திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு

திருக்கடவூரில் வயல், வேள்விச்சாலை, குளங்கள், சோலைகள், இவற்றை மேம்படுத்தும் தொழில்கள் சிறந்தஇருந்தன. வேளாண் தொழில் செய்யும் பெண்கள் மருதப்பண்  இசைப்பர்; வேதம் ஓதும் அந்தணரின் அரங்க வழிபாடு நிகழும் இடங்களில் சாம கானம் ஒலிக்கும்; தூய பெரிய கொம்புகளையுடைய எருமைகள் படிந்து பால் சொரிவதால் கயல் மீன்கள் பாயும் செங்கமலங்களில் பால் மணம் வீசும்; மாடங்களின் மேலே தவழும்  மேகங்களில் யாகசாலைப்புகை கமழும்; அத்தகைய செல்வம் மிக்க ஊரில், கலயர் என்ற பெயருடைய அந்தணர் சிவபிரான் திருவடி பணியும் பக்தியும்  ஒழுக்கமும் மிக்கவர் வாழ்ந்தார். அவர் மார்க்கண்டேயன் என்னும் அந்தச் சிறுவனின் அச்சம் போக்க, அவனை நாடிவந்த இயமனின் உயிரைப் போக்கிய சிவபிரானுக்கு மிகவும் அதிகமான   குங்கிலியப்புகையை இடுகின்ற திருப்பணி செய்தார்.

இந்நிலையில் இறைவன் செயலால் வறுமையுற்ற  போதிலும் அவர் தம்  பணியைத் தவறாமல் தொடர்ந்தார்.தம் நிலம் முதலிய பல்வகை வளங்களையும் விற்றமையால் உறவினர்  அனைவரும் துன்புற்றனர்.  வறுமையால் இருவேளை உணவின்றிக் குடும்பம் வாடியதால், கலயனார் மனைவியார் தம் பொன்தாலியைக் கொடுத்து நெல் வாங்கி வரக்  கேட்டுக் கொண்டார்.

அதனைக் கொண்டு நெல் மூட்டைகளை வாங்க அவர் சென்றார். அப்போது ஒப்பற்ற குங்கிலிய மூட்டையைக் கொண்டு ஒருவன் அவரெதிரே வந்தான். அந்த மூட்டையில் குங்கிலியம் இருப்பதை அறிந்த கலயனார் மிகவும் மகிழ்ந்தார்.  திருப்பணிக்கு உகந்த  இக்குங்கிலியத்தை நான்  வாங்கிக் கொண்டால் நற்பேறு பெற்றவனாவேன் என்று அதனை விரும்பினார்.

‘’பொன் தருவேன், குங்கிலியம் தருக!’’ என்று அவர் பெற்ற சிறப்பைச் சேக்கிழார் பாடுகிறார்.

பொன் தரத் தாரும்’ என்று புகன்றிட வணிகன் தானும்
`என் தர இசைந்தது’ என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்;
அன்று அவன் அதனை வாங்கி அப் பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்; நிறைந்து எழும் களிப்பினோடும்.

பொருள்

“நான் உமக்குப் பொன்னைத்தர நீர் இக்குங்குலியத்தினைத்தாரும்” என்று கலயர் சொல்ல, வணிகனும் “தேவரீர் எதனைக் கொடுக்க இசைந்தீர்?” என்றான்;’ கலயர் தாலியை ஈந்தனர்; அப்போதே அவன் அதனை வாங்கிக்கொண்டு அந்தப் பொதியைக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்ட கலயர் அங்குச் சிறிதும் நில்லாமல் உள்ள நிறைந்த பெருமகிழ்ச்சியுடன் விரைந்து சென்றனர்.

பொன் தரத்தாரும் – இது வணிகனை நோக்கி நாயனார் கூறியது விலையாகப் பொன்னை நான் தர அதனைப் பெற்றுக்கொண்டு இக்குங்குலியப் பொதியினை நீர் தாரும்.

விளக்கம்

பொன் என்றது இங்குப் பொன்னாலாகிய அணியைக் குறித்துவந்தது. காரணமாகிய மெய்ப்பொருளைக் காண்பார்க்குக் காரியமாகிய வேற்று விகாரங்காட்சிப் படாதாதலின் தாலி பொன் எனப்பட்டது.

என் தர இசைந்தது என்ற தொடர்  பொன் என்றதனால் அப்பொன்னோ – பொன்னணியோ, யாது என்ற  வினாவைக் குறித்தது.

தாலியை ஈந்தார் என்றதொடர்,  அவ்வாறு வினவிய வணிகனுக்கு அது இன்னதெனவாயினாற்கூறாது – சொல்லிக் காலந்தாழ்க்காது – செயலிலே தாலியை ஈந்து அவ்வழியால் விடைதந்ததைக்  குறித்தது. இச்செயல் பூசைக்கான பொருள் தேடுதலின் தீவிரம் குறித்தது.

