Blog

  • கற்பகவல்லி நின் பொற்பதங்கள்

    கற்பகவல்லி நின் பொற்பதங்கள்

    கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன்
    நற்கதி அருள்வாய் அம்மா!

    என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா (டி.எஸ்.பாலையா)

    திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா (டி.எஸ்.பாலையா)

    பாஸ்கர்

    அவர் பெரிய உயரம் இல்லை. வசீகரமான முகம் இல்லை. ஆனாலும் அவரின் நடிப்பு, சரித்திரச் சிகரம். அவர் டி எஸ் பாலையா. அவர் மக்கள் திலகம் நடிகர் திலகத்திற்கு முன்னோடி.

    பாலையா என்றால் எல்லோரும் காதலிக்க நேரமில்லை, தில்லானாவைச் சொல்வார்கள். இந்த வண்ண சினிமாவிற்கு முன் அவரின் பாமா விஜயம் படத்தைப் பாருங்கள். அது போல ஒரு செறிந்த நடிகர் இந்தக் காலத்தில் தேடினால் கூட, கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை. இது அவர்களைக் கொடுத்த நடிப்புப் பள்ளியின் பலம்.

    அவர் குரல், செய்கை எல்லாம் நம் வீட்டு மனிதர்களைக் கண் முன் நிறுத்தும். அவரின் டைமிங் சென்ஸ், வசன உச்சரிப்பு, சட்டென மாற்றிக்கொள்ளும் முக பாவம், கணேசனே கொஞ்சம் பயப்படும் ராதா, ரங்காராவ் பட்டியலில் பாலையாவுக்கும் இடம் உண்டு. அவர் கடைசிக் காலத்தில் நடித்த எதிரொலி படத்தில் கூட அதைக் காணலாம்.

    இன்று இயல்பான நடிப்பு என்று கொண்டாடும் நடிகர்கள் பலர், அவரின் படங்களைப் பார்க்க வேண்டும். அவர் இயக்குரின் நடிகர் – பாத்திரத்தின் நடிகர். இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவர் எனப் பத்மினி பாடும்போது கணேசன் தொடையில் லேசாகத் தட்டி தனது ஆதங்கத்தைச் சொல்லும் போது அவர் முகத்தைக் கவனியுங்கள் பிரில்லியன்ட்.

    பாவ மன்னிப்பு படம் என நினைவு. வந்த நாள் முதல் பாடலில் சிறையிலிருந்து வரும் காட்சி. கொஞ்சம் தயங்கி நின்று தலையைச் சொரிந்துகொண்டு வெளியேறும் காட்சியை அவர் உருவாக்கத்தில் கொண்டு வந்ததை எந்தப் பூனே பிலிம் கல்லூரியும் சொல்லித் தர முடியாத ஒன்று.

    அவருக்கு 2021 ஆகஸ்டு 23 அன்று, நூற்று ஏழாவது பிறந்த நாள்.

    Share
  • கிழவரும் குட்டியும் (சிறுகதை)

    கிழவரும் குட்டியும் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “நான் இந்தக் கறுப்புப் பூனையைக் கொல்லாம விடப்போறதில்லே!” தனக்குள் பேசிக்கொள்வதாக நினைத்து, உரக்கவே சொன்னார் மாத்ருபூதம்.

    இடுப்பில் குழந்தையுடன், தோட்டத்தில் மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த கவிதாவின் காதுகளிலும் மாமனாரின் வார்த்தைகள் விழுந்தன. முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டாள்.

    வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தவர் அருகில் பூனை எதுவும் நின்றிருக்கவில்லை. கடந்தவாரம் அவரிடம் வாங்கிய உதைகளை அந்த கறுப்புப் பூனை மறக்கவில்லையோ, என்னவோ!

    அன்று மாலை, அது அவர்கள் வீட்டின் வெளியே, தெரு ஓரமாக அசுத்தப்படுத்தியது.

    சும்மா இருப்பாரா, மா.பூதம்! அவசரமாக வெளியே ஓடி, அதை உதைத்தார். திரும்பத் திரும்ப.

    பயந்தோடிய பிராணியைப் பார்த்த கவிதா, “பாவம்பா! வாயில்லா ஜீவன்! அதுக்கு என்ன தெரியும்?” என்று மன்றாடியபோது, “நீ சும்மா இரு. நாம்ப வெளியே போறபோது, பூனை குறுக்கே வந்தா, கெட்ட சகுனம்! இது கறுப்பு வேற!” என்று அவளை அடக்கினார்.

    அவள் பிறந்தகத்தில், இரண்டு பூனைகள் துள்ளி விளையாடும். அவள் தரையில் படுத்துக்கொள்ள, அவள்மேல் ஏறும் ஒரு குட்டி.

    அவள் தன் தலையை பக்கவாட்டில் ஆட்ட, அதுவும் அப்படியே செய்ததைப் பார்ப்பதில் அவளுக்கு ஆனந்தம் பெருகும்.

    `பாடும்மா!’ என்று அவள் ஒவ்வொரு ஸ்வரமாகச் சொல்லிக்கொடுக்க, `ஸ்வர சுத்தம் இதுகிட்டதான் கத்துக்கணும்!’ என்று அவள் பெருமையாகச் சொல்லும் அளவுக்கு, இனிமையான குரலில் அப்படியே திரும்பப் பாடும் இன்னொன்று.

    “இதுக்கு என்ன பேர் வெச்சிருக்கே? ஜிஞ்சர்னு (ginger) கூப்பிடலாமா? அந்தக் கலராத்தானே இருக்கு?” என்று அவளுடைய அண்ணன் விளையாட்டாகக் கேட்க, கவிதா அதிர்ந்தாள்.

    “ஐயோ, வேண்டாம்பா. `டீ, கவி! இஞ்சியை நறுக்குடி’ன்னு அம்மா என்னைக் கூப்பிடறபோதெல்லாம் மனசு பக்கு பக்குங்கும்! இதைச் செல்லக்குட்டின்னு கூப்பிடப்போறேன்!” என்றாள் தீர்மானமாக.

    `ரொம்ப ஆசாரமா இல்லாத வீடா ஒனக்கு மாப்பிள்ளை பாக்கணும். `பூனைக்கு வேற ஆகாரம் போடணுமா! தண்டச்செலவு!’ன்னு மாமியார் நொடிப்பா’ என்று அம்மா ஆதங்கப்பட்டாள்.

    மாமியார் இல்லாத வீடே அவளுக்குக் கிடைத்தது. தனி வீடு. அதில் எல்லா சௌகரியங்களும் இருந்தன.

    ஆனால், வந்த சில நாட்களுக்குள், மாமனார், “அது என்ன, ஒங்காத்திலே ரெண்டு பூனை துள்ளி விளையாடறது? அங்கே சாப்பிடவே பிடிக்கலே. எனக்குப் பூனை, நாயெல்லாம் கண்டாலே வெறுப்பு!” என்று அடுக்கிக்கொண்டே போக, அவளுக்கு அழுகைதான் வந்தது.

    தன் அருமைப் பூனைகளைப் பரிந்து எதுவும் சொல்ல முடியவில்லை.

    `வாழ்க்கைப்பட்டுப் போற இடத்திலே எல்லாரிடமும் மரியாதையாக, அடக்க ஒடுக்கமா இருக்கணும்!’ என்று அனுதினமும் கூறிய தாயின் அறிவுரையைக் கேட்டு வளர்ந்தவளாயிற்றே!

    தாயைப் பார்க்கப் போனபோது, “ஒன் செல்லக்குட்டி ஒன்னைத் தேடறது, கவி. மூலை முடுக்கெல்லாம் மோந்து பாக்கறது! நீ எப்பவும் ஒக்காந்து படிப்பியே, அந்த நாற்காலியைவிட்டு நகர்றதே கிடையாது!” என்று அடுக்கியபோது, மீண்டும் அழுகைதான் வந்தது கவிதாவுக்கு.

    அவளைப் பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டது குட்டி — அதிவேகமாக வீட்டு வாசலிலிருந்து பின்புறம்வரை ஓடி, ஓடி.

    இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் கிழவருக்குப் புரியுமா? இல்லை, காது கொடுத்துத்தான் கேட்பாரா?

    எப்படிச் சொல்வது?

    நோய்த்தொற்று காரணமாக வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் நிலையாலோ, நண்பர்களுடன் அரசியலையும், `சினிமாக்காரி’களையும் உரத்த குரலில் அலச முடியவில்லையே என்ற எரிச்சலாலோ, அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது என்றுதான் கவிதாவுக்குத் தோன்றியது. இப்போதுதான் ஐந்தில் ஒருவர் அப்படி ஆகிவிட்டாராமே!

