நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 30 (கடைசிப் பகுதி )

8

பெருவை பார்த்தசாரதி

நமக்கு நேரம் கிடைக்கும் போது, அதை நல்வழியில் செலவழிக்க விரும்புவதையே அனைவரும் விரும்புவோம் அல்லவா!….  கேளிக்கை என்று வரும்போது சினிமா, நாடகம், கடற்கரை மணலில் காற்று வாங்குதல், அலைபேசியில் அரட்டை அடித்தல், டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தல், அனேகமாக இதுபோன்ற ஏதாவொதொன்றில் நேரம் கழிந்துவிடுவது சகஜம்.

அனேகமாக எல்லா நாட்களும் இது போன்று கழிந்து விடுகின்ற நிலையில், ஒரு மாதத்தில், ஒரு நாளில், ஒரு 2 மணி நேரத்தை நல்ல விஷயங்களைக் கேட்க சத்சங்களுக்குச் சென்று வந்தால் என்ன என்று தோன்றும். அச்சமயத்தில், மற்றவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதே, இந்த சத்சங்கத்தின் நோக்கம். ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்பது போல. கண்ணால் பார்த்து களிப்படைவதும், வாயால் உண்டு மகிழ்வதும், மூக்கால் வாசனை முகர்ந்து மலர்வதும், மெய்யால் உற்றறிதலும், காதால் நன்னெறிகளைக் கேட்டலும் சரிவர நடைபெற்றால்தான் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஊக்கம் அளித்து உடலைச் சரிவர இயக்க முடியும்.

ஏனைய மற்ற உடல் உறுப்புகளில் கண்ணுக்கும், காதுக்கும் தனிப்பட்ட சிறப்பு உண்டு. நாம் காணுகின்ற ஒரு பொருளின் ‘தோற்றம்’,  செவியின் மூலமாக வரும் ‘ஒலி’  இவையிரண்டும் மூளையில் பதிவு செய்யப்படுகிறது. செவிப்புலனுக்கு கண்புலனை விட சற்று மதிப்பு அதிகம். மனிதன் பெற்ற செல்வத்துள் செவிச்செல்வம் ஒப்பற்றது. அதனால்தான் “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்” என்ற சிறப்பை செவிப்புலன் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வாயால் கற்பித்தல் என்று வரும்போது காதால் கேட்டல் என்பதும் கூட வருகிறதல்லவா!….

கற்பிப்பவரின் அறநெறிகள், அறிவுரைகள், போதனைகள், கேட்பவரின் செவி வழியே சென்று அறிவைப் புகட்டுகிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை வடிகட்டி, தீயவைகளைக் களைந்து, நல்ல எண்ணங்களுக்கு வழி வகுப்பது சிந்தனை ஒன்றுதான். கேட்டலும், சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. கேட்கும் திறன் குறைவாக இருந்தால் சிந்தனையும் குறைவாகத்தான் இருக்கும். நாம் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறோம், என்றைக்காவது யாராவது சொல்வதை நின்று நிதானித்துக் கேட்டதை காதில் வாங்கிக்கொண்டு சிந்தித்திருக்கிறோமா?.. முயற்சி செய்து பார்த்தால் கேட்டலின் திறம் சிந்தைனை மூலம் புலப்படும்.

இந்தக் தொடரின் கடைசி பகுதியின் மூலம், எனக்குத் தோன்றிய ஒரு சிறிய கருத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலசமயங்களில் நாம் பேசுவதை சற்று நிறுத்திவிட்டு, அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் பலர் சொல்வதைக் காது கொடுத்து பொறுமையாகக் கேட்டாலே வாழ்க்கை முறைக்குப் பயனுள்ள தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் மிக எளிதாகப் பெற்றுவிட முடியும். நேரம் கிடைக்கும் போது, குடியிருப்புக்கு அருகில் நடந்து கொண்டிருக்கும் ஏதாவதொரு சத்சங்கத்திற்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதனால் ஏற்படும் எண்ணற்ற பலன்களையும், அனுபவங்களையும் எளிதாக உணர்ந்து கொள்ளமுடியும்.

அனுதினமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு, சற்று நேரம் மன நிம்மதிக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் சத்சங்கங்கள் துணைபுரிகின்றன. நமது வாழ்க்கையில் இடம்பெரும் அத்தியாவசிய அங்கங்களில் சத்சங்கங்களும் விலக்க முடியாத ஒன்றாகி விட்டது என்பதே உண்மை.

நன்னெறிகளைக் கேட்பதின் மூலம் சில சங்கடங்கள் கூடத் தீரும் என்பதற்கு பாகவதம் ஒரு சிறந்த உதாரணம். “இன்னும் ஏழு நாட்களே உயிரோடிருப்பேன், அதற்குள் ஞானம் பெறுவது எப்போது” என்று கேட்ட பரீட்சித்து மகராஜாவிற்கு, சுக முனிவரின் உபதேசம் சாந்தி அளித்து, முக்திக்கும், ஞானத்திற்கும் வழிகாட்டும் கருவியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு சுகர் சொல்வதை பரீட்சித்து பொருமையாக கவனித்து காதில் வாங்கிக்கொள்வதை கவனத்தில் கொள்ளவேண்டும். பரீட்சித்து மகராஜாவின் தொடர்ந்து வரும் கேள்விக்கெல்லாம், பதிலாக வருகின்ற சுகரின் பகவத் தத்துவத்தை விளக்குகின்ற முறையில் சொல்லும் விதமாகவும் கேட்கும் விதமாகவும், அமைந்த “ஸ்ரீமத் பாகவதம்” 18000 சுலோகங்கள் கொண்டது. வியாச பகவான் இயற்றிய இந்த உபதேசம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற அரிய பொக்கிஷங்கள் அடங்கிய 18 புராணங்களில் சிறந்த ஒன்று. பாரதத்தை ஒரே தேசமாக அடையாளம் காட்டிய பெருமை மகாபாரதத்துக்கும், இராமாயணத்துக்கும், 18 புராணங்களுக்கும் உண்டு.

‘சத்’ என்றால் உண்மை,    ‘சங்கம்’ என்றால் ‘சங்கமித்தல்’ அல்லது ஒன்றாகச் சந்திப்பது என்பது பொருள். பலர் ஒன்றாக, ஒரு இடத்தில் குழுமியிருந்து, செவிக்கு இனிமையான, இசையோடு கூடிய  சொற்பொழிவாற்றலை கேட்பது அல்லது கேள்வி, பதில் போன்றவற்றால் உரையாடுவது என்பதே “சத்சங்கம்” என்றழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம், அலுவலகத்தில் அல்லது வீட்டிலிருந்தபடியே, சத்சங்களில் நடப்பதை செலவில்லாமல் தொலைக்காட்சி மூலமாகவும் பார்க்க முடிகிறது. அதிகாலை ஒவ்வொரு தொலைக்காட்சியிலும், யாராவது ஒரு மஹான் அல்லது குருஜி, மக்கள் மத்தியிலே சத்சங்கம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் சத்சங்கங்களுக்கும், பண்டைய காலத்தில் நடத்தப்பட்டவைக்கும் இருந்த வேறுபாடு என்னவென்றால், பழங்காலத்தில் எவ்வித பலனும் இன்றி நேர்மையோடும், நாணயத்தோடும் சத்சங்கம் நடத்தினார்கள், ஆனால் இன்று அப்படி இல்லை, நம் கையில் கொஞ்சம் நாணயம்(பைசா)  இருந்தால்தான் இது போன்ற மஹாசத்சங்களில் பங்கேற்க முடியும் என்பதற்கு, தலா 200 ரூபாய் கொடுத்து வாங்குகின்ற நுழைவுச் சீட்டே ஆதாரம். கலந்து கொண்ட பிறகு பணவிஷயம் மேலும் தொடரலாம் என்பது நுழைவுச் சீட்டின் பின்புறம் மிகச்சிறிய எழுத்தில் படிக்கமுடியாதபடி அச்சடிக்கப்பட்டிருக்கும்.

