடுத்துப் பேசுனாக’.

    ‘இந்தப் பாளாப் போன ஒலகத்துல, நல்ல மருந்து, படிப்பு , மூணு வேளயு நல்ல சோறு இதையெல்லா, எங்கள மாதிரி பாவப்பட்ட சனங்க கனவுலதே பாக்க முடியு. காசிருந்தாத்தே எல்லா பவுசுங்… ஏள உசிரு சல்லி பெறாது. எம்புட்டு கவருமெண்டு வந்தாலு இத மாத்த முடியாது. மாட்டாக. இது எனக்குப் புரியும் போது எங்கூட்டுக்காரரு இந்த ஒலகத்துல இல்ல. சாவுக்கு வந்தவுக, ‘நீ பாட்டுக்கு ஒம்பாட்டப் பாரு, அதுக்குதே பெத்தவுக இருக்காகல்ல. அவுக பாப்பாக. நீ விட்டுரு. நாடு கெடக்குற கெடையில நக நட்டு போட்டு ரண்டு பொட்டப்புள்ளகள கெட்டிக் கொடுக்க ஆகுமாண்டு  யோசி’ன்னாக. எந் தம்பியு அதத்தே சொன்னா….’

    ‘எங்கூட்டுக்காரரு ஒரு புள்ளக்கி ஆசப்பட்டு எங்கிட்டக்கூட சொல்லாம ரண்டாவது கெட்டினாரு. ஆனாப் பாரு, பெத்த புள்ளங்கள வளக்க அவுரு ஆள் இல்ல. எந் தங்கச்சி வெள்ளந்திப் பொண்ணு. பெத்தவுக வயசானவுக. அவ ரண்டு பொட்டப்புள்ளங்கள வச்சி எங்க போவா பாவம்?. அவர எடுத்துட்டுப் போன ஒடனே மூத்தது ஓடி வந்து எங்காலக் கெட்டி அளுதுச்சு. அதுகள விட்டுரவா நானு?. நம்மளப் பத்தி நெனச்சு இன்னுமேட்டு என்னாகணு?, இருக்குறவரக்கு அதுகளுக்காக இருந்துருவோம்னு தெயிரியப்படுத்திட்டே’.

    ‘ எம் புள்ளக, கவருமெண்டு பள்ளியொடத்துல தே படிக்குதுக..  நல்லா படிக்குதுக. எப்பாடு பட்டாச்சு…….,எம்புள்ளகளப் பெரிய படிப்பு படிக்க வச்சுரணுமத்தா… எங்க நெலம அதுகளுக்கு வரக் கூடாது.  படுச்சு பெரிய வேலக்குப் போயி, நல்ல நெலமக்கு வரணு. எங்கள மாதுரி பாவப்பட்ட சனத்துக்கு அதுகளால முடுஞ்சத செய்யணு. அதுக்குதே எங்க சோலின்னு கூப்புட்டாலு ஓடீருவே…நா வெளியூரு போனா, ஏ வூட்டு அக்கம்பக்கத்துல இருக்குறவுக,  எந் தங்கச்சிய பாத்துக்கிருவாக. அதனால ஒரு பயமெல்லா இல்ல…காசு சம்பாரிக்கலன்னாலும் மனுசாளுக சம்பாரிச்சு வெச்சுருக்கே…. ‘.

    அவள் பேசப்பேச எனக்குள் ஏதுவோ விழுந்து நொறுங்கியது. என்னை யாரோ  முச்சந்தியில் நிற்க வைத்து, விளாசியதாக உணர்ந்தேன். ‘என்ன மனசு…, என்ன மனசு இந்தப் படிக்காத பெண்ணுக்கு?, துரோகம் செய்த கணவன் பெற்ற பிள்ளைகளை, பண பலமோ மற்ற வித ஆதரவுகளோ இல்லாத இந்தப் பெண், எவ்வித சுயநலமோ, எதிர்பார்ப்புகளோ இல்லாமல், பொது நல நோக்குடன் வளர்க்கிறாள். ஆனால் நான்?. ‘என் பணத்தை எடுத்துக்கொண்டுதானே வளர்த்தார்’ என என் சித்தப்பாவை நினைத்தேனேயன்றி, எனக்கு உணவு, உடை, படிப்பு முதலியவற்றுக்கு ஒரு குறையும் வைக்காமல் தானே வளர்த்தார் என நினைக்கவில்லை. முள்ளைப் பார்த்து விட்டு, ரோஜாவைப் பார்க்கத் தவறிவிட்டேன்.  அவர் பெற்ற, என் தங்கைகளின் பொறுப்பை ஏற்பதை சுமையாக நினைக்கிறேன். என் படிப்பு எனக்கு இதையா கற்றுத் தந்தது?

    விடுவிடுவென என் மனதிற்குள்  அந்தப் பூக்காரப் பெண் விஸ்வரூபமெடுக்க,  நான் அவள் முன் மிக அற்பமாய் உணர்ந்தேன்.

    ‘மல்லிகா, என் ஃப்ரெண்டு எழுதின லெட்டர் ஒன் ஹேண்ட் பேக்குல தான இருக்கு? அத எடு’ என்றேன். எதுவும் புரியாமல், லெட்டரை அவள் எடுத்துக் கொடுக்க, அதிலிருந்த நண்பனின் எண்ணுக்கு என் கைபேசியை எடுத்துப் போன் செய்தேன்.

    ‘ஆமாண்டா, ரெண்டு நாள் முன்னாடி தான் ஒன் லெட்டர் கெடச்சு வெவரம் தெரியும். தோ லீவு கெடச்ச‌ ஒடனே பொறப்புட்டாச்சு. மதியத்துக்குள்ள வந்துருவேன். சித்தில்லாம் அங்க தான இருக்காங்க?.  முடிஞ்சா நான் வந்துட்டிருக்கேன்னு போய்ச் சொல்லு. என்ன?. அ, ஆமாமா, எங்கூட‌ கூட்டிட்டு போகலான்னு தான் ப்ளான். அதுக்குத் தான் வரேன். வொய்ஃப், பாப்பா எல்லாருந்தான் வரோம். சரி சொல்லிர்றியா? அங்க வந்து பாக்கறேன். சரியா? வச்சுர்றேன்?’ சொல்லிவிட்டு திரும்பிய போது, மல்லிகா என்னைப் பார்த்து, புரிந்து, சந்தோஷமாகப் புன்னகைத்தாள்.

    தாமரை, என்னை நோக்கி,  திருத்தமாக, ‘ப்பாஆஆ…’ என்றது.

    கூடையிலிருந்து கமழ்ந்த பூமணம், மனதிலும் நுழைய, மன‌  நெருக்கடி குறைந்ததை உணர்ந்தேன்.

    Share
  • வாழ்க்கை நலம் – 6

    குன்றக்குடி அடிகள்

    6. அறன் வலியுறுத்தல்

    இந்த உலக இயக்கம் குறிக்கோளுடையது. குறிக்கோள் இலாது இயங்கும் எதுவும் இல்லை. மானுட வாழ்க்கையும் குறிக்கோளுடையது. மானுடத்தின் குறிக்கோள் என்ன? வாழும் உயிரினம் அனைத்திற்கும் தலைமை தாங்குவது மானிடமே! மானுட வாழ்வைச் சார்ந்துதான் மற்ற உயிர்கள் வளர்கின்றன; வாழ்கின்றன. நிலம் முதலிய ஐம்பூதங்களும்கூட மானுடத்தின் மூலமே பயன்பாடுறுகின்றன. ஆதலால் மானுட வாழ்க்கை அருமையானது. மிக மிக உயர் குறிக்கோளுடையது.

    மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம், செய்தலன்று; வாழ்தல். அறமே வாழ்வு; வாழ்வே அறம்! மனம், புத்தி சித்தம் ஆகிய அகநிலை உறுப்புக்களை அன்பில் தோயச் செய்து யார் மாட்டும் அன்புடையராக வாழ்தல் அறம். அறத்திற்குப் பகை, பகையேயாம். அதனாலன்றோ இறைவன் திருமேனியில் மாறுபட்டவைகள் பகை நீங்கி அணிகளாகத் திகழ்கின்றன. அறத்தில் சிறந்தது மனத்தில் மாசின்றி இருத்தல். மனதிற்கு மாசு இயற்கையன்று. மனதிற்கு மாசு கொள்முதலேயாம்.

    நமது பொறிகள் – மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தகவலைச் சேகரிக்கும் கருவிகள் – ஆன்மாவிற்குத் தகவலைத் தரும் கருவிகள். இந்தக் கருவிகள் அறியும் தன்மையுடையன. ஆனால், அறிவுடையன அல்ல. இந்தப் பொறிகள் ஆன்மாவின் அறிவோடும் புலன்களோடும் தொடர்பு கொண்டு இயங்கின் மனத்திற்குத் தீங்கு வாரா! மாசும் வாரா!

    ஆனால் பொறிகள் தன்னிச்சைப் போக்குடையன; விரைவுத் தன்மையுடையன. எல்லா இடங்களுக்கும் வரையளவுமின்றி, நெறிமுறையின்றிச் செல்லும் தன்மையான. இந்தப் பொறிகள் வாயிலாகவே மனத்திற்கு மாசு வந்தடைகிறது. ஆதலால் பொறிகள் மீது நமக்கு மேலாண்மை தணியராசாணை செலுத்த உறுதிவேண்டும். ஆக மனத்துக்கண் மாசிலராக வாழ்தல் அற வழக்கை.

    எந்த ஒரு நன்மைக்கும் களம் தூய்மையாக வேண்டும் அதுபோல வாழ்க்கையெனும் களத்தில் ஆடச் செய்ய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய களைகள் அகற்றப்படுதல் வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன அன்பின்மையால் வருவன. மற்றவர் வாழ்தலில் நமக்கு ஆர்வமும், மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளப் பழகினாலேயே இத்தீமைகள் அகலும். இதற்குப் பெயர்தான் அன்பு.

    அறத்தின் பெயர் இன்பம். அறத்தின் பயன் அமைதி. அறத்தின் பயன் ஒருமைப்பாடு. அறத்தின் பயன் எல்லோரும் வாழ்தல் – நன்றாக வாழ்தல், இதுவே நியதி.

    அறத்தின் பயன் செல்வம், சிவிகையூர்தல் என்று சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானவை. இக்கருத்துக்கள் வல்லாண்மையில் வாழ்வாருக்குத் தாளம் போடும் கருத்துக்கள்!

    கடவுள், மழை, நீத்தார் ஆகியன பயன்பாடுடையான என்று நிரூபணம் செய்வதே அறம்தான். அறநெறி நிற்போம். அறநெறிச் சிந்தனையில் தோய்வோம். அறநெறி சார்ந்த அறிவினைப் பெறுவோம். அறநெறிச் சான்ற மனத்தினையே பெற்றுயர்வோம்! அதனாலேயே அறன் வலியுறுத்தப்படுகிறது.

     

     

    படம் உதவி: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQTwBRUQVPT2IXhWk8N8w7ZwcAs2i_A-47gBr0Peq9Lz_yBDjrX-w
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

    Share
  • திருமுருகன் துதிமாலை (6)

    சத்திய மணி

     

    நோயிடம் மாட்டி நொடியெலாம் போக்கும்

    ஊழ்வினைத் தீர்க்க வேண்டும்

    பாயிரம் நான்பாட பதிலுக்கு நீயாடி

    பரவசம் காட்ட வேண்டும்

    சேயிடம் கேட்டு செய்யாமல் நீயாகத்

    தேவைகள் சேர்க்க வேண்டும்

    தாயிடம் கேட்டுதான் பெறவேண்டுமோசொல்

    தரணியில் முருகவேலே

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே  (6)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . (53)

     சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்துப் பிரதமர்களில் அதிகளவு சர்ச்சைக்குள்ளாக்கியவரும் மிகவும் பிரபலமானவரும், சரித்திரத்தில் இடம் பெற்றவருமான திருமதி மார்கரெட் தாச்சர் (Mrs.Margeret Thatcher) தனது 87 வது வயதில் லண்டனினுள்ள ரிட்ஸ் (Ritz) எனும் ஹோட்டல் அறையிலே காலமான செய்தியைத் தாங்கி இம்மடல் உங்களை வந்தடைகிறது.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவராக திருமதி மார்கரேட் தாட்சர் விளங்கியதற்குக் காரணங்கள் பலவுண்டு.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் முதலாவது பெண் பிரதமரும், இதுவரை ஒரேயொரு பெண் பிரதமரும் ஆகிய காரணம் இவற்றில் முக்கியமான காரணங்களாகும்.

    அடுத்து இங்கிலாந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் துணிச்சலான பல கொள்கைகளை எடுத்த வகையில் பிரபலமடைந்திருந்தார்.

    இங்கிலாந்து நாட்டில் லிங்கன்சையர் (Lincolnshire) என்னும் இடத்தைச் சேர்ந்த ராபெர்ட்ஸ் (Roberts) எனும் ஒரு பலசரக்குக் கடை உரிமையாளரின் மகளாக 1925ம் ஆண்டு ஜனித்தார் திருமதி தாட்சர். இவரது இயர்பெயர் மார்கரேட் ஹில்டா ராபெர்ட்ஸ் ( Margret Hilda Roberts ) ஆகும்.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர் இரசாயணவியல் ஆராய்ச்சியாளாரகப் பணியாற்றினார். அதன் பின்பு 1951ம் ஆண்டு வெல்வ வளம் கொழித்த வர்த்தகரான டெனிஸ் தாட்சர் (Dennis Thatcher) அவர்களை மணமுடித்தார். வழக்குரைஞர் கல்வியில் அதிபர் பட்டமான பாரீஸ்டர் பட்டம் பெறுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு 1955ம் ஆண்டு அதை நிறைவு செய்தார்.

    தன் தந்தைவழி கன்சர்வேடிவ் கட்சியின் அரசியலில் குதித்த இவர் 1959ம் ஆண்டு இலண்டனிலுள்ள ஃபின்ச்லி (Finchly) எனும் இடத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இதே தொகுதியில் தொடர்ந்து 1992ம் ஆண்டு வரை பாராளுமன்ற அங்கத்தினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    இவரது முதலாவது பாராளுமன்ற அமைச்சுப்பதவி 1964ம் ஆண்டு ஹரோல்டு மக்மிலன் (Harold Macmillan) எனும் பிரதம மந்திரியின் கீழ் ஓய்வூதியத் துறையின் துணை அமைச்சர் பதவியேயாகும்.