    இந்தவரை, மனிதர் தன் குடும்பத்தினரிடம் வன்முறையைக் காட்டவில்லையே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

    தன் பேத்தியிடம் உயிராக இருந்தவருக்கு மற்ற இனங்களின் குட்டிகளிடம் அன்பு வைக்கமுடியவில்லையே! கவிதாவுக்குப் புரியத்தான் இல்லை.

    ஒரு நாள், தன் பின்னங்காலைத் தரையில் பதிக்கமுடியாது, அந்தப் பூனை நொண்டி நடந்ததைப் பார்த்தபோது பரிதாபம் மேலிட்டது. மாமனார் டிவியில் மூழ்கி இருந்த தைரியத்தில், காம்பவுண்டுக் கதவைத் திறந்தாள். பூனைகளுக்கு இனிப்பு ஆகாது என்று, உப்பு பிஸ்கோத்து ஒன்றைப் போட்டாள்.

    பலரிடமும் அந்தப் பூனை பிரம்படியும், உதையும் வாங்கியிருக்கும் என்ற எண்ணமே அவளால் தாங்க முடியாததாக இருந்தது.

    அடுத்த இரண்டு நாட்களிலும், ஆகாரத்தை எதிர்பார்த்து, அங்கு வந்தது அந்தக் குட்டி.

    ஏதோ திருட்டுத்தனம் செய்வதுபோல், அவளும் அதன் பசியைப் போக்கினாள்.

    இரு கால்களிடையை அது சுற்றிச் சுற்றி வந்தபோது, அதன் அன்பும், நன்றி உணர்வும் அவளுக்குப் புரிந்தது. ஆனால், பயமும் எழுந்தது.

    மெல்லிய குரலில், “போயிடு. உதை வாங்காதே!” என்று எச்சரித்தாள்.

    “நான் பாப்பாவுக்குப் பால் குடுக்கணும்,” என்று பொதுவாகக் கூறிவிட்டு, கதவைத் தாளிட்டாள்.

    “குழந்தை எங்கேப்பா?”

    `போட்ட படத்தையே போடறான்! அபூர்வமா ஒரு புதுப்படம்! அதை சுவாரசியமாப் பாக்கறபோது இதென்ன தொணதொணப்பு!’ என்றெழுந்த எரிச்சலால் வந்தது பதில் கேள்வி: “என்னைக் கேட்டா?”

    தவழும் குழந்தை! அப்படி எங்கே போயிருக்கும்?

    பதைபதைப்புடன், வீட்டில் ஒவ்வொரு அறையாகத் தேட ஆரம்பித்தாள் கவிதா.

    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்திருக்குமோ? குளியலறை, கழிப்பறையிலும் நுழைந்து எட்டிப்பார்த்தாள்.

    பூனை வாசலிலிருந்து கத்தியது.

    “நீ அதுக்கு ஆகாரம் ஏதாவது போட்டியா?”

    “இல்லேப்பா”. மனமறிந்து பொய் சொன்னாள்.

    “போடாதே. அப்புறம் இதான் நம்ப வீடுன்னு இங்கேயே தங்கிடும்!”

    இடைவிடாமல், மீண்டும் கத்திய சத்தம் கேட்க, “அந்த சனியனை இன்னிக்குக் கொல்லாம விடப்போறதில்லே,” என்று சபதம் போட்டுவிட்டு, தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு வாசல்புறம் போனார் கிழவர்.

    தான் பெற்ற குழந்தையைக் காணோம் என்ற கலவர உணர்வு சற்றே மறைய, ஒரு கொலையைத் தடுக்க அவரைத் தொடர்ந்து வாசலுக்கு விரைந்தாள் கவிதா.

    “இங்கே பாரேன்!”

    வீட்டின் வெளிப்புறத்தில் அகலமும், ஆழமுமான சாக்கடை. அதற்குள், விழிகள் விரிய, குழந்தை!

    அழவும் பயந்து, அசையாமல் உட்கார்ந்திருந்தது.

    அதையே பார்த்துக்கொண்டிருந்த பூனை மீண்டும் கத்தியது.

    “இந்தப் பூனை பலே கில்லாடி! நம்பளைக் கூப்பிடத்தான் அந்தக் கத்து கத்தியிருக்கு! நல்லவேளை, இன்னிக்கு மழை பெய்யலே!”

    மழை பெய்யும்போது, வெள்ளமாக ஓடும் தண்ணீரில் குழந்தை அடித்துக்கொண்டு போயிருக்கும் என்ற நினைப்பே இருவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

    “நீ இரு. நான் குழந்தையை வெளியே எடுக்கறேன்!” எப்போதும், கால் வலி, இடுப்பு வலி என்று வியாதி கொண்டாடும் கிழவர், அருமைப் பேத்தியைக் காப்பாற்ற சாக்கடைக்குள் இறங்கினார்.

    “குழந்தையை டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போ. மூஞ்சி, ஒடம்பெல்லாம் சிராய்ச்சிருக்கு! ஒரே ரத்தம்!” என்று கரிசனப்பட்டவர், “அப்படியே அந்தப் பூனைக்கு ஏதாவது ஆகாரம் வாங்கிண்டு வா. பாவம், வாயில்லா ஜீவன்!” என்றார்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 142 (பொன்)

    சேக்கிழார் பாடல் நயம் – 142 (பொன்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    திருக்கடவூரில் வயல், வேள்விச்சாலை, குளங்கள், சோலைகள், இவற்றை மேம்படுத்தும் தொழில்கள் சிறந்தஇருந்தன. வேளாண் தொழில் செய்யும் பெண்கள் மருதப்பண்  இசைப்பர்; வேதம் ஓதும் அந்தணரின் அரங்க வழிபாடு நிகழும் இடங்களில் சாம கானம் ஒலிக்கும்; தூய பெரிய கொம்புகளையுடைய எருமைகள் படிந்து பால் சொரிவதால் கயல் மீன்கள் பாயும் செங்கமலங்களில் பால் மணம் வீசும்; மாடங்களின் மேலே தவழும்  மேகங்களில் யாகசாலைப்புகை கமழும்; அத்தகைய செல்வம் மிக்க ஊரில், கலயர் என்ற பெயருடைய அந்தணர் சிவபிரான் திருவடி பணியும் பக்தியும்  ஒழுக்கமும் மிக்கவர் வாழ்ந்தார். அவர் மார்க்கண்டேயன் என்னும் அந்தச் சிறுவனின் அச்சம் போக்க, அவனை நாடிவந்த இயமனின் உயிரைப் போக்கிய சிவபிரானுக்கு மிகவும் அதிகமான   குங்கிலியப்புகையை இடுகின்ற திருப்பணி செய்தார்.

    இந்நிலையில் இறைவன் செயலால் வறுமையுற்ற  போதிலும் அவர் தம்  பணியைத் தவறாமல் தொடர்ந்தார்.தம் நிலம் முதலிய பல்வகை வளங்களையும் விற்றமையால் உறவினர்  அனைவரும் துன்புற்றனர்.  வறுமையால் இருவேளை உணவின்றிக் குடும்பம் வாடியதால், கலயனார் மனைவியார் தம் பொன்தாலியைக் கொடுத்து நெல் வாங்கி வரக்  கேட்டுக் கொண்டார்.

    அதனைக் கொண்டு நெல் மூட்டைகளை வாங்க அவர் சென்றார். அப்போது ஒப்பற்ற குங்கிலிய மூட்டையைக் கொண்டு ஒருவன் அவரெதிரே வந்தான். அந்த மூட்டையில் குங்கிலியம் இருப்பதை அறிந்த கலயனார் மிகவும் மகிழ்ந்தார்.  திருப்பணிக்கு உகந்த  இக்குங்கிலியத்தை நான்  வாங்கிக் கொண்டால் நற்பேறு பெற்றவனாவேன் என்று அதனை விரும்பினார்.

    ‘’பொன் தருவேன், குங்கிலியம் தருக!’’ என்று அவர் பெற்ற சிறப்பைச் சேக்கிழார் பாடுகிறார்.

    பொன் தரத் தாரும்’ என்று புகன்றிட வணிகன் தானும்
    `என் தர இசைந்தது’ என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்;
    அன்று அவன் அதனை வாங்கி அப் பொதி கொடுப்பக் கொண்டு
    நின்றிலர் விரைந்து சென்றார்; நிறைந்து எழும் களிப்பினோடும்.

    பொருள்

    “நான் உமக்குப் பொன்னைத்தர நீர் இக்குங்குலியத்தினைத்தாரும்” என்று கலயர் சொல்ல, வணிகனும் “தேவரீர் எதனைக் கொடுக்க இசைந்தீர்?” என்றான்;’ கலயர் தாலியை ஈந்தனர்; அப்போதே அவன் அதனை வாங்கிக்கொண்டு அந்தப் பொதியைக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்ட கலயர் அங்குச் சிறிதும் நில்லாமல் உள்ள நிறைந்த பெருமகிழ்ச்சியுடன் விரைந்து சென்றனர்.

