Blog

  • திருப்பதி மலைவாசா – கிருஷ்ணகுமார் பாடல்

    திருப்பதி மலைவாசா – கிருஷ்ணகுமார் பாடல்

    திருப்பதி மலைவாசா வெங்கடேசா என்ற இனிய பாடலைக் கிருஷ்ணகுமாரின் கணீர்க் குரலில் கேளுங்கள். நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் என்ற இனிய பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என் கால்சட்டைக் காலம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 9

    என் கால்சட்டைக் காலம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 9

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ஓவியர் ஸ்யாம், குறும்புகள், சேட்டைகள், லூட்டிகள் நிறைந்த தன் கால்சட்டைக் கால நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழ.நெடுமாறன் நலம் வேண்டி வழிபடுவோம்

    பழ.நெடுமாறன் நலம் வேண்டி வழிபடுவோம்

    நோயுற்றிருக்கும் பழ.நெடுமாறன் நலம் வேண்டி வழிபட அழைக்கிறேன்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை, இலங்கை

    87 வயதைக் கடந்த திரு. பழ நெடுமாறன் ஐயாவுக்குச் சென்னையில் அரசு மருத்துவமனையில், முள்முடி நோய்த் தொற்று காரணமாக மருத்துவம் செய்கிறார்கள்.

    எனக்கு 40 ஆண்டுக்கால நண்பர்.

    1980இலேயே ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் குரல் கொடுத்தவர்.

    திருவாளர்கள் குட்டிமணியை, தங்கத்துரையை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்றவர்.

    திருவாளர்கள் பிரபாகரனையும் உமாமகேசுவரனையும் பிணையில் எடுத்து வெளிக்கொணர்ந்தவர்.

    இராமேஸ்வரத்திலிருந்து ஈழத் தமிழர் நலம் காக்கப் படகுப் பயணத்தைத் தொடங்கியவர்.

    திரு. அமிர்தலிங்கத்தை இந்திரா காந்தியிடம் அழைத்துச் சென்று இலங்கை சிக்கலை எடுத்துச் சொல்லி, இந்திராகாந்தியை ஈழத்தமிழர்கள் சார்பாகத் திருப்பியவர்.

    ஈழத் தமிழர்கள் தொடர்பாக நூற்றுக்கும் கூடுதலான வெளியீடுகளை, அவற்றுள் சில ஓராயிரம் பக்கங்களுக்கும் கூடுதலான பக்க நூல்கள், வெளியிட்டவர்.

    50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழருக்காகத் தன்னுடைய உடல், பொருள், செல்வாக்கு அனைத்தையும் காலம் கருதாது, இரவு பகல் எனவும், தூரம் கருதாது இந்தியா முழுவதும் சென்று உலகத்தில் பல நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டியவர், கடுமையாக உழைத்தவர்.

    மதுரையில் வட இந்தியத் தமிழர்களையும் ஏனைய மாநிலத் தலைவர்களையும் அழைத்து, ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்தியவர். திருவாளர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், என்.டி. இராமராவ் என அந்த மாநாட்டுக்கு, கட்சி மாச்சரியங்களுக்கு அப்பால், அனைத்து இந்தியத் தலைவர்கள் வந்திருந்தனர்.

    தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்தி, விழிப்புணர்வை உருவாக்கியவர்.

    தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கியவர்.

    அவருடைய திருமகள் உமா, ஈழத் தமிழர்களுக்காக ஆற்றும் பணிகள் பட்டியலிட முடியாத அளவு நீளும்.

    திரு. பழ.நெடுமாறன் நோயுற்று இருக்கிறார், மருத்துவமனையில் இருக்கிறார்.

    முன்பு நோயுற்றிருந்த பொழுதெல்லாம் அவரை மருத்துவமனையில் சென்று பார்க்கும், ஆறுதல் சொல்லும், அவருக்குத் தேவையானது செய்யும் வாய்ப்புகளைப் பெற்றவன்.

    இன்று போக முடியாமல் தவிக்கிறேன்.

    21.02.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனாய முருகன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்த முயல்கிறேன்

    சிறப்பு வழிபாட்டில், கட்சி, கருத்து வேறுபாடுகளை ஒதுங்கிப் புறந்தள்ளி, தமிழர் அனைவரும் வழிபாட்டில் கலந்துகொள்க.