    அதைத் தொடர்ந்து எட்வேர்டு ஹீத் (Edward Heath) கன்சர்வேடிவ் பிரதம மந்திரியாக விருந்த சமயம் கல்வித்துறை அமைச்சர் பதவி வகித்தார்.

    1972ம் ஆண்டு எட்வேர்டு ஹீத் அவர்களின் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய போது அவரின் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போட்டியிட்டு பலரின் ஆச்சர்யத்திற்குள்ளாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார்.

    அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தேர்தலில் வெற்றியடைந்ததும் அதன் பிரதம மந்திரியாகப் பதவியேற்று இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சரித்திரம் படைத்தார்.

    அரசு நிறுவனங்களையும், தேசிய ஸ்தாபனங்களையும் தனியார் மயப்படுத்தும் கொள்கையில் மிகவும் அழுத்தமான் கொள்கைகளைக் கொண்டிருந்தார். இவரது முக்கிய அரசியல் விஞஞாபங்களாக சமூக சேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பதும், மக்களின் வரிப்பணத்தைக் குறைப்பதும் ஆன கொள்கைகள் முக்கிய இடங்களை வகித்தன.

    இவரது பதவிக் காலத்தில் பண்வீக்கத்தைக் குறைத்தாலும் வேலையில்லாதோர் தொகை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    1982ம் ஆண்டு அர்ஜெண்டீனா இங்கிலாந்து நாட்டின் இறைமையிலிருந்த வோக்லண்ட்ஸ் (Falklands) தீவினை ஆக்கிரமித்த போது தனது நாட்டின் படையை அனுப்பி அத்தீவினை மீட்டெடுத்தது இங்கிலாந்து மக்களிடையேயும், சர்வதேச அளவிலும் இவரது செல்வாக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வந்த 1082ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி மீண்டும் பிரதமரானார்.

    அக்காலப்பகுதியில் அமெரிக்க ஜ்னாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் (Ronald Regan) அவர்களுடன் மிக நெருக்கமான அரசியல் உறவுகளைப் பேணி வந்தார். இருவருக்கும் கம்பூனிசத்தின் மீது இருந்த எதிர்ப்புத்தன்மையும், கட்டுப்பாடற்ற வியாபாரக் கொள்கையில் இருந்த ஈடுபாடும் இவர்களைப் பலமாக இணைத்தது.

    அந்நாளைய சோவியத் யூனியனால் இவரது அழுங்குப்பிடியான கொள்கைகளினால் “இரும்பு மனுஷி” (Iron Lady) என்று அழைக்கப்பட்டார்.

    அப்போதைய சோவியத் யூனியனின் அதிபரான் கோர்பச்சேவ் அவர்களின் கம்பூனிசத் தளர்வுக் கொள்கைக மனப்பான்மையை அறிந்து கொண்ட தாட்சர் அவர்கள் அவரை மேற்குலக ஜனநாயகப் பாணியிலான அரசியலமைப்பை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் முன்னின்றார்.

    1987ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி மூன்றாவது முறையாக பிரதமராகிய முதலாவது நபர் எனும் சரித்திரம் படைத்தார். இக்காலகட்டத்தில் இவரது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள முடியாத தலைவர் எனும் பெயர் பெருமளவிற்கு பொதுமக்களால் மிகவும் எதிர்க்கப்பட்ட “போல் டக்ஸ்” (Poll Tax) எனும் கொள்கை உட்பட பல கொள்கைகளை அமுல்படுத்த முயன்றதினால் இவரது கட்சிக்குள்ளிருந்தே இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

    விளைவாக ,

    1990ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமைத்துவப் போட்டியில் ஜான் மேஜர் (John Major) அவர்களினால் தனது தலைமைப் பதவியை இழந்தார்.

    1992ம் ஆண்டு இவர் பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகினார். இவருக்கு இங்கிலாந்து நாட்டின் அரசியல் கெளரவமான ” லேடி” எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1995ம் ஆண்டு தாட்சர் பவுண்டேஷன் எனும அமைப்பைத் தோற்றுவித்து புதிதாக கம்யூனிச கட்டமைப்பில் இருந்து விடுபட்ட கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய பல சொற்பொழிவுகளையும், விரிவுரைகளையும் செய்தார்.

    பல சிறிய ஸ்ட்ரோக் எனும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டதினால் 2002ம் ஆண்டிலிருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார்.

    இவரது கொள்கைகள் நாட்டினைப் பிளவு படுத்தியது எனும் வாதம் இவரின் மறைவிற்குப் பின்னரும் கூட இன்றும் பலமூலைகளில் விவாத வடிவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

    நிலககரிச் சுரங்கத் தொழிலாளர்களின் யூயனின் பலத்தைச் சிதைத்து இங்கிலாந்தில் பல யூனியன்களின் பலத்தை தான் கொண்டு வந்த சட்டங்களின் மூலம் பலமிழக்கச் செய்தார்.

    வீடு வாங்கும் வசதியர்ரோருக்கு மாநகர சபைகளினால் வழங்கப்பட்டு வந்த அர்சாங்க வாடகை வீடுகளை அவ்வீடுகளில் குடியிருப்போருக்கு மிகவும் குறைந்த விலையில் அநேகர் வீட்டுச் சொந்தக்காரர் ஆக்கினார்.

    இது பலருக்கு வாழ்வில் தகுதியை உயர்த்த உதவியது என்ற வாதம் இவரது ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பலர் இன்றைய சமூக வீடுகளின் தட்டுப்பாட்டுக்கு இவரே காரணம் என்று மறுபகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஜாரோப்பிய யூனியன் இக்கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மீது பல அநியாயமான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டின் இறைமையைப் பாதிக்கின்றன எனும் வாதத்தை மிகவும் ஆணித்தரமாக முன்னெடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.

    இன்றைய ஜரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடிகள் இவரது வாதத்திற்கு வலுச் சேர்க்கிறதோ என்று எண்ணச் செய்யும் வகையில் இன்றைய நிலைமைகள் இருக்கின்றன.

    சரியான வகையிலோ அன்றித் தவறான வகையிலோ பிரித்தானிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக இவரது ஆட்சிக்காலம் அமைந்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

    இங்கிலாந்தின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயரெடுத்திருந்த போதும் தனது பதவிக்காலத்தில் பெண்களை அரசியலில் முன்னனிக்கு கொண்டுவருவதற்காக இவர் எவ்வகையிலும் சேவை ஆற்றவில்லை என்று பல பெண்ணியவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    இவரது மாற்றங்களின் தாக்கம் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எவ்வகையில் அமைந்தது என்பதற்கான தீர்ப்பை சரித்திரம் வழங்கும்.

    “அயர்ன் லேடி” என்று அழைக்கப்பட்ட இவ்வுறுதி மனத்தைக் கொண்ட தலைவியின் ஆத்ம சாந்திக்காக இப்புலம்பெயர் தமிழனின் மனம் பிரார்த்திக்கின்றது.

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    10.04.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (9)

    பவள சங்கரி

    புன்னகைக் கவசமிடுவோம்!

    ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து நீங்கள் புன்னகைக்கும்போது அது அவருக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ஒரு அழகான அன்புப் பரிசாகிறது ..

     தொடுதலின் சக்தி, ஒரு புன்னகை, அன்பான ஒரு சொல், கேட்கும் ஓர் செவி, நேர்மையான ஒரு பாராட்டு, அல்லது அக்கறையான ஒரு சிறிய செயல், இவையனைத்தும் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டது என்பதை அடிக்கடி நாம் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறோம்.
    அன்னை தெரெசா

    ஒரு சாதாரண புன்னகை எத்துனை மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். புன்னகையை எந்த இடத்தில் நாம் தொலைக்கிறோம் என்பதை முதலில் சிந்திப்போம்.

    1. கோபம் எட்டிப்பார்த்தால் புன்னகை ஓடி ஒளிந்து கொள்கிறது.
    2. அன்பு குறைய ஆரம்பித்தால் புன்னகை மறைந்து சிடுமூஞ்சித்தனம் தலைகாட்ட ஆரம்பித்துவிடுகிறது.
    3. உடலில் ஆரோக்கியம் குன்றினால் வேதனையில் புன்னகை தொலைந்து விடுகிறது.
    4. வேதனையான சம்பவங்கள் ஏதும் நடந்துவிட்டால் புன்னகை காணாமல் போகிறது.
    5. நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் திரை போட்டு மறைத்துக் கொள்கிறது புன்னகை.
    6. தேவையற்ற வெறுப்பு புன்னகையை உண்டுவிடுகிறது.

    இப்படி பல்வேறு காரணங்களால் புன்னகை நம்மைவிட்டு விலக்கப்படுகிறது. இதில் வேதனையான சம்பவங்கள் போன்ற சிலவற்றைத் தவிர மற்ற எதுவாயினும் வலுக்கட்டாய்மாகவாவது புன்னகையை வரவழைத்துப் பாருங்கள். அப்போதுதான் அதன் வலிமை நம்க்குப் புரியும். ஆம் அந்தப் புன்னகை நம்க்குள்ளும், நம்முடன் இருப்பவர்களுக்குள்ளும் நம்ம முடியாத பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் அடுத்தவர் மனநிலையையும் சற்றே உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் வேதனையான மன நிலையில் இருக்கும் போது நம் புன்னகையை வீசாமல் அன்பான பார்வையால் அவரை அமைதிப்படுத்திவிட்டு பின்பு நம் புன்னகையை வெளிப்படுத்தி அவரையும் அமைதி கொள்ளச் செய்வது உத்தமம். இந்த ஒரு சிறு புன்னகை மந்திரம் நம்மையும் அமைதிப்படுத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படச் செய்வதோடு, அடுத்தவரையும் அமைதியாக்கி நமக்கு ஆதரவாக செயல்படவும் செய்துவிடும்.

    யாரையும் மாற்ற முயற்சி செய்ய வேண்டியதில்லை!

    ஆம், யாரையும் மாற்றுவது என்பது தேவையற்ற கால விரயம் செய்யக்கூடிய ஒரு செயல். காரணம் ஒருவரை அவருடைய இயல்பான தன்மையிலிருந்து மாற்றுவது சாத்தியமில்லாத காரியம், அது என்றுமே நடக்க முடியாத ஒரு வெட்டி வேலையாகக்கூடும். ஆனால் பல நேரங்களில் நாம் நம்மை அறியாமலே இதைச் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த வழியில் சென்று மாற்ற முயன்றாலும் அது வீண் வேலை மட்டுமே.தொடர்ந்த சமாதான வார்த்தைகளாலோ, மகிழ்ச்சியற்ற அமைதியான சைகைகளாலோ, அவரிடம் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை வெளிப்படையாகச் சொல்லியோ அல்லது ஒரு வார்த்தையும் சொல்லாமல் புரிய வைக்க முயன்றாலோ என இப்படி எதுவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதுதான் நிச்சயம். நம்முடைய நெருங்கிய உறவாகவோ, இரத்த சம்பந்தம் உள்ளவரோ அல்லது நெருங்கிய நண்பரோ இப்படி யாராக இருந்தாலும் இதே நிலைதான். உண்மையில் எவ்வளவு அதிகமாக நாம் அவர் மாற்றம் வேண்டி அழுத்தம் கொடுக்கிறோமோ அதைவிட ஒரு படி மேலாக திரும்ப அந்த அழுத்தம் நமக்கே வந்து சேரும். ஒரு புள்ளியில் அது ஒரு சச்சரவாகக்கூட மாறும் வாய்ப்பாகிவிடும். மாற்றத்தை ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். அது அவருடைய உரிமையும் கூட. அதனால் நாம் எதையும் மாற்ற முயற்சித்து காலத்தையும் விரயம் செய்து, மன அமைதியும் கெடுத்துக்கொண்டு, எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும், உள்ளதை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கேற்றார்போல் நம் பாதையையும் அமைத்துக்கொண்டால் அவருக்கும் சுதந்திரம் கிடைப்பது போல வெற்றிகரமாக நமக்கும் விடுதலை கிடைத்துவிடுகிறது.

    வாழு! பிறரையும் வாழவிடு!

    தொடர்வோம்

    Share
  • யுகாதி ఉగాది, ಯುಗಾದಿ) गुढीपाडवा

    நவீன பஞ்சாங்க படனம்

    இன்னம்பூரான்

    10/11.04 2013

    யுகாதி பண்டிகையை முன்னிட்டு உலக மாந்தர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்.

    சுபிக்ஷமாக உங்கள் வாழ்க்கை அமையும். முயற்சியையும், பயிற்சியையும் கை விடேல்’

    குடும்பமும், பரிவாரமும், சுற்றமும், சமுதாயமும் செழித்தோங்கும். மனித நேயமே துணை.

    தனி நபர்களின் முன்னேற்றம், அவர்கள் கையில். ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்.

    இறைவனை தொழு. தன் கையே தனக்கு உதவி என்பதை மறக்காதே.

    முதுமையை பழிக்காதே. குழவியை விரட்டாதே. யாரையும் இகழாதே.

    நேசம் ஒரு பிணைப்பு. அன்பு ஒரு பிடிப்பு. கனிவு ஒரு பண்பு.

    ஒரு அசரீரி சொல்ல, கை எழுத, நானும் பஞ்சாங்க படனம் கேட்டுக்கொண்டேன்.

    ஜய விஜயீ பவ!

    அன்றொரு நாள் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தது, ‘விஜய’ வருஷத்தின் விஜயம் போது கண்ணில் தென்பட்டது

    “…உறையூரில் அன்று அதிகாலையிலிருந்து அல்லோலகல்லோலமாயிருந்தது…வீட்டுக்கு வீடு தென்னங்குருத்துக்களினாலும் மாவிலைகளினாலும் செய்த தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வீடுகளின் திண்ணைப் புறங்களிலெல்லாம், புதிய சுண்ணாம்பும் சிவப்புக் காவியும் மாறிமாறி அடித்திருந்தது. ஸ்திரீகள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள்…விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனையிலுள்ள பெரிய ரண பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில சத்தங்களும் கலந்து கேட்கத் தொடங்கின… இவ்வளவுடன், வழக்கத்துக்கு முன்னதாகவே துயில் நீங்கி எழுந்த பறவைகளின் கல கல சத்தமும் சேர்ந்து ஒலித்தது. சூரிய உதயத்துக்கு முன்னாலிருந்தே அரண்மனை வாசலில் போர் வீரர்கள் வந்து குவியத் தொடங் கினார்கள். படைத் தலைவர்கள் அவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார்கள்…இந்த மாதிரி அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி போர் வீரர்கள் “வீரவேல்” “வெற்றிவேல்” என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனை முன் வாசலில் கலகலப்பு ஏற்பட்டது. “மகாராஜா வருகிறார்!” “மகாராஜா வருகிறார்!” என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரண் மனைக் குள்ளேயிருந்து கட்டியக்காரர்கள் இருவர், “சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா வருகிறார்! பராக் பராக்!” என்று கூவிக் கொண்டு வெளியே வந்தார்கள். வீதியில் கூடியிருந்த அந்தணர்களும் முதியோர்களும் “ஜய விஜயீபவா!” என்று கோஷித்தார்கள்…”

    சுபம். “ஜய விஜயீபவா!”

    சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilnews.cc/admin/uploads/imagesCAZDWK5U.jpg

    Share
  • கொழுகொம்பு

    நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் யாவும் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.

    தூரத்தில் நிற்கும் பெரி மரம் ஒன்று முழுக்க முழுக்க கத்தரிப்பூ வண்ணத்திலான பூக்களால் தன்னைத் தன் நிர்வாணத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு நின்றிருந்தது. ஓடிப் போய் அந்த ஆடையின் ஒரு கங்கினைப் பிடித்து இழுத்தாலென்ன என்கிற குறும்பு நினைப்பில் நானிருக்க, அதனுள்ளிருந்து பொத்துக் கொண்டு வெளியேறியது எதையோ ஒன்றை இழுத்துப் பிடிப்பதற்கான வெறிபிடித்த அமெரிக்கன் டிப்பர் குருவியொன்று.  ஆடை கிழிபட்டதில் சிறிதுக்கும் பெரிதுக்குமான இடைப்பட்ட நடுக்கத்தோடு நடுங்கி நின்றது பெரி மரம்.

    இனியும் பொறுத்துக் கொண்டிருந்தால் மனசாட்சி நம்மை, ”நீ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? செத்துத் தொலையேண்டா!!” என நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமளவுக்கு கேட்டுத் தொலைக்கும் அபாயம் இருக்கிறபடியால், துரிதகதியில் காலைக்கடன்கள் முடிக்கப்பட்டு ஓடுகளப் பாதைக்கு ஏதுவான உடுப்புகளில் உடம்பைப் புகுத்திக் கொண்டேன். உறக்கத்தில் இருக்கும் மனிதங்கள் நான்கும் உறக்கத்திலேயே இருக்கட்டுமென விழைந்து அரவமேதும் இல்லாதிருக்கும்படியாகக் கதவைச் சாத்தி வெளியே வந்தாயிற்று.

    இளங்காலை வெயில் நம்மீது போர்த்தப்பட்டிருக்கும் தோலாடையையும் ஊடுருவி உள்ளே வந்து தசைநார்களை குதூகலத்தால் தோய்த்தது. ஊடுருவப்பட்ட தோலாடையை மேவிவிட்டது மிசிசிப்பி ஆற்றைத் தழுவி வந்த சாரக்காற்று. செவிப்புலத்தில் இசைஞானியின் இசையில் ஜானகியின் மெல்லிசை மதுரம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. மனம் சொக்கி போதையில் ஆர்ப்பரித்துக் கொண்டே உடலுக்குள் இருந்து வெளிக்கிளம்பி குளத்திலிருக்கும் நீர்ப்பரப்புக்கும் மேலாக இறக்கை கட்டிப் பறக்கின்றன. சுகித்துக் கொண்டன ஏனைய மெய்ப்புலங்கள் யாவும்.

    இன்னபிற புலங்கள் யாவும் தன்னிலை மறந்து உவப்புக் கொண்டிருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட கால்கள் இரண்டும் ஓட்டம் பிடித்தன குளத்தின் மருங்கிலிருந்த ஓட்டப்பாதையினூடக! ஐந்தரை மைல் தொலைவு ஓடியதை விழிகளிரண்டு தவிர மற்ற புலங்கள் எதுவும் கவனித்திருக்கவில்லை. வாழ்க்கைச் சுழலில் குளக்கரையில் ஓடுவதென்பதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.

    காலவெள்ளத்தில் அகப்பட்ட நாம் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறோம். இதைச் சொன்ன மாத்திரத்தில் சண்டைக்கு வருபவர்கள் உண்டு. யார் வருகிறார்களோ இல்லையோ, தாய் நாட்டு மக்கள் மீது பாசம் கொண்டவளும் பெண்ணிய மனப்பான்மை கொண்டவளுமான மச்சினிச்சி ஒப்புக்கொள்ள மாட்டாள். எனவே மிகுந்த கவனத்தோடு அமெரிக்காவில் என்பதை இடைச்செருகலாகப் பாவித்து திருத்திச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கின்றன.

    ஒருவர் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதெல்லாம் கூட மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது உலகின் ஏனைய பகுதிகளில். அத்தகைய தீர்மானங்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. தனி மனிதர்களால் தன் அகத்தின் விருப்புக்கொப்ப வாழ இயலவில்லை. இதன் காரணமாய் எனக்கும் என் மச்சினிக்குமிடையே முரண்பாடு எழுகிறது. எனவே ஏற்கனவே சொன்னது சற்று மாற்றிச் சொல்லப்படுகிறது.

    காலவெள்ளத்தில் அகப்பட்ட அமெரிக்காவாழ் மக்கள் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறார்கள். தகுந்த காரணங்கள் இருப்பின், காலத்தின் போக்கையும் தேவைக்கொப்ப மாற்றிக் கொள்கிறார்கள்

    வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் குளக்கரையில் ஓட வேண்டும். இது எமக்குக் கிடைத்த மிதவுகோல். இதைப் பற்றி மிதந்து பயணிக்கிறேன் காலவெள்ளத்தினூடாக. என்னுடைய அலுவலக நண்பன் மனோஜ் வதேரா என்பவனுக்குக் கிடைத்திருப்பது மற்றொன்று. கால அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் ஆற்றுப்படுகைக்குச் சென்று விடுகிறான்.

    மெம்ஃபிசு நகரத்தில் இதற்கென்றே ஒரு தனிப்பட்ட குழுமம். குழும உறுப்பினர்கள் யாவரும் தன்னார்வலர்கள். யாருடைய அறிவுறுத்தலுக்கோ நிபந்தனைக்கோ ஆட்படாதவர்கள் இவர்கள். எனக்கும் கூட ஆசையுண்டு. இருக்கிற ஆசையெல்லாம் நிறைவேறிவிட்டால் வேறென்ன இருக்கும்? இக்குழுமத்தில் இருப்பவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் அந்த நாட்டச்சுவை எதில் கிடைக்கிறது? கைப்படகுகளில் ஏறி ஆற்றுக்குள் பயணித்துத் தூய்மைப்படுத்துவதில் கிடைக்கிறது மனத்துக்கு இனிமையூட்டும் காயகல்பம்.

    வார ஈற்று நாட்களில் வீட்டில் இருக்க மாட்டான் மனோஜ். கைப்படகும் நீர்நிலைத் தூய்மையாளர்களுமென எங்காவது துடுப்படித்துக் கொண்டிருப்பான்.  அவனோடு அவனது குழுமத்தைச் சார்ந்த மற்றவர்களும் அவரவர் கைப்படகுகளோடு ஆற்றங்கரைக்கு வந்து விடுகிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து நாட்டு நடப்பு, உலக நடப்பு, ஊர்க்கதை, வீட்டுக்கதை, பகடி, எள்ளல், கேலி, சிரிப்பு எனப் பலதையும் மென்று தின்று கொண்டே ஆற்றுக்குள் படகைச் செலுத்துகிறார்கள். உடலுக்கு நல்ல பயிற்சி. மனத்துக்கு நல்ல களிப்பு. ஆற்றின் அழகுக்கும் செயலுக்கும் ஊறு விளைவிக்கிற எதைக் கண்டாலும் களைந்து அப்புறப்படுத்தி மகிழ்கிறார்கள். ஆற்றின் கரைகளைத் தன்னுடல் போலக் காதலித்து அவற்றோடு வாழ்வுப் புணர்ச்சி கொள்கிறார்கள்.

    மனோஜ் வதேராவின் மனைவி பாருல் வதேரா. பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். மருத்துவராக வேலை பார்க்கிறாள். தான் பார்க்கும் மருத்துவர் வேலையைக் காட்டிலும் அவளுக்குப் பிடித்தது குப்பை பொறுக்குவது. பொறுக்கி என்பதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவளுக்குக் கிடைத்த கொழுகொம்பு அது. பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கணக்கர்கள் எனப் பலதுறைகளைச் சார்ந்த தன் நண்பர்களோடு குப்பை பொறுக்குவதில் புணர்ச்சியுச்சம் கொள்வது அவளது வாடிக்கை. விடுப்பு நாட்கள், மாலை நேரங்கள் என்கிற போதெல்லாம் பூங்காங்கள், பெருந்தெருக்கள் முதலான இடங்களுக்குச் சென்று குப்பை பொறுக்கிப் போடுகிறாள். இதற்கென ட்ரேஷ் பிக்கப் கிளப்புகள் இருக்கின்றன. இவற்றின் வாயிலாக நிறையத் தொடர்புகள் கிட்டுகிறது, கும்பலாய்ச் சென்று வெளியில் திரிந்து வருவதில் சுவாரசியம் என்கிறாள் பாருல்.

    தெருவின் கடைக்கோடி வீட்டிலிருக்கும் ஸ்டெஃபனி தனித்து வாழும் தாய். ஒரே மகன் ஜேசன். பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களின் போதான சந்திப்பில் நாங்கள் அறிமுகம் ஆகிக் கொண்டோம். அவளுக்கு காப்பீட்டு நிறுவனமொன்றில் நுகர்வோர் தொடர்பாளர் வேலை. வீட்டைச் சுற்றிலும் சர்க்கரைப்பாகுத் தூக்கிகளை அங்கங்கே வைத்திருக்கிறாள். ஓசனிச் சிட்டுகளுக்கு ஊணூட்டி உயிரூட்டுவது அவளுக்கான பற்றுதல். மரங்களை வளர்த்து, செடிகளுக்கு மராமத்துச் செய்து சூழல்பாதுகாப்புக்கு நல்கும் உழைப்பே அவளுக்கான துணை.

    இடைக்கிடையே ‘ஹம்மிங்பேர்டு’ பட்டறைகளை நடத்தி விழிப்புணர்வு வேலைகளைச் செய்கிறாள். காடுகளுக்குப் போகிறாள். இவளுக்கு தனிப்பட்ட உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் ஹம்மிங்பேர்டு குமுகத்தினர் வந்து உதவுகிறார்கள். இப்படியானவை மனிதனுக்கும் மனிதனுக்குமான பிணைப்பைக் கொண்டு வந்து விடுகின்றன. உயிர்த்தோம்;இருந்தோம்;மரித்தோம் என்பதை மாற்றி, வாழ்ந்தோம் என்பதற்கான இலக்கணத்தை ஊட்டி விடுகின்றன.

    மென்மையாகப் பேசுவாள் ஸ்டெஃபனி. ஓசனிச்சிட்டுவைப் போலவே இருப்பாள் அவளும். அவள் வீட்டைக் கடந்து வரும் போதெல்லாம் நின்று பார்த்து வருவது தவிர்க்க இயலாதது. நான் எதுவும் செய்வதில்லை. ஓசனியோடு ஓசனியாய் அவளும் இருந்திட மாட்டாளா எனக் கண்கள் தேடுகின்றன. ஓசனியின் சிறகடிப்பு, சிலுசிலுப்பு ஒலிகள், இணுக்குகள் ஒடிந்து விடாதபடிக்கு உட்கார்ந்து தாவிச்செல்லும் பாங்கு முதலானவற்றைத்தான் நான் பார்க்கிறேன். அவ்வளவுதான்!

    குளக்கரைக்கு வரும் போது கூட அவளைப் பார்த்தேன். மண் அள்ளிப் போட்டுச் செடிகளை நட்டுக் கொண்டிருக்கிறாள்.  பெட்டூனியா பூச்செடிகளிருக்கும் பூந்தொட்டியிலிருந்து தவழ்ந்து வரும் ஓசனியின் இளமஞ்சள் இறகொன்று, குனிந்திருக்கும் அவளது பின்னங்கழுத்தினை வருடிக் கொஞ்சியது. தலை நிமிர்ந்து பார்க்கையில் அவள் கண்ணெல்லையில் நான் நிற்கிறேன். ஓசனிச் சிறகடிப்பின் அதிர்வை ஒத்திருந்த அவளது கண்ணிமைகளின் அதிர்வில் அவளையண்டி இருந்த மொனார்டா மலர்கள் நாண, மலரின் கருநீல வண்ணம் வெண்மையேகி நீலமாய் ஒளிர்ந்தது. “ஹாய் மணி” சொன்னவளின் வெண்மணிப் பற்களில் நீலம் பட்டுத் தெறிப்பதைக் கண்டு இளமுறுவல் பூக்கிறேன் நான். இனிமேலும் நான் இங்கு நின்றால் ஓசனிகள் படையெடுத்து வந்து என்னை விரட்டக் கூடும். என் வேலையை நான் பார்க்க வேண்டுமென்கிறபாட்டில் இங்கு வந்து விட்டேன் நான்.

    காலியர்வில் நகராட்சியின் நூலகத்தை ஒட்டினாற்போல இருக்கும் ’ஹால்’ பூங்காவிலிருக்கும் குளக்கரையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். நாளொரு முறையாவது வந்து குளத்தடியில் ஓட வேண்டும். அப்படிச் செய்யும் போது எனக்கான அந்த நாள் சிறப்புக் கொள்கிறது. மொத்தத்தில் மனமும் வளம் பெறுகிறது. யார் யாருக்கோ என்னவெல்லாமோ இருக்கையில், குளக்கரையே எனக்கான தொடுப்பு.

    அதோ குளத்தின் அந்த மூலையிலிருக்கும் வங்குக்கு நேர் மேலே குத்திட்டிருக்கும் பெரியவருக்கு மீன்பிடிப்பது குதூகலம். சனி, ஞாயிறுகளில் தன் பேரனையும் கூடக் கூட்டி வந்து இன்னோர் இடத்தில் உட்கார வைத்து விடுகிறார். மீனுக்காக மீன் பிடிப்பதில்லை இங்கு யாரும். தூண்டிலில் அகப்பட்ட மீனைக்கூட மீண்டும் குளத்திலேயே விட்டு விடுகிறார்கள்.