    பொன் தரத்தாரும் – இது வணிகனை நோக்கி நாயனார் கூறியது விலையாகப் பொன்னை நான் தர அதனைப் பெற்றுக்கொண்டு இக்குங்குலியப் பொதியினை நீர் தாரும்.

    விளக்கம்

    பொன் என்றது இங்குப் பொன்னாலாகிய அணியைக் குறித்துவந்தது. காரணமாகிய மெய்ப்பொருளைக் காண்பார்க்குக் காரியமாகிய வேற்று விகாரங்காட்சிப் படாதாதலின் தாலி பொன் எனப்பட்டது.

    என் தர இசைந்தது என்ற தொடர்  பொன் என்றதனால் அப்பொன்னோ – பொன்னணியோ, யாது என்ற  வினாவைக் குறித்தது.

    தாலியை ஈந்தார் என்றதொடர்,  அவ்வாறு வினவிய வணிகனுக்கு அது இன்னதெனவாயினாற்கூறாது – சொல்லிக் காலந்தாழ்க்காது – செயலிலே தாலியை ஈந்து அவ்வழியால் விடைதந்ததைக்  குறித்தது. இச்செயல் பூசைக்கான பொருள் தேடுதலின் தீவிரம் குறித்தது.

    அதனை வாங்கி அப்பொதி கொடுப்ப  என்ற தொடர்,  அதனை வாங்கிக்கொண்டு அதற்கீடாக அந்தப் பொதியினைக்கொடுதான். விலைபற்றி நாயனார் சிந்தித்திலரேனும், கொண்ட பொருளுக்கு நேரொக்கக் கண்டவன்போல அவன் அப்பொதியினைக் கொடுத்தான் என்பது குறிப்பு. அதனைப் பெற்றுக்கொண்ட அடியார் அங்கு நின்றிலர் விரைந்து சென்றார் என்று  புலவர்  பாடுகிறார். பூசைச்சாதனம் அருமையிற் பெற்ற ஆர்வமும் தூபப்பணியில் வைத்த தீவிரதர அன்பும் குறித்தது.

    தமக்குரியதேயாயினும் உரித்தன்றேயாயினும், நன்றேயாயினும் தீதேயாயினும், ஏதேனும் ஒரு தொழில் செய்து பிழைக்கவறியாது, உடைமை விற்றும் அடிமை விற்றும் உணவின்றிப் பட்டினி கிடந்தும் தாலியையும் விற்க முயன்றும் உணவு தேடுவது சோம்பர் செயலாம் என்று அறிவார் போன்ற சில நவீனர் இகழ்தலும் கூடும். மிடியும் பசியும் வருத்தியபோதும் தமக்குரிய தொழிலையன்றி வேறு தொழில் செய்து உயிர் வாழ எண்ணமாட்டார் பெரியோர் என்பது இந்நாயனாரது வாழ்க்கையாலறியப்படும் உண்மை நீதிகளுள் ஒன்றாம். ஆனால் எமது பெருமக்கள் தொழில் செய்தும், கூலிவேலை செய்தும் சீவித்தலை இகழ்ந்தாரல்லர்.

    “அல்லல்  நல்குர வாயிடக் கூலிக்கு, நெல்லறுத்தும்”

    என்ற அரிவாட்டாய நாயனார் சரிதமும்,

    “வளமுடையார் பாலெண்ணெய் கொடுபோய்மா றிக்கூறிக்,
    கொளமுயலுஞ் செய்கையுமற் றவர்கொடா மையின் மாறத்,
    தளருமன முடையவர்தாஞ் சக்கரவெந் திரம்புரியுங்,
    களனில்வரும் பணிசெய்துபெறுங்கூலி காதலித்தார்”,

    “செக்குநிறை எள்ளாட்டிப் பதமறிந்து திலதயிலம்
    பக்கமெழ மிகவுழந்தும், பாண்டில்வரு எருதுய்த்துந்,
    தக்கதொழிற் பெருங் கூலி தாங்கொண்டு”

    என்ற கலியநாயனார்சரிதமும், பிறவும் இவ்வுண்மையை விளக்குவன.

    ஆனால் இப்பெரியார்கள் பலரும் தத்தம் மரபுக்கும் தகுதிக்கும் உரிய தொழில்களையும் அவ்வகையிற் பெறும் கூலி வேலைகளையுமே செய்தமையும் குறிக்க. “புலி பசித்தாலும் புல் தின்னாது” என்று கொடுவிலங்கின் மேல் வைத்துக் காட்டும் நியதியையும் மறந்து, தொழில் யாவும் ஒன்றே – யாரும் எத்தொழிலும் செய்யலாகும் – ஏது செய்தேனும் பிழைத்தல் வேண்டும் என்று கூறும் நவீனக்கொள்கையினை அறிவுடையோர் கொள்ளார்.

    “ஈன்றாள்பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க,
    சான்றோர் பழிக்கும் வினை”

    என்ற நீதிக்கு இச்சரிதம் இலக்கியமாம். இதுபற்றியே “செயல் எலாம் தொழில்க ளாறே” என்று தொடக்கத்தில் வற்புறுத்திக் காட்டினார்.இவற்றால் வேதியர்க்கு வேறு தொழில்கள் உரித்தாகாமையும் காணப்படும்.

    “இறந்த மூப்பினராகிய இருமுது குரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியால் வருந்து மெல்லைக்கண் தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக” என்னும் அறநூற் பொதுவிதியினை அறிவுடைச் சான்றோர் மேற்கொள்ளார் ரென்பது துணிபு.

    இப்பாடலில்  கலயனாரின் சிவ பத்தித்திறம் கூறப்படுகிறது. தம் குடும்பம் வறுமையுற்ற போதும் அது கருதாமல், தம் மேற்கொண்ட திருப்பணியை மேற்கொண்டு அதனைய செய்த சிறப்பு கூறப்படுகிறது. சான்றோராகிய அடியாரின் தளராத மனவுறுதியையும், வறுமையைக் கண்டு கலங்காத   சிவபக்தித் திறத்தையும், சான்றோர்  என்றும் சான்றோரே என்பதையும்   விளக்குகிறது. இதன் விளைவை இவ்வரலாறு அடுத்து, விளக்கும்!

    Share
  • சுண்டைக்காய் அறுவடை

    சுண்டைக்காய் அறுவடை

    நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று சுண்டைக்காய் அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கப்பூரின் நீரடிச் சுரங்கம்

    சிங்கப்பூரின் நீரடிச் சுரங்கம்

    சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில், அண்டர்வாட்டர் வேர்ல்டு என்ற நீர்வாழ் உயிரினக் காட்சியகம் இருந்தது. இதன் உள்ளே, அக்ரிலிக் என்ற நெகிழியால் ஆன, நீரடிச் சுரங்கம் இருந்தது. இந்தச் சுரங்கத்தின் வழியே நீர்வாழ் உயிரினங்களை மிக நெருக்கமாகக் கண்டு மகிழ முடிந்தது. 1991ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இது, 2016ஆம் ஆண்டு மூடப்பட்டது. 25 ஆண்டுகளில் பல்லாயிரம் பார்வையாளர்களை ஈர்த்தது. 2002 காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் வசித்தபோது ஹேமமாலினி இந்தக் காணொலியை எடுத்தார். இதைப் பார்க்கும்போது, ஆழ்கடலில் விழிவிரியப் பார்த்துக்கொண்டே நாம் நடந்து வரும் உணர்வைப் பெறுகிறோம். சின்னஞ்சிறியதும் பென்னம்பெரியதுமாக, விதவிதமான நீர்வாழ் உயிரினங்கள், நம் தலைக்கு மேலும் நாலாபுறத்திலும் வலம் வருவது, அரிய ஓர் அனுபவம்.