கோடானு கோடி மக்களுக்கு மானசீக குருவாகத் திகழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், தனது வாழ்நாள் முழுவதும் உஞ்சவிருத்தி செய்த படியே சத்சங்கம் நிகழ்த்தியதாகவும், சத்சங்கத்தின் அருமை, பெருமைகளை தனது பஜகோவிந்தத்தில் நிறைய இடத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் ஒரு நூலில் படித்திருக்கிறேன். இன்று பொருளாதார வசதியில்லாதவர்களுக்கென்றே, நகரத்தில் சில இடங்களில் நித்திய சத்சங்கள் நடத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. போதிய இடவசதி இல்லையென்றாலும், சாலையோரத்தில் ஓரமாக நின்று கொண்டு, நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளையும், தத்துவங்கள், போதனைகள் போன்றவற்றைப் பெற்றுவிடமுடியும்.

சத்சங்களில் கலந்து கொள்வதால் என்ன பலன்?…என்று கேட்கிறவர்களுக்கு!….இறுகிய மனது இளகி, இயல்பான நிலைக்குத் திரும்ப வழி செய்கிறது என்பது மஹான்களின் ஆலோசனை.  அங்கிருக்கும் நிசப்தமான சூழ்நிலை, மெல்லிய இசை, உரை நிகழ்த்துபவரின் கூச்சல் இல்லாத பேச்சு இவையெல்லாம் எந்திரத் தன்மை பெற்ற நம் மனதை சிந்திக்க வைத்து, மனதுக்கு இதமளிக்கிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. இதுபோன்ற பல காரணங்களால், மனம் அமைதி பெற்று, மறுபடி செல்லவேண்டும் என்ற ஒரு வித ஈர்ப்பு சக்தியை நம்மிடம் பரவச் செய்யும்.

ஒரு புத்திசாலிக்குக் கூட சில சமயம் முடிவு எடுக்க முடியாமல் தத்தளிக்கும் நேரம் வருவதுண்டு.  அச்சமயத்தில் அவருக்குச் சரியான பாதை தெரியாமல் விழிக்கும் போது, சாதுக்களும், ஞானிகளும் வழிகாட்டுகிறார்கள். கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரிகள் நடத்திய ஆன்மீகச் சொற்பொழிவில் வெளிவந்த, இக்கட்டுரைத் தொடருக்கு தொடர்புடைய தகவல் ஒன்றை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

ஞானிகள் என்றுமே அசத் சங்கத்தை விரும்பாதவர்கள்.  அவர்களுடைய பேச்சு என்றுமே உண்மையானதாகவும், நேர்மையானதாகவும், ஆத்ம ஞானத்தைப் பற்றியே இருக்கும். தனது இயல்பு நிலையிலிருந்து, மனிதன் உயர்வு நிலைக்குச் செல்ல, வாழ்வில் சத்சங்கம் இருக்கவேண்டும், ஆனால் அசத்சங்கம் ஒரு போதும் இருக்கக் கூடாது.

பொய் பேசும் மனிதனுக்கு மன நிம்மதி என்பது இராது.  ஒரு பொய்யைச் சொல்லி பிறகு அதை மறைக்க பல பொய்களை மேலும் சொல்லி, முடிவில் மன சஞ்சலத்தை அடைந்து அதிலிருந்து வெளிவரமுடியாமல் உழலும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். மன சஞ்சலத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் ஆளான மனிதன், ஞானிகளின் அறிவுரைப்படி நடந்தால், மனத்தெளிவு பெற்று நல்முடிவு எடுக்கும் நிலையை அடைந்து, மன ஆரோக்கியத்தை எளிதில் பெறமுடியும். ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், பிறருக்கு உதவி செய்தால், தனக்கு வேண்டிய உதவி பிறரிடமிருந்து தானாகவே வந்து சேரும் என்பதற்கு ஒரு சின்ன கதையையும் சொல்லி இருக்கிறார்.

