சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

இங்கிலாந்துப் பிரதமர்களில் அதிகளவு சர்ச்சைக்குள்ளாக்கியவரும் மிகவும் பிரபலமானவரும், சரித்திரத்தில் இடம் பெற்றவருமான திருமதி மார்கரெட் தாச்சர் (Mrs.Margeret Thatcher) தனது 87 வது வயதில் லண்டனினுள்ள ரிட்ஸ் (Ritz) எனும் ஹோட்டல் அறையிலே காலமான செய்தியைத் தாங்கி இம்மடல் உங்களை வந்தடைகிறது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவராக திருமதி மார்கரேட் தாட்சர் விளங்கியதற்குக் காரணங்கள் பலவுண்டு.

இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் முதலாவது பெண் பிரதமரும், இதுவரை ஒரேயொரு பெண் பிரதமரும் ஆகிய காரணம் இவற்றில் முக்கியமான காரணங்களாகும்.

அடுத்து இங்கிலாந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் துணிச்சலான பல கொள்கைகளை எடுத்த வகையில் பிரபலமடைந்திருந்தார்.

இங்கிலாந்து நாட்டில் லிங்கன்சையர் (Lincolnshire) என்னும் இடத்தைச் சேர்ந்த ராபெர்ட்ஸ் (Roberts) எனும் ஒரு பலசரக்குக் கடை உரிமையாளரின் மகளாக 1925ம் ஆண்டு ஜனித்தார் திருமதி தாட்சர். இவரது இயர்பெயர் மார்கரேட் ஹில்டா ராபெர்ட்ஸ் ( Margret Hilda Roberts ) ஆகும்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர் இரசாயணவியல் ஆராய்ச்சியாளாரகப் பணியாற்றினார். அதன் பின்பு 1951ம் ஆண்டு வெல்வ வளம் கொழித்த வர்த்தகரான டெனிஸ் தாட்சர் (Dennis Thatcher) அவர்களை மணமுடித்தார். வழக்குரைஞர் கல்வியில் அதிபர் பட்டமான பாரீஸ்டர் பட்டம் பெறுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு 1955ம் ஆண்டு அதை நிறைவு செய்தார்.

தன் தந்தைவழி கன்சர்வேடிவ் கட்சியின் அரசியலில் குதித்த இவர் 1959ம் ஆண்டு இலண்டனிலுள்ள ஃபின்ச்லி (Finchly) எனும் இடத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இதே தொகுதியில் தொடர்ந்து 1992ம் ஆண்டு வரை பாராளுமன்ற அங்கத்தினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இவரது முதலாவது பாராளுமன்ற அமைச்சுப்பதவி 1964ம் ஆண்டு ஹரோல்டு மக்மிலன் (Harold Macmillan) எனும் பிரதம மந்திரியின் கீழ் ஓய்வூதியத் துறையின் துணை அமைச்சர் பதவியேயாகும்.

அதைத் தொடர்ந்து எட்வேர்டு ஹீத் (Edward Heath) கன்சர்வேடிவ் பிரதம மந்திரியாக விருந்த சமயம் கல்வித்துறை அமைச்சர் பதவி வகித்தார்.

1972ம் ஆண்டு எட்வேர்டு ஹீத் அவர்களின் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய போது அவரின் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போட்டியிட்டு பலரின் ஆச்சர்யத்திற்குள்ளாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தேர்தலில் வெற்றியடைந்ததும் அதன் பிரதம மந்திரியாகப் பதவியேற்று இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சரித்திரம் படைத்தார்.

அரசு நிறுவனங்களையும், தேசிய ஸ்தாபனங்களையும் தனியார் மயப்படுத்தும் கொள்கையில் மிகவும் அழுத்தமான் கொள்கைகளைக் கொண்டிருந்தார். இவரது முக்கிய அரசியல் விஞஞாபங்களாக சமூக சேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பதும், மக்களின் வரிப்பணத்தைக் குறைப்பதும் ஆன கொள்கைகள் முக்கிய இடங்களை வகித்தன.

இவரது பதவிக் காலத்தில் பண்வீக்கத்தைக் குறைத்தாலும் வேலையில்லாதோர் தொகை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1982ம் ஆண்டு அர்ஜெண்டீனா இங்கிலாந்து நாட்டின் இறைமையிலிருந்த வோக்லண்ட்ஸ் (Falklands) தீவினை ஆக்கிரமித்த போது தனது நாட்டின் படையை அனுப்பி அத்தீவினை மீட்டெடுத்தது இங்கிலாந்து மக்களிடையேயும், சர்வதேச அளவிலும் இவரது செல்வாக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வந்த 1082ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி மீண்டும் பிரதமரானார்.

அக்காலப்பகுதியில் அமெரிக்க ஜ்னாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் (Ronald Regan) அவர்களுடன் மிக நெருக்கமான அரசியல் உறவுகளைப் பேணி வந்தார். இருவருக்கும் கம்பூனிசத்தின் மீது இருந்த எதிர்ப்புத்தன்மையும், கட்டுப்பாடற்ற வியாபாரக் கொள்கையில் இருந்த ஈடுபாடும் இவர்களைப் பலமாக இணைத்தது.