    Underwater World (Chinese: 新加坡海底世界) (13 May 1991 – 26 June 2016), also known as Underwater World Singapore Pte Ltd, was a former oceanarium located on the offshore Singaporean island of Sentosa. Underwater World had a 83-metre (272 ft) long travelator that moved visitors along a submerged 6-millimetre (0.24 in) thick acrylic-windowed tunnel from which they could look at an array of marine life including coral reefs, stingrays, moray eels, turtles, sharks and others. (Wiki)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • லண்டன் சாக்லேட்டுகள்

    லண்டன் சாக்லேட்டுகள்

    எங்கள் குடும்ப நண்பர் நவ்யா, லண்டனிலிருந்து சாக்லேட்டுகளை அனுப்பியுள்ளார். அவற்றைப் பிள்ளைகள் நித்திலாவும் ஹரி நாராயணனும் பிரித்துச் சுவைக்கும் காட்சி இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 29

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 29

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

    முன்னுரை

    ஒன்றினை மற்றொன்றோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவது உவமம் என்பது உண்மையாயினும் அப்படிக் கூறுவதில் பல நெறிகள் உண்டு. இயற்கையை இயற்கையோடும் இயற்கையைச் செயற்கையோடும்  செயற்கையைச் செயற்கையோடும் செயற்கையை இயற்கையோடும் உயர்திணையை உயர்திணையோடும் உயர்திணையை  அஃறிணையோடும், அஃறிணையை அஃறிணையோடும் அஃறிணையை உயர்திணையோடும்  இருப்பதை இருப்பதோடும் இருப்பதை இல்லாததோடும் இல்லாததை இல்லாததோடும் இல்லாததை இருப்பதோடும் என ஒப்புமைப் படைப்பாளனின் சிந்தனைக்கேற்ப அமையும். வானம் இருள்கிறது. இது இயற்கை. இருட்டுக்குப் பாவேந்தர் உவமம் சொல்கிறார். ‘கேள்வி இல்லான் நெஞ்சம் போல் இருண்டு’ என்று. கல்வி, கேள்வி என்னும் இருகூறுகளால் நிரம்புவது அறிவு. செவிச்செல்வமாகிய கேள்வியறிவு இல்லாதவன் அறிவு வெறும் ஏட்டுப்படிப்பினால் நிரம்பிவிடாது. கேள்வியறிவு இன்மை என்பது முயற்சியில் தளர்ச்சி. வானத்தின் இருள் இயற்கை. அந்த இயற்கையைப் பாவேந்தர் செயற்கையோடு ஒப்பிடுவதைக் காணலாம். இதுபோன்று அமைந்திருக்கும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    ஊரும் உவமமாகலாம்.

    “மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே! புதுமைகள் நிறைந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே! தஞ்சையில் பறந்த புலிக்கொடியில் வீரத்தைக் கண்டேனே! காஞ்சித் தலைவன் கோயில் சிலைதான் கண்மணியே உன் பொன்னுடலோ? குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ? சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையோ உன் செவ்விதழோ? தூத்துக்குடியின் முத்துக்குவியல் திருமகளே உன் புன்னகையோ? பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய்மொழியோ? கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ? குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ? இவையாவும் ஒன்றாய் தோன்றும் உன்னைத் தமிழகம் என்பேனே!” என்னும் கருத்துடைய திரையிசைப் பாடலைப் பலரும் கேட்டிருக்கக் கூடும்.  இந்தப் பாட்டில் கவிஞர் வாலி உவமமாகச் சொல்லியிருக்க வேண்டிய பொருள்களை மட்டும் சொல்லாமல் அவை தொடர்பான அரசுகள், நகரங்கள் முதலியவற்றையும் நிரலாகக் கூறி இறுதியில் ஒட்டுமொத்தமாக இவையெல்லாம் இருப்பன தமிழகத்திற்குள் ஆதலின் தன் காதலியைத் தமிழகம் என்று ஒற்றைச் சொல்லால் கூறும் காதலனைக் காட்டுகிறார். ஓர் இளம்பெண்ணுக்கு நகரத்தை உவமமாகக் காட்டலாமா? மேம்போக்காக இதனைக் கேட்பவர்க்குப் புதுமை போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில்  தலைவனைப் பிரிந்த தலைவியின் அழகிற்குச் சிதைந்து போன நகரத்தையும், அம்பல் மற்றும் அலருக்குப் குறிப்பிட்ட போர்க்களத்து ஆரவாரவொலியையும் உவமமாக்குவது தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடு, உவம மரபு. ஐங்குறுநூற்றில் ஒரு பாடல்.

    “நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
    நெடுநீர்ப் பொய்கைத் துடும் என விழூஉம்
    கைவண் மத்தி கழாஅர் அன்ன
    நல்லோர் நல்லோர் நாடி
    வதுவை அயர விரும்புதி நீயே!”

    “நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடும் என விழூஉம் கைவண் மத்தி கழாஅர்” என்னும்  உள்ளுறையால்  நகர்வளத்தைச் சுட்டுகிற இந்த நெறி, “கொக்கின் உக்கு ஒழிந்த தீம்பழம் கொக்கின் கூம்பு நிலையன்ன ஆம்பல் தூங்கு நீர் குட்டத்துத் துடும் என விழும் தண்டுறை ஊரன்” என்னும் நற்றிணையாலும் அறியலாம். பரத்தை ஒருத்தியுடன் சின்னாள் வாழ்ந்து அவளைப் பிரிந்து மற்றுமொரு பரத்தையை வதுவை அயர்ந்த தலைவன் தலைவியிடம் வந்தானாக, அவள் புலந்தாள். புலந்த அன்னாளுக்கு ‘இனி இவ்வாறு நிகழாது’ எனப் பொய்யாக வாக்களித்தான் தலைவன். அந்தப் ‘பொய்யனை’  நோக்கித் தலைவி சொன்ன பதில் இது.

    “நீ சொல்வதை நான் நம்பவேண்டும்! அதுதானே நின் விருப்பம்! உனக்குத்தான் வள்ளன்மையில் சிறந்த மத்தியின் கழாஅர் நகரைப் போன்ற நல்ல நல்ல பெண்கள் எல்லாம் கிடைப்பார்கள். நீயும் அவர்களை மணம் செய்து கொள்ள விரும்புவாயே!” (உன்னைத் தெரியாதா எனக்கு?) என்று நகையாடுகிறாள். பரத்தையர் மேனி நலமல்லது கற்பு நலம் இலராதலின்  ‘நல்லோர் நல்லோர் என்னும் அடுக்கு இழித்தற்கண் வந்தது, இந்தப் பாட்டில் கழாஅர் நகரம் தலைவன் விழையும் பரத்தையர்க்கு உவமமாக வந்தது. காவிரிக்கரையில் அமைந்திருக்கும் இவ்வூர்த்துறை கரிகால் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தியும் அவள் கணவன் அத்தியும்  விளையாடி வரலாற்றுப் பெருமை பெற்றது. இவ்வாறு பெண்களின் எழிலுக்கும் அலருக்கும் நகரத்தையும் போர்க்களத்தையும்  உவமமாக்குவதும்  பழந்தமிழ்க் கவிதை மரபு என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

    தாமரைபோல மலர்ந்த அல்லி

    மிளகும் பப்பாளி விதையும் ஒன்றுபோல் தோன்றும். நொய்யும் ரவாவும் ஒன்றுபோல் தோன்றும். கலப்பட வணிகர்கள் எதனை எதனோடு கலக்க வேண்டும் என்னும் தெளிஞானம் பெற்றிருப்பர். இலக்கியத்தில் இத்தகையதோர் ஒப்புமையைப் புலவர் ஒருவர் திணைவிளக்கத்திற்காகப் பாடியிருக்கிறார். தாமரையும் ஆம்பலும் ஒன்றுபோல் தோன்றும். சில அடிப்படை இயல்புகளும் அவற்றுக்கிடையே உண்டு. அவையிரண்டுமே நீர்த்தாவரம். தாளினாலும் நீண்டு, கிழங்கில் வேர் கொள்ளுவன. வேர், கிழங்கில் பிடிமானம் கொள்வதால் நீர்நிலைகளில் அதாவது குளங்களில் நீர் வற்றிய காலத்தும் அப்பூக்களின் மலர்ச்சி விரைவில் குறையாது.

    “கன்னி விடியற் கணைக்கால் ஆம்பல்
    தாமரை போல் மலரும் ஊர!
    பேணா ளோநின் பெண்டே?
    யான் தன் அடக்கவும் தான் அடங்கலனே! ” (ஐங். 68)

    என்று அமைகிறது அப்பாடல். மருதம் பாடுவதில் சிறந்த புலவரான ஓரம்போகியார் பாடியது. பாடலின் உரிப்பொருளைப் புரிந்து கொள்ளாத நிலையில் உவம நுட்பம் புரிவதற்கு வாய்ப்பில்லை. இங்கே உரிப்பொருள் மருதத்திணையின் ஊடல். அத்திணையுள் அடங்கிய துறைகளுள் ஒன்று ‘அவனறியும் ஆற்றல் அறிதல்’ (தொல். பொ.147). தலைவன் தன்மாட்டு மயங்கி நிற்க, பரத்தை தலைமகளை ஏசுகிறாள். ஆனால் தலைமகள், தன்னை ஏசுவதாகப் பொய் மொழிகிறாள். இதனைச் செவிமடுத்த தலைவி “தான் ஏசாது அடங்கி நிற்கவும் தான் அடங்காது நிற்கிறாள்” எனத்  தலைவனுக்குக் கூறியது.

