Blog
-
ஏன் இப்படி?
எம். ஜெயராமசர்மா
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி” என்று பெருமை பேசுபவர்கள் தமிழர்களாகிய நாங்கள் தான். தமிழர் வாழ்வு பெருமையுடையது. தமிழர் நாகரிகம் உயர்ந்தது. கலை கலாச்சாரம் ஓங்கி உலகு அளந்தது. “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று சொல்லி தமிழன் என்றாலே துணிவும் அஞ்சாமையும் கொண்டவன் என்று பெருமை பேசுபவர்களும் நாங்களேதான். உண்மைதான்! எங்கு சென்றாலும் தன்னை அடையாளப்படுத்தத் தமிழன் தவறுவதில்லை என்பதும் வெட்ட வெளிச்சமானதாகும்.
உலகம் முழுவதும் தமிழன் பரந்துபட்டு வாழ்கின்றான். பலவித முயற்சிகளிலும் ஈடுபடுகின்றான். தமிழன் கைபடாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். படிப்பாகட்டும், நடிப்பாகட்டும், வியாபாரமாகட்டும், யாவற்றிலும் தனது பேராற்றலை வெளிப்படுத்தியே தமிழன் நிற்கின்றான். இதனைப் பார்க்கையில் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் பெருமையில் பூரித்தே நிற்பான்.
தமிழன் சென்ற இடமெல்லாம் கோவில்களைக் கட்டுவான். சங்கங்கள் அமைக்கத் தவறவே மாட்டான். பத்திரிகைகள் என்றால் தமிழனுக்கு உயிர் மூச்சு. கலைகளை வளர்ப்பதில் போட்டா போட்டி போடுவான். மேடைகளில் ஏறிவிட்டால் கருத்துக்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. பேனாவை எடுத்து விட்டால் கம்பனும் காளிதாசனும் கூடப் பிச்சை வாங்கவேண்டும். அந்த அளவுக்கு எழுதியே குவித்து விடுவான். பண்டிதமணி கணபதிப்பிள்ளை கம்பனை “அபரபிரமன்” என்று வியந்து கூறியிருப்பார். அவரது அந்தச் சொற்பிரயோகம் தமிழனுக்கே உரியதென்றால் அது மிகையாகாது.
இப்படியெல்லாம் பலவித ஆற்றல் கொண்ட தமிழனிடம் மிகக் கேவலமான ஒரு குணமும் குடிகொண்டு விட்டது. அதுதான் அடிமை மனப்பான்மை. தன் இனத்திடம் மிகப் பெருமை கொண்ட பொக்கிஷங்கள் இருக்கின்றனவே என்று எண்ணுவதை விட்டு விட்டு தன்னையும் தனது இனத்தையும் தாழ்த்திக்கொள்ள நினைப்பதையிட்டுத்தான் பெரும் வேதனையாக இருக்கின்றது.
உலகின் நனிசிறந்த மொழிகளிலே தமிழ் மொழியும் ஒன்று என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் உலகமொழிகளை வகைப்படுத்திய பொழுது “தமிழைப் பக்திக்குரிய மொழி” என்று சுட்டிக்காட்டினார். பக்தி இலக்கியம் தமிழ் மொழியில் உள்ள அளவு வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்பது தனிநாயகம் அடிகளாரின் கருத்துமட்டுமல்ல ஏனைய மொழியியல் அறிஞர்களின் கருத்து என்பதும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.
“பக்தி” என்பதில் அன்பும் அமைதியும் சாந்தமும் கனிவும் மென்மையும் இரக்கமும் பொறுமையும் நிறைந்திருக்கின்றது என்று கொள்ளலாம். இதனால் தான் பாட்டுக்கொருபுலவன் என்று பாராட்டப்பட்ட பாரதியும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்போலும் என எண்ணக்கிடக்கின்றது.
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெள்ளை இனத்தவர்கள் பலர் தமிழின் இனிமை கருதி அதனைக் கற்றதோடு நில்லாது – தமிழ் உள்ளம் கொண்டவர்களாக மாறியதையும் தமிழ் வரலாற்றில் அறிகின்றோம். ஜோஸப் பெஸ்க்கி என்பவர் தமது தீராத தமிழார்வத்தால் வீரமாமுனவராகி இன்பத்தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றதோடு நில்லாமல் பல அரிய படைப்புக்களையும் தமிழில் படைத்தார்.
இவரால் ஆக்கப்பட்ட ‘சதுரகராதி’ பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகளுக்கெல்லாம் முன்னோடியாக, அடிப்படையாக அமைந்ததெனலாம். கம்பனது கவிநயமும் திருத்தக்க தேவரது சுவைநயமும் நிரம்பப்பெற்றதென தமிழ் உலகம் போற்றும் “தேம்பாவணி” எனும் காவியத்தையும் இப்பெருமகனார் தமிழுக்கு அளித்துப் பெருமை சேர்த்தார்.