    குளக்கரையில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். பொறுமையாக உட்கார்ந்திருக்கிறார்கள். மெளனத்தைச் சுவாசித்து சிலையாய் வீற்றிருந்து காலத்தைப் புசிக்கிறார்கள். ’தூண்டிலாளர்கள்’ என்ற பெயரில் நீர்நிலையெங்கும் உலாப் போகிறார்கள். தூண்டில் போட்டு மீன் பிடிக்க தனி உரிமங்கள் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அலுவலகத்தில் இருக்கும் ’கிடாயன்’ ரோபர்ட் ஜான்சன் ஒரு தூண்டிலான். எப்போது பார்த்தாலும் ஃபிஷ்ஷிங் பற்றியே பினாத்திக் கொண்டிருப்பான். அதற்கென்ற வார, மாத இதழ்களோடு மீன்பிடிப் பெட்டியையும் வெத்தலை பாக்குப் பெட்டி போல கொண்டு திரிவான். அலுவலக அரட்டைகளின் போது, தூண்டிலாளர் குமுகாய அனுபவங்களைத் தின்று ஏப்பம் விடுவான். இரத்த அழுத்தம், மனநோய் போன்றவர்களுக்கு மீன்பிடிப்பு ஒரு நிவாரணம் என்கிறான். தன்னம்பிக்கையை வளர்த்து இணக்கத்தைப் பெருக்கும் என்கிறான். இந்தக் குளத்திலும் எப்போதும் யாராவது மீன்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மன அமைதியும், வெளியின் இலக்கணமற்ற இசையும், நீர்நிலையின் மணமும் முகில்களின் காற்றுக்கொத்த ஓடுபராக்கும் விலையில்லாப் பண்டமாய்க் கிடைக்கின்றன. அனுபவிப்பவன் பேறு கொண்டவனாகிறான்.

    குளத்தையொட்டி இருக்கும் மரங்களுக்கும் எனக்குமிடையில் நேசம் உண்டு. சென்ற கோடையில் இட்டுச் சென்ற கனடியக் கீசுகளின் முட்டைகள் எல்லாமும் வசந்தகாலக் குஞ்சுகளாய் பூத்திருக்கிறது குளத்தின் கீழ்க்கரையில். வசந்தகால இலை துளிர்ப்புக்கான காத்திருத்தலுடன் குச்சி மரங்களாய் இருக்கும் செரி மரங்களின் நுனிக் கிளைகளில் அமர்ந்து  உச்சி மாநாடு நடத்திக் கொண்டிருக்கின்றன கருந்தாரிச் சிட்டுகள்.

    அந்த வெள்ளைக்காரப் பெண்மணியின் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுடையதன் பெயர் சோமா. அவள் அவனை அப்படித்தான் விளித்து அழைக்கிறாள். வாட்டசாட்டமாய் இருக்கிறான் சோமா. கருமைநிற வெல்வெட்டுத் துணியைப் போர்த்தினாற்போல அவனது மயிர்க்கற்றைகள். அருகிலிருக்கும் வளவு ஒன்றில்தான் வசிக்கிறாள். அவ்வப்போது சோமாவை அழைத்துக் கொண்டு அவளும் வந்து விடுகிறாள் குளக்கரைக்கு.

    ஐந்தாவது மைல் ஓட்டத்தின் துவக்கத்தில்தான்  காட்சியொன்று அங்கே ஈடேறியது. குளத்தின் மடுவிறக்கத்திலிருந்த அந்தப் பெண் மஞ்சள் வண்ணப் பந்தொன்றை ககனமார்க்கத்தினூடாக குளத்துக்குள் விட்டெறிந்தாள். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நாயொன்று தரைமார்க்கத்தினூடாக பந்தின் வேகத்துக்கொப்ப இணையாக ஓடி, ஓடி, குளத்தின் நீருக்குள் பாய்ந்து, வேகத்துக்கிணையாகவே நீச்சலடித்து வீரியமிழந்து வீழ்ந்த பந்தினை லபக்கென்று தன் வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு வந்தது. மீண்டும் பந்தை வீசாமல் கையை மட்டும் தம் திறம் கொண்ட மட்டும் பின்னால் இழுத்து வேகமாய் வீசினாள். பந்து அவளது கையிலேயே இருப்பதைக் கூர்ந்த நாய் ஒரு இம்மி கூட நகரவில்லை. வாலை ஆட்டிக் குழைந்தது.

    பந்தினை வேகமற்ற வேகத்தோடு செங்குத்தாய் வீசி இலாகவாமாய்ப் பிடித்துக் கொண்ட பின்னர், மீண்டும் திறம் கொண்ட மட்டும் கையை வீசி எறிந்தாள். நாய் வாளாமல் அதே இடத்தில் நின்று கொண்டே வாஞ்சையாய் அவளைப் பார்த்தது. பந்தினை இரு உள்ளங்கைகளுக்குள் பிடித்தபடி அதை உருட்டிப் படுத்தினாள் அவள். இவளுக்கென்ன விசர் பிடித்திருக்கிறதா எனும் பாங்கில் அவளை வேடிக்கையாய்ப் பார்த்துக் கொண்டு நின்றது அந்த நாய்.

    பிணையல் முடிந்ததும் இடத்தை விட்டு விறுக்கென்று ஓடி மறையும் பாம்பினது வேகத்தில், பந்தினை விட்டு வீசுவதைப் போலத் தன் வலக்கையை குளத்தை நோக்கி வீசினாள் அவள். நாயும் வானைப் பார்த்துக் கொண்டே குளத்தை நோக்கி ஓடி ‘தபோர்’ என குளத்து நீருக்குள் பாய்ந்து வீழ்ந்தது. பந்து மட்டும் இன்னமும் அவள் கைகளிலேயே இருந்தது. வெற்றிப் பெருமிதத்தில் திளைப்பும் செருக்கும் அவளுக்கு.

    கடைசி வட்ட ஓட்டத்தினை ஓடி நிறைக்கும் நோக்கில் நம் கால்கள் வேகமெடுத்தன. அலைகளின் ஒத்திசைவுக்கொப்ப மதகில் நீர் துள்ளிக் குதித்து கடை போனதைக் கவனித்த விழிகள் வியப்பில் நகைத்துக் கொண்டன. நம்மைப் பார்த்த டென்னசி நீல பூபிப் பறவைகள் விருட்டென மேலெழும்பிப் பறந்து போயின. இனி வீடு நோக்க வேண்டும். அல்லாவிடில் மனைவியென்னும் அதிரூபத்துக்கு முன்னால் வீழ வேண்டி இருக்குமெனக் கருதி கால்கள் ஓட்டத்தினின்று தாழ்ந்தன. மெய்ப்புலங்கள் யாவும் சொக்கு நிலையிலிருந்து திரும்பிக் கொண்டன. அப்போதுதான் கவனித்தேன். இன்னமும் அந்த நாய் குளத்துக்குள்ளேயேதான் இருக்கிறது. பல நேரங்களில் நாய்களும் பாடங்கள் பல கற்பிக்கும்.

    “சோமா, ஐ அம் சாரி. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி திஸ் டைம். ஐ வில் நெவர் டு திஸ் டு யூ. இனிமேல் இப்படி செய்யவே மாட்டேன் சோமா. மன்னிச்சிடு. குளத்துக்குள்ள பந்து வீசுற மாதிரி நடிச்சி உன்னை ஏமாத்த மாட்டேன். வெளியில வா. ப்ளீஸ் சோமா!!”, இனி அது எப்போது மனம் இளகி மன்னிப்பு வழங்குமோ தெரியாது.  கீரியைக் கீறுவானேன்? பிராண்டலுக்கு பச்சிலை தேடுவானேன்??

    அறிவியல் கோட்பாடொன்றைக் கண்டு கொண்ட ஆர்க்கிமிடிசு அம்மணமாய்த் தெருவில் ஓடியதைப் போல, எதையோ கண்டு கொண்ட பாவனையில் தாவித் தாவி தப்படி போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது அது. ஆமாம்!  பூங்காவின் ஓரத்திலிருக்கும் ப்ளாக்பெரிச் செடிகள் அடர்த்தியாய் வளர்ந்து நிற்கும் அந்தப் புதரிலிருந்து ‘விருட்’டென வெளிக்கிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது பெருமுயலொன்று!!

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும்- 5

    செல்வன்

    இன்றைய மருத்துவர்களால் பரிந்துரைக்கபடும் உடல்நல குறிப்புக்களை ஆதிமனிதன் பின்பற்றி இருந்தால் மனித இனமே பரிணாம வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும். அந்த அளவு மோசமான அறிவுரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன. உதாரணம் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உண்ணச் சொல்லி இவர்கள் கொடுக்கும் அறிவுரை. முட்டையில் உள்ள மினரல்கள், வைட்டமின்கள் எல்லாமே மஞ்சள் கருவில் தான் உள்ளன. முட்டையின் மஞ்சள் கரு என்பது ஒரு உயிருக்குத் தேவையான அனைத்து மூலப்பொருளையும் கொண்டது. அத்தகைய சத்தான மஞ்சள் கருவை தூக்கி எறிந்து வெள்ளைக் கரு ஆம்லட்களை உண்டு பலரும் உடல்நலனை கெடுத்து கொண்டார்கள். முட்டைக்கு பதில் கடைகளில் விற்பனைக்கு வந்த எக் ஒயிட்டில் பல கெமிக்கல்கள், பிரசர்வேடிவ்கள் கலக்கப்பட்டு இருந்தன.

    இதே மாதிரி பாலைக் குடிக்க வேண்டாம் எனச் சொல்லி கொழுப்பு நீக்கிய ஸ்கிம் மில்க்கை குடி என இவர்கள் கூறிய அறிவுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு எடுத்த பாலை கொட்டிய பால் என தமிழகத்தில் அழைப்பார்கள். அதில் புரதம், கால்ஷியம் தவிர்த்து எதுவும் கிடையாது. பாலில் இருக்கும் கொழுப்பை நீக்கியவுடன் அதில் உள்ள வைட்ட்மின் ஏ, வைடமின் டி எல்லாம் அகன்றுவிடும். அதனால் செயற்கையாக வைட்டமின் ஏவையும், வைட்டமின் டியையும் கொட்டிய பாலில் கலந்து வந்தார்கள். ஆனால் வைட்டமின் ஏவும், வைட்டமின் டியும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். பாலில் உள்ள கொழுப்பு இன்றி அவை உடலில் சேருவது இல்லை. கழிவில் அப்படியே அந்த வைட்டமின்கள் வந்துவிடும். கொட்டிய பாலில் செயற்கையாக சேர்க்கப்பட்ட அந்த வைட்டமின்கள் நம் உடலில் சேரவேண்டும் எனில் கொட்டிய பாலை உண்கையில் பாலுடன் வெண்ணையை உண்ண வேண்டும்!!!!

    கொட்டிய பால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைத்ததும் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அதற்கு முன் கொட்டியபாலை அவர்கள் விற்காமல் கொட்டித்தான் வந்தார்கள். அதற்கு இப்படி ஒரு சந்தை கிடைத்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சி.

    2 வயது முதல் குழந்தைகளுக்கு கொட்டியபாலை கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் உங்கள் வயது ஐம்பதை தாண்டி உங்களுக்கு ரத்த அழுத்தம் இருந்தால் உங்களுக்கு ஸ்டாடினை பரிந்துரைக்கலாம் என எப்.டி.ஏ ஒரு விதியை அறிமுகபடுத்தியது. இதனால் கொலஸ்டிரால், இதய அடைப்பு பிரச்சனை எதுவும் இல்லாத  65 லட்சம் அமெரிக்கர்கள் ஸ்டாடினை உட்கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளானார்கள்.

    ஆனால் ஆய்வுகள் இதுகுறித்து என்ன கூறுகின்றன? மந்காட்டன், நியூயார்க் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் 2277  பேரைப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்ததில் கிடைத்த புள்ளிவிவரங்கள் கொல்ஸ்டிராலும், எல்டிஎல்லும் மோசமானவை எனக் காட்டவில்லை. மாறாக எத்தனைக்கெத்தனை கொலஸ்டிராலும், எல்டிஎல் விகிதமும் அதிகமாக இருந்ததோ அத்தனைக்கு அத்தனை அவர்கள் அதிகமாக உயிர்வாழ்ந்தார்கள்.

    Inline image 2

    இந்த ஆய்வின்படி மொத்த கொலஸ்டிரால் அளவு 175க்கு கீழ் இருந்தவர்களில் 97% 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

    கொலஸ்டிரால் 176ல் இருந்து 200 வரை இருந்தவர்களில் 78% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

    கொலஸ்டிரால் 200 தாண்டியதும் மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாக (57%) குறைந்தன.

    அதேபோல் கெட்ட கொலஸ்டிரால் எனப்படும் எல்டிஎல் கொலஸ்டிரால் 97க்கு கீழ் இருந்தவர்களில் 90% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள். ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் ஸ்டாடின் கொடுக்கும் அளவு “மோசமாக” கருதப்படும் 144 என்ற அளவைத் தாண்டி எல்.டி.எல் இருப்பவர்களில் 53% பேர் 10 ஆன்டுகளில் மரணம் அடைந்தார்கள்.

    இன்றைய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதிகபட்ச எல்.டி.எல், மொத்த கொலஸ்டிரால் அளவு என்ன?எல்.டி.எல் 130.மொத்த கொலஸ்டிரால் 200. நீங்கள் வயதானவராக இருந்து, மருத்துவர் சொல்லும் அளவுகளுக்கு உங்கள் கொலஸ்டிராலை குறைத்தால் என்ன ஆகும்?

    முட்டையை குறித்து நடத்தபட்ட்ட ஆய்வுகள் மருத்துவ அறிவுரைகள் எவ்வளவு தவறானவை எனக் காட்டின.

    கிட்டத்தட்ட 10 லட்சம் பேரை வைத்து சீனாவில் நடத்தபட்ட இந்த மெகா அனாலிசிஸ் ஆய்வு முட்டை உண்பதற்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவுக்கும், இதயநோய்களுக்கும் ஸ்னானபிராப்தி இல்லை என்றது. உங்களுக்கு சக்கரை இருந்தால் முட்டை உங்களுக்கு இதய்நோயை வரவழைக்கும் (ஆனால் அது இந்த நிலையில் கூட ஒரு சந்தேகத்துக்கு உரிய கருதுகோள் தான்). டயபடிஸ் இல்லாதவர்கள் முட்டையை உண்டால் அது அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை, இதயநோயும் வருவது இல்லை என்கிறது பேராசிரியர் லியூவின் ஆய்வு.

