சேக்கிழார் பாடல் நயம் – 116 (நாதர்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
வாதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.
பொருள்
நாதருடைய திருவருளினாலே நல்ல பெரிய அந்தத் துலையே அவர்களை மேலே கொண்டு எழுகின்ற விமானமாகி மேற்செல்லக், குற்றமில்லாத அன்பராகிய நாயனாரும், அவரது மைந்தர் மனைவியாராகிய குடும்பத்தாரும் எஞ்ஞான்றும் குறைவுபடாத அழிவில் வான்பதங் கொடுத்த சிவ மூர்த்தியாருடனே சிவபுரியை அணைந்தனர்.
விளக்கம்
துலையே விமானமதாகி மேற்செல்ல – ஐயர் தம்முன் தொழுதிருக்கும் அழிவில்வான் பதம் கொடுத்தாராதலின், அப்பதத்திற் சேர்த்தற்குரியதாய் நாயனாரும், மைந்தரும், மனைவியாரும் ஏறிய அந்தத் துலையே, விமானமாக ஆயிற்று, துலையே விமானமாகி என்றதனால் அதுவே விமான உருவம் பெற்று இவர்களை மேலெடுத்துச் சென்றது என்றதாம்.
திருவருளால் என்ற தொடர், தனம் முதலிய பல பொருள்களை ஒரு தட்டிலே கொண்டும், கோவணத் தட்டு கீழ் இறங்கியபடியே தாழ்ந்து நிற்கும் வலிமை பெற்றதும் திருவருட் செயலேயாம்.
பின்னர் இம்மூவரும் ஏறியவுடன் இருதட்டும் நேர் நின்றதும் திருவருளேயாம்.
இங்கு அத்துலையே விமானமாகி மேற் சென்றதும் திருவருளேயாம்.
முதலில் துலைத்தட்டை மேலேறாது தாழ்த்திய வலிமையும், மூவரும் ஏறி நின்றபின் நேர் நின்றதும், அத்துலைத்தட்டே விமான மாகி மேலே சென்றதும் திருவருட்செயலே ஆகும்.
ஆகவே முன்னர்த் திருவருள் வெளிப்பாடின்றி யிருந்து இங்கு அருட்சத்தியாகி நாயனாரை அவர் குடும்பத்துடன் அழியா இன்பத்தில் வைத்தலைத் திருவருளால் என வெளிப்படக் கூறினார்.
குடும்பம் என்ற சொல், மைந்தரையும் மனைவியாரையும் குறித்தது. இவ்வுலக இன்பத்தை யளிக்கும் மனைவி, மறுமையில் கடைத்தேற்றும் மைந்தன் ஆகிய எல்லாவற்றையும் இறைவனிடம் குறைவறக் கொடுத் ததைக் குறித்தது.
ஆதிமூர்த்தியாராகிய சிவபிரான் அடியாருக்கு முழுதும் இன்னருள் தந்து முன் தொழுதிருக்கும் அழிவில் வான்பதம் கொடுத்த தனையே இங்குக் குறைவறக் கொடுத்த என்றார். குறைவறுதல் -எஞ்ஞான்றுங்கேடுறாது நிலைத்திருத்தல். குறைவற குறைவு பிறவியாகியகுறை; அற -அறும்படியாக; கொடுத்த – அருள் கொடுத்த; என்றலுமாம் – அதாவது மல மற அருளிய என்பது. இதனை முன்னர்
நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனும் சலத்தால்
இச் சழக்கின் நின்று ஏற்றுவார்; ஏறுதற்கு இசைந்தார்.
என்றதும் காண்க.
ஆதிமூர்த்தியாருடன் சிவபுரியினை அணைந்தார் – பதங்கொடுத் தெழுந்தருளிய ஆதிமூர்த்தியுனுடனே பதம் பெற்ற இவர்களும் சிவலோக மடைந்தனர்.
அழிவில் வான்பதம் – காலநீங்கிய நிலைமையாலே நித்தமாகிய சுத்தபுவனம். உடன் சிவபுரியாகிய மேல் நிலத்தினை அணைந்தார் என்றதனால், இறைவன் இவரை “வாராவுலக நெறியேற்றி“ வைத்தார் என்பதாம். அந்தச் சுத்தமாகிய சிவபுரியே “நிலமிசை நீடு வாழ்வார்“ என்ற திருக்குறள் காட்டிய வீட்டுலகமாம்.
அடியாரின் அசைவற்ற பக்தியும், அவ்வழியில் குடும்பத்தையே ஈடுபடுத்திய அடிமைத்திறமும், அப்படியே குடும்பத்தினரை மேல்நிலத்துக்குக் கொண்டு செல்லும் திருவருளைக் காட்டும், என்பது இப்பாடலின் நுட்பமாகும்!
இப்பகுதி அடியார்களுள் எட்டாமவ ராகிய அமர்நீதி நாயனாரின் அருள் வரலாற்றைக் காட்டுகிறது! இனி ஒன்பதாம்அடியாரைப் பற்றிஅடுத்த பகுதிகாட்டும் !