images - 2021-02-13T100921.175

ஏறன் சிவா

உலகத்தில் முதல்மொழியெம்
முத்தமிழ்தான் என்பான் — சொல்
ஒன்றுமட்டும் உதிர்த்துவிட்டு
ஆங்கிலமே தின்பான்!

இலக்கணத்தில் நமக்கிங்கோர்
இணையில்லை என்பான்! — அதில்
இருக்குமொரு சூத்திரத்தில்
ஏதோன்றும் அறியான்!

இலக்கியங்கள் நம்தலைமேல்
இருக்குமுடி என்பான் — அதில்
எந்நூலும் பொருள்படித்து
இதுவரையில் அறியான்!

தாய்மொழிக்குத் தாய்மொழியெம்
தமிழ்மொழிதான் என்பான் — ஒரு
நாய்கூட “வள்”ளென்கும்
இவன்தமிழைக் கொல்வான்!

கலைகட்கெலாம் தாய்க்கலையெம்
தமிழ்க்கலையென் றுரைப்பான் — நீ
ஒருகலையை உருப்படியாய்
கல்லென்றால் முறைப்பான்!

உலகுக்கே ஒழுக்கம்தந்தோர்
தமிழரென்று கதைப்பான் — அந்த
ஒழுக்கத்தை இன்றிவனே
பாடையேற்றி புதைப்பான்!

என்சொல்லி எப்பயனும்
எம்மாற்றமும் இல்லை — தமிழா நீ
என்றுயர்த்திப் பிடிப்பாயோ
புலியொடுமீன் வில்லை!

வெல்லவெமை உலகத்தில்
வீரனில்லை என்பான் — இவன்தன்
தலைவன்யார் பகைவன்யார்
தரம்பிரிக்கத் தெரியான்!

உலகாண்ட இனமென்றே
ஊர்முழுக்கச் சொல்வான் — தன்
நிலங்காக்க ஒருநாளும்
நெஞ்சுயர்த்தி நில்லான்!

மருத்துவத்தில் நாமெல்லாம்
மலையுயர்ந்தோம் என்பான் — தன்
மனநோயாம் மடம்போக்க
ஒருமருந்தும் தேடான்!

யாவருமே கேளிரென்றே
எவரெவர்க்கோ சொல்வான் — தன்
இனக்குடியைக் கீழ்மேலெனும்
வேற்றுமையால் கொல்வான்!

என்சொல்லி எப்பயனும்
எம்மாற்றமும் இல்லை — தமிழா நீ
என்றுயர்த்திப் பிடிப்பாயோ
புலியொடுமீன் வில்லை!

இன்றுபோல காலமென்றும்
இருப்பதுவும் இல்லை — உலகம்
அன்றுசொல்லும் “தமிழனெ”ன்ற
தலைமந்திரச் சொல்லை!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இவனை என்செய்வேன்!

  1. மிக அருமையான பதிவு. என் மன ஆதங்கத்தை அப்படியே படம்பிடித்தது போலுள்ளது.
    நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்வோர் பலருண்டே;
    தமிழே இனியுன் நிலை என்ன என்று மனம் கலங்குகிறது.
    ஆயினும் மனவுறுதியுடனும் நம்பிக்கையுடனும் தமிழை எழுதிப் படிப்போரைக்கண்டு உள்ளம் சிறிது அமைதியடைகின்றது.
    வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.