    இது தலைவி கூற்று. தலைவி தாமரை. ஆம்பல் கன்னிவிடியலில் மலரும். கன்னிவிடியல் என்றால் இருள் களையும் அதிகாலை. ‘குமரியிருட்டு’ என்பதும் அது. தாமரை மலர வேண்டிய அந்தப் பொழுதில் ஆம்பலும் மலர்கிறதாம். தான் மலர்வதற்குரிய பொழுதில் தானும் மலர்வதாலேயே ஆம்பல் தாமரையாகிவிடாது என்பது கருத்து. கற்புச் சிறப்பு இன்மையால் அடங்கிக் கிடத்தற்குரிய பரத்தை, குலமகளிர் போலத் தருக்கித் திரிவது பொருத்தமில்லை” என்பதுமாம். குமுதம் என்னும் நீர்க்கொடி. குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே வந்தன்று வாழிய மாலை” என்றும் ஓரம்போகியார் பாடிய பாடல் குறுந்தொகையிலும் காணக்கிடக்கின்றது.

    வேகத்தை விரைவுபடுத்திய உவமங்கள்

    வினைமுற்றிய தலைவன் மீள்கிறான். அவனுக்காகக் காத்திருக்கிறாள் தலைவி. பேயனார் பாடிய முல்லைத் திணைப் பாடல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உவமங்களை எத்தகைய உரிப்பொருள் விளக்கத்திற்கு எந்த முறையில் அதாவது உத்தியில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எண்ணுகிறபோது வியப்பு மேலிடுகிறது. சாதாரணமாக முன்னிலையில் உவமம் சொல்லிப் பாராட்டுவது, படர்க்கையில் உவமம் சொல்வது என்பதெல்லாம் உண்டு,  இந்தப் பாட்டில்  தலைவன் பிரிந்திருந்த தலைவியைக் காண விரைந்ததற்கு உவமங்களைக் காரணிகளாக்குகிறான்.

    “நின்னே போலும் மஞ்ஞை ஆல நின்
    நன்னுதல் நாரும் முல்லை மலர
    நின்னே போல மா மருண்டு நோக்க
    நின்னே உள்ளி வந்தனென்
    நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே” (ஐங்குறு. 492)

    தலைவியைப் போலச் சாயல் உடைய மயிலும், அவள் நன்னுதல் போல மணம் வீசும் மலர்ந்த முல்லையும் அவள் கண்ணைப் போல மருண்டு நோக்கும் மானும் அவன் உள்ளத்தில் தலைவியைக் காணும் வேட்கையைத் தூண்டினவாம். எவ்வளவு விரைவாக வருகிறான் என்றால் கார்காலம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டானாம். கார்காலம் அவன் திரும்பி வருவதற்கான கால எல்லையாயினும் மேற்கண்ட மயிலையும் முல்லையையும் மானையும் கண்டு உள்ளத்தில் காதல்பெருக கார்காலத்தின் முழு எல்லையைக் கருத்திற் கொள்ளாது அதன் தொடக்கத்திலேயே திரும்பிவிட்டானாம். கார்காலம் வருவதற்கு முன்னேயே வந்துவிட்டான் என்பது கருத்து. ‘பெய்த புலத்துப் பூத்த முல்லை பசு முகைத்தாது நாறும் நறுநுதல் அரிவை’ என்று குறுந்தொகையிலும் வருதல் காண்க. திணைக்கான முதற்பொருளும் கருப்பொருளும் செறிந்து நிற்றல் காண்க.

    மனைவிளக்கும் குடும்ப விளக்கும்

    ‘வீட்டில் வந்து விளக்கேற்றுவாள்’ என்பது பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு நோக்கிவரும் மகளிர்க்கான வாழ்த்துரைகளில் ஒன்று. அதனால் அவள் மனைக்கு விளக்கம் ஆனாள். பாரதிதாசன் இந்தச் சிந்தனையை இன்னும் விரிவுபடுத்தி, ஆழமாக்கி ஒரு குடும்பத்தின் கட்டுமான உறுதிக்கே மனைவிதான் காரணம் எனக் கருதி மனைவிளக்கு என்பதைக் குடும்ப விளக்காக்கினார்.

    “ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
    மனைக்கு விளக்கம் ஆயினள் மன்ற கனைப் பெயல்
    பூப்பல அணிந்த வைப்பின்
    புறவணி நாடன் புதல்வன தாயே!” (ஐங் 409)

    எந்தப் பாட்டானாலும் உவமத்தைச் சுவைத்து அனுபவிப்பதில் சொல்லின்பம் அதாவது உவமத்திற்கான அடைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இந்தப் பாட்டில் ‘சுடர்போலத் தலைவி’ என்றாலே போதும். ‘செஞ்சுடர்,’ அது தீப்பந்தத்துச் சுடர் அல்ல. பாண்டில் செஞ்சுடராம். பாண்டில் என்னும் பலபொருள் ஒருசொல்லுக்கு விளக்குத் தகழி என்பது இங்கே பொருள். அது ஒண்சுடர் பாண்டில் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. ஒள்ளிய சுடர்களை ஏந்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பாண்டில் என்பது பொருள். பதினைந்து சீர்கள் சொற்கள் கொண்ட பாடலொன்றில் ‘ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர்’ என்னும் ஒரு தொடர் நான்கு சீர்களைத் தமதாக்கிக் கொள்ளும் அளவிற்கு உவம அடைகள் இருக்கின்றன என்பது ஆய்வுக் கருத்து. “பாண்டில் விளக்கின் பரூஉச் சுடர் அழல” என்பது நெடுநல்வாடை.

    இன்று கூடுமோ இந்தக் காட்சி?

    சங்க இலக்கியத்தின் படைப்புக் கோட்பாடுகளில் நுண்ணியமானவை அகப்பொருள் மாந்தர்களில் பெண்பால் பாத்திரப்படைப்புக்கள். நற்றாய், செவிலி, தலைவி, தோழி என்னும் கற்பனைப் பாத்திரங்களில் இழையும் பண்பாட்டுக் கூறுகள் அக்காலத்தைய தமிழ்ச்சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளாகவே கருதமுடியும். இயற்பெயர் சுட்டாத அப்பாத்திரங்களில் நற்றாய் தலைவியெனின் செவிலி தோழியாவாள்.  நற்றாயின் மகள் தலைவியெனின் செவிலியின் மகள் அவளுக்குத் தோழியாவாள். இருந்திருப்பாள்.  தோழி தலைவியானால் தலைவி தோழியாவாள். படைப்புக்கு உரிமையாளரான புலவரே இத்தனைப் பாத்திரங்களாகவும் உலவுகிறார் என்பது கூடுதல் வியப்புக்குக் காரணமான சேதி.

    இந்தப் பின்புலத்தில் இலக்கியச் சித்திரிப்பு பலவகைப்படும். இயற்கைக் காட்சிகளைச் சித்திரிப்பது. போர்க்களத்தைச் சித்திரிப்பது. குடும்பக் காட்சிகளைச் சித்திரிப்பது. பாவேந்தரின் குடும்பவிளக்கில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சிகள் தமிழ்க் கவிதை உலகத்திற்கு முற்றிலும் புதியவை. ‘ஒரு நாள் நிகழ்ச்சி’ என்ற பெயரில் அவர் செய்திருக்கும் கவிதையோவியம் அவரை ஒரு கவிஞனாக மட்டுமன்று. ஒரு இலட்சியக் குடும்பத் தலைவராகவும் காட்டுகிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வினை ஐங்குறுநூறு சித்திரிக்கிறது. அந்தச் சித்திரிப்பில் தாய்மையும் இல்லறமும் உவமங்களும் சங்கமிக்கின்றன.

    தலைவி களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுக, அதனைத் தோழி வாயிலாக அறிந்து, தலைவியின் நாணத்தால் நேரடியாக மொழிதலின் இயலாமை கருதி நற்றாயிடம் எடுத்துச் சொல்லிக் கற்பறம் காப்பவள் செவிலியே. அதனாலேயே ‘தாயெனப்படுவோள் செவிலியாகும்’ என்பார் தொல்காப்பியர். அத்தகைய செவிலி தலைவி நடத்தும் இல்லறப் பாங்கினைக் கண்டு வந்து நற்றாய்க்கும் எடுத்து மொழியும் வகையில் பல பாடல்கள் உள்ளன. அப்பாடல்களில் இல்லறக் காட்சியின் எழில், கட்டுமானச் செப்பம் குறையாது உவமச் சிறப்போடு அமைந்திருப்பதைக் காணமுடியும்.

