தொல்லை காட்சி பெட்டி
மோகன் குமார்
வல்லமையில் புது பகுதியாக இன்று முதல் துவங்குகிறது தொல்லை காட்சி பெட்டி.
டிவியில் பார்க்க கூடிய நிகழ்ச்சிகள், ரசித்த சில விஷயங்கள் என எழுத ஆசை. இதனை எழுத அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை என்பதும் (பார்க்கிற எல்லா நிகழ்சிகளுக்கும் தான் நமக்கு ஒரு ஒபினியன் இருக்குமே ! ) , இத்தகைய விமர்சனம் இணையத்தில் இப்போது யாரும் எழுத வில்லை என்பதும் தொடங்க காரணங்கள்.
சில வாரங்கள் முடியாமல் போகலாம் பொறுத்தருள்க !
நல்ல நிகழ்ச்சி அறிமுகம் : களம் இறங்கியவர்கள்
புதிய தலைமுறை டிவியில் ஞாயிறு காலை 10.30 முதல் 11 வரை “களம் இறங்கியவர்கள்” என்ற நல்ல நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கபிலன் வைரமுத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வெவ்வேறு தொழில்களை செய்யும் வித்யாசமான மனிதர்களை அறிமுகம் செய்கிறது. பஸ் ஓட்டும் பெண்மணி, கல்விக்கு உதவும் குழு என வித்யாசமாய் இருக்கும். இயலும்போது பாருங்கள் இந்த நல்ல நிகழ்ச்சியை !
லக்கா கிக்கா
திங்கள் முதல் புதன் வரை ஜி தமிழ் டிவி யில் இரவு 9.30 முதல் 10.30 வரை “லக்கா கிக்கா” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. “செம்பருத்தி” புகழ் நடிகை ரோஜா இதனை தொகுத்து வழங்குகிறார். நான்கு ரவுண்டுகள் உள்ள நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் நால்வர் கலந்து கொள்கிறார்கள். கையில் ரூபாய் வைத்து கொண்டு இந்தாங்க ஐநூறு ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க , ஆயிரம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க என ரூபாய் நோட்டுகளை கலந்து கொள்பவர்களுக்கு ரோஜா தருகிறார். ரொம்ப சுமார் நிகழ்ச்சி இது ! ரோஜா முகமும் சிரிப்பும் அப்படியே இருப்பது மட்டுமே ஆறுதல் !
கிரிக்கெட்
சில வாரங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஐ. சி. சி T -20 ல் சூப்பர் 8 ஆரம்பமாகி விட்டது. தினம் இரு அட்டகாசமான மேட்சுகள்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து மேட்சில் கெயில் வழக்கம் போல் விளாசினார். கூடவே சார்லஸ் என்கிற இன்னொரு இளைஞரும் வெளுத்து வாங்கினார். இங்கிலாந்து நிச்சயம் மோசமாய் தோற்கும் என நினைத்தால் கடைசி வரை போராடி இறுதி பந்துகளில் தோற்றனர். மார்கன் ஆட்டம் அட்டகாசம் !
இந்தியாவின் ஆட்டம் தான் ரசிகர்களை செம டென்ஷன் ஆக்கி கொண்டிருக்கிறது ஹூம்
சீரியல் பக்கம்: சிந்து பைரவி
வடக்கில் வரும் சில சீரியல்கள் தமிழில் டப் ஆகி ஒளிபரப்பாகிறது. அந்த வரிசையில் ராஜ் டிவியில் வரும் சீரியல் தான் சிந்து பைரவி. சிறு வயது முதல் தோழிகளாக இருக்கும் இருவர் வளர்ந்த பின் ஒரே கணவனை மணக்கிறார்கள். இருவரில் சிந்து நல்லவள். பைரவி வில்லி. பைரவி மட்டும் கர்ப்பமாகிறாள். இருவரும் மணந்த கணவர் குழந்தை பாக்கியம் தர முடியாது என்று தெரிய வருகிறது. இப்படி போகிறது கதை.
நான் என்னவோ இந்த சீரியல் பார்ப்பதாக நினைத்து விடாதீர்கள். வீட்டில் எப்பவும் நடக்கும் டிஸ்கஷன் வைத்து தெரிஞ்சு கிட்ட கதை தான் இது. பெரும்பாலும் இந்த சீரியல் முடிந்த பின் தான் வீட்டுக்கே வருவேன். பைரவி ஓரளவு அழகு. எப்பவாவது பார்த்தால் ரசிப்பதோடு சரி
பலரும் இந்த சீரியல் பார்ப்பதாகவும், பெண்கள் இதன் ஹீரோவை சைட் அடிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்
ஜெயா டிவியில் கே. பாலசந்தர்
திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் சில வாரங்களாக தினம் இரவு பத்து மணிக்கு பேசி வருகிறார். இந்த வாரம் சில அற்புதமான படங்கள் பற்றி பேசினார். சிந்து பைரவி – முதல் முறையாக இளையராஜாவுடன் கே. பி இணைந்த படம். அதுவரை இசை அமைத்த எம். எஸ். வி யிடம் சொல்லி விட்டு அவர் மனம் நோகாமல் ராஜா பக்கம் வந்ததை சொன்னார். அப்படத்துக்கு ராஜா மற்றும் சுகாசினிக்கு கிடைத்த விருது, ஒவ்வொரு பாடலும் எப்படி வித்யாசமாய் அமைந்தது என சுவாரஸ்யமாய் இருந்தது
இன்னொரு நாள் கே. பி யின் படத்தில் என்றும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் மன்மத லீலை பற்றி பேசினார். ரஜினிக்கு எப்படி தில்லு முல்லுவோ அதே போல் கமலுக்கு இந்த படம் ! நான் ஸ்டாப் காமெடி ! இது வரை பார்க்கா விடில் டீ. வி. டி யாவது வாங்கி ஒரு முறை பாருங்கள் ( அடல்ட்ஸ் ஒன்லி படம் – ஞாபகம் இருக்கட்டும்)
சூப்பர் சிங்கர் அப்டேட்
செமி பைனல் இந்த வாரம் நடந்தது. கிளிப்பிங்கில் பிரகதி அழுகிற மாதிரி காண்பித்து அவர் தான் அவுட் ஆக போகிறார் என்கிற மாதிரி பில்ட் அப் தந்தனர். ஆனால் அவுட் ஆனது யாழினி. சுகன்யா, பிரகதி மற்றும் கெளதம் பைனல் சென்று விட்டனர்.
இது முடிந்த மறு நாளே பத்து குழந்தைகளை வைத்து கொண்டு ஒய்ல்ட் கார்ட் நடத்துகிறார்கள். இனி மக்களை ஓட்டு போட சொல்லி ஏர்டெல் நல்லா காசு பார்க்கும் !