Blog

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (28)

    28. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! லியானார்டோ அருங்காட்சியகம், வின்ச்சி, இத்தாலி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நபர்களில் சிலர் வாழ்ந்த இல்லங்கள் அல்லது அவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு மணடபங்கள் போன்றவற்றிற்குச் செல்லும் போதெல்லாம் காலத்தைக் கடந்து நிற்கும் அவர்களது நினைவுகளுடன் நான் சஞ்சரிப்பது வழக்கம். இப்படி அமையும் வாய்ப்புக்களெல்லாம் ஒரு அனுபவம் தானே என்று மிகச் சாதாரணமாக என்னால் நினைத்து விட முடியாது. மாறாக இவ்வகை நிகழ்வுகளை எனது டைரியில் முக்கிய நிகழ்வுகளாக நான் குறித்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

    இப்படி வாய்க்கும் அனுபவங்களில்.. அதிலும் குறிப்பாக நம் மனதில் மிக மிக நாம் ரசிக்கும், விரும்பும், அதிசயத்து வியக்கும், லயித்துப் போகும் ஒருவரது நினைவின் சுவடாக இருக்கும் ஒரிடத்திற்கு நாம் செல்கின்றோம் எனும் போது அந்த அனுபவம் தரும் உணர்வுப் பூர்வமான அனுபவங்களைப் பிரமிப்பு என்று சொல்வதா அல்லது வியப்பு என்று சொல்வதா எனக் குழம்பிப் போனாலும் இந்த வாய்ப்பு அமைந்ததை நினைத்து மனம் முழுக்க மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பது என் அனுபவப் பூர்வமான உண்மை.

    உலக மனிதர்களில் என்னை மிகக் கவர்ந்த ஒருவர்.. எப்போது நினைத்தாலும் அல்லது அவர் பெயரைக் கேட்டாலும் வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும் ஒருவர்.. என்று சொன்னால் அதில் முதல் இடம் பெறுபவர் லியோனார்டோ டாவின்சி.

    ஒரு கலைஞன்..!
    ஒரு விஞ்ஞானி…!
    ஒரு கட்டிடக் கலைஞன்..!
    ஒரு அறிஞன்..!

    இவற்றிற்கும் மேல் லியோனார்டோ டாவின்சி …
    ஒரு புதுமை சிற்பி..!

    unnamed
    லியோனார்டோ டா வின்ச்சி

    பொதுவாக டாவின்சி என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனம் தொடர்பு படுத்திப் பார்ப்பது இந்தக் கலைஞன் உருவாக்கிய வரலாற்று பிரமாண்டங்களான தி லாஸ்ட் சப்பர் (The Last Supper) சித்திரமும் மோனா லிசாவின் (Mona Lisa) உருவப் படமும் தான். இதில் மோனா லிசா சித்திரத்தைப் பற்றி முந்தைய பிரான்ஸிலுள்ள லூவ்ர அருங்காட்சியகத்தைப் பற்றிய அருங்காட்சியகப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். லியோனார்டோ என்னும் இந்தப் புதுமை உலகப் படைப்புச் சிற்பியின் புகழைச் சொல்லிக் கொண்டிருப்பது இந்த இரண்டு சித்திரப் படைப்புக்கள் மட்டுமல்ல. இக்கலைஞனின் சிந்தனையில் உருவான பல்லாயிரக்கணக்கானச் சிந்தனை ஓட்டங்களின் பிரதிபலிப்பாக, புதிய உருவாக்கங்களைச் சலிக்காமல் படைத்தவன் இம்மாபெரும் கலைஞன். லியோனார்டோவின் படைப்புகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகள் இவற்றைப் பற்றி தனிப் பதிவாக எழுத வேண்டும் என்பதும் என் விருப்பம். பின்னர் ஒரு முறை இது நிச்சயம் வடிவம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

    1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி இத்தாலியின் வடக்கு மாநிலப் பகுதியின் ஒரு சிற்றூரான வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரது படைப்புகளைப் பார்க்கும் போது இவரது சிந்தனையை முற்றும் முழுதுமாக அறிவியலும், இயற்கை நியதிகளும், புதுமை படைக்க வேண்டும் என்ற தீவிர தாகமுமே ஆர்ப்பரித்திருந்தமையை மிக நன்றாக உணர முடியும். தனது சமகால படைப்புகளைப் பார்த்து அதன் நீரோட்டமாக தனது படைப்புகளை உருவாக்கியவன் அல்ல டாவின்சி. இதற்கு முற்றிலும் மாறாக தனது சமகால படைப்புகளிலிருந்தும் அதற்கும் முந்தைய படைப்புகளிலிருந்தும் மாறுபட்ட சிந்தனையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவன் இவன். லியோனார்டோவின் பெயர் சொல்லி உருவான சித்திரக் கூடங்களும், கட்டிட கட்டுமான நெறி முறைகளும், அறிவியல் கருத்துகளும், மாணவர்களும் அவரை பின்பற்றி ரெனைசான்ஸ் எனக் குறிப்பிடப்படும் கலாச்சார மறு பிறப்பினை ஐரோப்பிய பிராந்தியம் முழுமைக்கும் இட்டுச் செல்ல வைத்த மிகப் பலம் பொருந்திய ஒரு ஆளுமை லியோனார்டோ டா வின்சி என்று சொன்னால் இதனை யாரும் மறுப்பதற்கில்லை.

    leo3

    வின்ச்சி நகரில் நுழையும் சாலை- இரு புறமும் ஆலிவ் மரங்கள் (ஏப்ரல் 2013)

    கடந்த ஆண்டு (2013) ஏப்ரல்-மே மாதங்களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது வின்ச்சிக்கு பிரத்தியேகமாக பயணித்து இங்கிருக்கும் டாவின்சி அருங்காட்சியத்தை நேரில் சென்று பார்த்து வந்தேன். கலையும் அறிவியலும் வெவ்வேறு தானே? இவையிரண்டும் ஓரிடத்தில் சங்கமிக்க முடியுமா என பலர் நினைக்கலாம். ஆனால், இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து லியோனார்டோவின் படைப்புகளைப் பார்வையிடும் ஒவ்வொருவரும் இவன் அறிவியலையும் கலைப்படைப்புகளையும் பிரித்துப் பார்க்காத ஒரு மனிதன் என்பதை அறிவர். அறிவியலுக்கும் கலைப்படைப்புகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை வைக்காது இரண்டையும் இணைத்துப் பார்த்து அதன் வழி புதுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தனி இடமும் சிறப்பிடமும் பெறுபவர் லியோனார்டோ.

