தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 29

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

முன்னுரை

ஒன்றினை மற்றொன்றோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவது உவமம் என்பது உண்மையாயினும் அப்படிக் கூறுவதில் பல நெறிகள் உண்டு. இயற்கையை இயற்கையோடும் இயற்கையைச் செயற்கையோடும்  செயற்கையைச் செயற்கையோடும் செயற்கையை இயற்கையோடும் உயர்திணையை உயர்திணையோடும் உயர்திணையை  அஃறிணையோடும், அஃறிணையை அஃறிணையோடும் அஃறிணையை உயர்திணையோடும்  இருப்பதை இருப்பதோடும் இருப்பதை இல்லாததோடும் இல்லாததை இல்லாததோடும் இல்லாததை இருப்பதோடும் என ஒப்புமைப் படைப்பாளனின் சிந்தனைக்கேற்ப அமையும். வானம் இருள்கிறது. இது இயற்கை. இருட்டுக்குப் பாவேந்தர் உவமம் சொல்கிறார். ‘கேள்வி இல்லான் நெஞ்சம் போல் இருண்டு’ என்று. கல்வி, கேள்வி என்னும் இருகூறுகளால் நிரம்புவது அறிவு. செவிச்செல்வமாகிய கேள்வியறிவு இல்லாதவன் அறிவு வெறும் ஏட்டுப்படிப்பினால் நிரம்பிவிடாது. கேள்வியறிவு இன்மை என்பது முயற்சியில் தளர்ச்சி. வானத்தின் இருள் இயற்கை. அந்த இயற்கையைப் பாவேந்தர் செயற்கையோடு ஒப்பிடுவதைக் காணலாம். இதுபோன்று அமைந்திருக்கும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

ஊரும் உவமமாகலாம்.

“மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே! புதுமைகள் நிறைந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே! தஞ்சையில் பறந்த புலிக்கொடியில் வீரத்தைக் கண்டேனே! காஞ்சித் தலைவன் கோயில் சிலைதான் கண்மணியே உன் பொன்னுடலோ? குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ? சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையோ உன் செவ்விதழோ? தூத்துக்குடியின் முத்துக்குவியல் திருமகளே உன் புன்னகையோ? பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய்மொழியோ? கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ? குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ? இவையாவும் ஒன்றாய் தோன்றும் உன்னைத் தமிழகம் என்பேனே!” என்னும் கருத்துடைய திரையிசைப் பாடலைப் பலரும் கேட்டிருக்கக் கூடும்.  இந்தப் பாட்டில் கவிஞர் வாலி உவமமாகச் சொல்லியிருக்க வேண்டிய பொருள்களை மட்டும் சொல்லாமல் அவை தொடர்பான அரசுகள், நகரங்கள் முதலியவற்றையும் நிரலாகக் கூறி இறுதியில் ஒட்டுமொத்தமாக இவையெல்லாம் இருப்பன தமிழகத்திற்குள் ஆதலின் தன் காதலியைத் தமிழகம் என்று ஒற்றைச் சொல்லால் கூறும் காதலனைக் காட்டுகிறார். ஓர் இளம்பெண்ணுக்கு நகரத்தை உவமமாகக் காட்டலாமா? மேம்போக்காக இதனைக் கேட்பவர்க்குப் புதுமை போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில்  தலைவனைப் பிரிந்த தலைவியின் அழகிற்குச் சிதைந்து போன நகரத்தையும், அம்பல் மற்றும் அலருக்குப் குறிப்பிட்ட போர்க்களத்து ஆரவாரவொலியையும் உவமமாக்குவது தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடு, உவம மரபு. ஐங்குறுநூற்றில் ஒரு பாடல்.

“நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
நெடுநீர்ப் பொய்கைத் துடும் என விழூஉம்
கைவண் மத்தி கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை அயர விரும்புதி நீயே!”

“நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடும் என விழூஉம் கைவண் மத்தி கழாஅர்” என்னும்  உள்ளுறையால்  நகர்வளத்தைச் சுட்டுகிற இந்த நெறி, “கொக்கின் உக்கு ஒழிந்த தீம்பழம் கொக்கின் கூம்பு நிலையன்ன ஆம்பல் தூங்கு நீர் குட்டத்துத் துடும் என விழும் தண்டுறை ஊரன்” என்னும் நற்றிணையாலும் அறியலாம். பரத்தை ஒருத்தியுடன் சின்னாள் வாழ்ந்து அவளைப் பிரிந்து மற்றுமொரு பரத்தையை வதுவை அயர்ந்த தலைவன் தலைவியிடம் வந்தானாக, அவள் புலந்தாள். புலந்த அன்னாளுக்கு ‘இனி இவ்வாறு நிகழாது’ எனப் பொய்யாக வாக்களித்தான் தலைவன். அந்தப் ‘பொய்யனை’  நோக்கித் தலைவி சொன்ன பதில் இது.

