ஏன் இப்படி?
எம். ஜெயராமசர்மா
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி” என்று பெருமை பேசுபவர்கள் தமிழர்களாகிய நாங்கள் தான். தமிழர் வாழ்வு பெருமையுடையது. தமிழர் நாகரிகம் உயர்ந்தது. கலை கலாச்சாரம் ஓங்கி உலகு அளந்தது. “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று சொல்லி தமிழன் என்றாலே துணிவும் அஞ்சாமையும் கொண்டவன் என்று பெருமை பேசுபவர்களும் நாங்களேதான். உண்மைதான்! எங்கு சென்றாலும் தன்னை அடையாளப்படுத்தத் தமிழன் தவறுவதில்லை என்பதும் வெட்ட வெளிச்சமானதாகும்.
உலகம் முழுவதும் தமிழன் பரந்துபட்டு வாழ்கின்றான். பலவித முயற்சிகளிலும் ஈடுபடுகின்றான். தமிழன் கைபடாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். படிப்பாகட்டும், நடிப்பாகட்டும், வியாபாரமாகட்டும், யாவற்றிலும் தனது பேராற்றலை வெளிப்படுத்தியே தமிழன் நிற்கின்றான். இதனைப் பார்க்கையில் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் பெருமையில் பூரித்தே நிற்பான்.
தமிழன் சென்ற இடமெல்லாம் கோவில்களைக் கட்டுவான். சங்கங்கள் அமைக்கத் தவறவே மாட்டான். பத்திரிகைகள் என்றால் தமிழனுக்கு உயிர் மூச்சு. கலைகளை வளர்ப்பதில் போட்டா போட்டி போடுவான். மேடைகளில் ஏறிவிட்டால் கருத்துக்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. பேனாவை எடுத்து விட்டால் கம்பனும் காளிதாசனும் கூடப் பிச்சை வாங்கவேண்டும். அந்த அளவுக்கு எழுதியே குவித்து விடுவான். பண்டிதமணி கணபதிப்பிள்ளை கம்பனை “அபரபிரமன்” என்று வியந்து கூறியிருப்பார். அவரது அந்தச் சொற்பிரயோகம் தமிழனுக்கே உரியதென்றால் அது மிகையாகாது.
இப்படியெல்லாம் பலவித ஆற்றல் கொண்ட தமிழனிடம் மிகக் கேவலமான ஒரு குணமும் குடிகொண்டு விட்டது. அதுதான் அடிமை மனப்பான்மை. தன் இனத்திடம் மிகப் பெருமை கொண்ட பொக்கிஷங்கள் இருக்கின்றனவே என்று எண்ணுவதை விட்டு விட்டு தன்னையும் தனது இனத்தையும் தாழ்த்திக்கொள்ள நினைப்பதையிட்டுத்தான் பெரும் வேதனையாக இருக்கின்றது.
உலகின் நனிசிறந்த மொழிகளிலே தமிழ் மொழியும் ஒன்று என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் உலகமொழிகளை வகைப்படுத்திய பொழுது “தமிழைப் பக்திக்குரிய மொழி” என்று சுட்டிக்காட்டினார். பக்தி இலக்கியம் தமிழ் மொழியில் உள்ள அளவு வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்பது தனிநாயகம் அடிகளாரின் கருத்துமட்டுமல்ல ஏனைய மொழியியல் அறிஞர்களின் கருத்து என்பதும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.
“பக்தி” என்பதில் அன்பும் அமைதியும் சாந்தமும் கனிவும் மென்மையும் இரக்கமும் பொறுமையும் நிறைந்திருக்கின்றது என்று கொள்ளலாம். இதனால் தான் பாட்டுக்கொருபுலவன் என்று பாராட்டப்பட்ட பாரதியும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்போலும் என எண்ணக்கிடக்கின்றது.
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெள்ளை இனத்தவர்கள் பலர் தமிழின் இனிமை கருதி அதனைக் கற்றதோடு நில்லாது – தமிழ் உள்ளம் கொண்டவர்களாக மாறியதையும் தமிழ் வரலாற்றில் அறிகின்றோம். ஜோஸப் பெஸ்க்கி என்பவர் தமது தீராத தமிழார்வத்தால் வீரமாமுனவராகி இன்பத்தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றதோடு நில்லாமல் பல அரிய படைப்புக்களையும் தமிழில் படைத்தார்.