    முட்டையின் வெள்ளைக் கருவை உண்டு, கொழுப்பு எடுத்த பாலை குடித்துத் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தார்களா என்ன?

    (தொடரும்)

    Share
  • அமெரிக்கப் பெண்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கப் பெண்கள்  எல்லாவற்றிலும் ஆண்களுக்குச் சமமாகத் தாங்களும் செயல்பட  வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  இப்போது ராணுவத்திலும் ஆண்களோடு சமஉரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள்.  ஆண்களுக்குத் தரப்படும் எல்லாப் பதவிகளும் இவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமாம்.  ஆண்கள் செய்யும் எல்லா முரட்டு வேலைகளையும் (பெரிய பளுக்களைத் தூக்குவது இதில் ஒன்று), செய்வது, ஈவு இரக்கமற்று எதிரிகளைக் கொல்வது, சண்டையில் சகாக்கள் அடிபட்டு வேதனையால் துடிப்பதையும் உயிருக்குப் போராடுவதையும் பார்த்து மனதைக் கல்லாக்குவது என்று ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் இவர்களும் செய்ய வேண்டுமாம்.  இதற்காக இராணுவத்தில் எல்லா வேலைகளையும் பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதியை ராணுவ அமைச்சர் அமுகலுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.  சம உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஒரு எல்லையே இல்லையா?  நான் எப்போதும் கூறுவதுபோல் இயற்கை  பெண்களையும் ஆண்களையும் ஒன்றாகப் படைக்கவில்லை.  ஆணின் உடம்பிற்குள்ள பலம் பெண்ணின் உடம்பிற்கு இல்லை.  பெண்ணால்தான் பிள்ளை பெற முடியும்.  சம உரிமை வேண்டும் என்பதால் ஆண்களையும் பிள்ளை பெறும்படி இவர்களால் பணிக்க முடியுமா?

    மேலும் இராணுவத்தில் பணிபுரியும்  பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்கள்.  ஆண்களுக்கும் இந்தக் கொடுமை நடக்கிறதாம்.  இருந்தாலும் இப்படிப் பெண்கள்  தேவையில்லாமல் ஆபத்திற்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள  வேண்டுமா?

    எனக்குத் தெரிந்த ஒரு  பெண் ஒரு டிபார்ட்மெண்ட் கடையில் மெத்தைகள் விற்கும் பகுதியில் மேனேஜராக வேலைபார்க்கிறாள்.  இவள் மேனேஜர் என்பதால் மெத்தைகளை  இவளே தூக்க வேண்டியதோ நகர்த்த  வேண்டியதோ இல்லை.  ஆனாலும்  குழந்தை பெற்றுக்கொண்ட  ஒன்றரை மாதங்களிலேயே வேலைக்குச் சேர்ந்து (அதற்கு மேல் விடுமுறை இல்லை) கனமான மெத்தைகளைத்  தூக்குகிறாள்.  தன்னால்  இனியும் இந்த மாதிரி வேலைகளைச்  செய்ய முடியும் என்பதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது போல் இருக்கும் இவள் செய்யும் வேலை

    குழந்தை பெறுவது மட்டுமில்லை, அதன் பிறகு கொஞ்ச காலத்திற்காவது பாலூட்டி வளர்க்க வேண்டியது பெண்ணின் கடமை ஆகிறது.  இந்தக் கடமையையும் ஆண் சேர்ந்து சுமக்க வேண்டும் என்கிறார்களா?  பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டதால் இன்று சமூகத்தின் தூண்களில் ஒன்றான குடும்பம் என்ற அமைப்பு வலுவிழந்து போயிருக்கிறது.  இப்போது இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதால் இந்த அமைப்பு இன்னும் வலுவிழக்கும் என்று ஏன் இவர்கள் உணரவில்லை?  மேலும் பல ஆண் போர்வீரர்களே இராணுவத்தில் பணிபுரியும்போது அங்குள்ள கோரங்களைப் பார்த்துவிட்டு மனவியதியால் (Post traumatic disorder) பாதிக்கப்படுகிறார்கள்.  சிலர் இந்த வியாதியின் காரணமாக கொலைகாரர்களாகவும் மாறுகிறார்கள்.  ஆண்களே இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டால் பெண்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள்?  பெண்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகித்துச் செய்யக் கூடிய வேலைகள் எத்தனையோ இருக்கின்றன.  இராணுவத்தில் சில வேலைகள் பெண்களுக்கு மறுக்கப்படுவதால் பெண்களுக்கு ஆண்களோடு சம வேலைவாய்ப்புகள் இல்லையாம்.  அதனால் போராடித் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டார்களாம்!  அமெரிக்கா செல்லும் திசை சரியில்லை என்று நான் நினைப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.  இராணுவத்தில் எந்த வேலைக்கும் பெண்களும் நியமிக்கப்படலாம் என்ற விதியும் அந்தக் காரணங்களில் ஒன்று.

    சில தினங்களுக்கு முன் வந்த ஒரு செய்தி பெண்கள் குற்றம் புரிவதிலும் ஆண்களோடு தங்களுக்குச் சமஉரிமை வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது.

    டெலவேர் என்னும் மாநிலத்திலுள்ள லிங்கன் என்னும் ஊரைச்  சேர்ந்த மார்கரெட் ஸ்மித் என்னும் 89 வயதான மூதாட்டி வரப் போகும் ஈஸ்டர் பண்டிகைக்காக தன் வீட்டிற்கு வரப் போகும் உறவினர்களுக்குப் பரிசுகள் வாங்கக் கடைக்கு தன் பியூக் காரில் சென்றார்.  இவர் உயரம் 4’ 11” தான்.  தாட்டியான உடம்பில்லை.  காரின் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டுவதற்கு டிரைவர் இருக்கையின் மீது ஒரு தலையணைய உயரத்திற்காக வைத்திருந்தார். வழியில் ஒரு இடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று எண்ணி அந்தக் கடையின் முன் உள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தினார்.

    இவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போம். லிங்கன்  ஊரின் ஸ்லாட்டர் நெக் என்னும்  தெருவில் பெற்றோரின் பன்னிரெண்டு குழந்தைகளில் ஒருவராக மார்ச் 1924-இல் பிறந்தார்.  தந்தை தொழிற்சாலையில் வேலைபார்த்ததோடு விவசாயமும் செய்துவந்தார். பெரும்பான்மையாக கருப்பு அமெரிக்கர்கள் வாழும் இடம் ஸ்லாட்டர் நெக்.  அவர்கள் வீடு, நிலம், பள்ளி எல்லாம் அங்குதான்.  அவர்கள் இறைவனை வழிபடும் சர்ச் கூட அங்குதான் இருக்கிறது. அங்குள்ள பள்ளியிலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பிலடெல்பியாவிற்குப் போய் முடி அலங்காரம் செய்யும் படிப்பை முடித்துவிட்டு மறுபடி ஸ்லாட்டர் நெக்கிற்கே திரும்பி அங்கு ஒரு அழகு நிலையத்தைத் துவங்குகிறார்.  முதல் திருமணம் விவாகரத்தில்முடிந்தது; இரண்டாவது கணவர் இளவயதிலேயே இறந்துவிட்டார்.  மூன்றாவது கணவரோடு 42 வருடங்கள் வாழ்ந்தார்.  2010-இல் அவர் இறந்துவிட்டார்.

    எல்லோரிடமும் மார்கரெட் அன்பாகப் பழகுவார்.  சர்ச்சில் பாட்டுப் பாடுவார். தன்னார்வத் தொண்டு செய்வார்.  இவருடைய அழகு நிலையத்திற்கு பல மைல் தொலைவிலிருந்து வருபவர்களும் உண்டு.  உள்ளூரில் இவருக்கு நல்ல பெயர்.  பத்து வருடங்களுக்கு முன் தொழிலிருந்து ஓய்வு பெற்றார். பக்கத்து வீட்டுக்காரர் இறந்து போனதும் அவருடைய பூனையை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்.

    கார் நிறுத்துமிடத்தில்  காரை நிறுத்தியிருந்த இவரை இரண்டு இளம் பெண்கள் – வயது 15,14 – அணுகி நகரின் அடுத்த கோடிக்குப் போக வேண்டும் என்றும் தங்களை அவர் அவருடைய காரில் கூட்டிச் சென்றால் பனம் கொடுத்துவிடுவதாகவும் கூறினர்.  முதலில் தயங்கிய மூதாட்டி பின் அவருக்கே உரிய இரக்க சுபாவத்தினால் அவர்களைத் தன் காரில் கொண்டுவிடுவதாகவும் ஆனால் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி அவர்களைத் தன் காரில் ஏற்றிக்கொண்டார்.  அந்தப் பெண்கள் மீது இரக்கம் காட்டியதுதான் அவர் செய்த பெரிய தவறாகப் போய்விட்டது.

    காருக்குள் ஏறியவுடனேயே  கார்ச் சாவியை மூதாட்டியிடமிருந்து  பறித்துக்கொண்ட அந்த இரு  பெண்களும் மூதாட்டியை கார் டிக்கிக்குள் தள்ளிப் பூட்டிவிட்டு காரை ஓட்டத் தொடங்கினர். இடையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி டிக்கியைத் திறந்து மூதாட்டியிடமிருந்த 500 டாலர் பணத்தைப் பறித்துக்கொண்டு மறுபடி டிக்கியிலேயே வைத்துப் பூட்டினர்.  அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டனர்.  இரண்டு நாட்கள் நாற்பது டிகிரி குளிரில் ஆகாரமும் இருதய வியாதிக்கும் இரத்த அழுத்தத்திற்கும் தேவையான மருந்துகளும் இல்லாமல் அந்த டிக்கியில் காலம்கழித்த அவரை மறுநாளைக்கு மறுநாள் டிக்கியிலிருந்து விடுவித்து ஒரு கல்லறைத் தோட்டத்தில் விட்டுவிட்டு அந்தப் பெண்கள் ஓடிவிட்டனர்.

    எங்கிருக்கிறோம் என்பதே தெரியாமல்  மூதாட்டி வெறும் கால்களோடு அந்த மண் ரோட்டில் தவழ்ந்து வந்துகொண்டிருந்ததை நல்ல வேளையாக ஒரு பெண் பார்த்து அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்.

    ஒரு மூதாட்டியை இப்படி வஞ்சித்து  அவரிடமிருந்து பணத்தைத் திருடி,  அவரை டிக்கியில் இரண்டு நாட்கள் இருக்கும்படி செய்து, பட்டினி போட்டு அரக்கத்தனமாக ஆள் நடமாட்டமில்லாத ஒரு கல்லறைத் தோட்டத்தின் அருகில் அம்போ என்று விட்டுவந்த இந்த அரக்க அமெரிக்கப் பெண்களை எதில் சேர்ப்பது?  இவர்கள் ஆண்களுக்கு நிகராகக் குற்றம் புரிகிறார்களா?

    இந்தியாவில் இப்படிப்பட்ட வக்கிர நடத்தை கொண்ட பதின்ம வயதுப் பெண்களை சமூகம் உருவாக்காது  என்று நினைக்கிறேன்.

    அமெரிக்கப் பெண்கள் தங்கள் உடல் அமைப்பை மீறி இயற்கை எல்லையைத் தாண்டினால் அது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று நினைக்கிறேன்.

    Share
  • மை லிட்டில் ரெட் வேகன்

     

    தேமொழி

    மாற்றுடைகளைத் தோளில் போட்டுக்கொண்டு துவாலையும் கையுமாகக் குளிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தார் பானுமதி. அவரது கணவன் சுந்தர் ஜெயா பிளஸ் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்.

    செய்திகள் வாசிப்பவர், கட்சியின் இளைஞர் பாசறையைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் இறந்ததாகவும், முதலமைச்சர் அவர் குடும்பத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கியதாகவும், கட்சி அன்பர்கள் பயணம் செய்யும்பொழுது இனிமேல் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு முதலமைச்சர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதாகவும் அறிவித்துக் கொண்டிருந்தார்.

    பேரன் ரவி ஹைசேரில் உட்கார்ந்து அதன் ட்ரேயில் பரப்பியிருந்த ஹனி நட் சீரியோஸ்ஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மருமகள் கீதா மாடிப்படிக்கு அடியில் உள்ள க்லோசெட்டில் இருந்து சில அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுத்து அவற்றில் உள்ளவற்றைப் பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.

    “இப்போ எதுக்கு இதக் கடை வைக்கிற கீதா?” என்று அவற்றை அருகில் வந்து பார்வையிட்ட வண்ணம் கேட்டார் பானுமதி.

    “ரெண்டு நாள் முன்னால கேன்சர் ரிசெர்ச் செய்யிற நிறுவன ஆளுங்க வந்து பழசை நன்கொடையாக் கேட்டு வாசல்கதவில ஒரு பெரிய பிளாஸ்டிக் பை வச்சாங்க அத்தை, இன்னைக்கு அவங்க வண்டில வந்து கொடுக்கிறத சேகரிச்சிட்டுப் போவாங்க. நமக்குத் தேவையில்லாத பொருளையெல்லாம் நடைபாதையில் மூட்டை கட்டிப் போட்டால் எடுத்திட்டுப் போவாங்க.”

    “நல்ல காரியம்தான், நமக்கு உபயோகப்படாதது யாருக்காவது உபயோகமா இருந்தா சரி, இவ்ளோ பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில ஆராய்ச்சி செய்ய அரசாங்கமே பணம் கொடுக்காதா? இப்படி பழசு பண்டத்த சேகரிச்சு வித்து, காசாக்கி ஆராய்ச்சி செய்யிற அளவுக்கு மோசமான நிலைமையா?” என்று சொல்லிக் குளியலறை கதவைச் சார்த்திக் கொண்டார் பானுமதி.

    “பிளேன தூக்கிட்டுப் போய் அடுத்த நாட்டோட சண்டைக்குப் போகச் சொல்லு, உடனே செய்வாங்க, அதுக்கு மட்டியும் பணம் எங்கிருந்துதான் வருதோ?” என்றார் எரிச்சல் மிகுந்த குரலில் சுந்தர்.

    அதைக் கேட்டுச் சிரித்தவண்ணம், அளவில் சிறியதாகிப் போன மகன், மகளில் உடைகளையும், காலணிகளையும், பொம்மைகளையும் எடுத்து, அவற்றில் சேதம் ஆகாமலும் மிகவும் பழையதாகத் தோற்றமளிக்கதவற்றையும் தேர்ந்தெடுத்து அட்டைப் பெட்டிகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள் கீதா.