“நீ சொல்வதை நான் நம்பவேண்டும்! அதுதானே நின் விருப்பம்! உனக்குத்தான் வள்ளன்மையில் சிறந்த மத்தியின் கழாஅர் நகரைப் போன்ற நல்ல நல்ல பெண்கள் எல்லாம் கிடைப்பார்கள். நீயும் அவர்களை மணம் செய்து கொள்ள விரும்புவாயே!” (உன்னைத் தெரியாதா எனக்கு?) என்று நகையாடுகிறாள். பரத்தையர் மேனி நலமல்லது கற்பு நலம் இலராதலின்  ‘நல்லோர் நல்லோர் என்னும் அடுக்கு இழித்தற்கண் வந்தது, இந்தப் பாட்டில் கழாஅர் நகரம் தலைவன் விழையும் பரத்தையர்க்கு உவமமாக வந்தது. காவிரிக்கரையில் அமைந்திருக்கும் இவ்வூர்த்துறை கரிகால் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தியும் அவள் கணவன் அத்தியும்  விளையாடி வரலாற்றுப் பெருமை பெற்றது. இவ்வாறு பெண்களின் எழிலுக்கும் அலருக்கும் நகரத்தையும் போர்க்களத்தையும்  உவமமாக்குவதும்  பழந்தமிழ்க் கவிதை மரபு என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

தாமரைபோல மலர்ந்த அல்லி

மிளகும் பப்பாளி விதையும் ஒன்றுபோல் தோன்றும். நொய்யும் ரவாவும் ஒன்றுபோல் தோன்றும். கலப்பட வணிகர்கள் எதனை எதனோடு கலக்க வேண்டும் என்னும் தெளிஞானம் பெற்றிருப்பர். இலக்கியத்தில் இத்தகையதோர் ஒப்புமையைப் புலவர் ஒருவர் திணைவிளக்கத்திற்காகப் பாடியிருக்கிறார். தாமரையும் ஆம்பலும் ஒன்றுபோல் தோன்றும். சில அடிப்படை இயல்புகளும் அவற்றுக்கிடையே உண்டு. அவையிரண்டுமே நீர்த்தாவரம். தாளினாலும் நீண்டு, கிழங்கில் வேர் கொள்ளுவன. வேர், கிழங்கில் பிடிமானம் கொள்வதால் நீர்நிலைகளில் அதாவது குளங்களில் நீர் வற்றிய காலத்தும் அப்பூக்களின் மலர்ச்சி விரைவில் குறையாது.

“கன்னி விடியற் கணைக்கால் ஆம்பல்
தாமரை போல் மலரும் ஊர!
பேணா ளோநின் பெண்டே?
யான் தன் அடக்கவும் தான் அடங்கலனே! ” (ஐங். 68)

என்று அமைகிறது அப்பாடல். மருதம் பாடுவதில் சிறந்த புலவரான ஓரம்போகியார் பாடியது. பாடலின் உரிப்பொருளைப் புரிந்து கொள்ளாத நிலையில் உவம நுட்பம் புரிவதற்கு வாய்ப்பில்லை. இங்கே உரிப்பொருள் மருதத்திணையின் ஊடல். அத்திணையுள் அடங்கிய துறைகளுள் ஒன்று ‘அவனறியும் ஆற்றல் அறிதல்’ (தொல். பொ.147). தலைவன் தன்மாட்டு மயங்கி நிற்க, பரத்தை தலைமகளை ஏசுகிறாள். ஆனால் தலைமகள், தன்னை ஏசுவதாகப் பொய் மொழிகிறாள். இதனைச் செவிமடுத்த தலைவி “தான் ஏசாது அடங்கி நிற்கவும் தான் அடங்காது நிற்கிறாள்” எனத்  தலைவனுக்குக் கூறியது.