இவரால் ஆக்கப்பட்ட ‘சதுரகராதி’ பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகளுக்கெல்லாம் முன்னோடியாக, அடிப்படையாக அமைந்ததெனலாம். கம்பனது கவிநயமும் திருத்தக்க தேவரது சுவைநயமும் நிரம்பப்பெற்றதென தமிழ் உலகம் போற்றும் “தேம்பாவணி” எனும் காவியத்தையும் இப்பெருமகனார் தமிழுக்கு அளித்துப் பெருமை சேர்த்தார்.
“போப்பையர்” என்று போற்றப்பட்ட வணக்கத்துக்குரிய ஜீ.யூ. போப் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாளராக விளங்கியவர். இவர் தமிழ் மேல் கொண்ட ஆராக காதலால் தமிழைக் கற்று திருவாசகத்தையும், திருக்குறளையும், யாவரும் அறியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் தமிழின் இனிமையையும், அதன் பெருமையையும், உலகுக்குக் காட்டிய பெருமகனாகத் திகழ்கிறார் எனலாம்.
இவர் தனது ஆசையாக எதைக்கருதினார் தெரியுமா? “தமது கல்லறையில் தாம் ஒரு தமிழ் மாணவன்” என எழுதப்படவேண்டும் என்று தானாம். எங்கோ பிறந்து, எங்கோ படித்து வளர்ந்த ஒருவர் “தாம் தமிழனாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று சொல்லும் அளவுக்கு தமிழுணர்வு ஊறிய அந்தப் பெருமகனை நினைப்பதற்கே எமக்கெல்லாம் தகுதி உண்டா என்றே எண்ணத்தோன்றுகிறது. “நாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்” எனும் எண்ணமே எழுகின்றது.
தாமரைத் தடாகத்தில் நிரந்தரமாக வாழும் தவளைக்குத் தன்னுடன் கூடவே இருக்கும் தாமரைப்பூவின் அருமை தெரிவதில்லை. அதே வேளை எங்கேயோ தொலைவில் உள்ள காட்டிலிருக்கும் வண்டினங்கள் ஓடிவந்து தாமரைப் பூவிலுள்ள மதுவை உண்டு இன்புற்றுச் செல்லுமாம் என்றொரு பாட்டு உண்டு. இந்தப்பாட்டும் இதன் பொருளும் தமிழர்களாகிய எங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. தமிழர்களாகிய நாம் அந்தத் தாமரைத்தடாகத் தவளை போல இருக்கிறோம். எமது மொழி, பண்பாடு, இவற்றின் பெருமைகளை அறியாது நிற்கின்றோம். தாமரையின் தேனை உண்ணவரும் வண்டுகளைப்போல மற்றவர்கள் எமது பெருமைகளை அறிந்து வந்து பயன் பெற்றுச் செல்கின்றனர். இதனைப் பார்த்தாவது நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டாமா? சற்றுச் சிந்திப்போமா?
பொது இடங்களிலோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ தமிழர் அல்லாத அதேவேளை ஆங்கில மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் சந்திக்கும்போது அவர்கள் தங்களது தாய் மொழியிலே பேசுவதை சாதாரணமாகக் காணமுடிகிறது. ஆனால் ஒரு தமிழன் மற்றொரு தமிழனைச் சந்திக்கும் வேளை எப்படி விளிக்கின்றான்? நமது மொழியிலா? அன்னிய மொழியிலா?
தமிழ் மொழியில் பெயரை வைத்து அதற்காக உழைக்கப் போகின்றோம் என்று உறுதி மொழி எடுக்கும் அமைப்பின் நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது பயன்படுத்தப்படுவது தமிழ் மொழியா? அன்னிய மொழியா? ஒரு அமைப்பின் பெயர் “தமிழ் வளர்ச்சிக் கழகம்”. அந்த அமைப்பின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. புதிய அங்கத்தவர்களுக்கும், புதிய உத்தியோகத்தர்களுக்கும் ஆன தெரிவு நடைபெற்றது.