    கார் காரேஜின் கதவைத் திறந்து, அதன் வழியாக அப்பெட்டிகளைக் கொண்டு சென்று வீட்டின் முன் உள்ள நடைபாதையில் வைத்தாள். நன்கொடை கேட்ட நிறுவனம் விட்டுச் சென்ற பிங்க் கலர் பையையும் அதன் மேல் அடையாளத்திற்காகக் கட்டி வைத்தாள். குளித்த பின்பு ஈரத் தலையைத் துவட்டியவாறு வாசலுக்கு வந்த பானுமதி, “பொம்மையெல்லாம் கூடவா எடுத்துப்பாங்க?” என்றார்.

    “ஓ, எடுத்துப்பாங்களே”

    “அப்ப இதையும் அதோட போட்டுடு,” என்று கீதாவின் பதிலுக்குக் காத்திராமல், கார் காரேஜில் கிடந்த அவளது பேத்தி ராதிகாவின் ரெட்வேகனைத் தரதரவென இழுத்துச் சென்று நடை பாதையில் மற்ற பெட்டிகளுக்கருகில் விட்டு விட்டு வந்தார்.

    குழந்தை ரவியை தோளில் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த சுந்தர், கீதாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்து, “பானு என்ன இது? ராதிகா அழாதா? திருப்பி எடுத்திட்டு வா” என்றார்.

    இதற்குள் தன்னை சமாளித்துக் கொண்ட கீதா, “பரவாயில்லை மாமா, அவளும் கொஞ்சம் பெரிய பொண்ணா வளந்திட்டால்ல, காணாமப் போனாக் கொஞ்சம் தேடுவா, அழுவா, அப்புறம் மறந்திடுவா. அப்படியே அழுது அடம் பிடிச்சாலும், அது பழசாயிடுச்சி கிறிஸ்துமஸ் கிஃப்ட்டா வேற வாங்கிக்கலான்னு சொல்லிடலாம்” என்றாள்.

    *

    பானுமதியும் சுந்தரும் கோடையில் அமெரிக்காவின் தட்பவெட்பம் நன்றாக இருக்கும் காலமாகப் பார்த்து மகன் பரணியுடன் அமெரிக்காவில் தங்க வந்திருந்தார்கள். இதோ இன்று நவம்பர் முதல் தேதி, செப்டெம்பரில் துவங்கிய குளிர் வர வர அதிகமாகிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் கிளம்பி விடுவார்கள். தீபாவளிக்கு இந்தியாவில் இருப்பார்கள். பேரன் பேத்திகளுடன் விளையாடியதில் நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

    பானுமதிக்கு உலக மகா எரிச்சல் தருவது பேத்தியின் அந்த ரெட்வேகன் பொம்மைதான். இதெல்லாம் என்ன பொம்மைன்னு நீ வாங்கிக் கொடுத்தே என்று மகனிடம் முடைவார். ராதிகாவிற்கு மிகவும் விருப்பமான பொம்மை அவளது அந்தச் சிவப்பு நிற, சக்கரங்கள் கொண்ட , நீண்ட கைப்பிடியுடன் இருக்கும் ரெட் வேகன்தான். வீட்டிற்குள் அவளது பொம்மைகளை வேகனில் நிரப்பி வைத்திருப்பாள். வெளியில் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடப் போனால் அதில் அவளது ‘டெட்டி’ கரடிப் பொம்மையையும், ‘டாமி’ பூனைப் பொம்மையையும், ‘மிக்கி’ மவுஸ் பொம்மையையும், ‘ஸ்னூப்பி’ நாய் பொம்மையையும் வைத்து சவாரி அழைத்துப் போவாள். கடற்கரைக்கு விளையாடப் போனாலும் மணல் வீடு கட்டும் பிளாஸ்டிக் உபகரணங்கள் அதில் வைத்துதான் இழுக்கப் பட்டு வரும். தபால் பெட்டியில் இருந்து தபால்களை சேகரித்து வேகனில் வைத்துதான் இழுத்து வருவாள். கடைக்குப் போய் வந்தால், கார் ட்ரங்க்கில் இருந்து சாமான்கள் நிரம்பியப் பைகளை அதில் வைத்து இழுத்து வந்து அப்பாவிற்கு உதவி செய்வாள். ஒரு நாள் தம்பி ரவியை வேகனில் வைத்து வீட்டிற்குள் அங்கும் இங்கும் இழுத்து அவள் விளையாடிய பொழுதுதான் எரிச்சல் தாளாமல், கோபம் தலைக்கேறி பானு அவளை அடிக்கவே போய்விட்டார். பிறகு இந்த நாட்டில் இதெல்லாம் செய்தால் கம்பியை எண்ண வேண்டும், வந்த இடத்தில் ஏன் பொல்லாப்பு என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டார்.

    “நம்ம ஊர்ல முடமானவங்களத்தான் இந்த மாதிரிதான் வச்சு இழுத்துக்கிட்டுப் போய் பிச்சை கேக்கிறதப் பார்த்திருக்கேன். பார்க்கவே சகிக்கல, முதல்ல புள்ளைய வண்டில இருந்து தூக்கு,” என்று கீதாவிடம் சீறி விழுந்தார்.

    நேற்று அக்டோபர் 31 என்று ‘ஹாலோவின்’ (Halloween) கொண்டாடினார்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள். இருட்டிய பிறகு ராதிகாவும் கோமாளி போல உடை உடுத்திக் கொண்டு, கையில் ஆரஞ்சு வண்ண பிளாஸ்டிக்கில் கோர முக வடிவம் வரைந்த பூசணிக்காய் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள். பெரியவர்கள் யாராவது சிறுவர்களுடன் துணைக்குப் போகவேண்டும் என்பதால் பரணியும் கிளம்பினான்.

    ஏற்கனவே பேத்தியின் கோமாளி உடையைப் பார்த்து பொருமிக் கொண்டிருந்தார் பானு. நம்மூரில் நவராத்திரிக்கு என்ன அழகாக குழந்தைகளை அலங்கரிப்பார்கள், இங்கே பார்த்தால், கோமாளியாம், பேயாம், பிசாசாம், சூனியக்கரியாம், என்ன ஒரு அலங்காரம்? என்ன ஒரு கேவலமான ரசனை? ச்சே,” என்று திட்டிக் கொண்டிருந்தார். போதாகுறைக்கு மகனும் உடன் கிளம்ப “நீ எங்கே கிளம்புற?” என்று விரட்டினார்.

    “இல்லம்மா, வந்து… நான் துணைக்குப் போகணும்மா…” என்று வார்த்தைகளை மென்று முழுங்கினான் பரணி.

    “அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து வீடு வீடாய்ப் போய் மிட்டாய் பிச்சை வாங்கப் போறீங்களா? நாடு விட்டு நாடு வந்து, அமெரிக்கா வந்து மிட்டாய் பிச்சை எடுக்கணும்ணு தலையெழுத்தா? சரி, சரி என்னவோ செய், நீயாச்சு, உன் பொண்ணாச்சு. ஆனா, இதையெல்லாம் பெருமைன்னு மட்டும் நினைச்சி படம் எடுத்து ஃபேஸ்புக்கில போட்டு என் மானத்த வாங்காத? என்றுத் திட்டி அனுப்பினார். ராதிகா பூசணிக்காய் பாத்திரத்தை வேகனில் வைத்து இழுத்துக் கொண்டு சென்றாள். இருக்கட்டும் இந்த பொம்மையை ஒழிச்சுக் கட்டிட்டுத்தான் மறுவேலை என்று மனதிற்குள் கருவிக் கொண்டார். இப்பொழுது அதனை செயலிலும் காட்டி விட்டார்.

    *

    பானுமதியும் சுந்தரும் வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் வழக்கம் போல வாக்கிங் சென்றுவரக் கிளம்பி விட்டார்கள். நேரம் பத்து மணிபோல இருக்கும், அப்பொழுது தொலைபேசி வந்தது. கீதா எடுத்துப் பேசினாள், அழைப்பு ராதிகாவின் பள்ளியிலிருந்து. ராதிகா பள்ளியில் வாந்தி எடுத்ததால், பள்ளி நர்ஸ் அவளை உடனே வந்து அழைத்துப் போகச் சொன்னார். கீதா பதட்டத்துடன் பரணியின் கைபேசி எண்ணை அழைத்தாள், வழக்கம் போல பதில் இல்லை. உடனே கூப்பிடுங்கள் என்று செய்தி வைத்தாள்.

    ரவிக்கு அவசர அவசரமாக டயாப்பர் மாற்றி, காரின் பின்னிருக்கையில் குழந்தையின் கார் சீட்டில் பெல்ட் போட்டுக் கட்டி வைத்தாள். அவன் அழ ஆரம்பிக்கவும் அவனது பாசிஃபயரை மறந்து விட்டது நினைவு வந்தது மீண்டும் உள்ளே ஓடினாள். ராதிகாவிற்கு ஏன் இப்படி உடம்பு சரியில்லாமல் போனது என்ற குழப்பத்தில் அவளால் சரிவர சிந்திக்க முடியவில்லை. அவசரத்திற்குத் தொடர்பு கொள்ள முடியாத பரணியின் மீதும் எரிச்சல் வந்தது. அவள் காரை ரிவர்ஸ் கியரில் போட்டு கேரேஜுக்கு வெளியில் கொண்டு வரும்பொழுது பானுவும் சுந்தரும் வீடு திரும்பிக்கொண்டிருப்பது தெரிந்தது. கீதாவும் குழந்தையும் வெளியில் கிளம்பத் தயாராக இருப்பதைப் பார்த்து அவர்கள் நடையை எட்டிப் போட்டுக் காரை அடைந்தார்கள்.

    காரணம் தெரிந்தும், ஐயையோ, என்னாச்சு? நாங்களும் வருகிறோம் என்று காரில் ஏறிக் கொண்டார்கள். அந்நேரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் செல்பவர்களின் கூட்டம் குறைந்து சாலை சிறிது அமைதியாக இருந்தது.

    “காலையில ராதிகா நல்லாத்தானே இருந்தது, பரணி ஸ்கூல்ல விடறப்போ எப்படி இருந்துச்சாம்?”

    “தெரியல அத்தை, அவரோட பேச முடியல,உடனே கூப்பிடச் சொல்லி மெசேஜ் வச்சிருக்கேன்.”

    “எல்லாம், ஹாலோவீன், ஹாலோவீன் அப்படின்னு ஆட்டம் போட்டு, கண்ட கண்ட மிட்டாய படுக்க போறதுக்கு முன்னால கணக்கு வழக்கில்லாம திண்ண வேண்டியது, அப்புறம் உடம்பக் கெடுத்துக்க வேண்டியது, சொன்னா யார் கேக்கிறாங்க, இன்னைக்கு பரணி வீட்டுக்கு வரட்டும், அவன உண்டு இல்லன்னு ஆக்கிடுறேன்.”

    பானு சொல்வதிலும் உண்மை இருக்கலாம் என்பதால் சுந்தரும் கீதாவும் அமைதியாக இருந்தார்கள்.

    அவர்கள் பள்ளிக்குச் சென்றபொழுது மணி பதினொன்றுதான் என்றாலும், காலை நேர, பகுதி நேர அரைநாள் கிண்டர்கார்ட்டன் வகுப்புகள் முடியும் நேரம் என்பதால் பார்க்கிங் பகுதியில் கார்களுடன் பெற்றோர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. இடம் தேடி காரை நிறுத்திவிட்டு, ரவியைக் காரில் பானுவுடனும், சுந்தருடனும் விட்டு விட்டு பிரின்ஸ்பால் அறையை நோக்கி விரைந்தாள் கீதா. சில வகுப்புகளுக்கு மட்டும் மதிய உணவு நேரம் ஆரம்பித்து அந்த மாணவர்கள் கேஃப்டீரியாவிற்கு சென்று கொண்டிடுந்தார்கள்.

    பள்ளி அலுவலகத்தில் ஸ்கூல் நர்ஸ்ஸின் அறைக்கு வழி சொன்னார்கள். கீதா அங்கு சென்றபொழுது ஒரு ஒரமான நாற்காலியில் ராதிகா உட்கார்ந்திருந்தாள். சோர்ந்திருந்தாலும் அவள் சரியான நிலையில் இருப்பதைப் பார்த்து கீதாவின் மனதிற்கு நிம்மதி ஏற்பட்டது.

    அவளை வரவேற்ற நர்ஸ், “ராதிகா சரியாகத்தான் இருக்கிறாள், எனக்கு அவள் உணவில் சந்தேகம், வேறு வகையான உணவு எதுவும் கொடுத்தீர்களா? அடுத்தவர்கள் கொடுத்த ஹாலோவீன் மிட்டாய்களை நன்குப் பரிசோதித்துவிட்டுத்தானே உண்ண அனுமதித்தீர்கள்? உங்கள் வீட்டுக்கருகில் உள்ள வேறு ஏதாவது குழந்ததைகளுக்கும் இப்படி ஏதாவது நடந்ததாகத் தெரிந்தால் உடனே போலீசுக்குத் தகவல் கொடுங்கள். மிட்டாய்களில் நச்சு கலக்கும் ஏதாவது கிறுக்கர்களின் சதி வேலையாக இருக்கக்கூடும். வீட்டிற்கு அழைத்துப் போய் ஓய்வு கொடுங்கள். மீண்டும் வாந்தி எடுத்தால் டாக்டரிடம் அழைத்துப் போங்கள்,” என்று ஆலோசனைக் கூறினார்.

    காரின் பின்னிருக்கையில் ராதிகா பாட்டியின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள். தாத்தாவும் பாட்டியும் கவலை நிறைந்த முகத்துடன் அவளது கழுத்தையும் நெற்றியையும் தொட்டுத் தொட்டு காய்ச்சல் ஏதும் அடிக்கிறதா என்று பார்த்தார்கள். வீட்டிற்குக் காரைக் கிளப்பும் நேரத்தில் பரணியிடம் இருந்து அழைப்பு வந்தது. கீதா அவனுக்கு நிலைமையைச் சொல்லி அவன் வரத் தேவையில்லை, தேவை ஏற்பட்டால் டாக்டரிடமும் அழைத்துச் செல்கிறேன் என்று கூறினாள்.