    இது வரை கிடைத்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் லியோனார்டோவின் குறிப்புகளும் புதிய கண்டுபிடிப்புகளும் 13,000 பக்கங்களில் அவரது சொந்தக் கையெழுத்தினால் எழுதியும் வரைந்தும் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளில் வானில் பறக்கும் இயந்திரம், போர் இயந்திரங்கள், மனித உடலின் உட்பகுதியில் அமைந்திருக்கும் அங்கங்களை தனித்தனியே ஆய்வு செய்து விளக்கிய வரைபடங்கள்-குறிப்புகள், கட்டுமான வரை படங்கள், வீட்டுத் தேவைக்கான இயந்திரங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.

    leo2

    லியோனார்டோ வடிவமைப்பான, வின்ச்சி நகரைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் Vitruvian Man (ஏப்ரல் 2013)

    ரோபோட் எனப்படும் இயந்திர மனிதன் அல்லது மிருகங்களின் உருவாக்கம் என்னும் கருத்து கடந்த நூற்றாண்டில் விரிவாக வளர்ந்த ஒன்று. லியோனார்டோவின் சிந்தனையில் இயந்திர மிருகம் ஒன்றும் படைக்கும் சிந்தனை எழுந்து அதன் விளைவாக அசைந்து நடந்து சென்று தன் இதயத்தைத் திறந்து லில்லி மலர்களை வழங்கும் ஒரு இயந்திர சிங்கத்தையும் கருத்தில் சிருஷ்டித்து, அதனை உருவாக்கி அதன் உருவாக்கக் குறிப்புகளையும் பதிவு செய்து வைத்திருக்கின்றார்.

    ஒரு மனிதனால் இவ்வளவு விஷயங்களைப் படைக்க முடியுமா..? வெவ்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து இருந்து அதில் தன் முத்திரையைப் பதிக்க முடியுமா என்றால் முடியும் என்பதற்கு எனக்கு கண் முன்னே தோன்றும் உதாரணம் இந்த 15ம் நூற்றாண்டு மனிதர் லியோனார்டோ டா வின்ச்சி!

    அவர் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, இயந்திரக் கல்வி பயின்று தனது இளமைக் காலத்தைச் செலவழித்த வின்ச்சி நகரிலேயே அந்நகரின் ஊராட்சி மையம் அவருக்கு ஒரு அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றது. இப்படி ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் 1919ல் எழ பின்னர் படிப்படியாக இதற்கானப் பணிகள் ஆரம்பிக்க, இவரது ஒரு பிறந்த தினத்திலேயே அதாவது 1953ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் இந்த அருங்காட்சியகம் திறப்பு விழா கண்டது.

    leo1

    நினைவு இல்லத்தின் வாசலில் (ஏப்ரல் 2013)

    இங்கு தான் உங்களை அழைத்துச் செல்ல விருக்கின்றேன்.

    வாருங்கள்.. இணைந்து செல்வோம்..!

    தொடரும்

    Share
  • பசுபதியே போற்றி போற்றி

    இரமேஷ் சிவநாதன்temple

    1.    பெண்பாதி உருவாகி பிறைசூடிக் கூத்தாடி
    கண்ணாரக் கண்டாரை களிப்பூட்டிக் கரையேற்றி
    விண்ணாய கினபாலு மிளிர்நகர்வாழ் பசுபதியே
    மண்ணாகி நின்றாயென் மாணிக்கமே போற்றி போற்றி!

    2.    வேராகி தருவாகி வேதத்தின் குருவாகி
    சீராக அடியார்க்கு சிவஞானம் அருள்வாய்நீ
    நீராடும் கமலக்குள நிறைஞானப் பசுபதியே
    நீராகி நின்றாயென் நிருமலனே போற்றி போற்றி!

    3.    தாயாகித் தத்துவத் தந்தையாகி அடியாரை
    சேயாக்கி வல்வினைக்கு சிதையூட்டி சிவமாக்கி
    ஓயாமல் கூத்தாடும் ஓங்காரப் பசுபதியே
    தீயாடி நின்றாயென் சிவமணியே போற்றி போற்றி!

    4.    வேற்றாக ஒலிக்கின்ற வேதத்தின் ஒலியாகி
    காற்றாடி மனமூடி மந்திர செபமாகி
    கூற்றுவனை உதைத்தெம் குறைநீக்கும் பசுபதியே
    காற்றாகி நின்றாயென் கனகமணி போற்றி போற்றி!

    5.    வளிநாடி விழிமூடி வழிநாடி மனவாசல்
    ஒளிநாடி உள்ளத்தே ஒழுகிவரும் அமிர்தாகி
    துளியாகி தூவுணர்வால் சிவமாகி பசுபதியே
    வெளியாகி நின்றாயென் வேதியனே  போற்றி போற்றி!

     

    Share
  • ஒருபொதுக் கூட்ட மேடையின் செலவு வெறும் 2,500 ரூபாய்

    எஸ். வி. வேணுகோபாலன்

    acs

    திருச்சியில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேசுகிறார்.

    திருச்சி, ஏப். 17 -தஞ்சை-கந்தர்வக்கோட்டை-திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் படாடோபம்-பகட்டாரவாரம் எதுவுமின்றி எளிமையிலும் மிக எளிமையாக நடைபெற்றன என்று `தி இந்து’ நாளிதழ் புகழாரம் சூட்டி யிருக்கிறது. சமீபத்தில் தஞ்சை-கந்தர்வக் கோட்டை-திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் குறித்து தி இந்து நாளிதழின் திருச்சி, புதுகை செய்தியாளர்கள் ஒரு தொகுப்பினை தி இந்து நாளிதழில் வெளியிட்டிருக் கிறார்கள். அதன் சாராம்சம் வருமாறு: எவ்விதமான படாடோபமோ, பகட்டாரவாரமோ இன்றி நடைபெற்ற ஒரு முக்கிய பிரமுகரின் பிரச்சாரம் என்றால் அது திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்தான்.

    ராட்சச கட்-அவுட்டுகள் கிடையாது, பெரிய பெரிய பதாகைகள் கிடையாது, டிரம் சத்தம் கிடையாது, மாபெரும் பொதுக்கூட்ட மேடை கிடையாது, எல்லாவற்றிற்கும் மேலாக எங்கேயும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப் படவில்லை. நம்பமுடியாதுதான், ஆனால் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் பொதுக்கூட்ட நிகழ் வுகள் அவ்வாறுதான் நடந்தன.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலும், திருச்சியிலும் அவர் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அவரைப் போலவே மிகவும் எளிமையுடன் நடந்தன. இவ்விரு இடங்களிலும் மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவை வேட் பாளராகத் திருச்சி தொகுதியில் போட்டியிடும் எஸ். ஸ்ரீதருக்கு வாக்களிக்குமாறு கோரி உரை நிகழ்த்தினார்.