ஒரு ஏழை, தினமும் ஒரு ஞானிக்கு உணவளிப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் தன்னுடைய மூதாதையர்களுக்குத் திதி கொடுப்பதற்கு தன்னிடம் எவ்வித பொருளும் இல்லாததால், ஞானியிடம் சென்று உதவி கேட்கிறான்.  தன்னிடம் கொடுப்பதற்க்கு எதுவும் இல்லாத ஞானி, ஒரு காய்ந்த சுரைக்காயை அவனிடம் கொடுக்கிறார். மனைவியிடம் விபரத்தைச் சொல்லி வெறுப்போடு, அச்சுரைக்காயைக் வைத்து ஏதாவது செய் என்று சொல்கிறான். வேறு ஒன்றும் கைகொடுக்காததால், இருக்கின்ற சுரைக்காயை வைத்து திதி கொடுத்து விடலாம் என்று நினைத்து, மிகவும் சிரத்தையோடு சுரைக்காயை நறுக்குகிறாள் மனைவி.  அச்சமயத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. சுரைக்காய்க்குள் இருக்கும் விதைகள், வைரக் கற்களாகப் பளிச்சிடுகின்றன. இருட்டாக இருந்த அவனது வாழ்க்கைக்கு, ஞானியின் தவ சக்தியின் மூலமாக வெளிச்சம் கிடைத்தது. தன்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லாத ஞானி, இறைவனின் மூலமாக, நேர்மையோடும், நாணயத்தோடும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உதவி செய்த ஒருவனுக்கு, உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுகிறார். இது கதையாகத் தோன்றினாலும் “பிறருக்கு நீ உதவினால், மற்றவர் உனக்கு உதவுவார்” உண்மையைப் பிரதிபலிக்கிறது.

     தனி மனிதனுக்கு வரும் துன்பங்களுக்கும், அவசர யுகத்தில் அழுத்தம் நிரம்பிய அல்லல் வாழ்க்கைக்கு ஆறுதல் பெறவும், அருமருந்தாகச் செயல்படுவது ‘சத்சங்கம்’ என்ற கூடம். சமுதாயத்தைச் சார்ந்துதான் தனிமனிதன் வாழமுடியுமே தவிர, தனக்காக மட்டும் வாழ்வது என்பது இயலாத காரியம் என்பது சத்சங்கத்தின் விளக்கம். சத்சங்கங்களுக்கு சென்று உங்களுக்கு வரக்கூடிய சங்கடங்கள் சற்று விலகும் என்றும், பெரிய அளவில் வரும் ஆபத்துகள் தவிர்க்கப்படலாம் எனவும் ஸ்வாமி சின்மயானந்தர் அறிவுருத்துகிறார். சத்சங்கங்களில் மூலம் தங்களுக்குக் கிடைத்த அறிய செய்திகளை, இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள இயலாதவர்களுடன் பகிர்ந்து கொண்டால்?….சத்சங்கங்களுக்கு மட்டுமல்லாமல், அதை மற்றவர்களுக்கு தெரியப் படுத்தியவர்களுக்கும் பெருமைதானே?….

சத்சங்கங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், அதிகாலையில் டிவி சேனல்களைத் திறந்து பாருங்கள். இனிமையான காலை வேளையில்,சத்சங்கங்களில் மனதுக்கு இனிமையான வார்த்தைகளால் சொற்பொழிவாற்றி, ஆன்மிக சம்பத்தப் பட்டசந்தேகங்களுக்கும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அவதாரம் செய்த இடங்களைத் தேர்ந்தெடுத்து, சத்சங்கம் நிகழ்த்துபவர் சிலர்.  இன்னொருவர், நாம சங்கீர்த்தனத்தோடு சத்சங்கத்தையும் சேர்த்து அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டேயிருக்கிறார். வெளிநாட்டவரையும், அண்டை மாநிலத்தவரையும்  ஒன்றாக்குகிறது இந்த சத்சங்கம். சத்சங்கத்தை உதாசீனப் படுத்தாமல், மதிப்பவர்கள் என்றுமே இறைவனுக்கு பிரியமானவர்கள் என்பது மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒரு மனதாகச் சொல்லும் அறிவுரை.      இவர்களில் சிலர் உலகில் அதிக இடங்களுக்குச் சென்று, மஹாசத்சங்கம் நிகழ்த்தியவர்களும் உண்டு. சைனாவில் சத்சங்கம் நிகழ்த்துவதற்காக, நம்நாட்டு பிரஜைக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒரு தனி இடத்தையே கொடுத்திருக்கிறது என்பது பத்திரிகைச் செய்தி. இவர்கள் அனைவரையும் விட, முக்கியமாக ஒருவர் சத்சங்கம் மூலம் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்திய பெருமை சுவாமி விவேகானந்தரைச் சாரும்.

தாம் பெற்ற அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, மறைமுகமாக மற்றவருக்கு உதவி செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடுகிறது. சத்சங்கம் அதற்குத் உறுதுணையாக நிற்கிறது. ஒரு மனிதன் முழு அளவில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் ‘சத்சங்கங்களின்’ மூலம் கேட்டறிந்து கொண்டால், அது என்றும் நம் நல்வாழ்விற்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

ஒர் அறிவிப்பு::

இத்துடன் எனது “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” கட்டுரைத் தொடர் முடிவடைகிறது. தொடர்ந்து முப்பது (30) கட்டுரைகளுக்கும் மதிப்பளித்து, பொறுமையாகப் படித்து, தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்த அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

******* முற்றும் *******

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 30 (கடைசிப் பகுதி )

  1. விரும்பிப் படித்த நல்லதொரு தொடர் விரைவில் நிறைவுற்றதை நம்ப முடியவில்லை பெருவை பார்த்தசாரதி.  
    நல்லக்  கருத்துக்களை உங்கள் கட்டுரைகள் மூலம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ….. தேமொழி 

  2. எதைக் கொடுக்கிறோமோ அதையே திரும்பப் பெறுகிறோம் என்பது சத்தியக் கருத்து. சத்சங்கம் பெற்ற ஒருவன், எல்லாமும் பெற்றவனே என்கிறது உபநிஷத் வாக்கியம்.நல்ல பல கருத்துக்களைத் தொடர்ந்து கொடுத்து வந்த அருமையானதொரு கட்டுரைத் தொடர் நிறைவு பெற்றது குறித்து கொஞ்சம் வருத்தமே. எனினும் அற்புதக் கருத்துக்களால் தொடுக்கப்பட்ட அழகானதொரு பூமாலை தங்கள் தொடர். அதன் மணம் இன்னும் வெகுகாலத்திற்கு மனதில் நிலைபெற்றிருக்கும். தாங்கள் இது போன்ற நல்லபல படைப்புகளை மேலும் மேலும் தர வேண்டுகிறேன்.

  3. தொடரை கவனமாக படித்து வந்தேன். பெருவைக்கு வாழ்த்துக்கள். இந்த ‘சத்சங்கம்’ என்ற சொல்லை இன்று ஒரு ஆங்கில இதழில் படித்தேன். கிட்டத்தட்ட இதே கருத்து தான். 
    ‘…முக்கியமாக ஒருவர் சத்சங்கம் மூலம் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்திய பெருமை சுவாமி விவேகானந்தரைச் சாரும்..’
    சரியாக சொன்னீர்கள்.
    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk

  4. அரிய, பெரிய விஷயங்களைச் ’சத்சங்கங்களுக்கு’ச் செல்லாமலேயே ’உங்கள் தயவால்’ வாசகர்களாகிய நாங்கள் பெற்றோம் எனின் அது மிகையில்லை.