நிகழ்ச்சியை நடத்தியவர்கள் விளக்கம் அளித்து உரையாற்றியது தமிழில் அல்ல. அன்னிய மொழியான ஆங்கிலத்திலாகும். வேடிக்கை என்னவென்றால் அங்கு கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருமே நன்றாகத் தமிழ் பேசும் தமிழ்ப் பெருங்குடிமக்கள். நானும் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். எனக்குத் தலை சுற்றுவது போலாகிவிட்டது. ஏன் இப்படி? இது தேவைதானா? இப்படிச்செய்வதற்கு என்ன பெயர்? அடிமை மனப்பாங்கா? அல்லது தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதில் பெருமையா? சற்றுச் சிந்திப்போமா?
ஒரு நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. முழுக்க முழுக்க தமிழர்கள் நிறைந்த அரங்கு. அங்கு நாட்டிய நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு முழுவதும் அன்னிய மொழியில். நடனம் ஆடியது தமிழ்ப் பெண்! நட்டுவாங்கம் தொடக்கம் பக்கவாத்தியம் வரை யாவரும் சுத்தத் தமிழர்கள்! யாருக்காக இந்த அறிவிப்பு? இப்படிச் செய்வதில் என்ன பெருமை? யாராவது எம்மைப் பாராட்டுவார்கள் என்ற எண்ணமா? அன்னிய மொழியில் பாண்டித்தியமும் எங்களுக்கு இருக்கிறது என்று கூறும் நோக்கமா? இதைத்தான் ஒரு வித மாயை எனலாமா?
உடையை மாற்றுகிறோம். உணவை மாற்றுகிறோம். உரைப்பதை மாற்றுகிறோம். ஆனால் உணர்வை மாற்றலாமா? நாம் நம்மை எப்படித்தான் மாற்றினாலும் அன்னியரும் அவர்தம் நாகரிகமும் எம்மை அவர்களோடு ஒன்றாக்கி விடமாட்டாது. அவர்கள் எக்காலத்திலும் எங்களைத் தங்களோடு இணைக்கவே மாட்டார்கள். எங்களை அவர்கள் எப்போதுமே ஒரு வரையறைக்குள்ளேயே வைப்பார்கள். நங்கள் எப்படிச்செய்தாலும், அவர்கள் அவர்கள்தான். நாங்கள் நாங்கள்தான். இதனை ஏன் உணர மறுக்கின்றோம்? ஏன் இப்படி ஆனோம்? வேதனையாக இருக்கிறதல்லவா? வெட்கமாகவும் இருக்கிறதல்லவா?
மங்கலகரமான இடங்களில் பெண்களுக்கு முக்கிய இடமும் பெரு மதிப்பும் கொடுப்பது எமது மரபாகும். பூ அணிந்து நெற்றியில் பொட்டிட்டு பட்டுடுத்தி வந்தால் இலட்சுமீகரமாக இருக்கும் என்பதும் பொதுவான ஒரு கருத்தாகும். ஆனால் இன்று இதில் ஒருவித நவீனம் புகுந்து கொண்டது. திருமண வீடாகட் டும், பிறந்த நாள் விழாவாகட்டும், பெண்களில் பலர் தலைவிரி கோலமாக நிற்பதைச் சாதாரணமாகக் காணமுடிகிறது. கோவிலில் கூட இதுதான் நிலை ஆகி விட்டது.
பெண்கள் தங்கள் கூந்தலை வெட்டினாலோ அல்லது விரித்து விட்டாலோ அதனை மங்கலமாகக் கருதாது அமங்கலமாகவே கருதும் வழக்கம் இருக்கிறது. கோவலன் கொலசெய்யப்பட்டதைக் கேள்வியுற்றதும் கண்ணகி “தேரா மன்னா” என்று ஆவேசம் பொங்க கண்ணீரும் கம்பலையுமாக தலைவிரி கோலத்துடன் பாண்டியன் சபையுள் புயலெனப் புகுந்தாள் எனச் சிலப்பதிகாரத்தில் காண்கின்றோம். ஆவேசம் வந்தால் தலைவிரித்து நிற்பதும், ஆற்றொணாத் துன்பம் வந்தால் தலைவிரித்து நிற்பதும் வந்தே தீரும். ஆனால் நல்ல சுப நிகழ்ச்சிகளின் பொழுது தலைவிரித்து நிற்பது தான் ஏனோ என்று விளங்கவே முடியவில்லை. இது தான் நாகரிகமா? இது தான் எமது பண்பாடா? இதுதான் எமது மரபா? அல்லது இவர்களெல்லாம் பாண்டியன் சபையில் நிற்கும் கண்ணகிகளா? சற்றுச் சிந்திப்போமா? இது எமக்குத் தேவைதானா? சிந்தித்தால் நல்லன தோன்றுமல்லவா?