    அப் பெரியார் நலம் பெற, வழிபடுவோம். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அருள்மிகு வள்ளி தெய்வானை உடனாய முருகன் திருக்கோயிலுக்கு வருமாறு ஈழத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

    Share
  • டல்லாஸ் அனுமன் கோவில்

    டல்லாஸ் அனுமன் கோவில்

    அமெரிக்காவின் டல்லாஸ் மாநகரில் அமைந்துள்ள காரிய சித்தி அனுமன் திருக்கோவில், இதோ. அழகிய கட்டமைப்புடன், பனியில் நனைந்தபடி, கம்பீரத்துடன் காட்சி தருகிறது. இராம தூதன், அஞ்சனை மைந்தன், சொல்லின் செல்வன், அல்லலைப் போக்கிக் காக்கும் டல்லாஸ் அனுமனை வணங்கி, அருள் பெறுங்கள். படமெடுத்து அனுப்பிய தம்பி மாதவன் ஸ்ரீரங்காச்சாரிக்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுபானி ஓவியம் வரைவது எப்படி?

    மதுபானி ஓவியம் வரைவது எப்படி?

    வர்லி ஓவியத்தை அடுத்து, மதுபானி ஓவியத்தை வரையக் கற்றுத் தருகிறார் நாமக்கல் பாலமூர்த்தி. குழந்தையும் கற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக இருக்கிறது. உங்கள் வீட்டுப் பிள்ளைகளிடம் அவசியம் காட்டுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 54

    பழகத் தெரிய வேணும் – 54

    நிர்மலா ராகவன்

    குடும்பம் எனும் பல்கலைக்கழகம்

    தற்போது, குடும்பங்களில் வன்முறை, விவாகரத்து எல்லாம் பெருகிவிட்டதாம்.

    அனுதினமும் பார்ப்பவர்களையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க நேரிடும்போது நமக்கு அவர்களுடைய மதிப்பு புரிவதில்லை.

    வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதும், இப்பூவுலகத்திலிருந்து மறையும்போதும் நம்முடன் இருப்பவர்கள் குடும்பத்தினர்தான். (இடையில் வரும் நண்பர்கள் நிலைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது).

    இதனாலேயே, குடும்பத்தில் நடக்கும்போது முக்கியமாகப் படாத சில விஷயங்கள் பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் நல்ல நினைவாக நிலைத்திருக்கும். உற்றார் நம்மைத் திட்டியது நல்வழிப்படுத்துவதற்குத்தான் என்று மனம் தெளிவடையும்.

    கதை

    “இந்தப் பெண் ஓயாமல் படிக்கிறதே! கண் கெட்டுவிடுமே!” என்று என் பாட்டி தினமும் வீட்டில் நட்டிருந்த மரத்திலிருந்து முருங்கைக்கீரையைப் பறித்து, நெய்யில் வதக்குவார்கள் – என் ஒருத்திக்கு மட்டும். மற்ற சமயங்களில் எல்லாம் ஓயாமல் திட்டுவார்கள்! என்னை முன்னுக்குக் கொண்டுவருவதாக எண்ணியதன் விளைவு!

    அப்போது, திட்டுதான் மனத்தில் பதிந்தது. (எவ்வளவு திட்டினாலும், நான் வாயே திறக்கமாட்டேன். அதுவே பாட்டிக்குப் பலமாகிப் போனதோ?)

    பல வருடங்கள் கழித்துத்தான் அந்த அன்பு, கரிசனம் புரிந்தது.

    அன்பான குடும்பத்தினருக்கு நம் ஆற்றல், பலவீனங்கள் இரண்டும் புரிய, கேலி செய்யாது, இருக்கிறபடியே நம்மை ஏற்பார்கள். அபூர்வமாக, இத்தகைய நண்பர்கள் அமைவதும் உண்டு.

    தூண்டுகோல்

    குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்கும் பெற்றோர் அவர்கள் முன்னேறத் தூண்டுகோலாக அமைகிறார்கள்.

    கீழே விழும்போதோ, அல்லது ஏதாவது ஆபத்து வரும்போதோ, `அம்மா!’ என்றுதானே கத்துகிறோம்?

    அம்மா எவ்வளவுதான் திட்டினாலும், பள்ளிக்கூடத்தில் தன்னைத் தோழிகள் வாட்டுகிறார்கள் என்று சொல்லியபடி ஒரு சிறுமி வீடு திரும்பும்போது ஆறுதலாக நான்கு வார்த்தை கூறுவாள்.

    இப்போதெல்லாம்,` நான் என் குழந்தைகளுக்கு quality time அளிக்கிறேன்,’ என்று பெருமையாகப் பேசுகிறார்கள் பெண்கள். ஆனால், குழந்தைகளுக்குத் தேவையானபோது அருகில் இருக்கமாட்டார்கள்.

