இலக்கியம்கவிதைகள்

சிறுகை அளாவிய கூழ் – 15

இவள் பாரதி


மரம்
நாய்
காகமென
ஒவ்வொரு உயிரினமும்
நிலவு
விமானம்
வண்டியென பலவும்
நாளுக்கொன்றாய் அறிமுகமாகிறது
அம்மாகுட்டிக்கு
புதிதாய் அறிமுகமாகும்
ஒவ்வொன்றையும்
மீண்டும் பார்க்கச் செல்லும்போது
அறிமுகமாகின்றன
புதிது புதிதாய்
பூக்கள், காய்கள், கனிகளென..
ஆச்சர்யங்களாலான
அவளுலகில் உலவுகிறேன்
கைப்பிடித்து அறிமுகப்படுத்துகிறாள்
நாளுக்கொன்றாய்
புதிய ஆச்சர்யங்களை
———–
புதிய ஆடை உடுத்தினால்
அதிலிருக்கும்
தையல் வேலைப்பாடுகளையும்
படுத்திருக்கும்போது
பாயின் பின்னல்குச்சிகளையும்
பிஞ்சுவிரல்களால் பிரித்தெடுக்கிறாள்
அடுக்கியிருக்கும்
புத்தகங்களையும்
ஆடைகளையும்
கலைத்துப் போடுகிறாள்
அவளுறங்கும் சமயங்களில்
அடுக்கிவைக்கப்படுமவை
மறுநாளும் கலையும்..
சுவாரசியங்கள்தான்
பெரியவர்களின் அடுக்குதலும்
குழந்தையின் கலைத்தலும்

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comment here