    “மறியிடை படுத்த மான்பிணை போலப்
    புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
    இனிது மன்ற அவர் கிடக்கை முனிவின்று
    நீனிற வியலகம் கவைஇய
    ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே” (ஐங். 401)

    என்ற பாடலில் தலைவனுக்கும் தலைவிக்கும் நடுவில் அவர்கள் மகன் மான் பிணைபோலப் படுத்திருக்கும் இனிமையான காட்சியை நற்றாய்க்கு எடுத்துரைக்கும் செவிலி, நீல நிறமுடைய வானத்தால் சூழப்பட்ட இந்த உலகத்து இன்பமும், உம்பருலகத்து இன்பமும் அந்தக் காட்சிக்கு ஈடாகாது என்று எடுத்துரைக்கிறாள். இங்கே உவமச் சிறப்பு எங்கே இருக்கிறது? மகன் குட்டியாம். தலைவனும் தலைவியும் மானும் பிணையுமாம். புலிக்குப் பிறந்தது பூனையாகாதது போல மான்களுக்குப் பிறந்த மான் குட்டி எனக் கொள்க.

    “புதல்வன் கவைஇய தாய் புற முயங்கி
    நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
    நரம்புளர் முரற்கை போல
    இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே!”  (ஐங். 402)

    என்ற பாடலில் கட்புலத்தின் இனிமையைச் செவிப்புல இனிமையாகக் காட்டுகிறார் புலவர். தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு தலைவி படுத்துறங்குகிறாள்.  அவளுடைய புறத்தைத் தழுவிக் கொண்டு தலைவன்  உறங்குகிறான். பாணருடைய நரம்புளர் முரற்கையினால் தோன்றிய இசை, கேட்டார் செவிக்கு இன்பம் பயப்பதுபோலப், பிள்ளையைத் தாய் தழுவ அவளைத் தலைவன் தழுவக் கிடக்கின்ற காட்சி கண்ணுக்கு இன்பம் பயந்ததாகக் கூறுகிறார். செவிலியின் கட்புலக் காட்சி மறைந்தொழியவும் அக்காட்சியைக் கண்ட மனம் அதனை மறவாது, பாணர் இசைத்த பண்ணை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பது போல இன்பம் பயந்தது என்பது கருத்து. ‘பாணர் நரம்புளர் முரற்கை போல’ என்னும் இந்த உவமத்தைப் “பாணர் நயம்படு முரற்கை யாத்த பயன்தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும்’ (407) எனத் தலைமக்களின் புணர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது அறிக.

    “புதல்வற் கவையினள் தந்தை மென்மொழிப்
    புதல்வன் தாயோ இருவரும் கவையினள்
    இனிது மன்ற அவர் கிடக்கை
    நளியிரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே” (409)

    என்னும் பாடலில் செவிலி கண்ட காட்சி மாற்றப்படுகிறது. முந்தைய பாடலில் மகனைத் தாய்தழுவ அவளைத் தலைவன் தழுவிக்கிடக்கிறான். இந்தக் காடசியில் “தந்தை புதல்வனைத் தழுவிக் கிடக்கின்றான். அந்தத் தலைவனையும் புதல்வனையும் தாய் தழுவிக் கிடக்கிறாள். “புதல்வன் தாயோ இருவரும் கவையினள்” இந்தப் பாடலில் உவமம் ஏதும் சுட்டப்படாவிடினும்  மனைவி, கணவன், புதல்வன் என்பதே உலகமாதலின் இதனின் வேறு உலகம் இல்லையென்பார் ‘நளியிரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே’ என்னும் அருமை புலப்படுதல் காண்க.

    நிறைவுரை

    கருத்து, உணர்ச்சி, கட்டுமானம், கற்பனை என்னும் கூறுகளுள் உவமத்தைக்  கற்பனையுள் அடக்கும் சிலர் அதனைக் கவிதையின் புற அழகாகக் கொண்டு அணியிலக்கண அமைதி காண்பர். கவிதை அழகுணர்ச்சியின் வெளிப்பாடு. அது இலக்கணப் பதிவு அல்ல. உவமத்தைக் கருத்து விளக்கத்திற்கான அகக்கருவி என்று கொண்டால் அதன் பயன்பாடு இன்னும் சிறக்கும். இரு மாறுபட்ட புலன்கள் வழி அடையக் கூடிய இன்பக் கூறுகளையும் ஒப்புமை செய்து காட்டுகிற படைப்பாளுமை  இருந்திருக்கிறது.  ‘கன்னி விடியற் கணைக்கால் ஆம்பல்’ என்றும்  ‘ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர்’ என்றும் ‘நரம்புளர் முரற்கை’ என்றும் ‘கைவண் மாத்தி கழாஅர்’ என்றும் புணர்த்துக் காட்டியிருக்கும் உவம அடைகள் இலக்கண வகையால் உள்ளுறைக்குப் பயன்பட்டாலும் கவிதைப் பொருளைச் சிறக்கச் செய்யும் சிந்தனை மூலங்களாகவே தோன்றுகின்றன.

    (தொடரும்…)

    Share
  • இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சி

    இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில் நுணுக்க வளர்ச்சி

    Indian Railways Will Run Trains on Hydrogen Fuel-Based Technology

    Under the flagship programs of the Government, ‘Advanced Chemistry Cell (ACC) Batteries’ and ‘National Hydrogen Mission’, to cut down on the Green House Gas (GHG) emission under Paris Climate Agreement .

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Engg Nuclear, Canada 

    A new dawn ushers on Indian Railways as it endeavors to be self-reliant for its energy needs as directed by the Prime Minister and solarise railway stations by utilizing its vacant lands for Renewable Energy (RE) projects. Railway is committed to utilize solar energy for meeting its traction power requirements and become a complete ‘Green mode of transportation’.

    The Ministry of Railways has decided to install solar power plants on its vacant unused lands on mega scale.

    The use of solar power will accelerate the Minister of Railways, Piyush Goyal’s mission to achieve conversion of Indian Railways to ‘Net Zero’ Carbon Emission Railway.

    Indian Railways present demand would be fulfilled by the solar projects being deployed, making it the first transport organisation to be energy self-sufficient. This would help in making Indian Railways green as well as ‘Atma Nirbhar’.

    இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் மீள்புதிப்பு எரிசக்தியில் இயங்கத் திட்டங்கள்

    இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் முற்போக்கு இரசாயன மின்கலன் நிறுவகம் & தேசீய நீரக வாயு நிறுவகம் [Advanced Chemistry Cell Batteries & National Hydrogen Mission] இரண்டும் இணைந்து, 2015 ஆண்டு பாரிஸ் காலநிலை உடன்படிக்கைப்படி, 2030 ஆண்டுக்குள், இந்திய இருப்புப் பாதை வண்டிகள் நீரக வாயு மூல எரிசக்தியில் [Hydrogen Fuell-Based Technology] இயங்கி பூஜிய கரித்தூள் வெளியேற்ற விதியைக் கடைப் பிடிக்கும் என்றோர் திட்டம் உள்ளது. [indian Railway Organization of Alternate Fuel (IROAF)] & [Green Fuel of Indian Railways] நிறுவகங்கள் திட்டத்தை,54 மைல் தூரத்தில் [90 கி.மீ.] உள்ள, வட இரயில்வே சோனிபட்- சிந்து பகுதியில் கட்ட ஆரம்பித்துள்ளன.

    திட்ட வேலைகள் டிசைன், வடிவாக்கம், தயாரிப்பு, அனுப்புதல். நிறுவுதல், சோதனை, நீரக வாயு & மின்கல மின்னியல் சாதனம், நீரக வாயு சேமிப்பு, [For 1600 HP Engine DEMUS] .முதலில் 2 டீமஸ் எஞ்சின்கள் மாற்றப்படும். பிறகு 2 ஹைபிரிட் எஞ்சின் மாற்றப்படும். அத்திட்டம் இந்தியாவுக்கு 2.3 கோடி ரூபாய் ஆண்டுக்கு மிஞ்சும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அந்த புதிய இரயில் தொடர் ஹரியானாவில் சோனிபட்-சிந்து பகுதியில் முதலில் இயங்கும்.

    அடுத்து பரந்த வெளியில் நிறுவி சூரியக் கதிர்ச்சக்தி மின்கலன் ஆற்றலில் இரயில் எஞ்சின்கள் இயங்க ஏற்பாடுகள் தயாராகுகின்றன.

    Indian Railways has acted as a pioneer in green energy procurement. It has started energy procurement from various solar projects like 3 MWp solar plant set up at MCF Raebareilly (UP). About 100 MWp rooftop solar systems have already been commissioned on various stations and buildings of Indian Railways.