“போப்பையர்” என்று போற்றப்பட்ட வணக்கத்துக்குரிய ஜீ.யூ. போப் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாளராக விளங்கியவர். இவர் தமிழ் மேல் கொண்ட ஆராக காதலால் தமிழைக் கற்று திருவாசகத்தையும், திருக்குறளையும், யாவரும் அறியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் தமிழின் இனிமையையும், அதன் பெருமையையும், உலகுக்குக் காட்டிய பெருமகனாகத் திகழ்கிறார் எனலாம்.
இவர் தனது ஆசையாக எதைக்கருதினார் தெரியுமா? “தமது கல்லறையில் தாம் ஒரு தமிழ் மாணவன்” என எழுதப்படவேண்டும் என்று தானாம். எங்கோ பிறந்து, எங்கோ படித்து வளர்ந்த ஒருவர் “தாம் தமிழனாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று சொல்லும் அளவுக்கு தமிழுணர்வு ஊறிய அந்தப் பெருமகனை நினைப்பதற்கே எமக்கெல்லாம் தகுதி உண்டா என்றே எண்ணத்தோன்றுகிறது. “நாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்” எனும் எண்ணமே எழுகின்றது.
தாமரைத் தடாகத்தில் நிரந்தரமாக வாழும் தவளைக்குத் தன்னுடன் கூடவே இருக்கும் தாமரைப்பூவின் அருமை தெரிவதில்லை. அதே வேளை எங்கேயோ தொலைவில் உள்ள காட்டிலிருக்கும் வண்டினங்கள் ஓடிவந்து தாமரைப் பூவிலுள்ள மதுவை உண்டு இன்புற்றுச் செல்லுமாம் என்றொரு பாட்டு உண்டு. இந்தப்பாட்டும் இதன் பொருளும் தமிழர்களாகிய எங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. தமிழர்களாகிய நாம் அந்தத் தாமரைத்தடாகத் தவளை போல இருக்கிறோம். எமது மொழி, பண்பாடு, இவற்றின் பெருமைகளை அறியாது நிற்கின்றோம். தாமரையின் தேனை உண்ணவரும் வண்டுகளைப்போல மற்றவர்கள் எமது பெருமைகளை அறிந்து வந்து பயன் பெற்றுச் செல்கின்றனர். இதனைப் பார்த்தாவது நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டாமா? சற்றுச் சிந்திப்போமா?
பொது இடங்களிலோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ தமிழர் அல்லாத அதேவேளை ஆங்கில மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் சந்திக்கும்போது அவர்கள் தங்களது தாய் மொழியிலே பேசுவதை சாதாரணமாகக் காணமுடிகிறது. ஆனால் ஒரு தமிழன் மற்றொரு தமிழனைச் சந்திக்கும் வேளை எப்படி விளிக்கின்றான்? நமது மொழியிலா? அன்னிய மொழியிலா?
தமிழ் மொழியில் பெயரை வைத்து அதற்காக உழைக்கப் போகின்றோம் என்று உறுதி மொழி எடுக்கும் அமைப்பின் நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது பயன்படுத்தப்படுவது தமிழ் மொழியா? அன்னிய மொழியா? ஒரு அமைப்பின் பெயர் “தமிழ் வளர்ச்சிக் கழகம்”. அந்த அமைப்பின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. புதிய அங்கத்தவர்களுக்கும், புதிய உத்தியோகத்தர்களுக்கும் ஆன தெரிவு நடைபெற்றது.
நிகழ்ச்சியை நடத்தியவர்கள் விளக்கம் அளித்து உரையாற்றியது தமிழில் அல்ல. அன்னிய மொழியான ஆங்கிலத்திலாகும். வேடிக்கை என்னவென்றால் அங்கு கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருமே நன்றாகத் தமிழ் பேசும் தமிழ்ப் பெருங்குடிமக்கள். நானும் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். எனக்குத் தலை சுற்றுவது போலாகிவிட்டது. ஏன் இப்படி? இது தேவைதானா? இப்படிச்செய்வதற்கு என்ன பெயர்? அடிமை மனப்பாங்கா? அல்லது தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதில் பெருமையா? சற்றுச் சிந்திப்போமா?
ஒரு நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. முழுக்க முழுக்க தமிழர்கள் நிறைந்த அரங்கு. அங்கு நாட்டிய நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு முழுவதும் அன்னிய மொழியில். நடனம் ஆடியது தமிழ்ப் பெண்! நட்டுவாங்கம் தொடக்கம் பக்கவாத்தியம் வரை யாவரும் சுத்தத் தமிழர்கள்! யாருக்காக இந்த அறிவிப்பு? இப்படிச் செய்வதில் என்ன பெருமை? யாராவது எம்மைப் பாராட்டுவார்கள் என்ற எண்ணமா? அன்னிய மொழியில் பாண்டித்தியமும் எங்களுக்கு இருக்கிறது என்று கூறும் நோக்கமா? இதைத்தான் ஒரு வித மாயை எனலாமா?