மொழியைப் பண்பாட்டை எப்படி வளர்ப்பது? முதலில் நாம் அதன் அருமையைப் பெருமையை உணரவேண்டும். அப்பொழுதுதான் எமது வருங்காலச் சந்ததியினருக்கு அதனைக் கொடுக்க முடியும்.
உலகில் நாகரிகங்கள் பல. அவற்றில் பலவித முறைகள் காணப்படுகின்றன. அவரவர்களுக்கு அவரவர் பழக்கவழக்கம் முக்கியமானதாகும். அதனை நாம் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. அதே வேளை எங்களுக்கான பண்பாடுகளையும் நாங்கள் மறந்தும் விடக்கூடாது. அப்படி மறந்தோமானால் தமிழனின் அடையாளம் தொலைந்து கூடப் போகலாம் அல்லவா? எனவே எங்கள் அன்னையை அணைத்தபடி இருக்க வேண்டும்.
எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாது! அவனுக்கு வேட்டி சால்வை பற்றி ஒன்றுமே புரியாது! கூந்தல் நீளமாய் இருப்பது எனது மகளுக்குப் பிடிக்காது! பொட்டு வைப்பது புடவை கட்டுவது நாகரிகம் இல்லை என்று அவள் நினைக்கிறாள்! அம்மா, அப்பா, என்று அழைப்பதைவிட மம்மி.. டாடி என்று அழைப்பதில்தான் அவர்களுக்கு பேரானந்தம். இப்படி தங்கள் பிள்ளைகள் நினைக்கிறார்கள், சொல்லுகிறார்கள், என்பதே தற்போது பல தமிழ்ப் பெற்றாருக்கு பெரு மகிழ்ச்சியும் உள்ளுக்குள் ஒரு வித பெருமையும்.
நீ பிறந்தது தமிழ் மண்ணில்! நீ குடித்தது தமிழ்த்தாயின் பால்! உன் உடல் பூராவும் ஓடுவது தமிழ்தான். ஆனால் உன் உணர்வில் மட்டும் ஏன் தடுமாற்றம்? தாய் மொழியில் கூடப் பேசுவது வீட்டில் தரக்குறைவு என்று எண்ணுவதனால் தான் பிள்ளைகளும் தாய் மொழியைத் தவிர்க்கின்றனர்.
அன்னிய மோகத்தில் நீ இருந்தால் உன் கீழ்வருபவர்கள் எப்படி தாய் மொழியைப் பேணுவார்கள்? உனது தாய் மொழியைப் பேசமுடியாத உனது பிள்ளைகளால் உனக்குப் பெருமை வருமா? உன நாகரிகம் அறியாப் பிள்ளைகளால் உனக்கு என்ன பயன்? அன்னிய மொழிகள் அனைத்தையும் நன்றாகப் படியுங்கள் உங்களின் ஆற்றலை வெளிப்படுத்துங்கள். ஆனால் அன்னை மொழியை, பண்பாட்டை, கலாசாரத்தை மட்டும் தூக்கி எறிந்து விடாதீர்கள்.
மாறுவோமா? கட்டாயம் மாற்றம் வேண்டும்! எங்களின் அடையாளங்களைத் தொலைத்து விடுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஏன் இப்படி ஆகினோம்? சற்றுச் சிந்திப்போமா?
நன்றாக தெளிவு பெற குமுறி எழுதியதற்கு வாழ்த்துகள். இனம்,மதம்,மொழி
கதம்பங்கள் மாலை ஆனால் நலம் , அடித்து கொண்டு தூற்றி கொண்டு கல்லறைகளானால் மலம்.