    இவ்விரு இடங்களிலுமே மிகவும் குறைந்த செலவிலான திறந்தவெளி மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் படங் களுடன் ஒவ்வொரு மேடையின் பின்புறமும் ஒரேயொரு ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. மேடையையொட்டி கட்சிக்கொடிகள் பறந்தன. கட்சிஊழியர்கள் சிவப்பு டி-ஷர்ட்டுகளை அணிந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். இவ்விரு இடங்களிலுமே மேடைக்கான செலவு 2500 ரூபாய்க்கும் குறைவு என் பதைக் கேட்டபோது மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. “ஒவ்வொரு கூட்டத்திற்கும் மேடை, மைக் செட்டு அமைப்பு,

    நாற்காலிகள், மின்விளக்கு வசதிகள் என அனைத்துக்குமே 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவு செய்திருக் கிறோம்,’’ என்று வேட்பாளர் எஸ். ஸ்ரீதரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட் டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னதுரையும் கூறினார்கள். மேடையில் மின்விசிறியோ ஏர் கூலரோ கூட வைக்கப்பட வில்லை.தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி முடிவடைந்தபின் மாணிக் சர்க் காரை, கந்தர்வக்கோட்டை நிகழ்ச் சிக்காக அழைத்துச் செல்ல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் அவரை அணுகியபோது, கட்சி யின் மாவட்டக்குழுவுக்குச் சொந்தமான காரிலேயே கந்தர்வக் கோட்டை சென்றுவிடலாம் என்று மாணிக் சர்க்கார் கூறியிருக் கிறார். எனினும், “கட்சிக்குச் சொந்தமான கார் சரிவர இயங்காத நிலையில் இருந்ததால், டாக்சி ஏற்பாடு செய்து அவரை அழைத்து வந்தோம்,’’ என்று எம். சின்னதுரை தெரிவித்தார்.

    “கூட்டத்தினரிடையே அவர் பேசிக்கொண்டிருக்கையில்கூட பக்கத்திலிருந்த டீக் கடையி லிருந்துதான் 6 ரூபாய்க்கு டீ வாங்கி அவரிடம் கொடுத்தோம். அதைத்தான் அவர் பருகினார். அவருக்கு என்று நாங்கள் செலவு செய்தது அந்த 6 ரூபாய் மட்டுமே,’’ என்று அவர் மேலும் கூறினார்.திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போதும் பொது மக்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை. கூட்டம் நடைபெற்ற இடத்தில் கூட போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாணிக் சர்க்காருக்கு இசட்பிளஸ் செக்யூரிட்டி தரப்பட் டிருந்தபோதிலும், பாதசாரிகள் எவ்வித இடையூறுமின்றி மிகவும் சுதந்திரமாக பொதுக்கூட்ட மேடையினருகே வரைசெல்வதற்கு அனுமதிக்கப்பட் டிருந்தார்கள்.1998லிருந்து திரிபுராவின் முதல்வராகத் தொடர்ந்து பதவி வகித்து வரும் உருக்கு போன்றமனிதரான மாணிக் சர்க் கார், திருச்சி கூட்டம் முடிந்தபின் திருச்சி ரயில்நிலையத்தில் பிர முகர்கள் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சென்னை செல்லும் ராக் போர்ட் எக்ஸ் பிரசில் ஏறுவதற்கு முன் சாப் பிட்டது என்ன தெரியுமா? ஒரு சில இட்டிலிகள் மட்டுமே.

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 15

    இவள் பாரதி


    மரம்
    நாய்
    காகமென
    ஒவ்வொரு உயிரினமும்
    நிலவு
    விமானம்
    வண்டியென பலவும்
    நாளுக்கொன்றாய் அறிமுகமாகிறது (more…)

    Share
  • வர்ணம்

    அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து விட்டு எனக்கருகே நின்ற, எனக்கடுத்து வந்த சீமாட்டியிடம் என்னவென வினவிவிட்டு கவனித்தார். சில மணித்துளிகள் காத்திருப்பில் கழிந்தது. திரும்பி வந்தவரிடம் மீண்டும் கேட்க முற்பட்டேன்.

    “ஒரு நிமிடம்!” என அவர் மொழியில் தெரிவித்துவிட்டு, இன்னொரு கனவானை கவனிக்கச் சென்றார். அவரும் எனக்கடுத்து வந்தவரே! இன்னும் சில மணித்துளிகள் விழுந்து முடிந்திருந்தது. திரும்பி வந்தவர் மீண்டும் இன்னொரு கனவானை நோக்கிச் சென்றார்.

    பொறுமை இழந்தவனாய் உரக்க உரைத்தேன், “மன்னிக்கவும்.” நான் குறுக்கே நுழைந்து தொல்லை தருகிறேன் என்பது போன்று என்மீது கோபப்பார்வை வீசியவரிடம் தொடர்ந்து கூறினேன், “மன்னிக்கவும். நான் வந்து வெகுநேரம் ஆயிற்று.”

    “மன்னிக்கவும். கவனிக்கவில்லை!” என்றார்.

    “பரவாயில்லை. தங்கள் கவனத்தை கவரும் அளவிற்கு என் முகம் ‘பளிச்சென’ இல்லாததற்கு தாங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!” என்று உடனே கூறினேன் சிறுபுன்னகையுடன் – அவர் மொழியில்.

    யாரோ அறைந்ததுபோல் சில நொடிகள் உறைந்து போனார். பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் கைகளைப் பற்றி, “மன்னிக்கவும்!” என்றார் – பலமுறை!

    எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த மன்னிப்பு ‘என்னைக் காத்திருக்க வைத்ததற்கா?’ அல்லது ‘அவர் மொழியில் பேசியதற்காகவா’ அல்லது ‘நான் பளிச்சென இல்லை என்பதற்கா?’, அல்லது ‘அவரது இருண்ட ஆழ்மனம் எனக்கு தெரிந்துவிட்டது என நினைத்துக் கொண்டதாலா?’ எனக்கு இன்னமும் புரியவில்லை.

    வளர்ந்த நாடாயிருந்தாலென்ன? வளரும் நாடாயிருந்தாலென்ன? வளரா நாடாயிருந்தாலென்ன?

    ‘மனித மனங்கள் வளராத வரை!’.

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 29​

     

    சி. ஜெயபாரதன், கனடா

    [இறுதிக் காட்சி]

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -29​
    ​நாடகம்: சி. ஜெயபாரதன், கனடா
    வடிவமைப்பு : வையவன்
    ஓவியம் : ஓவித்தமிழ்

     

    [படக்கதை முடிவு]

     

    unnamed (1)

    unnamed (2)

    unnamed (3)

    தகவல் :

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and

    Picture Credit to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

     

     

    Share
  • முத்தமிழில் பாட வந்தேன்….

    கவிஞர் காவிரி மைந்தன்

    முத்தமிழில் பாட வந்தேன்….கவிஞர் பூவை செங்குட்டுவன்.. குன்னக்குடி வைத்யநாதன் வாணி ஜெயராம்…. ஏ.பி.நாகரஜன்

    மேல்நாட்டு மருமகள் என்கிற திரைப்படத்தை இயக்குனர் ஏ.பி.நாகரஜன் இயக்க.. இசையமைக்க குன்னக்குடி வைத்தியனாதன் பொறுப்பேற்க.. சங்கீதத்தில் கர்நாடக வித்வானாக.. விளங்கிய குன்னக்குடிக்கு இப்படம் எப்படி பொருந்தும் என்கிற வினாவை வில்முறித்த கதையாக்கி.. முத்திரை பதித்தார் என்றே சொல்ல வேண்டும். இசையில் மேல்நாட்டு மருமகள் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

    திரைக்கதையில் வருகின்ற கதாநாயகி ஆங்கில நாட்டிலிருந்து தமிழகம் வந்து நம் தமிழ் மொழியைக் கற்றுத்தேர்ந்து பாடகியாய் மேடையில் தோன்றி தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ்க்கடவுள் முருகனது சிறப்பையும் ஒருசேர பாராட்டி பண்ணிசைக்கும் பாடலாக..

    முருகன் Specialist என்று பட்டயம் தரலாம் என்னுமளவிற்கு சிறப்புற பாடல்கள் வழங்கி வந்த கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதிய வரிகளுக்கு மனதை மயக்கும் இசை குன்னக்குடி வைத்தியனாதன். சங்கீதக்கலாவாணி என்று சபைகளெல்லாம் புகழப்படும் திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் குரலில் இந்தப் பாடல் கந்தன் கருணையும் காட்டுகின்றது பாருங்கள்!

    மல்லிகை என் மன்னன் மயங்கும் என்கிற பாடலைப் பாடிய அதே குரல்.. முத்தமிழில் பாட வரும்போது கேட்டு மகிழாத உள்ளங்கள் ஏது? பூவையாரின் வரிகளில் உள்ள பொருள் யாவும் தமிழுக்குப் பெருமையும் கந்தனின் கருணையுமாய் தவழ்கின்ற கானமிது!

    வரம்பெற்ற மா கவிகள் வரைந்தளித்த பல்லாயிரம் செய்யுள்கள்.. மக்கள் மனதில் ஏற்படுத்த இயலாத தாக்கத்தை 16 வரிகளிலே வரையப்படும் ஒரு திரைப்பாடல் ஏற்படுத்தி விடுகிறது. எப்படி தெரியுமா? அதுவே இசையுடன் இணைந்த கவிதையின் பெருமை!!

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன் –

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன் –

    வேலனேன்றால்வீரம்வரும்
    கந்தனென்றால்கருணைதரும்
    வேலனேன்றால்வீரம்வரும்
    கந்தனென்றால்கருணைதரும்
    ஷண்முகனைசரணடைந்தால்
    சங்கீதம்பாடவரும்
    ஷண்முகனைசரணடைந்தால்
    சங்கீதம்பாடவரும்
    ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
    சுவாமிநாதனேசரவணனே
    ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
    சுவாமிநாதனேசரவணனே
    ஆறுமுகம்கொண்டுஆறுதல்தந்து
    கோடிநலம்காட்டும்குருபரனே

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன
    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்

    பாரதத்தாய்மடியினிலே
    பண்புடனேதவழுகிறேன்
    பாரதத்தாய்மடியினிலே
    பண்புடனேதவழுகிறேன்
    பழமையெல்லாம்நினைவூட்டும்
    பைந்தமிழில்பாடுகிறேன்
    பழமையெல்லாம்நினைவூட்டும்
    பைந்தமிழில்பாடுகிறேன்
    காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
    கவிதையாவுமேதனித்தமிழே
    காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
    கவிதையாவுமேதனித்தமிழே
    நாளும்முறையோடுநன்மைபலதேடி
    வாழவழிகூறும்திருக்குறளே முத்தமிழில்பாடவந்தேன்


    Muthamizhil Paada Vandhen – Melnattu Marumagal.flv
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (104)

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    உலகம் உருண்டு கொண்டிருக்கிறது. உருளும் இந்த உலகின் ஒவ்வொரு பாகத்திலும் வெவ்வேறு சமுதாய அமைப்புகள் வெவ்வேறு அங்கங்களாக வெவ்வேறு வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன..

    வித்தியாசமான வாழ்க்கைமுறைகளைக் கொண்டிருந்தாலும் அனைவருடைய அடிப்படைத் தேவைகளும் ஒரே இலக்கையே கொண்டிருக்கின்றன.

    உண்பதற்கு உணவு, உடுத்திக் கொள்வதற்கு உடை, பதுகாப்பாக வாழ்வதற்கு மனை இந்த அடிப்படை வாழ்வை நோக்கி முன்னேறிய மனிதவர்க்கம் தமது பாதுக்காப்பான வாழ்வை விடுத்து தமக்கு அடுத்த சந்ததியும் பாதுகாப்பாக வாழவேண்டும் எனும் எண்ணத்தில் தமது தேவைக்கு மேலாகச் சேமிக்கத் தலைப்பட்டார்கள்.

    இதுவே இன்றைய வாழ்க்கை முறையின் அத்தியாவசிய தேவைகளுக்கு வழிகோலி நிற்கிறது

    இத்தகைய சேமிப்பும் அச்சேமிப்புக்காக ஓயாது உழைக்கும் தன்மையும் வசையம் தானா ? எனும் கேள்வி எழும்போது இத்தேவைகளுக்கான தேடல்கள் இல்லையெனில் இன்று இவ்வுலக்கம் இத்தகைய விஞ்ஜான முன்னேற்றங்களை அடைந்திருக்குமா ? எனும் கேள்வியும் எழாமலில்லை.

    இங்கேதான் நியாயத்திற்கு அந்நியாய வரம்பினைக் கடக்கும் மனப்பான்மைக்குமான வேறுபாடு தலைதூக்குகிறது.

    தனக்கும் தனது தலைமுறைக்குமான தேடல்களை நியாய வரம்பினிற்குள் தேடும் மனிதனின் நியாயமான் ஆசைகள் அதன் எல்லையைக் கடக்கும் போது அங்கு அடுத்தவரின் தெவைகளை மதிக்காது தமக்க்கே அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை மெதுவாக உள்லே நுழைகிறது.

    என்னடா இது ? சக்தி இம்மடலில் வேத வியாக்கினகங்களை அள்ளி வீசுகிறானே என்று அங்கலாய்ப்பது புரிகிறது..

    மனைதனுடைய நியாயமான தேடல்களின் வரம்பு மீறல்களைக் கட்டுப்படுத்தி வாழ்க்கையின் அடிமட்டத்தில் சந்தர்ப்பம் இல்லாமையாலோ அன்றிக் காலத்தின் செயற்பாட்டினாலோ அல்லாடிக் கொண்டிருப்போருக்கான பாதுகாப்பை உத்தர்வாதப்படுத்துவதே உண்மையான மக்கள் அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது.

    இன்றைய இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைப்பது அவசியம் எனும் பாணியில் வேலையில்லாதோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகள் இவர்களின் பராமரிப்புக்காக உதவிகள் அரசாங்கக் கொள்கைகள் வாயிலாக அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அடிப்படைத் தத்துவங்கள் அனைத்து கட்சிகளினாலும் அபிப்பிராய பேதமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

    சரி அப்படியானல் எவ்விடத்தில் கட்சிகள் இக்கொள்கையில் வேறுபடுகின்றன என்ற கேள்வி எழுவது இயற்கையே !

    மக்களின் அடிப்படைத் தேவைகள் எவை ? அவை எத்தகைய மக்களின் பாவனைக்கு அளிக்கப்படுக்கின்றன? இவ்வரசாங்க உதவிகளைப் பெற்றுக் கொள்பவர்கள் உண்மையாகவே அதற்குரிய தகுதிகளைக் கொண்டவர்கள் தானா? எனும் கேள்விகளுக்கு எந்த அள்வில் உளரீதியான மனசாட்சிக்கு விரோதமில்லாத விடைகளைத் தேட்டுவதிலேயே இக்கட்சிகளின் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் தென்படுகின்றன.

    வேலையிலாதோருக்கு உதவிப்பணம் கொடுப்பதென்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உதவிப்பணத்தைப் பெற்று இலகுவாக பணி எதுவும் புரியாமலே வாழப்பழகிக் கொண்டவர்கள் தாம் வேலை தேடுவட்ய்ஹர்க்லு எதுவித முயற்சியும் எடுக்காமல் வாழ்வது என்பதும் எமக்குக் கண்கூடாகவே தெரிகிறது.

    இரண்டு உதாரணக்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மிகவும் கடுமையாக உழைத்து கிடைக்கும் பணத்துக்குள் தனது குடும்பத்தைப் பராமரித்து வருகிறார். மற்றொருவரே பல வருடங்கள் எதுவுதப் பணியுமே புரியாமல் அராசங்கம் கொடுக்கும் உதவிகளைக் கொண்டு தனது குடும்பத்தைப் பராமரித்துக் கொண்டு தனது வாழ்வை விடுமுறையில் வாழ்வது போலக் கழிக்கிறார்.

    வேலையிலாதவருக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணம் எங்கிருந்து வருகிறது கடுமையாக உழைக்கும் மற்றையவரின் வரிப்பணத்திலிருந்தே !

    இங்கேதான் பல கேள்விகள் எழுகின்றன. மனிதனின் அடிப்படை வசதிகள் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன ?

    மூன்று வேளை உண்ண உணவும், கெளரவமாக உடுத்திக் கொள்ள உடையும், வசிக்க வீடுமா இல்லை கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, பயணிக்க மோட்டார் வாகனம் இவையும் சேர்ந்ததா ?

    இன்றைய இங்கிலாந்தில் இக்கேள்வி மிகப்பிரதானமாக பலரின் மத்தியில் எழுந்துள்ளது.

    அதேவேளை எத்தனையோ முயற்சித்தும் எந்த வேலையும் கிடைக்காமல் அல்லல்படும் மனிதர்களும் இல்லாமல் இல்லை.

    2015ம் ஆண்டு மேமாதம் இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. இப்பொதுத் தேர்தலில் என்றுமில்லாதவாறு கட்சிகளுக்கிடையில் கடும் போட்டிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

    எந்தக் கட்சி ஆட்சியமைக்கப்போகிறது என்பது எந்தக் கட்சி அதிகாரக் கதிரையில் அமரப்போகிறது என்பது இந்தப் பிரச்சனையில் எந்தக் கட்சி மிகவும் அதிரடியான ஆனால் மக்களின் வரவேற்புப் பெறும் பிரகடனங்களில்  மிகவும் துணிச்சலாக முன்வைக்கப் போகிறது என்பதிலேயே தங்கியுள்ளது..

    இனிவரும் வாரங்களில் மேலும் பல சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி

    Share
  • வெள்ளி மலையும் குமரிக் கடலும்!

    சி. ஜெயபாரதன்image

    கொந்தளிக்கும் தென்குமரிக் கடலில்
    நித்தம் நித்தம் மூழ்கி

    முத்தும், பவளமும் தேடிக் 
    கோர்த்து, 
    கரையோரம் நீ தொடுத்த
    ஆரங்கள் பற்பல 
    அன்னையின் கழுத்தில்
    பொன்னொளி 
    வீசும் !
    முத்துக் குளித்தபின் நீ விடும்
    மூச்சலைகள்
    நெஞ்சின் முகிலாய் 
    கடல் கடந்து எந்தன் 
    பனிமலையை
    உருக்கிப் 
    பிழிகின்றன ! உன்
    ஆத்மாவின் கீதங்களைக் கேட்டு
    எதிரொலிக்க 
    மேரு மலை ஒன்று
    இன்னும்
    வேரிட வில்லை ! 
    வாடாமல், வதங்காமல்,
    இன்னும் வனப்பு மங்காது
    சூடாமலர்கள் 
    பூங்காவில் 
    தொடுப்பாரற்றுப்
    பாடிக் கொண்டுள்ளன !
    தடாகத்தில் 
    தாமரைப் பூக்கள்
    தண்ணீர் ஒட்டாது
    பட்டுப் பூச்சிகள்
    பள்ளி கொள்ள
    வீணைகளை மீட்டுகின்றன! 

    கரையான்கள்
    கட்டிய
    கண்ணாடி அறையி லிருந்து நீ
    சேதியுடன் பறக்க விட்ட
    தூதுப் புறாக்கள் என்
    நெஞ்சுக்குள்
    கூடு கட்டி விட்டன !
    மலைபோல் உயர்ந்தவ னென்று
    மடலில் எழுதினாய் !
    மட்டமாயினும்
    கடல் ஆழம் உடையது !
    படைக்கும் போது
    பல்லாங்குழி விளையாடும்
    பரமன்
    ஒருத்தி மடியில் எடுத்து
    அடுத்த மடியை நிரப்பினான் !
    குமரிக் கடலைத்
    தோண்டி
    இமயச் சிகரம் நிரப்பினான் !
    பனிக் கட்டிகளை உருக்கி
    குமரிப்
    பள்ளத்தை நிரப்பினான் !

    சமத்துவ வாதிகள் சம்மட்டியால்
    இமயச் சிகரத்தை
    மட்டப் படுத்தப்
    புறப்பட்டு விட்டார் !
    தராசின் தட்டுகள் ஏறி  இறங்கி
    சமமாக ஓய்ந்து நிற்கும்
    அமைதி யுகத்துக்கு
    நாமிருவரும்
    பூமியில் காத்திருப்போம் !
    காலக் குயவன் ஆழியைச் சுற்றி
    கறுப்புப் பானைகளைப்
    படைத்தான்!
    வெள்ளைப் புடவை
    கட்டிக் கொண்டு
    காக்கைகள்
    கண்ணாடி முன் கனவு காணும் !
    வானில் பறக்க
    உந்திப் பார்க்கும் ஆமைகள் !

    குதிரையை வால் புறம் ஓட்டும்
    குருமார்கள்  உன்
    மூளையைச் சலவை செய்து
    நெஞ்சை மிதித்து
    கை, கால்களில் கட்டிய விலங்கை
    உடைக்க
    கையில் எப்போதும்
    பேனா உளியை
    வைத்திருக்கிறாய் ! எனது
    அந்தரங்கக் கொலுவில்
    உன் கை செய்த பதுமைகள்தான்
    அமர்ந்துள்ளன !
    நெஞ்சில் அரங்கேறும் உன் பரதக்கலை
    முடியும் போதென்
    கடிகாரமும் நின்று விடும்!
    இதயக் கோயிலில் நெய் ஊற்றி நீ
    எரிய விட்ட விளக்கை
    வாசலில் நிற்கும்
    எமன் ஊதி விடுவதற்குள்
    வைரக் கற்களை நான்
    செதுக்கிப்
    பட்டை தீட்ட வேண்டும் !