    Besides, one project of 1.7 MWp at Bina (Madhya Pradesh) which shall be connected directly to the Overhead Traction System has already been installed and is presently under extensive testing. It is likely to be commissioned within 15 days. This is the first of its kind project in the world commissioned by Indian Railways in collaboration with Bharat Heavy Electricals Limited (BHEL). It involves adoption of innovative technology for converting Direct Current (DC) to single phase Alternating Current (AC) for feeding directly to Railway’s overhead traction system. The solar power plant has been established near the Bina Traction SubStation (TSS). It can produce approximately 25 lakh units of energy annually and will save around INR 1.37 Crore for Railway every year.

    தகவல்

    https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgzGkZkWGHQFcvVglfbBmrsXqScXt
    https://solarquarter.com/2020/07/07/solar-energy-to-make-indian-railways-a-complete-green-mode-of-transportation/
    https://solarquarter.com/2020/07/06/rites-tenders-for-1-gw-land-based-solar-pv-projects-on-railways-land-across-india-2/

    Share
  • புத்தக மதிப்புரை: Loop Quantum Gravity for everyone

    புத்தக மதிப்புரை: Loop Quantum Gravity for everyone

    முனைவர் நடராஜன் ஸ்ரீதர்
    ஆற்றல் அறிவியல் துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி
    natarajangravity@gmail.com

    கடந்த முறை நாம், வல்லமை இதழில் அஸ்றோபிசிக்ஸ் பார் பீபுள் இன் ஹர்ரி என்ற புத்தகம் குறித்த விமர்சனத்தை பார்த்திருந்தோம்[1]. அதேபோல தற்போதும் இன்னொரு சிறப்பு வாய்ந்த புத்தகமான லூப் குவாண்டம் கிராவிட்டி பார் எவரிவொன் (Loop Quantum Gravity for everyone) என்ற புத்தகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

    லூப் குவாண்டம் கிராவிட்டி பார் எவரிவொன் என்ற இந்த புத்தகம் [2]  ஆங்கிலத்தில் ருடால்போ காம்பினி மற்றும் ஜோர்ஜ் புல்லின் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. இப் புத்தகம் வளைத்தன்மைக்  குவாண்டம் ஈர்ப்பியல் பற்றிப் பொதுமக்கள் புரித்துகொள்ளும் வகையில் அறிவியலை அலசுகிறது.

    வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் என்ற ஒரு தத்துவம் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்கல் செயல்முறைக்கு உட்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு அறிவியல் வழிமுறை ஆகும். இதைப்பற்றி தமிழில் எமது அறிமுகக் கட்டுரைகள் கூட ஏற்கனவே வெளியாகி உள்ளது [3]. இந்த வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் குறித்த விஷயங்களை அதன் வரலாற்றுப் பின்னணியில் இருந்து இப்புத்தகம் ஆரம்பிக்கிறது.

    இந்நூலின் முதல் அத்தியாயத்தில் வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவம் எவ்வாறு ஐன்ஸ்டைனின் தத்துவத்தைக் குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவத்திற்குப் புகுத்த முற்படுகிறது என்பதை விளக்க முயல்கிறது. மேலும் வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவம் அதிர்விழைத் தத்துவத்தில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும் விளக்குகிறது.

    மேலும் இது ஏன் குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவங்களை ஆய்வுச் சோதனைகள் வாயிலாகக் கண்டறிய முடியாது என்பதையும் வரையறுக்கிறது.

    இந்நூலின் இரண்டாவது அத்தியாயத்தில் மின்காந்த அலைகளைப் பற்றி எழுத்தாளர்கள் விவரிக்கின்றனர். மேக்ஸ்வெல் அவர்களின் ஆய்வுகளைப் பற்றி விளக்கிவிட்டு பின்னர் நான்கு வகையான அடிப்படை விசைகளைப் பற்றி விவரிக்கிறது இந்நூல்.

    அடிப்படை விசைகள் யாங்-மில்ஸ் தத்துவங்களில் ஊடாக எவ்வாறு பொதுமைப்படுத்தப் படுகிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு, அது எவ்வாறு வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல்  தத்துவத்திற்கு உட்படுத்தப்படுகிறது என்பதையும் விரித்துரைக்கிறது. 1666 இல் நியூட்டன் ஆல் கண்டறியப்பட்ட ஈர்ப்பியல் தத்துவம் பின்னாட்களில் ஐன்ஸ்டைனால் எவ்வாறு மேம்பாடு செய்யப்பட்டது குறித்தும், பொது சார்பியல் தத்துவம் ஈர்ப்பியலை எவ்வாறு தெளிவுறுத்துகிறது என்பதையும் இந்நூல் சிலாகிக்கிறது.

    குறிப்பாக பொது சார்பியல் தத்துவத்தின் வாயிலாகப் புதன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதை ஒரு நூற்றாண்டுக்கு 40 ஆர்க் நொடி அளவில் எவ்வாறு மாறுபாடு அடைகிறது என்பதை இந்நூல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இரு கனமான பொருட்களுக்கு இடையே செயல்படும் ஈர்ப்பு என்பது விசை என்பதாக இல்லாமல் அவை காலவெளியில் வளைவில் விளைவாக இருக்கும் என்று சார்பியல் தத்துவத்தை பற்றி எளிமையாக விளக்குகிறது. இதிலிருந்து குவாண்டம் ஈர்ப்பியல் தத்துவத்திற்கு எவ்வாறு செல்வது என்ற கேள்வியுடன் இந்த அத்தியாயம் முடிவடைகிறது.

    மூன்றாவது அத்தியாயத்தில் குவாண்டம் தத்துவம் விளக்கப்படுகிறது.  குவாண்டம் தத்துவத்தின் அடிப்படைப் பண்புகளான கதிர்வீச்சு, அணுக்களின் இயக்கம் மற்றும் அணுவின் ஆற்றல் மட்டங்களில் இருந்து ஆற்றல்கள் உமிழப்படுதல் மற்றும் உறிஞ்சப்படுதல் ஆகியவை குறித்தும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. மேலும் இந்த அத்தியாயத்தில் குவாண்டம் இயற்பியலின் முக்கிய சோதனையான இரட்டைப் பிளவு சோதனை பற்றியும் துகள்-அலைக் கோட்பாடு பற்றியும் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.

    மேலும் இந்த அத்தியாயத்தில் குவாண்டம் இயற்பியலில் அடிப்படைக் கூறுகளான மாறாமை மற்றும் வகையீட்டுச் செயலொப்புமை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

    இப்புத்தகத்தில் மையக்கருத்தான, வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் குறித்து பேசும் ஒரு முழு அத்தியாயமாக நான்காம் அத்தியாயம் அமைகிறது. இத் தத்துவத்தின் வரலாறு பாரடே மின்னியக்க விதிகளில் ஆரம்பித்து பின்னர் யாங் மில்ஸ் தத்துவத்தின் ஊடாக 1986ல் அபய் அஷ்டேகர் எவ்வாறு பொது சார்பியல் தத்துவத்தை வரையறுத்தார் என விவரிக்கிறது.

    வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் என்னும் தொடரில் வளைப்பண்பு என்பது எவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இயற்பியல் ரீதியாக இந்த அத்தியாயம் விளக்குகிது. மேலும் கார்லோ ரோவல்லி, லீ ஸ்மோலின் போன்ற அறிவியல் அறிஞர்கள் இந்தத் தத்துவத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்தனர் என்பதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. குறிப்பாக கால வெளியில் குவாண்டமாக்கல்  என்பது எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்பதை பாமரரும் புரியும் வண்ணம் இந்த அத்தியாயம் விளக்குகிறது.

    பின்வரும் இரண்டு அத்தியாயங்களில் இந்த தத்துவம் எவ்வாறு கருந்துளைகள் மற்றும் பிரபஞ்ச இயக்கவியலில் புகுத்தப்படுகிறது மற்றும் அதன் மூலம் எவ்வாறு தற்போதுள்ள நடைமுறை முடிவுகள் மாற்றம் பெறுகின்றன என்பதையும் மிக நீண்ட விளக்கமாக விவாதிக்கிறது.  குறிப்பாக பிரபஞ்சப் பின்புல வெப்பநிலைத் தகவல் மூலம் பெறப்படும் தரவுகள் வாயிலாக பிரபஞ்சம் அதன் ஆரம்ப நிலையில் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதை இத்தத்துவம் வாயிலாகத் துல்லியமாகக் கணிக்கக் கூடுமென முன்மொழியப்படுகிறது.