உடையை மாற்றுகிறோம். உணவை மாற்றுகிறோம். உரைப்பதை மாற்றுகிறோம். ஆனால் உணர்வை மாற்றலாமா? நாம் நம்மை எப்படித்தான் மாற்றினாலும் அன்னியரும் அவர்தம் நாகரிகமும் எம்மை அவர்களோடு ஒன்றாக்கி விடமாட்டாது. அவர்கள் எக்காலத்திலும் எங்களைத் தங்களோடு இணைக்கவே மாட்டார்கள். எங்களை அவர்கள் எப்போதுமே ஒரு வரையறைக்குள்ளேயே வைப்பார்கள். நங்கள் எப்படிச்செய்தாலும், அவர்கள் அவர்கள்தான். நாங்கள் நாங்கள்தான். இதனை ஏன் உணர மறுக்கின்றோம்? ஏன் இப்படி ஆனோம்? வேதனையாக இருக்கிறதல்லவா? வெட்கமாகவும் இருக்கிறதல்லவா?
மங்கலகரமான இடங்களில் பெண்களுக்கு முக்கிய இடமும் பெரு மதிப்பும் கொடுப்பது எமது மரபாகும். பூ அணிந்து நெற்றியில் பொட்டிட்டு பட்டுடுத்தி வந்தால் இலட்சுமீகரமாக இருக்கும் என்பதும் பொதுவான ஒரு கருத்தாகும். ஆனால் இன்று இதில் ஒருவித நவீனம் புகுந்து கொண்டது. திருமண வீடாகட் டும், பிறந்த நாள் விழாவாகட்டும், பெண்களில் பலர் தலைவிரி கோலமாக நிற்பதைச் சாதாரணமாகக் காணமுடிகிறது. கோவிலில் கூட இதுதான் நிலை ஆகி விட்டது.
பெண்கள் தங்கள் கூந்தலை வெட்டினாலோ அல்லது விரித்து விட்டாலோ அதனை மங்கலமாகக் கருதாது அமங்கலமாகவே கருதும் வழக்கம் இருக்கிறது. கோவலன் கொலசெய்யப்பட்டதைக் கேள்வியுற்றதும் கண்ணகி “தேரா மன்னா” என்று ஆவேசம் பொங்க கண்ணீரும் கம்பலையுமாக தலைவிரி கோலத்துடன் பாண்டியன் சபையுள் புயலெனப் புகுந்தாள் எனச் சிலப்பதிகாரத்தில் காண்கின்றோம். ஆவேசம் வந்தால் தலைவிரித்து நிற்பதும், ஆற்றொணாத் துன்பம் வந்தால் தலைவிரித்து நிற்பதும் வந்தே தீரும். ஆனால் நல்ல சுப நிகழ்ச்சிகளின் பொழுது தலைவிரித்து நிற்பது தான் ஏனோ என்று விளங்கவே முடியவில்லை. இது தான் நாகரிகமா? இது தான் எமது பண்பாடா? இதுதான் எமது மரபா? அல்லது இவர்களெல்லாம் பாண்டியன் சபையில் நிற்கும் கண்ணகிகளா? சற்றுச் சிந்திப்போமா? இது எமக்குத் தேவைதானா? சிந்தித்தால் நல்லன தோன்றுமல்லவா?
மொழியைப் பண்பாட்டை எப்படி வளர்ப்பது? முதலில் நாம் அதன் அருமையைப் பெருமையை உணரவேண்டும். அப்பொழுதுதான் எமது வருங்காலச் சந்ததியினருக்கு அதனைக் கொடுக்க முடியும்.
உலகில் நாகரிகங்கள் பல. அவற்றில் பலவித முறைகள் காணப்படுகின்றன. அவரவர்களுக்கு அவரவர் பழக்கவழக்கம் முக்கியமானதாகும். அதனை நாம் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. அதே வேளை எங்களுக்கான பண்பாடுகளையும் நாங்கள் மறந்தும் விடக்கூடாது. அப்படி மறந்தோமானால் தமிழனின் அடையாளம் தொலைந்து கூடப் போகலாம் அல்லவா? எனவே எங்கள் அன்னையை அணைத்தபடி இருக்க வேண்டும்.
எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாது! அவனுக்கு வேட்டி சால்வை பற்றி ஒன்றுமே புரியாது! கூந்தல் நீளமாய் இருப்பது எனது மகளுக்குப் பிடிக்காது! பொட்டு வைப்பது புடவை கட்டுவது நாகரிகம் இல்லை என்று அவள் நினைக்கிறாள்! அம்மா, அப்பா, என்று அழைப்பதைவிட மம்மி.. டாடி என்று அழைப்பதில்தான் அவர்களுக்கு பேரானந்தம். இப்படி தங்கள் பிள்ளைகள் நினைக்கிறார்கள், சொல்லுகிறார்கள், என்பதே தற்போது பல தமிழ்ப் பெற்றாருக்கு பெரு மகிழ்ச்சியும் உள்ளுக்குள் ஒரு வித பெருமையும்.