அந்நாளைய சோவியத் யூனியனால் இவரது அழுங்குப்பிடியான கொள்கைகளினால் “இரும்பு மனுஷி” (Iron Lady) என்று அழைக்கப்பட்டார்.

அப்போதைய சோவியத் யூனியனின் அதிபரான் கோர்பச்சேவ் அவர்களின் கம்பூனிசத் தளர்வுக் கொள்கைக மனப்பான்மையை அறிந்து கொண்ட தாட்சர் அவர்கள் அவரை மேற்குலக ஜனநாயகப் பாணியிலான அரசியலமைப்பை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் முன்னின்றார்.

1987ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி மூன்றாவது முறையாக பிரதமராகிய முதலாவது நபர் எனும் சரித்திரம் படைத்தார். இக்காலகட்டத்தில் இவரது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள முடியாத தலைவர் எனும் பெயர் பெருமளவிற்கு பொதுமக்களால் மிகவும் எதிர்க்கப்பட்ட “போல் டக்ஸ்” (Poll Tax) எனும் கொள்கை உட்பட பல கொள்கைகளை அமுல்படுத்த முயன்றதினால் இவரது கட்சிக்குள்ளிருந்தே இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

விளைவாக ,

1990ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமைத்துவப் போட்டியில் ஜான் மேஜர் (John Major) அவர்களினால் தனது தலைமைப் பதவியை இழந்தார்.

1992ம் ஆண்டு இவர் பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகினார். இவருக்கு இங்கிலாந்து நாட்டின் அரசியல் கெளரவமான ” லேடி” எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1995ம் ஆண்டு தாட்சர் பவுண்டேஷன் எனும அமைப்பைத் தோற்றுவித்து புதிதாக கம்யூனிச கட்டமைப்பில் இருந்து விடுபட்ட கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய பல சொற்பொழிவுகளையும், விரிவுரைகளையும் செய்தார்.

பல சிறிய ஸ்ட்ரோக் எனும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டதினால் 2002ம் ஆண்டிலிருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார்.

இவரது கொள்கைகள் நாட்டினைப் பிளவு படுத்தியது எனும் வாதம் இவரின் மறைவிற்குப் பின்னரும் கூட இன்றும் பலமூலைகளில் விவாத வடிவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

நிலககரிச் சுரங்கத் தொழிலாளர்களின் யூயனின் பலத்தைச் சிதைத்து இங்கிலாந்தில் பல யூனியன்களின் பலத்தை தான் கொண்டு வந்த சட்டங்களின் மூலம் பலமிழக்கச் செய்தார்.

வீடு வாங்கும் வசதியர்ரோருக்கு மாநகர சபைகளினால் வழங்கப்பட்டு வந்த அர்சாங்க வாடகை வீடுகளை அவ்வீடுகளில் குடியிருப்போருக்கு மிகவும் குறைந்த விலையில் அநேகர் வீட்டுச் சொந்தக்காரர் ஆக்கினார்.

இது பலருக்கு வாழ்வில் தகுதியை உயர்த்த உதவியது என்ற வாதம் இவரது ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பலர் இன்றைய சமூக வீடுகளின் தட்டுப்பாட்டுக்கு இவரே காரணம் என்று மறுபகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜாரோப்பிய யூனியன் இக்கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மீது பல அநியாயமான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டின் இறைமையைப் பாதிக்கின்றன எனும் வாதத்தை மிகவும் ஆணித்தரமாக முன்னெடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.

இன்றைய ஜரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடிகள் இவரது வாதத்திற்கு வலுச் சேர்க்கிறதோ என்று எண்ணச் செய்யும் வகையில் இன்றைய நிலைமைகள் இருக்கின்றன.

சரியான வகையிலோ அன்றித் தவறான வகையிலோ பிரித்தானிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக இவரது ஆட்சிக்காலம் அமைந்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

இங்கிலாந்தின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயரெடுத்திருந்த போதும் தனது பதவிக்காலத்தில் பெண்களை அரசியலில் முன்னனிக்கு கொண்டுவருவதற்காக இவர் எவ்வகையிலும் சேவை ஆற்றவில்லை என்று பல பெண்ணியவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இவரது மாற்றங்களின் தாக்கம் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எவ்வகையில் அமைந்தது என்பதற்கான தீர்ப்பை சரித்திரம் வழங்கும்.

“அயர்ன் லேடி” என்று அழைக்கப்பட்ட இவ்வுறுதி மனத்தைக் கொண்ட தலைவியின் ஆத்ம சாந்திக்காக இப்புலம்பெயர் தமிழனின் மனம் பிரார்த்திக்கின்றது.

அடுத்த மடலில் சந்திக்கும்வரை
சக்தி சக்திதாசன்
லண்டன்
10.04.2013

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *