Blog

  • காந்தியின் மடல்

    ஷைலஜா

    மகாத்மாகாந்திக்கு ஒருசகோதரி இருந்தார். அவர் பெயர் கோகிபஹன். அவர் ஒரு விதவை. அவருடைய வாழ்க்கைச் செலவுக்காக மாதம் பத்துரூபாய் அனுப்பி வைக்கும்படி நண்பர் பிராண ஜீவன் மேத்தாவைக் கேட்டுக் கொண்டர் மகாத்மா. அவரும் அனுப்பினார்.

    சில மாதங்களில் கோகிபஹனின் மகளும் விதவையாகி தாயிடம்வந்து சேர்ந்தார். இருவருக்கும் பத்துரூபாய் போதவில்லை. “அணடை அயலில் மாவரைத்துக்கொடுத்துச் செலவை சரிக்கட்ட வேண்டி இருக்கிறது. கொஞ்சம் கூடுதலாகப் பணம் அனுப்பினால் நல்லது” என்று கோகிபஹன் அண்ணலுக்குக் கடிதம் வரைந்தார்.

    “மாவு அரைப்பது நல்லதுதான்.அதனால் உடல்நலம் பெருகும், நாங்களும் ஆசிரமத்தில் மாவரைக்கிறோம். நீங்கள் விரும்பினால் இங்குவந்து தொண்டு செய்யலாம். பணம் அனுப்பும் நிலையில் நான் இல்லை. நண்பர்களிடம் அனுப்பச் சொல்ல இயலாது” என்று பதில் வந்தது  காந்தியிடமிருந்து.

    Share
  • தொல்லை காட்சி பெட்டி

     மோகன் குமார்

     

    வல்லமையில் புது பகுதியாக இன்று முதல் துவங்குகிறது தொல்லை காட்சி பெட்டி. 

    டிவியில் பார்க்க கூடிய நிகழ்ச்சிகள், ரசித்த சில விஷயங்கள் என எழுத ஆசை. இதனை எழுத அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை என்பதும் (பார்க்கிற எல்லா நிகழ்சிகளுக்கும் தான் நமக்கு ஒரு ஒபினியன் இருக்குமே ! ) , இத்தகைய  விமர்சனம் இணையத்தில் இப்போது யாரும் எழுத வில்லை என்பதும் தொடங்க காரணங்கள். 

    சில வாரங்கள் முடியாமல் போகலாம் பொறுத்தருள்க ! 

    நல்ல நிகழ்ச்சி அறிமுகம் : களம் இறங்கியவர்கள்

    புதிய தலைமுறை டிவியில் ஞாயிறு காலை 10.30 முதல் 11 வரை “களம் இறங்கியவர்கள்” என்ற நல்ல நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கபிலன் வைரமுத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வெவ்வேறு தொழில்களை செய்யும் வித்யாசமான மனிதர்களை அறிமுகம் செய்கிறது. பஸ் ஓட்டும் பெண்மணி, கல்விக்கு உதவும் குழு என வித்யாசமாய் இருக்கும். இயலும்போது பாருங்கள் இந்த நல்ல நிகழ்ச்சியை ! 

    லக்கா கிக்கா

    திங்கள் முதல் புதன் வரை ஜி தமிழ் டிவி யில் இரவு 9.30 முதல் 10.30 வரை “லக்கா கிக்கா” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. “செம்பருத்தி” புகழ் நடிகை ரோஜா இதனை தொகுத்து வழங்குகிறார். நான்கு ரவுண்டுகள் உள்ள நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் நால்வர் கலந்து கொள்கிறார்கள். கையில் ரூபாய் வைத்து கொண்டு இந்தாங்க ஐநூறு ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க , ஆயிரம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க என ரூபாய் நோட்டுகளை கலந்து கொள்பவர்களுக்கு ரோஜா தருகிறார். ரொம்ப சுமார் நிகழ்ச்சி இது ! ரோஜா முகமும் சிரிப்பும் அப்படியே இருப்பது மட்டுமே ஆறுதல் !

    கிரிக்கெட்

    சில வாரங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஐ. சி. சி T -20 ல் சூப்பர் 8 ஆரம்பமாகி விட்டது. தினம் இரு அட்டகாசமான மேட்சுகள்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து மேட்சில் கெயில் வழக்கம் போல் விளாசினார். கூடவே சார்லஸ் என்கிற இன்னொரு இளைஞரும் வெளுத்து வாங்கினார். இங்கிலாந்து நிச்சயம் மோசமாய் தோற்கும் என நினைத்தால் கடைசி வரை போராடி இறுதி பந்துகளில் தோற்றனர். மார்கன் ஆட்டம் அட்டகாசம் !

    இந்தியாவின் ஆட்டம் தான் ரசிகர்களை செம டென்ஷன் ஆக்கி கொண்டிருக்கிறது ஹூம் 🙁 

    சீரியல் பக்கம்: சிந்து பைரவி 

    வடக்கில் வரும் சில சீரியல்கள் தமிழில் டப் ஆகி ஒளிபரப்பாகிறது. அந்த வரிசையில் ராஜ் டிவியில் வரும் சீரியல் தான் சிந்து பைரவி. சிறு வயது முதல் தோழிகளாக இருக்கும் இருவர் வளர்ந்த பின் ஒரே கணவனை மணக்கிறார்கள். இருவரில் சிந்து நல்லவள். பைரவி வில்லி. பைரவி மட்டும் கர்ப்பமாகிறாள். இருவரும் மணந்த கணவர் குழந்தை பாக்கியம் தர முடியாது என்று தெரிய வருகிறது. இப்படி போகிறது கதை. 

    நான் என்னவோ இந்த சீரியல் பார்ப்பதாக நினைத்து விடாதீர்கள். வீட்டில் எப்பவும் நடக்கும் டிஸ்கஷன் வைத்து தெரிஞ்சு கிட்ட கதை தான் இது. பெரும்பாலும் இந்த சீரியல் முடிந்த பின் தான் வீட்டுக்கே வருவேன். பைரவி ஓரளவு அழகு. எப்பவாவது பார்த்தால் ரசிப்பதோடு சரி 🙂

    பலரும் இந்த சீரியல் பார்ப்பதாகவும், பெண்கள் இதன் ஹீரோவை சைட் அடிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் 🙂

    ஜெயா டிவியில் கே. பாலசந்தர் 

    திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் சில வாரங்களாக தினம் இரவு பத்து மணிக்கு பேசி வருகிறார். இந்த வாரம் சில அற்புதமான படங்கள் பற்றி பேசினார். சிந்து பைரவி – முதல் முறையாக இளையராஜாவுடன் கே. பி இணைந்த படம். அதுவரை இசை அமைத்த எம். எஸ். வி யிடம் சொல்லி விட்டு அவர் மனம் நோகாமல் ராஜா பக்கம் வந்ததை சொன்னார். அப்படத்துக்கு ராஜா மற்றும் சுகாசினிக்கு கிடைத்த விருது, ஒவ்வொரு பாடலும் எப்படி வித்யாசமாய் அமைந்தது என சுவாரஸ்யமாய் இருந்தது 

    இன்னொரு நாள் கே. பி யின் படத்தில் என்றும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் மன்மத லீலை பற்றி பேசினார். ரஜினிக்கு எப்படி தில்லு முல்லுவோ அதே போல் கமலுக்கு இந்த படம் ! நான் ஸ்டாப் காமெடி ! இது வரை பார்க்கா விடில் டீ. வி. டி யாவது வாங்கி ஒரு முறை பாருங்கள் ( அடல்ட்ஸ் ஒன்லி படம் – ஞாபகம் இருக்கட்டும்) 

    சூப்பர் சிங்கர் அப்டேட் 

    செமி பைனல் இந்த வாரம் நடந்தது. கிளிப்பிங்கில் பிரகதி அழுகிற மாதிரி காண்பித்து அவர் தான் அவுட் ஆக போகிறார் என்கிற மாதிரி பில்ட் அப் தந்தனர். ஆனால் அவுட் ஆனது யாழினி. சுகன்யா, பிரகதி மற்றும் கெளதம் பைனல் சென்று விட்டனர்.

    இது முடிந்த மறு நாளே பத்து குழந்தைகளை வைத்து கொண்டு ஒய்ல்ட் கார்ட் நடத்துகிறார்கள். இனி மக்களை ஓட்டு போட சொல்லி ஏர்டெல் நல்லா காசு பார்க்கும் !

    Share
  • பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது

     

                                                                                           சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     


    கால வெளிக் கருங்கடலில்
    கோலமிடும் பாய்மரத் தீவுகளாம்
    காலக்ஸி ஒளிமந்தை !
    சூடான
    வாயு முகில் குளிர்ந்து போய்
    மாயமாய்
    ஈர்ப்பு விசை சுருக்கி
    உஷ்ணம் பல மில்லியன் ஆகி
    உருண்டு திரண்டு
    ஒளிமந்தை விண்மீன்களாய்
    விழி சிமிட்டும் !
    அகிலவெளி அரங்கில் வெப்ப
    முகில் வாயுவில் மிதக்கும்
    காலக்ஸிகள் இரண்டு மோதினால்
    கைச்சண்டை புரியாமல்
    கைகுலுக்கிப்
    பின்னிக் கொள்ளும் !
    வாயு மூட்டம் கட்டித் தழுவி
    சேய் விண்மீன் பிறக்கும் !
    இட்ட எச்சத்தில்
    புதிய கோள்கள் உண்டாகும் !
    ஈர்ப்புச் சக்தியால்
    விண்மீன்களைச் சுற்ற வைக்கும்
    காலக்ஸி ! நமது
    பால்வீதி ஒளிமந்தை
    வாயு மூட்டத்தில் மிதக்கும்
    பாலாடை !
    காலக்ஸி ஒளி மந்தைகள்
    கப்பலாய் மிதந்து
    கடலில் உந்த வைப்பது
    கருஞ்சக்தி !

    ++++++++++++++

     

    பால்வீதி காலக்ஸியைச் சுற்றிலும் வாயு முகில் இருப்பதையும், அது எத்தகைய சூடாய் இருக்கும் என்றும் நாங்கள் அறிவோம்.   இப்போது எழும் பெரிய வினா : வாயுக் கோள முகில் பரிமாணத்தில் எத்தனை பெரியது,  பளுவில் எத்தனை நிறை உள்ளது  என்பதே ஆகும்.”

    அஞ்சலி குப்தா (Author of The Astrophysical Journal )


    “இளம்பிராய வளர்ச்சியில் காலக்ஸிகள் வாயு முகிலை விண்மீனாய் மாற்றும் இயக்கம், குன்றிய திறனாக்கத்தில் (Less Efficient Process) நிகழ்கிறது.  ஆரம்ப காலத்தில் காலக்ஸிகளுக்கு அகிலத் தூசி (Cosmic Dust) உருவாக்கப் போதிய காலப் பொழுது இருப்பதில்லை.  அவ்விதம் தேவையான வாயு முகிலின்மையால் விண்மீன் வளர்ப்பரங்குகள் (Stellar Nurseries) உண்டாவதில் தாமதமாகிறது.  வாயு முகில் பரவலில் தூசி படிவுக்கும் விண்மீன் வடிவு ஆக்கத்துக்கும் ஓர் எளிய இணைப்பாடு உள்ளது.  நாங்கள் அந்த இணைப்பாட்டை முதல் முறையாக காலக்ஸி உருவாக்கக் கணனிப் போலி இயக்கத்தில் (Computer Simulations for Galaxy Formation) உண்டாக்க முயல்கிறோம்.”

    ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago)

    “ஒளிமந்தையில் நிரம்பியுள்ள ஊடகமான வாயு முகிலும், அகிலத் தூசியும் (Gas & Dust, Interstellar Medium – ISM) முகிலிலுள்ள கொந்தளிப்பால் பூத மூலக்கூறாகச் சேர்ந்து திணிவு நிலை மிகையாகிறது. (Over-density in Giant Molecular Cloud). குழந்தை விண்மீன்கள் தம்மிடம் உள்ள கதிர்வீச்சால் தம்மைச் சுற்றி இருக்கும் வாயு முகிலைப் புயல் கணைகளால் சூடேற்றுகின்றன.  மேலும் சுற்றியுள்ள வாயு முகிலை அயனிகளாய் ஆக்குகின்றன (Ionize the Gas Clouds) !

    மார்க் குரும்கோல்ஸ் (கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்)

    “12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம்.  அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம்.  அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்புகளுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன.”

    டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist)

    “நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது !  (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது !”

    ஆப்ரஹாம் லோப் வானியல் பேராசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகம் (Abraham Loeb)


    விண்மீன்களின் மூர்க்கத்தனமான வாயுத் தூசி இயக்க விண்வெளியில் பெரும்பானமையான காலாக்ஸிகள் மோதிக் கொந்தளித்து, ஒற்றை வடிவத்தில் முழுவதும் சேர்ந்து கொள்கின்றன !  பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக விண்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே !

    டேனியல் கிறிஸ்ட்லைன் (Daniel Christlein, Astronomer Yale University)

    “காலக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies).

    டாக்டர் ஆன்ரூ பங்கர் (Dr. Andrew Bunker Anglo-Australian Observatory)

    “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி.  அந்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன.”

    ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory)

    “பூர்வீக விண்மீன்களைப் பற்றி அறிவது பேபி பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்த்துவிட வானியல் விஞ்ஞானிகளுக்குப் பேருதவி செய்யும்.  முதன்முதலில் உதித்த விண்மீன்களின் பிறப்பை விட அவற்றின் இறப்பே விஞ்ஞானிகளுக்கு முக்கிய நிகழ்ச்சியாகும்.  பிரபஞ்சத்தின் பூர்வ காலப் பிண்டத்தில் உருவான முதற்பிறவி விண்மீன்கள் பெரும்பான்மையாக ஹைடிரஜன், ஹீலிய வாயுக்களாலும், சிறிதளவு லிதிய வாயுவாலும் உண்டானவை.  முதலில் தோன்றியவை பேரளவுப் பளுவில் இருந்ததால், அவை விரைவாக வாழ்ந்து முடிந்து, அற்ப ஆயுட் காலத்தில் பிறந்த 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் இறந்து போயின !”

    ரே ஜெயவர்தனா வானியல் பேராசிரியர், டொராண்டோ பல்கலைக் கழகம், கனடா


    ஹப்பிள் & கெக் தொலைநோக்கிகள் மூலமாக இப்போது ஒளிச் செந்நிறக் கடப்பு : 7 இல் (Redshift Light -7) குறிப்பிடும் (பிரபஞ்சம் தோன்றி ஒரு மில்லியன் வயதாகும்) பூர்வ காலாக்ஸிகளைப் பற்றி அறிய முடிகிறது ! ஈர்ப்பாற்றல் குவியாடி (Gravitational Lensing) நோக்கில் காணும் மங்கலான பூர்வ ஒளி மந்தைகள் பால்வீதியை (Milkyway Galaxy) விட 100 மடங்கு சிறியவை !

    ரிச்சர்டு எல்லிஸ் வானியல் பேராசிரியர் (California Institute of Technology) [March 2008]

    “பூமிக்கு அப்பால் 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் இந்த (பூர்வாங்க) 18 நீல வண்ணச் சிறிய வடிவமைப்புகள் (Dim Blue Small Objects) தற்கால காலாக்ஸிகள் சிலவற்றின் வித்துக்களாய் இருக்கலாம் ! ஒவ்வோர் உண்டையிலும் (Clump) பல பில்லியன் விண்மீன்கள் உள்ளன.  இம்மாதிரியான பல்வேறு உண்டைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சேர்ந்து வெகு காலமாக ஒளிமயப் பூத காலாக்ஸிகளாக உருவாகி வந்தவை என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.”

    ராஜர் வின்ட்ஹார்ஸ்ட் & ஸாமுவெல் பாஸ்காரெல் (அரிஸோனா மாநிலப் பல்கலைக் கழகம்)

    “விஞ்ஞானிகளின் முக்கிய வினா: ‘பூர்வாங்க விண்மீன்களின் சந்ததிகள் இப்போது எங்கே உள்ளன ? என்பதுவே.  அதற்குப் பதில், கருமைப் பிண்டம் சூடாக இருந்தால் பூர்வாங்க விண்மீன்கள் சில நமது பால்வீதி காலாக்ஸியில் திரிந்து கொண்டிருக்கும் !. . . . எங்களுடைய ஆராய்ச்சி விளைவுகள் பூர்வாங்க விண்மீன்களை அறிவதன் மூலம் கருமைப் பிண்டத்தின் இயற்கைப் பண்பாடைக் கற்றுக் கொள்ள முடியும்.  நமது பால்வீதி போல் மையத்தில் இருக்கும் பூதக் கருந்துளைகளைப் பற்றி அறிய அறிவிப்புச் சின்னத்தைக் (Tell-Tale Sign) காண முடியும்.”

    டாக்டர் டாம் தியூன்ஸ் (Dr. Tom Theuns, Researcher, Durham University U.K.)

    “வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது.  மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.”

    கிரேக்க மேதை பிளாடோ (கி.மு. 428-348)

    பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு மூட்டத்தில் மூழ்கி உள்ளது.

    நாசா விண்வெளித் தேடல் ஆணையகம் 1999 ஆண்டில் அனுப்பிய சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கி நமது பால்வீதி காலக்ஸி பல்லாயிரம் ஒளியாண்டு தூரம் நீண்ட, மாபெரும் வெப்ப வாயு முகிலில் மூழ்கிக் கிடப்பதாக முதன்முதலாய்ச் சான்று அனுப்பியுள்ளது.    அந்த வாயு முகிலின் நிறை பால்வீதி ஒளிமந்தையில் கூடி இருக்கும் கோடான கோடி விண்மீன்களின் மொத்த நிறையை ஒத்தது என்றும் அறியப் படுகின்றது.    வாயு முகில் மூட்டத்தின் அந்தப் பேரளவு பரிமாணமும்,  நிறையும் மீளுறுதி செய்யப் பட்டால்  துகள் பௌதிகத்தில் [Particle Physics] அது ஒரு புரட்சி உண்டாக்கும்.   காலக்ஸிகளில் இழந்து போன “பேரியான்”  [Baryon] [A baryon is a composite subatomic particle made up of three quarks] துகள் பிரச்சனைக்கு ஒரு தீர்வளிக்கும்.   படத்தில் காட்டப்பட்டுள்ள வாயு முகிலின் பரிமாணம் 300,000 ஒளியாண்டு தூரத்தை மிஞ்சியது என்று அறியப் படுகிறது.

    சமீபத்தில் ஐந்து வானியல் விஞ்ஞானிகள் நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கி அனுப்பிய தகவல் இலக்கங்களை [Data] ஈசாவின் நியூட்டன் விண்ணுளவி, ஜப்பானின் சுஸாக்கு துணைக்கோள் ஆகிய வற்றின் தகவல் இலக்கங்களோடு சேர்த்து, வாயு முகிலின் உஷ்ணத்துக்கும், நிறைக்கும் ஓர் வரையறை இட்டனர்.   அவர்கள் செய்த முடிவு :  வாயுக் கோளத்தின் நிறை 10 பில்லியன் சூரியன் களுக்கு மிஞ்சி,  உச்ச அளவில் 60 பில்லியன் சூரியன்களை  எட்டலாம் என்றும் கூறுகிறார்கள்.  சந்திரா விண்ணோக்கி எட்டு ஒளிமிக்க எக்ஸ்-ரே சுரப்பிகள் [Bright X-Ray Sources]  நமது பால்வீதி காலக்ஸிக்கு அப்பால் பல கோடி ஒளியாண்டு தூரத்தைத் தாண்டி இருப்பதைக் காட்டியது.   ஈசாவின் நியூட்டன் விண்ணுளவி அனுப்பிய தகவல் இலக்கத்தின்படி, சுரப்பிகளின் எக்ஸ்-ரே கதிர்களை, காலக்ஸி அருகில் உள்ள ஆக்ஸிஜன் அயான்கள் உறிஞ்சிக் கொண்டன என்று தெரிகிறது.   விஞ்ஞானிகள் இந்த உறிஞ்சல் இயக்கத்தை வைத்து வாயு முகில் உஷ்ண அளவைத் [ஒன்று அல்லது இரண்டரை மில்லியன் டிகிரி கெல்வின்] தீர்மானிக்க ஏதுவாய் இருந்ததாக அறியப் படுகிறது.

    பூதக் கணனிப் போலி இயக்கத்தில் காலக்ஸியின் தோற்ற ஆய்வுகள்

    நாசாவின் ஸ்பிட்ஸர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண்வெளியில் வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு மகத்தான வெடிப்பில் உருவாகும் விண்மீனைக் கண்டுள்ளார்.  அதிலிருந்து வெளிவரும் உட்புறச் சிவப்பொளி (Infrared Light) இரண்டு சுருள் காலக்ஸிகள் மோதும் போது உண்டாகும் பேரொளி போல் ஒளிர்ந்தது !  கண்ணுக்கு ஏறக்குறையத் தெரியாதபடி விண்மீன்கள் அகிலத் தூசி படர்ந்து மங்கலாக மற்ற ஒளியலை நீளங்களில் தென்பட்டன !  இணையும் தாய் காலக்ஸிகளின் மையத்துக்கு அப்பால் நிகழும் இது போன்ற ஒளிமயமான அதிசய விண்மீன் வெடிப்புக் (Starburst) காட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை.  அந்தப் பேரொளி மயம் பிரபஞ்சத்தில் இதுவரைக் கண்ட ஒளித்திரட்சி அளவை விடப் பத்து மடங்கு மிகையானது ! “இந்தக் கண்டுபிடிப்பு இணையும் காலக்ஸிகள் தம் மையத்துக்கு அப்பால் பேரளவு விண்மீன் வெடிப்புக் காட்சியைக் காட்டும் என்பதை நிரூபிக்கிறது,” என்று காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தைச் (C.I.T) சேர்ந்த ஜப்பானிய வானியல் விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார்.

    பிரபஞ்சத்தின் பூதநிறையுள்ள காலக்ஸிகள் தற்போது விஞ்ஞானக் கணனி மாடல்கள் முன்னறித்தது போலின்றிப் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உருவாக்கப் பட்டன என்று இப்போது வானியல் இதழ் (Astrophysical Journal) ஒன்று அறிவிக்கிறது. “12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம்.  அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம்.  அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்புகளுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன,” என்று வானியல் கட்டுரை ஆசிரியர் டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) கூறுகிறார்.  புதிதாகக் கண்ட காலக்ஸிகள் நமது பால்வீதி ஒளிமந்தையை விட 5 அல்லது 10 மடங்கு பெருநிறை கொண்டவை.  பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது 1.5 அல்லது 2 பில்லியன் ஆண்டுகளாக இருந்த போது அவை தோன்றியவ. அதாவது அவற்றின் “செந்நிறக் கடப்பு” மூன்றுக்கும் நான்குக்கும் (Redshift 3 = < 4) இடைப்பட்டது.  ஒளியலையின் செந்நிறக் கடப்பு இயற்காட்சி (Phenomenon) நீட்சியாகி நீண்ட ஒளிப்பட்டை அலை வரிசையில் (Red End of the Spectrum) நகர்வதைக் குறிப்பிடுவது.


    பூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலக்ஸியும் விண்மீன்கள் நிரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கரும்பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப்பட்டது.  அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன.  பால்வீதி காலக்ஸி கீழிருந்து மேலே எழுந்தது !  ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது.  காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம்.  நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள்.  மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலக்ஸியை மாற்றி அமைத்தன ! ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கரும்பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலக்ஸி படைக்கப் பட்டது.



    அகிலத் தூசியும் வாயு முகிலும் விண்மீன் வடிவாக்கச் செங்கல்கள் !

    விண்வெளியை ஆராயும் போது ‘அகிலத் தூசி’ (Cosmic Dust) அண்டகோடிகளை மங்கலாக்கி மறைக்கிறது என்று விஞ்ஞானிகள் மன உலைச்சல் அடைகிறார். ஆனால் அகிலத் தூசி இல்லையேல் விண்மீன்கள் இல்லாத பிரபஞ்சத்தையே நாம் காண முடியும்.  விண்மீன்கள் உருவாவதற்குத் தேவையான முக்கிய உட்கூறு (Ingredient) அகிலத் தூசிதான் !  அத்துடன் பூர்வமாய்ப் பரவிய வாயு முகில் (Primordial Diffuse Gas Clouds) ஒன்று கூடிக் காலக்ஸிகளாய்ச் சேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி.  அந்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன என்று ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory) கூறுகிறார்.  2010 ஜூன் 3 ஆம் தேதி ‘இயற்கை’ (Nature) விஞ்ஞான இதழில் இக்கருத்தை வானியல் விஞ்ஞானி கென்னிக்கட் (Kennicutt, Director of University of Cambridge’s Institute of Astronomy) என்பவரும் குறிப்பிட்டிருக்கிறார்.


    விண்மீன் உருவாக்கப்படும் நியதி (Star Formation Law)

    விஞ்ஞானி கென்னிகட் வெளியிட்ட விண்மீன் உருவாக்க விதி இதுதான் : காலக்ஸிகளின் ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ள வாயு முகில் பரிமாணத்துக்கு ஏற்ப அதே பரப்பளவில் உருவாகும் விண்மீன்கள் எண்ணிக்கையைப் பொருத்தது (Kennicutt Star-Formation relates the amount of gas clouds in galaxies in a given area to the rate at which it turns into stars over the sama area).  இந்தப் புதிய விதி பிரபஞ்சம் தோன்றிய பிறகு முதலிரண்டு பில்லியன் ஆண்டுகளில் உருவான காலக்ஸிகளுக்கு ஒவ்வாத முறையில் உள்ளது என்று இரண்டு விஞ்ஞானிகள் (Arthur Wolfe, University of California & Hsiao-Wen Chen, University of Chicago) கூறுகிறார். காரணம் பிள்ளைப் பிரபஞ்சத்தில் வாயு முகில் மாற்றமாகி ஆரம்ப கால விண்மீன்கள் உருவாக்கத் திறமை குன்றிப் போய் இருந்தது என்று கிரவ்ஸ்டாவ் அறிவிக்கிறார்.

    விண்மீன்கள் வளர்ச்சிப்பாடு (Stellar Evolution) அகிலத் தூசி பெருக்கத்துக்கு வழி வகுத்து ஹீலியத்தை விடக் கன மூலகங்களான கார்பன், ஆக்ஸிஜன், இரும்பு போன்றவை உற்பத்தியாகின்றன.  விந்தையாக அகிலத் தூசியில் முக்கியமாக அந்த மூன்று மூலகங்களே பெருமளவில் காணப் படுகின்றன.  அகிலவெளி விண்மீன் ஆக்கும் வாயு முகில் பேரளவில் திரண்டு திணிவு மிகையாகும் போது விண்மீன் உருவாகும் இயக்கம் ஆரம்பமாகிறது.  குளிர்ந்த வாயு முகில் உள்ள ஒரு சில அரங்குகளில் ஹைடிரஜன் ஹீலியம் ஆகிய அணுக்கள் இணைய ஆரம்பமாகி மூலக்கூறுகள் உண்டாகின்றன.  இரண்டு ஹைடிரஜன் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹைடிரஜன் மூலக்கூறு உண்டாகிறது. அப்படி உருவான ஹைடிரஜன் மூலக்கூறுகள் பேரளவு நிறையுள்ள இளம் விண்மீன்கள் வெளியேற்றும் தீவிரப் புறவூதா ஒளியில் எளிதில் முறிந்து அழியக் கூடியவை !


    பால்வீதியில் சூப்பர்நோவா தூண்டும் காலக்ஸி வாயு ஊற்றுகள்

    ஆப்பம் போன்ற காலக்ஸி தட்டு வெப்பம் அகிலவெளி விண்மீன் ஊடகத்தைச் (Interstellar Medium) சூடாக்கி எழுப்பும் சூப்பர்நோவா வெடிப்புகள் (Supernova Explosions) நமது பால்வீதியில் காணப்படுவதைச் சமீபத்தில் ஈசாவின் நியூட்டான் விண்ணுளவி (ESA’s XMM Newton Space Probe) நோக்கி இந்த சூப்பர்நோவா வெடிப்பு வெப்ப வாயு ஊற்றுக்களை நமது பால்வீதியில் படமெடுத்திருக்கிறது.  தட்டுக்கு மேலும் கீழும் செங்குத்தாய் வெளியேறும் வாயு ஊற்றுகள் ஒருசில கிலோபார்செக் (kiloparsec kpc) (A unit used for measuring Large Astronomical Distances. 1 kpc = 1,000 parsecs = 3,259 light-years) உயரத்தில் எழுகின்றன.  அதனால் கதிர்வீச்சு உண்டாகிக் குளிர் முகிலாகி மீண்டும் தட்டிலே விழுகின்றன.  அதாவது பால்வீதி சூப்பர்நோவா வெடிப்புகளால் காலக்ஸி தட்டில் வாயு முகில் அகிலவெளி விண்மீன்களின் படைப்புக்கு உதவுகிறது என்பது தெரிகிறது.  அந்த வாயு முகில் தணிந்த திணிவு நிலையிலும் (Low Density) ஒருசில மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் எக்ஸ்ரே கதிர்களை வெளியாக்கிகிறது.


    பூர்வீகக் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் உருவாதல்

    பேரளவு ஹைடிரன் வாயு ஈர்ப்புச் சக்தியால் உருண்டு திரண்டு அடர்த்தி மிகுந்து விண்மீன்கள் ஒன்று வளரும் அல்லது கலைந்து போய்விடும் !  அவை பல்வேறு வடிவுகளிலும், பரிமாணத்திலும் உருவாகின்றன.  முதலில் சிதைந்த விண்மீன் சிறியதாய்த் திணிவு மிகுந்து வடிவு பெறும் !  பேரளவில் திரண்டவை மெதுவாக உருவாகிப் பிறகு சிதைந்து சிதறுகின்றன !  பிரபஞ்ச விரிவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் உண்டைகளாகத் திரண்டு விடுவித்துக் கொண்டவை பெரும்பான்மையாக கரும்பிண்டமும், நடுத்தன்மை ஹைடிரஜனும், (Dark Matter & Neutral Hydrogen) ஓரளவு ஹீலிய வாயுவாகவும் கருதப்படுகிறது.  இந்த உண்டை (Object) தனது ஈர்ப்புச் சக்தியால் சிதைய ஆரம்பிக்குக் போது,  அது “பூர்வீகக் காலாக்ஸி” (Protogalaxy) என்று குறிப்பிடப் படுகிறது.  முதன்முதல் திரணட பூர்வாங்க காலாக்ஸிகள் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிச் சிதைந்து போயின !

    கருமைப் பிண்டம், சாதாரணப் பிண்டம் (Dark Matter & Ordinary Matter in the form of Hydrogen & Helium Gas) இரண்டும் இந்த சமயத்தில் பிரிகின்றன !  வாயுக்கள் மோதி வெப்பத்தை இழக்கின்றன. வாயுக்களில் உள்ள அணுக்கள் மோதி வெப்பம் உண்டாக்கி, உட்சிவப்பு ஒளிக்கதிராக (Radiate as Infrared Light) வீசுகின்றன !  விண்மீன்கள் உதிக்காவிட்டாலும் பூர்வாங்க காலாக்ஸிகள் உட்சிவப்பு ஒளிக்கதிர் வீசித் தம்மைக் காட்டிக் கொள்கின்றன !  ஆனால் அவை விண்வெளியில் வெகு தூரத்தில் (பல ஒளியாண்டுகள் தூரம்) மிக மிக மங்கலாகத் தெரிவதால், தொலைநோக்கிகள் மூலம் காண்பதுவும் சிரமமானது !

    பேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் !

    பிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது !  அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோதுகின்றன !

     

    சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன !  காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies).

    காலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன !  அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன !  காலாக்ஸியில் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளதால் அவை மோதிக் கொள்ளும் போது சிதைவடைவதில்லை.  பூர்வீக காலத்தில் பேபி பிரபஞ்சத்தில் பக்கத்தில் இருந்த காலாக்ஸிகளிடையே சேர்ப்புகள், கலப்புகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளாய் நிகழ்ந்து வந்துள்ளன.  இப்போது வானியல் நிபுணர் சுமார் ஒரு மில்லியன் காலாக்ஸிகளின் மோதலை அருகில் உள்ள பிரபஞ்சத்தில் காண்கிறார்கள்.

    நாசா அனுப்பிய காலெக்ஸ் விண்ணோக்கி (GALEX Space Probe)

    2003 ஏப்ரல் 28 ஆம் தேதி நாசா பூமியைச் சுற்றிவரும் “காலெக்ஸ்” (GALEX Orbiting Space Telescope) என்னும் விண்ணோக்கியை ராக்கெட் மூலம் அனுப்பியது.  பிரபஞ்சத்தில் கடந்த 10 பில்லியன் ஆண்டுகளாக புறவூதா ஒளிவீசும் பூர்வாங்க காலாக்ஸிகளை நோக்கி அகிலத்தின் பூர்வீக வரலாற்றை (Cosmic History) 29 மாதங்கள் தொடர்ந்து காலெக்ஸ் விண்ணோக்கி அறிந்து வந்தது.  அந்த விண்ணோக்கு விளைவுகள் நமது பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அது எவ்வாறு வளர்ச்சி அடைந்து மாறியது என்பதையும் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக் காட்டும்.  அத்துடன் காலெக்ஸ் பூர்வாங்க காலத்தில் விண்மீன்கள் உருவாக இருந்த மூல காரணங்களையும் உளவிக் காணும்,  மேலும் காலெக்ஸ் முதல் முறையாக பிரபஞ்சத்தில் உருவாகி வரும் காலக்ஸிகளைக் காட்டும் ஓர் விளக்க மான விண்வெளிப் படத்தைத் (Galaxy Map) தயார் செய்யும் !  அதன் மூலம் நமது பால்வீதி போன்ற காலாக்ஸிகள் எவ்விதம் உண்டாக்கப் பட்டன என்று நான் அறியலாம்.  காலெக்ஸ் கண்டு அனுப்பும் புறவூதா நோக்கு நிகழ்வுகள் நமது பால்வீதியில் எப்போது விண்மீன்கள் இரசாயன மூலகங்களை உற்பத்தி செய்தன என்னும் புதிரையும் விடுவிக்கும் !

     

    [தொடரும்]

    +++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; ESA, National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Milkyway Galaxy Form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 Science Daily : What Shape is The Universe ? Columbia Astronomers Have Clue !  [Feb 17, 1998]
    20 NASA – The Galaxy Evolution Explorer (GALEX Space Probe) (April 28, 2003)
    21 The Cosmic Star Formation History (www.mpa-garching.mpg.de/HIGHLIGHT/2002/)
    21 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40807241&format=html (Galaxy -1)
    21 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712131&format=html (Galaxy -2)
    21 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40807101&format=html (Galaxy -3)
    22 A Computer Model of Galaxy Formation
    23 How Galaxies Work By : Craig Freudenrich, Ph..D.
    24 Science Daily – Early Star Formationin The Universe Illuminated (Sep 18, 2007)
    25 Discover Magazine – Unseen Universe (Jan 31, 2007)
    26 Scientific American – The Secret Lives of Stars (Number 4 Issue 2004)
    27 Cosmos – In Search of the First Stars By : Ray Jayawardhana (Jan 31, 2007)
    28 Astronomy Magazine – Quest for the First Galaxies By : Richard Ellis [March 2008]
    29 Space Daily – New Evidence for Supernova-Driven Galactic Fountains in Milky Way (Nov 22, 2010)
    30 Daily Galaxy – Stunning Burst of Star Creation Beams as Much Light as an Entire Galaxy (Nov 24, 2010)
    31 Space Daily – Cosmic Dust & Gas Shape Galaxy Evolution (Nov 24, 2010)
    32 Space Daily – Massive Galaxy Formed When the Universe Was Young (Nov 25, 2010)
    33 Space Daily – Astronomers Probe ‘Sandbar’ Between Islands of Galaxies (Nov 25, 2010)
    34 Astronomy Magazine – New Research – How Stars Form -Stars Change from Cold Gas to Blazing Hot Fireballs (December, 2010)

    35  http://en.wikipedia.org/wiki/Suzaku_(satellite)  (Japan’s Suzaku Satellite)

    35 Daily Galaxy :  Milky Way Discovered, Embedded in a Colossal Halo of Hot Gas  — Equal to the Mass of All Stars in the Galaxy]  (September 25, 2012)

    36.  NASA Report :  http://www.nasa.gov/mission_pages/chandra/news/H-12-331.html, NASA’s Chandra -X Ray Probe Shows Milky Way is Surrounded by Halo of Hot Gas  (September 24, 2012)

     

    ******************
    jayabarat@tnt21.com [September 29, 2012]

    Share
  • அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி

     

    ஆன்மநேய அன்பர்களுக்கு  வணக்கம்.

         இப்பிரபஞ்சத்தில்  இறைஉண்மையையும், இறைபேராற்றலையும்   அறிந்து  மனிதஇனம்  முழுமை பெற  மண்ணுலகில் வந்துதித்தவர்  நம் அருட்பிரகாச  வள்ளலார்  எனும் இராமலிங்க அடிகளார் (05/10/1823 முதல்-எப்பொழுதும்).அந்நாள் உலக ஆன்மநேய திருநாளாக நமது  இராமலிங்கர்  பணி மன்றம் பாரிஸ்,  வருகின்ற புரட்டாசி  மாதம் 20 ஆம் தேதி  சனிக்கிழமை (06/10/2012 ) அன்று மதியம் 2 மணி முதல் உலக உயிர்கள் இன்புற்று  வாழும் பொருட்டு  சிறப்பு வழிபாட்டினை  ஏற்பாடு செய்துஇருக்கிறது.
     
    இவ்வழிபாட்டில்  தாங்கள்  குடும்பத்துடன்  கலந்துகொண்டு  இறைஅருள்  பெறவும் உலகம் தழைக்க அருட்பேராற்றலை  உருவாக்க  தவநிலைக்கு  உங்களை  தயவுடன்  அழைக்கின்றோம்.
     .
    குறிப்பு :அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

     குறிப்பு : உலகில் வாழும் அன்பர்கள்  இத்திருநாளில்  (05/10/2012)     சைவ நெறி நின்று  உலக உயிர்கள்  இன்புற்று வாழப்பிராத்தனை செய்ய  அன்புடன் வேண்டுகிறோம் .

                                                                                                                                     தங்களை அன்புடன் அழைக்கும்

    சமரச  சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் . பாரிஸ்

    திரு அருட்பிரகாச வள்ளலார் 190-ஆம் பிறந்த நாள் வி�®-1

     

    Share
  • சிந்துபாத்தும், கிழவனும்!

     

    பவள சங்கரி

    தலையங்கம்

     புதிய நிதி அமைச்சரின் வழிகாட்டுதலில் நமது பொருளாதாரம் சிறந்த இடத்தைப் பிடிக்குமா? சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு இன்றைய சூழலில் தேவையா? முடங்கிப்போயுள்ள  மின்துறை, பொருளாதாரத்தை பின்னிழுத்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில் டீசலுக்கு, லிட்டருக்கு ரூ5  விலையேற்றம் நியாயமா? 12 முதல் 14 மணி நேரம் மின்சாரம் இல்லாத  இந்தச் சூழலில் தொழிலகங்கள், தங்களின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கு டீசலை நம்பியிருக்கும் காலகட்டத்தில் இந்த விலையேற்றம் சரியானதா  ஏற்றுமதியாளர்களுக்கு இந்தச் சுமை பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தாதா? உதாரணத்திற்கு, ஏற்றுமதிக்கான ஒரு ஆடை தயாரிப்பதற்கான செலவாக ரூ 100 என்ற கணக்கில் ஒப்பந்தம் போட்டதாகக் கொண்டால்,. மின்சாரப் பற்றாக்குறையால் குறைந்த உற்பத்திக்கு தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். அதோடு சேர்த்து  மின் உற்பத்திக்கான டீசல் செலவும் அதிகமாகும்போது தயாரிப்புச் செலவே ரூ110 ஆகிவிடுகிறது. இதனால் ஏற்றுமதியாளருக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். இதை நம்முடைய நிதியமைச்சர் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இதேபோல் அனைத்துத் தொழில்களும் முடங்கிப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கக்கூடும்

    பொருளாதார வல்லுநரான நம் பாரதப் பிரதமர் மரத்திலா டாலர் காய்க்கும் என்கிறார்.. அன்னிய செலாவணி அவசியம் தேவை என்கிறார்..  சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு செய்வதனால்  பொது மக்களுக்கு பெரிய இலாபம் எதிர்பார்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மக்கள் தொகை குறைவாக உள்ள ஒரு சில நாடுகளுக்கு வேண்டுமானால் சங்கிலித்தொடர் கடைகள் சரிப்பட்டு வரலாம். ஆனால் பரந்து, விரிந்து மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டிற்கு இது சரிப்பட்டு வருமா என்பது ஐயப்பாடுதான்.  1000 முதலாளிகளை அழித்து ஒரு முதலாளியை உருவாக்குவதற்கு அரசு ஏன் பாடுபட வேண்டும். இலண்டன் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவழியைச் சார்ந்த பாரளுமன்ற உறுப்பினர் இந்தத் திட்டம் தம் தொகுதியில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதாக கூறியுள்ளதையும் நாம் கருத்தில் கொளள வேண்டும். இளம் வயதில் படித்த சிந்துபாத்தும் கிழவனும் கதைதான் நினைவிற்கு வருகிறது.. நாளை இந்த அன்னிய முதலீட்டாளர்கள் நம் தோளின் மீது உட்கார்ந்து கொண்டு நம் கழுத்தை நெறிக்கும் போது அதற்கு என்ன தீர்வை ஆட்சியாளர்கள் வைத்துள்ளார்கள் என்பது தெரிந்தாலாவது நிம்மதியாக இருக்க முடியும்.

    .

    Share
  • சிரிக்கச் சிரிக்க கீதை – பகுதி 4

    ஹாஹோ

    “திருதராஷ்ட்டிரன், ‘போர்க்களத்தில் என்ன நடந்தது?’, என்று கேட்டது போரின் முதல் நாளில் அல்ல! அது போர் நடந்து பத்து நாள் முடிவில் கேட்கப்பட்ட கேள்வி”, என்றார் ஹாஹோ.

    “அப்படியென்றால் போர் ஆரம்பித்து பத்தாவது நாள்தான் கீதாவுபதேசம் நடந்ததா?”, என்று கேட்டார் அவசரகுமார்.

    “போர் ஆரம்பமாவதற்கு முன்பேயே பகவத்கீதை உபதேசிக்கப்பட்டு விட்டது என்பது எனக்குத் தெரியும், ஆனால் திருதராஷ்டிரன் பத்தாவது நாளில்தான் இந்தக் கேள்வியைக் கேட்டான் என்ற செய்தியை இதுவரை நான் அறிந்திருக்கவில்லை, ஹாஹோ, அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்”, என்றார் பேரறிவு.

    “ஏன் எல்லாருமாக சேர்ந்து இப்படிக் குழப்புகிறீர்கள், படித்த பண்டிதர்களுக்கே கீதை குழப்பம்; படிக்காதவர்களுக்குக் கேட்கவே வேண்டாம்; ஹாஹோ நீங்களும் எங்களை ஏன் இப்படிக் குழப்புகிறீர்கள்?”, என்றாள் சாதாரணீ.

    “ஆமாம் ஆமாம்.. மிகவும் குழப்பமாக இருக்கிறது”, என்றார் ஆமாம்பிரபு.

    “சாதரணீ இதுலே குழப்பம் எதுவும் இல்லையம்மா, தமிழில்தானே சொல்கிறார், குழப்பும் விஷயங்களை ஒவ்வொன்றாகக் கேளேன், விளக்கிவிட்டுப் போகிறார் ஹாஹோ”, என்றார் நடுவு.

    “அப்புடீன்னாக்க இதுக்கு பதில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா சொல்லுங்க, கீதை யுத்தத்தின் முதல்நாள் நடந்ததா, பத்தாவது நாளா?”, இப்படிக் கேட்டார் நாத்திக்சாமி.

    “அட! கீதையானது போர் ஆரம்பமான அன்றே அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டு விட்டது. ஆனால் திருதராஷ்ட்டிரர் சஞ்சயனிடத்து கேட்பது பத்து நாள் போர் முடிவிலேதான். அதாவது பத்தாம் நாள் போரிலே பீஷ்மர் அர்ஜுனனால் அம்புப் படுக்கையில் கிடத்தப் படுகிறார். அது தீராத சோகத்தைத் திருதராஷ்ட்டிரருக்கு ஏற்படுத்தி விடுகிறது. ‘போர் ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதை உனது விசேஷ சக்தியைப் பயன்படுத்தி எனக்குச் சொல்’, என சஞ்சயனிடத்தில் கேட்கிறார் . அதனால்தான் திருதராஷ்டிரர், ‘தர்மபூமியாகிய குருசேத்திரத்தில் கூடி நின்ற என்னவர்களும், பாண்டவர்களும் (பத்து நாட்கள் முன்பு) என்ன செய்தார்கள் சஞ்சயா?’, எனக் கேட்கிறார். இப்போது புரிகிறதா சாதாரணீ?”, என்று கேட்டார் ஹாஹோ.

    “நல்ல வேளை, அவர் அப்படித் திரும்பக் கேட்காமல் போயிருந்தால் நமக்கு இந்த அற்புதக் கீதையே கிடைக்காமல் போயிருக்கும் அல்லவா?”, என்றார் சமூகன்.

    “ஆமாம் .. ஆமாம்..கிடைக்காமலே போயிருக்கும்!”, என்றார் ஆமாம்பிரபு.

    “அதான் கெடைச்சுடிச்சில்ல, சட்டுனு அடுத்த ஸ்லோகத்துக்கு போங்களேன்!”, என்று அவசரப் படுத்தினார் அவசரகுமார்.

    “பாண்டவர்களுடைய படையைப் பார்த்து விட்டு படைத்தளபதி துரோணாச்சாரியாரிடம் ராஜா துரியோதனன் இப்படிக் கூறலானான், இது இரண்டாவது ஸ்லோகம். துரியோதனனின் குரு துரோணர், ஆனால் இப்போது அவர்கள் குரு சிஷ்யராக இருக்கவில்லை. துரியோதனன் ராஜா, துரோணர் படைத் தளபதி அவ்வளவே! அதாவது இங்கு படையை நடத்திச் செல்ல, போர்த்திட்டங்கள் வகுக்க அதைச் செயல்படுத்த துரோணனருக்கு அதிகாரம் உண்டே தவிர இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் துரியோதனனுக்கே, என்று வலியுறுத்தவே ராஜா துரியோதனன் என்கிறார்”, இப்படிச் சொன்னார் ஹாஹோ.

    “அப்புடின்னா சிஷ்யனா இருந்தப்ப எடுத்த ட்ரில்லுக்கெல்லாம், வட்டியும் முதலுமாச் சேர்த்து துரோணரை இப்போ ட்ரில் எடுக்கலாம் துரியோதனன்!”, என்று சொல்லிவிட்டு உரத்த குரலில் சிரித்தது தமாசு.

    “துரோணர் தன்னோட பெரிய தாடியோட போர்க்களத்துல தோப்புக் கரணம் போட்டா தமாஷா இருக்குமில்ல?”, என்றான் மக்கான்.

    “நம்ம ஹாஹோ கூட பெரிய தாடியோட இருகார், உனக்கு ஆசையா இருந்தா அவரை தோப்புக் கரணம் போடச்சொல்லேன்”, என்றது தமாசு மக்கானைப் பார்த்து.

    “எதுக்கு தேவையில்லாமல் என் தலையை உருட்டுகிறீகள்?”, என்று கேட்டார் ஹாஹோ.

    “உங்கள் தலையை எங்கே உருட்டினோம், தாடியை அல்லவா உருட்டினோம்!”, என்றது சிரித்துக் கொண்டே தமாசு.

    “எனக்கு ஒரு சந்தேகம், உங்கள் கருத்துப் படி, கிருஷ்ணர் பகவத் கீதையை போர்த்தேரிலேர்ந்தே உபதேசித்தாரா, கீழே இறங்கி வந்து உபதேசித்தாரா?”, எனக் கேள்விக் கணையை விடுத்தார் நாத்திக் சாமி.

    “இப்படித் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு நம்ம எல்லாரோட நேரத்தையும் வீணடிக்கிறதே, நாத்திக்கின் பொழப்பாப் போச்சி”, என்று சற்று உரத்த குரலில் சொன்னார் பேரறிவு.

    (தொடரும்)

     

    படத்திற்கு நன்றி: http://spiritualguidedmeditation.com/mind-body-spirit/shrimad-bhagavad-gita-retreat-with-gurumaa.html

    Share
  • பாஞ்சாலி சபத உரை (பாகம் – 1 ஆ)

     

    ஹரிகிருஷ்ணன்

    பாஞ்சாலி சபத உரை (பாகம் – 1 அ)

    ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
        உச்சியின் மேல்வந்தே மாதரமென்றே
    பாங்கின் எழுதித் திகழும் – செய்ய
        பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்
    (தாயின் மணிக்கொடி பாரீர்)

    (மேல், கீழ், நடு போன்ற) ஒரு பக்கத்தில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதியிருக்க, வீசிப் பறக்கும் கொடி.  

    கஞ்ச மலரிற் கடவுள்: கஞ்சம் – தாமரை.  தாமரை மலரில் வீற்றிருக்கும் கடவுள் – பிரமன்.

    ஆ. இலக்கணம் –

    இ. யாப்பு

    கட்டளைக் கலிப்பா.  (நேர் பத்து; நிரை பதினொன்று என்று பாரதி கையாண்டிருக்கும் வகை.)  மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பத்து எழுத்துகள் இருக்கின்றன.   கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது

    மகனான துரியோதனனும், அவனுடைய மாமனான சகுனியும் போன பிறகு, திரிதிராட்டிரன் கட்டிடத் தொழில் நுட்பம் அறிந்த பலரை வரவழைத்தான்.  ‘பாண்டவர்களுடைய வேள்வியில் கண்டதைப் போல் ஒப்பற்ற ஒரு மண்டபத்தைக் கட்டுவீர்.  எவ்வளவு பொருள் செலவானாலும் பரவாயில்லை.  அதிகமான பணம் செலவழிக்க நான் தயார்,’ என்றான்.  அவர்கள் மகிழ்ச்சி கொண்டு அங்கிருந்து போய், பிரமனும் கண்டு வியப்பதைப் போல் ஒரு பொன் மண்டபத்தைக் கட்டி நிறுத்தினார்கள்.

    வல்லவன் ஆக்கிய சித்திரம் போன்றும்
        வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்
    நல்ல தொழில்உணர்ந் தார் செயல்என்றே
        நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
    கல்லையு மண்ணையும் பொன்னையும் கொண்டு
        காமர் மணிகள் சிலசில சேர்த்து
    சொல்லை இசைத்துப் பிறர்செயு மாறே
        சுந்தர மாம்ஒரு காப்பியம் செய்தார். (110)

    பதம் பிரித்து:

    அ. சொற் பொருள்: காமர் – அழகு, ஒளி, அலங்காரம்.  
    காமரு என்ற சொல் வேறு.  காமர் என்ற சொல் வேறு.  காமரு என்ற சொல்லுக்குப் பாடல் 44 காணவும்.

    ஆ. இலக்கணம் –

    இ. யாப்பு

    கட்டளைக் கலிப்பா.  (நேர் பத்து; நிரை பதினொன்று என்று பாரதி கையாண்டிருக்கும் வகை.)  மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பத்து எழுத்துகள் இருக்கின்றன.   கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது

    தேர்ந்த ஓவியன் எழுதிய சித்திரத்தைப் போலவும், திறமை மிக்க கவிஞர்களுடைய கனவைப் போலவும், ‘இதைக் கட்டியவர்கள் தம் தொழிலில் மிகத் தேர்ந்தவர்கள்,’ என்று நாடெல்லாம் அதைப்பற்றியே புகழ்ந்து பேசும்படியாக, கல்லையும், மண்ணையும் சேர்த்து, அவற்றோடு ஒளி பொருந்திய மணிகளைப் பதித்து, ஒளியும், இசையும் இயைந்த சொற்களைக் கொண்டு கவிஞர்கள் படைப்பதைப் போல், (ஒளியும், இசையும்* கொண்ட) கற்களைக் கொண்டு கல்லினால் ஒரு காவியம் படைத்தார்கள்.  (இசை: புகழ்)

    தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்
        தக்க பரிசுகள் கொண்டினிதேகி
    எம்பியின் மக்கள் இருந்தர சாளும்
        இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்
    கொம்பினை ஒத்த மடப்பிடி யோடும்
        கூடியிங் கெய்தி விருந்து களிக்க
    நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான்
        நல்லதோர் நுந்தை எனவுரை செய்வாய். (111)

    பதம் பிரித்து: தேவை இல்லை

    அ. சொற் பொருள்: கொம்பு: தந்தம்.  தந்தத்தில் கடைந்து எடுக்கப்பட்டதை ஒத்த அங்கங்களை உடைய.  

    மடப் பிடி: மடம் நிறைந்தவளாகிய, பெண்யானையை ஒத்த

    ஆ. இலக்கணம்

    இ. யாப்பு

    கட்டளைக் கலிப்பா.  (நேர் பதினொன்று; நிரை பன்னிரண்டு என்ற விதிப்படி அமைந்தது. மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.   கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    முன்னரே சொன்னது போல், இப்படி எழுத்தெணிக்கை பிசகாமல் அமைந்திருப்பதை பாரதியே கவனிக்கவில்லை.  இவற்றை எண் சீர் விருத்தம் என்று குறித்திருக்கிறான்.  பாடல் 109க்கு எழுதிய குறிப்புரையில்

    இது முதல் 115 வரை –

    ‘லாலல லாலல லாலல லாலா
    லாலல லாலல லாலல லாலா

    என்று பாடுக’ எனக் குறித்திருக்கிறான்.  சந்த அமைப்பில் இருக்கும் எழுத்துகளை எண்ணிப் பாருங்கள்.  பதினோரு எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  சந்தம் தட்டாமல் செய்தால், எழுத்தெண்ணிக்கை தன்னால் அமையும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

    ஈ. பாடல் சொல்வது

    துரியோதனனும் சகுனியும் போன பின்னர், திருதிராட்டிரன் விதுரனை அழைத்தான்.  ‘உரிய பரிசுகளை எடுத்துக்கொள்.  நேராக, பாண்டவர்கள் அரசாளும் இந்திரப்பிரஸ்தத்துக்குப் போ.  பாஞ்சாலியையும் அழைத்துக் கொண்டு, இங்கே வந்து விருந்தினராகத் தங்கியிருக்க வேண்டும் என்று உங்கள் தந்தையாகிய கெளரவர் தலைவன், திரிதிராட்டிரன் சொன்னான்,’ என்பதாகத் தெரிவிப்பாய்.

    நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும்
        நன்மணி மண்டபஞ் செய்ததுஞ் சொல்வாய்.
    நீடு புகழ்ப்பெரு வேள்வியில் அந்நாள்
        நேயமொ டேகித் திரும்பிய பின்னர்
    பீடுறு மக்களை ஓர்முறை இங்கே
        பேணி அழைத்து விருந்துகள் ஆற்றக்
    கூடும் வயதில் கிழவன் விரும்பிக்
        கூறினன் இஃதெனச் சொல்லுவை கண்டாய். (112)

    பதம் பிரித்து: தேவை இல்லை.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம் –

    இ. யாப்பு

    கட்டளைக் கலிப்பா.  (நேர் பதினொன்று; நிரை பன்னிரண்டு என்ற விதிப்படி அமைந்தது. மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.   கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது

    (இந்திரப் பிரஸ்தத்தில் அவர்கள் சமைத்த மயன் மண்டபத்துக்கொப்பான) நாட்டு மக்கள் எல்லோரும் வியந்து புகழும் மண்டபம் ஒன்று கட்டியிருப்பதையும் சொல்வாய்.  துரியோதனன் முதலானோர் அங்கே வந்து விருந்தேற்றது போல் அவர்கள் இங்கே வந்து மறு விருந்தாடவேண்டும் என்ற முறைமையினால், வேள்விக்கு அன்போடு துரியோதனாதியர் வந்து திரும்பியதை ஒட்டி, பெருமை மிக்க என் மக்களைப் பேணுவதற்காக, வயதேறி, முதுமையடைந்த தந்தையாகிய நான் விரும்பினேன் என்று சொல்வாய்.

    பேச்சின் இடையினில் சகுனிசொற் கேட்டே
        பேயெனும் பிள்ளை கருத்தினில் கொண்ட
    தீச்செயல் இஃதென் றதையுங் குறிப்பால்
        செப்பிடுவாய் என மன்னவன் கூற
    போச்சுது போச்சுது பாரத நாடு!
        போச்சுது நல்லறம் போச்சுது வேதம்
    ஆச்சரியக் கொடுங் கோலங்கள் காண்போம்
        ஐயஇதனைத் தடுத்தல் அரிதோ! (113)

    பதம் பிரித்து: தேவை இல்லை

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம் –

    இ. யாப்பு

    கட்டளைக் கலிப்பா.  (நேர் பதினொன்று; நிரை பன்னிரண்டு என்ற விதிப்படி அமைந்தது. மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.   கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது

    பேச்சுக்கு நடவில், பேயை ஒத்த என் பிள்ளையின் மனத்தில் இப்படி ஒரு தீச்செயலைக் கருதியிருக்கிறான் என்பதையும் குறிப்பால் உணர்த்துவாய் என்று திருதிராட்டிரன் கூறவும் விதுரன் அதிர்ச்சியுற்றான்.  ‘போச்சுது!  எல்லாம் போயிற்று!  பாரத நாடு அழிந்தது! நல்லறம் ஒழிந்தது!  வேதங்கள் கெடும்!  ஐயா! இப்படி ஒரு காரியம் நடக்கவிடாமல் தடுக்க இயலாதா?

    என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
        ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்
    சென்று வருகுதி தம்பி இனிமேல்
        சிந்தனை ஏதும் இதிற் செயமாட்டேன்.
    வென்று படுத்தனன் வெவ்விதி என்னை
        மேலை விளைவுகள் நீயறியாயோ?
    அன்று விதித்ததை இன்று தடுத்தல்
        யார்க்கெளி தென்று மெய்சோர்ந்து விழுந்தான். (114)

    பதம் பிரித்து: தேவை இல்லை

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம் –

    இ. யாப்பு

    கட்டளைக் கலிப்பா.  (நேர் பதினொன்று; நிரை பன்னிரண்டு என்ற விதிப்படி அமைந்தது. மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அரையடியும் நேரசையில் தொடங்குவதால், ஒவ்வோர் அரையடியிலும் ஒற்றொழித்துப் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.   கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது

    என்று விதுரன் பெரிய துயர் கொண்டு ஏங்கிப் பலவாறு சொன்னான்.  ‘தம்பி! இனிமேல் இதைப்பற்றி மறு சிந்தனை ஏதும் செய்வதாக இல்லை.  நீ சென்று வா!  விதி என்னை வென்றது.  இதற்கு மேல் என்னென்ன நடக்கும் என்பதை அறியாதவான நீ?  என்றோ விதித்து எழுதி வைத்ததை மாற்றவோ, தடுக்கவோ யாருக்கும் எளிதான ஒன்றா?’ என்று கேட்டவாறு திரிதிராட்டிரன் உடல் தளர்ந்து விழுந்தான்.

    வேறு

    அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்.
        அடவிமலை ஆறெல்லாம் கடந்து போகித்
    திண்ணமுறு தடந்தோளும் உளமுங் கொண்டு
        திருமலியப் பாண்டவர்தாம் அரசு செய்யும்
    வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான்
        வழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி
    எண்ணமுற லாகித்தன் இதயத் துள்ளே
        இனையபல மொழிகூறி இரங்கு வானால். (115)

    பதம் பிரித்து: எண்ணமுறலாகி: எண்ணம் உறல் ஆகி

    அ. சொற் பொருள்: அடவி: காடு.

    மலிய: அளவுக்கு அதிகமாக மிகுந்திருத்தல்.  (அவ்வாறு மிகுந்திருக்கும் காரணத்தால் விலை குறையும்; ஆகையாலே மலிவு என்பதை ‘விலை குறைவு’ என்ற பொருளில் பயன்படுத்துகிறோம்.  இந்தச் சொல் இந்தப் பொருளில் மட்டும்தான் பெரும்பாலும் பயன்படுகிறது.  Dear என்ற ஆங்கிலச் சொல், ‘அரிது’ என்ற பொருளை உடையதாகி, அதன் காரணத்தால் அன்புக்கு உரியவர்களை ‘நீ எனக்கு அரிதாகக் கிடைத்தவள்/ன்’ என்ற பொருளில் dear என்று அழைப்பதைப் போல்.  

    ஆ. இலக்கணம் –

    இ. யாப்பு

    காய் காய் மா மா என்று பரவலாக அறியப்படும் எண்சீர் விருத்தம்.  மூன்றசை, மூன்றசை, இரண்டசை, இரண்டசை.  நான்கு சீர்களும் நேரசையில் முடியும். நான்காவது சீர் மட்டும் நேர்நேர் என்று முடியும்.  மூன்றாவது சீர் நேர்நேர் அல்லது நிரைநேர் என்று வரலாம்.  

    ஈ. பாடல் சொல்வது

    அண்ணன் திரிதிராட்டிரனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, விதுரன் பாண்டவர்களை அழைப்பதற்காகச் சென்றான்.  காடுகள், மலைகள், ஆறுகள் என்று குறுக்கிட்ட பலவற்றையும் கடந்தபடி, உறுதிவாய்ந்த தோள்களும், மனவலிமையையும் கொண்டு, எங்கெங்கும் செல்வம் கொழிக்கும்படியாகப் பாண்டவர்கள் அரசாள்வதான இந்திரப் பிரஸ்ததத்துக்குச் சென்றான்.  அந்த நாட்டின் அருகினிலே செல்லும் போதே அங்கே நிறைந்திருக்கும் வளத்தையெல்லாம் பார்த்து, துயரம் மிகக் கொண்டு, தன் இதயத்துக்குள்ளே இவ்வாறெல்லாம் சொல்லி வருத்தப்படுவானாயினான்.

    நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு
        நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பு நாடு
    கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழும்
        குளிர்காவும் சோலைகளும் குலவு நாடு
    ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல
        நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்க
    பாலடையு நறுநெய்யும் தேனும் உண்டு
        பண்ணவர்போல் மக்களெலாம் பயிலும் நாடு. (116)

    பதம் பிரித்து:

    அ. சொற் பொருள்: பாலடை: குழந்தைகளுக்குப் பாலூட்டப் பயன்படும் சிறு பாத்திரம்.  இங்கே பாலாடைக் கட்டியைக் குறிக்கும்.

    பண்ணவர்: கடவுளர்; தேவர்.

    ஆ. இலக்கணம்: பாலடை – பாலாடையின் குறுக்கல் விகாரம்.

    இ. யாப்பு

    காய் காய் மா மா என்று பரவலாக அறியப்படும் எண்சீர் விருத்தம்.  மூன்றசை, மூன்றசை, இரண்டசை, இரண்டசை.  நான்கு சீர்களும் நேரசையில் முடியும். நான்காவது சீர் மட்டும் நேர்நேர் என்று முடியும்.  மூன்றாவது சீர் நேர்நேர் அல்லது நிரைநேர் என்று வரலாம்.  

    ஈ. பாடல் சொல்வது

    அடடா!  இதுதான் எவ்வளவு அழகான நாடு!  நீல முடிகள் கொண்ட ஏராளமான மலைகளும், அமுதம் எனப் பாயும் நீரும் நிரம்பிய நாடு.  பயன் தருகின்ற மரங்கள் செறிந்து வளர்ந்திருக்கும் குளிர்ச்சியான காடுகளும், சோலைகளும் நிறைந்துள்ள நாடு.  உலகம் எல்லாவற்றையும் பசியின்றிக் காப்பதற்குத் தேவையான உணவு தானியங்களை விளைவித்துத் தரக் கூடிய நன்செய், புன்செய் நிலங்கள் வளத்தோடு விளங்கும் நாடு.  பாலாடைக் கட்டியையும், நெய்யையும், தேனையும் உண்டு, தேவர்களைப் போல் மக்களெல்லாம் வாழும் நாடு.

    அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர
        அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர்
    கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும்
        காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல்
    பொன்னங்க மணிமடவார் மாட மீது
        புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச
    வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ மாதர்
        மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு. (117)

    பதம் பிரித்து: பொன்னங்க: பொன் அங்க

    அ. சொற் பொருள்: அளி: கருந்தேனீ
    முரலுதல்: ஒலித்தல்.  வண்டு ஒலிக்கும் ஓசை.
    கமழ்: வாசனை.  கமழை: வாசனையை
    ‘வீசுகமழ் நீயெனக்கு, விரியுமலர் நானுக்கு’ (வீணையடி நீயெனக்கு)

    புலவி: சேர்ந்திருத்தல்

    ஆ. இலக்கணம் –

    இ. யாப்பு

    காய் காய் மா மா என்று பரவலாக அறியப்படும் எண்சீர் விருத்தம்.  மூன்றசை, மூன்றசை, இரண்டசை, இரண்டசை.  நான்கு சீர்களும் நேரசையில் முடியும். நான்காவதுச்துச் சீர் மட்டும் நேர்நேர் என்று முடியும்.  மூன்றாவது சீர் நேர்நேர் அல்லது நிரைநேர் என்று வரலாம்.  

    ஈ. பாடல் சொல்வது

    பொன்னைப் போல் பூத்திருக்கும் தாமரைகள் நிறைந்த குளங்களில் அன்னங்கள் நீந்தும்; கருந்தேனி பூக்கள் நிறைந்த சோலைகளில் ஒலிக்கும்; கிளிகள் மழலை பேசும்; கேட்பவர்களின் கன்னங்களில் அமுதம் ஊறுமாறு குயில்கள் பாடும்.  பொன் போன்ற அங்கங்களை உடைய பெண்கள் மாடங்களில் தம் துணைவர்களோடு கூடி இருக்கும் நேரத்தில் தென்றலானது, பூஞ்சோலைகளின் நறுமணத்தை எடுத்துச் சென்று அவர்கள் மீது பூசும்.  அது மலை போன்ற தோள்களை உடைய அவர்கள் துணைவர்களை மகிழ்விக்கும்.  அந்தப் பெண்களின் கண்களே மையலைத் தூண்டும்.  அவ்வளவு வளம் கொண்ட நாடு இது.

    இந்தச் சூழலில் கன்னத்தில் ‘அமுதூறாமல்’ என்ன செய்யும்?  தன் திருமண நலுங்கின் போது செல்லம்மாவைப் பார்த்து இப்படிப் பாடினானாம்:

    … … … … … … … … … … … … … … … … … …
    … … … … … … … … … … … … … … … … … …
    கன்னத்தி னில்குயில்சத்தமே – கேட்கக்
    கன்றுது பார்என்றன் சித்தமே – மயக்
    கஞ்செய்யு தேகாமப் பித்தமே – உடல்
        கனலேறிய
        மெழுகாயின(து)
        இனியாகிலும்
        அடிபாதகி
    கட்டிய ணைத்தொரு முத்தமே – தந்தால்
    கைதொழுவேன் உன்னை நித்தமே.

    ‘கன்னத்திலே குயில் சத்தமே,’யைக் கவனியுங்கள்.  ‘கேட்போர் கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும், ‘ என்றால் என்ன சொல்கிறான் என்பது தானே விளங்கும்.

    பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு
        பெண்களெலாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு
    வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
        வேள்வியெனும் இவையெல்லாம் விளங்கு நாடு
    சோரமுதல் புன்மைஎதும் தோன்றா நாடு
        தொல்லுலகின் முடிமணிபோல் தோன்று நாடு
    பாரதர்தந் நாட்டினிலே நாசம் எய்தப்
        பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே! (118)

    பதம் பிரித்து: தேவை இல்லை

    அ. சொற் பொருள்: பிறங்குதல்: மிகுதி, உயர்ச்சி, நிறைவு

    ஆ. இலக்கணம் –

    இ. யாப்பு

    காய் காய் மா மா என்று பரவலாக அறியப்படும் எண்சீர் விருத்தம்.  மூன்றசை, மூன்றசை, இரண்டசை, இரண்டசை.  நான்கு சீர்களும் நேரசையில் முடியும். நான்காவது சீர் மட்டும் நேர்நேர் என்று முடியும்.  மூன்றாவது சீர் நேர்நேர் அல்லது நிரைநேர் என்று வரலாம்.  

    ஈ. பாடல் சொல்வது

    பெரிய அளவில் அறங்களும், தொழில்களும் நிறைந்து விளங்கும் நாடு.  பெண்களெல்லாம் தேவலோகத்துப் பெண்களைப் போல் விளங்கும் நாடு.  வீரம், மெய்ஞ் ஞானம், தவம், கல்வி, வேள்வி என எல்லாமும் ஒன்றாக நிலவுகின்ற நாடு.  திருட்டுத்தனம் போன்ற புன்மைக் குணங்கள் சேராமல் மக்கள் வாழும் நாடு.  உலகத்தின் முடிக்கு மணியாகத் தோன்றுகின்ற நாடு.  இத்தகைய பாரதர் நாட்டினில் நாசம் வந்து எய்துமாறு பாவியேனாகிய நான் (விதுரன்) துணைபோகும் நிலைமையும் வந்து சேர்ந்திருக்கிறதே!

    ‘பாஞ்சாலி சபதத்தின் உட்பொருள் தேச விடுதலையே,’ என்ற கருத்துக்கு அடிப்படையான இடம் இது.

    வேறு

    விதுரன் வருஞ்செய்தி தாம்செவி யுற்றே
        வீறுடை ஐவ ருளமகிழ் பூத்துச்
    சதுரங்க சேனை யுடன்பல் பரிசும்
        தாளமு மேளமுந் தாங்கொண்டு சென்றே
    எதிர்கொண் டழைத்து மணிமுடி தாழ்த்தி
        ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி
    மதுர மொழியில் குசலங்கள் பேசி
        மன்ன னொடுந்திரு மாளிகை சேர்ந்தார். (119)

    பதம் பிரித்து: தேவை இல்லை

    அ. சொற் பொருள்: வீறு: பெருமை. (பாடல் 105 மற்றும் 106ல் இந்தச் சொல் ‘வீறில் புன்மை’ என்றும், ‘பொய்ம்மை வீறு’ என்றும் பயன்பட்டிருப்பதைக் காண்க.)

    சதுரங்க சேனை: சதுர் அங்கம்.  தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை மற்றும் காலாட் படை என்று நான்கு அங்கங்களை (limbs) உடைய சேனை.  

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  நேர் பதினொன்று, நிரை பன்னிரண்டு.  மேற்படிப் பாடலில் நிரையசையில் தொடங்கும் முதல் அரையடிகளில் (ஒற்றொழித்துப்) பன்னிரண்டு எழுத்துகளும், நேரசையில் தொடங்கும் இரண்டாம் அரையடியில் பதினோரு எழுத்துகளும் இருக்கின்றன.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ‘சதுரங்க சேனை யுடன்பல் பரிசும்’ என்ற இரண்டாம் அடியில் பல பதிப்புகளில் ‘பல பரிசும்’ என்று காணப்படுகிறது.  ‘பல’ என்பது இரண்டெழுத்துக் கணக்கில் வரும்.  கட்டணைக் கலிப்பா இலக்கணம் தப்பும்.  ஆகையாலே ‘பல் பரிசும்’ என்ற பாடமே சரியானது.  (பாரதியின் மூலப் பதிப்பில் ‘பல் பரிசும்’ என்றே காணப்படுகிறது.)

    ஈ. பாடல் சொல்வது:

    விதுரன் வந்துகொண்டிருக்கிறான் என்ற செய்தியைக் கேள்வியுற்ற பஞ்ச பாண்டவர்களும் மகிழ்ச்சி கொண்டனர்.  நான்கு வகைச் சேனைகளையும் கூட்டிக்கொண்டும், பல வகையான பரிசுப் பொருள்களை எடுத்துக்கெ ¡ண்டும், மேள தாளங்களை முழக்கிக் கொண்டும் எதிர் சென்று உரிய மரியாதைகளுடன் அழைத்தார்கள்.  விதுரன் பாதத்தில் பணிந்தார்கள்.  இனிமையான சொற்களால் நலம் விசாரித்தார்கள்.  முகமன் கூறினார்கள்.  பேசியவாறே அவனுடன் தம் மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள்.

    குந்தி யெனும்பெயர்த் தெய்வதம் தன்னைக்
        கோமகன் கண்டுவ ணங்கிய பின்னர்
    வெந்திறல் கொண்ட துருபதன் செல்வம்
        வெள்கித் தலைகுனிந் தாங்குவந் தெய்தி
    அந்தி மயங்க விசும்பிடைத் தோன்றும்
        ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை
    மந்திரந் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண்
        வைத்து வணங்கி வனப்புற நின்றாள். (120)

    பதம் பிரித்து: தேவை இல்லை

    அ. சொற் பொருள்: மந்திரம்: ஆலோசனை.  அறிவுடமை.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  நேர் பதினொன்று, நிரை பன்னிரண்டு.  மேற்படிப் பாடலில் எல்லா அரையடிகளும் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வொன்றிலும் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது

    விதுரன், குந்தியைக் கண்டு வணங்கினான்.  அதன் பிறகு கடுமையான (போர்புரியும்) திறன் உடைய துருபதனுடைய மகளான திரெளபதி அங்கே வந்தாள்.  மாலை மயங்கும் நேரத்தில் ஆகாயத்தில் தோன்றுகின்ற நிலவைப் போன்ற முகத்தை, அறிவு மிக்கவனான (சிறிய) மாமனாரான விதுரனின் பாதத்தில் வைத்து வணங்கி, எழுந்து, ஒரு புறமாக நின்றாள்.

    தங்கப் பதுமை எனவந்து நின்ற
        தையலுக் கையனல் லாசிகள் கூறி
    அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர்
        ஆங்கு வந்துற்ற உறவினர் நண்பர்
    சிங்க மெனத்திகழ் வீரர் புலவர்
        சேவகர் யாரொடும் செய்திகள் பேசிப்
    பொங்கு திருவி னகர்வலம் வந்து
        போழ்து கழிந்திர வாகிய பின்னர் (121)

    பதம் பிரித்து:

    தங்கப் பதுமை என வந்து நின்ற
        தையலுக்கு ஐயன் நல் ஆசிகள் கூறி
    அங்கம் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர்
        ஆங்கு வந்து உற்ற உறவினர் நண்பர்
    சிங்கம் எனத் திகழ் வீரர் புலவர்
        சேவகர் யாரொடும் செய்திகள் பேசிப்
    பொங்கு திருவின் நகர்வலம் வந்து
        போழ்து கழிந்து இரவாகிய பின்னர் (121)

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  நேர் பதினொன்று, நிரை பன்னிரண்டு.  மேற்படிப் பாடலில் எல்லா அரையடிகளும் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வொன்றிலும் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    இந்தப் பாடலில் தொடங்கப்பட்டிருக்கும் வாக்கியம் 123ஆம் பாடலில்தான் முடிவடைகிறது.  ஒரு பாடலின் வாக்கியம் அடுத்த அடுத்த பாடல்களுக்கும் சென்று அங்கே முற்றுப் பெறுவதால் இது குளகச் செய்யுள்.

    ஈ. பாடல் சொல்வது:

    தங்கத்தால் செய்யப்பட்ட பதுமையைப் போல் வந்து நின்ற பாஞ்சாலிக்கு விதுரன் ஆசிகள் கூறினான்.  அவளுடைய உடலும் உள்ளமும் குளிர்ந்து போகுமாறு வாழத்தினான்.  பிறகு அங்கே வந்து சூழ்ந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், சிங்கத்தை ஒத்த வீரர்கள், புலவர்கள், வேலைக்காரர்கள் என்று பலவிதமான மக்களோடு பலவிதமான செய்திகளைப் பேசியபடி, செல்வம் நிறைந்த அந்த நகரத்தை வலம் வந்தார்கள்.  பொழுது கழிந்தது.  இரவானது.

    ஐவர் தமையும் தனிக்கொண்டு போகி
        யாங்கொரு செம்பொன் அரங்கிலிருந்தே
    மைவரைத் தோளன் பெரும்புக ழாளன்
        மாமகள் பூமகட் கோர்மண வாளன்
    மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்
        வேந்தர் பிரான்திரி தாட்டிரக் கோமான்
    தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச்
        சீரொடு நித்தலும் வாழ்கென வாழ்த்தி (122)

    பதம் பிரித்து:

    ஐவர் தமையும் தனிக்கொண்டு போகி
        ஆங்கு ஒரு செம்பொன் அரங்கில் இருந்தே
    மை-வரைத் தோளன், பெரும் புகழாளன்
        மாமகள், பூமகளுக்கு ஓர் மணவாளன்
    மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்
        வேந்தர் பிரான் திரிதாட்டிரக் கோமான்
    தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச்
        சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி (122)

    அ. சொற் பொருள்: மைவரை: மை – கரிய; வரை: மலை.  மைவரைத் தோளன்- கரிய மலையைப் போன்ற தோள்களை உடையவன்.

    மாமகள்: திருமகள்; பூமகள்: பூமியாகிய பெண்.  சீதேவி, பூதேவி என்று சொல்லப்படுபவர்கள்.  மன்னன் என்பவன் இறைவனுக்குச் சமமானவன் (‘திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’). எனவே சீதேவி, பூதேவியரின் மணவாளான திருமால் என்றே மன்னனைக் குறிப்பது மரபு.  

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  நேர் பதினொன்று, நிரை பன்னிரண்டு.  மேற்படிப் பாடலில் எல்லா அரையடிகளும் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வொன்றிலும் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    இந்தப் பாடலில் தொடங்கப்பட்டிருக்கும் வாக்கியம் 123ஆம் பாடலில்தான் முடிவடைகிறது.  ஒரு பாடலின் வாக்கியம் அடுத்த அடுத்த பாடல்களுக்கும் சென்று அங்கே முற்றுப் பெறுவதால் இது குளகச் செய்யுள்.

    இந்தப் பாடலில் ஒன்று கவனிக்க வேண்டும்.  மூன்றாவது அடியின் பின் அரையடி பல பதிப்புகளில், ‘வேந்தர் பிரான் திரிதராட்டிரக் கோமான்’ என்று இருக்கிறது.  ‘திரிதராட்டிர’ என்று ரகரம் சேர்த்து இருந்தால், இந்த அரையடியில் பன்னிரண்டு எழுத்துகள் ஆகும்.  பாரதியின் முதற் பதிப்பில் இந்தப் பெயர் ‘திரிதாட்டிரக் கோமான்’ என்றே இருக்கிறது.  பதினோரு எழுத்துக் கணக்கில் கச்சிதமாக நிற்கிறது.  (கட்டளைக் கலிப்பா என்று நினைத்து எழுதாமல், ‘எண்சீர் விருத்தம்’ என்று முழுக்க முழுக்க சந்ததத்தில் மனம் செலுத்தி எழுதிய போதும், எழுத்துக் கணக்கில் துளியும் தப்பாமல் நிற்பதைக் காணலாம்.  சந்தக் கட்டின் தொழில் நுட்பம் ஒரு புறம் என்றால்; சந்தத்துக்குள் துல்லியமாக நிற்க முடிந்த பாரதியின் ஆளுமை இன்னொரு புறம்.)

    ஈ. பாடல் சொல்வது:

    இரவானதும், விதுரன் பாண்டவர்கள் ஐவரையும் தனியிடத்துக்கு அழைத்துச் சென்றான்.  அவர்கள் தனியான ஒரு பொன் மண்டபத்தை அடைந்தனர்.  அங்கே சென்றதும், விதுரன் பாண்டவர்களை நோக்கி, ‘மலை போன்ற தோள்களையும், பெரிய புகழையும் உடையவனும், செல்வம், நிலம் ஆகிய இரண்டு தேவியர்களையும் கொண்டவனும், ஆழ்ந்த கல்வி-கேள்வி உடையவனும் ஆன திரிதராட்டிரன் உங்களை எல்லாவிதமான உயர்ந்த நலங்களையும் பெற்று வாழுமாறு வாழ்த்துகிறான்.  என்றும் சிறப்போடு வாழ ஆசிர்வதிக்கிறான்.

    உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான்
        ஓர்செய்தி மற்றஃதுரைத்திடக் கேளீர்
    மங்களம் வாய்ந்தந லத்திபுரத்தே
        வையக மீதில் இணையற்ற தாகத்
    தங்கும் எழில்பெரு மண்டபம் ஒன்று
        தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர்
    அங்கதன் விந்தை அழகினைக் காண
        அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன். (123)

    பதம் பிரித்து:

    உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான்
        ஓர்செய்தி. மற்று அஃது உரைத்திடக் கேளீர்
    மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே
        வையக மீதில் இணையற்றது ஆகத்
    தங்கும் எழில்பெரு மண்டபம் ஒன்று
        தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர்
    அங்கு அதன் விந்தை அழகினைக் காண
        அன்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன்.

    அ. சொற் பொருள்:

    அத்திபுரம்: அத்தினபுரம்; ஹஸ்தினாபுரம்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  நேர் பதினொன்று, நிரை பன்னிரண்டு.  மேற்படிப் பாடலில் எல்லா அரையடிகளும் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வொன்றிலும் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    அவ்வாறு வாழ்த்தி, உங்களிடம் சொல்லுமாறு ஒரு செய்தியைச் சொல்லி அனுப்பியிருக்கிறான், திரிதராட்டிரன்.  மங்கலம் நிறைந்ததான ஹஸ்தினாபுரத்தில் இந்த உலகத்தில் எங்கேயும் ஈடு இணையற்ற விதத்தில் உங்கள் தம்பியரான துரியோதனாதியர் கட்டி இருக்கிறார்கள்.  நீங்கள் எல்லோரும் அங்கே வந்து அதன் அழகினைக் காண வேண்டும் என்று உங்களை மன்னன் அன்போடு அழைக்கிறான்.

    வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து
        மீண்டு பலதினமாயின வேனும்
    வாள்வைக்கு நல்விழி மங்கையொடே நீர்
        வந்தெங்க ளூரில் மறுவிருந்தாட
    நாள்வைக்கும் சோதிடரா லிதுமட்டும்
        நாயகன் உம்மை அழைத்திட வில்லை.
    கேள்விக் கொரு மிதிலாதிபன் ஒத்தோன்
        கேடற்ற மாத மிதுவெனக் கண்டே (124)

    பதம் பிரித்து:

    வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து
        மீண்டு பலதினம் ஆயினவேனும்
    வாள்வைக்கு நல்விழி மங்கையொடே நீர்
        வந்து எங்கள் ஊரில் மறுவிருந்து ஆட
    நாள்வைக்கும் சோதிடரால் இதுமட்டும்
        நாயகன் உம்மை அழைத்திடவில்லை.
    கேள்விக்கு ஒரு மிதிலைஅதிபன் ஒத்தோன்
        கேடற்ற மாதம் இதுஎனக் கண்டே

    அ. சொற் பொருள்: இதுமட்டும்: இது வரை.  இன்று வரை.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  நேர் பதினொன்று, நிரை பன்னிரண்டு.  மேற்படிப் பாடலில் எல்லா அரையடிகளும் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வொன்றிலும் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    இந்தச் செய்யுளின் கடைசி அடியில் உள்ள வாக்கியம் அடுத்த செய்யுளில் முடிவடைகிறது.  எனவே இது குளகச் செய்யுள்.

    ஈ. பாடல் சொல்வது:

    (விதுரன் கெளரவர்கள் சார்பில் தொடர்கிறான்.)  நீங்கள் நடத்திய ராஜசூய யாகத்திற்கு வந்து பங்கேற்று நாங்கள் எல்லோரும் மீண்டு பல நாள் ஆயின.  உங்களை எங்கள் ஊருக்கு வந்த மறு விருந்தாட அழைக்க வேண்டும் என்பதே முறைமை.  ஆனால் இவ்வளவு நாள்வரையில் சோதிடர்கள், ‘காலம் சரியாயில்லை,’ என்று சொன்ன காரணத்தால் இது வரை உங்களை அவ்வாறு மறுவிருந்துக்குத் திரிதராட்டிரன் உங்களை அழைக்கவில்லை.  கல்வி கேள்விகளில் சனக மன்னனை ஒத்த திரிதராட்டிரன் இந்த மாதமே குறை ஏதும் இல்லாத மாதம் எனக் கண்டான்.

    வந்து விருந்து களித்திட நும்மை
        வாழ்த்தி யழைத்தன னென்னரு மக்காள்!
    சந்து கண்டேயச் சகுனிசொல் கேட்டுத்
        தன்மை யிழந்த சுயோதன மூடன்
    விந்தை பொருந்திய மண்டபத் தும்மை
        வெய்யபுன் சூது களித்திடச் செய்யும்
    மந்திர மொன்று மனத்திடைக் கொண்டான்
        வன்ம மிதுவும் நுமக்கறி வித்தேன். (125)

    பதம் பிரித்து:

    வந்து விருந்து களித்திட நும்மை
        வாழ்த்தி அழைத்தனன் என்னரு மக்காள்!
    சந்து கண்டே, அச் சகுனி சொல் கேட்டுத்
        தன்மை இழந்த சுயோதன மூடன்
    விந்தை பொருந்திய மண்டபத்து, உம்மை
        வெய்ய புன் சூது களித்திடச் செய்யும்
    மந்திரம் ஒன்று மனத்திடைக் கொண்டான்.
        வன்மம் இதுவும் நுமக்கு அறிவித்தேன்.

    அ. சொற் பொருள்: சந்து: சின்னக் கிளைப் பாதை.  சிறிய முடுக்கு.  இப்படிப்பட்ட அழைப்பாகிய ராஜ பாட்டையில், குறுக்கு வழி ஒன்று கண்டுபிடித்தான்.

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  நேர் பதினொன்று, நிரை பன்னிரண்டு.  மேற்படிப் பாடலில் எல்லா அரையடிகளும் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வொன்றிலும் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    ஆகவே உங்களை அத்தினபுரத்துக்கு வந்து மறுவிருந்தாடி களித்திட வேண்டும் என்று அழைத்தான்.  (எந்தச் செயலானாலும் அதன் ஊடே, தன் காரியத்தைச் சாதிக்க வழி கண்டுபிடிக்கும் சகுனி) இந்த அழைப்பில் ஒரு சந்து கண்டுபிடித்தான்.  முட்டாளாகிய துரியோதனன் அந்த அற்புதமான மண்டபத்தில் உங்களை வெம்மையானதும், கீழானதுமான சூதாட அழைப்பதற்கான யோசனை ஒன்றையும் மனத்தில் கொண்டிருக்கிறான்.  இந்த வன்மத்தையும் உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்.

    என்று விதுர னியம்பத் தருமன்
        எண்ணங் கலங்கிச் சிலசொ லுரைப்பான்
    மன்று புனைந்தது கேட்டு மிச்சூதின்
        வார்த்தையைக் கேட்டுமிங் கென்றன் மனத்தே
    சென்று வருத்தம் விளைகின்ற தையா
        சிந்தையி லையம் விளைகின்ற தையா
    நன்று நமக்கு நினைப்பவ னல்லன்
        நம்ப லரிது சுயோதன றன்னை. (126)

    பதம் பிரித்து:

    என்று விதுரன் இயம்பத் தருமன்
        எண்ணம் கலங்கிச் சிலசொல் உரைப்பான்
    மன்று புனைந்தது கேட்டும், இச்சூதின்
        வார்த்தையைக் கேட்டும் இங்கு என்றன் மனத்தே
    சென்று, வருத்தம் விளைகின்றது ஐயா
        சிந்தையில் ஐயம் விளைகின்றது ஐயா
    நன்று நமக்கு நினைப்பவன் அல்லன்;
        நம்பல் அரிது சுயோதனன் தன்னை.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  நேர் பதினொன்று, நிரை பன்னிரண்டு.  மேற்படிப் பாடலில் எல்லா அரையடிகளும் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வொன்றிலும் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    என்று விதுரன் சொல்லவும், தருமன் கலங்கிய மனத்தோடு சில சொல் சொல்வதானான்.  ‘மண்டபம் கட்டியது செய்தியும், அங்கே நாங்கள் வந்ததும் எங்களை ஆட அழைக்கப் போகின்ற சூதைப் பற்றிய பேச்சும் என் மனத்தில் சென்று வருத்தத்தை உண்டாக்குகின்றன, ஐயா.  என் மனத்தில் சந்தேகம் தோன்றுகிறது.  துரியோதனன் நமக்கு நன்மை நினைப்பவன் அல்லன்.  அவனை நம்ப முடியாது.

    கொல்லக் கருதி சுயோதனன் முன்பு
        குத்திரமான சதிபல செய்தான்
    சொல்லப் படா தவனாலெ மக்கான
        துன்ப மனைத்தையு நீயறி யாயோ?
    வெல்லக் கடவ ரெவரென்ற போதும்
        வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
    தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தச்
        சொல்லுதி நீயொரு சூழ்ச்சியிங் கென்றான். (127)

    பதம் பிரித்து:

    கொல்லக் கருதி சுயோதனன் முன்பு
        குத்திரமான சதி பல செய்தான்
    சொல்லப் படாது அவனால் எமக்கு ஆன
        துன்பம்.  அனைத்தையு நீ அறியாயோ?
    வெல்லக் கடவர் எவர என்ற போதும்
        வேந்தர்கள் சூதை விரும்பிடல் ஆமோ?
    தொல்லைப் படும் என் மனம் தெளிவு எய்தச்
        சொல்லுதி நீஒரு சூழ்ச்சி இங்கு என்றான்.

    அ. சொற் பொருள்:

    குத்திரம் – குரூரம், வஞ்சகம்.

    “கொடிப் பவளக் கிள்ளாய் குத்திரமும் சூதும்
    மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்…..” பாரததேவியின் திருத்தசாங்கம்.

    சூழ்ச்சி: உபாயம். வழி. ஆலோசனை.

    ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
    சூழினும் தான் முந்துறும். (குறள்)

    விதியை விடவும் பெரிய வலிமை கொண்டது வேறெதும் உள்ளதோ? அதனை மாற்ற வேறொரு உபாயத்தை மேற்கொண்டாலும், அந்த வழியிலும் தானே முன்னே போய் நின்று மறிக்கும்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  நேர் பதினொன்று, நிரை பன்னிரண்டு.  மேற்படிப் பாடலில் எல்லா அரையடிகளும் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வொன்றிலும் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.  கட்டளைக் கலிப்பா விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    எங்களைக் கொல்லக் கருதி, துரியோதனன் முன்பு குரூரமான சதிகள் பலவற்றைச் செய்தான்.  அவனால் எமக்கு நேர்ந்த துன்பங்கள் சொல்லில் அடங்காது.  அனைத்தையும் நீ அறிவாய் அல்லவா?  வெல்வதற்கு உரியவர்கள் யாராக இருந்தாலும் சரி; வேந்தர்கள் சூதை விரும்பிடலாமா?  சூதாடி மற்றவரை வெல்ல, அவர்களுடைய செல்வத்தைப் பறிக்க எண்ணலாமா?  துன்பத்தில் ஆழ்கின்ற என் மனம் தெளிவடையுமாறு ஓர் உபாயம் சொல்வாயாக.  

    வேறு

    விதுரனும் சொல்லுகிறான் – இதை
        விடமெனச் சான்றவர் வெகுளுவர் காண்
    சதுரெனக் கொள்ளுவாரோ – இதன்
        தாழ்மை யெலா மவர்க்குரைத்து விட்டேன்
    இதுமிகத் தீதென்றே – அண்ணன்
        எத்தனை சொல்லியு மிளவரசன்
    மதுமிகுத் துண்டவன்போல் – ஒரு
        வார்த்தையை யேபற்றிப் பிதற்றுகிறான். (128)

    பதம் பிரித்து:

    விதுரனும் சொல்லுகிறான் – இதை
        விடம் எனச் சான்றவர் வெகுளுவர் காண்
    சதுர் எனக் கொள்ளுவாரோ – இதன்
        தாழ்மை எலாம் அவர்க்கு உரைத்து விட்டேன்
    இதுமிகத் தீதென்றே – அண்ணன்
        எத்தனை சொல்லியும் இளவரசன்
    மது மிகுத்து உண்டவன் போல் – ஒரு
        வார்த்தையையே பற்றிப் பிதற்றுகிறான்.

    அ. சொற் பொருள்: சதுர்: சாமர்த்தியம் (ability, skill, dexterity)   (எனவே, சாதுர்யம் என்ற சொல்லின் அடிச் சொல்). உபாயம் (means, contrivance)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து.

    ஈ. பாடல் சொல்வது:

    ‘இதை நஞ்சு என்று சான்றோர்கள் கோபித்துத் தள்ளுவார்கள்.  சூதைப் போய் யாராவது (வெற்றியடைவதற்கும், பொருள் சேர்ப்பதற்கும் உண்டான) உபாயமாகக் கொள்வார்களோ?  இது எப்படிப்பட்ட கீழான ஒன்று; இகழ்ச்சியான ஒன்று என்பதை எல்லாம் அவர்களுக்கு நான் எடுத்து உரைத்துவிட்டேன்.  ‘இந்த வழி மிகவும் தீய வழி,’ என்று அண்ணன் எவ்வளவோ சொல்லிவிட்டான்.  இருந்தும் என்ன பயன்?  அளவுக்கு அதிகமாகக் குடித்தவன் சொல்வதைப் போல், சொன்ன வார்த்தையையே சொல்லிச் சொல்லிப் பிதற்றுகிறான் துரியோதனன்.  

    கல்லெனி லிணங்கிவிடும் – அண்ணன்
        காட்டிய நீதிகள் கணக்கிலவாம்.
    புல்லனிங் கவற்றையெலாம் – உளம்
        புகுதவொட் டாதுதன் மடமையினால்
    சல்லியச் சூதினிலே – மனம்
        தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன்.
    சொல்லிய குறிப்பறிந்தே – நலந்
        தோன்றிய வழியினைத் தொடர்க என்றான். (129)

    பதம் பிரித்து:

    கல் எனில் இணங்கிவிடும் – அண்ணன்
        காட்டிய நீதிகள் கணக்கிலவாம்.
    புல்லன் இங்கு அவற்றை எலாம் – உளம்
        புகுத ஒட்டாது தன் மடமையினால்
    சல்லி அச் சூதினிலே – மனம்
        தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன்.
    சொல்லிய குறிப்பறிந்தே – நலந்
        தோன்றிய வழியினைத் தொடர்க என்றான்.

    அ. சொற் பொருள்:

    சல்லி – சிறிய ஓடு (சல்லி என்பதைச் சிறுமை அல்லது சிறிய என்ற பொருளில் பயன்படுத்துகிறார் பாரதியார், “சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான்பிறந்தேன்” குயில் பாட்டு)

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து.

    ஈ. பாடல் சொல்வது:

    ‘அண்ணன் எவ்வளவோ நீதிகளை எடுத்துச் சொல்லிவிட்டான்.  கல் என்றால் கூட அண்ணனுடைய பேச்சுக்கு இணங்கி ஒத்துப் போயிருக்கும்.  இந்தப் புல்லனோ, தன் மடமைக் குணத்தால், அவற்றை எல்லாம் தன் உள்ளத்தில் நுழைய விடாமல் தடுத்துவிட்டான்.  சிறுமை கொண்ட சூதாட்டத்திலேயே மனத் தளர்ச்சி இல்லாமல் நிற்கிறான் என்பதை எடுத்துச் சொன்னேன்.  நான் சொல்லி குறிப்பை உணர்ந்துகொண்டீர்கள் அல்லவா?  எது நல்லது என்று தோன்றுகிறதோ, அந்த வழியை மேற்கொள்ளுங்கள்,’ என்று விதுரன் சொன்னான்.

    தருமனு மிவ்வளவில் – உளத்
        தளர்ச்சியை நீக்கியொ ருறுதிகொண்டே
    பருமங்கொள் குரலினனாய் – மொழி
        பதைத்திட லின்றியிங் கிவையுரைப்பான்
    மருமங்க ளெவைசெயினும் – மதி
        மருண்டவர் விருந்தறம் சிதைத்திடினும்
    கருமம் ஒன்றே உளதாம் – நங்கள்
        கடனதை நெறிப்படி புரிந்திடுவோம். (130)

    பதம் பிரித்து:

    தருமனும் இவ் அளவில் – உளத்
        தளர்ச்சியை நீக்கியொர் உறுதிகொண்டே
    பருமங்கொள் குரலினனாய் – மொழி
        பதைத்திடல் இன்றி இங்கு இவை உரைப்பான்
    மருமங்கள் எவை செயினும் – மதி
        மருண்டு அவர் விருந்து அறம் சிதைத்திடினும்
    கருமம் ஒன்றே உளதாம் – நங்கள்
        கடன்அதை நெறிப்படி புரிந்திடுவோம்.

    அ. சொற் பொருள்: பருமம் – உறுதி

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து.

    ஈ. பாடல் சொல்வது:

    இந்த அளவில் தருமன் தன் உள்ளத் தளர்ச்சியை நீக்கிக்கொண்டான்.  உள்ளத்தில் தோன்றிய உறுதி குரலில் தொனிக்க, பதற்றம் ஏதும் இன்றி சொல்லலானான்.  ‘அவர்கள் நாம் எதிர் பார்க்க முடியாத மர்மமான காரியங்களைச் செய்தாலும் சரி; அல்லது மதி மயங்கிப் போய், விருந்துக்கு அழைத்தவர்களிடம் காட்ட வேண்டிய அறத்தைக் காட்டாமல் அந்த அறத்தையே சிதைத்தாலும் சரி.  நாங்கள் செய்யத் தகுந்த காரியம் ஒன்றே ஒன்றுதான் உள்ளது.  அதைச் செய்வதே எங்கள் கடமை.  செய்ய வேண்டிய நெறிப்படி நாங்கள் அக் கடமையைச் செய்வோம்.

    தந்தையும் வரப்பணித்தான் – சிறு
        தந்தையும் தூதுவந் ததையுரைத்தான்
    சிந்தையொன் றினியில்லை – எது
        சேரினு நலமெனத் தெளிந்து விட்டேன்.
    முந்தையச் சிலைராமன் – செய்த
        முடிவினை நம்மவர் மறப்பதுவோ?
    நொந்தது செயமாட்டோம் – பழ
        நூலினுக் கிணங்கிய நெறிசெலுவோம். (131)

    பதம் பிரித்து:

    தந்தையும் வரப்பணித்தான் – சிறு
        தந்தையும் தூது வந்து அதை உரைத்தான்
    சிந்தை ஒன்று இனி இல்லை – எது
        சேரினு நலம் எனத் தெளிந்து விட்டேன்.
    முந்தை அச் சிலை ராமன் – செய்த
        முடிவினை நம்மவர் மறப்பதுவோ?
    நொந்தது செயமாட்டோம் – பழ
        நூலினுக்கு இணங்கிய நெறி செலுவோம்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து.

    ஈ. பாடல் சொல்வது:

    ‘எங்கள் தந்தையே ஆன திரிதராட்டிரன் எங்களை வரச் சொல்லி ஆணையிட்டிருக்கிறான்.  அந்த ஆணையை எங்கள் சிற்றப்பன் வந்து சொல்லியிருக்கிறான்.  இனிமேல் இதைப் பற்றிச் சிந்திக்க எதுவும் இல்லை.  எது வந்தாலும் சரி; நன்மையே என்று தெளிந்து விட்டேன்.  பெரியவர்களுடைய ஆணையை மீறலாமோ?  முன்பு இராமன் தன் தந்தையின் சொல்லைக் காப்பதற்காக எடுத்த முடிவை நாம் மறக்கலாமோ?  பெரியவர்கள் உள்ளம் நோகும்படியான காரியம் எதையும் செய்ய மாட்டோம்.  தொன்மையான நூல்கள் என்ன சொல்கின்றனவோ, அந்த வழியிலேயே செல்வோம்.

    ஐம்பெரும் குரவோர்தாந் – தரு
        மாணையைக் கடப்பது மறநெறியோ?
    வெம்பரு மதயானை – பரி
        வியன்றே ராளுடன் இருதினத்தில்
    பைம்பொழில் அத்தி நகர் – செலும்
        பயணத்திற் குரியன புரிந்திடுவாய்
    மொய்ம்புடை விறல்வீமா – என
        மொழிந்தன னறநெறி முழுதுணர்ந்தான். (132)

    மொய்ம்பு – தோள்வலி, பலம். (“முப்பதுகோடி முகமுடையாள் – உயிர் – மொய்ம்புற ஒன்றுடையாள்”)

    பதம் பிரித்து:

    ஐம் பெரும் குரவோர்தாம் – தரும்
        ஆணையைக் கடப்பதும் அறநெறியோ?
    வெம் பரு மதயானை – பரி
        வியன் தேர் ஆளுடன் இருதினத்தில்
    பைம்பொழில் அத்தி நகர் – செலும்
        பயணத்திற்கு உரியன புரிந்திடுவாய்
    மொய்ம்பு உடை விறல்வீமா – என
        மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந்தான்.

    அ. சொற் பொருள்:

    ஐம்பெரும் குரவோர் – மன்னருக்கு: அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதர், சாரணர். எல்லோருக்கும்: அன்னை, தந்தை, அண்ணன், ஆசிரியர், தெய்வம்.

    வெம் பரு மத யானை: வெம்மையான (சினம் கொண்ட), பருத்த, மதத்தை உடைய யானை.

    வியன்: பெரிய, சிறப்புடைய

    விறல்: வீரம்; பெருமை.

    மொய்ம்பு: வலிமை

    முப்பது கோடி முகமுடையாள் – உயிர்
        மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
    செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனில்
        சிந்தனை ஒன்றுடையாள்

    (எங்கள் தாய்)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து.

    ஈ. பாடல் சொல்வது:

    ‘ஐம்பெருங் குரவர்களுடைய ஆணைய மீறி நடப்பதும் அறமோ?  வீரமும், வலிமையும் கொண்ட வீமா! இன்னும் இரண்டு நாளில் பெரிய மதயானைப் படை, குதிரைப் படை மிகப் பெரிய தேர்களைக் கொண்ட படை, காலாட் படை எல்லாவற்றையும் ஒன்று திரட்டு.  நாம் பசுமையான சோலைகள் நிறைந்த அத்தினாபுரத்துக்குச் செல்ல வேண்டும்.  அதற்கு உரியன எல்லாவற்றையும் செய்,’ என்று அற நெறியை முற்றும் அறிந்தவனான தருமன் வீமனுக்குக் கட்டளை இட்டான்.  

    வீமனுந் திகைத்து விட்டான் – இள
        விசயனை நோக்கியிங் கிதுசொலு வான்.
    மாமனு மருகனுமா – நமை
        மழித்திடக் கருதியிவ் வழிதொடர்ந் தார்.
    தாமதஞ் செய்வோமோ? – செலத்
        தகுந்தகு மெனவிடி யுறநகைத் தான்.
    கோமகன் உரைப்படியே – படை
        கொண்டுசெல் வோமொரு தடையிலை காண். (133)

    பதம் பிரித்து:

    வீமனும் திகைத்து விட்டான் – இள
        விசயனை நோக்கியிங்கு இதுசொலுவான்.
    மாமனு மருகனுமா – நமை
        மழித்திடக் கருதி இவ்வழி தொடர்ந்தார்.
    தாமதம் செய்வோமோ? – செலத்
        தகும்! தகும்! என இடியுற நகைத்தான்.
    கோமகன் உரைப்படியே – படை
        கொண்டு செல்வோம்; ஒரு தடையிலை காண்.

    அ. சொற் பொருள்: மழித்திட என்ற சொல் இருக்கும் இடத்தில், பாரதி பிரசுரப் பதிப்பு (பாரதி மரணத்துக்குப் பின் அவனுடைய நெருங்கிய உறவினர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரசுராலயம்) ஆசாரம் கருதியோ என்னவோ, ‘அழித்திட’ என்று மாற்றிப் பதிப்பித்திருக்கிறது.  ஆனாலும், பாரதி பதிப்பித்த முதற்பதிப்பில் இருப்பது ‘மழித்திட,’ என்ற வேகம் நிறைந்த சொல்லே.  

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து.

    ஈ. பாடல் சொல்வது:

    தன்னை நோக்கி, பயணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி அண்ணன் சொன்னதும் வீமன் திகைத்துப் போனான்.  தன்னுடைய தம்பியான அர்ஜுனனை நோக்கிச் சொல்வதானான்.  ‘தம்பீ!  மாமனும் மருமகனுமாகச் சேர்ந்துகொண்டு நம்மை மழுங்கச் சிரைப்பதற்கான காரியங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.  (இந்த அண்ணனானால் எல்லாவற்றுக்கும் மண்டையை மண்டையை ஆட்டுகிறது.  இருக்கட்டும். பரவாயில்லை.)  மன்னன் சொன்னதைப் போலவே நான்கு விதமான படைகளையும் திரட்டிக்கொண்டு செல்வோம்.  அதற்கு ஒரு தடையும் இல்லை.  (ஆனால், படையை அலங்காரத்துக்காகக் கூட்டிப் போகப் போவதில்லை.  அது செய்தி.  நன்கு கவனி.)

    நெடுநாட் பகைகண்டாய் – இந்த
        நினைப்பினில் யான்கழித் தனபல நாள்.
    கெடுநாள் வருமளவும் – ஒரு
        கிருமியை அழிப்பவர் உலகிலுண் டோ?
    படுநாட் குறியன்றோ – இந்தப்
        பாதக நினைப்பவர் நினைத்தது தான்.
    விடுநாண் கோத்திடடா – தம்பி
        வில்லினுக் கிரைமிக விளையுத டா. (134)

    பதம் பிரித்து:

    நெடுநாள் பகை கண்டாய் – இந்த
        நினைப்பினில் யான் கழித்தன பல நாள்.
    கெடுநாள் வருமளவும் – ஒரு
        கிருமியை அழிப்பவர் உலகில் உண்டோ?
    படுநாள்ட் குறி அன்றோ – இந்தப்
        பாதக நினைப்பவர் நினைத்ததுதான்.
    விடுநாண் கோத்திடடா – தம்பி
        வில்லினுக்கு இரை மிக விளையுதடா.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து.

    ஈ. பாடல் சொல்வது:

    இது நெடு நாளாக என் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும் பகையடா, தம்பி!  இந்த நினைப்பிலேயே நான் பல நாள் கழித்திருக்கிறேன்.  இதையே எண்ணி எண்ணித் துன்புற்றிருக்கிறேன்.  கிருமியை, கிருமியாக இருக்கும்போதே அழித்துவிட வேண்டும்.  அதை விட்டுவிட்டு, அதை நன்றாக வளரச் செய்து, தனக்குக் கேடு வரும் நாள் என்றோ, அன்று வரையிலும் ஒரு கிருமியை அழிக்கின்ற செயலில் ஈடுபட்டிருப்பவர் (ஈடுபடுவதாக நினைத்துக்கொள்பவர்) உலகில் யாராவது உண்டா?  நம்மைச் சூதாடி வெல்ல வேண்டும் என்று பாதகச் சிந்தனை கொண்டவர்கள் நினைப்பது எதைக் காட்டுகிறது?  அவர்களுக்குக் கேடுகாலம் நெருங்கிவிட்டது என்பதை.  தம்பி!  வில்லைக் கையில் எடு.  சும்மா இல்லை.  நாணை இழுத்துக் கட்டு.  உன் வில்லுக்கு மிகப் பல நாளாகப் பசி எடுத்திருக்கிறது இல்லையா?  அதற்கு மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது.

    தருமபுத்திரன் இருக்கிறானே, நம்ம அண்ணன், அவன் சரியான மிதவாதப் போக்கு உள்ளவன்.  உடனுக்கு உடனே நறுக்கென்று ஒரு காரியத்தைப் பண்ண மாட்டான்.  தள்ளித் தள்ளிப் போடுவான்.  அவன்  சொல்வது போலவே படை எடுத்துச் செல்வோம்.  சும்மா அலங்காரத்துக்கு இல்லை.  போட்டுத் தாக்கிடலாம்.  நீயும் வில்லில் நாணை இழுத்துக் கட்டிக்கொண்டு தயாராகு.  (போர் நோக்கம் இல்லாத சமயங்களில், வில்லிலிருந்து நாணைக் கழற்றி வைத்துவிட வேண்டும் என்பது வழக்கம்.)

    Transactional Analysisகாரர்கள் இப்படிப் பேசுவதை ear-shotting என்று சொல்வார்கள்.  ஒருவரிடம் சொல்ல வேண்டியதை, அவரிடம் சொல்லாமல், அவருக்குக் காது கேட்கும் தூரத்தில் (within earshot) இன்னொருவரிடம் சொல்வது.  அண்ணனை எதிர்த்துப் பேசாத மாதிரியும் ஆயிற்று.  தன் கருத்தைச் சொல்லவும் சொல்லியாயிற்று.

    போரிடச் செல்வமடா – மகன்
        புலைமையும் தந்தையின் புலமைக ளும்
    யாரிடம் அவிழ்க்கின்றார் – இதை
        எத்தனை நாள்வரை பொறுத்திருப் போம்?
    பாரிடத் திவரொடுநாம் – எனப்
        பகுதியிவ் விரண்டிற்குங் காலமொன் றில்
    நேரிட வாழ்வுண்டோ – இரு
        நெருப்பினுக் கிடையினில் ஒருவிற கோ? (135)

    பதம் பிரித்து:

    போரிடச் செல்வமடா – மகன்
        புலைமையும் தந்தையின் புலமைகளும்
    யாரிடம் அவிழ்க்கின்றார்? – இதை
        எத்தனை நாள் வரை பொறுத்து இருப்போம்?
    பாரிடத்து இவரொடு நாம் – எனப்
        பகுதி இவ் இரண்டிற்கும், காலம் ஒன்றில்,
    நேரிட வாழ்வுண்டோ – இரு
        நெருப்பினுக்கு இடையினில் ஒருவிறகோ?

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    படை திரட்டிக்கொண்டு போரிடச் செல்வோமடா, விஜயா!  யார் கிட்ட வந்து இவங்களுடைய சாமர்த்தியத்தைக் காட்டறாங்க? அப்பனுடைய புலமை ஒருபக்கம் என்றால் பிள்ளையுடைய புலைமை (சிறுமை) இன்னொரு பக்கம்.  என்னவோ ரொம்ப நல்லவங்க மாதிரி வந்து பேசறாங்க.  இன்னும் எத்தனை நாளுக்கு இந்தச் சின்னத்தனங்களைப் பொறுத்துக்கொண்டிருப்பது நாம்?   இந்த பூமியில் அந்தப் பகுதியில் அவர்களும், இந்தப் பகுதியில் நாம் என்றும் ஒரே நேரத்தில், நேராக வாழ்வது என்பது என்றேனும் நடக்கக் கூடிய காரியமா?  இரண்டு பக்கங்களிலும் பற்றி எரியும் விறகைப் போன்ற சூழல் அல்லவா இது!   இன்னும் செயலற்று நிற்க முடியுமா!

    வேறு

    வீம னுரைத்தது போலவே – உளம்
        வெம்பி நெடுவில் விசையனு – மங்குக்
    காமனுஞ் சாமனு மொப்பவே – நின்ற
        காளை யிளைஞ ரிருவரும் – செய்ய
    தாமரைக் கண்ணன் யுதிட்டிரன் – சொல்லைத்
        தட்டிப் பணிவொடு பேசினார் – தவ
    நேமந் தவறலு முண்டுகாண் – நரர்
        நெஞ்சங் கொதித்திடு போதிலே. (136)

    பதம் பிரித்து:

    வீமன் உரைத்தது போலவே – உளம்
        வெம்பி நெடுவில் விசையனும் – அங்குக்
    காமனும் சாமனும் ஒப்பவே – நின்ற
        காளை இளைஞர் இருவரும் – செய்ய
    தாமரைக் கண்ணன் யுதிட்டிரன் – சொல்லைத்
        தட்டிப் பணிவொடு பேசினார் – தவ
    நேமந் தவறலும் உண்டுகாண் – நரர்
        நெஞ்சம் கொதித்திடு போதிலே.

    அ. சொற் பொருள்: செய்ய: சிவந்த.  காமன், சாமன்: இருவரும் சகோதரர்கள்.  காமன் – மன்மதன்.  சாமன் – மன்மதனுடைய தம்பி.

    காமர் நடக்கு நடைகாண் கவர்கணைச்
    சாமனார் தம்முள் செலவு காண்க….
    (கலித்தொகை – மருதக் கலி – 94ஆம் பாடல்)

    ‘(நாம் முயங்குவதற்குக் காரணமான) கணையை உடையவனும், சாமனின் அண்ணனுமான மன்மதன் எப்படி நடப்பான் தெரியுமா? இதோ இப்படி,’ என்று நடந்து காட்டினான்…

    நேமம்: நியமம்.  முறைமை

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    வீமன் சொன்னதைப் போலவே பெரிய வில்லை உடைய விஜயனும் பேசினான்; அங்கே மன்மதனையும், அவனுடைய தம்பியையும் ஒத்து நின்ற நகுல, சகதேவர்களும் அதேபோல் பேசினர்.  ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் மற்ற மூவரும் வீமனைப் போல் கொதிப்புற்றுப் பேசவில்லை.  சிவந்த தாமரை போன்ற கண்களை உடைய யுதிட்டிரனுடைய சொற்களை மறுத்துப் பேசினர்; ஆனால் பணிவோடு பேசினர்.  மனிதர்களுடைய நெஞ்சம் கொதிப்புறுகின்ற சமயத்தில், பெரியவர்கள் சொல்லைத் தட்டக் கூடாது என்பன போன்ற முறைமைகள் தவறிப் போகும்தான்.

    அன்பும் பணிவுமு ருக்கொண்டார் – அணு
        வாயினும் தன்சொல் வழாதவர் – அங்கு
    வன்பு மொழிசொலக் கேட்டனன் – அற
        மன்னவன் புன்னகை பூத்தனன் – அட
    முன்பு சுயோதனன் செய்ததும் – இன்று
        மூண்டிருக்குங் கொடுங்கோலமு – மிதன்
    பின்பு விளைவதுந் தேர்ந்துள்ளே – னெனைப்
        பித்தனென் றெண்ணி யுரைத்திட்டீர். (137)

    பதம் பிரித்து:

    அன்பும் பணிவும் உருக்கொண்டார் – அணு
        ஆயினும் தன்சொல் வழாதவர் – அங்கு
    வன்பு மொழி சொலக் கேட்டனன் – அற
        மன்னவன் புன்னகை பூத்தனன் – அட
    முன்பு சுயோதனன் செய்ததும் – இன்று
        மூண்டிருக்கும் கொடுங்கோலமும் – இதன்
    பின்பு விளைவதும் தேர்ந்து உள்ளேன் – எனைப்
        பித்தன் என்று எண்ணி உரைத்திட்டீர்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நான்கடி எண்சீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    அன்பும், பணிவுமே உருவெடுத்து வந்ததைப் போன்றவர்களும், தன் சொல்லை அணுவளவும் மீறாதவர்களுமான தன் நான்கு சகோதரர்களும் அங்கே தன் சொல்லுக்கு எதிர்ச்சொல் பேசக் கேட்ட தர்மபுத்திரன் புன்னகை பூத்தான்.  ‘அட!  துரியோதனன் முன்பு நமக்குச் செய்த தீமைகளை நான் இன்னமும் மறந்தேன் அல்லன்.  இன்று என்ன கொடுங்கோலம் விளைந்திருக்கிறது என்பதையும் அறியாமல் இல்லை.  இதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதையும் உணராமல் இல்லை.  என்னைப் பைத்தியக்காரன் என்று நினைத்தீர்களா?  அப்படித்தானே எண்ணிப் பேசுகிறீர்கள்?’ என்று அவர்களைக் கேட்டான்.

    கைப்பிடி கொண்டு சுழற்றுவோன் – தன்
        கணக்கில்சு ழன்றிடுஞ் சக்கரம் – அது
    தப்பி மிகையுங் குறையுமாச் – சுற்றுந்
        தன்மை அதற்குள தாகுமோ? – இதை
    ஒப்பிட லாகும் புவியின்மேல் – என்று
        முள்ள உயிர்களின் வாழ்விற்கே – ஒரு
    செப்பிடு வித்தையைப் போலவே – புவிச்
        செய்திகள் தோன்றிடு மாயினும் (138)

    பதம் பிரித்து:

    கைப்பிடி கொண்டு சுழற்றுவோன் – தன்
        கணக்கில் சுழன்றிடும் சக்கரம் – அது
    தப்பி மிகையும் குறையுமாச் – சுற்றும்
        தன்மை அதற்குள தாகுமோ? – இதை
    ஒப்பிட லாகும் புவியின்மேல் – என்றும்
        உள்ள உயிர்களின் வாழ்விற்கே – ஒரு
    செப்பிடு வித்தையைப் போலவே – புவிச்
        செய்திகள் தோன்றிடு மாயினும் (138)

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நான்கடி எண்சீர்ச் சிந்து.  பொருள் நான்காவது அடியில் முற்றுப் பெறவில்லை.  எனவே இது குளகச் செய்யுள்.

    ஈ. பாடல் சொல்வது:

    சக்கரத்தின் கைப்பிடியைப் பற்றியவாறு ஒருவன் சுழற்றுகிறான் பாருங்கள், அந்த வேகத்துக்கு ஒத்துதான் சக்கரம் சுழலும்.  அவ்வாறன்றி, அவன் சுற்றும் வேகத்துக்கு அதிகமாகவோ, குறைவாகவோ அந்தச் சக்கரத்தால் சுற்ற முடியுமா?  இதை பூமியல் நாம் வாழும் வாழ்க்கையோடு ஒப்பிடலாகும்.  எதிர்பாராமல் மாயத்தால், செப்பிடு வித்தையால் நடப்பதைப் போல் நமக்குத் தோன்றுகிறது.  என்றாலும் –

    ‘இவ்வுலகத்துச் செய்திகள் மேலளவாகப் பார்க்கும்போது முன்பின் தொடர்பில்லாதனவாகித் திடும் திடுமென்று புறப்படுவன போலத் தோன்றுகின்றன.  ஆனால், ஆழ்ந்து நோக்குமிடத்து இவை  ‘காரண காரியத் தொடர்’ என்பதோர் தவிர்க்க முடியாத விதியால் கட்டுப்பட்டிருக்கின்றன.’  பாரதியின் குறிப்பு.

    இங்கிவை யாவும் தவறிலா – விதி
        யேற்று நடக்குஞ் செயல்களாம் – முடி
    வெங்கணு மின்றி எவற்றினு – என்று
        மேறியிடையின்றிச் செல்வதா – மொரு
    சங்கிலி யொக்கும் விதிகண்டீர் – வெறும்
        சாத்திர மஅன்றிது சத்தியம் – நின்று
    மங்கியோர் நாளில் அழிவதா – நங்கள்
        வாழ்க்கை யிதனைக் கடந்ததோ? (139)

    பதம் பிரித்து:

    இங்கு இவை யாவும் தவறு இலா – விதி
        ஏற்று நடக்கும் செயல்களாம் – முடிவு
    எங்கணும் இன்றி எவற்றினும் – என்றும்
        ஏறி இடை இன்றிச் செல்வதாம் – ஒரு
    சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் – வெறும்
        சாத்திரம் அன்று; இது சத்தியம் – நின்று
    மங்கி ஓர் நாளில் அழிவதா – நங்கள்
        வாழ்க்கை இதனைக் கடந்ததோ?

    அ. சொற் பொருள்:

    இடையின்றி: நிறுத்துதல் இன்றி; தடை இன்றி; தொடர்பு விட்டுப் போகாமல். தொடர்ந்து.
    அழிவதா: அழிவதாம் என்று ஒரு மகரத்தை வருவித்துக் கொள்ளவேண்டும்.  இல்லாவிட்டால் ‘அழிவதா?’ என்று கேட்பதைப் போல் மயக்கத்தைத் தரும்.  மகரம் கெட்டதற்கான விதியைப் பாடல் மூன்றில் கண்டோம்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நான்கடி எண்சீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    செப்பிடுவித்தை போல் நம் வாழ்வில் நடை பெறும் நிகழச்சிகள் தோன்றினாலும், இவை எல்லாம் கொஞ்சமும் தவறாமல் வரிசைக் கிரமமாக நடைபெறும் விதியை ஏற்று நடக்கின்ற செயல்கள்தாம்.  முடிவு என்று ஒன்று இல்லாமல், தொடர்ந்து இவை நடந்துகொண்டே இருக்கின்றன.  அப்படித் தொடர்ந்து செல்கின்ற சங்கிலி ஒன்றைப் போன்றது (இந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும்) விதி.  இது ஏதோ வெறும் (அர்த்தமில்லாத) சாத்திரக் கருத்து என்றெண்ண வேண்டாம்.  சத்தியமான வார்த்தை.  உலக நிகழ்வுகள் இவ்வாறு கட்டுண்டிருக்கும்போது, ஒரு நாளில் தோன்றி, ஒரு நாள் நின்று, மங்கிப் போய் ஒரு நாள் அழியக் கூடிய நம் வாழ்க்கை இதற்கு அப்பாற்பட்டதா?  இதுவும் அந்த விதிக்கு உட்பட்டதுதான்.

    தோன்றிய ழிவது வாழ்க்கைதா – னிங்குத்
        துன்பத்தொ டின்பம் வெறுமையா – மிவை
    மூன்றி லெதுவரு மாயினும் – களி
        மூழ்கிந டத்தல் முறைகண்டீர் – நெஞ்சி
    லூன்றிய கொள்கை பிழைப்பரோ – துன்ப
        முற்றிடு மென்பதோ ரச்சத்தால் – விதி
    போன்று நடக்கும் உலகென்றே – கடன்
        போற்றியொ ழுகுவர் சான்றவர். (140)

    பதம் பிரித்து:

    தோன்றி அழிவது வாழ்க்கைதான் – இங்குத்
        துன்பத்தொடு, இன்பம், வெறுமையாம் – இவை
    மூன்றில் எதுவரும் ஆயினும் – களி
        மூழ்கி நடத்தல் முறை கண்டீர் – நெஞ்சில்
    ஊன்றிய கொள்கை பிழைப்பரோ – துன்பம்
        உற்றிடும் என்பதோர் அச்சத்தால் – விதி
    போன்று நடக்கும் உலகு என்றே – கடன்
        போற்றி ஒழுகுவர் சான்றவர்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நான்கடி எண்சீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    வாழ்க்கை தோன்றும்; அழியும்.  அவ்வாறிருக்கும் போது, இங்கே, துன்பம், இன்பம், இவை இரண்டும் அற்ற வெறுமையான நிலை என்று மூன்று நிலைகளில் எது வந்தாலும், எப்போதும் இன்பத்தோடு அவற்றை ஏற்று நடத்தலே முறை.  துன்பம் விளையும் என்ற அச்சத்தால், கொண்ட கொள்கையை விட்டுவிடலாமா?  ‘விதிப்படி எல்லாம் நடக்கும்,’ என்று எண்ணி, தாம் செய்ய வேண்டிய கடமைகளைப் போற்றி நடப்பார்கள் சான்றோர் பெருமக்கள்.

    தன் கவிதைகள் அனைத்தையும் (பெரும்பாலும்) மனப்பாடமாகச் சொல்லத் தெரிந்தவர்கள் அவ்வப்போது, ஓரிடத்தில் எழுதியதைப் பிறிதோர் இடத்திலும் எழுதிவிடுவார்கள்.  அனைத்தையும் மனத்திலேயே நிறுத்திக் கொள்வதால் இப்படி நேருவதுண்டு.  பாரதியும் இந்த விதிக்கு விலக்கில்லை.  இந்தப் பாடலின் முதல் இரண்டடிகள் உயிர் பெற்ற தமிழர் பாட்டில் {இனியொரு தொல்லையும் இல்லை என்று தொடங்கும் பாடல்}, திரும்பவும் பின்வருமாறு பயிலுகின்றன.

    தோன்றி அழிவது வாழ்க்கை – இதில்
        துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்
    மூன்றில் எதுவருமேனும் – களி
        மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.

    சேற்றி  லுழலும் புழுவிற்கும் – புவிச்
        செல்வ  முடைய வரசர்க்கும் – பிச்சை
    யேற்றுடல் காத்திடு மேழைக்கு – முயி
        ரெத்தனை யுண்டவை யாவிற்கும் – நித்த
    மாற்றுதற் குள்ள கடமைதான் – முன்வந்
        தவ்வக் கணந்தொறும் நிற்குமா – மது
    தோற்றும் போதிற் புரிகுவார் – பல
        சூழ்ந்து கடமை அழிப்பரோ? (141)

    பதம் பிரித்து:

    சேற்றில் உழலும் புழுவிற்கும் – புவிச்
        செல்வம் உடைய அரசர்க்கும் – பிச்சை
    ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும் – உயிர்
        எத்தனை உண்டு அவை யாவிற்கும் – நித்தம்
    ஆற்றுதற்கு உள்ள கடமைதான் – முன்வந்து
        அவ்வக் கணந்தோறும் நிற்குமாம் – அது
    தோற்றும் போதிற் புரிகுவார் – பல
        சூழ்ந்து கடமை அழிப்பரோ? (141)

    அ. சொற் பொருள்: சூழ்ந்து: யோசித்து; ஆலோசித்து.   

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    தருமன் தன் சகோதரர்களிடம் நிகழ்த்தும் உரையைத் தொடர்கின்றான்.  ‘உலகத்தில் பிறந்த எந்த உயிராயினும் சரி; அது சேற்றில் கிடந்து உழலக் கூடிய புழுவோ, உலகம் முழுவதையும் ஆளக் கூடிய அரசரோ, அல்லது பிச்சைக்காரனோ, யாராயிருப்பினும் அவரவர் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. அவை கணந்தோறும் வந்து எதிரில் நிற்கும்.  (செய்தே தீர வேண்டிய) கடமை என்பது எந்தக் கணத்தில் தோன்றுகிறதோ, அதே கணத்தில் அதனைச் செய்து முடிக்க வேண்டுமே அல்லாமல், (புத்தியுள்ளவன், அறத்துக்குக் கட்டுப்பட்டவன்) ‘இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா’ என்றெல்லாம் ஆலோசித்துக் கொண்டு நின்று, தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் தவறுவார்களா?

    யாவர்க் கும்பொது வாயினுஞ் – சிறப்
        பென்ப ரரசர் குலத்திற்கே – யுயர்
    தேவரை யொப்பமுன் னோர்தமைத் – தங்கள்
        சிந்தையிற் கொண்டு பணிகுதல் – தந்தை
    யேவலை மைந்தர்பு ரிதற்கே – வில்
        லிராமன் கதையையுங் காட்டினேன் – புவிக்
    காவலர் தம்மில்சி றந்தநீர் – இன்று
        கர்மம் பிழைத்திடு வீர்கொலோ? (142)

    பதம் பிரித்து:

    யாவர்க்கும் பொது ஆயினும் – சிறப்பு
        என்பர் அரசர் குலத்திற்கே – உயர்
    தேவரை ஒப்ப முன்னோர் தமைத் – தங்கள்
        சிந்தையில் கொண்டு பணிகுதல் – தந்தை
    ஏவலை மைந்தர் புரிதற்கே – வில்
        இராமன் கதையையும் காட்டினேன் – புவிக்
    காவலர் தம்மில் சிறந்த நீர் – இன்று
        கர்மம் பிழைத்திடுவீர் கொலோ?

    அ. சொற் பொருள்: கர்மம்: செயல்
    பிழைத்திடுதல்: தவறுதல்.  

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எண்சீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    முன்னோர்கள் என்போர் தேவர்களை ஒப்பவர்.  அவர்களைச் சிந்தையில் கொண்டு பணிவது யாவர்க்கும் பொதுவானதே.  எனினும், அரசர் குலத்தைச் சேர்ந்தவர் மற்றவர்களைக் காட்டிலும் இந்த அறத்தை அதிகம் (திடனுடன்) மேற்கொண்டு ஒழுக வேண்டும்.  தந்தை சொல்லை மைந்தன் எப்படிக் கேட்டு, அப்படியே ஒழுக வேண்டும் என்பதனை விளக்குவதற்காகத்தான் இராமனுடைய கதையை உங்களுக்குச் சொன்னேன்.  மன்னவர்களில் சிறந்த நீங்கள் இன்று செய்ய வேண்டிய காரியத்தில், கடமையில், தவறுவீர்களோ?

    வேறு

    என்றினைய நீதிபல தரும ராசன்
        எடுத்துரைப்ப இளைஞர்களுந் தங்கை கூப்பி
    குன்றினிலே யேற்றிவைத்த விளக்கைப் போல
        குவலயத்திற் கறங்காட்டத் தோன்றி னாய்நீ.
    வென்றிபெறுந் திருவடியாய் நினது சொல்லை
        மீறியொரு செயலுண்டோ? ஆண்டா னாணை
    அன்றியடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ?
        ஐயனே  பாண்டவர்த மாவி நீயே. (143)

    பதம் பிரித்து:

    என்று இனைய நீதி பல தருமராசன்
        எடுத்து உரைப்ப இளைஞர்களும் தம் கை கூப்பி
    குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போல
        குவலயத்திற்கு அறங்காட்டத் தோன்றினாய் நீ.
    வென்றிபெறும் திருவடியாய் நினது சொல்லை
        மீறி ஒரு செயலுண்டோ? ஆண்டான் ஆணை
    அன்றி அடியார் தமக்குக் கடன் வேறுண்டோ?
        ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே.

    அ. சொற் பொருள்: குவலயம்: உலகம்.

    ஆ. இலக்கணம்: வென்றி: வெற்றி என்பதன் மெலித்தல் விகாரம்.

    இ. யாப்பு:

    எண் சீர் விருத்தம்.  நான்காவது அடியில் இரண்டாவது அரையடியில் உள்ள ‘ஐயனே’ என்ற சீரில் ஓரசை குறைகிறது.  மிக எளிதான இந்தச் சந்தத்தில் பாரதி குறைவிட்டிருப்பான் என்று தோன்றவில்லை.  ‘ஐயனேபாண் டவர்தம்மின் ஆவி நீயே,’ என்பது போன்று ஏதாவது இருந்திருக்கலாமோ என்று ஊகிக்க இடமிருக்கிறது.

    ஈ. பாடல் சொல்வது:

    என்று இப்படிப்பட்ட பல நீதிகளைத் தருமன் எடுத்துச் சொன்னான்.  நான்கு தம்பியர்களும்  கைகூப்பிய வண்ணம் அவற்றைக் கேட்டுக்கொண்டார்கள்.  ‘அண்ணா!  குன்றில் இட்ட விளக்கைப் போல உலகம் முழுவதற்கும் அறத்தின் ஒளி பரவுவதற்காகத் தோன்றியவன் நீ.  எப்போதும் வெற்றியே பெறுகின்ற திருவடிகளை உடையவனே!  உன் சொல்லை மீறி நாங்கள் எந்தச் செயலையாவது செய்வோமோ?  நீ ஆண்டான்; நாங்கள் உன் அடிமையல்லரா?  உன் சொல்லைக் கேட்டு நடப்பதை விடவும் எங்களுக்கு வேறென்ன கடமை இருக்கிறது?  நீயல்லவா எங்களுடைய உயிர்?’ என்று அண்ணனிடத்தில் சொன்னார்கள்.

    துன்பமுறு மெஎமக்கென்றே யெண்ணி நின்வாய்ச்
        சொல்லைமறுத் துரைத்தோமா நின்பா லுள்ள
    அன்புமிகை யாலன்றோ திருவு ளத்தி
        னாக்கினையை யெதிர்த்துரைத்தோ மறிவில் லாமல்!
    மன்பதையி னுளச்செயல்கள் தெளியக் காணும்
        மன்னவனே மற்றிதுநீ அறியா தொன்றோ?
    வன்புமொழி பொறுத்தருள்வாய் வாழி நின்சொல்
        வழிச்செல்வோ மெனக்கூறி வணங்கிச் சென்றார். (144)

    பதம் பிரித்து:

    துன்பம் உறும் எமக்கு என்றே எண்ணி, நின்வாய்ச்
        சொல்லை மறுத்து உரைத்தோமா? நின்பால் உள்ள
    அன்பு மிகையால் அன்றோ திருவுளத்தின்
        ஆக்கினையை எதிர்த்து உரைத்தோம் அறிவில்லாமல்!
    மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும்
        மன்னவனே மற்று இது நீ அறியாத ஒன்றோ?
    வன்பு மொழி பொறுத்து அருள்வாய் வாழி! நின் சொல்
        வழிச்செல்வோம் எனக் கூறி வணங்கிச் சென்றார்.

    அ. சொற் பொருள்: ஆக்கினை: ஆக்ஞை, ஆணை.
    மன்பதை: மக்கள் பரப்பு; மக்கள்.
    வன்பு: கடுமை

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    எண் சீர் விருத்தம்

    ஈ. பாடல் சொல்வது:

    ‘அண்ணா! உன் பேச்சைக் கேட்டு நடப்பதால் ‘எங்களுக்குத் துன்பம் வருமே,’ என்றெண்ணியா உன் பேச்சை மறுத்துப் பேசினோம்?  நாங்கள் அவ்வாறு பேசியது உன் மீது நாங்கள் வைத்துள்ள அன்பினால் அன்றோ?  அன்பு மிகுதியால் அன்றோ நாங்கள் உன் திரு உள்ளத்திலிருந்து எழுந்த ஆணையை எதிர்த்து, அறிவில்லாமல் (அன்பு மிகுதியால் மட்டும்) பேசினோம்!  மக்களுடைய உள்ளத்து இயல்பு நன்கு அறிந்த உனக்கு இது தெரியாதா என்ன?  நாங்கள் உன்னை எதிர்த்துச் சொன்னதான வன்பு மொழியைப் பொறுத்துக் கொள்வாய்,’ என்று கேட்டுக்கொண்டு, அவனிடமிருந்து பிரிந்து (கிளம்புதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகச் சென்றனர்.)

    ஆங்கதன்பின் மூன்றாநா ளிளைஞ ரோடும்
        அணியிழையப் பாஞ்சாலர் விளக்கி னோடும்
    பாங்கினுறு பரிசனங்கள் பலவி னோடும்
        படையினொடும் இசையினொடும் பயண மாகித்
    தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
        திருநகர்விட் டகல்கின்றான் தீயோ ரூர்க்கே!
    நீங்கியகன் றிடலாகுந் தன்மை உண்டோ
        நெடுங்கரத்து விதிகாட்டு நெறியி னின்றே! (145)

    பதம் பிரித்து:

    ஆங்கு அதன்பின் மூன்றா நாள் இளைஞரோடும்
        அணியிழை அப் பாஞ்சாலர் விளக்கினோடும்
    பாங்கின் உறு பரிசனங்கள் பலவினோடும்
        படையினொடும் இசையினொடும் பயணமாகித்
    தீங்கு அதனைக் கருதாத தருமக் கோமான்
        திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே!
    நீங்கி அகன்றிடலாகும் தன்மை உண்டோ,
        நெடுங்கரத்து விதிகாட்டு நெறியி னின்றே! (145)

    அ. சொற் பொருள்:

    பாங்கு – பக்கம்.  

    பரிசனம்: ஏவல் செய்வோர்.  (படை, retinue என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டென்ற போதிலும், ‘படையினொடும், இசையினொடும்,’ என்று அடுத்தபடியாக வருவதால், இங்கே பொருந்துவது ‘ஏவல் செய்வோர்’ என்ற பொருளே.

    அணியிழை: இழை (ஆபரணங்களை) அணிந்த

    ஆ. இலக்கணம்: மூன்றா நாள், விதிகாட்டு நெறி ஆகிய இடங்களில் மகரம் (மூன்றாம் நாள், விதிகாட்டும் நெறி) கெட்டிருப்பதன் காரணம் பாடல் எண் மூன்றில் விளக்கப்பட்டது.

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம்

    ஈ. பாடல் சொல்வது:

    அவ்வாறு தருமன் உரைத்ததற்கு மூன்று நாள் கழித்து, தருமன், தம்பிமார், பாஞ்சால தேசத்தைச் சேர்ந்த, திருவிளக்கைப் போன்றவளான பாஞ்சாலி ஆகியோரை உடனழைத்துக் கொண்டு, ஏவல் செய்வோரும், படையினரும், நல்லிசை முழங்கப் பயணமானான்.  யாருக்கும் எந்தத் தீங்கையும் கருததாவன் தருமன்.  அவன் தன்னுடைய திரு நகரத்தை விட்டு, தீயோர்களாகிய துரியோதனாதியர் வாழும் அத்தினாபுரத்துக்குச் சென்றான்.  விதியின் நீண்ட கரம் காட்டுகின்ற வழியை விட்டு நீங்கி, தூரப் போகும் தன்மை யாருக்கேனும் உண்டோ?  

    நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
        நழுவிவிழுஞ் சிற்றெறும்பால் யானை சாகும்.
    வரிவகுத்த வுடற்புலியைப் புழுவுங் கொல்லும்
        வருங்கால முணர்வோரு மயங்கி நிற்பார்.
    கிரிவகுத்த வோடையிலே மிதந்து செல்லும்
        கீழ்மேலா மேல்கீழாங் கிழக்கு மேற்காம்.
    புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மை
        போற்றிடுவர் விதிவகுத்த போழ்தின் அன்றே. (146)

    பதம் பிரித்து:

    நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
        நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும்.
    வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும்
        வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்.
    கிரி, வகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்
        கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்கு மேற்காம்.
    புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மை
        போற்றிடுவர் விதிவகுத்த போழ்தின் அன்றே.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம்

    ஈ. பாடல் சொல்வது:

    விதி ஒன்றைத் தீர்மானித்துவிட்டால், அதற்கு எதிராக யார் என்ன செய்ய முடியும்!  நரி ஒன்று வலை விரித்து வைத்திருக்கிறது என்பதை நன்றாக அறிந்துகொண்டே, சிங்கம் அந்த வலையில் நழுவி விழும்.  (இப்படி ஒன்று இருக்கிறது என்று தெரிந்திருந்த போதிலும், தன் கட்டுப்பாடு அற்ற நிலையில், ‘நழுவி’ விழும்.)  வரிகள் நிறைந்த உடல்கொண்ட புலியை, ஒரு புழு கூட கொன்று போடும்.  வருங்காலத்தில் விளையும் விளைவுகளை உணர்ந்தவர் கூட மயக்கம் கொண்டு, அறிவுத் தடுமாற்றம் கொண்டு நிற்பார்கள்.  சிறிய ஒரு ஓடையிலே மலை கூட மிதுந்து செல்லும்.  கீழே இருப்பது மேலே வரும்.  மேலே இருப்பது கீழே போகும்.  கிழக்கில் இருப்பது மேற்கே செல்லும்.  அந்தணர்கள் புலையர்களைப் போற்றி நிற்பார்கள்.  விதி வகுத்த வழியில் எதுவும் நடக்கும்.  

    மாலைப் போதாதலுமே மன்னன் சேனை
        வழியிடையோர் பூம்பொழிலி னமர்ந்த காலை
    சேலைப்போல் விழியாளை பார்த்தன் கொண்டு
        சென்றாங்கோர் தனியிடத்தே பசும்புல் மேட்டில்
    மேலைப்போம் பரிதியினைத் தொழுது கண்டான்.
        மெல்லியலு மவன்தொடைமேல் மெல்லச் சாய்ந்து
    பாலைப்போல் மொழிபிதற்ற அவளை நோக்கி
        பார்த்தனுமப் பரிதியெழில் விளக்கு கின்றான். (147)

    பதம் பிரித்து:

    மாலைப் போது ஆதலுமே மன்னன் சேனை
        வழியிடை, ஓர் பூம்பொழிலின் அமர்ந்த காலை
    சேலைப் போல் விழியாளை பார்த்தன் கொண்டு
        சென்று ஆங்கோர் தனி இடத்தே பசும்புல் மேட்டில்
    மேலைப் போம் பரிதியினைத் தொழுது கண்டான்.
        மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்லச் சாய்ந்து
    பாலைப் போல் மொழி பிதற்ற அவளை நோக்கி
        பார்த்தனும் அப் பரிதியெழில் விளக்கு கின்றான்.

    அ. சொற் பொருள்: மேலைப்போம்: மேற்கு திசையில் போகும்

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம்.

    ஈ. பாடல் சொல்வது:

    பயணத்தின் போது மாலைப் போது ஆனது.  மன்னனும், சேனையும், வழியில் ஒரு பூஞ்சோலையில் தங்கினார்கள்.  மீன் போன்ற விழி கொண்ட பாஞ்சாலியும், பார்த்தனும் தனியாகச் சென்றார்கள்.  அங்கே ஒரு பசிய புல் வெளியில், மேட்டில் இருவரும் அமர்ந்தனர்.  மேற்கு திசையில் விழுந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தன் தொழுதான்.  அவன் மடியில் சாய்ந்தவாறு பாஞ்சாலி மழலை பேசி மயங்க, பார்த்தன் அவளுக்கு அஸ்தமன காலச் சூரியனின் அழகைப் பற்றிப் பேசலானான்.

    பாரடியோ வானத்திற் புதுமை யெல்லாம்
        பண்மொழீ! கணந்தோறு மாறி மாறி
    ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
        யுவகையுற நவநவமாத் தோன்றுங் காட்சி.
    யாரடியிங் கிவைபோலப் புவியின் மீதே
        எண்ணரிய பொருள்கொடுத்து மியற்ற வல்லார்?
    சீரடியாற் பழவேத முனிவர் போற்றும்
        செழுஞ்சோதி வனப்பையெலாஞ் சேரக் காண்பாய். (148)

    பதம் பிரித்து:

    பார் அடியோ, வானத்தில் புதுமை எல்லாம்
        பண்மொழீ! கணம் தோறும் மாறி மாறி
    ஓரடி மற்று ஓர் அடியோடு ஒத்தல் இன்றி
        உவகையுற நவ நவமாத் தோன்றும் காட்சி.
    யாரடி இங்கு இவை போலப் புவியின் மீதே
        எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
    சீரடியால் பழவேத முனிவர் போற்றும்
        செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக் காண்பாய்.

    அ. சொற் பொருள்:

    சீரடி: சீரான அடிகள் (அளவால் ஒத்த அடிகளைக் கொண்ட, இசை நிறைந்த)

    ‘சீர்களும், அடிகளும் இயைந்த மந்திரங்களால் முன்னைய வேத ரிஷிகள் போற்றிய ஞாயிறு,’ என்று பாரதி குறிப்பெழுதுகிறான்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம்

    ஈ. பாடல் சொல்வது:

    பாரடி, பாட்டைப் போல் பேச்சை உடைய என் பாஞ்சாலி!  வானத்தில் என்ன புதுமையெல்லாம் நிகழ்கிறது பார்!  வானத்தில் ஓர் அடி, இன்னொரு அடியைப் போல் இல்லாமல் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு விதமான வண்ணமும், வடிவமும் கொண்டு திகழ்கிறதே!  ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதுப் புது வகையாக இருக்கிறதே!  என்ன அழகு!  இதற்கிணையான ஒரு காட்சியை இந்தப் புவியில் ஏற்படுத்திக் காட்ட வேண்டுமானால், எவ்வளவு பொருட் செலவாகும்!  யாரால் அப்படிச் செய்து காட்ட முடியும்!  இசை நிறைந்த பழைய வேதங்கள் எல்லாம் யாருடைய அழகைப் பாடிப் பாடிப் போற்றுகின்றனவோ, அந்தப் பகலவனின் ஒளியழகெல்லாம் இந்த மாலைப் போதின் வானத்தில் ஒன்று சேர்ந்திருப்பதைக் காண்பாய்.

    காவிய இலக்கணத் தேவைக்காக ஏதேனும் பாரதி செய்திருக்கிறான் என்றால், அது இந்தப் பாடல் தொடங்கி, 152ஆம் பாடல்வரை (ஐந்தே பாடல்கள்) செய்திருக்கும் சூரியாஸ்தமன வருணனை மட்டும்தான்.  வில்லி இதே வழிநடைக் காட்சிக்கு 48 பாடல்கள் சொல்கிறார்.  (வில்லி இரண்டே அடிகளில் முடிக்கின்ற செய்தியைப் பாரதி எவ்வளவு நீளம் விரிக்கிறான் என்பதை இரண்டாம் பாகத்தில் காண்போம்.)

    இன்னொன்று.  வில்லி இந்தக் குறிப்பிட்ட இடத்தில், சூரிய உதயக் காட்சியைப் பாடுகிறார்.  

    பஞ்சவர் வாழ்வுற பதம் பொறாமையின்
    வஞ்சகம் இயற்றுவான் மனம்கொல் என்னவே
    மிஞ்சிய குளிர்மதி மேற்பொறாது இகல்
    செஞ்சுடர் அவன் குண திசையில் தோன்றினான்.

    பாண்டவர்களுடைய வாழ்வைக் கண்டு மனம் பொறுக்காத வஞ்சகத் தன்மை கொண்ட துரியோதனின் மனத்தைப் போலவே, சந்திரனின் மீது பொறாமை கொண்டு, அவனிடத்து மாறுபாடு கொண்ட சூரியன் கிழக்கே உதிப்பதானான்.

    பாரதி இந்த இடத்தில் சூரிய அஸ்தமனக் காட்சியைப் பாடுவதன் பொருத்தம் கவனிக்கத் தக்கது.  தருமன், இதோ சென்று கொண்டிருக்கிறானே, இதுதான் அவன் கடைசி முறையாக இந்திரப் பிரஸ்தத்தை விட்டுச் செல்லும் பயணம்.  பிறகு அவன் இந்த நாட்டுக்குத் திரும்ப வரவே இல்லை என்பது நோக்கத் தக்கது.  (மகாபாரதப் போருக்குப் பிறகு தருமன் ஆண்டது அத்தினபுரத்தை.)

    அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  இந்தப் பாடலின் பின் குறிப்பில் பாரதி இதே காட்சியை உரைநடையில் மறுபடியும் வழங்குகிறான்.  ‘கர்மயோகி’ என்ற பத்திரிகைக்காக பாரதி எழுதிய கட்டுரை இது.  இதுவரையில் படித்திராதவர்கள், முதல் காரியமாகப் படித்துப் பார்க்கவும்.  ‘கவிதையை உரைநடை விஞ்ச முடியுமா,’ என்று யாருக்காவது ஐயம் எழுந்தால், ‘முடியும்,’ என்று செய்து காட்டியிருக்கிறான் பாரதி.

    கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்!
        கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்!
    கணந்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்!
        கருதிடவுஞ் சொல்லிடவு மெளிதோ வாங்கே
    கணந்தோறு மொருபுதிய வண்ணங் காட்டிக்
        காளிபரா சக்தியவள் களிக்குங் கோலம்
    கணந்தோறு  மவள்பிறப்பா ளென்று மேலோர்
        கருதுவதன் விளக்கத்தை யிங்குக் காண்பாய். (149)

    பதம் பிரித்து:

    கணந் தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்!
        கணந் தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்!
    கணந் தோறும் நவ நவமாம் களிப்புத் தோன்றும்!
        கருதிடவும் சொல்லிடவும் எளிதோ, ஆங்கே
    கணந் தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டிக்
        காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம்
    கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
        கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம்

    ஈ. பாடல் சொல்வது:

    ஒவ்வொரு கணமும் புதிய புதிய வியப்புகள் தோன்றுகின்றன.  ஒவ்வொரு கணமும் புதிய புதிய கனவுகள் தோற்றமளிக்கின்றன.  ஒவ்வொரு கணமும் புதுப் புதிதாய் மனத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது.   ஒவ்வொன்றையும் என்னவென்று எண்ணிப் பார்க்கவோ, சொல்லில் வடிக்கவோ எளிதோ!  யாரால் முடியும் சொல்!  ஒவ்வொரு கணமும் ஒரு புதிய வடிவத்தை எடுத்துக்கொண்டு காளி, பராசக்தியன்றோ அங்கே களிக்கின்றாள்.  பெரியவர்கள் சொல்வார்கள் அல்லவா, ‘ஒவ்வொரு கணமும் அவள் பிறந்து கொண்டே இருக்கிறாள்,’ என்று, அதன் விளக்கத்தை இதோ, இங்கே பார்.

    அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம்
        அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
    இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
        எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
    முடிவான வட்டத்தைக் காளி யாங்கே
        மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
    வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
        வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)

    பதம் பிரித்து:

    அடிவானத்தே அங்குப் பரிதிக் கோளம்
        அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
    இடி வானத்து ஒளிமின்னல் பத்துக் கோடி
        எடுத்து அவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
    முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
        மொய்குழலாய்! சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
    வடிவானது ஒன்றாகத் தகடு இரண்டு
        வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.

    அ. சொற் பொருள்:

    மொய்ம்பு: வலிமை (பாடல் எண் 50ல் இச்சொல்லின் விளக்கத்தைக் கண்டோம்.)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம்.

    ஈ. பாடல் சொல்வது:

    சூரியனாகிய கோளம், அடிவானத்தில் மிக விரைவாகச் சுழல்வதைப் பார்.  வானத்தில் இடிகளோடு கூடிய பத்துக் கோடி மின்னல்களை எடுத்து, அவற்றை உருக்கி, வார்த்து, ஒரு தகட்டை உருவாக்கிக் காளி அம்மை என்ன விரைவாகச் சுற்றுகிறாள் என்பதைக் காண்பாய்.  என்ன வலிமை, என்ன மாட்சி இங்கே வெளிப்படுகிறது, பார்!  ஒரு தகடு என்றா சொன்னேன்!  இரண்டு தகடுகள் அல்லவா இருக்கின்றன!  இரண்டு தகடுகள் ஒன்றன் மேலொன்றாகப் பொருந்தி, இங்கே வட்டமாகச் சுழல்கின்றன.

    அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே! பின்னே
        அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே
    சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்.
        தரணியிலிங் கிதுபோலோர் பச்சை உண்டோ?
    இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
        எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்.
    உமைகவிதை செய்கின்றான் எழுந்து நின்றே
        உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே! (151)

    பதம் பிரித்து:

    அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே! பின்னே
        அசைவுறும் ஓர் மின்செய்த வட்டு; முன்னே
    சமையும் ஒரு பச்சை நிற வட்டம் காண்பாய்.
        தரணியில் இங்கு இதுபோல் ஓர் பச்சை உண்டோ?
    இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
        எண்ணில்லாது இடை இடையே எழுதல் காண்பாய்.
    உமை கவிதை செய்கின்றான் எழுந்து நின்றே
        உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க என்றே!

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம்

    ஈ. பாடல் சொல்வது:

    மின்னலைப் போன்றவளே!  அமைதியாகப் பார்!  இரண்டு ஒளி வட்டங்கள் சுழல்வதை நீ காண்பாய். முன்னால் மரகதப் பச்சையில் ஒரு வட்டம் சுழல்கிறது.  இப்படி ஒரு பச்சையை இந்தப் புவியில் கண்டது உண்டா?  இந்தப் பச்சைத் தகட்டுக்குப் பின்னால் மின் தகடு ஒன்று சுழல்கிறது பார்!  இமைகளைக் குவித்து, உற்றுப் பார்த்தால், இந்த மின் தகட்டின் வயிரக் கால்கள், முன்னால் சுழல்கின்ற மரகதப் பச்சைத் தகட்டின் ஊடே, இடையிடையே எழுந்து வருவதைக் காண்பாய்.

    சூரிய அஸ்தமனமா இது!  போடீ போ!  உமை கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாளடி!  ‘அம்மையே போற்றி, பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்,’ என்று வாழ்த்துவோம் வா!  எழுந்து நில்!

    “இரண்டு வட்டத் தகடுகள் ஒன்றின் மேலொன்று சுழலும்.  கீழேயிருப்பது சுத்தமான மின் வட்டம்.  மேலே மரகத வட்டம்.  பச்சை வர்ணம்!  அற்புதமான பசுமை!

    பச்சைத் தகடு, பின்பிறத்திலிருக்கும் மின் தகட்டை முழுதும் மறைத்துக் கொண்டிருக்கும்.  ஆயினும், இடையிடையே பின்னுள்ள வட்டத்தின் வயிரக் கிரணங்கள் கண் மீது பாயும். (குறிப்புரையில் தரப்பட்டுள்ள பாரதியின் ‘கர்மயோகி கட்டுரையிலிருந்து.)

    பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
    எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
    என்னடீ யிந்த வன்னத் தியல்புகள்!
    எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
    தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி
    விட்ட வோடைகள்! வெம்மை தோன்றாமே
    எரிந்திடுந் தங்கத் தீவுகள்! பாரடீ
    நீலப் பொய்கைக! ளடடா நீல
    வன்ன மொன்றில் எத்தனை வகையடீ!
    எத்தனை செம்மை! பசுமையும் கருமையும்
    எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்!
    நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
    தோணிகள், சுடரொளிப் பொற்கரை யிட்ட
    கருஞ்சிக ரங்கள்! காணடி யாங்கு
    தங்கத் திமிங்கிலந் தாம்பல மிதக்கும்
    இருட்கடல்! ஆஹா! எங்குநோக் கிடினும்
    ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்! (152)

    பதம் பிரித்து:

    பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
    எத்தனை தீப்பட்டு எரிவன! ஓகோ!
    என்னடீ இந்த வன்னத்து இயல்புகள்!
    எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
    தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி
    விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே
    எரிந்திடும் தங்கத் தீவுகள்! பாரடீ
    நீலப் பொய்கைகள்! அடடா நீல
    வன்னம் ஒன்றில் எத்தனை வகையடீ!
    எத்தனை செம்மை! பசுமையும் கருமையும்
    எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம்!
    நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
    தோணிகள், சுடரொளிப் பொற்கரை யிட்ட
    கரும் சிகரங்கள்! காணடி ஆங்கு
    தங்கத் திமிங்கிலந்தாம் பல மிதக்கும்
    இருட்கடல்! ஆஹா! எங்கு நோக்கிடினும்
    ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!

    அ. சொற் பொருள்:

    வன்னம்: வண்ணம்; வர்ணம்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நிலைமண்டில ஆசிரியப்பா.  முற்றிலும் – ஓரடியிலும் – எதுகை பயிலாமல் நடப்பதைப் பார்க்கலாம்.  மோனை முதலிய அமையாது வேறுபடத் தொடுக்கும் தொடையைச் ‘செந்தொடை’ என்று யாப்பருங்கலக் காரிகை குறிக்கிறது.  எதுகை, மோனை அமையாமல் செய்வதைச் செம்மையான தொடை (தொடை: தொடுக்கப்பட்டதாகிய பாடல்) என்று இலக்கணம் சொன்னார்கள்.  ஓசை இலக்கணத்தை ஒட்டியும், மற்ற உறுப்புகளை விடுத்தும் இயற்றும் இந்த நிலையை அடைய மிகுந்த பயிற்சி தேவை.  பாரதியே கூட எதுகையைத் தவிர்த்திருக்கிறானே தவிர, மோனையை முற்றிலும் விட முடியவில்லை பாருங்கள்.  மோனை என்பது (முதல் நிலை கடந்ததும்) தன்னை அறியாமல் நிகழ்வது.  தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாதது.  இலக்கணத்தை விட்டு விட்டு எழுதப்படுவதாகச் சொல்லப்படும் புதுக்கவிதைகளிலும் ஏராளமான அளவில் மோனை பயில்வதைக் காணலாம்.  

    ஈ. பாடல் சொல்வது:

    பார்.  ஒளி மிகுந்த சூரியனைச் சூற்றி எத்தனை மேகங்கள் தீப்பட்டு எரிகின்றன!  ஓகோ!  எத்தனை வண்ணங்கள் இங்கே மிளிர்கின்றன!  இவற்றின் இயல்பையெல்லாம் (இது இன்ன வர்ணம் என்று பிரித்துச்) சொல்ல யாரால் முடியும்!  எத்தனை வடிவங்கள் (இந்த மேகங்களில்)!  எத்தனை (வண்ணக்) கலவை (அவற்றின் மீது!) இவை மேகங்களா!  (யார் சொன்னது?) தீயின் குழம்புகள்!  செம்பொன்னைக் காய்ச்சி ஓட விட்ட ஓடைகள்.  சிறிதும் வெப்பம் தோன்றாமல் எரிகின்ற தங்கத் தீவுகள்!

    தங்கத் தீவுகள் மட்டுமா! பார், பார்! நீலப் பொய்கைகள் தோன்றுகின்றன!  நீல வண்ணம் ஒன்றில் எத்தனை வகைகள்!  எத்தனை வகையான சிவப்பு, எத்தனை விதமான பச்சை, எத்தனை வகையான கருமை!  இவை மேகங்களா!  கருமையான பெரிய பெரிய பூதங்கள்!  நீலமான பொய்கையில் மிதக்கின்ற தங்கத்தால் செய்யப்பட்ட தோணிகள்!  ஒளி என்னும் பொன்னால் கரையிடப்பட்ட கரிய மலைகள்!  இல்லை… இது இருட்கடல்.  இந்த இருட்கடலில் தங்கத்தால் ஆன பெரும் திமிங்கிலங்கள் மிதக்கின்றன.  ஆஹா!  பார்க்கும் இடமெல்லாம் ஒளியின் திரள்!  வர்ணத்தின் களஞ்சியம்!

    செங்கதிர்த் தேவன் சிறந்த வொளியினைத் தேர்கின்றோம் – அவன்
    எங்க ளறிவினைத் தூண்டி நடத்துக வென்பதோர் – நல்ல
    மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே – இவர்
    தங்களினங்க ளிருந்த பொழிலினைச் சார்ந்தனர் – பின்னர்
    அங்கவ் விரவு கழிந்திட வைகறை யாதலும் – மன்னர்
    பொங்கு கடலொத்த சேனைகளோடு புறப்பட்டே – வழி
    எங்குந் திகழும் இயற்கையின் காட்சியி லின்புற்றே – கதிர்
    மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார். (153)

    பதம் பிரித்து:

    செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் – அவன்
    எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக என்பது ஓர் – நல்ல
    மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே – இவர்
    தங்கள் இனங்கள் இருந்த பொழிலினைச் சார்ந்தனர் – பின்னர்
    அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் – மன்னர்
    பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே – வழி
    எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே – கதிர்
    மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நான்கடி பன்னிரு சீர்ச் சிந்து.  

    ஈ. பாடல் சொல்வது:

    ‘சிவந்த கதிர்களை உடைய சூரியனின் ஒளியை நாங்கள் தேர்கிறோம்.  அவன் எங்கள் அறிவைத் தூண்டி நடத்துவானாக,’ என்று மறைகளில் சொல்லப்பட்ட மங்களம் வாய்ந்த மொழியால் பகலவனை வாழ்த்தியபின் அவர்கள் இருவரும் மற்றவர்கள் இருந்த சோலைக்கு வந்து சேர்ந்தனர்.  அந்தச் சோலையில் இரவுப் பொழுது கழிந்தது.  காலை விடிந்தது.  கடல்போன்ற சேனையோடு புறப்பட்டு, வழியில் காணும் இயற்கைக் காட்சிகளில் மனம் செலுத்தி மகிழ்ந்தவாறு, சூரியன் மங்குவதற்கு முன்னால் (மாலைப் போது ஆவதற்கு முன்னால்) ஒளி மங்கிய நகரமான அத்தினாபுரத்தை வந்தடைந்தார்கள்.

    “‘செங்கதிர்த் தேவன் சிறந்த வொளியினைத் தேர்கின்றோம் – அவன்
    எங்க ளறிவினைத் தூண்டி நடத்துக’

    இது ‘தத் ஸவிதுர்வரேண்யம்’ என்று தொடங்கும் காயத்ரி மந்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு.”

    இது பாரதியின் குறிப்பு.

    முதலாவது துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் முற்றிற்று.

    இரண்டாவது சூதாட்டச் சருக்கம்

    தெளிவுறவே யறிந்திடுதல் தெளிவுதர
        மொழிந்திடுதல் சிந்திப் பார்க்கே
    களிவளர வுள்ளத்தி லாநந்தக்
        கனவுபல காட்டல் கண்ணீர்த்
    துளிவரவுள் ளுருக்குதலிங் கிவையெல்லாம்
        நீயருளும் தொழில்க ளன்றோ?
    ஒளிவளருந் தமிழ்வாணி யடியனேற்
        கிவையனைத்தும் உதவு வாயே. (154)

    பதம் பிரித்து:

    தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர
        மொழிந்திடுதல்; சிந்திப்பார்க்கே
    களி வளர உள்ளத்தில் ஆநந்தக்
        கனவு பல காட்டல்; கண்ணீர்த்
    துளிவர உள் உருக்குதல் இங்கு இவையெல்லாம்
        நீ அருளும் தொழில்கள் அன்றோ?
    ஒளிவளருந் தமிழ்வாணி! அடியனேற்கு
        இவை அனைத்தும் உதவுவாயே.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    காய், காய், காய், காய், மா மா என்று நடக்கும் அறுசீர் விருத்தம்

    ஈ. பாடல் சொல்வது:

    எந்த ஒரு பொருளையும் தான் தெளிவாக அறிந்துகொள்வதும்; அவ்வாறு அறிந்துகொண்டதை மற்றவர்கள் தெரிந்துகொள்ளுமாறு, தெளிவாக எடுத்துச் சொல்லுவதும்; (உன்னை) ஆழச் சிந்திப்பவர்களின் உள்ளத்தில் எல்லாம் இன்பமயமான கனவுகள் பலவற்றைக் காட்டுவதும்; (அத்தகைய கனவுகளில் ஆழ்ந்த காரணத்தால்) கண்களில் நீர் பெருகும் அளவுக்கு உள்ளத்தை உருக்குவதும் உன்னால் நடைபெறும் தொழில்கள் அல்லவா?  அம்மா!  ஒளி மிகுந்தவளே!  என் தமிழ் வாணி!  எனக்கு இவை எல்லாவற்றையும் தந்து அருள வேண்டும்.

    வாணியின் மீது பாரதி இயற்றிய எல்லாப் பாடல்களிலும் இது மிகச் சுருக்கமானதும், மிகமிகச் செறிவானதும் ஆகும்.  செறிவு என்ற சொல்லே முதலில் சிந்தனைக்கு உரியது.  ‘செறித்தல்’ என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு.  ‘இறுக்குதல், அழுத்துதல்,’ என்பது அவற்றில் ஒன்று.  To compress, to tightly pack.  இந்த நான்கடி விருத்தத்தில் சிந்தனைக்கு ஏராளமான செய்திகள் செறித்து வைக்கப்பட்டிருக்கின்றன.  எனவே, மிகச் செறிவான விருத்தம் என்றேன்.

    எதைச் சொல்ல வருகிறோமோ அதைத் தான் முதலில் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.  பிறகு, தான் அறிந்ததை அடுத்தவருக்கு எடுத்துச் சொல்லும் போது, தான் சொல்கின்ற விதத்தால் எந்தக் குழப்பமும் நேர்ந்துவிடாதபடி, தேர்ந்தெடுத்த சொற்களால் (எழுத்து தவிர்த்த மற்ற படைப்பாளிகள் அவரவருக்கு உரிய ஊடகத்தால்) தெளிவாக எடுத்துச் சொல்ல முடியவேண்டும்.  ‘தெளிவுதர மொழிந்திடுதல்,’ என்பதில் உள்ள ‘தெளிவுதர’ என்பதற்கு, ‘மற்றவர்களுக்குத் தெளிவு கிட்டும்படியாகச் சொல்வது,’ என்ற பொருளோடு நிற்கவில்லை. அப்படி இருந்திருந்திருந்தால் ‘தெளிவுபெற மொழிந்திடுதல்,’ என்று சொல்லியிருக்கவேண்டும்.  தான் சொல்கின்ற விதத்தில் ஏற்படக் கூடிய பிசிறுகளால், கவனச் சிதறல்களால், தேவையற்ற சொற்களால், மாற்றங்களால், இன்னும் எத்தனையோ காரணங்களால், தான் தெளிவாக விளங்கிக் கொண்டதை மற்றவர்களும் அதே தெளிவாக உணர்ந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லும் விதம் கெட்டுப் போகும்.  இதை ஒவ்வொரு படைப்பாளியும் அறிவான்.

    எனவே, தெளிவுறவே அறிந்திடுதல் ஒரு தொழில்; தான் தெளிவுற அறிந்ததை வெளிப்படுத்தும் போது, அந்த வெளிப்படுத்துவதான செயல் ‘தெளிவுதர’ இருக்க வேண்டும்.  உணர்தலும், உணர்த்துதலும் படைப்பாளியின் கோணத்திலிருந்து செம்மையாக நடைபெற வேண்டிய இரண்டு தனித் தனித் தொழில்கள்.  A creative writer or an artist – or an artiste for that matter – should first of all be clear about what he wants to say; and should be able to express it clearly too.

    உணர்தலும்; உணர்த்துதலும் ஒரு புறம்.  படைப்பாளியைப் படைப்புத் தொழிலுக்குள் செலுத்துவது அகக் காட்சி.   சீதையை நினைக்கும் போதெல்லாம் கம்பன் கண் எதிரில் நடப்பது போல் காட்சிகளைச் செதுக்குகிறான் என்றால், இராமாயணத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவன் வாசகனின் உள்ளத்தில் நடக்க வைத்துக் காட்டுகிறான் என்றால், அவன் அந்தக் காட்சிகளை எல்லாம் உள்ளத்தில் கண்டிருக்கிறான் என்பது பொருள்.  யாருடைய அகக் காட்சி துல்லியமாக இருக்கிறதோ, அவருடைய படைப்பு, வாசகனைத் (அல்லது பார்வையாளனைத்) தன்னிடம் முழுமையாக ஈர்க்கும்; அவன் கவனத்தை எங்கேயும் சிதறவிடாமல் தன்னிடத்திலேயே தக்க வைத்துக்கொள்ளும்.  அதனால்தான் சில எழுத்துகளைப் படிக்கும்போது முழுமையாக ஒன்ற முடிகிறது.  ‘உள்ளத்தே ஆநந்தக் கனவு பல காட்டல்,’ என்ற தொழில் அதுதான்.  அங்கே ஒரு சொல் போட்டான் பாருங்கள்.  A qualfying term.  சிந்திப்பார்க்கே.  இந்த ‘சிந்திப்பார்க்கே’யில் உள்ள ஏகாரத்தைத் தேற்றேகாரம் என்று சொல்வார்கள்.  அதுதான்; அது மட்டும்தான் என்ற தொனிப் பொருளைத் தரக் கூடிய ஏகாரம்.  (ஏகாரம் பலவிதமான தொனிப் பொருளைத் தரக் கூடியது.)  ‘ஆதி பகவன் முதற்றே உலகு,’ என்று சொல்லும் போது உள்ள ஏகாரத்தின் மூலம், ‘கடவுள் மட்டும்தான் உலகத்துக்கு முதல்,’ என்று சொல்கிறார் இல்லையா, அப்படிப்பட்ட ஏகாரம், ‘சிந்திப்பார்க்கே’யில் உள்ளது.  யார் தனக்குள் ஆழ்ந்து, தீவிரமாகச் சிந்திக்கிறானோ, அவனுக்கு மட்டுமே இந்த ‘அகக் காட்சி’ கிடைக்கும்.  உள்ளத்தே ஆநந்தக் கனவு பல காட்டுவாள்.  

    அடுத்த நிலை படைப்பு சம்பந்தப்பட்டதன்று.  படைப்பாளிக்கு மட்டுமே கிட்டும் ஒன்று.  அவன் அந்த நிலைக்குப் போனால், போயிருந்தால் மட்டுமே, படிப்பவனின் உள்ளம் உருகும்.  படிப்பவனின் கண்களிலும் கண்ணீர்த் துளி வளரும்.  

    இது விரிக்க விரிக்க வளரக் கூடிய பொருள்.  நான் முழுமையாகச் சொல்லவில்லை.  படைப்பாளிக்கும், படிப்பாளிகளுக்கும் இதன் உண்மை சொல்லாமலேயே விளங்கும்.  ஆகவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.  சிந்திப்பதற்கு எவ்வளவு செய்திகளை வைத்திருக்கிறான் என்பதையும், எவ்வளவு சுருக்கமான இடத்தில், எவ்வளவு குறைவான சொற்களைக் கொண்டு என்பதையும் பார்க்க வேண்டும்.  தேர்ந்தெடுத்த சொற்களால் மிகச் சரியாக வெளிப்படுத்த முடிந்தால் மட்டுமே இது சாத்தியம்.  

    நூல்

    அத்தின மாநக ரத்தினில் வந்தனர்
        ஆரியப் பாண்டவ ரென்றது கேட்டலும்
    தத்தியெ ழுந்தன எண்ணருங் கூட்டங்கள்
        சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள்
    எத்திசை நோக்கினு மாந்தர்நி றைந்தனர்.
        இத்தனை மக்களு மெங்க ணிருந்தனர்
    ரித்தின மட்டு மெனவியப் பெய்துற
        எள்ளுவி ழற்கிட மின்றியி ருந்தார். (155)

    பதம் பிரித்து:

    அத்தின மாநகரத்தினில் வந்தனர்
        ஆரியப் பாண்டவர் என்றது கேட்டலும்
    தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள்
        சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள்
    எத்திசை நோக்கினு மாந்தர் நிறைந்தனர்.
        இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர்
    இத்தின மட்டும் எனவியப்பு எய்துற
        எள்ளும் விழற்கிடம் இன்றி இருந்தார்.

    அ. சொற் பொருள்:

    ‘இத்தனை மக்களும்…’ இந்நாள்வரை இத்தனை ஜனங்களும் எங்கே யிருந்தனர் என்று (காண்போர்) வியப்பெய்தும் வண்ணமாக, (பாரதியின் குறிப்புரை)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம்.  வழக்கமாக காய், காய், மா, மா என்று அமைக்கப்படும் எண்சீர் விருத்த இலக்கணத்திலிருந்து விலகி, முற்றிலும் விளச் சீராக அமைந்திருக்கிறது.  இசை அமைதி நோக்கினால், இரண்டாம் அடியில் உள்ள ‘கூட்டங்கள்’ என்ற சீரில் உள்ள ங் என்ற எழுத்தை நீக்கி, ‘கூட்/டகள்’ என்று அலகிட வேண்டும்.  அதைப் போலவே மூன்றாம் அடியில் ‘மாந்தர்நி’ என்ற சீரில் உள்ள ர் என்ற எழுத்தை நீக்கி, ‘மாந்/தநி’ என்று அலகிட வேண்டும்.

    ஈ. பாடல் சொல்வது:

    தலைவர்களான பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை வந்தடைந்தனர் என்று கேள்விப்பட்ட உடன், எண்ணில்லாத மக்கள் கூட்டம் திரண்டு எழுந்தது.  சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் என்று எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக இருந்தது.  இவ்வளவு மக்களையும் ஒன்றாகப் பார்க்கும்போது, ‘இத்தனை நாள் இவ்வளவு மக்களும் எங்கே இருந்தனர்!’ என்ற வியப்பு தோன்றுமாறு இருந்தது அந்த மக்கள் திரள்.

    மந்திர கீதமு ழக்கினர் பார்ப்பனர்
        வன்றடந் தோள்கொட்டி யார்த்தனர் மன்னவர்
    வெந்திறல் யானையும் தேருங்கு திரையும்
        வீதிகள் தோறும் ஒலிமிகச் செய்தன;
    வந்தியர் பாடினர்; வேசைய ராடினர்;
        வாத்தியங் கோடிவ கையினொ லித்தன.
    செந்திரு வாழு நகரினில் அத்தினம்
        சேர்ந்த வொலியைச் சிறிதென லாமோ? (156)

    பதம் பிரித்து:

    மந்திர கீத முழக்கினர் பார்ப்பனர்
        வன் தடம் தோள் கொட்டி ஆர்த்தனர் மன்னவர்
    வெந்திறல் யானையும் தேரும் குதிரையும்
        வீதிகள் தோறும் ஒலிமிகச் செய்தன;
    வந்தியர் பாடினர்; வேசையர் ஆடினர்;
        வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன.
    செந்திரு வாழு நகரினில் அத்தினம்
        சேர்ந்த ஒலியைச் சிறிது எனலாமோ?

    அ. சொற் பொருள்: வந்தியர் – மங்கலப் பாடகர்; அரசர் புகழ் பாடும் சூதர்.  

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு: –

    எண்சீர் விருத்தம்.

    ஈ. பாடல் சொல்வது:

    அந்தணர் மந்திர கீதங்கள் முழக்கினர்.  மன்னர்கள் தம்முடைய வலிமை மிக்க தோள்களைக் கொட்டி ஆரவாரித்தனர்.  கோபம் நிறைந்த போர் ஆற்றல் உடைய யானைகளும், தேர்களும், குதிரைகளும் வீதிதோறும் விரைவதனால் பேரொலி ஏற்பட்டது.  அரசருடைய புகழை இசைக்கும் மங்கலப் பாடகர்கள் வாழ்துப் பாடல்களைப் பாடினர்.  பல்வகையான வாத்தியங்கள் ஒலித்தன.  அன்றைய தினம், செல்வம் நிறைந்த அந்த ஊரில் ஏற்பட்ட (மங்கல) ஓசை கொஞ்சமா என்ன?

    வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறியம்
        மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
    நாலிய லாம்படை யோடு நகரிடை
        நல்ல பவனி எழுந்த பொழுதினில்
    சேலியல் கண்ணியர் பொன்விளக் கேந்திடச்
        சீரிய பார்ப்பனர் கும்பங்க ளேந்திடக்
    கோலிய பூமழை பெய்திடத் தோரணங்
        கொஞ்ச நகரெழில் கூடிய தன்றே. (157)

    பதம் பிரித்து:

    வாலிகன் தந்தது ஓர் தேர்மிசை ஏறி அம்
        மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
    நாலு இயல் ஆ(கு)ம் படையோடு நகரிடை
        நல்ல பவனி எழுந்த பொழுதினில்
    சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திடச்
        சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திடக்
    கோலிய பூமழை பெய்திடத் தோரணம்
        கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே.

    அ. சொற் பொருள்:

    நாலியலாம் படை: தேர், யானை, குதிரை, காலாள் என்று நான்கு வகையான சதுரங்க சேனை.

    சேலியல்: சேல் – மீன்.  மீனைப் போன்ற விழி உடைய பெண்கள்.

    கோலிய: கோலுதல்: திரட்டுதல்.  ஒன்றாகத் திரட்டி வைக்கப்பட்ட பூக்களின் மழை.  (கோலுதல் என்ற சொல்லுக்கு வளைத்தல் என்ற பொருளும் உண்டு.)

    தோரணங் கொஞ்ச: தோரணங்கள் அழகுடன் குழைந்திருப்ப (பாரதியின் குறிப்புரை)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம்.

    ஈ. பாடல் சொல்வது:

    வாலிகன் தந்த பொன்னாலான தேரில் ஏறிக்கொண்டு, தர்மபுத்திரனும், அவன் தம்பியரும், பெண்களும், நான்கு வகைப் படைகளும் நகரத்தில் நுழைந்து பவனி வந்தபோது, மீன்போன்ற விழிகளை உடைய பெண்கள் பொன் விளக்குகள் ஏந்தி வந்தனர்.  பார்ப்பனர் பூரண கும்பங்கள் ஏந்தி வரவேற்றனர்.  பெருமளவில் திரட்டப்பட்ட பூக்களின் மழை பொழிந்தது.  தோரணங்கள் அழகுற விளங்கின.  நகரத்தின் அழகு அதிகரித்தது.  

    தருமர் ஒரு யானையின் மீதேறிச் சென்றதாக வியாசர் குறிப்பிடுகிறார். பாரதி இங்கு மாறுபடக் காரணம் உண்டு. பந்தயம் வைத்து ஆடுகையில், ‘நான் ஏறி வந்த தேரைப் பணயமாக வைக்கிறேன்,’ என்று வியாச பாரதத்தில் தருமன் சொல்கிறான். பாடல் 189ல் பாரதியும் அவ்விதமே கூறுகிறான். எனவே தேரேறிச் சென்றதாகச் சொல்வதே பொருத்தம்.  மூல நூலை எவ்வளவு நுட்பமாகப் படித்திருக்கிறான் என்பதற்கு இது ஆதாரம்.

    ‘பொற்றடந் தேரொன்று வாலிகன் கொண்டு விடுத்ததும்,’ என்று பாடல் எண் 50ல் பாரதி குறிப்பிடும் இந்த வாலிகன் யார் என்று தெரியவில்லை என்று குறித்திருந்தோம்.  நண்பர்கள் வித்யா ஜெயராம், ஃபோரம் ஹப் பாலாஜி மற்றும் குமார் ஆகியோர்கள் தந்த பயனுள்ள குறிப்புகளோடு இன்னும் கொஞ்சம் தேடியதில், ஸ்ரீமத் பாகவத மஹாபுராணத்தில் பின் வரும் குறிப்பு கிடைத்தது.  பாண்டவர்களின் முன்னோர் யார் யார் என்று சுக பிரம்ம ரிஷி சொல்கிறார்.  

    தேவாபி ஷந்தனுஸ்தஸ்ய பாஹ்லீக இதி சாத்மஜா
    பித்ரு ராஜ்யம் பரித்யஜ்ய தேவாபிஸ்து வனம் கதஹ
    (பாகவத புராணம், காண்டம் 9, சர்க்கம் 22, சுலோகம் 12)

    (திலீபனுடைய மகனான பிரதீபனுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்.  அவர்கள்) தேவாபி, சந்தனு, வாலிகன் என்ற மூவர்.  இவர்களுக்குள், (மூத்தவனான) தேவாபி தனக்கு அரசு தேவையில்லை என்று சொல்லி (தவம் மேற்கொள்ள) வனத்துக்குச் சென்றுவிட்டான்.  எனவே, சந்தனு பட்டத்துக்கு வந்தான்.  

    மஹாபாரதம், உத்தியோக பருவத்தில் பகவத்யான பர்வம் என்ற பிரிவு வருகிறது.  போருக்கான நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்ற சமயம்.  சபையில் துரியோதனுக்குப் பலவிதமான அறிவுரைகளைச் சொல்லி வரும்போது திருதராஷ்டிரன் சொல்கிறான்: (மொழி பெயர்ப்பு) ‘So also, conversant with every virtue there was my father’s grandfather, king Pratipa, who was celebrated over the three worlds. Unto that lion among kings, who ruled his kingdom virtuously were born three sons of great fame and resembling three gods. Of them, Devapi was the eldest, Vahlika the next and Santanu of great intelligence, who, O sire, was my grandfather, was the youngest. Devapi, endued with great energy, was virtuous, truthful in speech, and ever engaged in waiting upon his father.’

    சந்தனு மன்னருக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர்.  சத்தியவதியின் மூலம் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என்ற இரு மகன்கள் சந்தனுவுக்குப் பிறந்தனர்.  சித்திராங்கதன் ஒரு கந்தர்வனுடன் நடந்த போரில் இறந்தான்.  விசித்திரவீரியன் சிறு வயதிலேயே க்ஷயரோகத்தால் (என்புருக்கி) இறந்தான்.  பிறகுதான் திருதிராட்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரும் தோன்றினர்.  எனவே, சந்தனு, துரியோதனாதியருக்கும், பாண்டவருக்கும் கொள்ளுப் பாட்டன்.  சந்துனுவின் சகோதரனாகிய வாலிகனும் அதே உறவு.  

    வெகு இயல்பாக பாரதி உதிர்த்துவிட்டுப் போகும் பெயர்களுக்கு உரியவர்களை அடையாளம் காண எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது!  ஒரு குறிப்பாவது தரவேண்டும் என்று கூட பாரதிக்குத் தோன்றாத அளவுக்கு இது அவனுக்கு மிகவும் சரளமாகவும், சகஜமாகவும் தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை.   இப்படித்தான், ‘முன்னமொரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ,’ என்று பின்னால் விதுரன் பேச்சில் வரும்.  அந்த வேனனை எங்கெங்கோ தேடித் திரிந்திருக்கிறேன்.  அந்த இடம் வரும்போது விவரங்களைப் பார்ப்பபோம்.  

    வேறு

    மன்னவன் கோயிலிலே – இவர்
         வந்து புகுந்தனர் வரிசையொ டே
    பொன்னரங் கினிலிருந்தான் – கண்ணில்
         புலவனைப் போய்நின்று போற்றிய பின்
    அன்னவ னாசிகொண்டே – உய
         ராரிய வீட்டும னடிவணங் கி
    வின்னய முணர் கிருபன் – புகழ்
         வீரத் துரோணனங் கவன்புதல் வன் (158)

    பதம் பிரித்து:

    மன்னவன் கோயிலிலே – இவர்
         வந்து புகுந்தனர் வரிசையொடே
    பொன் அரங்கினில் இருந்தான் – கண்ணில்
         புலவனைப் போய் நின்று போற்றியபின்
    அன்னவன் ஆசிகொண்டே – உயர்
         ஆரிய வீட்டுமன் அடிவணங்கி
    வில் நயம் உணர் கிருபன் – புகழ்
         வீரத் துரோணன்அங்கு அவன் புதல்வன்

    அ. சொற் பொருள்:

    வரிசை: கையுறை எனப்படும் (பெரியோர்களைக் காணும்போது எடுத்துச் செல்லப்படும்) பரிசுப் பொருள்கள்.  சீர்.  

    கண்ணில் புலவன்: கண் இல்லாதவனும், கல்வி நிறைந்தவனுமான திருதராட்டிரன். (‘ராஜ மண்டபத்திலே வீற்றிருந்தவன் (ஆகிய) திருதராஷ்டிரனை’ (பாரதியின் குறிப்பு.)

    வின்னயம்: வில் வித்தை, யுத்த சாஸ்திரம். (பாரதியின் குறிப்பு.)

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.  முதல் அரையடியை விட, அடுத்த அரையடி பெரிதாய் இருப்பதைப் பார்க்கலாம்.  (முதல் அரையடியில் மொத்தம் ஆறு அசைகளும்; அடுத்த அரையடியில் மொத்தம் ஏழு அசைகளும் இருக்கின்றன.)

    பொருள் இந்தப் பாடலுடன் முற்றுப் பெறாமல் அடுத்த பாடலுக்குச் செல்வதால், இது குளகம்.

    ஈ. பாடல் சொல்வது:

    திருதராட்டிரனுடைய அரண்மனைக்குள் பாண்டவர்கள் பரிசுப் பொருள்களுடன் நுழைந்தனர்.  பார்வையற்றவனும், படித்தவனுமான அவன் ஒரு பொன்மயமான மண்டபத்தில் வீற்றிருந்தான்.  அவனைப் பணிந்து, அவனுடைய ஆசியைப் பெற்றனர்.  அதன் பின்னர், பாண்டவர் வீட்டுமன் (பீஷ்மர்) அடிபணிந்தனர்.  தனுர் வேதம் எனப்படும் வில் வித்தையை நன்குணர்ந்தவர்களாகிய கிருபரையும், துரோணரையும், அவருடைய புதல்வனாகிய அசுவத்தாமனையும்,

    மற்றுள பெரியோர்கள் – தமை
         வாழ்த்தியுள் ளன்பொடு வணங்கிநின் றார்.
    கொற்றமிக் குயர்கன்னன் – பணிக்
         கொடியோ னிளையவர் சகுனியொ டும்
    பொற்றடந்தோள் சருவப் – பெரும்
         புகழினர் தழுவினர் மகிழ்ச்சிகொண் டார்
    நற்றவக் காந்தாரி – முதல்
         நாரியர் தமைமுறைப் படிதொழு தார். (159)

    பதம் பிரித்து:

    மற்றுஉள பெரியோர்கள் – தமை
         வாழ்த்திஉள் அன்பொடு வணங்கி நின்றார்.
    கொற்ற மிக்கு உயர் கன்னன் – பணிக்
         கொடியோன் இளையவர் சகுனியொடும்
    பொன் தடந்தோள் சருவப் – பெரும்
         புகழினர் தழுவினர் மகிழ்ச்சி கொண்டார்
    நல் தவக் காந்தாரி – முதல்
         நாரியர் தமை முறைப்படி தொழுதார்.

    அ. சொற் பொருள்:

    பணி: பாம்பு.  பணிக்கொடியோன்: பாம்புக் கொடியை உடையவன், துரியோதனன்.

    சருவல்: நேசப் பான்மை (தோன்ற).  அன்பு தோன்றுமாறு தழுவுதல்; கொஞ்சித் தழுவுதல்.

    ‘சதையைச் சிலகைக் கொளமற் றதனைச்
     சருவிச் சருவிப் பறிக்கு மொருதிரள்’

    செருக்களத்து அலகை வகுப்பு (அருணகிரி நாதர்)

    போர்க்களத்தில் உலவும் பேய்களில் ஒரு சில சிதைந்து கிடக்கும் சதைத் திரளைக் கையில் எடுக்கும்.  அவ்வாறு எடுத்தவற்றைக் கொஞ்சியபடித் தழுவி, அவற்றின் கையிலிருந்து வேறு சில பேய்கள் பறித்துக் கொள்ளும்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.  முதல் அரையடியை விட, அடுத்த அரையடி பெரிதாய் இருப்பதைப் பார்க்கலாம்.  (முதல் அரையடியில் மொத்தம் ஆறு அசைகளும்; அடுத்த அரையடியில் மொத்தம் ஏழு அசைகளும் இருக்கின்றன.)

    ஈ. பாடல் சொல்வது:

    (முதல் பாடலின் பொருள் தொடர்கிறது..) மற்றும் உள்ள பெரியோர்கைளயும் உள்ளன்போடு வாழ்த்தியும், வணங்கியும் நின்றார்கள்.  கொற்றம் நிரம்பியவனான கர்ணனையும்; பாம்புக் கொடியை உடைய துரியோதன¨யும்; அவனுடைய தம்பியரையும்; சகுனியையும் தோளோட தோள் பொருந்துமாறு நேசத்துடன் தழுவிக்கொண்டனர்.  நல்ல தவத்தை உடையவளான காந்தாரியையும் மற்றுமுள்ள பெண்களையும் முறைப்படி வணங்கினர்.

    இன்று முதல் ஒவ்வொரு பாடலின் கீழும் அதற்கு இணையான இடத்தில் வியாசர் சொல்வதன் மொழிபெயர்ப்பைத் தருகிறேன்.  நான் தருகின்ற ஆங்கில மொழிபெயர்ப்பு கிஸரி மோஹன் கங்கூலி (Kisari Mohan Ganguli) செய்தது.  இந்த மொழிபெயர்ப்பு வெளிவந்த காலகட்டம் 1883-1896 என்பதனாலும், மொழிபெயர்த்தவர் ஒரு வங்காளி என்பதனாலும், அரவிந்தருடைய தொடர்பு இருந்த காரணத்தினாலும், பாரதி இந்த மொழிபெயர்ப்பை வாசித்திருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.  

    தமிழ் மொழிபெயர்ப்பு வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள ‘வியாச பாரதம்’ தருகின்ற வடிவம்.  (தமிழ் மொழி பெயர்ப்பு முழுமையானதாக இல்லாத காரணத்தால் எல்லா இடங்களிலும் தர இயலவில்லை.  இரண்டாம் பகுதியில் பெரும்பாலான இடங்களுக்குத் தருகிறேன்.)

    குந்தியு மிளங்கொடியும் – வந்து
        கூடிய மாதர்தம் மொடுகுல வி
    முந்திய கதைகள் சொல்லி – அன்பு
        மூண்டுரை யாடிப்பின் பிரிந்துவிட் டார்
    அந்தியும் புகுந்ததுவால் – பின்னர்
        ஐவரு முடல்வலித் தொழில்முடித் தே
    சந்தியும் சபங்களும்செய் – தங்கு
        சாருமின னுணவமு துண்டதன் பின் (160)

    பதம் பிரித்து:

    குந்தியும் இளங்கொடியும் – வந்து
        கூடிய மாதர் தம்மொடு குலவி
    முந்திய கதைகள் சொல்லி – அன்பு
        மூண்டு உரையாடிப் பின் பிரிந்துவிட்டார்
    அந்தியும் புகுந்ததுவால் – பின்னர்
        ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே
    சந்தியும் சபங்களும்செய்து – அங்கு
        சாரும்இன் உணவமு துண்டதன்பின்

    அ. சொற் பொருள்: இளங்கொடி – பாஞ்சாலி (பாரதியின் குறிப்பு)

    உடல்வலித் தொழில்: கஸ்ரத்.  சரீர பலத்துக்காகச் செய்யப்படும் அப்பியாசங்கள்.  இதனை வடமொழியில் ‘வ்யாமம்’ என்பர்.  (பாரதியின் குறிப்பு)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.  முதல் அரையடியை விட, அடுத்த அரையடி பெரிதாய் இருப்பதைப் பார்க்கலாம்.  (முதல் அரையடியில் மொத்தம் ஆறு அசைகளும்; அடுத்த அரையடியில் மொத்தம் ஏழு அசைகளும் இருக்கின்றன.)  பொருள் முற்றுப் பெறாமல் அடுத்த பாடலுக்குச் செல்வதனால் இது குளகம்.

    ஈ. பாடல் சொல்வது:

    குந்தியும், திரெளபதியும் வந்து தம்மைச் சூழ்ந்து கொண்ட மற்ற பெண்களோடு உரையாடி, பழைய கதைகளை எல்லாம் பேசி, அன்பு பொங்க உரையாடிப் பின் பிரிந்தனர்.  மாலைப் போது ஆனது.  ஐந்து பாண்டவர்களும் தேகப் பயிற்சிகளைச் செய்து முடித்து, அதன் பிறகு சந்தி, ஜபங்கள் செய்து, உணவருந்தினர்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    And those tigers among men, having conversed with the ladies went through their daily physical exercises and then performed the religious rites of the day.

    சந்தன மலர்புனைந்தே – இளந்
        தையலர் வீணைகொண் டுயிருக் கி
    விந்தைகொள் பாட்டிசைப்ப – அதை
        விழைவொடு கேட்டனர் துயில்புரிந் தார்.
    வந்ததொர் துன்பத்தினை – அங்கு
        மடித்திட லன்றிப்பின் வருந்துயர்க் கே
    சிந்தனை யுழல்வாரோ – உளச்
        சிதைவின்மை யாரியர் சிறப்பன்றோ? (161)

    பதம் பிரித்து:

    சந்தன மலர் புனைந்தே – இளந்
        தையலர் வீணைகொண்டு உயிர் உருக்கி
    விந்தைகொள் பாட்டு இசைப்ப – அதை
        விழைவொடு கேட்டனர் துயில் புரிந்தார்.
    வந்ததொர் துன்பத்தினை – அங்கு
        மடித்திடல் அன்றிப் பின் வரும் துயர்க்கே
    சிந்தனை உழல்வாரோ? – உளச்
        சிதைவின்மை ஆரியர் சிறப்பன்றோ?

    அ. சொற் பொருள்: ‘வந்ததொர் துன்பத்தினை…….’
    துன்பம் நேரிடுங்கால், அதனை அவ்விடத்தே அப்பொழுதே மாய்த்துவிட வழி செய்வார்கள்.  அவ்வாறன்றிப் பின்வரப் போகும் துன்பங்களை நினைத்து, நெஞ்சமுடைந்து போய், யாதொரு செய்கையும் ஓடாமல் சலிப்படைந்திருத்தல் ஆரியர்களுடைய மரபன்று.  (பாரதியின் குறிப்பு)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.  முதல் அரையடியை விட, அடுத்த அரையடி பெரிதாய் இருப்பதைப் பார்க்கலாம்.  (முதல் அரையடியில் மொத்தம் ஆறு அசைகளும்; அடுத்த அரையடியில் மொத்தம் ஏழு அசைகளும் இருக்கின்றன.)  

    ஈ. பாடல் சொல்வது:

    (உணவருந்தியதன் பின்) சந்தனம் பூசி, மலர் புனைந்து, இளம் பெண்கள் உயிர் உருகும் வண்ணம் வாசிக்கும் வீணையிசையை ஆர்வத்தோடு கேட்ட வண்ணம் துயின்றனர்.  துன்பம் வந்தால், வந்த துன்பத்தை மடித்திடல் அன்றி, அதை நினைத்து நினைத்து வருந்தி, வருந்தி உள்ளம் துன்பத்தில் உழல்வார்களோ?  (ஆகவே, துன்பமே வரப்போகிறது என்று உணர்ந்திருந்த போதிலும், நிம்மதியாக உறங்கினர்.)  எத்தகைய துன்பம் நேர்ந்தாலும், உள்ளம் உடையாமல் இருப்பதல்லவா ஆரியர் இயல்பு?

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    And having finished their daily devotions, they decked their persons with sandal paste of the most fragrant kind. And desiring to secure good luck and prosperity they caused (by gifts) the Brahmanas to utter benedictions. And then eating food that was of the best taste they retired to their chambers for the night. And those bulls among the Kurus then were put to sleep with music by handsome females.

    பாணர்கள் துதிகூற – இளம்
        பகலவ னெழுமுனர்த் துயிலெழுந் தார்
    தோணலத் திணையில்லார் – தெய்வந்
        துதித்தனர் செய்யபொற் பட்டணிந் து
    பூணணிந் தாயுதங்கள் – பல
        பூண்டுபொற் சபையிடைப் போந்தன ரால்.
    நாணமில் கவுரவரும் – தங்கள்
        நாயக னொடுமங்கு வீற்றிருந் தார். (162)

    பதம் பிரித்து:

    பாணர்கள் துதி கூற – இளம்
        பகலவன் எழு முனர்த் துயில் எழுந்தார்
    தோள் நலத்து இணையில்லார் – தெய்வம்
        துதித்தனர் செய்ய பொன் பட்டு அணிந்து
    பூண் அணிந்து ஆயுதங்கள் – பல
        பூண்டு பொற்சபையிடைப் போந்தனரால்.
    நாணம்இல் கவுரவரும் – தங்கள்
        நாயகனொடும் அங்கு வீற்றிருந்தார்.

    அ. சொற் பொருள்: தோணலம்: தோள்வலி, வலிமை (பாரதியின் குறிப்பு)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.  முதல் அரையடியை விட, அடுத்த அரையடி பெரிதாய் இருப்பதைப் பார்க்கலாம்.  (முதல் அரையடியில் மொத்தம் ஆறு அசைகளும்; அடுத்த அரையடியில் மொத்தம் ஏழு அசைகளும் இருக்கின்றன.)  

    ஈ. பாடல் சொல்வது:

    காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால், பாணர்கள் பாடல்கள் இசைத்துத் துதிக்கவும், இணையில்லாத தோள் வலிமையை உடைய பாண்டவர்கள் கண்விழித்தனர்.  தெய்வத்தை வணங்கினர்.  நல்ல பட்டாடைகளையும், ஆபரணங்களையும் அணிந்தனர்.  சபைக்குள் வந்தனர்.  வெட்கம் என்பதே அறியாத துரியோதனாதியர், அங்கே துரியோதனன் தலைமையில் அமர்ந்திருந்தனர்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    And waked by the bards with sweet music, they rose from their beds, and having passed the night thus in happiness, they rose at dawn and having gone through the usual rites, they entered into the assembly house and were saluted by those that were ready there for gambling.

    வீட்டுமன் றானிருந்தான் – அற
        விதுரனும் பார்ப்பனக் குரவர்க ளும்
    நாட்டுமந் திரிமாரும் – பிற
        நாட்டினர் பலபல மன்னர்க ளும்
    கேட்டினுக் கிரையாவான் – மதி
        கெடுந்துரி யோதனன் கிளையின ரும்
    மாட்டுறு நண்பர்களும் – அந்த
        வான்பெருஞ் சபையிடை வயங்கிநின் றார். (163)

    பதம் பிரித்து:

    வீட்டுமன் தான் இருந்தான் – அற
        விதுரனும் பார்ப்பனக் குரவர்களும்
    நாட்டு மந்திரிமாரும் – பிற
        நாட்டினர் பலபல மன்னர்களும்
    கேட்டினுக்கு இரையாவான் – மதி
        கெடும் துரியோதனன் கிளையினரும்
    மாட்டுறு நண்பர்களும் – அந்த
        வான்பெரும் சபையிடை வயங்கி நின்றார்.

    அ. சொற் பொருள்:

    மாட்டுறு – (மாடு உறு) பக்கத்தில் இருக்கும்.

    குரவர் – வயதாலோ, அறிவாலோ முதிர்ந்த, மரியாதைக்கு உரிய, (குடும்பத்தில் மூத்த உறுப்பினராகவோ, இல்லாமலோ விளங்கக் கூடிய), அறிவுரை சொல்லி வழிநடத்தக் கூடியவர்.  ஆகவே ஐம்பெருங் குரவர் என்பவர் ஒவ்வொரு மனிதனுக்கும் தாய், தந்தை, தமையன், குரு, அரசன் ஆகியோர்.  ஒவ்வொரு அரசனுக்கும் உரிய ஐம்பெருங்குரவர்களில் ‘அரசன்’ என்பதற்கு பதிலாக ‘அமைச்சர்’ என்று வரும்.

    வயங்குதல் – விளங்குதல், மிகுதல்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.  முதல் அரையடியை விட, அடுத்த அரையடி பெரிதாய் இருப்பதைப் பார்க்கலாம்.  (முதல் அரையடியில் மொத்தம் ஆறு அசைகளும்; அடுத்த அரையடியில் மொத்தம் ஏழு அசைகளும் இருக்கின்றன.)  

    ஈ. பாடல் சொல்வது:

    அந்தச் சபையில் வீட்டுமன் (பீஷ்மன்) இருந்தான்.  அறத்தையே பின்பற்றும் விதுரன் இருந்தான்.  நாட்டின் அமைச்சர்கள் இருந்தனர்.  அந்தணப் பெரியோர்கள் இருந்தனர்.  பிற நாடுகளிலிருந்து வந்திருந்த பற்பல மன்னர்கள் இருந்தனர்.  கெடுதலுக்கு இரையாகப் போகும் துரியோதனனும், அவனுடைய தம்பியர், சகுனி போன்ற உறவினரும், கர்ணனைப் போன்ற நண்பர்களும் அந்தப் பெரிய சபையில் விளங்கி நின்றனர்.

    இரண்டு பெரும் சக்திகள் ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்கப் போகும் கட்டம்.  ஒரு பக்கம் (கெளரவ மன்னர் பக்கத்திலேயே நின்று) அறத்தைப் பின்பற்றும் கூட்டம்.  இன்னொரு பக்கம் அறத்தை நசுக்கக் கிளம்பியிருக்கும் அதே கெளரவ மன்னர் – துரியோதனாதியர் – கூட்டம்.  இரண்டுமே அந்தச் சபையில் விளங்கியிருந்தது.  அத்தகைய சபைக்குள் பாண்டவர் நுழைந்தனர்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Vaisampayana said,–“The sons of Pritha with Yudhishthira at their head, having entered that assembly house, approached all the kings that were present there. And worshipping all those that deserved to be worshipped, and saluting others as each deserved according to age, they seated themselves on seats that were clean and furnished with costly carpets.

    புன்றொழிற் கவறதனில் – இந்தப்
        புவிமிசை யிணையிலை யெனும்புக ழான்
    நன்றறி யாச்சகுனி – சபை
        நடுவினி லேறெனக் களித்திருந் தான்.
    வென்றிகொள் பெருஞ்சூதர் – அந்த
        விவிஞ்சதி சித்திர சேனனு டன்
    குன்றுசத் தியவிரதன் – இகழ்*
        கூர்புரு மித்திரன் சயன்என் பார் (164)

    பதம் பிரித்து:

    புன்தொழில் கவறு அதனில் – இந்தப்
        புவிமிசை இணையிலை எனும் புகழான்
    நன்று அறியாச் சகுனி – சபை
        நடுவினில் ஏறு எனக் களித்திருந்தான்.
    வென்றிகொள் பெருஞ் சூதர் – அந்த
        விவிஞ்சதி சித்திரசேனனுடன்
    குன்று சத்தியவிரதன் – இகழ்*
        கூர் புருமித்திரன் சயன் என்பார்

    *இதழ் என்று பாடபேதம் பல பதிப்புகளில் காணப்படுகிறது.  இகழ் என்பதே பொருத்தமாக இருக்கிறது.

    அ. சொற் பொருள்: கவறு – சூதாடும் கருவி – dice.  சூதாட்டம்.

    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு. (குறள்)

    எவனுடைய மானம், மரியாதை முதலான செல்வங்களெல்லாம் அழியப்போகிறதோ, அவனுடைய உள்ளம் மிகவும் விரும்புவது விலைபோகும் பெண்டிர், கள் மற்றும் சூதாட்டம்.

    நன்றறியாச் சகுனி: நல்லது என்பதே கொஞ்சம் கூடத் தெரியாதவனான சகுனி.  நேரடியான திருக்குறள் ஆட்சி.

    நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத்து அவலம் இலர்.

    நல்லது கெட்டது பார்த்து நடப்பவனுக்குத்தான் மனம் பாடுபடும்; இதைச் செய்வதா அதைச் செய்வதா என்று தவிக்கும்.  கயவனுக்கு அப்படி ஒரு கஷ்டம் வரவே வராது.  அவனுக்குத்தான் நல்லதும் நல்லது; கெட்டதும் நல்லதாயிற்றே!  ஆகவே நல்லவனைப் பார்க்கிலும், கெட்டவன் செல்வம் உடையவன்தான்.

    இகழ் கூர்:  இந்தத் தொடரில் உள்ள ‘கூர்’ என்ற சொல்லுக்கு, ‘மிகுதல், அதிகரித்தல் – to be abundant, excessive’ என்று பொருள்.  நினைவு கூர்தல் – (ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றியோ, நிகழ்வைப் பற்றியோ) நினைவு மிகுதல்; அதிகரித்தல்.  அருள் கூர்தல், அருள்கூர்ந்து: அருள் அதிகரித்தல், அருள் மிகக் கொண்டு. இகழ் கூர் என்றால், இகழ்ச்சி அல்லது இகழத்தக்க தன்மை மிகுந்த.

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.  முதல் அரையடியை விட, அடுத்த அரையடி பெரிதாய் இருப்பதைப் பார்க்கலாம்.  (முதல் அரையடியில் மொத்தம் ஆறு அசைகளும்; அடுத்த அரையடியில் மொத்தம் ஏழு அசைகளும் இருக்கின்றன.)  பொருள் முற்றுப் பெறாத காரணத்தால் – அடுத்ததற்கு அடுத்த பாடலில் பொருள் முடிகிறது – இது குளகச் செய்யுள்.

    ஈ. பாடல் சொல்வது:

    நல்லது என்பதன் வாசனையைக் கூட அறியாதவனான, சின்னத்தனமான சூதாட்டத் தொழில் சகல நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்து, அதில் அவனுக்கு இணையில்லை என்னும்படியான புகழை உடைய சகுனி சபை நடுவில் சிங்கம் போல உட்கார்ந்திருந்தான்.  (சிங்கம் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.) அவனைச் சுற்றிலும் விவிம்சதி, சித்திரசேனன், சத்தியவிரதன், புருமித்திரன், ஜயன் போன்ற பெரிய சூதாடிகள் அமர்ந்திருந்தனர்.

    விவிம்சதி: துரியோதனன் தம்பியரில் ஒருவன்.  நூற்றுவரில் ஆறாவதாகப் பிறந்தவன். (சிலர் ஏழாவதாகப் பிறந்தவன் என்று குறிக்கிறார்கள்.)

    சித்திரசேனன்: இந்தப் பெயரில் பாரதத்தில் பலர் இருக்கிறார்கள்.  சித்திரசேனன் என்றொரு கந்தர்வன், அர்ஜுனனுக்கு நண்பன்.  அவன் தேரில் பூட்டுதற்காக (என்றும் எண்ணிக்கையில் குறையாத) நூறு குதிரைகளை அளித்தவன்.  கர்ணனுடைய மகன் பெயரும் சித்திரசேனன்.  இங்கே குறிப்பிடப்படும் சித்திரசேனன், ஜராசந்தனுடைய அமைச்சன்.  சூதில் வல்லவன்.

    சத்தியவிரதன், புருமித்திரன்: இவர்களைப் பற்றி ஏதும் குறிப்பு கிட்டவில்லை.  ‘துரியோதனன் சபையில் இருந்த சூதாட வல்லன்,’ என்று மட்டும் சொல்லப்படுகிறது.  இவர்களைப் பற்றிய குறிப்பு கிட்டினால் இடுகிறேன்.

    சயன்: இவன் திருதிராட்டிரன் மகன் என்றொரு குறிப்பு இருக்கிறது.  ஆனால் நூற்றுவர்களின் பெயரில் இவன் பெயர் காணப்படவில்லை.  (நூற்றுவரைத் தவிர்த்து, காந்தாரி கருவுற்றிருந்த நாளில் திருதிராட்டிரனுக்கும் ஒரு வைசியப் பெண்ணுக்கும் ஒரு மகன் பிறந்தான்.  அவனே யுயுத்சு.)  ‘சூதாட வல்லவன்; துரியோதனன் சபையில் இருந்தான்,’ என்று மட்டுமே சொல்லப்படுகிறது.

    பாரதியின் குறிப்பு:
    ‘வென்றிகொள் பெருஞ்சூதர்’ – துரியோதனன் சபையில் வந்திருந்த சூதர்களின் பெயர்: விவிம்சதி, சித்ரஸேனன், புருமித்திரன், ஜயன்.  சகுனி இருக்கவே இருக்கிறான்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    “Yudhishthira said,–‘Besides the sons of Dhritarashtra what other dishonest gamblers are there ready for play? Tell us, O Vidura, who they are and with whom we shall have to play, staking hundreds upon hundreds of our possessions.’

    “Vidura said,–‘O monarch, Sakuni, the king of Gandhara, an adept at dice, having great skill of hand and desperate in stakes, Vivingati, king Chitrasena, Satyavrata, Purumitra and Jaya, these, O king, are there.’

    சாலவு மஞ்சுதரும் – கெட்ட
        சதிக்குணத் தார்பல மாயம்வல் லோர்
    கோலநற் சபைதனிலே – வந்து
        கொக்கரித் தார்ப்பரித்(து) அமர்ந்திருந்தன ரால்.
    மேலவர் தமைவணங்கி – அந்த
        வெந்திறற் பாண்டவ ரிளைஞர்த மை
    ஆலமுற் றிடத் தழுவி – செம்பொன்
        னாதனத் தமர்ந்தவப் பொழுதினி லே (165)

    பதம் பிரித்து:

    சாலவும் அஞ்சுதரும் – கெட்ட
        சதிக் குணத்தார் பல மாயம் வல்லோர்
    கோல நற் சபைதனிலே – வந்து
        கொக்கரித்து ஆர்ப்பரித்து அமர்ந்திருந்தார்.
    மேலவர் தமை வணங்கி – அந்த
        வெந்திறல் பாண்டவர் இளைஞர்தமை
    ஆலம் உற்றிடத் தழுவி – செம்பொன்
        ஆதனத்து அமர்ந்த அப் பொழுதினிலே

    அ. சொற் பொருள்:

    ‘ஆலமுற்றிடத் தழுவி’: ஆலம் – மார்பு.  மார்புறத் தழுவி. (பாரதியின் குறிப்பு)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.  முதல் அரையடியை விட, அடுத்த அரையடி பெரிதாய் இருப்பதைப் பார்க்கலாம்.  (முதல் அரையடியில் மொத்தம் ஆறு அசைகளும்; அடுத்த அரையடியில் மொத்தம் ஏழு அசைகளும் இருக்கின்றன.)  பொருள் இன்னும் முற்றுப் பெறாத காரணத்தால் – அடுத்த பாடலில் பொருள் முடிகிறது – இதுவும் குளகச் செய்யுள்.

    ஈ. பாடல் சொல்வது:

    மிகவும் அச்சத்தைத் தரக்கூடிய கெட்டதான சதிக் குணம் கொண்ட, பலவிதமான மாயங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்தச் சபையில் வந்து கூடி, கொக்கரித்து, ஆர்ப்பரித்த வண்ணம் அமர்ந்திருந்தனர்.  சபையில் நுழைந்த பாண்டவர்கள், அங்கே இருந்த மேலோரை வணரங்கினர்.  துரியோதனன் முதலான இளையவரை மார்புறத் தழுவினர்.  அதன் பிறகு அவர்கள் பொன்மயமான ஆசனங்களில் அமர்ந்தபோது —

    சபையின் தன்மை ஒரே வரியில் படம்பிடிக்கப்படுகிறது.  நாலு கயவாளிப் பயல்கள் சேரும் இடம் ஒரே கூக்குரலும் அட்டகாசமும், வெடிச் சிரிப்பும், கூத்தும், கும்மாளமும், கொக்கரிப்பும் நிறைந்ததாக இருக்கும்.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Vaisampayana said,–“The sons of Pritha with Yudhishthira at their head, having entered that assembly house, approached all the kings that were present there. And worshipping all those that deserved to be worshipped, and saluting others as each deserved according to age, they seated themselves on seats that were clean and furnished with costly carpets. (பாடல் 163க்கும் இந்தப் பகுதி மேற்கோள் காட்டப்பட

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    தருமர் தம் தம்பியருடன் அம் மண்டபத்தில் நுழைந்தவுடன் வணங்கத் தக்கவர்களைச் சென்று வணங்கினார்.  சந்திக்க வேண்ணடிய மன்னர்களைச் சந்தித்தனர்.  அங்குப் போடப்பட்டிருந்த மென்மையான மெத்தைகளில் சென்று அமர்ந்தனர்.

    சொல்லுகின் றான் சகுனி – அறத்
        தோன்றலுன் வரவினைக் காத்துளர் காண்
    மல்லுறு தடந்தோளார் – இந்த
        மன்னவ ரனைவரு நெடும்பொழு தா
    வில்லுறு போர்த்தொழிலாற் – புவி
        வென்றுநங் குலத்தினை மேம்படுத் தீர்.
    வல்லுறு சூதெனும் போர் – தனில்
        வலிமைகள் பார்க்குதும் வருதியென் றான்.  (166)

    பதம் பிரித்து:

    சொல்லுகின்றான் சகுனி – அறத்
        தோன்றல்! உன் வரவினைக் காத்துளர்காண்
    மல்உறு தடந்தோளார் – இந்த
        மன்னவர் அனைவரு நெடும்பொழுதா
    வில்லுறு போர்த்தொழிலால் – புவி
        வென்று நம் குலத்தினை மேம்படுத்தீர்.
    வல்லுறு சூது எனும் போர் – தனில்
        வலிமைகள் பார்க்குதும் வருதியென்றான்.

    அ. சொற் பொருள்: ‘அறத் தோன்றல்’ – தருமபுத்திரனே! என்னும் விளி. (பாரதியின் குறிப்பு)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.  முதல் அரையடியை விட, அடுத்த அரையடி பெரிதாய் இருப்பதைப் பார்க்கலாம்.  (முதல் அரையடியில் மொத்தம் ஆறு அசைகளும்; அடுத்த அரையடியில் மொத்தம் ஏழு அசைகளும் இருக்கின்றன.)  

    ஈ. பாடல் சொல்வது:

    சகுனி சொல்கிறான்.  ‘வா வா தர்மபுத்திரா!  வர வேண்டும், வரவேண்டும்!  மல்யுத்தத்தில் தேர்ந்த தோள் வலிமை மிக்க மன்னர்கள், இதோ வீற்றிருக்கிறார்களே, இவர்களெல்லாம் நீண்ட பொழுதாக, ‘நீ எப்போது வருவாய்,’ என்று ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.  உங்களுடைய விற்போர் ஆற்றலால் உலகனைத்த¨யும் வென்று நம் குலத்தை மேம்படச் செய்திருக்கிறீர்கள்.  இந்தச் சூதாட்டம் இருக்கிறதே, அதில் உங்களுடைய ஆற்றல் என்ன, வலிமை என்ன, எவ்வளவு தேர்ச்சி பெற்றவர்கள் நீங்கள் என்பதையும் பார்க்க ஆசைப்படகிறோம்.  வா, விளையாடலாம்.’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    After they had taken their seats, as also all the kings, Sakuni the son of Suvala addressed Yudhishthira and said, ‘O king, the assembly is full. All had been waiting for thee. Let, therefore, the dice be cast and the rules of play be fixed, O Yudhishthira.’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    அப்போது சுபலன் மகனான சகுனி, தருமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினான்.  ‘அரசே! சபையில் சூதாட்டத்திற்கு உரிய துணி விரிக்கப்பட்டிருக்கிறது.* எல்லாரும் உன்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  காய்களை உருட்டி விளையாடச் சம்மதம் அளிக்க வேண்டும்,’ என்று கூறினான்.

    (பாரதியின் சகுனி பேச்சில் நரித்தனம் வெளிப்படுவதைக் காணலாம்.)

    * இது பாடல் எண் 170ல் சொல்லப்படுகிறது.

    தருமனங் கிவைசொல்வான் – ஐய
        சதியுறு சூதினுக் கெனையழைத் தாய்
    பெருமையிங் கிதிலுண்டோ? – அறப்
        பெற்றியுண் டோமறப் பீடுள தோ?
    வருமநின் மனத்துடையாய்; – எங்கள்
        வாழ்வினை யுகந்திலை எனலறி வேன்.
    இருமையும் கெடுப்பதுவாம் – இந்த
        இழிதொழிலால் எமை அழிப்பதுற் றாய். (167)

    பதம் பிரித்து:

    தருமன் அங்கு இவை சொல்வான் – ஐய
        சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய்
    பெருமை இங்கு இதில் உண்டோ? – அறப்
        பெற்றி உண்டோ? மறப் பீடு உளதோ?
    வரும நின் மனத்துடையாய்; – எங்கள்
        வாழ்வினை உகந்திலை எனலறிவேன்.
    இருமையும் கெடுப்பதுவாம் – இந்த
        இழிதொழிலால் எமை அழிப்பதுற்றாய்.

    அ. சொற் பொருள்:

    பெற்றி: இயல்பு, தன்மை.
    பீடு: பெருமை

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.

    ஈ. பாடல் சொல்வது:

    சகுனி அவ்வாறு சொன்னதும், தருமன் அங்கே சொன்னான்.  ‘ஐயா!  சதி நிறைந்த இந்தச் சூதாட்டத்தை ஆடுமாறு என்னை அழைத்தாய்.  இந்தச் சூதாட்டத்தில் ஏதாவது பெருமை இருக்கிறதா?  அறத்தின் தன்மையை உடையதா இது?  அல்லது போரில் பெறுகின்ற வெற்றியைப் போல் இந்தச் சூதில் பெறுகின்ற வெற்றி பெருமையைத்தான் தருமா?  உன் மனத்தில் எங்கள் மீது வன்மம் உடையவனாக இருக்கிறாய் என்பதையும், நாங்கள் வாழ்வதை நீ விரும்பவில்லை என்பதையும் நான் அறிவேன்.  இந்த உலக வாழ்விலும் சரி; மறு உலக வாழ்விலும் சரி, துன்பத்தையே தரக் கூடிய இந்த இழிவான தொழிலால் எங்களை அழிக்க நினைக்கிறாய்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    ‘Yudhishthira replied, ‘Deceitful gambling is sinful. There is no Kshatriya prowess in it. There is certainly no morality in it. Why, then, O king, dost thou praise gambling so? The wise applaud not the pride that gamesters feel in deceitful play. O Sakuni, vanquish us, not like a wretch, by deceitful means.’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    அதற்கு யுதிஷ்டிர், ‘அரசே! சூதாட்டம் பாவமானது;  தீமை பயப்பது; உண்மையான வீரனுக்கு அழகில்லை; கொடிய தவறான பாதையில் சென்று என்னை ஜெயிக்க முயலாதே,’ என்று கூறினார்.

    கலகல வெனச் சிரித்தான் – பழிக்
        கவற்றையோர் சாத்திரம் எனப்பயின் றோன்.
    பலபல மொழிகுவதேன் – உனைப்
        பார்த்திவ னென்றெண்ணி யழைத்துவிட் டேன்.
    நிலமுழு தாட்கொண்டாய் – தனி
        நீயெனப் பலர்சொலக் கேட்டத னால்
    சிலபொருள் விளையாட்டில் – செலும்
        செலவினுக் கழிகலை யெனநினைத்தேன். (168)

    பதம் பிரித்து:

    கலகல எனச் சிரித்தான் – பழிக்
        கவற்றை ஓர் சாத்திரம் எனப்பயின்றோன்.
    பலபல மொழிகுவதேன் – உனைப்
        பார்த்திவன் என்று எண்ணி அழைத்துவிட்டேன்.
    நிலமுழுது(ம்) ஆட்கொண்டாய் – தனி
        நீ எனப் பலர் சொலக் கேட்டதனால்
    சிலபொருள் விளையாட்டில் – செலும்
        செலவினுக்கு அழிகலை எனநினைத்தேன்.

    அ. சொற் பொருள்:

    ‘செலவினுக் கழிகலை’ – செலவுக்கு நெஞ்சு அழிய மாட்டாய்.  விளையாட்டில் கொஞ்சம் திரவியம் செலவிடுவதற்கு அஞ்சமாட்டாய்.  (பாரதியின் குறிப்பு)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    பழித்து ஒதுக்குவதற்கு உரியதான சூதாட்டத்தை ஒரு சாத்திரமாகவே பயின்றவனான சகுனி, தருமபுத்திரனுடைய சொற்களைக் கேட்டதும் கலகலவெனச் சிரித்தான்.  ‘எதற்கு இத்தனை வார்த்தைகளைப் பேசுகிறாய், பேசி ஆட்டத்துக்கு வர மறுக்கிறாய்?  என்னவோ இந்த உலகம் முழுவதையும் நீ தனி ஒருவனாக ஆட்சி செய்கிறாய் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்ட காரணத்தால், உன்னை அரசன் என்று எண்ணி சூதாட்டத்துக்கு அழைத்துவிட்டேன்.  ஏராளமான செல்வம் உன்னிடத்தில் இருக்கிறது என்ற காரணத்தால், ஏதோ கொஞ்சம் பொருளைச் சூதாட்டத்தில் செலவிட அஞ்சமாட்டாய் என்றும் நினைத்தேன்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் சேர்க்கை.  இதற்கு இணையான பகுதி வியாச பாரதத்தில் இல்லை.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் சேர்க்கை.  இதற்கு இணையான பகுதி வியாச பாரதத்தில் இல்லை.  

    பாரத மண்டலத்தார் – தங்கள்
        பதியொரு பிசுனனென் றறிவே னோ?
    சோரமிங் கிதிலுண்டோ? – தொழில்
        சூதெனி லாடுந ரரசரன் றோ?
    மாரத வீரர் முன்னே – நடு
        மண்டபத் தேபட்டப் பகலினி லே
    சூர சிகாமணியே! – நின்றன்
        சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ? (169)

    பதம் பிரித்து:

    பாரத மண்டலத்தார் – தங்கள்
        பதி ஒரு பிசுனன் என்று அறிவேனோ?
    சோரமிங்கு இதிலுண்டோ? – தொழில்
        சூதெனில் ஆடுநர் அரசரன்றோ?
    மாரத வீரர் முன்னே – நடு
        மண்டபத்தே பட்டப் பகலினிலே
    சூர சிகாமணியே! – நின்றன்
        சொத்தினைத் திருடுவம் எனும் கருத்தோ?

    அ. சொற் பொருள்:

    பிசுனன்: உலோபி (பாரதியின் குறிப்பு)

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    பாரத தேசத்தவருக்கு எல்லாம் அரசன் இருக்கிறானே, அவன் ஒரு கருமி என்பதை நான் கண்டேனா!  (தெரியாமல் அழைத்துவிட்டேன்!)  இது என்ன திருட்டு வேலையா?  சரி.  ஆடுவது சூதுதான்.  ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால் ஆடுபவர்கள் யார்?  அரசரில்லையா?  (அதற்கான மதிப்பும் மரியாதையும் உண்டல்லவா?)  என்ன!  இவ்வளவு மகாரதர்கள், இவ்வளவு வீரர்கள் கூடியிருக்கிறார்கள்.  இத்தனைப் பேருக்கும் முன்னால், நட்ட நடு சபையிலே, பட்டப் பகலிலே, உன் சொத்தையெல்லாம் திருடிக்கொள்ளப் போகிறோம் என்று நினைக்கிறாயா!  பலே!  நீ பெரிய வீரன்தான்!