நீ பிறந்தது தமிழ் மண்ணில்! நீ குடித்தது தமிழ்த்தாயின் பால்! உன் உடல் பூராவும் ஓடுவது தமிழ்தான். ஆனால் உன் உணர்வில் மட்டும் ஏன் தடுமாற்றம்? தாய் மொழியில் கூடப் பேசுவது வீட்டில் தரக்குறைவு என்று எண்ணுவதனால் தான் பிள்ளைகளும் தாய் மொழியைத் தவிர்க்கின்றனர்.
அன்னிய மோகத்தில் நீ இருந்தால் உன் கீழ்வருபவர்கள் எப்படி தாய் மொழியைப் பேணுவார்கள்? உனது தாய் மொழியைப் பேசமுடியாத உனது பிள்ளைகளால் உனக்குப் பெருமை வருமா? உன நாகரிகம் அறியாப் பிள்ளைகளால் உனக்கு என்ன பயன்? அன்னிய மொழிகள் அனைத்தையும் நன்றாகப் படியுங்கள் உங்களின் ஆற்றலை வெளிப்படுத்துங்கள். ஆனால் அன்னை மொழியை, பண்பாட்டை, கலாசாரத்தை மட்டும் தூக்கி எறிந்து விடாதீர்கள்.
மாறுவோமா? கட்டாயம் மாற்றம் வேண்டும்! எங்களின் அடையாளங்களைத் தொலைத்து விடுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஏன் இப்படி ஆகினோம்? சற்றுச் சிந்திப்போமா?
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 32
–சு.கோதண்டராமன்.
தஸ்யு – மூன்று உருவகங்கள்
தஸ்யுக்கள் என்போர் வேற்று இனத்தவர் அல்ல என்பதை அறிந்து கொண்டோம். பின் அவர்கள் யார்? இந்திரன் முதலானோர் ஆர்யர்களுக்காக தஸ்யுக்களை அழித்தனர் என வேதம் கூறுகிறது. தஸ்யுக்கள் ஆர்யர்களுக்கு இழைத்த தீங்கு என்ன? எதற்காக அவர்கள் அழிக்கப்பட்டனர்?
தஸ்யுக்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பார்த்தோம். அவர்களில் விருத்திரன் என்பவன் மலைப் பாம்பு வடிவத்தில் நீர் வரும் வழியில் படுத்துக் கொண்டு நீரைத் தடுத்தான். வலன் என்பவன் ஆர்யர்களுக்குச் சொந்தமான பசுக்களைச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். பெயர் குறிப்பிடப்படாத சில தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குச் சொந்தமான ஒளியைத் திருடிக் கொண்டனர். இந்திரன் விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்தார். வலனைக் கொன்று பசக்களை மீட்டார். மற்ற தஸ்யுக்களைக் கொன்று ஒளியை மீட்டார்.
ஒளியை யார் திருட முடியும் என்று சிந்திக்கும்பொழுது இது ஒரு உருவகமாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
சாயணர் அளிக்கும் உருவகப் பொருள்- மேகம்
விருத்திரன் என்பது மேகங்கள். இந்திரன் தன் நண்பர்களாகிய மருத் என்னும் காற்றின் துணை கொண்டு அதை அழித்து மழை பொழிய வைக்கிறார் என்கிறார் சாயணர். கறுத்த மேகத்தினூடே மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது. மழை பொழிகிறது. வானம் வெளி வாங்குகிறது. மறைந்து இருந்த சூரியன் வெளிப்படுகிறது. இந்திரனை மின்னல் இடியை ஆயுதமாகக் கொண்டவர் என்பதிலிருந்து இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.பசுக்கள் என்பதற்கு ஒளிக் கிரணங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் சாயணர். இதுவும் பொருத்தமே. ஏனெனில் வேதத்தில் பல இடங்களில் சூரிய கிரணங்களும் வைகறை ஒளியும் பசுக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.
ஆனால் சாயணரின் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில் ஒரு இடைஞ்சல் உள்ளது. பசுக்களை (சூரிய கிரணங்களை) மேகம் மறைத்ததை தஸ்யு திருடினான் என்று கொண்டால் சரமா என்னும் நாயின் உதவியால் அங்கிரஸ் முனிவர்கள் பசுக்களின் இருப்பிடத்தை அறிந்தனர் என்பதை எப்படிப் பொருள் கொள்வது?
உருவகம் -2 நிலச்சரிவு
இதோ மற்றொரு ஊகம். இது சாயணர் கூறாதது.மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவு என்பது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் இந்த நிலச் சரிவு நதிகளில் விழுந்து நதிகளின் போக்கைத் தடுத்து விடும் அல்லது மாற்றி விடும். 2008 மே 12இல் சீனாவில் வென்சுவான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு, ஒரு நதியைத் தடுத்து அதை ஏரியாக மாற்றி விட்டது. நதியின் கீழ்புறம் வறண்டுவிட்டது. ஏரியில் மேலும் மேலும் தண்ணீர் வந்து சேரவே அது வேறு திசைகளில் உடைப்பு எடுத்துப் பெருகக் கூடிய அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது சீன அரசு அங்கு உடனடியாக ஆட்களை அனுப்பி, அந்த ஏரிக்கரையை குண்டு போட்டு உடைத்து நதியை முன்பு போல ஓடச் செய்தது.
இந்திரன் செய்ததும் இது போலத்தான் இருக்க வேண்டும். விருத்திரன் என்பது நிலச் சரிவால் நதியின் போக்கில் மலைப் பாம்பு வடிவத்தில் ஏற்பட்ட ஒரு தடையாக இருக்க வேண்டும். வலிமையுள்ள அரசனான இந்திரன், தன் படையுடன் அங்கு சென்று அந்தத் தடையை அகற்றி இருக்க வேண்டும். வ்ருத்ரன் என்ற சொல்லுக்கு சூழ்ந்திருப்பது என்று பொருள். அந்தத் தடை நதியின் நீர் ஓடாதபடி சுற்றிலும் சூழ்ந்து இருந்ததால் அது அப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.
அதே போல, வலன் என்றும் பணி என்றும் பெயரிடப்பட்ட ஒரு நிலச்சரிவால் அங்கிரஸ்களின் மாடுகள் இருந்த இடம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். மோப்ப நாயின் உதவியால் மறைவுக்குப் பின்புறம் மாடுகள் இருப்பதை அறிந்த அங்கிரஸ்கள் இந்திரனின் துணையால் அந்தத் தடையை வென்று மாடுகளை மீண்டும் பெற்றிருக்க வேண்டும். மண் அகற்றும் திறமை படைத்த ஒரு பெரும் படை இந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.
இந்த ஊகம் ஒரு வகையில் பொருத்தமாக இருந்தாலும், இந்திரனும் அச்வின்களும் தஸ்யுக்களைக் கொன்று ஆர்யர்களுக்கு ஜ்யோதியைக் கொடுத்தார்கள் என்று சொல்லப்படும்போது (1.117.21, 7.5.6) இந்த உருவகம் பொருந்தவில்லை. நிலச்சரிவு ஒளியை எப்படித் தடுக்க முடியும்?
கோத்ரம்
மூன்றாவது உருவகத்தைப் பார்க்கும் முன் வேத காலத்தில் பசு எப்படிக் கருதப்பட்டது என்பதைப் பார்ப்போம்.ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் (1.126.3).
மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்றாலும் அவர் குறைந்தது 60 பசுக்களாவது பெற்றிருக்கக் கூடும். இத்தனை பசுக்களை வைத்துக் கொண்டு அவர் எப்படிப் பராமரித்தார் என்ற கேள்வி எழுகிறது.
வேதத்தில், பசு மந்தைக்கும் அவை தங்கும் இடத்துக்கும் கோத்ரம் என்பது பெயர். பிற்காலத்தில் இந்தப் பெயர் ஒரு பரம்பரையைக் குறிக்கும் சொல்லாக மாறியது. ஒரு பசு மந்தையின் உடைமையாளர்கள் ஒரு கோத்ரக்காரர்கள். இவர்கள் ஒரே கிராமத்து மக்களாக இருந்ததும், அவர்களுடைய பொது உடமையாக இந்தப் பசுக்கள் கருதப்பட்டிருந்ததும் ஊகித்து அறிய முடிகிறது.
உருவகம் 3 – பொது உடமைப் பொருட்களைத் திருடும் சமூக விரோதி
நீரையும், ஒளியையும் போல பசுவும் எல்லோருக்கும் பொதுவான பொருளாக இருந்தது. இதன் அடிப்படையில் மூன்றாவது உருவகத்தைப் பார்ப்போம்.கிராமத்துக்குப் பொதுவான பசுக்களைப் பராமரிக்க, உழைக்க வலிமையுள்ள சிலர் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும். வலிமையற்றவர்கள் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிப்போராக இருந்திருப்பர். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தேவையான பொருள் கிடைத்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்த வேலைகளைச் செய்தனர். இது ஒரு சமதர்ம சமுதாயம்.
பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் பிரச்சினை எதுவும் வர வாய்ப்பில்லை. தட்டுப்பாடு ஏற்படும்போது, வலிமையுள்ள சிலர் தனக்கென்று மிக அதிகமான பொருட்களைப் பதுக்கி வைப்பது இயல்பு. பொதுச் சொத்துக்களைத் தன் சொந்த நலனுக்கென்று பயன்படுத்துவோரை நாம் இன்று சமூக விரோதிகள் என்று அழைக்கிறோம்.
வலன் என்ற பணி பசுக்களைச் சிறைப் பிடித்தான். பணி என்ற சொல்லுக்கு வணிகர் என்பது அடிப்படைப் பொருள். வணிகர் தான் கொடுத்த பொருளின் மதிப்புக்குச் சமமான வேறு பொருளை பெற்றுக் கொள்வதில் குறியாக இருக்கிறார். பொதுச் சொத்தைப் பராமரிப்பவர் தான் செய்வதைச் சேவையாகக் கருதாமல், தன் உழைப்பினால் கிடைத்த உற்பத்திப் பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்தால் அவர் பணியாக(சமூக விரோதியாக)க் கருதப்படுவார். அதனால் அவர்களை வேதம் தஸ்யு (பகைவர்) என்று கூறுகிறது.
அக்ரது (செயல் அற்றவர்கள்), அராதி (தானம் செய்யாதவர்கள்), அச்ரத்தா (சிரத்தை இல்லாதவர்கள்), அவ்ருதா (நல்ல காரியங்களை ஊக்குவிக்காதவர்கள்) என்ற அடைமொழிகளிலிருந்து தஸ்யுக்கள் சமூக நலனுக்குப் பாதகமான குணங்களைக் கொண்டவர்கள் என்று கருத இடம் உள்ளது.
விருத்திரன் சமுதாயத்துக்குச் சொந்தமான நீரை மக்கள் அனுபவிக்காதபடி வளைத்துப் போட்டான். வலன் பொதுச் சொத்தான பசுக்களைத் தன் நலனுக்காகச் சிறைப் பிடித்து வைத்திருந்தான். இந்த சமூக விரோதச் செயல்களைச் செய்யும் பகைவர்களை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு அந்தச் சமுதாயத்தின் தலைவனின் பொறுப்பாகிறது. பகைவர்கள் தங்களைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு செய்து கொள்வது இயல்பே. பலர் உதவியுடன், தடைகளைச் சமாளித்து இவர்களைத் தோற்கடித்ததுதான் மலையைப் பிளந்து வலனைக் கொன்று பசுக்களை மீட்டதாகவும், விருத்திரனைக் கொன்று ஆறுகளைப் பெருகச் செய்ததாகவும் கூறப்படுகிறது. தஸ்யுக்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அடிமைத்தனத்துக்கு உட்படுத்தும் முறை இருந்திருக்க வேண்டும் என்பது அறியப்படுகிறது. இதனால் தஸ்யுக்கள் தாஸர்கள் ஆனார்கள்.
அவர்கள் செல்வம் மிகப் பெற்றிருந்தும் அதைப் பிறருக்குப் பயன்படுமாறு கொடுக்காமல் இருந்தார்கள், இனிமையான பேச்சு இல்லாதவர்கள் என்பதை அறிய முடிகிறது.
தஸ்யுக்களை அழிக்குமாறு தேவர்களை வேண்டுகிறார்களே தவிர, ஆர்யர்கள் தாங்களே ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. தேவர்களால் தோற்கடிக்கப்பட்ட தஸ்யுக்கள் ஆர்யர்களுக்குத் தாஸர்களாக வாழத் தொடங்கினர். அந்த அடிமைகள் பிறருக்குத் தானமாகவும் கொடுக்கப்பட்டனர் என்பதை ஒரு ரிஷி தான் 100 தாஸர்களைப் பெற்ற விவரத்தைக் கூறுவதிலிருந்து அறிகிறோம் (8.56.37).
அந்த தாஸர்கள் நன்றாக உழைத்தார்கள் என்பது நான் தாஸனைப் போலக் கடுமையாக தேவர்களுக்கு உழைத்தேன் என்பதிலிருந்து தெரிகிறது (7.86.75 ).
சமூக விரோதிகளைத் தற்காலத்தில் காவலர்கள் சிறைப்படுத்தி வேலை செய்ய வைப்பது போல இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. தண்டனையால் மனம் திருந்திய தாஸர்கள் கொடையாளிகளாக மாறினாலும் தங்கள் பழைய பெயராலேயே அழைக்கப்பட்டார்கள் என்பதை முன் சொன்ன பல்பூதன், தருக்ஷன் பற்றிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.
ஆர்யர்களாக இருந்தவர்களில் கூடச் சிலர் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறியிருப்பர். அவர்கள் பழைய பெயரால் ஆர்யர்கள் என்று கூறப்பட்டாலும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். எங்கள் எதிரிகளைக் கொல்வாயாக, அவர்கள் தாஸர்களானாலும், ஆரியர்களானாலும் என்ற வேண்டுதல் காணப்படுகிறது (10.38.3).
பொது உடைமைப் பொருட்களை அபகரிப்பவரே தஸ்யு என்னும் இந்த உருவகப் பொருள் ஜ்யோதியை எந்தத் தஸ்யு அபகரிக்க முடியும் என்பதை விளக்கவில்லை.
இது வரையில் மூன்று வகையான உருவகப் பொருள்களைப் பார்த்தோம்- மேகங்களை அழித்து மழை பொழியச் செய்தல், நிலச் சரிவை அகற்றி நீர் மற்றும் பசுக்களின் பாதையைத் திறந்து விடுதல், பொது உடமைப் பொருட்களை அபகரிக்கும் சமூக விரோதிகளைத் தண்டித்தல். இந்த மூன்றுமே தஸ்யு பற்றிய எல்லாச் செயல்களையும் விளக்கவில்லை. இருப்பினும் இவற்றை முழுமையாகத் தள்ளிவிடவும் முடியாது. ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு உருவகம் பொருத்தமாக இருக்கும். அதை அங்கு ஏற்றுக் கொள்ளலாம்.
படம் உதவிக்கு நன்றி:
How Many People did Indra Kill?
http://tamilandvedas.com/2014/07/17/how-many-people-did-indra-kill/ -
குறளின் கதிர்களாய்…(47)
-செண்பக ஜெகதீசன்
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார். (திருக்குறள்:650 – சொல்வன்மை)புதுக் கவிதையில்…
விரிந்த இதழ்களுடன்
விதவித அழகாய் இருந்தாலும்,
மலருக்கு மகிமை
மணம்தான்…கற்றவர், கற்றதை
மற்றவர் அறிய
எடுத்துரைக்க இயலாதபோது
அவரும்
மணமில்லா மலர்போலத்தான்…!குறும்பாவில்…
கற்றிருந்தும் பிறரறிய
எடுத்துரைக்க இயலாதவனும்,
மணமிலா மலர்தான்…!மரபுக் கவிதையில்…
ஆர்வமாய்ப் பலநூல் கற்றேதான்
அறிவை அதிகம் பெற்றிடினும்,
தேர்வுகள் பலவும் வென்றிடினும்,
திறம்படப் பிறர்க்கே உரையாதார்
பேர்தான் கற்றவர் என்போரும்,
பற்பல வடிவில் பலநிறத்தில்
பார்க்க விரிந்த போதினிலும்
பழுதாம் மணமிலா மலரொப்பரே…!லிமரைக்கூ…
கற்றவற்றை எடுத்துரைத்து அறியவேண்டும் பலர்,
விரித்துரைக்காதவர் ஆவார்
விரிந்திருந்தும் பயனில்லாத மணமில்லா மலர்…!கிராமிய பாணியில்…
பூவுபூவு காட்டுப்பூவு
பெருசுசெறுசா பாக்கும்பூவு,
எதுக்கொமொதவா காட்டுப்பூவு
வாசமில்லா வெத்துப்பூவு…பூவுண்ணா மணமிருக்கணும்
பக்கமெல்லாம் மணம்பரப்பணும்…படிப்பு கதயும் இதுதானே,
தெரிஞ்சிருக்கணும் தெரிஞ்சிருக்கணும்
படிச்சதெல்லாந் தெரிஞ்சிருக்கணும்,படிச்சிக்குடுக்கத் தெரிஞ்சிருக்கணும்
எடுத்துச்சொல்லத் தெரிஞ்சிருக்கணும்..தெரியலண்ணா காட்டுப்பூவு
அவுனுமொரு காட்டுப்பூவு
தேவயில்லா காட்டுப்பூவு
வாசமில்லா காட்டுப்பூவு…பூவுபூவு காட்டுப்பூவு
எதுக்கொமொதவா காட்டுப்பூவு…!
-
அகதியின் அகத்தீ!
-அமீர்
என்னுரிமை
உன்னுரிமை ஒன்றாக
நாமென்ன சகோதரர்களா?
என்னுயிரும்
உன்னுயிரும்
சமமாக நாமென்ன தோழர்களா?இல்லை என்பதை உணர்கிறேன்
அதனால் தானே விரட்டப்படுகிறேன்…பிறந்த மண்ணை
உரிமை கோரல் தவறா?
ஒடுக்கிய பின்பும்
ஒழிக்க நினைப்பது சரியா?ஏகாதிபத்யமே…
உங்களுகே சொந்தம் என்பது
இந்தப் பரந்த உலகம் மட்டுமா?
அண்ட வெளிக் கிரகங்களும்
அதில் அடக்கமா?அச்சுறுத்தலும்
தட்டிப்பறித்தலும்
உங்களின் அன்பா?
கொலைமிரட்டலும்
விரட்டி அடித்தலும்
உங்களின் பண்பா?உயிர்பயத்தில்
கால்கள் கடுக்க ஓடும்போது
தெரியாதவலி
இந்த உலகம்
மவுனமாய்ப் பார்க்கும் போது தெரிகிறது…ஆளப்படுபவர் அனுமதியின்றி
ஆளப்படுவது
சர்வாதிகாரத்தின் இலக்கணமோ?