    காரில் வீடு திரும்பும் பொழுது அனைவரும் அமைதியாக இருந்தார்கள். வீடு இருக்கும் சாலைக்குக் காரைத் திருப்பிய பொழுது கீதாவிற்குப் பகீரென்றது. நன்கொடை கேட்டவர்கள் இன்னமும் வந்து நடைபாதையில் வைத்திருந்த பொருட்களைச் சேகரித்துக் கொள்ளவில்லை. கிளம்பிய அவசரத்தில் அதைப் பற்றிய நினைவே இருந்திருக்கவில்லை. கீதா பின்னால் திரும்பி பானுவிடம் கண்ணால் ரெட் வேகனைக் காட்டி ஜாடை செய்தாள். பானு மடியில் படுத்திருந்த ராதிகா தனது தலையைத் தூக்கிவிடாதவாறு அழுத்திக் கொண்டாள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, எதிரில் வந்த கார் ஒன்று ஒருவீட்டின் காரேஜில் இருந்து சரியாகக் கவனிக்காமல் பின்னோக்கி வந்த காருடன் மோதலைத் தவிர்க்கப் போட்ட சடன் ப்ரேக்கின் ஒலியும், டயர் கிறீச்சிடும் ஒலியும், விபத்தைத் தவிர்த்த கார்காரர் எழுப்பிய எரிச்சல் நிறைந்த கார் ஹாரன் ஒலியும் அவர்கள் திட்டத்தைத் தவிடு பொடியாக்கியது. ராதிகா தலையைத் தூக்கிப் பார்த்து விட்டாள். அவளது ரெட் வேகன் மற்ற நடைபாதைப் பொருட்களுடன் இருப்பதையும் பார்த்து விட்டாள்.

    “மாம்! ஹவ் குட் யு டூ திஸ்?” என்றவள் கேள்வியை முடிக்கும் முன் அழத் தொடங்கினாள்.

    காரை சாலையில் இருந்து திருப்பி கேரஜில் கொண்டு நிறுத்தும் வரை நிலைகொள்ளாமல் இருந்தவள், கார் நின்றவுடன் கதவைத் திறந்து, குதித்து உடனே நடைபாதையை நோக்கி வேகமாக ஓடினாள். குற்ற உணர்ச்சியுடன் தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் அவளைத் தொடர்ந்தார்கள். ஆனால் விரைந்து ஓடிய ராதிகா சடாரென நின்றுவிட்டாள்.

    அழுக்காடை அணிந்து “ஹோம்லெஸ், வில் வொர்க் ஃபார் ஃ புட்” என்று எழுதிய அட்டையைக் கையில் வைத்திருந்த ஒரு வயதான ஆள் ராதிகாவின் ரெட் வேகன் அருகில் நின்றிருந்தார். தோளில் சுமந்திருந்த அவரது உடமைகள் நிறைந்த மூட்டையை ரெட் வேகனில் இறக்கி வைத்து இழுக்க ஆரம்பித்தவர் வேகமாக ஓடி வந்திருந்த ராதிகாவின் காலடி ஓசையால் திரும்பினார். அது அவளது வேகன் என்பது அவருக்குச் சட்டெனப் புரிந்துவிட்டது.

    “சாரி யங் லேடி, ஐ தாட் யு லெஃப்ட் திஸ் வேகன் அஸ் எ டோனஷன், ஃபார்கிவ் மீ. பை தி வே, ஐ ஆம் ஜோயி”

    “நைஸ் டு மீட் யு மிஸ்டர் ஜோயி, நெவெர் மைண்ட். ஐ ஜஸ்ட் காட் ஃபெட் அப் வித் தட் டாய் ஆல்ரெடி. ஐ தின்க் தட்ஸ் வொய் மை மாம் லெப்ஃட் தட் அஸ் எ டொனேஷன் ஃபார் தி குட் வில் பீப்பிள். பட், இஃப் யூ லைக், யூ கேன் ஹேவ் இட்”

    தனது உடமை நிறைந்த மூட்டையை வைத்திருந்த வேகனை இழுத்துக் கொண்டு நகர்ந்த ஜோயி திரும்பிப் பார்த்து, “பை தி வே, சைல்ட், டூ யூ நோ தி மீனிங் ஆஃப் தி சேயிங் …”இட்ஸ் யுவர் லிட்டில் ரெட் வேகன், அண்ட் யூ ஹாவ் டு புல் இட்?”

    “அஃப் கோர்ஸ், ஜோயி, ஐ நோ இட். இட் மீன்ஸ் எவெரி ஒன் மஸ்ட் பி அக்கவுண்ட்டபிள் ஃபார் தேர் ஓன் ஆக்க்ஷன்ஸ்”

    “யூ ஆர் எ ஸ்மார்ட் கிட், தேங்க் யூ, மே காட் ப்ளஸ் யூ மை ஸ்வீட்டி, பை …பை”

    “பை …பை…ஜோயி”

     

     

    படங்கள் உதவி:
    http://www.alabamarealestateinstitute.com/wp-content/uploads/2013/01/Red-Wagon-300×200.jpg
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRs6evCUQbUooOJZKLlQPVzpX_l_10tHjC_W5PYtee6gdkdiIba

    Share
  • பாரதியின் வேத முகம் – 7

    – சு.கோதண்டராமன்

    ஓம்

    வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. எந்த மந்திரத்தைக் கூறினாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன?

    ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

    வேத மந்திரங்களில் பாரதிக்கு மிகவும் பிடித்தமான சொல் ஓம். கந்தர்வ லோகத்தில் பிரதிமைகள் இல்லாத கோவில்களும் சில உண்டு. அங்கு ஓம் என்று ஒளி எழுத்தில் எழுதி வைத்திருப்பதாக ஞானரதம் என்ற கட்டுரையில் அவர் கூறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் இறை வணக்கப் பாடலில் ஓம் எனப் பெரியோர்கள் ஓதுவது தான் பிரமம் எனப்படும் அறிவும் அனந்தமும் ஆகிய நிர்மலப் பொருள் என்கிறார். இறைவனை வணங்கும் போது ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்த வேண்டும் என்று அவரது விநாயகர் நான்மணிமாலை கூறுகிறது.

    ஓங்காரம் ஆசீர்வாதத்திற்கு உரிய மங்கலச் சொல் என்று பாரதி கருதியதை, “தருமன் முகமலர்ந்து வருக என்று சொல்லி ஓம் என்று ஆசீர்வதித்தான்” என்று அவரது தர்மலோகம் கூறுகிறது. ஓங்காரத்தை தியானத்திற்குரிய எளிய மந்திரமாகவும் மன அமைதி் தருவதாகவும் அவர் கருதினார் என்பது தருமலோகம் என்ற கட்டுரையில் “முனிவர்கள் இருவரும் பிரம்மத் தியானத்திலே அமர்ந்திருந்தார். நான் ஓம் என்று ஜெபித்து சாந்தி தேவியை வரிக்கலானேன்” என்று கூறுவதிலிருந்து அறியலாம்.

    இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

    ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

    புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

    பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

    பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”

    வேதத்தில் ஓங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதன் நோக்கம் புதுமையில் நாட்டம் கொண்டவனாக இரு என்று அறிவுறுத்துவதற்கே.

    சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

    புராணங்களின் மெய்ப் பொருள் கண்டு பயன் பெற வேண்டும் என்ற பாரதியின் கருத்துக்கு இணங்க, ஓங்காரம் தொடர்பான ஒரு புராணக் கதையின் உட்பொருள் காண முயல்வோம்.

    பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது. புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். புதியனவற்றை ஏற்க மறுக்கும் முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

    இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

    வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி. ஆம். வேதத்தின் ஸம்ஹிதை என்ற காலத்தால் மூத்த பகுதியில் இந்த ஓங்காரம் ஒரு சொல்லாக அமையவில்லை. இது ஒரு பிற்காலக் கண்டுபிடிப்புத் தான் என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இன்று எந்த வேத மந்திரம் சொல்வதானாலும் ஓங்காரத்துடன் தான் துவக்கப்படுகிறது, ஓங்காரத்துடன் முடிக்கப்படுகிறது.

    நிகழ்காலத்திலும் இந்தப் புதுப்பி்க்கும் செயல் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். அதனால் தான் ஆத்திசூடியில் வேதம் புதுமை செய் என்கிறார். நாம் புதுமையை விரும்பினாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கும் பழமையைக் கைவிடுவதற்கும் நமக்குத் தயக்கம் அதிகம். இதைப் பாரதி தன் மனத்துக்கு அறிவுறுத்தும் பாடலில் காட்டுகிறார்.

    புதியது காணில் புலனழிந்திடுவாய்

    புதியது விரும்புவாய் புதியது அஞ்சுவாய்

    அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்

    பழமையாம் பொருளிற் பரிந்து போய் வீழ்வாய்

    பழமையே அன்றிப் பார்மிசை ஏதும்

    புதுமை காணோம் எனப் பொருமுவாய்

    பாரதி மற்றவர்க்கு உபதேசித்ததைத் தான் நடைமுறைப்படுத்திக் காட்டினார். முந்தைய புலவர்களினின்றும் மாறுபட்டு்க் காலத்திற்கு ஏற்ற புது வகையான பாடல்கள், புது வகையான கருப் பொருள்கள் கொண்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது போல, மானிட சமுதாயம் நலம் பெறுவதற்கான ஒரு புதிய மந்திரத்தையும் உருவாக்கினார்.

    சொல் புதிது

    வேத மந்திரங்களைச் சொல்லி முடிக்கும்போது, ‘எங்கும் அமைதி நிலவுவதாக’ என்று பொருள்பட ‘ஓம் சாந்தி’ என்று மும்முறை சொல்லி முடிப்பது வழக்கம். இந்தியா தாழ்வுற்றுப் பாழ்பட்டு நின்ற நிலையில் நமக்குத் தேவை செயலற்றுக் கிடக்கும் அமைதி அல்ல, செயல்படுவதற்கான வலிமையே என்று உணர்ந்து பாரதி ஓம் சக்தி என்ற புதிய மந்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். இம்மந்திரம் வேத வழக்கில் இல்லாதது. ஆனால் இதன் கருத்து வேத சம்மதமானதே என்பதை விவேகானந்தரின் இந்த உபநிடத மேற்கோள் மெய்ப்பிக்கிறது.

    உபநிஷத் கூறுகிறது, “வலிமை, வலிமை. மனிதா, பலவீனனாக இராதே. பலவீனத்தைப் பலவீனத்தால் குணப்படுத்த முடியுமா? அழுக்கை அழுக்கால் போக்க முடியுமா? மனிதா, நிமிர்ந்து நில். வலிமையாக இரு.”

    இவ்வாறு ஓம் சக்தி மந்திரம் பாரதியால் வேத நெறி அடிப்படையில் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை அறிகிறோம்.

     

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2013/01/பாரதி.jpg

     

     

    Share
  • திருமுருகன் துதிமாலை (5)

    இப்பிறவி முப்பிறவி வினையெல்லாம் போக்கி

    முக்தியே சேர்க்க வேண்டும்

    தப்பியான் செய்கின்ற பிழையெலாம் நீக்கி

    பக்தியை ஏற்க வேண்டும்

    சிப்பியில் முத்தான வித்தகா ஷண்முகா

    சித்தனே செந்தில்நாதா

    அப்பிய நீறெலாம் அதிசய மருந்தாக்கி

    அமுதாக்கும் குமரதேவே

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (5)

    Share
  • அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை

    பவள சங்கரி

    ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
    முதல் பதிப்பு – 2012
    மொத்த பக்கங்கள் – 210
    விலை – 165

    பொதுவாக ஒரு சிறு பிரயாணம், அது வியாபார நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ செல்வதென்றாலே பல முன்னேற்பாடுகள் அவசியமாகிறது. அதுவும் எங்கு பார்த்தாலும் தீவிரவாதமும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைக்ளும் மலிந்து கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் நாடு விட்டு நாடு பயணம் செய்யும் போது, குறிப்பிட்ட அந்த நாட்டைப்பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு பயணம் செய்யும்போது ஒரு தற்காப்பு உணர்வை அது கொடுக்கும்  பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்பு அந்த நாட்டைப் பற்றிய பொருளாதாரம், வரலாற்று செய்திகள், பருவ நிலைகள், பார்க்க வேண்டிய இடங்கள் என அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் அனைத்துத் தகவல்களும் ஓர் இடத்தில் கிடைப்பது என்றால் அது பயணத்தை மிக சுவாரசியமாக மாற்றிவிடக்கூடுமல்லவா?

    “அமெரிக்காவைப் பற்றி வரும் கட்டுரைகளையும், துணுக்குகளையும் படித்திருக்கிறேன். பெரும்பாலான துணுக்குகள் அவை எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சூழ்நிலையைப் பற்றிக் கூறாததால் படிப்பவர்களுக்கு வேறு விதமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கக் கூடும்; அவை சில சமய்ம் உண்மையை திரித்துக் கூறுவது போலவும் இருக்கும்” ஆசிரியர், நாகேஸ்வரி அண்ணாமலை ஆரம்பத்திலேயே தம் முன்னுரையிலேயே, இப்படி நூலின் கருத்து பற்றிய பெரும் எதிர்பார்ப்பை விதைத்து விடுகிறார். வெளிநாடுகளில் முதல் அடி எடுத்து வைக்கும் எவருக்கும் தோன்றும் சுத்தம் பற்றிய அந்த திகைப்பு பல்லாண்டுகளாக அமெரிக்காவில் வாழும் இவருக்கும் ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

    அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றி குறிப்பிடும்போது, “ஜனாதிபதி ரீகன் காலத்திலிருந்து, அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்புவரை மனிதனை மனிதன் கபளீகரம் செய்யும் பொருளாதாரமாக முதலாளித்துவம் இருக்கவில்லை. இந்த முப்பது ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர்களுக்கிடையே இடைவெளி அதிகமாகி இருக்கிறது. அமெரிக்கா போகும் திசையைத் திருப்ப ஜனாதிபதி ஒபாமா எவ்வளவோ முயன்று கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி இதை ஒபாமாவின் சோஷலிசம் என்கிறது. சோஷலிசம், கம்யூனிசம் போன்றவை அமெரிக்காவிற்கு அலர்ஜியைக் கொடுப்பவை. ….. அமெரிக்காவில் இப்போது எங்கே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது? இரண்டாவது உலகப் போருக்குப் முன்னால் சிறிய அளவில் முளைவிட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் கிள்ளியெறிந்து விட்டார்களே! …. உலக நாடுகளிடையே மிகவும் தாழ்ந்து போயிருக்கும் அமெரிக்காவின் படிமத்தை மேம்படுத்துவது பற்றி ஒபாமா பேசினால் அமெரிக்காவின் தனித்தன்மையை குறைத்து மதிப்பிடுகிறார் என்று அவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். அமெரிக்கா செய்த தவறுக்கு அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால் ஒபாமா அமெரிக்கரே இல்லை என்கிறார்கள்” என்று தன்னுடைய ஆதங்கத்தை மிகத்தெளிவாகப் பதிவிட்டிருக்கிறார் ஆசிரியர்.