அதனை வாங்கி அப்பொதி கொடுப்ப  என்ற தொடர்,  அதனை வாங்கிக்கொண்டு அதற்கீடாக அந்தப் பொதியினைக்கொடுதான். விலைபற்றி நாயனார் சிந்தித்திலரேனும், கொண்ட பொருளுக்கு நேரொக்கக் கண்டவன்போல அவன் அப்பொதியினைக் கொடுத்தான் என்பது குறிப்பு. அதனைப் பெற்றுக்கொண்ட அடியார் அங்கு நின்றிலர் விரைந்து சென்றார் என்று  புலவர்  பாடுகிறார். பூசைச்சாதனம் அருமையிற் பெற்ற ஆர்வமும் தூபப்பணியில் வைத்த தீவிரதர அன்பும் குறித்தது.

தமக்குரியதேயாயினும் உரித்தன்றேயாயினும், நன்றேயாயினும் தீதேயாயினும், ஏதேனும் ஒரு தொழில் செய்து பிழைக்கவறியாது, உடைமை விற்றும் அடிமை விற்றும் உணவின்றிப் பட்டினி கிடந்தும் தாலியையும் விற்க முயன்றும் உணவு தேடுவது சோம்பர் செயலாம் என்று அறிவார் போன்ற சில நவீனர் இகழ்தலும் கூடும். மிடியும் பசியும் வருத்தியபோதும் தமக்குரிய தொழிலையன்றி வேறு தொழில் செய்து உயிர் வாழ எண்ணமாட்டார் பெரியோர் என்பது இந்நாயனாரது வாழ்க்கையாலறியப்படும் உண்மை நீதிகளுள் ஒன்றாம். ஆனால் எமது பெருமக்கள் தொழில் செய்தும், கூலிவேலை செய்தும் சீவித்தலை இகழ்ந்தாரல்லர்.

“அல்லல்  நல்குர வாயிடக் கூலிக்கு, நெல்லறுத்தும்”

என்ற அரிவாட்டாய நாயனார் சரிதமும்,

“வளமுடையார் பாலெண்ணெய் கொடுபோய்மா றிக்கூறிக்,
கொளமுயலுஞ் செய்கையுமற் றவர்கொடா மையின் மாறத்,
தளருமன முடையவர்தாஞ் சக்கரவெந் திரம்புரியுங்,
களனில்வரும் பணிசெய்துபெறுங்கூலி காதலித்தார்”,

“செக்குநிறை எள்ளாட்டிப் பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ மிகவுழந்தும், பாண்டில்வரு எருதுய்த்துந்,
தக்கதொழிற் பெருங் கூலி தாங்கொண்டு”

என்ற கலியநாயனார்சரிதமும், பிறவும் இவ்வுண்மையை விளக்குவன.

ஆனால் இப்பெரியார்கள் பலரும் தத்தம் மரபுக்கும் தகுதிக்கும் உரிய தொழில்களையும் அவ்வகையிற் பெறும் கூலி வேலைகளையுமே செய்தமையும் குறிக்க. “புலி பசித்தாலும் புல் தின்னாது” என்று கொடுவிலங்கின் மேல் வைத்துக் காட்டும் நியதியையும் மறந்து, தொழில் யாவும் ஒன்றே – யாரும் எத்தொழிலும் செய்யலாகும் – ஏது செய்தேனும் பிழைத்தல் வேண்டும் என்று கூறும் நவீனக்கொள்கையினை அறிவுடையோர் கொள்ளார்.

“ஈன்றாள்பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க,
சான்றோர் பழிக்கும் வினை”

என்ற நீதிக்கு இச்சரிதம் இலக்கியமாம். இதுபற்றியே “செயல் எலாம் தொழில்க ளாறே” என்று தொடக்கத்தில் வற்புறுத்திக் காட்டினார்.இவற்றால் வேதியர்க்கு வேறு தொழில்கள் உரித்தாகாமையும் காணப்படும்.

“இறந்த மூப்பினராகிய இருமுது குரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியால் வருந்து மெல்லைக்கண் தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக” என்னும் அறநூற் பொதுவிதியினை அறிவுடைச் சான்றோர் மேற்கொள்ளார் ரென்பது துணிபு.

இப்பாடலில்  கலயனாரின் சிவ பத்தித்திறம் கூறப்படுகிறது. தம் குடும்பம் வறுமையுற்ற போதும் அது கருதாமல், தம் மேற்கொண்ட திருப்பணியை மேற்கொண்டு அதனைய செய்த சிறப்பு கூறப்படுகிறது. சான்றோராகிய அடியாரின் தளராத மனவுறுதியையும், வறுமையைக் கண்டு கலங்காத   சிவபக்தித் திறத்தையும், சான்றோர்  என்றும் சான்றோரே என்பதையும்   விளக்குகிறது. இதன் விளைவை இவ்வரலாறு அடுத்து, விளக்கும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.