ஆட்சியும் மாட்சியும்
துணைவருவதால்
சேரும்ஆணவமோ?உடலைவிட்டு
உதிரம் பிரிந்தால்
உயிருக்கு இல்லை உத்திரவாதம்
நாங்கள்
உடல் ஓரிடம்
உதிரம் ஓரிடம்
உயிர் ஓரிடமென வாழும்
மண் தேடும் புழு…நாங்கள்
கருவரையிலிருந்து
கழிவாக வெளியேற்றப்படாமல்
உங்களைப் போன்றே
ஈன்றப்பட்ட பிறவிகளல்லவா!தாயும்
தாரமும்
பிள்ளைகளும்
இரவில் மட்டும்
எங்கள் மார்சாய்கிறார்கள்
புகைப்பட உதவியோடு!வெயிலும்
குளிரும்
மழையும் மட்டுமே
நாங்கள் அறிந்த உலக இயற்கை!ஐ.நா.வும்
செஞ்சிலுவையும்
அனுப்பும் ஆடைகள்
அணியும் தினமே
நாங்கள் அறிந்த திருநாட்கள்!பாலும் பழமும்
பல்சுவை விருந்தும்
பசிக்குக் கிடைக்கும்
பழைய கஞ்சியில் காண்கிறோம்!நாடுபிடிப்போரின்
நலியாத ஆசையால்
நாங்கள்
ஈழனென்றும்
பாலஸ்தீனனென்றும்
சூடானி என்றும்
திபெத்தியனென்றும்
பரந்து கிடக்கிறோம்
பாவப்பட்ட உலகில்…இனி
பரந்து கிடந்தோமென்று
வரலாறு சொல்ல…
பாலைவனம் ஒன்று போதும்
எங்கள் சொந்த மண் என்று துள்ள…
கால்நடையாகவே பயணிக்கிறோம்
அது கிடைக்கும்
நன்னாளை எதிர்நோக்கி! -
14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015
மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர்(சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி…) இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல்…v ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
v கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)
v திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
v கணினி மற்றும் இணையவழி தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல்.
v தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்…
v தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்….
v தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள் அளவில்1-2 பக்கங்களில் 25.12.2014 தேதிக்குள் cpc2015@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். பின்னர் 1.02.2015ஆம் தேதிக்குள் முழுக் கட்டுரையையும் அனுப்பிவைக்க வேண்டும்.
கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறி அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு(டேஸ்) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கத்தினை ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.
மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு 1.03.2015 ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.
முழுக் கட்டுரையை 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்கவேண்டும்.
மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும் உலகக் கணினிமொழியியல் ஆய்விதழிலும் வெளியிடப்படும்.
முக்கியமான நாட்கள்
கட்டுரைச் சுருக்கம் அனுப்ப இறுதி நாள் : 25.12.2014முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : 01.02.2015
தேர்வுசெய்யப்பெற்ற கட்டுரை பற்றிய அறிவிப்பு : 01.03.2015
மாநாடு நடைபெறும் நாட்கள் : 30.05.2015, 31.5.2015
& 01.06.2015தமிழ் இணைய மாநாடு 2015இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2015@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
முனைவர் இர. ஸ்ரீராம்
தலைவர், மாநாட்டு ஆய்வரங்கக் குழு, தமிழ் இணையம் 2015. -
பாசவினை
பவள சங்கரி
பாசிபிடித்த மண்டபத்தினுள்
பாசியே உணவானாலும்
பாசபந்தங்கள் பரந்திருந்தாலும்
சுற்றிச் சுற்றி சுழன்றாலும்
உள்ளிருந்தே உழன்றாலும்
சுற்றிவரும் வாளைகளின்
சுவடுகளனைத்தும் சூரியானாலும்
சுவனமின்றி உணவுமின்றி
சுழன்றுவரும் தங்கவிழியும்
கருஞ்சுனைகளும் பச்சிலைகளும்
பசுமை நினைவுச்சுமைகளாயினும்
பாசிபிடித்த மண்டபமே அரண்மனையாக
பசுமை நிறைந்த நினைவுகளே
வயிற்றின் உணவாக நாளும்
வாழும் பாசிதின்னும் கயல்களின்
பாசமிகு பரிதவிப்பு பாழடைந்த
பாசிபிடித்த மண்டபத்தினுள்ளேயே
பதுங்கித்தான் போகும். -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
”ராகம்(ராகத்வேஷம்) கடந்த ரமணன்போல் கண்ணனும்
தேகம் மறந்தூதும் தெய்வீக, -ராகம்
புலன்கடந்த ஆன்மக் கலனேற்றி ஆன்றோர்
குலம்சேர்க்கும் ஆதிவரா கம்’’….கிரேசி மோகன்….




