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் சேர்க்கை.  இதற்கு இணையான பகுதி வியாச பாரதத்தில் இல்லை.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் சேர்க்கை.  இதற்கு இணையான பகுதி வியாச பாரதத்தில் இல்லை.  

    அச்ச மிங்கிதில் வேண்டா – விரைந்
        தாடுவ நெடும்பொழு தாயின தால்.
    கச்சையொர் நாழிகையா – நல்ல
        காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்.
    நிச்சய நீ வெல்வாய் – வெற்றி
        நினக்கியல் பாயின தறியாயோ?
    நிச்சய நீ வெல்வாய் – பல
        நினைகுவ தேன்களி தொடங்குகென்றான். (170)

    பதம் பிரித்து:

    அச்சம் இங்கு இதில் வேண்டா – விரைந்து
        ஆடுவ நெடும்பொழுது ஆயினதால்.
    கச்சையொர் நாழிகையா – நல்ல
        காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்.
    நிச்சய நீ வெல்வாய் – வெற்றி
        நினக்கு இயல்பு ஆயினது அறியாயோ?
    நிச்சய நீ வெல்வாய் – பல
        நினைகுவதேன் களி தொடங்குக என்றான்.

    அ. சொற் பொருள்:

    கச்சை: சூதாட வேண்டிய கட்டங்கள் வரைந்த துணி.

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    எழுசீர்ச் சிந்து.

    ஈ. பாடல் சொல்வது:

    ‘பயப்படாதேப்பா!  கொஞ்சமும் அஞ்ச வேண்டியது இல்லை.  ஆடுவோம் வா!  ஏற்கெனவே கால தாமதம் ஆகிவிட்டது.  நீண்ட பொழுது ஆனது.  எவ்வளவு நேரமாக இங்கே சூதாடத் தேவையான கட்டம் வரைந்த பட்டுத் துணி விரிக்கப்பட்டு, காய்கள் வைக்கப்பட்டு கிடக்கிறது!  வா, ஆடலாம்.  நிச்சயம் நீதான் வெல்வாய்.  வெற்றி பெறுவது என்பது உனக்கு இயல்பான ஒன்றில்லையா?  வா. தயங்காதே.  நிச்சயம் நீ வெல்வாய்.  என்னென்னவோ நினைத்து ஏன் தயங்குகிறாய்?  ஆடுவோம் வா,’ என்று சகுனி சொன்னான்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Sakuni said,–‘That high-souled player who knoweth the secrets of winning and losing, who is skilled in baffling the deceitful arts of his confrere, who is united in all the diverse operations of which gambling consisteth, truly knoweth the play, and he suffereth all in course of it. O son of Pritha, it is the staking at dice, which may be lost or won that may injure us. And it is for that reason that gambling is regarded as a fault. Let us, therefore, O king, begin the play. Fear not. Let the stakes be fixed. Delay not!’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    ‘கச்சையொர் நாழிகையா,’ என்ற பகுதிக்கான வியாச பாரதக் குறிப்பு பாடல் 166ல் உள்ள மொழிபெயர்ப்புப் பகுதியில் தரப்பபட்டுள்ளது.  மீண்டும் இங்கே தருகிறேன்.

    அப்போது சுபலன் மகனான சகுனி, தருமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினான்.  ‘அரசே! சபையில் சூதாட்டத்திற்கு உரிய துணி விரிக்கப்பட்டிருக்கிறது. எல்லாரும் உன்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  காய்களை உருட்டி விளையாடச் சம்மதம் அளிக்க வேண்டும்,’ என்று கூறினான்.

    சகுனியின் பாத்திரம் பாரதியின் கையில் எவ்வாறு உருப்பெற்று வளர்கிறது, எவ்வளவு தூரம் அதிகத் தந்திரத்தையும், சாதுர்யத்தையும் வெளிப்படுத்துகிறது என்பதை ஒப்பு நோக்க இந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் உதவும்.  

    தோல்வி லைக்குப் பசுவினைக் கொல்லும்
        துட்ட னிவ்வுரை கூறுதல் கேட்டே
    நூல்வி லக்கிய செய்கைகள் அஞ்சும்
        நோன்பி னோனுள நொந்திவை கூறும்:-
    தேவ லப்பெயர் மாமுனி வோனும்
        செய்ய கேள்வி அசிதனு முன்னர்க்
    காவ லர்க்கு விதித்த தந்நூலில்
        கவற்றை நஞ்செனக் கூறினர் கண்டாய். (171)

    பதம் பிரித்து:

    தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும்
        துட்டன் இவ்வுரை கூறுதல் கேட்டே
    நூல்விலக்கிய செய்கைகள் அஞ்சும்
        நோன்பினோன் உள நொந்திவை கூறும்:-
    தேவலப் பெயர் மாமுனிவோனும்
        செய்ய கேள்வி அசிதனு முன்னர்க்
    காவலர்க்கு விதித்த தந்நூலில்
        கவற்றை நஞ்செனக் கூறினர் கண்டாய்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  மேற்படிப் பாடல் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வோர் அடியிலும் (ஒற்றொழித்து) பத்துப் பத்து எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.  ‘கவற்றை’ என்று நிரையசையில் தொடங்கும் நான்காவது (மடக்கு) அடியில் பதினோரு எழுத்துகள் இருக்கின்றன.  (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    தோலுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றால், துணிந்து பசுவைக் கொல்லக் கூடிய துஷ்டனான சகுனி இந்த வார்த்தைகளைச் சொல்ல தருமபுத்திரன் கேட்டான்.  அறநூல்களால் ஒதுக்கப்பட்ட செய்கைகளைச் செய்ய அஞ்சும் அவன் உள்ளம் நொந்து போய்ச் சொல்லலானான்: ‘தேவலர் என்ற பெரிய முனிவரும், கல்வி கேள்விகளில் சிறந்த அசிதரும், அரசர்கள் பின்பற்ற வேண்டிய அறத்தைச் சொல்கின்ற நூலில், சூதாட்டம் நஞ்சைப் போன்ற ஒன்று என்று கூறினர் அல்லவா?’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    “Yudhishthira said,–‘That best of Munis, Devala, the son of Asita, who always instructeth us about all those acts that may lead to heaven, hell, or the other regions, hath said, that it is sinful to play deceitfully with a gamester.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இந்த இடத்தை மொழிபெயர்ப்பாளர் விட்டுவிட்டார்.  ஆனால், சபா பருவம், மந்திராலோசனைப் படலத்தில் (பாண்டவர்களுக்கு மயன் மண்டபம் அமைத்துத் தந்ததையும், அந்த மண்டபத்தில் நாரதர் வந்திருந்து, அவர்களை ராஜசூய யாகம் செய்யச் சொன்னதையும் சொல்லும் இடம்) பின் வருமாறு காணப்படுகிறது.

    “அப்போது அஸிதர், தேவலர், ஸத்யர் போன்ற புண்ணிய ரிஷிகள் நல்ல நீதிக் கதைகளைத் தருமருக்கு எடுத்துக் கூறினர்.”

    இந்த முனிவர்கள் தருமபுத்திரனுக்கு அறம் சொன்னது எப்போது என்பது மேற்படிக் குறிப்பால் தெரிகிறது.  பின்னால் ‘Thou hast also listened to the instruction of the great Rishi Asita on the hills of Anjana’ என்று தருமபுத்திரனைப் பார்த்து விதுரன் சொல்வதாகவும் வருகிறது.

    தேவலர், அசிதர் இருவரும் முனிவர்கள்.  தேவலர், அசிதருடைய மகன் என்பது மகாபாரதத்தில் கிடைக்கும் செய்தி.  

    வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார்
        மாயச் சூதைப் பழியெனக் கொள்வார்
    அஞ்ச லின்றி சமர்க் களத்தேறி
        யாக்கும் வெற்றி அதனை மதிப்பார்
    துஞ்ச நேரினும் தூயசொல் லன்றிச்
        சொல்மி லேச்சரைப் போலென்றுஞ் சொல்லார்
    மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில்
        மேவு மாரியர் என்றனர் மேலோர். (172)

    பதம் பிரித்து:

    வஞ்சகத்தினில் வெற்றியை வேண்டார்
        மாயச் சூதைப் பழி எனக் கொள்வார்
    அஞ்சலின்றி சமர்க் களத்து ஏறி
        யாக்கும் வெற்றி அதனை மதிப்பார்
    துஞ்ச நேரினும் தூயசொல் அன்றிச்
        சொல் மிலேச்சரைப் போல் என்றுஞ் சொல்லார்
    மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில்
        மேவும் ஆரியர் என்றனர் மேலோர்.

    அ. சொற் பொருள்:

    யாக்கும் வெற்றி: யாத்தல் என்பதற்கு இந்த இடத்தில் கட்டுதல், பிணைத்தல் என்று பொருள்.

    சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (குறள்)

    புகழை அளிக்கக் கூடிய வீர மரணத்தை வேண்டாதவர், காலில் கழலைக் கட்டுவது அதனை வெறும் ஆபரணமாகக் கருதியே.

    மிலேச்சர்: ‘தாழ்த்தப்பட்டவர்’ என்ற பொருளில் இந்நாளில் பயன்படுத்தப்படும் இந்தச் சொல்லுக்கு, ‘திருத்தமற்ற மொழி பேசும் அன்னியர்’ என்ற பொருள் உண்டு.  இந்தப் பொருளில்தான் பாரதி பல இடங்களில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான்.

    தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
    மாய்த்திட விரும்பான் வாழ்வுமொர் வாழ்வுகொல்?

    (சத்திரபதி சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது)

    ‘மிலேச்சர்களைப் போல் பேசமாட்டார்கள்,’ என்பது மூல நூலிலேயே இருக்கிறது.  மொழிபெயர்ப்புப் பகுதியைக் காணவும்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  மேற்படிப் பாடல் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வோர் அடியிலும் (ஒற்றொழித்து) பத்துப் பத்து எழுத்துகள் இருப்பதைக் காணலாம். (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    பெரிய புகழ் வாய்ந்த இந்த பாரத நாட்டிலுள்ள தலைமைக் குணம் சார்ந்த மன்னர், வஞ்சகத்தால் பெறும் வெற்றியை விரும்ப மாட்டார்கள்.  கொஞ்சமும் அச்சமின்றி போர்க்களத்துள் புகுந்து, போரிட்டுப் பெறும் வெற்றியை மட்டுமே மதிப்பார்கள்.  இறந்து போக நேர்ந்தாலும் சரி; தூய்மையான சிந்தனையை வெளிப்படுத்தும் சொற்களையே பேசுவார்களன்றி, மிலேச்சர்களைப் போல் பேசமாட்டார்கள்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    To obtain victory in battle without cunning or stratagem is the best sport. Gambling, however, as a sport, is not so. Those that are respectable never use the language of the Mlechchas, nor do they adopt  deceitfulness in their behaviour.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    அதற்கு யுதிஷ்டிரர், ‘யுத்தம் மூலம் பெறுகின்ற வெற்றியே தரும வெற்றி; சூதாட்டத்தின் மூலம் பிறரை ஜெயிக்க விரும்பாதே.  வஞ்சகத்தின் மூலம் வருகின்ற செல்வத்தையும், சந்தோஷத்தையும் நான் விரும்புவதில்லை.  சூதாடுபவர்களை யாரும் கெளரவிப்பதில்லை,’ என்று கூறினார்.

    ஆத லாலிந்தச் சூதினை வேண்டேன்!
        ஐய செல்வம் பெருமை யிவற்றின்
    காத லாலர சாற்றுவன் அல்லேன்,
        காழ்த்து நல்லற மோங்கவு மாங்கே
    ஓதலானு முணர்த்துத லானும்
        உண்மை சான்ற கலைத்தொகை யாவும்
    சாத லின்றி வளர்த்திடு மாறும்
        சகுனி யானர சாளுதல் கண்டாய். (173)

    காழ்த்தல் – அளவு கடந்து மிகுதல்

    பதம் பிரித்து:

    ஆதலால் இந்தச் சூதினை வேண்டேன்!
        ஐய, செல்வம் பெருமை இவற்றின்
    காதலால் அரசு ஆற்றுவன் அல்லேன்,
        காழ்த்து நல்லறம் ஓங்கவும் ஆங்கே
    ஓதலானும் உணர்த்துதலானும்
        உண்மை சான்ற கலைத்தொகை யாவும்
    சாதல் இன்றி வளர்த்திடு மாறும்
        சகுனி! யான் அரசாளுதல் கண்டாய்.

    அ. சொற் பொருள்: காழ்த்து, காழ்த்தல்: அளவு கடந்து மிகுதல்.  இது அரிதாகப் பயன்படும் பொருள்.  சாதாரணமாக திடமான, வைரம் பாய்ந்த என்ற பொருளில் இச்சொல் பயன்படும்.

    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்(கு) எண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு. (குறள் 760)

    முறையாக வரும் பொருளை ‘அளவுகடந்து மிகுதியாகப்’ படைத்தவர்களுக்கு அறம், இன்பம் ஆகிற மற்ற இரண்டு பொருளம் ஒன்றே போல் எளிதாகக் கிட்டும்.

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  மேற்படிப் பாடல் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வோர் அடியிலும் (ஒற்றொழித்து) பத்துப் பத்து எழுத்துகள் இருப்பதைக் காணலாம். (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    எனவே, நான் இந்தச் சூதாட்டத்தை விரும்பில்லை.  ஐயா, சகுனி!  நான் ஒன்றும் செல்வத்துக்காகவோ, பெருமைக்காகவோ அரசாள்பவன் அல்லன்.  நான் அரசாள்வது எதற்காக என்றால், நல்ல அறம் அளவின்றிப் பெருகித் தழைத்து ஓங்கவும், கல்வி தருவதனாலும், உணர்வினை ஏற்படுத்துவதாலும் வாய்மை சான்ற கலைகள் அனைத்தும் முடிவின்றி வளர்வதற்காகவும்தான்.  (எனவே, பேராசைக்காரன் என்று என்னை எண்ண வேண்டாம்.)

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாச பாரதத்தில் இந்தப் பகுதி இல்லை.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாச பாரதத்தில் இந்தப் பகுதி இல்லை.

    என்னை வஞ்சித்தென் செல்வத்தைக் கொள்வோர்
        என்ற னக்கிடர் செய்பவர் அல்லர்.
    முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்
        மூது ணர்விற்க லைத்தொகை மாய்ப்பார்
    பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில்
        பீடை செய்யுங் கலியை யழைப்பார்.
    நின்னை மிக்க பணிவொடு கேட்பேன்
        நெஞ்சிற் கொள்கையை நீக்குதி என்றான். (174)

    பதம் பிரித்து:

    என்னை வஞ்சித்து என் செல்வத்தைக் கொள்வோர்
        என்றனக்கு இடர் செய்பவர் அல்லர்.
    முன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்
        மூதுணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்
    பின்னை என் உயிர்ப் பாரத நாட்டில்
        பீடை செய்யுங் கலியை அழைப்பார்.
    நின்னை மிக்க பணிவொடு கேட்பேன்
        நெஞ்சில் கொள்கையை நீக்குதி என்றான்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  மேற்படிப் பாடல் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வோர் அடியிலும் (ஒற்றொழித்து) பத்துப் பத்து எழுத்துகள் இருப்பதைக் காணலாம். (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    என்னை வஞ்சிப்பதன் மூலம் என் செல்வத்தை என்னிடமிருந்து பறிப்பவர்கள் எனக்குத் துன்பம் விளைவிக்கிறார்கள் என்று கருத வேண்டாம்.  அவர்கள் அவ்வாறு செய்வதனால், பழ வேதம் பேணுதல் என்ற செய்கையைக் கொல்வார்; தொன்மையானதும் பல வகையானதுமான கலைகளைச் சாகடிப்பார்.  அது மட்டுமில்லை.  என் உயிர் போன்ற பாரத நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் கலியை வேண்டி அழைப்பவர்கள் ஆவார்.  ஆகவே உன்னை மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். உன் நெஞ்சில் நீ கொண்டிருக்கும் இந்தக் கொள்கையைக் கைவிடு.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாச பாரதத்தில் இந்தப் பகுதி இல்லை.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாச பாரதத்தில் இந்தப் பகுதி இல்லை.

    அப்படி அப்படியே வியாச பாரதத்தை மொழி பெயர்த்துச் சொல்லி வருவதற்கு இடையிடையே, பாரதி தன் வாக்காகச் சொல்லும் கருத்துகளைத் தொகுத்துக் கொண்டு வந்தால், பாரதி பாஞ்சாலி சபதம் இயற்றியதன் நோக்கம் பிடிபடும்.

    சாத்திரம் பேசுகின்றாய் – எனத்
        தழல்படு விழியொடு சகுனி சொல்வான்
    கோத்திரக் குலமன்னர் – பிறர்
        குறைபடத் தம்புகழ் கூறுவரோ?
    நாத்திறன் மிகவுடையாய் – எனில்
        நம்மவர் காத்திடும் பழவழக்கை
    மாத்திர மறந்துவிட்டாய் – மன்னர்
        வல்லினுக் கழைத்திடில் மறுப்பதுண்டோ? (175)

    பதம் பிரித்து: வல்லினுக் கழைத்திடில்: வல்லினுக்கு அழைத்திடில்.

    தேவையில்லை.

    அ. சொற் பொருள்: வல் – சூதாடுவதற்காகப் பயன்படுத்தும் பாய்ச்சிகை.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நான்கடி அறுசீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    ‘அட!  நன்றாகச் சாத்திரங்களை மேற்கோள் காட்டிப் பேசுகிறாயே!’ என்று (குத்தலாகப்) பேசிய சகுனியின் கண்கள் கோபத்தால் தீ உமிழ்ந்தன.  நல்ல குலத்தில் பிறந்த மன்னர்கள், தன் புகழைத் தானே பேசுவார்களோ?  (நீ அவ்வாறல்லவா பேசுகிறாய்!)  அதுவும் மற்றவர்களைத் தாழ்த்தி, உன்னை உயர்த்திக் கொள்கிறாய்.  உன்னுடைய நாவோ திறமையானது.  திறம்படப் பேசுகிறோய்.  ஆனால், ஒன்று கேட்கிறேன்.   நம்மிடம் ஒரு வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.  சூதாட வேண்டி மன்னர்கள் அழைத்தால் அதை மறுப்பதில்லை அல்லவா?  (நீ சாத்திரங்களைக் காரணம் காட்டிச் சூதாட்டத்தை மறுக்கலாம்.  ஆனால், சூதாட்டத்துக்கு அழைத்தால் மறுக்கக் கூடாது என்பதும் சாத்திரம்தானே?)

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இதற்கடுத்த பாடலோடு சேர்த்துத் தருகிறேன்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இதற்கடுத்த பாடலோடு சேர்த்துத் தருகிறேன்.

    தேர்ந்தவன் வென்றிடுவான் – தொழில்
        தேர்ச்சியில் லாதவன் தோற்றிடுவான்.
    நேர்ந்திடும் வாட்போரில் – குத்து
        நெறியறிந் தவன்வெலப் பிறனழிவான்
    ஓர்ந்திடு சாத்திரப்போர் – தனில்
        உணர்ந்தவன் வென்றிட உணராதான்
    சோர்ந்தழி வெய்திடுவான் – இவை
        சூதென்றும் சதியென்றும் சொல்வாரோ? (176)

    பதம் பிரித்து:

    தேர்ந்தவன் வென்றிடுவான் – தொழில்
        தேர்ச்சி இல்லாதவன் தோற்றிடுவான்.
    நேர்ந்திடும் வாள் போரில் – குத்து
        நெறி அறிந்தவன் வெலப் பிறன் அழிவான்
    ஓர்ந்திடு சாத்திரப் போர் – தனில்
        உணர்ந்தவன் வென்றிட, உணராதான்
    சோர்ந்து அழிவு எய்திடுவான் – இவை
        சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ?

    அ. சொற் பொருள்:

    ஓர்ந்திடு – ஓர்தல்: ஆராய்ந்து அறிதல்

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    நாலடி அறுசீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    எந்தச் செயலானாலும், யார் தேர்ச்சி பெற்றவனோ அவன் வெல்வான்.  யாருக்குத் தேர்ச்சி இல்லையோ அவன் தோற்பான்.  வாள் கொண்டு செய்கிற போரையே எடுத்துக் கொள்வோம்.  யார் ஜெயிப்பான்?  யாருக்கு வாள் பயிற்சி அதிகமோ அவன் ஜெயிப்பான்; மற்றவன் தோற்பான்.  அதுவே வேண்டாம்.  சாத்திரங்களை ஆராய்ந்து வாதுப் போர் நடத்துகிறார்கள் அல்லவா?  அங்கே யார் ஜெயிப்பார்கள்?  சாத்திரங்களில் யாருக்கு அதிகத் தேர்ச்சி இருக்கிறதோ அவர்.  மற்றவன் தோற்கத்தானே வேண்டும்?  அவனுடைய அறிவு சோர்ந்துதானே போகும்?  இவற்றையெல்லாம் சூது, சதி என்று யாராவது வருணித்துப் பேசுவார்களோ?  (மோது போருக்கும், வாது போருக்கும் என்ன நீதியோ, அதே நீதிதானே சூது போருக்கும்?  ஏன் கதை விடுகிறாய்?)

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    “Sakuni said,–‘O Yudhishthira, it is from a desire of winning, which is
    not a very honest motive, that one high-born person approacheth another
    (in a contest of race superiority). So also it is from a desire of
    defeating, which is not a very honest motive, that one learned person
    approacheth another (in a contest of learning). Such motives, however, are
    scarcely regarded as really dishonest. So also, O Yudhishthira, a person
    skilled at dice approacheth one that is not so skilled from a desire of
    vanquishing him. One also who is conversant with the truths of science
    approacheth another that is not from desire of victory, which is scarcely
    an honest motive. But (as I have already said) such a motive is not really
    dishonest.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    சகுனி, ‘யுதிஷ்டிரா! பயிற்சியுடையவன் பயிற்சி அற்றவனையும், பலமுள்ளவன் பலமற்றவனையும் ஜெயிப்பது கூட மோசமான செயல்தான். (அடுத்த பாடலுக்குத் தொடர்கிறது)

    வல்லவன் வென்றிடுவான் – தொழில்
        வன்மை யிலாதவன் தோற்றிடுவான்
    நல்லவன் அல்லாதான் – என
        நாணமி லார்சொலுங் கதைவேண்டா
    வல்லமர் செய்திடவே – இந்த
        மன்னர்முன்னே நினை அழைத்துவிட்டேன்
    சொல்லுக வருவதுண்டேல் – மனத்
        துணிவிலையேல் அதுஞ் சொல்லுகென்றான். (177)

    பதம் பிரித்து:

    வல்லவன் வென்றிடுவான் – தொழில்
        வன்மை இலாதவன் தோற்றிடுவான்
    நல்லவன் அல்லாதான் – என
        நாணம் இலார் சொலும் கதை வேண்டா
    வல் அமர் செய்திடவே – இந்த
        மன்னர் முன்னே நினை அழைத்து விட்டேன்
    சொல்லுக வருவதுண்டேல் – மனத்
        துணிவிலையேல் அதும் சொல்லுகென்றான்.

    அ. சொற் பொருள்:

    வல்லமர்: சூதாட்டமாகிய போர்

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி அறுசீர்ச் சிந்து

    ஈ. பாடல் சொல்வது:

    தொழில் வல்லமை உள்ளவன் வெல்வான்.  அது இல்லாதவன் தோற்பான்.  (இவ்வளவுதான் எல்லா வகையான ஆட்டங்களுக்கும் உள்ள பொது விதி.)  இதில் ‘நல்லவன், கெட்டவன்,’ என்றெல்லாம் பேசுகின்ற வெட்கங்கெட்ட பேச்சும், கதையும் பேச வேண்டாம்.  சூதாட்டப் போருக்கு உன்னை, இதோ, இந்த மன்னர்கள் முன்னிலையில் அழைத்திருக்கிறேன்.  துணிவிருந்தால் ஆட வா.  அப்படி வரத் துணிவிருந்தால் சொல்.  இல்லையா, பயமாக இருக்கிறதா? அதையும் சொல்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    And, O Yudhishthira, so also one that is skilled in weapons approacheth one that is not so skilled; the strong approacheth the weak. This is the practice in every contest. The motive is victory, O Yudhishthira. If, therefore, thou, in approaching me, regardest me to be actuated by motives that are dishonest, if thou art under any fear, desist then from play.’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இவ்வாறு எல்லாச் செயல்களிலும் தெரிந்தவன் தெரியாதவனை ஜெயிப்பது மோசம்தான்.  ஆனால் மக்கள் இவற்றையெல்லாம் மோசம் என்று சொல்வதில்லை.  சூதாட்டத்தை மட்டும் சொல்வது ஏன்?  நீ என்னுடன் சூதாடுவதை மோசம் என்று நினைப்பாய் ஆயின், உனக்குப் பயம் இருக்குமாயின் ஆட வேண்டாம்,’ என்று கூறினான்.

    வெய்ய தான விதியை நினைந்தான்
        விலகொ ணாதற மென்ப துணர்ந்தோன்
    பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றை
        புலனி லாதவர் தம்முடம் பாட்டை
    ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்
        ஐய கோவந்த நாண்முத லாகத்
    துய்ய சிந்தையர் எத்தனை மக்கள்
        துன்பம் இவ்வகை எய்தினர் அம்மா! (178)

    பதம் பிரித்து:

    வெய்யது ஆன விதியை நினைந்தான்
        விலக்கு ஒணாது அறம் என்பது உணர்ந்தோன்
    பொய்அது ஆகுஞ் சிறு வழக்கு ஒன்றை
        புலன் இலாதவர் தம் உடம்பாட்டை
    ஐயன் நெஞ்சில் அறம் எனக் கொண்டான்
        ஐயகோ! அந்த நாள் முதலாகத்
    துய்ய சிந்தையர் எத்தனை மக்கள்
        துன்பம் இவ்வகை எய்தினர் அம்மா!

    அ. சொற் பொருள்:

    வெய்யது: வெம்மையானது; கொடுமையானது.
    ஒணாது: ஒண்ணாது என்பதன் விகாரம்.   இயலாதது; முடியாதது என்று பொருள்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  ஒற்றொழித்து எழுத்தெண்ணினால் நேர் பத்து; நிரை பதினொன்று.  நேரசையில் தொடங்கும் ‘வெய்ய’ முதலான முதல் அரையடிகளில் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் ‘விலக்கொ’ முதலான பின் அரையடிகளில் பதினோரு எழுத்தும் இருப்பதைக் காணலாம்.  கடைசி அரையடி ‘துன்பம்’ என்று நேரசைக்கு வருகிறது.  அங்கே பத்தெழுத்து இருப்பதைக் காணலாம்.  

    பாரதி இந்த எழுத்துகளை எண்ணிப் போடவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.  பாரதியே இந்தப் பாடல்களை ‘எண்சீர் விருத்தம்’ என்றுதான் குறித்திருக்கிறான்.  இதுவே அவன் எழுத்தெண்ணிப் போடவில்லை என்பதற்குப் போதுமான சான்றாகும்.  சந்தம் கொஞ்சம் கூடப் பிசகாமல், இசையின் அளவு இம்மியும் தப்பாமல் எழுதப்பட்ட காரணத்தால் எழுத்துக் கணக்கு இயல்பாகவே மிகத் துல்லியமாக நிற்கிறது.

    ஈ. பாடல் சொல்வது:

    அறத்தை விலக்க முடியாது என்று உணர்ந்த தருமபுத்திரன், ‘விதி வெம்மையானது; கொடுமையானது’ என்று நினைத்தான்.  (ஒரு மன்னன் இன்னொரு மன்னனைச் சூதாட அழைத்துவிட்டால் அதை மறுக்கக் கூடாது என்ற) பொய்யானதும், சிறுமையானதுமான (பேச்சு) வழக்கு ஒன்றை (தவறான நம்பிக்கையை) அறிவற்றவர்கள் மட்டுமே உடன்படக்கூடிய ஒரு பேச்சை, தருமன் (கூட) தன் நெஞ்சில் அறம் என்று நினைத்துவிட்டான்.  ஐயோ!  அந்த நாள் முதல் இதோ இந்த நாள் வரைக்கும் நல்லவர்கள் எத்தனைப் பேர் இப்படி(ச் சாத்திரங்களுக்குத்) தவறான பொருள் கண்டு, துன்பத்துள் மூழ்கினார்கள்!

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    “Yudhishthira said,–‘Summoned, I do not withdraw. This is my established
    vow. And, O king, Fate is all powerful. We all are under the control of
    Destiny.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    யுதிஷ்டிரர், ‘அரசே! சூதாட்டம் என்று என்னை அழைத்துவிட்டீர்!  அழைத்தபின்னர் மறுப்பதில்லை என்பது நான் கொண்ட விரதம்.  விதியின் வசத்தில் நான் இப்போது இருக்கிறேன்…’

    வியாசர் சொல்லியுள்ள கருத்து, மேற்படிப் பாடலின் முதல் அடியிலேயே முடிந்து விடுகிறது.  இந்தப் பாடலின் இரண்டாம் அடி தொடங்கி, பாடல் எண் 182 வரையில் பாரதியின் அறச் சீற்றம் வெளிப்படுவதையும், கதைப் போக்கோடு செல்வதற்காக மெல்ல அடங்குவதையும் காணலாம்.  இந்தப் பகுதியிலும் – இனி பாடல் 182 வரையிலும் – சொல்லப்படுவது பாரதியின் வாக்கு.  என்ன கருத்துகளைச் சொல்கிறான் என்பதைக் கவனிபோம்.  சாத்திரங்களின் கருத்துகளுக்குப் பொய் விளக்கம் கொடுத்து மயங்குபவர்களைக் குறித்தும், மகாபாரதக் காலம் தொடங்கி, சமகாலம் வரையிலும் தொடரும் இப்படிப்பட்ட மூடத்தனங்களைக் குறித்து என்ன சொல்கிறான் என்பதையும் கவனிப்போம்.

    முன்பி ருந்ததொர் காரணத் தாலே
        மூட ரேபொய்யை மெய்யென லாமோ?
    முன்பெனச் சொல்லுங் காலம தற்கு
        மூட ரேயொர் வரையறை உண்டோ?
    முன்பெனச் சொலி னேற்றுமுன் பேயாம்
        மூன்று கோடி வருடமு முன்பே.
    முன்பி ருந்தெண்ணி லாது புவிமேல்
        மொய்த்த மக்களெல்லா முனி வோரோ? (179)

    பதம் பிரித்து:

    முன்பிருந்ததுஒர் காரணத்தாலே
        மூடரே, பொய்யை மெய் எனலாமோ?
    முன்பு எனச் சொல்லும் காலம் அதற்கு
        மூடரே, ஒர்(ஓர்) வரையறை உண்டோ?
    முன்பு எனச் சொலின், நேற்று முன்பேயாம்;
        மூன்று கோடி வருடமு முன்பே.
    முன்பிருந்து எண்ணிலாது புவிமேல்
        மொய்த்த மக்கள் எல்லாம் முனிவோரோ?

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  ஒற்றொழித்து எழுத்தெண்ணினால் நேர் பத்து; நிரை பதினொன்று.  இந்தப் பாட்டில் எல்லா அடிகளும் நேரசையில் தொடங்குவதால் ஒவ்வோர் அடியிலும் பத்தெழுத்துகள் இருக்கின்றன. ‘முன்பிருந்ததொர் காரணத்தாலே,’ என்ற அடியில் பத்தெழுத்தும், ‘மூடரே பொய்யை மெய்யனலாமோ’ என்ற அடியில் பத்தெழுத்தும் இருக்கின்றன.

    எளிமை கருதி இப்படி அடிக்குப் பத்தெழுத்து, பதினோரெழுத்து என்று கணக்கு சொல்கிறோம். உண்மையில் இவை அரை-அரை அடிகள்.  இவை இரண்டும் சேர்ந்தே ஒரு முழு அடியாகும்.  ஆகவே கணக்குக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது நேர் இருபது; நிரை இருபத்திரண்டு; நேரில் ஓர் அரையடியும் நிரையில் ஓர் அரையடியும் தொடங்கினால் இருபத்தொன்று என்று கணக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.   (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    (முன்னே இருப்பது, வழக்கம் என்று ஒவ்வொன்றையும் அப்படியே பின்பற்றுகிற) முட்டாள்களே, முன்னால் இவ்வாறு செய்யப்பட்டது, இது வழக்கம் என்ற காரணத்தால் பொய்யை மெய் என்று சொல்ல முடியுமா?  சரி.  முன்பு என்றால் என்ன பொருள்?  எது தொடங்கி முன்பு?  நேற்று நடந்த ஒன்றும் முன்பு நடந்ததுதான்; மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்றும் முன்பு நடந்ததுதான்.  இவற்றில் ஒவ்வொன்றையும் அப்படி அப்படியே ஏற்றுக் கொள்ள முடியுமா, ஏற்றுக் கொள்வதுதான் சரியானதாகுமா?  அப்படி ஏற்றுக்கொள்வதற்கு, இந்த பூமியில் மக்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை ஈக்களைப் போல் மொய்த்துக் கிடந்த ஒவ்வொரு மனிதனும் என்ன பெரிய முனிவனா?

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாசர் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாசர் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.

    நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
        நேர்ந்த தில்லை எனநினைத் தீரோ
    பார்பி றந்தது தொட்டின் றுமட்டும்
        பலப லப்பல பற்பல கோடி
    கார்பி றக்கு மழைத்துளி போலே
        கண்ட மக்கள் அனைவருள் ளேயும்
    நீர்பி றப்பதன் முன்பு மடமை
        நீசத் தன்மை இருந்தன அன்றோ? (180)

    பதம் பிரித்து:

    நீர்பிறக்கு முன் பார்மிசை மூடர்
        நேர்ந்ததில்லை என நினைத்தீரோ
    பார்பிறந்தது தொட்டின்று மட்டும்
        பலப லப்பல பற்பல கோடி
    கார்பிறக்கு மழைத்துளி போலே
        கண்ட மக்கள் அனைவருள் ளேயும்
    நீர்பிறப்பதன் முன்பு மடமை
        நீசத் தன்மை இருந்தன அன்றோ?

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  ஒற்றொழித்து எழுத்தெண்ணினால் நேர் பத்து; நிரை பதினொன்று.   இந்தப் பாட்டில் இரண்டாம் அடியின் மடக்கடியில் ‘பலபல’ என்று நிரையசையில் தொடங்குகிறது.  ஆகவே பதினோரு எழுத்துகளும், நேரசையில் தொடங்கம் மற்ற அடிகளில் பத்தெழுத்துகளும் உள்ளன.  (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    (பழமை பேணுவது, வழக்கம் என்ற பேரில் ‘என்ன, ஏது’ என்று கேள்வி கேட்காமால் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே பின்பற்றுவது போன்ற தவறுகளைச் செய்யும் முட்டாள்களே,) நீங்கள் பிறப்பதற்கு முன்னால் இந்த உலகத்தில் முட்டாள்களே பிறந்ததில்லை என்று நினைத்தீர்களா?  (நீங்கள்தான் உலகத்திலேயே முதல் முட்டாள்களா?  அந்தப் பெருமையெல்லாம் பட்டுக்கொள்ள வேண்டாம்.  உங்களுக்கு முன்னாலும் உலகத்தில் முட்டாள்கள் இருந்திருக்கிறார்கள்.)  மேகத்திலிருந்து மிகப் பல கோடி மழைத் துளிகள் பிறப்பதைப் போலவே பலபல பல்லாயிரம் கோடி மக்கள் இதுவரையில் உலகத்தில் தோன்றி மறைந்திருக்கிறார்கள்.  மடத்தனம் என்பதும் நீசத்தனம் என்பதும் ஏதோ நீங்கள் பிறந்த தினத்திலிருந்துதான் இந்த உலகத்தில் தோன்றின என்று நினைக்க வேண்டாம்.  உங்களுக்கு முன்னாலும் அவை இருந்தன.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாசர் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாசர் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.

    பொய்யொ ழுக்கை யறமென்று கொண்டும்
        பொய்யர் கேலியைச் சாத்திரம் என்றும்
    ஐயகோ நங்கள் பாரத நாட்டில்
        அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
    நொய்ய ராகி அழிந்தவர் கோடி.
        நூல்வ கைபல தேர்ந்து தெளிந்தோன்
    மெய்ய றிந்தவர் தம்முள் ளுயர்ந்தோன்
        விதியி னாலத் தருமனும் வீழ்ந்தான். (181)

    பதம் பிரித்து:

    பொய் ஒழுக்கை அறம் என்று கொண்டும்
        பொய்யர் கேலியைச் சாத்திரம் என்றும்
    ஐயகோ நங்கள் பாரத நாட்டில்
        அறிவிலார் அறப் பற்று மிக்குள்ளோர்
    நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி.
        நூல்வகை பல தேர்ந்து தெளிந்தோன்
    மெய்யறிந்தவர் தம்முள் உயர்ந்தோன்
        விதியினால் அத் தருமனும் வீழ்ந்தான்.

    அ. சொற் பொருள்:

    ஒழுக்கு: ஒழுக்கம்.  நீர் ஒழுக்கு என்று சொல்கிறோம்.  குழாயிலிருந்து நீர் ஒழுகுவதைப் பார்த்திருக்கிறோம்.  கச்சிதமான, மிக மிக நேரான பாதையில் மட்டும்தான் நீர் ஒழுகும்.   அதன் இயல்பான பாதையில் கோணல் ஏற்பட முடியவே முடியாது.  நீரொழுக்கு, தைல ஒழுக்கு – தைல தாரை – போன்றவற்றின் பாதை எப்போதும் மிகத் துல்லியமான நேர்க்கோட்டுப் பாதையாக இருக்கும் காரணத்தால்தான் ‘ஒழுக்கு’ என்ற சொல்லின் அடிப்படையில் ‘ஒழுக்கம்’ என்ற சொல் பிறந்தது.  

    நீரொழுக்கின் இடையில் கையை நுழைத்தாலோ, குச்சி போன்றவற்றை நீட்டினாலோ, அதன் பாதையில் பிறழ்வு ஏற்படும்.  அப்படியே மனித மனப்போக்கில் பிற இடையீடுகளாலே பிறழ்வு ஏற்படும்.  பிற தலையீடுகளால், இடையீடுகளால் பிறழ்வு ஏற்படாமல் நிற்பது மன ஒழுக்கு.  ‘தேவாலயத்துக்குச் செல்லும் போது உன் பாதையைக் காத்துக்கொள்,’ என்கிறது விவிலியம்.  செல்லும் இடம் எதுவாயினும் அதனைத் தேவாலயமாகக் கருதி, தன் பாதையைக் காத்துக்கொள்பவனே மனிதன்.

    நங்கள் – நம்முடைய
    நொய்யர் – உறுதியின்மை.  மனத் திடம் இன்மை.  

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  ஒற்றொழித்து எழுத்தெண்ணினால் நேர் பத்து; நிரை பதினொன்று.   இந்தப் பாட்டில் இரண்டாவது மடக்கடி ‘அறிவிலார்’ என்றும், நான்காவது மடக்கடி ‘விதியினால்’ என்றும் நிரையசையோடு தொடங்குகின்றன.  இந்த இரண்டு இடங்களில் பதினோ ரெழுத்தும், நேரசையில் தொடங்கும் மற்ற இடங்களில் பத்தெழுத்தும் இருப்பதைக் காணலாம்.  (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    (முன்னோரில் மூடரான சிலர் செய்த காரணத்தால் அத்தகைய) பொய்யான ஒழுக்கத்தை ‘அறம்’ என்று நினைத்துக் கொண்டும், பொய்யர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கேலிக்கு உரிய (சில) மொழிகளைச் சாத்திரம் என்று நினைத்துக் கொண்டும், ஐயோ! நம்முடைய பாரத நாட்டில் அறப்பற்று மிகுதியாக உள்ளவராய் இருந்த போதிலும் ஆராய்ந்து பார்க்கும் திறமில்லாத காரணத்தால், மன உறுதியினின்றும் விலகி அழிந்தவர்கள் பல கோடியாகும்.  நன்றாகப் படித்தவன்தான்; எத்தனையோ வகையான நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன்தான்; தெளிந்தவன்தான்; உண்மையை உணர்ந்தவர்களிலெல்லாம் மிக உயர்ந்தவன்தான்.  என்ற போதிலும், அத்தகைய தருமனும் இந்தத் தருணத்தில் வீழ்ந்தான்.  விதி.  வேறென்ன சொல்வது!  விதி.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாசர் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாசர் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.

    மதியி னும்விதி தான்பெரி தன்றோ?
        வைய மீதுள வாகு மவற்றுள்
    விதியி னும்பெரி தோர்பொரு ளுண்டோ?
        மேலை நாஞ்செயும் கர்மமல் லாதே
    நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
        நான்கு திக்கி லிருந்தும் பன்மாசு
    பதியு மாறு பிறர்செயும் கர்மப்
        பயனு நம்மை யடைவதுண் டன்றோ? (182)

    பதம் பிரித்து:

    மதியினும் விதிதான் பெரிது அன்றோ?
        வையம் மீது உளவாகும் அவற்றுள்
    விதியிலும் பெரிதோர் பொருளுண்டோ?
        மேலை, நாம் செயும் கர்மம் அல்லாதே
    நதியிலுள்ள சிறுகுழி தன்னில்
        நான்கு திக்கிலிருந்தும் பன்மாசு
    பதியுமாறு பிறர் செயும் கர்மப்
        பயனு நம்மை அடைவதுண்டன்றோ?

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    கட்டளைக் கலிப்பா.  ஒற்றொழித்து எழுத்தெண்ணினால் நேர் பத்து; நிரை பதினொன்று.   இந்தப் பாட்டில் எல்லா அடிகளும் நிரையசையில் தொடங்குகின்றன.  மடக்கடிகளில் ‘வையம்மீது’, ‘மேலை’, ‘நான்கு’ எனத் தொடங்கும் அடிகள் மட்டும் நேரசையில் தொடங்குகின்றன.  நிரை பதினொன்றும், நேர் பத்துமாக இருக்கக் காணலாம்.   (கட்டளைக் கலிப்பா பற்றிய விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    (என்ன செய்வது!)  மதியைக் காட்டிலும் விதி பெரிதாக இருந்துவிடுகிறது.  (ஊழிற் பெருவலி யாவுள?  மற்றொன்று சூழினும் தான் முந்துறும்.)  உலகத்தில் உள்ள எல்லா வகையான சக்திகளுள்ளும், விதியைக் காட்டிலும் பெரிய பொருள் ஒன்று உண்டோ?  அதற்கு மேல் ஒன்றையும் பார்க்க வேண்டியிருக்கிறது.  எப்போதும் நம் கர்மவினைப் பயன்களால் மட்டுமே நாம் துன்பங்களை அடைவதில்லை.  ஒரு நதி இருக்கிறது.  அதன் நடுவினில் ஒரு பள்ளம் இருக்கிறது.  எப்படி அந்தப் பள்ளத்துக்குள்ளே, பல வகையான குப்பைகளும் – நதியின் ஓட்டத்தால் – வந்து சேர்கிறதோ, அப்படியே மற்றவர்களுடைய தவறான செயல்களால் ஏற்படக் கூடியனவற்றின் பலன்களும் நம்மை வந்து அடைவதும் உண்டல்லவா?

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாசர் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.  வியாசர் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.