    இன்றைய அமெரிக்கப் பொருளாதாரம் கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதுதானே நிசம். இவர்களுக்குப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டால் அது மொத்த அமெரிக்காவையே பாதிக்கக்கூடிய சூழ்நிலையில்தானே இருக்கிறது. ஆனால் நம் இந்தியப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் ஒருநாளும் அது கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே எந்த சூழ்நிலையிலும் இந்தியப் பொருளாதாரம் நலிவடையும் வாய்ப்புகள் மிகக்குறைவு. எந்த நிலையிலும் நம் இந்தியப் பொருளாதாரம் முட்டி மோதி மீண்டும் துளிர்விட்டு தளைப்பதற்கும் இதுவேதான் காரணம். திரு ராஜீவ் காந்தி பிரதமராகவும், திரு மன்மோகன்சிங் அவர்கள் நிதியமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் பெரும் பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்டிருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த வகையில் ஆசிரியரின் கருத்து ஏற்புடையதாக்வே உள்ளது.

    ”அமெரிக்க ஜனநாயக நாகரீகம் பற்றிப் பெருமையாகப் பேசப்பட்டாலும் அமெரிக்காவை இப்போது ஆள்வது பணம் படைத்த அமெரிக்கக் கார்ப்பரேட்டுகள்தான் , அமெரிக்காவின் உண்மை நிலையை ஓரளவிற்குப் படம்பிடித்துக் காட்ட வேண்டும் என்ற என் ஆசையின் விளைவே இந்தப் புத்தகம்” என்ற வரிகள் நம்மை மேலும் ஆழ்ந்து வாசிக்கத் தூண்டுகிறது.

    அமெரிக்க நகரங்களுள் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும், உலகப்புகழ் பெற்ற ,ஓவியர் பிக்காசோவின் ஐம்பதடி உயர இரும்புச் சிற்பம் அலங்கரித்துக் கொண்டிருக்கிற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ நகரம் பற்றி பல மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறார் ஆசிரியர். ஊழல் அரசியல் மலிந்து கிடப்பதோடு, பனிப்புயல் போன்ற இயற்கை சீற்றமும் அதிகமாக உள்ள சிகாகோ மாநிலத்தின் அழகான மற்றொரு பகுதியை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.

    தன் கணவருடன் தான் அங்கு தங்கியிருந்த காலங்களில் நடத்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகள் முதல் நியூயார்க் நகர வணிக மையத்தின் சின்னமாக விளங்கிய இரட்டைக் கோபுரங்கள் விமானம் மூலம் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம், கறுப்பர் இனத்தின் தலைவர்கள் பற்றிய குறிப்பு, நகரத்தின் வளர்ச்சி, அதன் அமைப்பு, கறுப்பர் வாழும் பகுதி பற்றிய ஆதங்கம், நகரின் முக்கியத்துவம் என அனைத்தையும், மிகத்தெளிவாக படங்களுடன் பதிவிட்டிருப்பது பாராட்டிற்குரியது.

    ’மாறும் பருவநிலைகள்’ என்ற தலைப்பில் ஆசிரியர் மிக விளக்கமாக அளித்திருக்கும் தகவல்கள் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. நான்கு பருவங்கள், மாறும் காலம், கோடைச் செயல்கள், புயல், வானிலை என அனைத்துத் தகவல்களும் நல்ல இரசனையுடன் அழகு நடையில் எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது. முதல் முறையாக பனிக்காலத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சென்று மாட்டிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவது ஒரு பெரிய சாதனைதான் என்று அனுபவத்தில் உணர்ந்ததால் இவருடைய விளக்கங்களின் வலிமையை உணர முடிகிறது. பனியை அகற்றுவதற்கும், தோட்டங்கள் பராமரிப்பு  என பெரும்பாலான வேலைகளுக்கு மெக்சிகோவிலிருந்து வரும் குடியேறிகள் பன்னிரண்டு மில்லியன் பேர்கள் என்ற தகவலும், இவர்கள்  சரியான விசா இல்லாமல் இருக்கும் குடியேறிகள் என்றாலும், இவர்கள் இல்லாமல் முதுகை ஒடியச் செய்யும் வேலைகளை அமெரிக்கர்கள் செய்யமாட்டார்கள் என்பதால் இரு அரசியல் கட்சிகளும் மிகுந்த கருத்து வேறுபாட்டுடன்  குழப்பத்தில் இருப்பது போன்ற தகவல்களும் அளிக்கிறார்.

    ‘உணவுகள் பலவிதம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய பல நாட்டு உணவு வகைகள், உணவு உற்பத்தி முறைகள், அதிக அள்வில் வீணாக்கப்படும் உணவுகள், சமைக்கும் முறைகள் மற்றும் அதன் மாற்றங்கள், சமைக்கும் வகைகள், விதம் விதமான ச்மையல் சாதனங்கள் நண்பர்களோடு உணவருந்தும் பழக்கம், தயார் நிலை உணவு, நலம் கெடுக்கும் உணவு, இயற்கை உணவு போன்ற பல சுவாரசியமான தகவல்களை வழங்கியுள்ளது சிறப்பு. வீணாக்குவதில் அவர்களின் வல்லமை குறித்து மிக விளக்கமாகவே கூறியிருக்கிறார்.

    ”பருவ வயது வந்தவுடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலுணர்வு தோன்றுவது இயற்கை. அதற்கு வடிகால் அமைத்து அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு ஒவ்வொரு சமூகமும் சில விதிகளை வகுத்திருக்கிறது. அமெரிக்கச் சமூகம் என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம்”  என்று ’திருமணத்தின் புதிய அர்த்தங்கள’ என்ற பகுதியில் கலாச்சார ஒப்பீடுகள் மிகச் சுவையாக அமைந்திருக்கிறது. திருமணம் செய்யாமலே பிள்ளை பெற்றுக்கொள்ளும் தற்போதைய நிலையையும், லிங்கன் (1809 – 1865) திருமணம் குறித்த சுவையானதொரு சம்பவமும் கொண்டு பலவிதமான மாறுபட்ட கலாச்சாரங்களை தெளிவாகவே விளக்கியுள்ளார். பெற்றோர்களின் விவாகரத்தினால் அல்லலுறும் குழந்தைகளின் நிலை, ஓரினச் சேர்க்கை, ஓரினத் திருமணம் கருப்பு – வெள்ளைத் திருமணம் என அங்கு நடக்கும் அனைத்து வகைகளையும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியிருப்பதும் சிறப்பு.

    ’இந்தியர்களின் இக்கட்டு நிலை’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்த தம் கருத்தையும் பகிர்ந்துள்ளார். 1950ம் ஆண்டு முதல் இன்றைய நிலைவரை தெள்ளத் தெளிவாக, நிதர்சனத்தை சொல்லியிருக்கிறார் என்பது அன்றாடம் நம் செவிவழி மற்றும் செய்தித் தாள்களில் காணும் செய்தியாக இருப்பது மூலம் ஒப்புக்கொள்ள முடிகிறது. இவர் விளக்கியுள்ள பல சம்பவங்கள் வேதனை அளிக்கக் கூடியதாகவே உள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள பிள்ளைகளின் பெற்றோரின் நிலை குறித்து மிகச் சிறப்பாக புரிந்துணர்ந்து சொல்லியிருக்கிறார். தம் இறுதிக் காலங்களை பிள்ளைகளுடன் கழிக்க விரும்பி அமெரிக்காவில் சென்று தங்கும் முதியவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான மருத்துவக் காப்பீட்டுப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இவர் அலசியுள்ள விதம், அங்கு சென்று தங்க விரும்பும் ஏனையோருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குடியேறிய நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதின் சிரமங்கள் போன்ற அனைத்தையும் நன்றாகவே விளக்கியுள்ளார். ஆன்மீக நாட்டம் உள்ளவர்களின் பழக்க வழக்கங்களையும், அதற்கான ஏற்பாடுகள் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நடத்தப்படுவதையும்கூட அழகாகவே சொல்கிறார். குடியேறியவர்களின் திருமணப் பிரச்சனை, கல்விப் பிரச்சனை பெற்றோர் பிரச்சனை கறுப்பர்களை மதியாமை, இவை அனைத்திற்கும் மேலாக பெயர்ப் பிரச்சனை என அனைத்தையும் மிகச் சுவையாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார்.

    பொதுவாகவே நீண்ட ஆயுள் கொண்டவர்களாக இருக்கும் அமெரிக்கர்கள் முதுமையில் படும்பாட்டையும், ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்காகக் கண்டறியப்பட்ட தீர்வுகள் என அனைத்தும் படித்து அறிய வேண்டிய தகவல்கள். மருத்துவச் செலவு என்பது அங்கு எத்துனை பெரிய தலைவேதனை என்பதை அறியும் போது அந்த வேதனை நம்மையும் தொற்றிக் கொள்வதும் உண்மை.

    கார் கலாச்சாரம் பற்றி பல தகவல்களும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்தும், மிகப்பெருமையாக அவர் குறிப்பிட்டாலும், Keyless entry போன்ற தொழில் நுட்பங்கள் நம் நாட்டிலும் பல ஆண்டுகள் முன்பே வந்துவிட்டதும் உண்மை என்பதை பதிவிடவில்லை… ஆனாலும் கடன் பெறுவது முதல் வரி வட்டி கட்டுவதுவரை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது.

    நம் இந்தியத் திருநாட்டில் லஞ்சம் மற்றும் அரசியல் வியாதிகளால் கொள்ளை போகும் சொத்துக்களுடன், நம் நிம்மதியும் போவது குறித்த கவலை மிக அதிகமாகிறது இவருடைய நூலின் சில பகுதிகளை வாசிக்கும்போது! இந்த லஞ்ச இலாவண்யமும், அரசாங்கம் மற்றும் மக்கள் சொத்தை கொள்ளையடிக்காத நேர்மையான அரசியல்வாதிகளும் இருந்திருந்தால் நம் நாடும் என்றோ வல்லரசாகியிருக்குமோ என்ற் ஏக்கமும் வராமல் இல்லை.

    ‘வரிவிதிப்பு முறையும் சமூக அமைப்பும்’ என்ற தலைப்பில் அ முதல் ஃ வரையிலான அனைத்துத் தகவல்களையும் வழங்கியுள்ளதும் சிறப்பு. அதே போல நீதியின் இரு பக்கங்கள் குறித்த கட்டுரையில் பல சம்பவங்களுடன் விளக்கியுள்ள பாங்கும் இனிமை. கடன் அட்டைகளின் பிடியில் சிக்கித் திணறும் அமெரிக்கர்களை விடுவிக்கப் போவது யார் என்ற இவருடைய கவலையும் நியாயமானதாகவே உள்ளது. கடன் அட்டைக்கான தவணைகளை சரியான நேரத்தில் கட்டத் தவறினால் வட்டி கூடிப்போய் எத்துனை சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதைக்கூட தன்னுடைய கவனக் குறைவினால் ஏற்பட்ட சம்பவத்தின் ஒப்பீடு மூலம் அழகாக விளக்கியுள்ளார்.

    ‘இதம் தரும் சேவை, பணம் பண்ணும் ஆசை’ என்ற தலைப்பில் இந்தியாவின், இரயில் நிலையம், அஞ்சல் நிலையம், மருத்துவமனை, அரசுத்துறை அலுவலகம் போன்ற  பொதுப்பணித் துறைகளில் பணிபுரிபவர்கள் சேவை மனப்பான்மை என்பதே துளியும் இல்லாமல் இருப்பதையும், கிம்பளம் எதிர்பார்த்திருப்பதையும் நொந்துபோய் சாடியுள்ளார். அமெரிக்காவில் அதற்கு நேர்மாறாக, தேவை அறிந்து சேவை செய்பவர்கள் மற்றும் அன்பான மருத்துவ சேவை செய்பவர்கள் பற்றியும், தனக்கு ஏற்பட்ட இதமான அனுபவங்கள் கொண்டே விளக்கியிருக்கிறார் ஆசிரியர். அதேபோல் இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட மிக மோசமான மருத்துவமனை அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார் மிக வேதனையுடன். அன்றாடம் இந்தப் பிரச்சனைகளுடனேயே உழன்று உறவாடி வாழும் நம்க்குத்தான் இது பெரிதாகப்படவில்லை போலும்!  கருத்துக் கணிப்பிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட ஆச்சரியம் அளிக்கிறது நமக்கு.

    பின்னுரையில் ஆரம்பத்தில் அமெரிக்காவின் வளமான வாழ்க்கையில் நிறைவு கண்ட தான் சில ஆண்டுகளில் குறைகளைக் கவனிக்கத் தொடங்கியதையும், 1929ல் பொருளாதார வீழ்ச்சியின் பிறகு ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் காலத்தில் ஏற்பட்ட சீர்திருத்தம் முதல் இன்றைய அரசியல் நிலை வரை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். பெண்ணியம் முதலில் அமெரிக்காவில் தோன்றியதற்கான காரணம் அவர்களின் பொருளாதார சுதந்திரம் என்றாலும், குடும்பம் என்ற சமூக நிறுவனம் குலையத் தொடங்கியதும் அதனால்தான் என்கிறார். உண்ணும் உணவு முறையிலிருந்து, திருமண பந்தம் என்ற கட்டமைப்பு வரை தவறான கலாச்சாரங்களினால், பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை குறித்தும் வெளிப்படையாகக் கூறுகிறார்.

    ஒபாமா ஒருவேளை பதவியிலிருந்து இறங்க நேர்ந்தால் குடியரசுக் கட்சிகள் நாட்டை அவர்கள் பாதையில் கொண்டு செல்லக்கூடிய நிலை உருவானால், அமெரிக்காவில் ஏழை, பணக்காரர்களுக்கிடையே உள்ள இடைவெளி கூடுவதோடு, உலக அரங்கிலும் அமெரிக்கா பெரிய அபாயங்களை விளைவிக்கும். அந்த வகையில் 2012 தேர்தல் எல்லோருக்கும் ஒரு முக்கியமான தேர்தல் என்று சொல்லி நம்மையும் பெரிதும் சிந்திக்க வைக்கிறார்.

    Share