    தாங்கள் அடுத்து எதைப் பற்றி எழுதப் போகிறீர்கள்..என்று ஒவ்வொரு வாரமும் நாங்கள் இந்தத் தொடரை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். நற்கருத்துக்களை அளிப்பதோடு நில்லாமல் அதற்கு வலு சேர்க்கும் வகையில் நீங்கள் தரும் உண்மைச் சம்பவங்கள் தொடரின் சுவாரஸ்யத்தைக் கூட்டிப் படிப்போர்க்கு உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளித்துவந்தன.

    இவ்வாரம் தாங்கள் குறிப்பிட்டுள்ள உயர்ந்த கருத்தான ”பிறருக்கு நீ உதவினால், மற்றவர் உனக்கு உதவுவார்” என்பது நடைமுறை வாழ்வில் நாம் கண்டுவரும் உண்மை. இதைத் தான் வள்ளுவரும் சற்று மாற்றி,
    “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்.” என்று ’பிறர்க்குத் தீங்கிழைக்காதே’ என்பதனை வலியுறுத்தும் முகமாகக் குறிப்பிடுகின்றார்.
    கேள்விச் செல்வத்தின் சிறப்பையும் அழகாய்க் குறிப்பிட்டுள்ளீர்கள். இதையும் திருக்குறள்,
    ”கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
    ஒற்கத்தின் ஊற்றாந் துணை.” எனச் சிறப்பித்துப் பேசுகின்றது.

    தொடர்ந்து, நல்வாழ்க்கை வாழ்வதற்கான வழிகாட்டியாக விளங்கிய தங்கள் கட்டுரைத் தொடர் நிறைவுபெறுவது வருத்தமளிப்பதாகவே உள்ளது. ஆயினும், தொடர்ந்து தங்களுடைய ஆக்கங்கள் வெளிவரும் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளதால் மீண்டும் பயனுள்ள, சுவையான தகவல்களைத் தங்கள் வாயிலாக அறியும் வாய்ப்பு அமையும் என்றெண்ணி மகிழ்கிறோம்.

    முப்பது வாரங்கள் ஒரு தொடரை நகர்த்திச் செல்வது என்பது சாதாரண விஷயமன்று. அதற்குத் தங்களைப் போன்ற அசாத்தியத் திறமைசாலியால் மட்டுமே முடியும். இஃது புகழுரையன்று; மெய்யுரையே. தங்கள் உழைப்புக்கும், எழுத்தார்வத்திற்கும் தலைவணங்குகின்றேன். மேன்மேலும் தொய்வின்றித் தொடரட்டும் தங்கள் அருமையான எழுத்துப்பணி. திரு. பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களைச் சமர்ப்பிக்கின்றேன்!!

    …மேகலா

  5. தங்கள் கருத்துக்களை நயம்பட எடுத்துரைத்த, பெருமதிப்பிற்குறிய திரு இன்னம்பூரான் அய்யா, எழுத்தாளர்கள் திருமதி தேமொழி, திருமதி பார்வதி இராமசந்திரன், திருமதி மேகலா இராமமூர்த்தி அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு தொடர் கட்டுரை, தொடர்ந்து முப்பது கட்டுரைகளை ஒரே தலைப்பில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகக் கொண்டு செல்லவேண்டும்.  தொடர் கட்டுரை முடிவடைந்தாலும், இதர படைப்புகள் அவ்வப்போது எழும்.

  6. அன்பின் திரு பெருவை பார்த்தசாரதி,

    வாழ்த்துக்கள். நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களில் நாம் பெரும் பாடங்கள் அதிகம். அதனை உணர்ந்து நாமே பயனடைவதுடன் நம் சக மனிதர்களும் பயனடையும் விதமாக நல்ல முறையில் அதனை வெளிப்படுத்துவது சிறந்த மனிதாபிமானம். அந்த வகையில் நல்ல கருத்துக்கள் கொண்ட சிந்தனை முத்துக்களை ஒவ்வொன்றாகக் கோர்த்து அழகிய மாலையாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்களுடைய நல்ல ஆக்கங்களை படைத்திடவும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.