    மனம் கசந்து, நண்பர்களை நாடுவார்கள் பிள்ளைகள்.

    கதை

    நான் நேபாளத்திற்குச் சென்றிருந்தபோது, துருக்கி நாட்டிலிருந்து வந்திருந்த எக்ரின் என்ற பெயர்கொண்ட பெண்மணியைச் சந்தித்தேன்.

    தன் தாயுடனும், இரு சிறு, ஆண்குழந்தைகளுடனும் வசித்து வருவதாகச் சொல்லியிருந்தாள்.

    மலைப்பாங்கான நேபாள நாட்டில், எளிதில் செல்ல முடியாத இடங்களிலும் போலியோ மருந்து கிடைக்கும்படிச் செய்வதாகக் கூறினாள். “அடிக்கடி வருகிறேன்,” என்றும் தெரிவித்தாள் எக்ரின்.

    நான் சற்றும் யோசியாது, “உன் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்கிறாயோ?” என்று கேட்டேன்.

    என் மாணவ மாணவிகளில் பலர், பெற்றோரின் கண்காணிப்போ, அரவணைப்போ இல்லாததால் பதின்ம வயதில் தீய பழக்கங்களுக்கு ஆளானதைக் கண்டிருந்ததால் அப்படி ஒரு கேள்வி எழுந்தது.

    அன்பான குடும்பத்தினால்தானே ஒருவர் நற்குணவானாகிறார்!

    `தந்தை இல்லாத வீடு’ என்று அவள் சொல்லாமலே புரிந்திருந்தது. தாயும் அடிக்கடி, `சமூக சேவை செய்கிறேன்’ என்று வெளிநாடு போனால் குழந்தைகள் யாரை நாடுவார்கள்?

    முகம் மாறாது, “ஆம். முடிந்த போதெல்லாம், அவர்களையும் என்னுடன் இங்கு அழைத்து வருவதுண்டு,” என்று பதிலளித்தாள் எக்ரின்.

    சமூக சேவைக்கு முக்கியத்துவம் அளித்து, குடும்பத்தில் அக்கறை காட்டாமல் இருந்துவிடவில்லை அவள்.

    தாயின் அன்பு கிடைத்ததால் குழந்தைகளும் ஒற்றுமையாக வளர்வார்கள்.

    ஒற்றுமை இழந்த குடும்பங்கள்

    பெரிய குடும்பங்களில் பெண்கள் தம் சகோதரர்களுக்கு எதிராகக் கூட்டணி அமைப்பார்கள். பெற்றோர் மகன்களுக்கு அதிகமான சுதந்திரம் அளிக்கிறார்களே என்ற ஆத்திரமாக இருக்கலாம். அல்லது, அவர்களது குணாதிசயங்கள் பிடிபடாமல் இருக்கலாம்.

    வேறு சில குடும்பங்களில், `மகள் கல்யாணமாகி, புக்ககத்திற்குப் போய்விட்டால் அங்கு அவளை எப்படி நடத்துவார்களோ!’ என்ற கரிசனத்துடன், மிக அருமையாக நடத்துவார்கள். அவளுடைய சகோதரர்களுக்கு, `நாம் ஏதோ விதத்தில் மட்டம்!’ என்ற தாழ்வு மனப்பான்மை எழுப்பும்.

    `எங்கள் பெற்றோருடன் ஒரே குடும்பத்தில்தான் வளர்ந்தோம். ஆனால், எங்களிடையே இருக்கும் வேறுபாட்டால் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை!’ என்று நினைப்பவர்கள் புரிந்துகொள்ளாதது — ஒரு மரத்தின் கிளைகள் ஒன்றுபோல் இல்லாவிடினும், வேர் ஒன்றுதான்.

    கதை

    பொறுப்பில்லாத, சுயநலமியான தந்தையால் அக்குடும்பமே கஷ்டப்பட்டது. தாய் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை. அவர்களுக்காக நேரத்தையோ, அன்பையோ அவளால் அளிக்க முடியவில்லை.

    குழந்தைகளிடம் ஒற்றுமை என்பது அறவே இல்லாமல் போயிற்று. சண்டை, பொறாமை என்று வளர்ந்தார்கள்.

    அச்சூழ்நிலையில் வளர்ந்த ஐயாசாமி தனக்கு ஒரு குடும்பம் அமைந்தால், அது இப்படி இருக்கக்கூடாது என்று தீர்மானித்தான்.

    புரிந்துணர்வு மிக்க மனைவியைத் தேடிப்பிடித்தான். ஆனால், கடந்த காலத்தின் கசப்பை மறக்க முடியாது, தன் நிம்மதியையும், அத்துடன் மனைவி, குழந்தைகளின் நிம்மதியையும் பறித்தான்.

    தான் சிறுவயதில் பெறாத அன்பை எப்படித் திருப்பிக் கொடுப்பது என்று அவனுக்குப் புரியத்தானில்லை. ஓய்வு நேரங்களில்கூட குடும்பத்தைச் சரியாகக் கவனிக்கத் தோன்றவில்லை.

    வாலிபமும் பணமும் இருந்த காலத்தில் ஐயாசாமிக்கு அமைந்த நண்பர்கள் வயது முதிர்ந்த காலத்தில் காணாமல் போனார்கள். அப்போது குடும்பத்தின் ஆதரவு வேண்டியிருந்தது.

    தான் அவர்களைச் சரிவரக் கவனிக்காமல் போனோமே என்ற வருத்தம் மிகுந்தது. பணத்தைவிடக் குடும்பம்தான் முக்கியம் என்று உணர்ந்தான்.

    பணம்தான் எல்லாமா?

    `பணமே பிரதானம்’ என்று கழித்த காலம் போனதும்தான் அன்பு, நட்புடன் கூடிய பாதுகாப்பான உறவு போன்றவற்றின் அருமை புலனாகிறது.

    அன்பான குடும்பத்தில் வளர்ந்திருந்தாலும், உத்தியோகத்தில் மிகச் சிறக்கவேண்டும், வெற்றிகள் பல அடையவேண்டும் என்ற வெறியுடன் காலத்தைக் கழித்தவர்களுக்கும் வயது முதிர்ந்த காலத்தில் வருத்தம் எழும் – குடும்பத்தைச் சரிவரக் கவனியாது போனோமே என்று.

    பண்டிகைக் காலங்கள்

    பண்டிகை என்றாலே குழந்தைகளுக்கு உற்சாகம்தான்.

    மலேசியாவில், சீனப் புத்தாண்டின்போது நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் தம் குழந்தைகளுடன் வெளியூர்களில் வசிக்கும் பெற்றோரைப் பார்க்கப் போவது வழக்கம். வருடத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக இப்படிப் போவார்கள். மற்ற சமயங்களில் குழந்தைகளுக்குப் பரீட்சை, அல்லது வேறு ஏதாவது அசௌகரியம் நிகழ்ந்துவிடும்.

    தொற்றுநோயைத் தடுக்கவென, இவ்வருடம் பத்து கிலோமீட்டருக்குள்தான் பயணிக்க வேண்டும் என்று பல மாநிலங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதில் மிக வருந்தியவர்கள் வயது முதிர்ந்த பெற்றோர். என்னதான் ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டாலும், நேரில் பார்த்து, தம் தனிமையின் ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள பேரக் குழந்தைகளை அரவணைப்பதுபோல் ஆகுமா?

    எல்லாரும் எப்போதும் ஒன்றாக இருந்தால் போட்டி, மனத்தாங்கல் என்று ஏதாவது குழப்பங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், அவ்வப்போது மட்டுமே சந்திப்பவர்களுக்கு இடையே ஒற்றுமை விலகாதிருக்கும். தம்பதியரோ, பெரிய குடும்பத்தினரோ, எல்லாருக்கும் இந்த விதி பொருந்தும்.

    எந்தக் குடும்பமும் பிரச்சினைகள் இல்லாது இருப்பதில்லை. ஆனால், அதில் ஒற்றுமை இருந்தாலே போதும். வெளியில் ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் சமாளித்துவிடலாமே!

    (நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A)

    Share
  • வாய்ப்பும் அங்கீகாரமும் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 8

    வாய்ப்பும் அங்கீகாரமும் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 8

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    தமது ஓவியங்கள், அவற்றின் பின்னணி ஆகியவற்றை விளக்கும் ஓவியர் ஸ்யாம், தமிழ்நாட்டின் கலைச்செல்வங்களையும் அவற்றின் இப்போதைய நிலையையும் விவரிக்கிறார். ஓவியர்களைக் கூலித் தொழிலாளிகள் போன்று நடத்துவதைக் கண்டிப்பதுடன், ஓவியர்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். ஓவியத்தின் மதிப்பு, கலையை வெளிப்படுத்த வேண்டிய இடம், கலைஞர்களிடம் இருக்க வேண்டிய நெகிழ்வுத்தன்மை போன்ற பலவற்றையும் சுட்டிக் காட்டுகிறார். இந்த வெளிப்படையான உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    ஓவியத்துக்கு நன்றி: ஓவியர் தமிழ்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வர்லி ஓவியம் வரைவது எப்படி?

    வர்லி ஓவியம் வரைவது எப்படி?

    வர்லி ஓவியம் வரைவது எப்படி? இதோ வரைந்து காட்டுகிறார், நாமக்கல் பாலமூர்த்தி. உங்கள் குழந்தைகளுக்கு இதைக் காட்டுங்கள். அவர்களை இதைப் போல் வரைய ஊக்குவியுங்கள். அவர்கள் வரைவதை வீடியோவாக எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் (WhatsApp: 9841120975 | annakannan@gmail.com). சிறந்த முயற்சிகளை அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இவனை என்செய்வேன்!

    இவனை என்செய்வேன்!

    ஏறன் சிவா

    உலகத்தில் முதல்மொழியெம்
    முத்தமிழ்தான் என்பான் — சொல்
    ஒன்றுமட்டும் உதிர்த்துவிட்டு
    ஆங்கிலமே தின்பான்!

    இலக்கணத்தில் நமக்கிங்கோர்
    இணையில்லை என்பான்! — அதில்
    இருக்குமொரு சூத்திரத்தில்
    ஏதோன்றும் அறியான்!

    இலக்கியங்கள் நம்தலைமேல்
    இருக்குமுடி என்பான் — அதில்
    எந்நூலும் பொருள்படித்து
    இதுவரையில் அறியான்!

    தாய்மொழிக்குத் தாய்மொழியெம்
    தமிழ்மொழிதான் என்பான் — ஒரு
    நாய்கூட “வள்”ளென்கும்
    இவன்தமிழைக் கொல்வான்!

    கலைகட்கெலாம் தாய்க்கலையெம்
    தமிழ்க்கலையென் றுரைப்பான் — நீ
    ஒருகலையை உருப்படியாய்
    கல்லென்றால் முறைப்பான்!

    உலகுக்கே ஒழுக்கம்தந்தோர்
    தமிழரென்று கதைப்பான் — அந்த
    ஒழுக்கத்தை இன்றிவனே
    பாடையேற்றி புதைப்பான்!

    என்சொல்லி எப்பயனும்
    எம்மாற்றமும் இல்லை — தமிழா நீ
    என்றுயர்த்திப் பிடிப்பாயோ
    புலியொடுமீன் வில்லை!

    வெல்லவெமை உலகத்தில்
    வீரனில்லை என்பான் — இவன்தன்
    தலைவன்யார் பகைவன்யார்
    தரம்பிரிக்கத் தெரியான்!

    உலகாண்ட இனமென்றே
    ஊர்முழுக்கச் சொல்வான் — தன்
    நிலங்காக்க ஒருநாளும்
    நெஞ்சுயர்த்தி நில்லான்!

    மருத்துவத்தில் நாமெல்லாம்
    மலையுயர்ந்தோம் என்பான் — தன்
    மனநோயாம் மடம்போக்க
    ஒருமருந்தும் தேடான்!

    யாவருமே கேளிரென்றே
    எவரெவர்க்கோ சொல்வான் — தன்
    இனக்குடியைக் கீழ்மேலெனும்
    வேற்றுமையால் கொல்வான்!

    என்சொல்லி எப்பயனும்
    எம்மாற்றமும் இல்லை — தமிழா நீ
    என்றுயர்த்திப் பிடிப்பாயோ
    புலியொடுமீன் வில்லை!

    இன்றுபோல காலமென்றும்
    இருப்பதுவும் இல்லை — உலகம்
    அன்றுசொல்லும் “தமிழனெ”ன்ற
    தலைமந்திரச் சொல்லை!

    Share
  • இக்காலக் காதல் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 7

    இக்காலக் காதல் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 7

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ஓவியர் ஸ்யாம் உடனான உரையாடல் தொடர்கிறது. செல்பேசி என்ற கருவி, தகவல் தொடர்பில் மட்டுமின்றி, காதலிலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. காதலர் மனங்களிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அவை என்னென்ன என்று விளக்குவதோடு லிவிங் டுகெதர், ஒழுக்க நிலைப்பாடுகள், பெண்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம் எனப் பலவற்றையும் விவரிக்கிறார். குட் டச் (Good Touch), பேட் டச் (Bad Touch) எனக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகளையும் எடுத்துரைக்கிறார். இக்காலக் காதலைக் கண்ணாடி போல் காட்டும் இந்த உரையாடலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 295

    படக்கவிதைப் போட்டி – 295

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் கிஷோர் குமார்  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.02.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • அஞ்சலி செலுத்த வந்தவன்

    அஞ்சலி செலுத்த வந்தவன்

    பாஸ்கர்

    போன வாரம் கூட இவனோடு ஒரு முரண்
    இனி விவாதம் செய்ய முடியாது .
    எல்லோரும் எல்லோரையும் பார்த்தார்கள் .
    எப்படி வருகிறது அழுகை , உடலை பார்த்தவுடன்
    எல்லோரும் நல்லவர்கள் இங்கே .
    செத்த பின் இங்கு எல்லாம் பரஸ்பரம் .
    ஒருவர் மாலையை சரி செய்தார் , பள்ளியில் படித்தவராம்
    ஒருவர் அந்த சிரிப்பே வாடவில்லை என்றார் , என்ன பாக்கியோ?
    யாரோ நின்று ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தார் .
    யாருமே இங்கே சிரிக்கக்கூடாது .
    பிற எதை செய்தாலும் கேள்வியில்லை .
    எனக்கு பீரிட்டெழவில்லை சோகம் .
    நான் இறந்து இருப்பின் அவனுக்கும் இருக்காது .
    இப்போது மரணங்கள் துக்கத்தை விட கேள்வியை தான் கொடுக்கின்றன

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 116 (நாதர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 116 (நாதர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
    மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
    கோதில் அன்பரும்  குடும்பமும்  குறைவறக்   கொடுத்த
    வாதி   மூர்த்தியா   ருடன்சிவ   புரியினை   யணைந்தார்.

    பொருள்

    நாதருடைய திருவருளினாலே நல்ல பெரிய அந்தத் துலையே அவர்களை மேலே கொண்டு எழுகின்ற விமானமாகி மேற்செல்லக், குற்றமில்லாத அன்பராகிய நாயனாரும், அவரது மைந்தர் மனைவியாராகிய குடும்பத்தாரும் எஞ்ஞான்றும் குறைவுபடாத அழிவில் வான்பதங் கொடுத்த சிவ மூர்த்தியாருடனே சிவபுரியை அணைந்தனர்.

    விளக்கம்

    துலையே விமானமதாகி மேற்செல்ல – ஐயர் தம்முன் தொழுதிருக்கும் அழிவில்வான் பதம் கொடுத்தாராதலின், அப்பதத்திற் சேர்த்தற்குரியதாய் நாயனாரும், மைந்தரும், மனைவியாரும் ஏறிய அந்தத் துலையே, விமானமாக ஆயிற்று, துலையே விமானமாகி என்றதனால் அதுவே விமான உருவம் பெற்று இவர்களை மேலெடுத்துச் சென்றது என்றதாம்.

    திருவருளால் என்ற தொடர்,  தனம்  முதலிய பல பொருள்களை ஒரு தட்டிலே கொண்டும், கோவணத் தட்டு கீழ் இறங்கியபடியே தாழ்ந்து நிற்கும் வலிமை பெற்றதும் திருவருட் செயலேயாம்.

    பின்னர் இம்மூவரும் ஏறியவுடன் இருதட்டும் நேர் நின்றதும் திருவருளேயாம்.

    இங்கு அத்துலையே விமானமாகி மேற் சென்றதும் திருவருளேயாம்.

    முதலில்  துலைத்தட்டை மேலேறாது  தாழ்த்திய வலிமையும், மூவரும் ஏறி   நின்றபின்  நேர்   நின்றதும், அத்துலைத்தட்டே விமான மாகி மேலே சென்றதும்  திருவருட்செயலே ஆகும்.

    ஆகவே  முன்னர்த் திருவருள் வெளிப்பாடின்றி யிருந்து இங்கு அருட்சத்தியாகி நாயனாரை அவர் குடும்பத்துடன் அழியா இன்பத்தில் வைத்தலைத்  திருவருளால் என வெளிப்படக் கூறினார்.

    குடும்பம் என்ற சொல்,  மைந்தரையும்  மனைவியாரையும் குறித்தது. இவ்வுலக இன்பத்தை யளிக்கும் மனைவி, மறுமையில் கடைத்தேற்றும் மைந்தன் ஆகிய  எல்லாவற்றையும்  இறைவனிடம் குறைவறக் கொடுத் ததைக்  குறித்தது.

    ஆதிமூர்த்தியாராகிய  சிவபிரான் அடியாருக்கு  முழுதும் இன்னருள் தந்து முன் தொழுதிருக்கும் அழிவில் வான்பதம் கொடுத்த தனையே இங்குக் குறைவறக் கொடுத்த என்றார். குறைவறுதல் -எஞ்ஞான்றுங்கேடுறாது  நிலைத்திருத்தல். குறைவற குறைவு பிறவியாகியகுறை; அற -அறும்படியாக; கொடுத்த – அருள் கொடுத்த; என்றலுமாம் – அதாவது மல மற அருளிய என்பது. இதனை முன்னர்

    நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனும் சலத்தால்
    இச் சழக்கின் நின்று ஏற்றுவார்; ஏறுதற்கு இசைந்தார்.

    என்றதும் காண்க.

    ஆதிமூர்த்தியாருடன் சிவபுரியினை அணைந்தார் – பதங்கொடுத் தெழுந்தருளிய ஆதிமூர்த்தியுனுடனே பதம் பெற்ற இவர்களும் சிவலோக மடைந்தனர்.

    அழிவில் வான்பதம் – காலநீங்கிய நிலைமையாலே நித்தமாகிய சுத்தபுவனம். உடன் சிவபுரியாகிய மேல் நிலத்தினை அணைந்தார் என்றதனால், இறைவன் இவரை “வாராவுலக நெறியேற்றி“ வைத்தார் என்பதாம். அந்தச் சுத்தமாகிய சிவபுரியே “நிலமிசை நீடு வாழ்வார்“ என்ற  திருக்குறள்   காட்டிய  வீட்டுலகமாம்.

    அடியாரின் அசைவற்ற பக்தியும், அவ்வழியில் குடும்பத்தையே ஈடுபடுத்திய அடிமைத்திறமும், அப்படியே குடும்பத்தினரை மேல்நிலத்துக்குக்  கொண்டு செல்லும் திருவருளைக்  காட்டும்,  என்பது  இப்பாடலின் நுட்பமாகும்!

    இப்பகுதி அடியார்களுள் எட்டாமவ ராகிய அமர்நீதி நாயனாரின் அருள் வரலாற்றைக்  காட்டுகிறது! இனி ஒன்பதாம்அடியாரைப் பற்றிஅடுத்த பகுதிகாட்டும் !

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 2

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 2

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமம் கவிதைக்கானதா?

    முன்னுரை

    ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்பதனால் மணமக்கள் பொருத்தம் என்பதுபோலப் பொருளுக்கேற்ற உவமம் அமைதல் வேண்டும் என்பது பெறப்படும். அதாவது விளக்கப்படும் பொருளின் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு கூறுகளில் எதற்காக உவமம் கூறப்படுகிறதோ அவற்றுள் அவை ஒத்திருக்க வேண்டும். பேராசிரியர் உரையில் இந்த நுட்பம் அமைந்துள்ளது. உவமம் தொல்காப்பியத்தில் விரிவாக ஆராயப்படினும் தற்காலத்துக் கவிதையுலகில் உவமம் பற்றி நிலவும் கருத்தினுக்கும் தொல்காப்பியம் கூறும் கருத்திற்கும் இடைவெளி நிலவுவதாகவே தெரிகிறது. அது பற்றிய விளக்கத்தை இந்தப் பகுதி தர முயல்கிறது.

    எல்லாரும் உவமம் கூற இயலுமா?

    தற்காலத்தில் கவிதைக்கு அழகு சேர்க்கும் ‘அணி’களுள் ஒன்றாக உவமையைக் கருதும் போக்கு நிலவுகிறது. இவ்வாறு உவமையைச் செய்யுளணியாகக் கொள்ளும் கருத்தியல் தொல்காப்பியருக்கு இருந்ததா என்பது பெரும் சிந்தனைக்கும் ஆய்வுக்குமுரியது. உவமம் கவிதைக்கானது என்பது தொல்காப்பியத்தின் கருத்தாக இருந்திருக்குமானால் அது பற்றிய பதிவுகளையும் ஆய்வையும் கவிதை பற்றி ஆராயும் செய்யுளியலில் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால்,

    “மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
    ……………………………………………
    நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
    வல்லிதின் கூறி வகுத்துரைத்தனரே” 23

    என முப்பத்திரண்டுச் செய்யுளுறுப்புக்களைத் தொகுத்துரைக்கும் தொல்காப்பிய நூற்பாவில் உவமம் பற்றிய குறிப்பு காணப்படவில்லை. யாப்பிலக்கணத்துள் இன்றியமையாத ‘தளை’ பற்றிய குறிப்பும் தென்படவில்லை. தொல்காப்பியர் செய்யுளணி பற்றிய சிந்தனை உடையவராயிருந்திருப்பின் உவமத்தைச் செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாகக் குறித்திருப்பார். குறிக்காதது மட்டுமன்று., உவமம் பற்றிய ஆராய்ச்சி நிகழும் தொல்காப்பிய உவமவியலில் அகப்பொருள் மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலியோர் இடம்பெற்றிருப்பதையும் அறியமுடிகிறது.

    தொல்காப்பியர் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாகவே கருதியிருக்கிறார் என்பது பின்வரும் அவருடைய நூற்பாக்களில் இருந்து பெறப்படும் உண்மையாகும்.

    “கிழவி சொல்லின் அவளறி கிளவி”

    “தோழிக் காயின் நிலம்பெயர்ந் துறையா”

    “கிழவோர்க்காயின் உரனொடு கிளக்கும்”

    “ஏனோர்க்கெல்லாம் இடம் வரைவின்றே”

    “இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்

    உவம மருங்கில் தோன்றும் என்ப”

    “கிழவோட்கு உவமம் ஈரிடத்துரித்தே”

    “கிழவோற் காயின் இடம் வரைவின்றே”

    “தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்

    கூறுதற் குரிய  கொள்வழி யான”

    எனவரும் உவமவியல் நூற்பாக்கள் உவமத்தைப் பற்றி ஆராயாது உவமம் கூறுதற்குரியாரையும் அவர் உவமம் கூறும் சூழல்களையும் வரையறுப்பனவாகவே உள்ளன. இதனால் அகப்பொருள் மாந்தர்கள் உவமம் கூறும் பாங்கைப் புலப்படுத்துவனவாகவே அவை அமைந்துள்ளன என்பதை அறியலாம்.

    செய்யுளுக்கும் உவமத்திற்குமான தொடர்பு

    செய்யுள் பற்றிச் சிந்திக்குங்கால் தொல்காப்பியருக்கு உவமம் பற்றிய எண்ணமோ உவமம் பற்றிச் சிந்திக்குங்கால் செய்யுள் பற்றிய சிந்தனையோ அவருக்கு இருந்ததற்கான அகச்சான்றுகள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவ்விரண்டையும் தனித்தன்மையுடைய இருவேறு நிலைக்களங்களிலேயே சிந்தித்து அமைத்திருப்பதாகவே தோன்றுகிறது. உவமவியலைத் தனித்ததொரு இயலாக அமைத்ததும், அதனை மெய்ப்பாட்டியலுக்கும் செய்யுளியலுக்கும் இடையில் வைத்ததும் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களோடு தொடர்புடைய ஒன்றாகவே தொல்காப்பியர் கருதியிருந்தாரோ என எண்ணத் தோன்றுகிறது.

    உவம வகைகளும் நிலைப்பாடும்

    தொல்காப்பிய உவமவியல், அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் உவமை அமையும் திறத்தினை ஆராய்கிறது என்பதைக் கண்டோம். அவ்வாராய்ச்சியில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமைகள் அமையலாம் என வரையறுக்கப்படுகிறது. அவ்வாறு அந்நான்கு தளத்துள் அமைகின்ற உவமைகளுக்கும் அவை விளக்கும் பொருண்மைகளுக்கும் இடையில் அமைய வேண்டிய உவம உருபுகளைப் பற்றியும் தொல்காப்பியம் கருத்துரைக்கின்றது. உவம உருபுகளை ‘உவமச்சொல்’ எனவும் வழங்குவர். தொல்காப்பியத்துள் இவ்வுவம உருபுகளைத் தொகுத்துச் சுட்டுங்கால் ஓர் எண்ணிக்கையிலும் வகுத்துக் காட்டுங்கால் வேறொரு எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன என்பதை அறியமுடிகிறது. அதாவது ‘திசைகள் நான்கு வகைப்படும்’ என்னும் தொகுத்துச் சுட்டலுக்கும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் அதன் விரிவுக்குமான எண்ணிக்கையில் வேறுபாடு வரக்கூடாதல்லவா? ஆனால் தொல்காப்பியத்தில் வருகிறது. வினை, பயன், மெய், உரு என்னும் நான்கிற்கும் மொத்தமாக ‘இத்தனை உருபுகள்’ என வரையறுத்துக் கூறும் எண்ணிக்கைக்கும் அவற்றின் விரிவாக ஒவ்வொன்றுக்கும் பகுத்துரைக்கப்படும் உவம உருபுகளின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு நிலவுகிறது.

    (தொடரும்….)

    Share