அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து விட்டு எனக்கருகே நின்ற, எனக்கடுத்து வந்த சீமாட்டியிடம் என்னவென வினவிவிட்டு கவனித்தார். சில மணித்துளிகள் காத்திருப்பில் கழிந்தது. திரும்பி வந்தவரிடம் மீண்டும் கேட்க முற்பட்டேன்.
“ஒரு நிமிடம்!” என அவர் மொழியில் தெரிவித்துவிட்டு, இன்னொரு கனவானை கவனிக்கச் சென்றார். அவரும் எனக்கடுத்து வந்தவரே! இன்னும் சில மணித்துளிகள் விழுந்து முடிந்திருந்தது. திரும்பி வந்தவர் மீண்டும் இன்னொரு கனவானை நோக்கிச் சென்றார்.
பொறுமை இழந்தவனாய் உரக்க உரைத்தேன், “மன்னிக்கவும்.” நான் குறுக்கே நுழைந்து தொல்லை தருகிறேன் என்பது போன்று என்மீது கோபப்பார்வை வீசியவரிடம் தொடர்ந்து கூறினேன், “மன்னிக்கவும். நான் வந்து வெகுநேரம் ஆயிற்று.”
“மன்னிக்கவும். கவனிக்கவில்லை!” என்றார்.
“பரவாயில்லை. தங்கள் கவனத்தை கவரும் அளவிற்கு என் முகம் ‘பளிச்சென’ இல்லாததற்கு தாங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!” என்று உடனே கூறினேன் சிறுபுன்னகையுடன் – அவர் மொழியில்.
யாரோ அறைந்ததுபோல் சில நொடிகள் உறைந்து போனார். பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் கைகளைப் பற்றி, “மன்னிக்கவும்!” என்றார் – பலமுறை!
எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த மன்னிப்பு ‘என்னைக் காத்திருக்க வைத்ததற்கா?’ அல்லது ‘அவர் மொழியில் பேசியதற்காகவா’ அல்லது ‘நான் பளிச்சென இல்லை என்பதற்கா?’, அல்லது ‘அவரது இருண்ட ஆழ்மனம் எனக்கு தெரிந்துவிட்டது என நினைத்துக் கொண்டதாலா?’ எனக்கு இன்னமும் புரியவில்லை.
வளர்ந்த நாடாயிருந்தாலென்ன? வளரும் நாடாயிருந்தாலென்ன? வளரா நாடாயிருந்தாலென்ன?
“மாதவன் இளங்கோ”, தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ‘இயந்திரவியல்’ துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர்.
கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர்.
வல்லமை இணைய இதழின் ‘வல்லமையாளர்’ விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் – ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ‘இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ’ என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு – ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.