    வேறு

    மாயச் சூதி னுக்கே – ஐயன்
        மனமி ணங்கி விட்டான்
    தாய முருட்ட லானார் – அங்கே
        சகுனி யார்ப்ப ரித்தான்
    நேய முற்ற விதுரன் – போலே
        நெறியு ளோர்க ளெல்லாம்
    வாயை மூடி விட்டார் – தங்கள்
        மதிம யங்கி விட்டார். (183)

    பதம் பிரித்து:

    மாயச் சூதினுக்கே – ஐயன்
        மனம் இணங்கி விட்டான்
    தாயம் உருட்டலானார் – அங்கே
        சகுனி ஆர்ப்பரித்தான்
    நேயமுற்ற விதுரன் – போலே
        நெறி உளோர்கள் எல்லாம்
    வாயை மூடிவிட்டார் – தங்கள்
        மதிமயங்கி விட்டார்.

    அ. சொற் பொருள்:  –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    மாயத் தன்மை வாய்ந்த அந்தச் சூதாட்டத்துக்கு தருமன் மனம் இணங்கிவிட்டான்.  தாயத்தை உருட்டத் தொடங்கினார்கள்.  உருட்டத் தொடங்கிய கணத்திலிருந்து அந்த இடத்தில் சகுனியின் ஆர்ப்பரிப்புதான் அதிகமாகக் கேட்டது.  பாண்டவர்கள் மேலும், தருமத்தின் மேலும் நேசம் கொண்டவரான விதுரன் முதலான நல்ல நெறியையே பின்பற்றி நடக்கும் பெரியவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டுவிட்டார்கள்.  அவர்களுடைய அறிவில் மயக்கம் ஏற்பட்டுவிட்டது.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இது பாரதியின் வாக்கு.

    அந்த வேளை யதனில் – ஐவர்க்
        கதிப னிஃது ரைப்பான்
    பந்த யங்கள் சொல்வாய் – சகுனி
        பரப ரத்தி டாதே
    விந்தை யான செல்வம் – கொண்ட
        வேந்த ரோடு நீதான்
    வந்தெ திர்த்து விட்டாய் – எதிரே
        வைக்க நிதிய முண்டோ? (184)

    பதம் பிரித்து:

    அந்த வேளை அதனில் – ஐவர்க்கு
        அதிபன் இஃது உரைப்பான்
    பந்தயங்கள் சொல்வாய் – சகுனி
        பரபரத்திடாதே
    விந்தையான செல்வம் – கொண்ட
        வேந்தரோடு நீதான்
    வந்து எதிர்த்து விட்டாய் – எதிரே
        வைக்க நிதியமுண்டோ?

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    “Yudhishthira said,–‘Summoned, I do not withdraw. This is my established vow. And, O king, Fate is all powerful. We all are under the control of Destiny. With whom in this assembly am I to play? Who is there that can stake equally with me? Let the play begin.’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    யுதிஷ்டிரர், ‘அரசே! சூதாட்டம் என்று என்னை அழைத்துவிட்டீர்.  அழைத்த பின்னர் மறுப்பதில்லை என்பது நான் கொண்ட விரதம்.  விதியின் வசயத்தில் நான் இருக்கிறேன்.  நடப்பது நடக்கட்டும்.  நான் இப்போது யாரோடு ஆட வேண்டும்?’ என்று கேட்டார்.

    தருமன் வார்த்தை கேட்டே – துரியோ
        தனனெ ழுந்து சொல்வான்
    அருமை யான செல்வம் – என்பால்
        அளவி றந்த துண்டு
    ஒரும டங்கு வைத்தால் – எதிரே
        ஒன்ப தாக வைப்பேன்.
    பெருமை சொல்ல வேண்டாம் – ஐயா
        பின்ன டக்கு கென்றான். (185)

    பதம் பிரித்து:

    தருமன் வார்த்தை கேட்டே – துரியோ
        தனன் எழுந்து சொல்வான்
    அருமையான செல்வம் – என்பால்
        அளவு இறந்தது உண்டு
    ஒருமடங்கு வைத்தால் – எதிரே
        ஒன்பதாக வைப்பேன்.
    பெருமை சொல்ல வேண்டாம் – ஐயா
        பின் அடக்கு கென்றான்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    ‘என்னப்பா சகுனி, பரபரக்க வேண்டாம்.  வேந்தர்களோடு சூதாடும் அளவுக்குப் பொருள் இருக்கிறதா உன்னிடம்?’ என்று தருமன் சொன்னதைக் கேட்ட துரியோதனன் எழுந்தான்.  ‘என்னிடம் அளவில்லாததும் அருமையானதுமான செல்வம் இருக்கிறது.  நீ ஒரு பங்கு வைத்தால் நான் அதைப் போல் ஒன்பது பங்கு வைப்பேன்.  சும்மா பெருமை பேச வேண்டாம்.  உன் ஜம்பத்தை எல்லாம் பின்னால் அடக்கி வைத்துக்கொள்,’ என்றான்.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    “Duryodhana said,–‘O monarch, I shall supply jewels and gems and every  kind of wealth. And it is for me that this Sakuni, my uncle, will play.’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    “அதற்கு துரியோதனன், ‘அரசே! பந்தயப் பொருளை நான் வைப்பேன்; என் மாமாவாகிய இந்தச் சகுனி எனக்காக ஆடுவார்,’ என்று கூறினான்.

    இந்த இடத்தில் பாரதியின் துரியோதனன் பேச்சில் கோபமும், அகந்தையும் வெளிப்படுவதைக் கவனிக்கலாம்.  

    ஒருவ னாடப் பணயம் – வேறே
        ஒருவன் வைப்ப துண்டோ
    தரும மாகு மோடா – சொல்வாய்
        தம்பி இந்த வார்த்தை
    வரும மில்லை ஐயா – இங்கு
        மாம னாடப் பணயம்
    மருகன் வைக்கொணாதோ – இதிலே
        வந்த குற்றம் ஏதோ (186)

    பதம் பிரித்து:

    ‘ஒருவன் ஆடப் பணயம் – வேறே
        ஒருவன் வைப்பது உண்டோ
    தருமம் ஆ¡குமோடா – சொல்வாய்
        தம்பி இந்த வார்த்தை?’
    ‘வருமம் இல்லை ஐயா – இங்கு
        மாமன் ஆடப் பணயம்
    மருகன் வைக்க ஒணாதோ? – இதிலே
        வந்த குற்றம் ஏதோ?’

    அ. சொற் பொருள்: ஒணாதோ: ஒண்ணாதோ.  முடியாதோ?
    வருமம்: வன்மம்.  வன்மம் என்பதற்குத் ‘தீராத பகை’ என்றும் பொருள்.  ‘பலர் அறியச் சொல்லக் கூடாத இரகசியம்’ என்பதும் பொருள்.  பின்னதே இங்கே பொருந்தும்.

    ஆ. இலக்கணம்: இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    இதைக் கேட்ட தருமன், ‘பந்தயம் ஆடுவது ஒருவன்.  பணயம் வைப்பது இன்னொருவன்.  இதென்ன தருமம்?  தம்பி, இந்த வார்த்தை தர்மத்தின்பாற் பட்டதா சொல்,’ என்றான்.  ‘இதில் என்ன மர்மம் வேண்டிக் கிடக்கிறது?  இதென்ன ரகசியமாகச் செய்யும் ஒன்றா?  வெளிப்படையாகத்தானே செய்கிறேன்.  மாமன் ஆடுகிறான்.  மருமகன் பணயம் வைக்கிறேன்.  இதில் என்ன குற்றம் வந்துவிட்டது?’ என்று கேட்டான் துரியோதனன்.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    “Yudhishthira said,–‘Gambling for one’s sake by the agency of another seemeth to me to be contrary to rule. Thou also, O learned one, will
    admit this. If, however, thou art still bent on it, let the play begin.’”

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    “இதைக் கேட்டவுடன் தருமபுத்திரர், ‘துரியோதனா!  ஒருவர் பந்தம் வைப்பது, அவருக்காக மற்றொருவர் ஆடுவது.  இது எனக்குத் தவறாகத் தோன்றுகிறது.  இருப்பினும் நான் சம்மதிக்கிறேன்.  ஆட்டத்தைத் தொடங்கலாம்,’ என்றார்.

    மறுபடியும் பாரதியின் பாடலைக் காணவும்.  துரியோதனன் சொல்லும் மறுமொழி வியாசரின் மூலத்தில் இல்லை.  ஆனால், பாரதி செய்திருக்கும் இந்த நகாசு வேலை, நிலைமையின் தீவிரத்தை அதிகரிக்கிறது.  சூடு பறக்கத் தொடங்கியிருக்கிறது.  

    பொழுது போக்கு தற்கே – சூதுப்
        போர் தொடங்கு கின்றோம்
    அழுத லேனி தற்கே – என்றே
        அங்கர் கோன கைத்தான்.
    பழுதி ருப்ப தெல்லாம் – இங்கே
        பார்த்தி வர்க்கு ரைத்தேன்
    முழுதும் இங்கிதற்கே – பின்னர்
        முடிவு காண்பிர் என்றான். (187)

    பதம் பிரித்து:

    பொழுது போக்குதற்கே – சூதுப்
        போர் தொடங்குகின்றோம்
    அழுதல் ஏன்இதற்கே – என்றே
        அங்கர் கோன் நகைத்தான்.
    பழுது இருப்பது எல்லாம் – இங்கே
        பார்த்திவர்க்கு உரைத்தேன்
    முழுதும் இங்கு இதற்கே – பின்னர்
        முடிவு காண்பிர் என்றான்.

    அ. சொற் பொருள்: அங்கர் கோன் – அங்க தேசத்தின் அரசன்.  கர்ணன்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    ‘ஆடுவது ஒருவன்; பணயம் வைப்பது இன்னொருவன்,’ என்று இப்படி ஓர் ஆட்டமா?  சூதாட்டமே என்றாலும் இது தருமமாகுமா?’ என்று தருமபுத்திரன் கேட்டான்.  ‘அட!  வெறுமனே பொழுது போக்கலாம் என்று ஒரு கை ஆட்டம் ஆடுகிறோம்.  இதற்குப் போய் என்ன அழுமூஞ்சித்தனம்!’ என்று கர்ணன் சிரித்தான். ‘இப்படி ஆடுவது தவறானது.  இதில் என்ன தவறு இருக்கிறது என்று இங்குள்ள மன்னர்களுக்கு நான் சொல்லிவிட்டேன்.  இதன் விளைவுகளை நீங்களே பாருங்கள்,’ என்று தருமன் பதில் உரைத்தான்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    கர்ணனுடைய கேலிக் குறிப்பும், தருமனின் மறுமொழியும் வியாசரின் மூலத்தில் கிட்டவில்லை.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    மேற்படி.

    ஒளிசி றந்த மணியின் – மாலை
        ஒன்றை அங்கு வைத்தான்.
    களிமி குந்த பகைவன் – எதிரே
        கனத னங்கள் சொன்னான்.
    விழியி மைக்கு முன்னே – மாமன்
        வென்று தீர்த்து விட்டான்.
    பழியி லாத தருமன் – பின்னும்
        பந்த யங்கள் சொல்வான். (188)

    பதம் பிரித்து:

    ஒளி சிறந்த மணியின் – மாலை
        ஒன்றை அங்கு வைத்தான்.
    களி மிகுந்த பகைவன் – எதிரே
        கனதனங்கள் சொன்னான்.
    விழி இமைக்கு முன்னே – மாமன்
        வென்று தீர்த்து விட்டான்.
    பழியிலாத தருமன் – பின்னும்
        பந்தயங்கள் சொல்வான்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    ஒளி வீசும் மணிகள் பதிக்கப்பட்ட மாலை ஒன்றை தருமன் பணயமாக வைத்தான்.  சூதாட்டத்துக்கு அவன் சம்மதித்துவிட்ட களிப்பில் திளைத்துக் கொண்டிருந்த பகைவனான துரியோதனன் எதிர்ப் பணயமாக பெரிய அளவிலான பொருள்களை வைத்தான்.  கண் இமைக்கும் நேரத்தில் சகுனி அந்த மாலையை வென்றான்.  பழிக்கு அஞ்சுபவனான தருமன் அதற்கு மேல் பந்தயங்கள் சொல்லத் தொடங்கினான்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Yudhishthira said,–“O king, this excellent wealth of pearls of great value, procured from the ocean by churning it (of old), so beautiful and decked with pure gold, this, O king, is my stake. What is thy counter stake, O great king,–the wealth with which thou wishest to play with me?”

    “Duryodhana said,–‘I have many jewels and much wealth. But I am not vain of them. Win thou this stake.’

    Vaisampayana continued,–“Then Sakuni, well-skilled at dice, took up the dice and (casting them) said unto Yudhishthira, ‘Lo, I have won!’”

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    முதலில் யுதிஷ்டிரர் பேசினார்.  ‘அரசே! என்னுடைய மாலைகளில் மிகவும் சிறப்புடையதும், பொற்கட்டியினால் உண்டாக்கப்பட்டதும், விலையுயர்ந்ததுமான இந்த இரத்தின மாலை என்னுடைய பந்தயப் பொருள். இதற்குத் தகுதியான பொருளை எதிர்ப் பந்தயமாக வைத்து ஆட்டத்தைத் தொடங்கலாம்,’ என்று கூறினார்.

    பாச்சிகைகளின் உண்மையை அறிந்த சகுனி அந்தக் காய்களைக் கையில் எடுத்தான்; உருட்டினான். ‘ஜெயித்து விட்டேன்,’ என்று யுதிஷ்டிரரிடம் கூறினான்.

    மாலையைப் பணயமாக வைத்து ஆட்டத்தைத் தொடங்குவதிலிருந்து ஒவ்வொரு அடியையும் வியாசரை ஒற்றியே எடுத்து வைத்திருக்கிறான் பாரதி என்பதைக் காணலாம்.  எங்கெங்கே வியாசருடைய மொழியில் முக்கியமானவற்றை விட்டுவிடுகிறான், எங்கெங்கே வியாசர் சொல்லாத உரையாடல்களை உருவாக்குகிறான் என்பதை கவனித்து வந்தால், பாரதியின் நாடகப் பாங்கு புலப்படும்.  இந்தப் பாடலுக்கு முந்தைய பாடலில் கர்ணனுடைய பாத்திரத்தை பாரதி பேச வைத்திருப்பது ஓர் எடுத்துக்காட்டு.  ஒரே ஒரு வரியில் கர்ணனுடைய பாத்திரத் தன்மையை – அவனுள்ளே ஒரு பகுதியாக உறைந்திருக்கும் கயமையை – பாரதி வெளிக்காட்டி இருப்பதைக் காணலாம்.

    ஆயி ரங்கு டம்பொன் – வைத்தே
        ஆடு வோமி தென்றான்
    மாயம் வல்ல மாமன் – அதனை
        வசம தாக்கி விட்டான்.
    பாயுமா ஓரெட்டில் – செல்லும்
        பார மான பொற்றேர்
    தாய முருட்ட லானார் – அங்கே
        சகுனி வென்று விட்டான். (189)

    பாடல் 157க்கான குறிப்பைக் காண்க

    பதம் பிரித்து:

    ஆயிரம் குடம்பொன் – வைத்தே
        ஆடுவோம் இது என்றான்
    மாயம் வல்ல மாமன் – அதனை
        வசமதாக்கி விட்டான்.
    பாயுமா ஓரெட்டில் – செல்லும்
        பார மான பொற்றேர்
    தாய முருட்ட லானார் – அங்கே
        சகுனி வென்று விட்டான்.

    அ. சொற் பொருள்: பாயுமா: பாயும் மா; பாய்கின்ற மா.  குதிரை.  ‘பாயுமா ஓரெட்டில் செல்லும் பாரமான பொற்றேர்.’  எட்டுக் குதிரைகள் சேர்ந்து இழுக்க வேண்டிய அளவுக்கு பாரமான பெரிய பொன்னால் ஆன தேர்.  

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    ‘ஆயிரம் குடங்கள் நிறைய பொற்காசுகளை வைத்து ஆடுவோம்,’ என்று தருமன் சொன்னான்.  மாயச் சூதில் வல்லவனான சகுனி அதனை வசமாக்கிக் கொண்டான்.  ‘எட்டுக் குதிரைகள் இழுத்துச் செல்லக் கூடியதான பொன்னாலான தேரைப் பணயமாக வைக்கிறேன்,’ என்றான் தருமன்.  தாயமுருட்டினார்கள். அதனைச் சகுனி வென்று விட்டான்.

    ‘பொற்றடந் தேரொன்று வாலிகன் கொண்டு விடுத்ததும்,’ என்று துரியோதனன் பாடல் எண் ஐம்பதில் பொருமியதும், ‘வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறி’ என்று பாரதி பாடல் 157ல் சொல்வதும் இந்தத் தேரைத்தான்.  (வியாசர் ‘அறுபது வயது நிறைந்த யானை மீது ஏறிச் சென்றான்,’ என்று சொல்லியிருப்பதை பாரதி மாற்றி எழுதியிருப்பது பற்றிய குறிப்பை பாடல் 157ல் காண்க.)

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Yudhishthira said,–“Thou hast won this stake of me by unfair means. But be not so proud, O Sakuni. Let us play staking thousands upon thousands.  I have many beautiful jars each full of a thousand Nishkas in my  treasury, inexhaustible gold, and much silver and other minerals. This, O  king, is the wealth with which I will stake with thee!’”

    Vaisampayana continued,–“Thus addressed, Sakuni said unto the chief of the perpetuators of the Kuru race, the eldest of the sons of Pandu, king Yudhishthira, of glory incapable of sustaining any diminution. ‘Lo, I have won!’”

    Yudhishthira said,–‘This my sacred and victorious and royal car which gladdeneth the heart and hath carried us hither, which is equal unto a thousand cars, which is of symmetrical proportions and covered with tiger-skin, and furnished with excellent wheels and flag-staffs which is handsome, and decked with strings of little bells, whose clatter is even like the roar of the clouds or of the ocean, and which is drawn by eight noble steeds known all over the kingdom and which are white as the moon-beam and from whose hoofs no terrestrial creature can escape–this, O king, is my wealth with which I will stake with thee!’”

    Vaisampayana continued,–“Hearing these words, Sakuni ready with the
    dice, and adopting unfair means, said unto Yudhishthira, ‘Lo, I have won!’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    உடனே யுதிஷ்டிரர், ‘சகுனியே!  மோசமான இந்த ஆட்டத்தில் என்னை வென்றுவிட்டாய்.  போகட்டும்.  பொற்காசுகள் நிரம்பியுள்ள பெட்டிகளையும், தங்கக் கட்டிகளையும் பந்தயமாக வைக்கிறேன்,’ என்றான்.  சகுனி உடனே காய்களை உருட்டினான்.  ‘அவற்றையும் வென்றேன்,’ என்று கூறினான்.

    உடனே யுதிஷ்டிரர், ‘நான் ஏறி வந்த தேர் இதோ இருக்கிறது; ஆயிரம் தேர்களுக்கச் சமமானது.  புலித்தோலினால் மூடப்பட்டது.  சதங்கை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது.  வெண்மை நிறமுடையது.  எட்டுக் குதிரைகளால் இழுக்கும் தன்மையுடையது.  தற்போது இதுவே பந்தயப் பொருள்,’ என்று கூறினார்.

    வஞ்சனையே உருவான சகுனி ‘இதையும் வெற்றி கொண்டேன்,’ என்று காய்களை உருட்டிக் கொண்டே கூவினான்.  

    இளைய ரான மாதர் – செம்பொன்
        எழிலி ணைந்த வடிவும்
    வளைய ணிந்த தோளும் – மாலை
        மணிகு லுங்கு மார்பும்
    விளையு மின்ப நூல்கள் – தம்மில்
        மிக்க தேர்ச்சி யோடு
    களையி லங்கு முகமுஞ் – சாயல்
        கவினு நன்கு கொண்டோர் (190)

    பதம் பிரித்து:

    இளையரான மாதர் – செம்பொன்
        எழில் இணைந்த வடிவும்
    வளையணிந்த தோளும் – மாலை
        மணிகுலுங்கு மார்பும்
    விளையு மின்ப நூல்கள் – தம்மில்
        மிக்க தேர்ச்சியோடு
    களை இலங்கு முகமும் – சாயல்
        கவினு நன்கு கொண்டோர்

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)  பொருள் இன்னமும் முடியவில்லை.  அடுத்த பாடலின் இரண்டாமடியில்தான் முடிகிறது. எனவே இது குளகம் (குளகச் செய்யுள்).

    ஈ. பாடல் சொல்வது:

    களையான முகமும், அழகும் கொண்டவர்கள்; வளைகளை அணிந்தவர்கள்; நல்ல மணிகளால் ஆன மாலைகளை அணிந்த மார்பகத்தினர்; இன்ப நூல்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பட்ட செம்பொன்னால் செய்யப்பட்ட பதுமைகள் போன்றவர்களான…….

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    அடுத்த பாடலில் காணவும்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    அடுத்த பாடலில் காணவும்.

    ஆயி ரக்க ணக்கா – ஐவர்க்
        கடிமை செய்து வாழ்வோர்
    தாய முருட்ட லானார் – அந்தச்
        சகுனி வென்று விட்டான்.
    ஆயி ரங்க ளாவார் – செம்பொன்
        அணிகள் பூண்டி ருப்பார்
    தூயி ழைப்பொ னாடை – சுற்றும்
        தொண்டர் தம்மை வைத்தான். (191)

    பதம் பிரித்து:

    ஆயிரக் கணக்கா – ஐவர்க்கு
        அடிமை செய்து வாழ்வோர்
    தாயம் உருட்டலானார் – அந்தச்
        சகுனி வென்று விட்டான்.
    ஆயிரங்கள் ஆவார் – செம்பொன்
        அணிகள் பூண்டிருப்பார்
    தூயிழைப் பொனாடை – சுற்றும்
        தொண்டர் தம்மை வைத்தான்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    …..அப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், பாண்டவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்பவர்கள், அவர்களை ஆட்டத்தில் யுதிஷ்டிரன் வைத்தான்.  அவர்களைச் சகுனி வென்றுவிட்டான்.  பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்த தொண்டர்களை ஆயிரக் கணக்கில் வைத்தான்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    “Yudhishthira said,–‘I have a hundred thousand serving-girls, all young,
    and decked with golden bracelets on their wrists and upper arms, and with
    nishkas round their necks and other ornaments, adorned with costly
    garlands and attired in rich robes, daubed with the sandal paste, wearing
    jewels and gold, and well-skilled in the four and sixty elegant arts,
    especially versed in dancing and singing, and who wait upon and serve at
    my command the celestials, the Snataka Brahmanas, and kings. With this
    wealth, O king, I will stake with thee!’”

    Vaisampayana continued,–‘Hearing these words, Sakuni ready with the
    dice, adopting unfair means, said unto Yudhishthira. ‘Lo, I have won!’

    Yudhishthira said,–“I have thousands of serving-men, skilled in waiting
    upon guests, always attired in silken robes, endued with wisdom and
    intelligence, their senses under control though young, and decked with
    ear-rings, and who serve all guests night and day with plates and dishes
    in hand. With this wealth, O king, I will stake with thee!’”

    இந்தப் பகுதி அப்படியே இரண்டு பாடல்களில் சுருக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    பின்னர் யுதிஷ்டிரர், ‘என்னிடம் பணிவிடை புரிகின்ற அழகிய இலட்சம் பணிப்பெண்கள் உள்ளனர்.  அழகிய அணிகலன்களைப் பூண்டவர்கள்; ஆடலிலும் பாடலிலும் வல்லவர்கள்.  அவர்களைப் பந்தயப் பொருளாக வைக்கின்றேன்,’ என்று கூறினார்.  காயை உருட்டிய சகுனி அவர்களையும் வெற்றி கொண்டான்.

    பின்னர் தருமபுத்திரன் இலட்சம் வேலைக்காரர்களைப் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்றார்.

    சோர னங்க வற்றை – வார்த்தை
        சொல்லு முன்னர் வென்றான்.
    தீர மிக்க தருமன் – உள்ளத்
        திடன ழிந்தி டாதே
    நீரை யுண்ட மேகம் – போலே
        நிற்கு மாயி ரங்கள்
    வார ணங்கள் கண்டாய் – போரில்
        மறலி ஒத்து மோதும் (192)

    பதம் பிரித்து:

    சோரன் அங்கு அவற்றை – வார்த்தை
        சொல்லு முன்னர் வென்றான்.
    தீர மிக்க தருமன் – உள்ளத்
        திடன் அழிந்தி டாதே
    நீரை உண்ட மேகம் – போலே
        நிற்கும் ஆயிரங்கள்
    வாரணங்கள் கண்டாய் – போரில்
        மறலி ஒத்து மோதும்

    அ. சொற் பொருள்:  சோரன்: திருடன். வாரணம்: யானை. மறலி: எமன்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)  பொருள் இன்னமும் முடியவில்லை.  அடுத்த பாடலின் இரண்டாமடியில்தான் முடிகிறது. எனவே இது குளகம் (குளகச் செய்யுள்).

    ஈ. பாடல் சொல்வது:

    அந்தத் தொண்டர்களைத் திருடனான சகுனி அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன்னால் வென்றான்.  தைரியம் மிக்கவனான தருமன் (இவ்வளவு இழந்த போதிலும்) உள்ளத்தின் திண்மையை இழக்காதவனாகி நீருண்ட மேகங்களைப் போல் திரண்டு நிற்பனவாகிய ஆயிரக்கணக்கான யானைகள், போரின் போது எமனைப் போல் எதிரிகளோடு மோதக் கூடியவை…

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    அடுத்த பாடலில் காணவும்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    அடுத்த பாடலில் காணவும்.

    என்று வைத்த பணயம் – தன்னை
        இழிஞன் வென்று விட்டான்.
    வென்றி மிக்க படைகள் – பின்னர்
        வேந்தன் வைத்தி ழந்தான்.
    நன்றி ழைத்த தேர்கள் – போரின்
        நடையு ணர்ந்த பாகர்
    என்றி வற்றை எல்லாம் – தருமன்
        ஈடு வைத்தி ழந்தான். (193)

    பதம் பிரித்து:

    என்று வைத்த பணயம் – தன்னை
        இழிஞன் வென்றுவிட்டான்.
    வென்றி மிக்க படைகள் – பின்னர்
        வேந்தன் வைத்து இழந்தான்.
    நன்று இழைத்த தேர்கள் – போரின்
        நடை உணர்ந்த பாகர்
    என்று இவற்றை எல்லாம் – தருமன்
        ஈடு வைத்து இழந்தான்.

    அ. சொற் பொருள்: இழிஞன்: இழிவான தன்மை உடையவன்.  இகழத் தக்கவன்.  

    ஆ. இலக்கணம்: வென்றி: வெற்றி என்பதன் மெலித்தல் விகாரம்.

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    நீருண்ட மேகங்களைப் போல நிற்கும் ஆயிரம் யானைகள்….. என்று தருமன் வைத்த பணயங்களை இகழத்தக்க குணம் உடையவனான சகுனி வென்றான்.  வெற்றியையே பெறக் கூடிய படைகளை தருமன் வைத்து இழந்தான்.  நன்றாக இழைக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்கள், போரின் போது அவற்றைச் செலுத்த வேண்டிய விதங்களை உணர்ந்த தேர்ப்பாகர்கள் என்று இவற்றை எல்லாம் தருமபுத்திரன் பந்தயமாக வைத்து இழந்தான்.

    வியாசரின் மூலத்தை (மொழிபெயர்ப்பை) ஊன்றிப் படியுங்கள்.  ‘நீருண்ட மேகங்களைப் போன்ற யானைகள்’ என்ற உவமை உட்பட வியாசரின் மூலத்தில் இருப்பதைக் காணலாம்.  பந்தயப் பொருள்களை வைக்கும் வரிசை முறையைக் கூட பாரதி மாற்றவில்லை என்பது கவனிக்கத் தக்கது.  

    (இவற்றை எல்லாம் ஏன் நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறேன் என்று தோன்றலாம்.  Master stroke வருகின்ற நேரத்தில் சொல்கிறேன்.)

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    “Yudhishthira said,–‘I have, O son of Suvala, one thousand musty
    elephants with golden girdles, decked with ornaments, with the mark of
    the lotus on their temples and necks and other parts, adorned with golden
    garlands, with fine white tusks long and thick as plough-shafts, worthy
    of carrying kings on their backs, capable of bearing every kind of noise
    on the field of battle, with huge bodies, capable of battering down the
    walls of hostile towns, of the colour of new-formed clouds, and each
    possessing eight she-elephants. With this wealth, O king, I will stake
    with thee.’”

    Vaisampayana continued,–“Unto Yudhishthira who had said so, Sakuni, the
    son of Suvala, laughingly said, ‘Lo, I have won it!’

    Yudhishthira said,–‘I have as many cars as elephants, all furnished with
    golden poles and flag-staffs and well-trained horses and warriors that
    fight wonderfully and each of whom receiveth a thousand coins as his
    monthly pay whether he fighteth or not. With this wealth, O king, I will
    stake with thee!’”

    Vaisampayana continued,–“When these words had been spoken, the wretch
    Sakuni, pledged to enmity, said unto Yudhishthira, ‘Lo, I have won it.’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    போரில் தோல்வி என்பதையே அறியாத சிறந்த ஆயிரம் யானைகளைப் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்றார்.  பின்னர் ஆயிரம் தேர்களைத் தோற்றார்.  

    எண்ணி லாத கண்டீர் – புவியில்
        இணையி லாத வாகும்
    வண்ண முள்ள பரிகள் – தம்மை
        வைத்தி ழந்து விட்டான்.
    நண்ணு பொற்க டாரம் – தம்மில்
        நாலு கோடி வைத்தான்.
    கண்ணி ழப்பவன் போல் – அவையோர்
        கணமி ழந்து விட்டான். (194)

    பதம் பிரித்து:

    எண் இலாத கண்டீர் – புவியில்
        இணை இலாத ஆகும்
    வண்ணம் உள்ள பரிகள் – தம்மை
        வைத்து இழந்து விட்டான்.
    நண்ணு பொற்கடாரம் – தம்மில்
        நாலு கோடி வைத்தான்.
    கண் இழப்பவன் போல் – அவைஓர்
        கணமிழந்து விட்டான்.

    அ. சொற் பொருள்: கடாரம் – கொப்பரை.  பொன்னாலான பெரிய கொப்பரைகள்.  (கடாரம் என்பது பர்மாவுக்கு – தற்போதைய ம்யான்மார் – இன்னொரு பெயர்.  இது இன்னொரு பொருள். இங்கே பொருந்தாது.)

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    இந்தப் புவியில் இவற்றுக்கு இணையில்லை என்னும்படியான, எண்ணிக்கையில் அடங்காத குதிரைகளை வைத்து இழந்தான்.  பொன்னால் செய்யப்பட்டு, பொன்னால் நிரப்பப்பட்ட கொப்பரைகள் நாலு கோடி வைத்தான்.  கண்ணை இழப்பதைப் போல் அவற்றை ஒரே கணத்தில் இழந்துவிட்டான்.

    இந்தப் புவியில் இணையற்ற குதிரைகள் என்பதை வியாசர் எப்படிச் சொல்லியிருக்கிறார் என்று மொழிபெயர்ப்பில் பாருங்கள்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Yudhishthira said.–‘The steeds of the Tittiri, Kalmasha, and Gandharva
    breeds, decked with ornaments, which Chitraratha having been vanquished
    in battle and subdued cheerfully gave unto Arjuna, the wielder of the
    Gandiva. With this wealth, O king, I will stake with thee.”

    Vaisampayana continued, “Hearing this, Sakuni, ready at dice, adopting
    unfair means, said unto Yudhishthira: ‘Lo, I have won!’
    …. …. …. ….

    Yudhishthira said,–‘I have four hundred Nidis (jewels of great value)
    encased in sheets of copper and iron. Each one of them is equal to five
    draunikas of the costliest and purest leaf gold of the Jatarupa kind.
    With this wealth, O king, I will stake with thee.’”

    Vaisampayana continued,–“Hearing this, Sakuni ready at dice, adopting
    foul means, said unto Yudhishthira, ‘Lo, I have won it!’”

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    பின்னர் ஆயிரம் தேர்களைத் தோற்றார்.  அர்ச்சுனன் வசம் உள்ள கந்தர்வ லேகத்துக் குதிரைகளைப் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்றார்.  இவ்வாறு இன்னும் பலவற்றைத் தொடர்ந்து யுதிஷ்டிரர் தோற்றுக்கொண்டே வந்தார்.  

    மாடி ழந்து விட்டான் – தருமன்
        மந்தை மந்தை யாக
    ஆடி ழந்து விட்டான் – தருமன்
        ஆளி ழந்து விட்டான்
    பீடி ழந்த சகுனி – அங்குப்
        பின்னும் சொல்லு கின்றான்.
    நாடி ழக்க வில்லை – தருமா
        நாட்டை வைத்திடென்றான். (195)

    பதம் பிரித்து:

    மாடு இழந்து விட்டான் – தருமன்
        மந்தை மந்தையாக
    ஆடு இழந்து விட்டான் – தருமன்
        ஆள் இழந்து விட்டான்
    பீடு இழந்த சகுனி – அங்குப்
        பின்னும் சொல்லுகின்றான்.
    நாடு இழக்க வில்லை – தருமா
        நாட்டை வைத்திடென்றான்.

    அ. சொற் பொருள்: –

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    நாலடி எழுசீர்ச் சிந்து.  (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)

    ஈ. பாடல் சொல்வது:

    மந்தை மந்தையாக மாடுகளை வைத்து இழந்தான்.  ஆடுகளை வைத்து இழந்தான்.  ஆட்களை வைத்து இழந்தான்.  பெருமை தரத்தக்கனவற்றை எல்லாம் இழந்தவனான சகுனி அவனைப் பார்த்துச் சொன்னான்.  ‘தருமா, இன்னும் நாட்டை இழக்கவில்லை.  நாட்டைப் பந்தயமாக வை.’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    ‘Yudhishthira said,–‘I have, O son of Suvala, immeasurable kine and
    horses and milch cows with calves and goats and sheep in the country
    extending from the Parnasa to the eastern bank of the Sindu. With this
    wealth, O king, I will play with thee.

    Vaisampayana said,–“Hearing this Sakuni, ready with the dice, adopting
    unfair means, said unto Yudhishthira, ‘Lo, I have won!’

    Yudhishthira said,–‘I have my city, the country, land, the wealth of all
    dwelling therein except of the Brahmanas, and all those persons
    themselves except Brahmanas still remaining to me. With this wealth, O
    king, I will play with thee.’

    (இடையில் விதுரனுக்கும் துரியோதனன் போன்ற மற்றவர்களுக்கும் நடக்கும் வாதப் பிரதிவாதங்களை பாரதி விட்டுவிட்டான்.)

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    பின்னர் தருமர் சிந்து நதியின் கிழக்கே பர்ணாசி என்னும் இடத்தில் உள்ள பசு மந்தைகளையும், குதிரைக் கூட்டங்களையும், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் போன்றவற்றையும் சூதில் வைத்து விளையாடித் தோற்றார்.

    பின்னர் தருமர், நாடும், நகரமும் என்னுடைய உடைமைகள்.  பிராமணர் அல்லாத மக்களும் என்னுடைய உடைமைகள்.  தற்போது இவையே பந்தயப் பொருள்கள்,’ என்றார்.  சகுனி காய்களை உருட்டினான்.  வெற்றி பெற்றான்.

    நாட்டை வைக்கும் பகுதியில் பாரதி எதனைக் குறிப்பாக விட்டிருக்கிறான் என்பதைக் கவனிக்கவும்.  

    மாடிழந்துவிட்டான், ஆடிழந்து விட்டான் என்பனவெல்லாம் ஏதோ எதுகை நோக்கிப் போடப்பட்டவை அல்ல.  வியாசரின் மூலத்தில் உள்ளவை அப்படி அப்படியே தமிழ்க் கவிதை வடிவம் பெறுகின்றன.  

    வேறு

    ஐய கோவிதை யாதெனச் சொல்வோம்?
        அரச ரானவர் செய்குவ தொன்றோ?
    மெய்ய தாகவொர் மண்டலத் தாட்சி
        வென்று சூதினி லாளுங் கருத்தோ?
    வைய மிஃது பொறுத்திடு மோமேல்
        வான்பொ றுத்திடு மோபழி மக்காள்
    துய்ய சீர்த்தி மதிக்குல மோநாம்
        தூவென்றெள்ளி விதுரனும் சொல்வான். (196)

    பதம் பிரித்து:

    ஐயகோ இதை யாதெனச் சொல்வோம்?
        அரசரானவர் செய்குவது ஒன்றோ?
    மெய்யதாக வொர் மண்டலத்து ஆட்சி
        வென்று சூதினில் ஆளுங் கருத்தோ?
    வைய மிஃது பொறுத்திடுமோ? மேல்
        வான் பொறுத்திடுமோ பழி மக்காள்!
    துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம்!
        தூ! என்று எள்ளி விதுரனும் சொல்வான்.

    அ. சொற் பொருள்:

    துய்ய: தூய

    சீர்த்தி:

    மழவும் குழவும் இளமைப் பொருள.
    சீர்த்தி மிகுபுகழ்.  மாலை இயல்பே…. (தொல்காப்பியம், சொல்லதிகாரம்)

    சீர்த்தி என்றால் பெரும்புகழ் என்பது தொல்காப்பியம் சொல்லும் பொருள்.

    ஆ. இலக்கணம்: –  

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோர் எழுத்தும் கொண்டது.  (இந்தப் பாவில் எல்லா அரையடிகளிலும் பத்தெழுத்தும், ‘அரச ரானவர்’ என நிரையசையில் தொடங்கும் அரையடியில் பதினோரெழுத்தும் இருப்பதைக் காணலாம்.  (கட்டளைக் கலிப்பா குறித்த விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)  

    ஈ. பாடல் சொல்வது:

    இவ்வாறு சூதாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, பொறுக்க முடியாதவனாக விதுரன் எழுந்தான்.  ‘ஐயோ!  இதனை என்னவென்று சொல்வது!  அரசர்கள் செய்யும் காரியமா இது!  ஏண்டா, உண்மையிலேயே சூதில் ஒரு நாட்டை வென்று ஆளலாம் என்று நினைக்கிறீர்களா?  உங்கள் கருத்து இதுவா?  இப்படிச் சூதாடி ஒரு நாட்டை வெல்வதை உலகம் பொறுக்குமா?  (நாட்டு மக்கள் இந்த அநியாயத்தைப் பொறுப்பார்களா?)  வானத்து தேவர்கள்தாம் பொறுப்பார்களா!  பிள்ளைகளே!  இது பழி!  இது தவறு!  இந்தப் பழியை வானமும் பொறுக்காது, பூமியும் பொறுக்காது.  நல்ல சந்திர வம்சத்தில் பிறந்தவர்களா நாம்! என்ன காரியம் செய்கிறீர்கள்!  தூ!’ என்று விதுரன் கடிந்தான்.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    விதுரன் எழுந்து நேரடியாக திருதராட்டிரனிடம்தான் நேரடியாகப் பேசுகிறான்.  துரியோதனனைப் பார்த்துப் பேசுவது போன்ற இந்தச் சொற்கள் பாரதியின் வாக்கு.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    மேற்படி.

    பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும்
        பைந்து ழாயனும் பாஞ்சாலத் தானும்
    மூண்ட வெஞ்சினத் தோடுநஞ் சூழல்
        முற்றும் வேரறச் செய்குவ ரன்றோ?
    ஈண்டி ருக்கும் குருகுல வேந்தர்
        யார்க்கு மிஃதுரைப் பேன்குறிக் கொண்மின்.
    மாண்டு போரில் மடிந்து நரகில்
        மாழ்கு தற்கு வகைசெயல் வேண்டா. (197)

    பதம் பிரித்து:

    பாண்டவர் பொறை கொள்ளுவரேனும்
        பைந்துழாயனும் பாஞ்சாலத்தானும்
    மூண்ட வெஞ்சினத்தோடு நம்சூழல்
        முற்றும் வேரறச் செய்குவர் அன்றோ?
    ஈண்டு இருக்கும் குருகுல வேந்தர்
        யார்க்கும் இஃது உரைப்பேன் குறிக்கொண்மின்.
    மாண்டு போரில் மடிந்து நரகில்
        மாழ்குதற்கு வகை செயல் வேண்டா.

    அ. சொற் பொருள்:

    பொறை: பொறுமை

    பைந்துழாயன்: பசுமையான துளசியை அணிந்தவனான கண்ணன்

    பாஞ்சாலத்தான்: திரெளபதியின் தகப்பனான துருபதன்.  துருபதன் மகள்; ஆனபடியால் திரெளபதி.  பாஞ்சால நாட்டின் மன்னனான பாஞ்சாலன் மகளானதால் பாஞ்சாலி.  கிருஷ்ணை என்றும் அவளுக்குப் பெயர் உண்டு.  (கிருஷ்ணன்: கருப்பன்.  கிருஷ்ணை: கருப்பி.  நம் கலாசாரத்தில் கருப்பானவர்கள் தாழ்வாகக் கருதப்பட்டதில்லை.)

    மாழ்குதல்: கெடுதல்.  (இச்சொல்லுக்கு ‘மயங்குதல்’ என்றொரு பொருளும் உண்டு என்றாலும், இங்கே பொருந்துவது இப்பொருளே.)

    ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
    ஆஅதும் என்னும் அவர்.  (குறள் 653)

    தாம் மேலும் உயரவேண்டும் என்று நினைப்பவர்கள், தம் ஒளி கெடுவதற்குக் காரணமான செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும.  

    சூழல்: சூழ்ந்து இருப்பவர்கள்.  சுற்றத்தார்.  

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோர் எழுத்தும் கொண்டது.  (கட்டளைக் கலிப்பா குறித்த விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    நீங்கள் செய்யும் அநியாயத்தைச் சகித்துக் கொண்டு பாண்டவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள் என்றாலும், (என்ன நினைத்தீர்கள்?)  கண்ணன் இதனைப் பொறுத்துக் கொள்வானா?  துருபதன் (இவர்களுடைய மாமனார்) இதைத் தாங்குவானா?  அவர்கள் சினம் கொண்டு எழுந்தால், நம்முடைய சூழல் முற்றும், இங்கே உள்ள அத்தனைப் பேரும், அழிந்து போக வேண்டியதுதான்.  நினைவில் கொள்ளுங்கள்.  நான் இந்தச் சொற்களை இங்கே உள்ள குரு (kuru) குலத்தைச் சேர்ந்த அத்தனை மன்னர்களுக்கும் உரைக்கிறேன்.  கேட்டு, குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.  அவர்களுடைய சினம் நம்மால் தாங்கக் கூடிய ஒன்றன்று.  போரில் மாண்டு போவீர்கள்.  ‘அப்படித்தான் போரில் மாண்ட காரணத்தால் சொர்க்கத்துக்குப் போவோம்’ என்று நினைக்காதீர்கள்.  நீங்கள் செய்யும் காரியத்துக்கு நரகத்துக்குத்தான் போவீர்கள்.  நரகத்தில் கெட்டு உழல்வதற்கான வழி வகைகளைச் செய்துகொண்டிருக்க வேண்டாம்.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    விதுரன் எழுந்து நேரடியாக திருதராட்டிரனிடம்தான் நேரடியாகப் பேசுகிறான்.  துரியோதனனைப் பார்த்துப் பேசுவது போன்ற இந்தச் சொற்கள் பாரதியின் வாக்கு.  அடுத்த பாடலிலிருந்துதான் வியாசருடைய விதுரன் பேச்சு தொடங்குகிறது.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    மேற்படி.

    குலமெ லாமழி வெய்திடற் கன்றோ
        குத்தி ரத்துரி யோதனன் தன்னை
    நலமி லாவிதி நம்மிடை வைத்தான்.
        ஞால மீதி லவன் பிறந்தன்றே
    அலறி யோர்நரி போற்குரைத் திட்டான்.
        அஃது ணர்ந்த நிமித்திகர் வெய்ய
    கலகந் தோன்றுமிப் பாலகனாலே
        காணு வீரெனச் சொல்லிடக் கேட்டோம். (198)

    பதம் பிரித்து:

    குலம் எலாம் அழிவு எய்திடற்கு அன்றோ
        குத்திரத் துரியோதனன் தன்னை
    நலமிலா விதி நம்மிடை வைத்தான்.
        ஞால மீதில் அவன் பிறந்த அன்றே
    அலறி யோர் நரிபோற் குரைத்திட்டான்.
        அஃது உணர்ந்த நிமித்திகர் வெய்ய
    கலகந் தோன்றும் இப் பாலகனாலே
        காணுவீர் எனச் சொல்லிடக் கேட்டோம்.

    அ. சொற் பொருள்:

    குத்திரம் – குரூரம், வஞ்சகம்.  இந்தச் சொல்லை பாடல் எண் 127ல் (கொல்லக் கருதி சுயோதனன் முன்பு குத்திரமான சதி பல செய்தான்) விளக்கியிருக்கிறோம்.  

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோர் எழுத்தும் கொண்டது.  (கட்டளைக் கலிப்பா குறித்த விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    நலத்தைக் கெடுப்பதான விதி இருக்கிறதே, அது குரூரமும் வஞ்சகமும் கொண்ட இந்தத் துரியோதனனை எதற்காக நம் குலத்தில் தோன்ற வைத்தது?  இந்தக் குலம் முற்றும் அழிந்துபடுவதற்கா அன்றோ?  என்றைக்கு, எந்தக் கணத்தில் அவன் பிறந்தானோ, அந்தக் கணத்திலேயே – வழக்கமான மனிதக் குழந்தையின் குரலில் அன்றி – நரியைப் போல அல்லவா ஊளையிட்டான்?  இவன் அப்படி ஊளையிடக் கேட்ட வருங்காலம் உணர்ந்தோர் எல்லாம், ‘இவனால் மிகக் கொடிய கலகம் தோன்றப் போகிறது.  பார்த்துக்கொண்டே இருங்கள் என்று சொன்னார்கள் இல்லையா?  நாமெல்லாம் அந்தச் சொற்களைக் கேட்டோமில்லையா?  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Vaisampayana said,–“During the course of this gambling, certain to bring about utter ruin (on Yudhishthira), Vidura, that dispeller of all doubts, (addressing Dhritarashtra) said, ‘O great king, O thou of the Bharata race, attend to what I say, although my words may not be agreeable to thee, like medicine to one that is ill and about to breathe his last.  When this Duryodhana of sinful mind had, immediately after his birth,  cried discordantly like a jackal, it was well known that he had been ordained to bring about the destruction of the Bharata race. Know, O king, that he will be the cause of death of ye all. A jackal is living in thy house, O king, in the form of Duryodhana.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இந்த நிலையைக் கண்ட விதுரர் மனம் கொதித்தார்.  தன் அண்ணனான திருதராஷ்டிரனைக் கண்டு பேசத் தொடங்கினார். ‘அண்ணா! பரதகுலத் திலகமே!  நான் சொல்லப் போகும் விஷயம் உன் விருப்பத்திற்கு மாறுபட்டதாய் இருக்கலாம்.  துரியோதனின் இந்தச் செயல் அவனுக்கு மிகுந்த கெடுதலை உண்டாக்கும்; குல நாசத்திற்குக் காரணமாய் அமையும்.’

    (தமிழ் மொழிபெயர்ப்பைச் சுருக்கிவிட்டார்கள்.  ‘இவன் பிறந்தவுடன் நரிபோல் ஊளையிட்டான்,’ என்பன முதலான மொழிகளை விட்டுவிட்டார்கள்.  என்றாலும், ஆங்கில மொழிபெயர்ப்பில் அவை இருக்கக் காணலாம்.)

    சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு
        சொர்க்க போகம் பெறுபவன் போலப்
    பேதை நீயு முகமலர் வெய்திப்
        பெட்பு மிக்குற வீற்றிருக்கின்றாய்.
    மீதுசென்று மலையிடைத் தேனில்
        மிக்க மோகத்தி னாலொரு வேடன்
    பாத மாங்கு நழுவிட மாயும்
        படும லைச்சரி வுள்ளது காணான். (199)

    பதம் பிரித்து:

    சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு
        சொர்க்க போகம் பெறுபவன் போலப்
    பேதை நீயு முக மலர்வு எய்திப்
        பெட்பு மிக்குற வீற்று இருக்கின்றாய்.
    மீதுசென்று மலையிடைத் தேனில்
        மிக்க மோகத்தினால் ஒரு வேடன்
    பாதம் ஆங்கு நழுவிட மாயும்
        படுமலைச் சரிவுள்ளது காணான்.

    அ. சொற் பொருள்:

    பெட்பு: விருப்பம்.  அன்பு.

    ‘பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
    வீற்றிருந்தே ஆண்குயில்கள் மேனி புளகமுற….’ (குயில் பாட்டு)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோர் எழுத்தும் கொண்டது.  (கட்டளைக் கலிப்பா குறித்த விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    பிள்ளையானால் கேடுகெட்ட சூதாட்டம் ஆடுகிறான்.  அவன் அப்படிப்பட்ட சூதாட்டத்தில் வெல்கிறான் என்பதைக் கேட்டு, மனத்தில் கொண்டு, என்னவோ பெரிய சொர்க்க போகம் பெறுபவனைப் போல முட்டாள்தனமாக நீயும் முகமலர்ச்சி எய்தி (கன கம்பீரமாக) வீற்றிருக்கிறாய்.   அது அப்படித்தான் இருக்கும்.  மலையின் உச்சிக்கு ஏறி, அங்கே தொங்குகின்ற தேனடையைப் பார்த்தவண்ணமாகவே மெல்ல மெல்லப் முன்னே வந்தும், பின்னே அடி எடுத்து வைத்தும் தேனீக்கள் தாக்காமல் தேனடையைக் கவர்வது எப்படி என்ற சிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கிறான் பார், வேடன், அவனுக்கு தன் பாதத்துக்குப் பின்னால் பெரிய பள்ளத்தாக்கு இருப்பது தெரியாது.  ஒரே ஓரடி பின்னால் எடுத்து வைத்தால் படு பாதாளாத்தில் விழுந்து மரணமடைய வேண்டியதுதான் என்பதனை உணர முடியாது.  காரணம்?  தேன் அந்தப் பாடு படுத்துகிறது.  

    நீயும் உன் பிள்ளைகளும் அந்த வேடனைப் போல்தான் தேன் வேட்டை ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்.  படு பாதாளம் காத்திருக்கிறது என்பதனை உணரமாட்டாதவர்களாக இருக்கிறீர்கள்.

    இந்த உவமை அப்படியே மூலத்தில் இருப்பதைக் காணலாம்.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Thou knowest it not in consequence of thy folly. Listen now to the words of the Poet (Sukra) which I will quote. They that collect honey (in mountains), having received what they seek, do not notice that they are about to fall.  Ascending dangerous heights, abstracted in the pursuit of what they seek, they fall down and meet with destruction. This Duryodhana also, maddened with the play at dice, like the collector of honey, abstracted in what he seeketh, marketh not the consequences.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    நான் சொல்லுகின்ற நீதி மொழிகளைக் கேளுங்கள்.  மலைச் சரிவை நோக்காமல் தேன் எடுப்பதிலேயே கவனமாக இருந்து தேன் எடுப்பவன், கீழே விழுந்து அழிவது போல அழிவதற்குரிய ஏதுக்களை துரியோதனன் செய்து வருகிறான்.  

    மற்று நீருமிச் சூதெனும் கள்ளால்
        மதிம யங்கி வருஞ்செயல் காணீர்.
    முற்றுஞ் சாதி சுயோதன னாமோர்
        மூடற் காக முழுகிட லாமோ?
    பற்று மிக்கவிப் பாண்டவர் தம்மை
        பாதக த்தி லழித்திடு கின்றாய்.
    கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே
        கடலில் காயம் கரைத்த தொப்பாமே. (200)

    பதம் பிரித்து:

    மற்று நீரும் இச் சூது எனும் கள்ளால்
        மதி மயங்கி, வரும் செயல் காணீர்.
    முற்றும் சாதி சுயோதனனாம் ஓர்
        மூடற்காக முழுகிடலாமோ?
    பற்றுமிக்க இப் பாண்டவர் தம்மை
        பாதகத்தில் அழித்திடுகின்றாய்.
    கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே
        கடலில் காயம் கரைத்த தொப்பாமே.

    அ. சொற் பொருள்: காயம்: பெருங்காயம்.

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோர் எழுத்தும் கொண்டது.  (கட்டளைக் கலிப்பா குறித்த விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    தேனில் மனம் வைத்துச் சரிவைக் காண இயலாது போன வேடனைப் போல் நீங்களும் இந்தச் சூது என்னும் தேனைக் குடித்த காரணத்தால் புத்தி பேதலித்துப் போயிருக்கிறீர்கள்.  இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதைக் காண முடியாதவர்களாக இருக்கிறீர்கள்.  இந்த ஒரு துரியோதனனுக்காக நம் குலம் முழுவதும் அழியத்தான் வேண்டுமா?  நம்மிடத்தில் அன்பும் பற்றும் மிக்கவர்களான பாண்டவர்களை, இப்படிப் பாதகம் செய்து அழிக்கலாமா?  நீயுமல்லவா இந்தப் பாதகத்தில் பங்கேற்கிறாய்?  நீ எவ்வளவு கற்றவன்! எத்தனை சாத்திரங்களைக் கேட்டு அறிந்தவன்!  என்ன பயன் சொல்!  எல்லாம் கடலில் பெருங்காயம் கரைத்ததைப் போல பயனில்லாமல் போகிறது.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Making enemies of these great warriors, he beholdeth not the fall that is before him. It is known to thee, O thou of great wisdom, that amongst the Bhojas, they abandoned, for the good of the citizens a son that was unworthy of their race.

    ……….O slayer of foes, blinded by temptation and the desire of enjoyment, for the sake of gold, the king destroyed at the same time both his present and future gains. Therefore, O king, prosecute not the Pandavas from desire of profit, even like the king in story.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    பொன், பொருள், புகழ் ஆசை என்பது தேனின் இனிமைக்குச் சமமானது.  அந்த இனிமையில் மயங்கபி பின் உண்டாக்கும் அழிவை நோக்காம் வெள்றி மகிழ்வில் திளைத்துக் கெண்டிருக்கிறான்.  வீர்களுடன் பகைத்துக் கொள்ளுகிறான்.  இதனால் கெளரவர் அனைவரும் அழிந்து போவர்.  

    ============

    தேனெடுக்கும் வேடன் உவமையைச் சொல்லும் 199ஆம் பாடலைச் சொல்லும் போது ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.  

    ‘கவிதைக்குப் பொய்யழகு’ என்று அணிநலன்கள் கவிதையை அழகுபடுத்தும் தன்மையைப் பற்றிப் பேசுபவர்களிடம் நான் எப்போதும் கேட்பது இதைத்தான்.  பாரதியின் கவிதைகளில் எத்தனை உவமைகள் இருக்கின்றன?  இருக்கும் உவமைகளில் எத்தனை உவமைகள் அவனுடைய சொந்தமான உவமைகள்?  அணிகள் ஏதும் இல்லாத போதிலும் பாரதி பாடல் ஏன் இத்துணை வீரியமாக இருக்கிறது?  சத்தியம் மட்டும்தான் அழகானது.  சத்தியம் மட்டும்தான் கவிதைக்கு ஒளி தருவது.  ஆகையால்தான், ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாம்,’ என்று சொல்கிறான் பாரதி.  உள்ளத்தில் உண்மையான ஒளி உண்டானால் என்பதில்லை பொருள்; ஒளியில் மெய்யொளி, பொய்யொளி என்றெல்லாம் வேறுபாடு உண்டா என்னஸ  உள்ளத்தில் உண்மை என்னும் ஒளி.  உண்மை உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு வீற்றிருப்பதனாலே உண்டாகும் ஒளி.  அதுவே கவிதைக்கு அத்தனை அழகும்.  சில சமயங்களில் பொய்யும் அழகு சேர்க்கலாம்.  கன்னத்தில் பொட்டு வைத்ததைப் போல்.  கண்ணுக்கு மை இட்டதைப் போல்.  கொஞ்சம் மிகுந்தாலும் அழகு, முற்றிலும் கெட்டுப் போகும்.  

    வீட்டுளே நரியை விடப்பாம்பை
        வேண்டிப் பிள்ளை யெனவளர்த் திட்டோம்.
    நாட்டுளே புகழோங்கிடு மாறிந்
        நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்.
    மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று
        மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்
    கேட்டிலே களி யோடு செல்வாயோ?
        கேட்கும் காதும் இழந்து விட்டாயோ? (201)

    பதம் பிரித்து:

    வீட்டுளே நரியை விடப் பாம்பை
        வேண்டிப் பிள்ளையென வளர்த்திட்டோம்.
    நாட்டுளே புகழ் ஓங்கிடு மாறிந்
        நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்.
    மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று
        மொய்ம்பு சான்ற மயில்களைக் கொள்வாய்
    கேட்டிலே களி யோடு செல்வாயோ?
        கேட்கும் காதும் இழந்து விட்டாயோ?

    அ. சொற் பொருள்:
    மொய்ம்பு: வலிமை.  சான்ற: சான்றாண்மை உடைய; சான்றோரான.

    சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
    தாங்காது மன்னோ பொறை.  (குறள்)

    பல குணங்களாலும் நிறைந்தவர் தங்களுடைய தன்மையில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமியும் தன்னுடைய பொறுமையில் குலையும்.  

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோர் எழுத்தும் கொண்டது.  (கட்டளைக் கலிப்பா குறித்த விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    வீட்டுக்குள்ளே நரியையயும் நச்சுப் பாம்பையும் வேண்டி வேண்டி வளர்தத்தோம்.  பிள்ளை என்று கருதிய காரணத்தால்.  (எப்படியானால் என்ன, நரி தன்னுடைய புத்தியைக் காட்டாமல் போகுமா, பாம்பு கொத்தாமல் இருக்குமா?)  அண்ணா!  இந்த நரிகளை விட்டுவிடு.  விற்றுவிடு.  இந்த நரிகளுக்குப் பதிலாக, பாண்டவர்களான புலிகளைக் கொள்.  அப்படிச் செய்வாயேயானால் நாட்டில் உன்னுடைய புகழ் ஓங்கும்.  இந்த ஆந்தைகளும் காக்கைகளும் எதற்கு உதவும்?  இவற்றைத் துரத்தி அடி.  இவற்றுக்கு மாறாக வலிமை நிறைந்தவர்களும், பொறுமையிலும் மற்ற நற்குணங்களிலும் உயர்ந்தவர்களுமான, மயில்களைக் – பாண்டவர்களைக் – கொள்.  அண்ணா!  கேடு வந்திருக்கிறது!  இந்தக் கேட்டுக்குள்ளே இவ்வளவு மகிழ்ச்சியோடு செல்லலாமா?  (நான் சொல்வது எதுவுமே உன் காதில் ஏறாதா?  கண்தான் பிறவியிலேயே இல்லை என்றால்,) கேட்பதற்கான காதுகளையும் இழந்துவிட்டாயா?

    ‘கேட்கும் காதும் இழந்துவிட்டாயோ’ என்பதில் உள்ள உம்மை எண்ணும்மை என்பதை உணர்ந்தால்தான், ‘உனக்குக் கண்தான் இல்லையென்று நினைத்தேன்.  கேட்கும் காதும் இல்லையோ?’ என்று கேட்கிறான் என்பது விளங்கும்.  இதைக் குறிப்புரையில் பாரதியே, ‘கோபமிகுதியால் தன்னை மறந்து அரசனுக்குக் கண்ணில்லாமையைக் குறிக்க நேரிட்டது,’ என்று சொல்கிறான்.  ‘ஏ குருட்டுப் பயலே!  செவிடும் ஆகிவிட்டாயா?’ என்று மனக்கொதிப்புற்றுப் பேசுகிறான் விதுரன் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.  காதும். ஒரே ஒரு ‘ம்’.  எவ்வளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது!

    மயில், கோட்டான், காக்கை என்பதெல்லாம் வியாசருடைய மூலத்தில் சொல்லப்படும் உவமையைச் சற்றே மாறுபடுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.  வியாசருடைய வாக்கினால் தூண்டப்பட்டிருக்கிறது.  ஆங்கில மொழிபெயர்ப்பில் காணுங்கள்.

    ‘நரியை விற்றுப் புலிகளைக் கொள்வாய்’ என்று ‘விற்பனைச்’ சிந்தனையைத் தூண்டியிருக்கக் கூடிய குறள்:

    எற்றிற்கு உரியர் கயவர்?  ஒன்றுஉற்றக்கால்
    விற்றற்கு உரியர் விரைந்து.

    எந்த நல்ல காரியத்ததுக்கும் கயவர்களால் ஒரு பயனும் ஆகாது.  என்னதான் பண்ணலாம் அவங்களை?  ஒண்ணு பண்ணு.  உன்னால முடியும்னா, ஏதாவது சமயம் வாய்த்தால் முதல்ல இவனுகள எங்கியாவது (அடிமைகளா) வித்துத் தொலை.  ஒழியட்டும் அப்படியாவது.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    It is said that a certain king, having caused a number of wild birds that vomited gold to take up their quarters in his own house, afterwards killed them from temptation. O slayer of foes, blinded by temptation and the desire of enjoyment, for the sake of gold, the king destroyed at the same time both his present and future gains. Therefore, O king, prosecute not the Pandavas from desire of profit, even like the king in story. For then, blinded by folly thou wilt have to repent afterwards, even like the person that killed the birds.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இந்த இடம் தமிழ் மொழிபெயர்ப்பில் விடப்பட்டிருக்கிறது.

    தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ,
        சாதற் கான வயதினில் அண்ணே?
    நம்பி நின்னை யடைந்தவர் அன்றோ?
        நாத னென்றுனைக் கொண்டவர் அன்றோ?
    எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின்
        யாவுந் தான மெனக்கொடுப் பாரே!
    கும்பி மாநரகத்தி லாழ்த்தும்
        கொடிய செய்கை தொடர்வதும் என்னே? (202)

    பதம் பிரித்து:

    தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ,
        சாதலுக்கு ஆன வயதினில் அண்ணே?
    நம்பி நின்னை அடைந்தவர் அன்றோ?
        நாதன் என்று உனைக் கொண்டவர் அன்றோ?
    எம்பிரான் உளம் கொள்ளுதியாயின்
        யாவும் தானமெனக் கொடுப்பாரே!
    கும்பி மாநரகத்தில் ஆழ்த்தும்
        கொடிய செய்கை தொடர்வதும் என்னே?

    அ. சொற் பொருள்:

    வெஃகுதல்: மிகு விருப்பம்; பேராசை.

    கும்பி மாநரகம்: நரகங்கள் இருபத்தெட்டும் இருபத்தெட்டுமாக மொத்தம் ஐம்பத்தாறு வகைப்படும்.  ரெளரவ நரகம்; சூகரம்; தாலம்; தப்தகும்பம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நரகங்களில் கும்பிபாகம் என்பதும் ஒன்று.  ‘பிற உயிரைக் கொன்று தின்றோரைக் கும்பியிற் பாகப்பட்ட பொருளைப் போல் வருத்தும் இடம்’ என்பது விளக்கம்.  ‘நீ இன்று இவர்களின் மனத்தை எப்படிக் கொல்கிறாயோ, அப்படியே நாளை வருத்தப்படுவாய்,’ என்பது குறிப்பு.

    (மரத்தடி குழுவில் எப்போதோ ஐம்பத்தாறு நரகங்களைப் பற்றியும் குறிப்பு எழுதியதாக நினைவு.  இப்போது கிடைக்கவில்லை.  கிடைக்குமா ஜெ?  கிடைத்தால் இணைப்பு கொடுக்கலாம்.)

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோர் எழுத்தும் கொண்டது.  (கட்டளைக் கலிப்பா குறித்த விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    அண்ணே!  செத்துப் போகும் வயதாகியாயிற்று நமக்கெல்லாம்.  இந்த வயதில் போய் தம்பியின் பிள்ளைகள் பெருமுயற்சியால் சேர்த்துள்ள பொருளை அநியாயமான விதத்தில் கவருவதற்குப் பேராசை கொள்ளுவாயா நீ?  அவர்கள் உன்னத் தம்முடைய சொந்தத் தகப்பனாகவே அல்லவா நம்பி உன்னை அடைந்திருக்கிறார்கள்?  உன்னையே தலைவன் என்று கொண்டவர்கள் அல்லரா அவர்கள்?  ஒன்றும் வேண்டாம்.  நீ மட்டும் மனம் வைத்தாய் என்று அவர்கள் அறிந்தால், உடனே தங்களுடைய பொருள் எல்லாவற்றையும் தானமாகவே கொடுத்துவிடக் கூடியவர்கள் அல்லரா அவர்கள்!  இருந்தும் இப்படி நயவஞ்சகமான முறைகளை மேற்கொள்வது ஏன்?  அண்ணே!  இது மிகமிகக் கொடிய செயல்.  இந்தப் பாவம் நம்மைச் சும்மா விடாது.  கும்பிமா நரகத்தில் ஆழ்த்தும்.  

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Duryodhana is gambling with the son of Pandu, and thou art in raptures that he is winning. And it is such success that begeteth war, which endeth in the destruction of men. This fascination (of gambling) that thou has well-devised only leadeth to dire results. Thus hast thou simply brought on by these counsels great affliction to thy heart. And this thy quarrel with Yudhishthira, who is so closely related to thee, even if thou hadst not foreseen it, is still approved by thee. Listen, ye sons of Santanu, ye descendants of Pratipa, who are now in this assembly of the Kauravas, to these words of wisdom.  Enter ye not into the terrible fire that hath blazed forth following the wretch.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    இந்த இடம் தமிழ் மொழிபெயர்ப்பில் விடப்பட்டிருக்கிறது.

    குருகு லத்தலை வன்சபைக் கண்ணே
        கொற்ற மிக்க துரோணன் கிருபன்
    பெருகு சீர்த்தியக் கங்கையின் மைந்தன்
        பேதை நானு மதிப்பிழந் தேக
    திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
        செப்பு மந்திரம் செல்லுதல் நன்றே!
    அருகு வைக்கத் தகுதி யுள்ளானோ?
        அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே! (203)

    பதம் பிரித்து:

    குருகுலத் தலைவன் சபைக்கண்ணே
        கொற்ற மிக்க துரோணன் கிருபன்
    பெருகு சீர்த்தி அக் கங்கையின் மைந்தன்
        பேதை நானு மதிப்பிழந்தேக
    திருகு நெஞ்சச் சகுனி ஒருவன்
        செப்பு மந்திரம் செல்லுதல் நன்றே!
    அருகு வைக்கத் தகுதி உள்ளானோ?
        அவனை வெற்பிடைப் போக்குதி அண்ணே!

    அ. சொற் பொருள்:

    சீர்த்தி: மிகு புகழ். பாடல் எண் 196ல் விளக்கினோம்.

    திருகு நெஞ்சம்: கோணலான சிந்தை.  Crooked.

    வெற்பு: மலை.  சகுனி காந்தார நாட்டிலிருந்து வந்தவன்.  காந்தாரம், தற்போதைய ஆப்கானிஸ்தானத்தில் உள்ளது.  மலைகள் நிறைந்த நாடு.  

    ‘வெற்பிடைப் போக்குதி.’  காந்தார மலை நாட்டிலிருந்து வந்தவனாதலால், சகுனியை மீட்டும் அவனது மலை நாட்டுக்கு அனுப்பிவிடுக என்று சொல்லியது.  (பாரதியின் குறிப்பு)

    ஆ. இலக்கணம்: –

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோர் எழுத்தும் கொண்டது.  (கட்டளைக் கலிப்பா குறித்த விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    குரு (Kuru) குலத்தின் தலைவனான உன் சபையில், இங்கே ஆளுமை நிறைந்த துரோணன், கிருபன், புகழ் மிக்க கங்கை மைந்தனான பீஷ்மன், இவர்களோடு சேர்ந்து நான் ஒருத்தன் இருக்கிறேன் பார், முட்டாள், என்னையும் சேர்த்து, எல்லோரும் மதிப்பில்லாமல் போய்விட்டோம்.  இத்தனைப் பேர் சொல்கிறோமே, எங்கள் சொல் உன் காதுகளில் ஏறுகிறதோ?  போயும் போயும் இந்தக் கோணல் புத்திக்காரன் சொல்லும் ஆலோசனை அல்லவா செவிசாய்க்கப்படுகிறது.  அண்ணே, அவன் பக்கத்திலேனும் வைக்கத் தகுதியுள்ளவனா அண்ணே?  முதலில் அவனை அவன் மலை நாட்டுக்கு அனுப்பி வை.  வந்த இடத்துக்குத் திரும்பிப் போகட்டும் அவன்.  இங்கே என்ன வேலை அவனுக்கு?

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    Thou canst earn (by other means) as much wealth as thou seekest to earn by gambling. What dost thou gain by winning from the Pandavas their vast wealth? Win the Pandavas themselves, who will be to thee more than all the wealth they have. We all know the skill of Suvala in play. This hill-king knoweth many nefarious methods in gambling. Let Sakuni return whence he came. War not, O Bharata, with the sons of Pandu!’

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    …….விதுரர்……’சூதாட்டத்தை நிறுத்துங்கள்.  கெளரவர்களைக் காப்பாற்றுங்கள.  துரியோதனன் மேலும் மேலும் வெற்றியடைகிறான் என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டாம்.  சகுனியை அவனுடைய நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்.  பாண்டவர்களிடம் விரோதம் வேண்டாம்,’ என்று கூறினார்.

    நெறியி ழந்தபின் வாழ்வதில் இன்பம்
        நேரு மென்று நினைந்திடல் வேண்டா.
    பொறியி ழந்த சகுனியின் சூதால்
        புண்ணி யர்தமை மாற்றல ராக்கிச்
    சிறியர் பாதகர் என்றுல கெல்லாம்
        சீயென் றேச உகந்தர சாளும்
    வறிய வாழ்வை விரும்பிட லாமோ?
        வாழி சூதை நிறுத்துதி என்றான். (204)

    பதம் பிரித்து:

    நெறி இழந்தபின் வாழ்வதில் இன்பம்
        நேரும் என்று நினைந்திடல் வேண்டா.
    பொறி இழந்த சகுனியின் சூதால்
        புண்ணியர் தமை மாற்றலராக்கிச்
    சிறியர் பாதகர் என்று உலகு எல்லாம்
        ‘சீ’ என்று ஏச, உகந்து அரசாளும்
    வறிய வாழ்வை விரும்பிட லாமோ?
        வாழி சூதை நிறுத்துதி என்றான்.

    அ. சொற் பொருள்: மாற்றலர்: பகைவர்

    ஆ. இலக்கணம்:

    இ. யாப்பு:

    எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா.  நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோர் எழுத்தும் கொண்டது.  (கட்டளைக் கலிப்பா குறித்த விரிவான விளக்கத்துக்குப் பாடல் எண் 19 காண்க.)

    ஈ. பாடல் சொல்வது:

    ‘வாழ்வதற்கான தூய்மையான நெறியை இழந்து, அல்ல வழியில் சூதாடிச் சம்பாதிப்பதால் பிற்காலத்pல் இன்பம் நேரும்; இன்பமாக வாழ்ந்துவிடலாம் என்று எண்ணிவிட வேண்டாம்.  இந்தப் புத்திகெட்ட சகுனி ஆடுகின்ற சூதாட்டத்தால் நல்லவர்களை எல்லாம் பகைத்துகொண்டு, நம்மையெல்லாம் (அந்தக் காரணத்துக்காக) சின்னப் புத்திக்காரர்கள், பாதகம் செய்பவர்கள் என்று உலகம் எல்லாம் ‘சீ சீ சீ’ என்று ஏசுமாறு ஆளுவதும் ஓர் அரசாகுமா?  செல்வம் நிறைந்திருந்தால் போதுமா?  அது என்ன செல்வாக்கான வாழ்வா?  உண்மையில் பார்க்கப் போனால் அதுவன்றோ வறுமை!  அந்த வாழ்க்கையன்றோ வறிய வாழ்க்கை.  போதும்.  நீ வாழ்க.  நம் குலம் வாழட்டும்.  இத்தோடு சூதை நிறுத்துவாய் அண்ணா!’ என்று விதுரன் சொன்னான்.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):

    சூதை நிறுத்தச் சொல்லும் ஒன்றைத் தவிர மற்றவை பாரதி வாக்கு.

    இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):

    மேற்படி.

    முதற் பாகம் முற்றிற்று

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (25)

    சக்தி சக்திதாசன்
     
     

    அன்பினியவர்களே ! 

    காற்றோடு காற்றாகக் காலம் கரைகிறது. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு என்றாள் ஒளவை மூதாட்டி. 

    கல்வி ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையையும் ஒவ்வொரு விதத்தில் மாற்றியமைக்கிறது. கல்வி அடிப்படையில் மனிதருக்குக் கொடுப்பது அறிவு. நாம் படித்துப் பணிபுரியத் தொடங்கியதும் நாம் படித்தவற்றை அப்படியே உபயோகிப்பது என்பது நடைபெறாத விடயம். நாம் பயின்றவற்றை உபயோகித்து நாம் புரியும் பணியைச் செவ்வனே செய்யவதற்குத்தான் நாம் பள்ளியில் கற்ற கல்வி உதவுகிறது. 

    எம்மிடையே பள்ளியையே எட்டிப்பார்த்திராத பல வெற்றியடைந்த தொழிலதிபர்கள் உண்டு. கல்வி தான் ஒரு மனிதனின் வாழ்விற்கு அத்தியாவசியம் என்றால் பின்பு எப்படி பள்ளி வாசலையே மிதித்திராதவர்கள் வாழ்வில் வெற்றியடைந்திருக்கிறார்கள் ? 

    கேள்வி மிகவும் நியாயமானதே ! 

    எல்லாவற்றிற்கும் மேலாக மனிதர் வாழ்விலே முன்னேற அவர்களுக்குத் தேவையானது முயற்சி ஒன்றே. அம்முயற்சியின் பலனாக வாழ்வில் வெற்றியடைவோம் எனும் நம்பிக்கையின் வலுவில் தமது வாழ்வின் அனுபவங்களைத் திரட்டி அவற்றின் அறிவின் அடிப்படையில் முன்னேறுவது சாத்தியமே ! ஆனால் இவ்வதிர்ஷ்டம் வாழ்க்கையில் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. 

    என்ன ? எதற்காக இந்த அலங்கார விளக்கம் என்று சிந்திக்கிறீர்களா ? 

    இங்கிலாந்தின் கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான புதிய சட்டமூலங்களைச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, இதுபற்றிய வாதப் பிரதிவாதங்களைத் தூண்டும் வகையில் இங்கிலாந்தின் கல்வியமைச்சரினால் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

    தற்போது இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்து வருவது ஜீ.சி.எஸ்.இ என்றழைக்கப்படும் GCSEஅதாவது General Certificate of Secondary Education எனும் பட்டமாகும். இது மாணவர்களின் 16வது வயதினில் பெறப்படுவதாகும். 

    இதற்கு முன்னால் 1986ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்து வந்தது ஜீ.சி..இ (சாதாரண தரம்) மற்றும் சி.எஸ்.சி எனும் அமைப்புமாகும். இவையும் மாணவர்களின் 16வது வயதில் அவர்களின் உயர்கல்வியை நிர்ணயிப்பதற்கான திட்டங்களாகும். 

    ஆனால் இத்தகைய இரு பாடத்திட்ட அமைப்பு முறையின் படி மாணவர்கள் 16 வயதினில் இரு வகையினராகப் பிரிக்கப்படுவது உகந்த செயலல்ல எனும் காரணத்தினால் 1986ம் ஆண்டு புதிய திட்டமான ஜீ.சி.எஸ்.இ நடைமுறைக்கு வந்தது. 

    இத்திட்டத்தின் கீழ் ஒரே பாடம் பல பரீட்சைத் திணைக்களங்களினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. காலப் போக்கில் இப்பரீட்சையின் பெறுபேறுகள் (மதிப்பெண்கள்) மிகவும் முன்னேற்றமடைந்து, சித்தியெய்தும் மாண்வர்களின் விகிதம் பெருமளவில் அதிகரிக்கத் தொடங்கியது. 

    அதே சமயம் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகள் அவர்களின் தரத்தின் குறையைப்பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்கள். கல்விமுறை மிகவும் இலகுவாக்கப்படுவதாகப் பொதுவான அபிப்பிராயம் தலைதூக்கத் தொடங்கியது. 

    இப்பரீட்சைத் திட்டத்தின்படி மாண்வர்கள் 16வது வயதில் ஜீ.சி.எஸ் பயிலத் தொடங்கியதும் செமிஸ்டர் முறையில் Course Work உடன் பரீட்சையும் வைத்து அதன் பெறுபேறுகளை இரண்டு வருட முடிவில் கூட்டிப்பார்த்து அவர்களுக்கு இறுதி பெறுபேறுகள் தரப்பட்டன. 

    1994ம் ஆண்டு “ஏ ஸ்டார்” எனப்படும் அதிகூடிய பெறுபேற்றை பெற்ர மாணவர் விகிதம் 2.8 ஆக இருந்தது. 2012ல் 7.3 விகிதமாக உயர்ந்தது. இதுவே இப்பரீட்சை மிகவும் இலகுவாகக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரம் என்று வாதிட்டனர் பலர். 

    அதுமட்டுமின்றி எந்தப் பரீட்சைத் திணைக்களங்களின் வினாத்தாள்கள் இலகுவாக சித்தியெய்தக்கூடியதாக உள்ளதோ, அவற்றை தமது மாணவர்களை எடுக்கப் பண்ணுவதன் மூலம் தமது பாடசாலையின் பெறுபேற்றை உயர்த்தி பாடசாலைப்பட்டியலில் முன்னேறுவதற்கு ஏதுவாக ஆசிரியர்கள் செயற்படுகிறார்கள் என்று வேறு குற்றம் சாட்டப்பட்டது. 

    விளைவு ! குதித்தது கூட்டரசாங்கம். இப்பரீட்சை முறையை மாற்றியமைக்கப் போகிறோம் என்று ஆரம்பித்தார்கள். கூட்டரசாங்கத்தின் அங்கமாகிய லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இதை எதிர்த்தமையால் இது பின் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதன் தலைவர் நிக் கிளேக் ஆத்ரவுடன் தமது மாற்றத்தை முன்மொழிந்துள்ளார்கள் கூட்டரசாங்கத்தினர். 

    இவர்களின் இமமாற்றத்தின் படி புதிய பரீட்சை “EBACC Certificate (Engilsh Baccalaureate)” என்று அழைக்கப்படும். இம்முறையிலான பாடத்திட்டங்கள் 2015ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும் எனவும், இம்முறையிலமைந்த பரீட்சைகளை 16 வயதான மாண்வர்கள் 2017ம் ஆண்டிலிருந்து ஆரம்பிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இதன் கீழ் Course Work ம், செமிஸ்டர் முறையிலான பரீட்சைகளும் ரத்துச் செய்யப்பட்டு மாணவர்கள் இரண்டுவருடங்கள் தொடர்ந்து படித்து விட்டு இரண்டு வருட முடிவில் மிகவும் கடினமாக்கப்பட்ட பரீட்சையை எழுதுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. 

    ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் இப்பாடத்திட்டங்கள் அமையும் என கல்வியமைச்சர் மைக்கல் கோவ் (Michael Gove)அறிவித்துள்ளார். 

    விஞ்ஞானம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய குழந்தைகளைப் போலல்லாது இன்றைய குழந்தைகள் தமது அறிவில் விருத்தியடைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர்களின் கைகளில் தவழும் புதிய கருவிகள் அவர்களின் அறிவின் வளர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகிறது. 

    அதுமட்டுமின்றி மிகவும் கடினமாக தமது கல்வியில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் அவர்கள் திறமையாகச் சித்தியெய்துகிறார்கள். நாம் பரீட்சைகள் இலகுவாகிவிட்டன என்று கூறுவது அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைத்து விடாதா ? 

    பாடப்புத்தகங்களை மட்டும் படித்து இரண்டு வருடங்களின் முடிவில் பரீட்சையில் சித்தியெய்திவிட்டால் மட்டும் போதுமா? மாண்வர்களின் அறிவு பலவகைகளில் விருத்தியடையவும், அவர்களின் கற்பனா சக்தி விரிவடையவும் course work உதவுகிறதே அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பது அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா? 

    கல்வியமைச்சர் அவசரப்பட்டுவிட்டார். தேவையான அளவு ஆசிரியர்களும் மற்றைய மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளவர்களையும் கலந்தாலோசிக்கத் தவறி விட்டார். 

    இவையெல்லாம் இதற்கு எதிரானவர்களின் வாதம். 

    இங்கிலாந்து நாட்டின் கல்வித் தராதரம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடைந்து விட்டது. இதற்கு எமது பரீட்சைகளும்,அவற்றிற்கான பாடத்திட்டங்களுமே காரணம். 

    மாணவர்கள் முக்கியமான பாடங்களைக் கைவிட்டு மிகவும் இலகுவாக சித்தியெய்தக்கூடிய பிரயோசனமற்ற பாடங்களைப் பயில்கிறார்கள். தமது பாடசாலைகளின் கணிப்பை உயர்த்துவதற்காக சில பாடசாலை நிர்வாகிகளும் இதற்குத் துணை போகிறார்கள். இம்முறை நிச்சயம் மாற்றப்படத்தான் வேண்டும் என்கிறார்கள் இதற்கு ஆதரவானவர்கள். 

    ஒருநாட்டின் முதுகெலும்பு அந்நாட்டின் இளைய சந்ததியினரே. தெளிவான சிந்தனை, துணிச்சலுடன் கூடிய திட்டங்கள், தொலைநோக்கு இவைகளை மாணவர்களுக்கு அளிப்பது கல்வி. இத்தகைய மிகவும் முக்கியமான அங்கத்துடன் மாற்றங்களைச் செய்யும் போது அவையும் அரசியல் லாபங்களையும், தமது செல்வாக்கினையும் கடந்த தூய நோக்கம் கொண்டதாக அமைய வேண்டும். 

    அத்தகைய துணிச்சலையும் உயர்ந்த சிந்தனையும் கொண்டவர்களாக அரசியல் தலைவர்களும், அவர் சார்ந்த கட்சிகளும் செயலாற்ற வேண்டும். 

    இம்மாற்றங்கள் இவர்கள் எத்தகைய நோக்கம் கொண்ட அரசியல் தலைவர்கள் என்பதைக் காட்டுமா? காலம் தான் பதிலிறுக்க வேண்டும். 

    “ மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு

    மாலைகள் விழ வேண்டும் ஒரு

    மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று

    போற்றிப் புகழ வேண்டும் ” என்றார் கவியரசர். இத்தகைய இளைய சமுதாயத்தை எமது கல்விமுறை தோற்றுவிக்குமா ? 

    பொறுத்திருப்போம் . . . . 

    அன்புடன்

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை

    சக்தி சக்திதாசன்

    லண்டன்

    Share
  • Roja Muthiah Research Library cordially invites you for the monthly lecture

     

    Prof. M. Anandakrishnan Endowment Lecture Series 

    Roja Muthiah Research Library


    invites you for a

     

     lecture on

     

    “The Publication of Ramalinga Adigal’s Tiruvarutpa

     

    by

    Dr. Rick Weiss

    Senior Lecturer, Victoria University of Wellington, New Zealand 

     

    Date3rd October 2012 


    Time: 5.00 – 6.30 p.m.

     

    Venue: 
    Roja Muthiah Research Library
    3rd Cross Road, Central Polytechnic Campus
    Taramani, Chennai 600 113
    Telephone: 2254 2551 / 2254 2552

     

    Tea will be served at 4.30 p.m.

    ——————————————————-


    Summary of the talk

    The publication in 1867 of Tiruvarutpa, a book of verses by the Tamil Shaiva mystic Ramalinga Adigal, was a landmark event for his followers, but it also prompted the beginning of a dispute within Shaivism that would continue for decades. This paper looks specifically at the publication history of Tiruvarutpa, detailing the efforts of his followers to collect his verses, Ramalinga’s reluctance to cooperate with the publication work, and the content and structure of the volume that was published, especially the apparati that frame the publication. The paper will consider the motivations of Ramalinga’s followers in publishing a volume of his verses, at this transitional time when printed works were increasingly replacing manuscripts as the primary media of textual communication.

    About the Speaker

    Rick Weiss is Senior Lecturer of South Asian Religions at Victoria University of Wellington, New Zealand. He is currently working on a book on Ramalinga Adigal’s writings and institutions. He has previously published a book on siddha medicine, Recipes for Immortality (OUP, 2009).

    About Prof. M. Anandakrishnan

    Prof. Anandakrishnan obtained Ph.D in Civil Engineering (1960) from the University of Minnesota, USA. He served as Professor of Civil Engineering at IIT, Kanpur between 1963 and 1974. He served the United Nations  in the UN Centre for S&T for Development(1978-1989); as the Vice-Chancellor of Anna University (1990-96); and as Vice-Chairman of the Tamil Nadu State Council for Higher Education from 1996-2002.  Currently he is the Chairman,  Board of Governors, Indian Institute of Technology  Kanpur and Rajasthan; President, Ranganathan Centre for Information Studies (RCIS), Chennai; President, Tamil Nadu Academy of Sciences,  Chennai; Member, Board of Management, NUEPA, Delhi; Member, High Power Committee on Renovation and Rejuvenation of Higher Education in India and Chairman, Executive Council, Science City, Chennai. He was Chairman, MIDS between 2003 and 2008. He has served as Chairman or Member of several high level committees of MHRD, UGC, AICTE and NAAC. His honours and awards include Padma Shri from the President of India (2002); the Order of Scientific Merit from the President of Brazil (1996); Distinguished Leadership Award of the University of Minnesota (2003); Honorary Fellow of the Indian Society for Technical Education (2005); UGC National Swami Pranavananda Saraswati Award in Education (2006); Fellow of the Institution of Engineers, India and Fellow of the National Academy of Sciences, India. 

     
           
    Share
  • Pellentesque habitant morbi tristique senectus

    Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas. Vestibulum tortor quam, feugiat vitae, ultricies eget, tempor sit amet, ante. Donec eu libero sit amet quam egestas semper. Aenean ultricies mi vitae est. Mauris placerat eleifend leo. Quisque sit amet est et sapien ullamcorper pharetra. Vestibulum erat wisi, condimentum sed, commodo vitae, ornare sit amet, wisi. Aenean fermentum, elit eget tincidunt condimentum, eros ipsum rutrum orci, sagittis tempus lacus enim ac dui. Donec non enim in turpis pulvinar facilisis. Ut felis. Praesent dapibus, neque id cursus faucibus, tortor neque egestas augue, eu vulputate magna eros eu erat. Aliquam erat volutpat. Nam dui mi, tincidunt quis, accumsan porttitor, facilisis luctus, metus

    Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas. Vestibulum tortor quam, feugiat vitae, ultricies eget, tempor sit amet, ante. Donec eu libero sit amet quam egestas semper. Aenean ultricies mi vitae est. Mauris placerat eleifend leo. Quisque sit amet est et sapien ullamcorper pharetra. Vestibulum erat wisi, condimentum sed, commodo vitae, ornare sit amet, wisi. Aenean fermentum, elit eget tincidunt condimentum, eros ipsum rutrum orci, sagittis tempus lacus enim ac dui. Donec non enim in turpis pulvinar facilisis. Ut felis. Praesent dapibus, neque id cursus faucibus, tortor neque egestas augue, eu vulputate magna eros eu erat. Aliquam erat volutpat. Nam dui mi, tincidunt quis, accumsan porttitor, facilisis luctus, metus

    Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas. Vestibulum tortor quam, feugiat vitae, ultricies eget, tempor sit amet, ante. Donec eu libero sit amet quam egestas semper. Aenean ultricies mi vitae est. Mauris placerat eleifend leo. Quisque sit amet est et sapien ullamcorper pharetra. Vestibulum erat wisi, condimentum sed, commodo vitae, ornare sit amet, wisi. Aenean fermentum, elit eget tincidunt condimentum, eros ipsum rutrum orci, sagittis tempus lacus enim ac dui. Donec non enim in turpis pulvinar facilisis. Ut felis. Praesent dapibus, neque id cursus faucibus, tortor neque egestas augue, eu vulputate magna eros eu erat. Aliquam erat volutpat. Nam dui mi, tincidunt quis, accumsan porttitor, facilisis luctus, metus

    Share