இது தலைவி கூற்று. தலைவி தாமரை. ஆம்பல் கன்னிவிடியலில் மலரும். கன்னிவிடியல் என்றால் இருள் களையும் அதிகாலை. ‘குமரியிருட்டு’ என்பதும் அது. தாமரை மலர வேண்டிய அந்தப் பொழுதில் ஆம்பலும் மலர்கிறதாம். தான் மலர்வதற்குரிய பொழுதில் தானும் மலர்வதாலேயே ஆம்பல் தாமரையாகிவிடாது என்பது கருத்து. கற்புச் சிறப்பு இன்மையால் அடங்கிக் கிடத்தற்குரிய பரத்தை, குலமகளிர் போலத் தருக்கித் திரிவது பொருத்தமில்லை” என்பதுமாம். குமுதம் என்னும் நீர்க்கொடி. குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே வந்தன்று வாழிய மாலை” என்றும் ஓரம்போகியார் பாடிய பாடல் குறுந்தொகையிலும் காணக்கிடக்கின்றது.

வேகத்தை விரைவுபடுத்திய உவமங்கள்

வினைமுற்றிய தலைவன் மீள்கிறான். அவனுக்காகக் காத்திருக்கிறாள் தலைவி. பேயனார் பாடிய முல்லைத் திணைப் பாடல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உவமங்களை எத்தகைய உரிப்பொருள் விளக்கத்திற்கு எந்த முறையில் அதாவது உத்தியில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எண்ணுகிறபோது வியப்பு மேலிடுகிறது. சாதாரணமாக முன்னிலையில் உவமம் சொல்லிப் பாராட்டுவது, படர்க்கையில் உவமம் சொல்வது என்பதெல்லாம் உண்டு,  இந்தப் பாட்டில்  தலைவன் பிரிந்திருந்த தலைவியைக் காண விரைந்ததற்கு உவமங்களைக் காரணிகளாக்குகிறான்.

“நின்னே போலும் மஞ்ஞை ஆல நின்
நன்னுதல் நாரும் முல்லை மலர
நின்னே போல மா மருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே” (ஐங்குறு. 492)

தலைவியைப் போலச் சாயல் உடைய மயிலும், அவள் நன்னுதல் போல மணம் வீசும் மலர்ந்த முல்லையும் அவள் கண்ணைப் போல மருண்டு நோக்கும் மானும் அவன் உள்ளத்தில் தலைவியைக் காணும் வேட்கையைத் தூண்டினவாம். எவ்வளவு விரைவாக வருகிறான் என்றால் கார்காலம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டானாம். கார்காலம் அவன் திரும்பி வருவதற்கான கால எல்லையாயினும் மேற்கண்ட மயிலையும் முல்லையையும் மானையும் கண்டு உள்ளத்தில் காதல்பெருக கார்காலத்தின் முழு எல்லையைக் கருத்திற் கொள்ளாது அதன் தொடக்கத்திலேயே திரும்பிவிட்டானாம். கார்காலம் வருவதற்கு முன்னேயே வந்துவிட்டான் என்பது கருத்து. ‘பெய்த புலத்துப் பூத்த முல்லை பசு முகைத்தாது நாறும் நறுநுதல் அரிவை’ என்று குறுந்தொகையிலும் வருதல் காண்க. திணைக்கான முதற்பொருளும் கருப்பொருளும் செறிந்து நிற்றல் காண்க.

மனைவிளக்கும் குடும்ப விளக்கும்

‘வீட்டில் வந்து விளக்கேற்றுவாள்’ என்பது பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு நோக்கிவரும் மகளிர்க்கான வாழ்த்துரைகளில் ஒன்று. அதனால் அவள் மனைக்கு விளக்கம் ஆனாள். பாரதிதாசன் இந்தச் சிந்தனையை இன்னும் விரிவுபடுத்தி, ஆழமாக்கி ஒரு குடும்பத்தின் கட்டுமான உறுதிக்கே மனைவிதான் காரணம் எனக் கருதி மனைவிளக்கு என்பதைக் குடும்ப விளக்காக்கினார்.

“ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்கு விளக்கம் ஆயினள் மன்ற கனைப் பெயல்
பூப்பல அணிந்த வைப்பின்
புறவணி நாடன் புதல்வன தாயே!” (ஐங் 409)

எந்தப் பாட்டானாலும் உவமத்தைச் சுவைத்து அனுபவிப்பதில் சொல்லின்பம் அதாவது உவமத்திற்கான அடைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இந்தப் பாட்டில் ‘சுடர்போலத் தலைவி’ என்றாலே போதும். ‘செஞ்சுடர்,’ அது தீப்பந்தத்துச் சுடர் அல்ல. பாண்டில் செஞ்சுடராம். பாண்டில் என்னும் பலபொருள் ஒருசொல்லுக்கு விளக்குத் தகழி என்பது இங்கே பொருள். அது ஒண்சுடர் பாண்டில் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. ஒள்ளிய சுடர்களை ஏந்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பாண்டில் என்பது பொருள். பதினைந்து சீர்கள் சொற்கள் கொண்ட பாடலொன்றில் ‘ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர்’ என்னும் ஒரு தொடர் நான்கு சீர்களைத் தமதாக்கிக் கொள்ளும் அளவிற்கு உவம அடைகள் இருக்கின்றன என்பது ஆய்வுக் கருத்து. “பாண்டில் விளக்கின் பரூஉச் சுடர் அழல” என்பது நெடுநல்வாடை.

இன்று கூடுமோ இந்தக் காட்சி?

சங்க இலக்கியத்தின் படைப்புக் கோட்பாடுகளில் நுண்ணியமானவை அகப்பொருள் மாந்தர்களில் பெண்பால் பாத்திரப்படைப்புக்கள். நற்றாய், செவிலி, தலைவி, தோழி என்னும் கற்பனைப் பாத்திரங்களில் இழையும் பண்பாட்டுக் கூறுகள் அக்காலத்தைய தமிழ்ச்சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளாகவே கருதமுடியும். இயற்பெயர் சுட்டாத அப்பாத்திரங்களில் நற்றாய் தலைவியெனின் செவிலி தோழியாவாள்.  நற்றாயின் மகள் தலைவியெனின் செவிலியின் மகள் அவளுக்குத் தோழியாவாள். இருந்திருப்பாள்.  தோழி தலைவியானால் தலைவி தோழியாவாள். படைப்புக்கு உரிமையாளரான புலவரே இத்தனைப் பாத்திரங்களாகவும் உலவுகிறார் என்பது கூடுதல் வியப்புக்குக் காரணமான சேதி.

இந்தப் பின்புலத்தில் இலக்கியச் சித்திரிப்பு பலவகைப்படும். இயற்கைக் காட்சிகளைச் சித்திரிப்பது. போர்க்களத்தைச் சித்திரிப்பது. குடும்பக் காட்சிகளைச் சித்திரிப்பது. பாவேந்தரின் குடும்பவிளக்கில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சிகள் தமிழ்க் கவிதை உலகத்திற்கு முற்றிலும் புதியவை. ‘ஒரு நாள் நிகழ்ச்சி’ என்ற பெயரில் அவர் செய்திருக்கும் கவிதையோவியம் அவரை ஒரு கவிஞனாக மட்டுமன்று. ஒரு இலட்சியக் குடும்பத் தலைவராகவும் காட்டுகிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வினை ஐங்குறுநூறு சித்திரிக்கிறது. அந்தச் சித்திரிப்பில் தாய்மையும் இல்லறமும் உவமங்களும் சங்கமிக்கின்றன.

தலைவி களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுக, அதனைத் தோழி வாயிலாக அறிந்து, தலைவியின் நாணத்தால் நேரடியாக மொழிதலின் இயலாமை கருதி நற்றாயிடம் எடுத்துச் சொல்லிக் கற்பறம் காப்பவள் செவிலியே. அதனாலேயே ‘தாயெனப்படுவோள் செவிலியாகும்’ என்பார் தொல்காப்பியர். அத்தகைய செவிலி தலைவி நடத்தும் இல்லறப் பாங்கினைக் கண்டு வந்து நற்றாய்க்கும் எடுத்து மொழியும் வகையில் பல பாடல்கள் உள்ளன. அப்பாடல்களில் இல்லறக் காட்சியின் எழில், கட்டுமானச் செப்பம் குறையாது உவமச் சிறப்போடு அமைந்திருப்பதைக் காணமுடியும்.