    கடலோரம் ஒதுங்கும் சிப்பிகளைத்
    திறந்த போது,
    உன் முத்துகள் தான்
    என் கண்ணில் தெரிந்தன !
    மின்வலையில் சிக்கிய மீன்
    தப்பி ஓடி
    எப்படிக் கண்முன் வந்தது ?
    கலைச்செல்வி கழுத்து ஆரங்களில்
    ஒன்றை எடுத்து
    இன்று ஏவும் புறாவின் காலில்
    கட்டி விடுவாயா ?
    கடல் உயரும், மலை தாழுமெனப்
    பொறுத்தது போதும் தோழீ !
    கடல் பொங்கி
    சுனாமி எழும் போது
    பேனாவுடன் தேடி வா !
    மலை சரியும் போது
    நான் மையுடன் வருவேன்
    பேனாவுக்கு !

    Share
  • வாழ்க்கை நலம் – 56

    குன்றக்குடி அடிகள்

    56. அன்பு ஈனும் ஆர்வம்

    மானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் – ஆற்றலுடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது.

    இந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக! தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகினால்தான் அன்பு வளரும்; உறவு வளரும். “ஒத்தறிவான்” என்று திருக்குறள் கூறும். மற்றவர் தம்முடன் ஒத்துப்போக வேண்டும் என்றே விரும்புவர். இவர்களின் ஆன்மாவின் உயிர்ப்பாகிய அன்பு இல்லை.

    ஆன்மா எப்போதும் மற்றவர்களை நோக்கியே விரியும். உடல் எப்போதும் சுயநலத்தையே நாடும். ஆன்மாவின் ஆதிக்கத்தில் உடல் இயங்கினால் அன்பு, உறவு, தியாகம் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாது உடலின் ஆத்திக்கத்தில் ஆன்மா அடங்கிக் கிடந்தால் தன்னலம் மிக்கே விளங்கும்.

    தூய அன்பு விரிவடையும். தம்முடன் பழகுவோரின் இயல்பறிந்து பங்கறிந்து பழகுந்திறனில் வளரும். அவர் தம் தேவையறிந்து உதவும். அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்பு முதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை. “அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி” என்பது சேக்கிழார் திருவாக்கு.

    ஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை – உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.

    நட்புக்கு மறுபெயர் தோழமை. நட்பு இதயத் தூய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் “சிறப்பு” என்று சிறப்பித்துக் கூறுகிறார். “சிறப்பு” என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு? எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு!

    “அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு” (திருக்குறள் – 74)

    இத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச் செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.

    அன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Aptitude என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • திருமால் திருப்புகழ் (58)

     

    கிரேசி மோகன்

    crazy
    பஞ்சமுக ஆஞ்சனேய பெருமாள்….
    ————————————————————————————————————-

    தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
    தந்ததன தந்ததன -தந்ததான…..

    ————————————————————————————————————————-
    இந்தவுடல் கந்தையைஅ கந்தைமன பந்தமென,

    நன்றி: டிவி. வரதராஜன்
    நன்றி: டிவி. வரதராஜன்

    கண்டறிய வந்தவழி -சென்றுமூலம்,
    ஒன்றுமிலை என்றுணர, அஞ்சிலொரு குன்றமதில்
    தங்கியுரை எங்கள்குரு, -வெங்கடேசர்

    உந்துவழி சென்றிவனி ருந்தயிடம், உந்தனெழில்
    பொங்குநதி சங்கமஅ -ரங்கமாக
    தந்தருளும், சங்கரனின் அன்புமகன் பந்தளனை
    திங்களிறு ஐந்துதினம் -பம்பைதீரம்

    உந்தியில்சு மந்தவன மங்கையென வந்தநர
    சிங்கமுக செந்திகிரி -சங்கபாணி,
    சங்கரிசு மங்கலியின் தந்தமகன் தம்பிகுகன்
    மங்கையர்கள் தந்தைமுறை -வந்தமாமன்,

    எந்தைரகு நந்தனுயிர் நண்பனவன் நங்கையிடம்
    கண்டுவர, லங்கைநகர் -சென்றுமீளும்.
    சுந்தரன்சிவ னன்புமுக இந்திரியம் வென்றபதி
    மந்தவெளி பஞ்சமுக -அஞ்சனேயா
    ——————————————————————————

     

     

     

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (57)

    கிரேசி மோகன்

     krishna_india_authentic_by_lalitkr007

    தான தன தானத் தான தன தானத்
    தான தன தானத் -தனதான….

    ——————————————————————————————————————–

    “ஞான வழி தேடிச் சோணை மலை நாடிப்

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன

    போன ரம ணேசத் -தவராஜன்,
    போல யம தூதப் பாச வலை மீளப்,
    பாழும் உல கேகித் -தவியாது,
    நானொ ழிவி சாரத் தால றிசி வாயத்
    தேனொ ழுக, மாயப் -புலநாகம்
    வாயு மிழு ஆலத் தாலு டலம் ரோகத்
    தாலி டும யானத் -திடைசேரா,
    மோன அனு பூதிக் கூட ருள வாஅக்
    கோகு லமு லாவிப் -பசுமேய
    பீலி மயில் சூடிப், பீத கமு ராசப்,
    பீடு நடை யோடுக் -குழலூதி,
    கானில் வெயி லேறப், ப்ராணி நலம் பேணக்,
    கூடி உற வாடிப், -புவிவாழ்வில்
    பால னுரு வாயப் பாக வத லீலைக்
    காக, அவ தாரப் -பெருமாளே”
    ———————————————————————————————————

    படத்திற்கு நன்றி :

     

    http://lalitkr007.deviantart.com/art/krishna-india-authentic-104817999

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 2

     

    வேதக் கடல்

    சு.கோதண்டராமன்

    வேத இலக்கியம் என்பது கடல் போன்றது. நான்கு வேதங்கள், அவை ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என நான்கு கிளைகள், இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் அங்கங்களான சிக்ஷா, சந்தஸ், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜ்யோதிஷம், அத்துடன் இதிகாச, புராணங்களையும், ஸ்மிருதிகளையும் படித்து முடித்தால் தான் ஓரளவுக்கு இந்து சமயத்தை அறிந்து கொள்ள முடியும். இத்தனையும் படித்துத் தெரிந்து கொள்ள முற்படுவது பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்து விடுவேன் என்று ஒரு பூனை சொல்வதற்கு ஒப்பாகும். இவற்றை முழுமையாகக் கற்பதற்கு ஒரு ஆயுள் போதாது என்பதைப் பாமரன் அறிந்தான். எனவே வேதத்தின் சாரம் போன்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டால் முழு வேதத்தையும் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று நம்பினான்.

    ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களும் வேதத்துக்கு விரோதமாக இருந்தால் வேதம் சொல்வதே இறுதித் தீர்ப்பு என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள். மேலும், வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்துகொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே”  என்று பாரதியும் கூறுகிறார். எனவே இந்து சமயத்தின் வேரை அறிந்து கொள்ள வேதத்தை மட்டும் படித்தாலே போதுமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

    வேதத்தில் நான்கு பாகங்கள் உள்ளன – ஸம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று. அவற்றில் ஸம்ஹிதை ஒன்று தான் தெய்வ அருளால் ரிஷிகளின் வாக்கில் தோன்றிய அருட்பாடல்கள். மற்ற பாகங்கள் எல்லாம் ஸம்ஹிதைப் பகுதிக்கு பிற்கால அறிஞர்கள் தந்த  விளக்கங்களே. பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் எழுதியவர்கள் தங்கள் கருத்தை, விருப்பத்தை ஒட்டியே ஸம்ஹிதைக்கு வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தவர்களது கருத்தினால் பாதிக்கப்படாமல் வேதத்தின் சுய ரூபத்தைத் தரிசிக்க விரும்பின அவனுக்கு வழிகாட்டியது பாரதியின் கூற்று.

    untitled 2

                உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைக்கப்பட்டன. ஸம்ஹிதைகள் என்றும் மந்திரங்கள் என்றும் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்பது மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம். —மகாகவி பாரதி

    எனவே பச்சை வேதமாகிய ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது. அதிலும் நான்கு இருக்கின்றனவே. படித்துப் பார்த்த போது, சாம ஸம்ஹிதையில் 1800 ரிக் ஸம்ஹிதைப் பாடல்களும் இதர துதிகள் 75உம் இருப்பது தெரிய வந்தது. அந்த 75 இலும் மற்ற 1800 பாடல்களில் சொல்லப்படாத சிறப்பான எதுவும் கூறப்படவில்லை. சாம வேதத்தில் உள்ள மந்திரங்களைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை, ரிக் வேத சூக்தங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முதல் மந்திரங்களை எடுத்துத் தொகுக்கப் பட்டவையாக இருப்பதைப் பார்க்கிறோம்.

                சாமம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், அது ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவமாகவே இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற மூன்று ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தான்.

                அதர்வ வேதம் காலத்தால் மிகப் பிற்பட்டது. (இது வியாசரால் தொகுக்கப்பட்டதா அல்லது அவருக்குப் பிற்காலத்தியதா என்பது தெரியவில்லை. பண்டைய இலக்கியங்களில் முதல் மூன்று வேதங்களே குறிப்பிடப்பட்டிருப்பதால் இதை அறிகிறோம்.) இதில் உள்ள பாடல்களில் 50 சதவீதம் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்துடன் பகைவரை அழித்தல், விஷக் கடிக்கு மந்திரித்தல், நோய்க்கு மருத்துவம் முதலிய ஆன்மிக ரீதியாகக் குறைந்த முக்கியத்துவம் உடைய விஷயங்களே காணப்படுவதால் அதுவும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

    யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு வகை உண்டு. சுக்ல யஜுர் என்பது முற்றிலும் செய்யுள் வடிவில் உள்ளது. கிருஷ்ண யஜுர் பிராமணம் என்று அழைக்கப்படும் உரைநடையும் மந்த்ரம் என்று அழைக்கப்படும் செய்யுளும் கொண்டது. இந்த இரண்டு வகை மந்திரங்களிலும் ரிக் வேதப் பாடல்கள் பெருமளவில் கலந்துள்ளன. எனவே மற்ற வேதங்களை விடக் காலத்தால் முந்தியது ரிக் வேதம். மற்ற வேதங்களின் தாய் என்றும் சொல்லலாம்.

    காலத்தால் பிற்பட்ட யஜுர் வேதம் ரிக் வேதத்தில் சொல்லாமல் விடுபட்டுப் போனவற்றைச் சொல்கின்றதா அல்லது ரிக்கில் சொல்லப்பட்டதையே விளக்கமாகச் சொல்கின்றதா என்பது ஒரு கேள்வி. எப்படி இருந்தாலும் தாய் வேதத்தின் கருத்துக்கு முரண்பாடான செய்திகள் அதில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.

    untitled 1

    இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது யஜுர்வேதம் ரிக்குகளை வேள்விக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைத்துள்ளது என்பதை அறிகிறோம். உதாரணமாக,

    अप्स्वन्तरमृतप्सु  भेषजमपामुत  प्रशस्तये । देवा  भवत  वाजिन:  ரிக் ஸம். 1.23.19

    நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்களே வலிமை பெறுங்கள்.

    இந்த மந்திரம் யஜுர் வேதத்தில் சற்றே உரு மாறி வருகிறது.

    अप्स्वन्तरमृतमप्सु  भेषजमपामुत  प्रशस्तिष्वश्वा  भवथ  वाजिन:  தைத்ரிய ஸம்ஹிதை 1.7.74

    நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரின் புகழ்ச்சிகளில், குதிரைகளே, வலிமை பெறுங்கள்.

    தேவர்கள் என்பதற்குப் பதிலாகக் குதிரைகள் என்ற சொல் இடம் பெறுகிறது.   இதைத் தொடர்ந்து வாஜபேய யாகம் செய்வது குறித்த செய்திகள் தொடர்கின்றன. எனவே யாகம் செய்வதற்கேற்ப ரிக் மந்திரத்தை உருமாற்றிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது.

    யஜுர் வேதத்தின் பெரும்பாலான பிராமண(உரைநடை)ப் பகுதிகளைப் படித்துப் பார்த்தால் அவை அருள் நிலையில் எழுதப்பட்டதாக இராமல், புராணக் கதைகளைக் கூறுவதாகவும், வேள்வி முறையை விளக்குவதற்கே எழுதப்பட்டனவாகவும் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு இந்த உரைநடையைப் பாருங்கள்.

                யஜுர் 2.3.5 – பிரஜாபதிக்கு 33 பெண்கள். அவர்களை அவர் சோமனுக்குக் கொடுத்தார். அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான். அவர்கள் கோபித்துக் கொண்டு திரும்பினர். சோமன் தொடர்ந்து சென்று அவர்களைத் தருமாறு கேட்டான். பிரஜாபதி தரவில்லை. அவர் எல்லோரையும் சமமாக நடத்துவேன் என்று சத்தியம் செய் என்றார். அவன் அவ்வாறு செய்தான். அவர் பெண்களைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான்.  அவனுக்கு நோய் வந்துவிட்டது. அவன் அவர்களை மரியாதையுடன் அணுகினான். அவர்கள் சொன்னார்கள், எங்கள் எல்லாரையும் சமமாக நடத்து என்று சொல்லிவிட்டு அவர்கள் அவனுக்காக ஆதித்யர்களுக்கு யாகம் செய்தனர். அவர்கள் அவனை நோயிலிருந்து மீட்டனர்.

              யஜுர் 6.3.10 – வேள்வியில் பசுவை அர்ப்பணித்து விட்டு யஜமானன் அதன் மேல் ஒரு புரோடாசத்தை (அப்பத்தை) போடுகிறான். நிச்சயமாக அவன் அதன் அதனுடைய கொழுப்பைக் கொண்டு யாகம் செய்கிறான். வபையைக் கொண்டு யாகம் செய்து முடித்தபின், அவன் புரோடாசத்தைக் கொண்டு யாகம் செய்கிறான். புரோடாசமே வலிமை. நிச்சயமாக அவன் பசுவின் மத்ய பாகத்தில் வலிமையைப் போடுகிறான். நிச்சயமாக, அவன் பசுவின் உடலில் வெட்டப்பட்ட பாகத்தை மூடுகிறான்………. 

                எனவே, யஜுர் வேதம் மூல வேதத்தின் கருத்தைத் திசை திருப்பி அழைத்துச் செல்வது அறியப்படுகிறது. அதை நீக்கிவிட்டு ரிக் ஸம்ஹிதையை மட்டும் படித்தாலே வேதத்தின் உண்மையான சொரூபத்தை அறியலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

     படங்களுக்கு நன்றி:

    http://sidthan.blogspot.in/2013/07/blog-post_5797.html

    Share
  • காட்சி – குறும் கதை

    எஸ். சுதாகர்

    நாங்கள் மலை அடிவாரத்திற்குப் போனபோது விடிந்திருந்தது. வெளியே சற்றுக் குளிரும் பனிப்புகாருமாக இருந்தது. கொஞ்ச நேரம் பஸ்சிற்குள்ளே இருந்துவிட்டு மலை ஏறத் தொடங்கினோம். ‘தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்’  அப்பா தேவாரம் பாடிக் கொண்டு படிக்கட்டுகளின் வழியே நடந்தார். அம்மாவும் அக்காவும் நானும் அவரைப் பின் தொடர்ந்தோம். அத்தான் தன் நண்பர்களுடன் எங்களுக்கும் பின்னாலே வந்து கொண்டிருந்தார். எல்லாரது நெற்றியிலும் திருநீறு சந்தணம்.

    sudha

    “நேற்று சிவராத்திரி என்ன சிறப்பாக நடந்திருக்கும். சே! பாக்க முடியால் போட்டுதே!” என்று அம்மா மனம் வருந்தினார்.

    திருக்கோணேஸ்வரம் ஆலயம் ஈழத்தின் கிழக்கேயுள்ளது. மனுராசன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. பின் இக்கோயிலை முதலாம் குளக்கோட்டன் என்ற சோழ அரசன் புனருத்தாரணம் செய்தான். இங்குள்ள சிவலிங்கம் சிவபக்தனாகிய இராவணனால் ஸ்தாபிக்கப்பட்டது. போத்துக்கேயரினால் இக்கோயில் அழிக்கப்பட்டபோது விக்கிரகங்களை தமிழர்கள் நிலத்துக்குள் புதைத்து வைத்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு அதே இடத்தில் கோயில் மீளவும் கட்டப்பட்டது. பின்னர் கிணறு வெட்டும்போது விக்கிரகங்களைக் கண்டெடுத்த மக்கள் கோயிலில் அவற்றை வைத்தார்கள். அம்மா கோவிலைப்பற்றிய விளக்கம் தந்தார்.

    sudha1

    இடையே மான்கள் கூட்டமொன்று மலையின் சரிவிற்கு இடப்புறமாக புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தே ‘ஆமிக் காம்ப்’ ஒன்று புதிதாக முளைத்திருந்தது. கோனேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை பாதுகாப்புவலையமாக இருப்பதால் பாதுகாப்புப் படைகள் காவல் செய்கின்றனர். பள்ளிகூடப் பிள்ளைகளும் பெரியவர்களும் தேவாரம் பாடிக்கொண்டு மலையிலிருந்தும் கீழிறங்கி வந்து கொண்டிருந்தனர். மேலே ஏற ஏற கோபுரம் தெரிகிறது. தூரத்தே மூன்று புறமும் ஆர்ப்பரிக்கும் கடல். நடுவே உயர்ந்து நிற்கின்றது குன்று. பெரிய மரங்கள் சடை விரித்திருந்தன. மரங்களிலும் கோயிலிலும் குரங்குகள் தாவிப் பாய்ந்தன. இயற்கை அழகு எங்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அற்புதமான காட்சி.

    மலையின் கிழக்குப்புறத்தே இராவணன்வெட்டு ‘வி’ போன்ற உருவில் மலையைப் பிளந்து கொண்டு வாய் விரித்திருந்தது. நாங்கள் அதை வேடிக்கப் பார்த்துக் கொண்டு நின்றோம். “முதலிலை பூசையைப் பாப்பம்.  பிறகு ஆறுதலா எல்லாத்தையும் சுத்திப் பாக்கலாம்” என்றார் அப்பா. அவர் சொன்னால் சொன்னதுதான்.

    கோயிலில் பூசை முடிந்தது. இராவணன்வெட்டை பார்க்க  ஆச்சரியமாக இருந்தது. உள்ளே எட்டிப் பார்க்கப் பயமாக இருந்தது. அதற்குள் கற்களைப் பொறுக்கி எறிந்தோம். ஒவ்வொரு கற்களும் கீழே நீரில் விழுந்ததாகத் தெரியவில்லை. அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்து அதையும் எறிந்து பார்த்தோம். என்ன ஆச்சரியம்! பாதி வழி போன கல்லு திடீரென்று மாயமாக மறைந்தது. “பாறை கீழ் நோக்கிப் போகப் போக உள்நோக்கி வளைவதால் கற்கள் போய் தண்ணீரில் விழுவதை எங்களால் பார்க்க முடிவதில்லை” என்று அத்தான் விளக்கம் சொன்னார். அவர் பள்ளிக்கூடத்தில் ‘சயன்ஸ்’ படிப்பிக்கினார்.

    திடீரென அங்கே ஒரு கிழவர் தோன்றினார். அவர் மெல்ல மெல்ல அடியெடுத்து எங்களை நோக்கி வந்தார். கிழவரின் கைகள் நடுங்கின. நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். அவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாணயக்குற்றிகளைக் கொடுத்தார். பித்தளை போன்ற உலோகத்திலான பெரிய வட்ட நாணயங்கள். “இவை இராவணன் காலத்து நாணயங்கள். இவற்றை தண்ணீரிலே எறிந்து பாருங்கள்” என்று மெல்லிய குரலில் சொன்னார். ஒவ்வொன்றாக அவற்றை நீரினுள் எறிந்தோம். என்ன ஆச்சரியம்! எல்லாமே நீரினில் விழுந்து தண்ணீர் தெறித்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அத்தானின் விஞ்ஞான விளக்கம் பொய்த்துப் போயிற்று. அத்தானும் எறிந்து பார்த்து ஆச்சரியப்பட்டார். ஞாபகத்திற்காக இன்னுமொரு நாணயத்தை அந்த முதியவரிடம் பெற்றுக் கொள்ள விரும்பினேன். “ஐயா பெரியவரே! இன்னுமொரு நாணயத்தை எனக்குத் தருவீர்களா?” என்று கேட்டுக் கொண்டே அவர் நின்ற பக்கம் திரும்பினேன். அவரைக் காணவில்லை.

    Share