    ஏழாம் அத்தியாயம் இத்தத்துவத்தின் அடுத்த கட்ட முன்னேற்றங்கள் பற்றி விளக்குகிறது. குறிப்பாக, தற்சுழல் நுரை[4] பற்றி விவரித்து, அது எதிர்காலத்தில் எந்த அளவு அடிப்படை இயற்பியலில் நமது புரிதலை மாற்றக்கூடும் என்பது குறித்தும் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.

    பின்வரும் அத்தியாயங்கள் இத்தத்துவத்தின் வெவவேறு முன்னேற்றங்களைப் பற்றி விவரித்து விட்டு, புத்தகத்திற்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது.

    இந்தப் புத்தகம் அதிக அளவு தொழில்நுட்ப விஷயங்களை விவரிக்காமல், மிகச் சுருக்கமாக, மிகக் கச்சிதமாக பொதுமக்களும் புரியும் வண்ணம் வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல்  பற்றி விளக்கியுள்ளது.

    ஏற்கெனவே நாம் அவசரத்தில் செல்வோருக்கான வான இயற்பியல் என்றும் புத்தகத்தைப் பற்றித் தெரிவித்திருந்தோம். அதேபோல இந்தப் புத்தகத் தலைப்பையும் அவசரத்தில் செல்வோருக்கான வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் என்று வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு புத்தகம் வெகு வேகமாகச் செல்கிறது.

    வளைப்பண்புக் குவாண்டம் ஈர்ப்பியல் என்ற தத்துவத்தை எளிய ஆங்கிலத்தில் புரிந்துகொள்ள முயல்வோருக்கு, இந்தப் புத்தகம் மிகவும் கைகொடுக்கும்.

    உசாத்துணைகள்

    [1] நடராஜன் ஸ்ரீதர், புத்தக மதிப்புரை : அஸ்றோபிசிக்ஸ் பார் பீபிள் இன் ஹர்ரி,   வல்லமை, 2021
    https://www.vallamai.com/?p=103375

    [2] Gambini, Rodolfo, and Jorge Pullin. Loop quantum gravity for everyone. World Scientific, 2020.

    [3]  நடராஜன் ஸ்ரீதர், வளைய குவாண்டம் ஈர்ப்புவிசை ஓர் அறிமுகம். முழுமை அறிவியல் உதயம் 13(1). 10411 – 10418, 2021
    https://www.researchgate.net/publication/338816881_valaiya_kuvantam_irppuvicai_or_arimukam

    [4] நடராஜன் ஸ்ரீதர், நாகேஸ்வரன் ராஜேந்திரன், பிரபஞ்சக் கட்டமைப்பில் தற்சுழல் நுரை.  முழுமை அறிவியல் உதயம் 14(4). 56 – 74, 2021
    https://www.researchgate.net/publication/351978276_pirapancak_kattamaippil_tarculal_nurai

    Share
  • குறளின் கதிர்களாய்…(364)

    குறளின் கதிர்களாய்…(364)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(364)

    இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றி னின்ற துணை.

    – திருக்குறள் – 41(இல்வாழ்க்கை)

    புதுக் கவிதையில்…

    இல்லறத்தான் என்பவன்
    இல்லாளுடன் கூடி வாழ்ந்தே,
    தன்னைப் பெற்றோர்
    தனக்குப் பிறந்த பிள்ளைகள்
    உற்றார் உறவினரெனும்
    இயல்புடைய மூவர்ககும்
    நற்றுணையாய் இருந்தே
    உதவுபவனே…!

    குறும்பாவில்…

    மனையாளுடன் கூடயிருந்து
    பெற்றோர் பிள்ளைகள் உறவினர் மூவர்க்கும்
    உறுதுணை யானவனே இல்லறத்தான்…!

    மரபுக் கவிதையில்…

    கட்டிய துணையுடன் கூடிவாழ்ந்தே
    காசினி போற்றிட வளர்த்துலகில்
    விட்டதாய் தந்தையாம் பெற்றோர்கள்,
    விரும்பி வளர்த்திடும் பிள்ளைகளும்
    எட்டியே சென்றிடா உறவினர்கள்
    என்னும் மூன்றெனும் இயல்பினோரின்
    கிட்டிடும் துணைவனாய் யிருந்துதவும்
    கெட்டிக் காரனே இல்லறத்தான்…!

    லிமரைக்கூ…

    இல்லாள் அவனது இணை,
    இயல்புடை மூன்றாம் பெற்றோர் பிள்ளைகள் சுற்றம்
    இவர்க்கெலாம் இல்லறத்தானே துணை…!

    கிராமிய பாணியில்…

    இல்லறத்தான் இல்லறத்தான்
    இந்த ஒலக வாழ்க்கயில
    இவந்தான் இல்லறத்தான்..

    கெட்டின பொண்டாட்டி
    கூடவே வாழ்ந்துக்கிட்டே
    பெத்து வளத்தத் தாய் தகப்பன்,
    பெத்து வளக்கும் பிள்ளைகள்
    அக்கம் பக்கத்து ஒறவுகளுண்ணு
    மூணுவருக்கும்
    ஒதவும் தொணயாக் கூட
    இருக்கவந்தான்
    உண்மயில இல்லறத்தான்..

    தெரிஞ்சிக்கோ
    இல்லறத்தான் இல்லறத்தான்
    இந்த ஒலக வாழ்க்கயில
    இவந்தான் இல்லறத்தான்…!

    Share
  • மணிப்பூர் ஆளுநர் மேதகு இல.கணேசன்

    மணிப்பூர் ஆளுநர் மேதகு இல.கணேசன்

    மணிப்பூர் ஆளுநராகப் பொறுப்பேற்கும், பொதுவாழ்வில் மின்னும் பொற்றாமரை, மேதகு இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள். தங்கள் பணிகள், மேன்மேலும் சிறக்கட்டும்.

    படம் – 08.06.2006 அன்று சென்னை சிஃபி அலுவலகத்தில் எடுத்தது. உடன் இருப்பவர், மூத்த இதழாசிரியர் கே.வெங்கடேஷ்

    2006ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக இல.கணேசன் பொறுப்பு ஏற்றிருந்தார். சிஃபி நிறுவனத்தில் தமிழ்த் தளத்துக்கு நான் ஆசிரியராக இருந்தேன். உலகெங்கும் உள்ள சிஃபி வாசகர்களுடன் நேரலையில் கலந்துரையாட வருமாறு இல.கணேசன் அவர்களை அழைத்தேன். என் அழைப்பை ஏற்று, சென்னை டைடல் பூங்காவில் உள்ள சிஃபி அலுவலகத்துக்கு வந்து வாசகர்களின் கேள்விகளுக்குச் சுவையாகப் பதில் அளித்தார்.

    அவர் பதில்களைச் சொல்லச் சொல்ல, மூத்த இதழாசிரியர் கே.வெங்கடேஷ், உடனுக்குடன் தட்டச்சு செய்தார். எங்களுடன் சிஃபி மலையாளம் இதழாசிரியர் சென்னி வர்கீஸ் அவர்கள் இணைந்தார். எழுத்தாளர் மலர்மன்னன், இல.கணேசன் அவர்களை அழைத்து வரும் பணியினை ஏற்றுக்கொண்டார். தமிழில் இணைய இதழ்கள் என்ற என் நூலை, இல.கணேசன் அவர்களிடம் அளித்து மகிழ்ந்தேன்.

    Share
  • வீணையடி நீயெனக்கு | கிருஷ்ணகுமார் குரலில்

    வீணையடி நீயெனக்கு | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாகவி பாரதியின் வீணையடி நீயெனக்கு என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்நாள் நன்னாள், இக்கணம் பொற்கணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி- 2

    இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி- 2

    நான் இயற்றிய ‘இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி’யைத் திருமதி பரிமளா சாரநாதன், அழகுற இசையமைத்துப் பாடியுள்ளார். இந்தப் பாட்டு விருந்தினைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பட்டாம்பூச்சி நடக்கிறது

    பட்டாம்பூச்சி நடக்கிறது

    பட்டாம்பூச்சி இரவில் என்ன செய்யும் என்பது என் நெடுநாள் ஐயம். நேற்று இரவு பத்து மணியளவில் இந்தப் பட்டாம்பூச்சி, எங்கள் வீட்டு ஜன்னலில் வந்தமர்ந்தது. பொதுவாக, பட்டாம்பூச்சிகள் இரவில் வெளியே வருவதில்லை. சில மட்டும், குழல் விளக்கின் வெளிச்சத்தை நாடி வரும். இதுவும் அப்படியே வந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த வெளிச்சத்திலிருந்து அதற்கு என்ன கிடைக்கும் என அறியேன். இன்னொரு வியப்பு, இந்தப் பட்டாம்பூச்சி நடக்கிறது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share