அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

புகைப்படக் கலைஞர் கிஷோர் குமார்  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.02.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 295

  1. பிறை சூடிய பெம்மானே எனது
    பிணிகளுக் கெல்லாம் அரு மருந்தே
    ஆறறிவு இருந்தும் அறிந்திலேன்
    அடியார் மனத்துள் வாழ்பவனே

    கண்ணுக்கு கண்ணாக இருக்கும்
    கருப்பொருளே காலாதீதனே
    விண்ணவருக்கும் எட்டா வேத விழுப்பொருளே பழமையனே

    நின்னை அடையவே நீலகண்டனே
    நீள்கழல் காட்டியும் நின்னை மறந்து
    நெஞ்சமோ எனது வஞ்சகமே செய்ய
    பஞ்சமா பாதக வழி நடக்கின்றேனே

    செய்வதறியாது பிறவி தோறும்
    பிறந்து உனை மறந்து திரிந்தேனை
    மந்தி தாய் மந்தியை கவ்வுதல் போல
    நான் நின் கழல் பற்றுவது முறையோ

    ஆதனிலினாலே ஆலமுண்ட அரசே
    நீயே நின்னருள் கரம் கொண்டு
    பூனை தன் மகவினை கவ்வி
    காப்பது போல காத்தருள்வாயே

  2. பாடமாய்…

    தாய்மை என்பது மிகவுயர்வே
    தாக்கும் புலிக்கும் வேறில்லை,
    ஓய்வு யென்பதே அதற்கில்லை
    ஓடிச் சேயிரை தேடிடவே
    பாய்ந்து செல்லும் வரையினிலே
    பற்றியே வாயில் தூக்கிடுமே,
    தாய்மை மறந்த மனிதருண்டு
    தவிக்க விடுவோர்க் கிதுபாடமே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. குருட்டுப் பூனை

    பால் வைத்து பரிவுகாட்டி
    மடிமீது தானமார்த்தி
    தாலாட்டித் தூங்கவைத்து
    அன்பு காட்டி வளர்த்தாலும்
    முழுவதுமாய் நம்பவில்லை
    மதிலமர்ந்த பூனையிது

    தாவிச்சென்று சட்டென்று கவ்வி
    தூரமாய்த் தூக்கிச் சென்று
    கண்ணில் காட்டாமல்
    மறைத்துப் பதுக்கிவைத்து
    சந்தேகத்தின் சாரலில் நனைந்திருக்கும்
    முக்காடிட்டச் சைவப் பூனை

    உள்ளுக்குள் வஞ்சம் வைத்து
    வெளியிலே வேடமிட்டு
    கள்ளத்தின் நாற்றத்தை
    வார்த்தை புனுகுபூசி
    தினந்தோறும் மறைத்ததினால்
    உண்மைக்கும் பொய்மைக்கும்
    வேற்றுமையை அறியாமல்
    தன் பிம்பக் காட்சியினை
    பிறர்மீது ஏற்றிவைத்து
    இருண்டு போன உலகமென்று
    கண்மூடி அழுகின்றோம்

  4. தாய்மை

    எத்தனை இயற்கை சீற்றங்கள்
    கீறிவிட்டது இப்பூமியை…
    இருந்தும்
    இன்றும் நிறுத்தவில்லை
    சுற்றுவதை இந்த பூமி
    காரணம்…

    பூமிக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்
    அதன் பெயர்தான் தாய்மை

    பூமியில் தாயான ஜீவராசிகளும்
    தன் குழந்தைகளை காக்கிறது
    பூமியைப்போல…
    எதிரிகளிடமிருந்து காக்கும் போது
    வருவதுண்டு சிறு துன்பங்கள்

    கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகாது
    பூனை தன் வாயால் கவ்வ குட்டியும் சாவதில்லை
    இதைப்போல தாய் தந்தை ஏசுவதும்
    பிள்ளைகளின் நலனுக்கே

    இதனை உணர்ந்த பிள்ளைகளே
    உயர்வார்கள் உலகம் மெச்ச
    உணராத பிள்ளைகள் உயர்வதில்லை

  5. புலி என்றாலும்
    பூனை என்றாலும்
    தாய்மை என்பது
    தன்னிகரில்லாதது

    கடிவதெல்லாம்
    காப்பாற்ற அன்றி
    கண்டிப்பதற்கல்ல!

    கொடும் புலியின் கண்கள்
    கருணைப் பொழிவது
    பாலூட்டி குட்டிகளை
    அரவணைக்கும் பொழுது மட்டுமே

    பண்பான பசுவின்
    கண்களில் கனல் தெறிப்பது
    கன்றுகளை எவரேனும்
    காயப்படுத்தும் பொழுது மட்டுமே

    எதிர்பாரா அனபே
    தாய்மையின் அடையாளம்
    இப்புவி இன்னமும் இயங்குவது
    அதனால்தான்

    காந்தியின் அன்னையும்
    கோட்சேயின் தாயும்
    மகன்மீது காட்டிய அன்பு
    மாறுபட்டதல்ல
    அதுவே அன்னைகளின்
    பலமும் பலவீனமும்

    தாய்மையைப் போற்றுவோர்
    போற்றப்படுகிறார்கள்
    தூற்றுவோர் துன்பப்படுகிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.