“மறியிடை படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவின்று
நீனிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே” (ஐங். 401)

என்ற பாடலில் தலைவனுக்கும் தலைவிக்கும் நடுவில் அவர்கள் மகன் மான் பிணைபோலப் படுத்திருக்கும் இனிமையான காட்சியை நற்றாய்க்கு எடுத்துரைக்கும் செவிலி, நீல நிறமுடைய வானத்தால் சூழப்பட்ட இந்த உலகத்து இன்பமும், உம்பருலகத்து இன்பமும் அந்தக் காட்சிக்கு ஈடாகாது என்று எடுத்துரைக்கிறாள். இங்கே உவமச் சிறப்பு எங்கே இருக்கிறது? மகன் குட்டியாம். தலைவனும் தலைவியும் மானும் பிணையுமாம். புலிக்குப் பிறந்தது பூனையாகாதது போல மான்களுக்குப் பிறந்த மான் குட்டி எனக் கொள்க.

“புதல்வன் கவைஇய தாய் புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே!”  (ஐங். 402)

என்ற பாடலில் கட்புலத்தின் இனிமையைச் செவிப்புல இனிமையாகக் காட்டுகிறார் புலவர். தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு தலைவி படுத்துறங்குகிறாள்.  அவளுடைய புறத்தைத் தழுவிக் கொண்டு தலைவன்  உறங்குகிறான். பாணருடைய நரம்புளர் முரற்கையினால் தோன்றிய இசை, கேட்டார் செவிக்கு இன்பம் பயப்பதுபோலப், பிள்ளையைத் தாய் தழுவ அவளைத் தலைவன் தழுவக் கிடக்கின்ற காட்சி கண்ணுக்கு இன்பம் பயந்ததாகக் கூறுகிறார். செவிலியின் கட்புலக் காட்சி மறைந்தொழியவும் அக்காட்சியைக் கண்ட மனம் அதனை மறவாது, பாணர் இசைத்த பண்ணை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பது போல இன்பம் பயந்தது என்பது கருத்து. ‘பாணர் நரம்புளர் முரற்கை போல’ என்னும் இந்த உவமத்தைப் “பாணர் நயம்படு முரற்கை யாத்த பயன்தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும்’ (407) எனத் தலைமக்களின் புணர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது அறிக.

“புதல்வற் கவையினள் தந்தை மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்
இனிது மன்ற அவர் கிடக்கை
நளியிரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே” (409)

என்னும் பாடலில் செவிலி கண்ட காட்சி மாற்றப்படுகிறது. முந்தைய பாடலில் மகனைத் தாய்தழுவ அவளைத் தலைவன் தழுவிக்கிடக்கிறான். இந்தக் காடசியில் “தந்தை புதல்வனைத் தழுவிக் கிடக்கின்றான். அந்தத் தலைவனையும் புதல்வனையும் தாய் தழுவிக் கிடக்கிறாள். “புதல்வன் தாயோ இருவரும் கவையினள்” இந்தப் பாடலில் உவமம் ஏதும் சுட்டப்படாவிடினும்  மனைவி, கணவன், புதல்வன் என்பதே உலகமாதலின் இதனின் வேறு உலகம் இல்லையென்பார் ‘நளியிரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே’ என்னும் அருமை புலப்படுதல் காண்க.

நிறைவுரை

கருத்து, உணர்ச்சி, கட்டுமானம், கற்பனை என்னும் கூறுகளுள் உவமத்தைக்  கற்பனையுள் அடக்கும் சிலர் அதனைக் கவிதையின் புற அழகாகக் கொண்டு அணியிலக்கண அமைதி காண்பர். கவிதை அழகுணர்ச்சியின் வெளிப்பாடு. அது இலக்கணப் பதிவு அல்ல. உவமத்தைக் கருத்து விளக்கத்திற்கான அகக்கருவி என்று கொண்டால் அதன் பயன்பாடு இன்னும் சிறக்கும். இரு மாறுபட்ட புலன்கள் வழி அடையக் கூடிய இன்பக் கூறுகளையும் ஒப்புமை செய்து காட்டுகிற படைப்பாளுமை  இருந்திருக்கிறது.  ‘கன்னி விடியற் கணைக்கால் ஆம்பல்’ என்றும்  ‘ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர்’ என்றும் ‘நரம்புளர் முரற்கை’ என்றும் ‘கைவண் மாத்தி கழாஅர்’ என்றும் புணர்த்துக் காட்டியிருக்கும் உவம அடைகள் இலக்கண வகையால் உள்ளுறைக்குப் பயன்பட்டாலும் கவிதைப் பொருளைச் சிறக்கச் செய்யும் சிந்தனை மூலங்களாகவே தோன்றுகின்றன.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *