தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 2
புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
உவமம் கவிதைக்கானதா?
முன்னுரை
‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்பதனால் மணமக்கள் பொருத்தம் என்பதுபோலப் பொருளுக்கேற்ற உவமம் அமைதல் வேண்டும் என்பது பெறப்படும். அதாவது விளக்கப்படும் பொருளின் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு கூறுகளில் எதற்காக உவமம் கூறப்படுகிறதோ அவற்றுள் அவை ஒத்திருக்க வேண்டும். பேராசிரியர் உரையில் இந்த நுட்பம் அமைந்துள்ளது. உவமம் தொல்காப்பியத்தில் விரிவாக ஆராயப்படினும் தற்காலத்துக் கவிதையுலகில் உவமம் பற்றி நிலவும் கருத்தினுக்கும் தொல்காப்பியம் கூறும் கருத்திற்கும் இடைவெளி நிலவுவதாகவே தெரிகிறது. அது பற்றிய விளக்கத்தை இந்தப் பகுதி தர முயல்கிறது.
எல்லாரும் உவமம் கூற இயலுமா?
தற்காலத்தில் கவிதைக்கு அழகு சேர்க்கும் ‘அணி’களுள் ஒன்றாக உவமையைக் கருதும் போக்கு நிலவுகிறது. இவ்வாறு உவமையைச் செய்யுளணியாகக் கொள்ளும் கருத்தியல் தொல்காப்பியருக்கு இருந்ததா என்பது பெரும் சிந்தனைக்கும் ஆய்வுக்குமுரியது. உவமம் கவிதைக்கானது என்பது தொல்காப்பியத்தின் கருத்தாக இருந்திருக்குமானால் அது பற்றிய பதிவுகளையும் ஆய்வையும் கவிதை பற்றி ஆராயும் செய்யுளியலில் ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால்,
“மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
……………………………………………
நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
வல்லிதின் கூறி வகுத்துரைத்தனரே” 23
என முப்பத்திரண்டுச் செய்யுளுறுப்புக்களைத் தொகுத்துரைக்கும் தொல்காப்பிய நூற்பாவில் உவமம் பற்றிய குறிப்பு காணப்படவில்லை. யாப்பிலக்கணத்துள் இன்றியமையாத ‘தளை’ பற்றிய குறிப்பும் தென்படவில்லை. தொல்காப்பியர் செய்யுளணி பற்றிய சிந்தனை உடையவராயிருந்திருப்பின் உவமத்தைச் செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாகக் குறித்திருப்பார். குறிக்காதது மட்டுமன்று., உவமம் பற்றிய ஆராய்ச்சி நிகழும் தொல்காப்பிய உவமவியலில் அகப்பொருள் மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலியோர் இடம்பெற்றிருப்பதையும் அறியமுடிகிறது.
தொல்காப்பியர் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாகவே கருதியிருக்கிறார் என்பது பின்வரும் அவருடைய நூற்பாக்களில் இருந்து பெறப்படும் உண்மையாகும்.
“கிழவி சொல்லின் அவளறி கிளவி”
“தோழிக் காயின் நிலம்பெயர்ந் துறையா”
“கிழவோர்க்காயின் உரனொடு கிளக்கும்”
“ஏனோர்க்கெல்லாம் இடம் வரைவின்றே”
“இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்
உவம மருங்கில் தோன்றும் என்ப”
“கிழவோட்கு உவமம் ஈரிடத்துரித்தே”
“கிழவோற் காயின் இடம் வரைவின்றே”
“தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்
கூறுதற் குரிய கொள்வழி யான”
எனவரும் உவமவியல் நூற்பாக்கள் உவமத்தைப் பற்றி ஆராயாது உவமம் கூறுதற்குரியாரையும் அவர் உவமம் கூறும் சூழல்களையும் வரையறுப்பனவாகவே உள்ளன. இதனால் அகப்பொருள் மாந்தர்கள் உவமம் கூறும் பாங்கைப் புலப்படுத்துவனவாகவே அவை அமைந்துள்ளன என்பதை அறியலாம்.
செய்யுளுக்கும் உவமத்திற்குமான தொடர்பு
செய்யுள் பற்றிச் சிந்திக்குங்கால் தொல்காப்பியருக்கு உவமம் பற்றிய எண்ணமோ உவமம் பற்றிச் சிந்திக்குங்கால் செய்யுள் பற்றிய சிந்தனையோ அவருக்கு இருந்ததற்கான அகச்சான்றுகள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. அவ்விரண்டையும் தனித்தன்மையுடைய இருவேறு நிலைக்களங்களிலேயே சிந்தித்து அமைத்திருப்பதாகவே தோன்றுகிறது. உவமவியலைத் தனித்ததொரு இயலாக அமைத்ததும், அதனை மெய்ப்பாட்டியலுக்கும் செய்யுளியலுக்கும் இடையில் வைத்ததும் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களோடு தொடர்புடைய ஒன்றாகவே தொல்காப்பியர் கருதியிருந்தாரோ என எண்ணத் தோன்றுகிறது.
உவம வகைகளும் நிலைப்பாடும்
தொல்காப்பிய உவமவியல், அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் உவமை அமையும் திறத்தினை ஆராய்கிறது என்பதைக் கண்டோம். அவ்வாராய்ச்சியில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமைகள் அமையலாம் என வரையறுக்கப்படுகிறது. அவ்வாறு அந்நான்கு தளத்துள் அமைகின்ற உவமைகளுக்கும் அவை விளக்கும் பொருண்மைகளுக்கும் இடையில் அமைய வேண்டிய உவம உருபுகளைப் பற்றியும் தொல்காப்பியம் கருத்துரைக்கின்றது. உவம உருபுகளை ‘உவமச்சொல்’ எனவும் வழங்குவர். தொல்காப்பியத்துள் இவ்வுவம உருபுகளைத் தொகுத்துச் சுட்டுங்கால் ஓர் எண்ணிக்கையிலும் வகுத்துக் காட்டுங்கால் வேறொரு எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன என்பதை அறியமுடிகிறது. அதாவது ‘திசைகள் நான்கு வகைப்படும்’ என்னும் தொகுத்துச் சுட்டலுக்கும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் அதன் விரிவுக்குமான எண்ணிக்கையில் வேறுபாடு வரக்கூடாதல்லவா? ஆனால் தொல்காப்பியத்தில் வருகிறது. வினை, பயன், மெய், உரு என்னும் நான்கிற்கும் மொத்தமாக ‘இத்தனை உருபுகள்’ என வரையறுத்துக் கூறும் எண்ணிக்கைக்கும் அவற்றின் விரிவாக ஒவ்வொன்றுக்கும் பகுத்துரைக்கப்படும் உவம உருபுகளின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு நிலவுகிறது.
(தொடரும்….)