வேதக் கடல்

சு.கோதண்டராமன்

வேத இலக்கியம் என்பது கடல் போன்றது. நான்கு வேதங்கள், அவை ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என நான்கு கிளைகள், இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் அங்கங்களான சிக்ஷா, சந்தஸ், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜ்யோதிஷம், அத்துடன் இதிகாச, புராணங்களையும், ஸ்மிருதிகளையும் படித்து முடித்தால் தான் ஓரளவுக்கு இந்து சமயத்தை அறிந்து கொள்ள முடியும். இத்தனையும் படித்துத் தெரிந்து கொள்ள முற்படுவது பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்து விடுவேன் என்று ஒரு பூனை சொல்வதற்கு ஒப்பாகும். இவற்றை முழுமையாகக் கற்பதற்கு ஒரு ஆயுள் போதாது என்பதைப் பாமரன் அறிந்தான். எனவே வேதத்தின் சாரம் போன்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டால் முழு வேதத்தையும் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று நம்பினான்.

ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களும் வேதத்துக்கு விரோதமாக இருந்தால் வேதம் சொல்வதே இறுதித் தீர்ப்பு என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள். மேலும், வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்துகொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே என்று பாரதியும் கூறுகிறார். எனவே இந்து சமயத்தின் வேரை அறிந்து கொள்ள வேதத்தை மட்டும் படித்தாலே போதுமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

வேதத்தில் நான்கு பாகங்கள் உள்ளன – ஸம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று. அவற்றில் ஸம்ஹிதை ஒன்று தான் தெய்வ அருளால் ரிஷிகளின் வாக்கில் தோன்றிய அருட்பாடல்கள். மற்ற பாகங்கள் எல்லாம் ஸம்ஹிதைப் பகுதிக்கு பிற்கால அறிஞர்கள் தந்த  விளக்கங்களே. பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் எழுதியவர்கள் தங்கள் கருத்தை, விருப்பத்தை ஒட்டியே ஸம்ஹிதைக்கு வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தவர்களது கருத்தினால் பாதிக்கப்படாமல் வேதத்தின் சுய ரூபத்தைத் தரிசிக்க விரும்பின அவனுக்கு வழிகாட்டியது பாரதியின் கூற்று.

untitled 2

            உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைக்கப்பட்டன. ஸம்ஹிதைகள் என்றும் மந்திரங்கள் என்றும் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்பது மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம். மகாகவி பாரதி

எனவே பச்சை வேதமாகிய ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது. அதிலும் நான்கு இருக்கின்றனவே. படித்துப் பார்த்த போது, சாம ஸம்ஹிதையில் 1800 ரிக் ஸம்ஹிதைப் பாடல்களும் இதர துதிகள் 75உம் இருப்பது தெரிய வந்தது. அந்த 75 இலும் மற்ற 1800 பாடல்களில் சொல்லப்படாத சிறப்பான எதுவும் கூறப்படவில்லை. சாம வேதத்தில் உள்ள மந்திரங்களைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை, ரிக் வேத சூக்தங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முதல் மந்திரங்களை எடுத்துத் தொகுக்கப் பட்டவையாக இருப்பதைப் பார்க்கிறோம்.

            சாமம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், அது ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவமாகவே இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற மூன்று ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தான்.

            அதர்வ வேதம் காலத்தால் மிகப் பிற்பட்டது. (இது வியாசரால் தொகுக்கப்பட்டதா அல்லது அவருக்குப் பிற்காலத்தியதா என்பது தெரியவில்லை. பண்டைய இலக்கியங்களில் முதல் மூன்று வேதங்களே குறிப்பிடப்பட்டிருப்பதால் இதை அறிகிறோம்.) இதில் உள்ள பாடல்களில் 50 சதவீதம் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்துடன் பகைவரை அழித்தல், விஷக் கடிக்கு மந்திரித்தல், நோய்க்கு மருத்துவம் முதலிய ஆன்மிக ரீதியாகக் குறைந்த முக்கியத்துவம் உடைய விஷயங்களே காணப்படுவதால் அதுவும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு வகை உண்டு. சுக்ல யஜுர் என்பது முற்றிலும் செய்யுள் வடிவில் உள்ளது. கிருஷ்ண யஜுர் பிராமணம் என்று அழைக்கப்படும் உரைநடையும் மந்த்ரம் என்று அழைக்கப்படும் செய்யுளும் கொண்டது. இந்த இரண்டு வகை மந்திரங்களிலும் ரிக் வேதப் பாடல்கள் பெருமளவில் கலந்துள்ளன. எனவே மற்ற வேதங்களை விடக் காலத்தால் முந்தியது ரிக் வேதம். மற்ற வேதங்களின் தாய் என்றும் சொல்லலாம்.

காலத்தால் பிற்பட்ட யஜுர் வேதம் ரிக் வேதத்தில் சொல்லாமல் விடுபட்டுப் போனவற்றைச் சொல்கின்றதா அல்லது ரிக்கில் சொல்லப்பட்டதையே விளக்கமாகச் சொல்கின்றதா என்பது ஒரு கேள்வி. எப்படி இருந்தாலும் தாய் வேதத்தின் கருத்துக்கு முரண்பாடான செய்திகள் அதில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.

untitled 1

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது யஜுர்வேதம் ரிக்குகளை வேள்விக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைத்துள்ளது என்பதை அறிகிறோம். உதாரணமாக,

अप्स्वन्तरमृतप्सु  भेषजमपामुत  प्रशस्तये । देवा  भवत  वाजिन:  ரிக் ஸம். 1.23.19

நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்களே வலிமை பெறுங்கள்.

இந்த மந்திரம் யஜுர் வேதத்தில் சற்றே உரு மாறி வருகிறது.

अप्स्वन्तरमृतमप्सु  भेषजमपामुत  प्रशस्तिष्वश्वा  भवथ  वाजिन:  தைத்ரிய ஸம்ஹிதை 1.7.74

நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரின் புகழ்ச்சிகளில், குதிரைகளே, வலிமை பெறுங்கள்.

தேவர்கள் என்பதற்குப் பதிலாகக் குதிரைகள் என்ற சொல் இடம் பெறுகிறது.   இதைத் தொடர்ந்து வாஜபேய யாகம் செய்வது குறித்த செய்திகள் தொடர்கின்றன. எனவே யாகம் செய்வதற்கேற்ப ரிக் மந்திரத்தை உருமாற்றிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது.

யஜுர் வேதத்தின் பெரும்பாலான பிராமண(உரைநடை)ப் பகுதிகளைப் படித்துப் பார்த்தால் அவை அருள் நிலையில் எழுதப்பட்டதாக இராமல், புராணக் கதைகளைக் கூறுவதாகவும், வேள்வி முறையை விளக்குவதற்கே எழுதப்பட்டனவாகவும் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு இந்த உரைநடையைப் பாருங்கள்.

            யஜுர் 2.3.5 – பிரஜாபதிக்கு 33 பெண்கள். அவர்களை அவர் சோமனுக்குக் கொடுத்தார். அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான். அவர்கள் கோபித்துக் கொண்டு திரும்பினர். சோமன் தொடர்ந்து சென்று அவர்களைத் தருமாறு கேட்டான். பிரஜாபதி தரவில்லை. அவர் எல்லோரையும் சமமாக நடத்துவேன் என்று சத்தியம் செய் என்றார். அவன் அவ்வாறு செய்தான். அவர் பெண்களைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான்.  அவனுக்கு நோய் வந்துவிட்டது. அவன் அவர்களை மரியாதையுடன் அணுகினான். அவர்கள் சொன்னார்கள், எங்கள் எல்லாரையும் சமமாக நடத்து என்று சொல்லிவிட்டு அவர்கள் அவனுக்காக ஆதித்யர்களுக்கு யாகம் செய்தனர். அவர்கள் அவனை நோயிலிருந்து மீட்டனர்.

          யஜுர் 6.3.10 – வேள்வியில் பசுவை அர்ப்பணித்து விட்டு யஜமானன் அதன் மேல் ஒரு புரோடாசத்தை (அப்பத்தை) போடுகிறான். நிச்சயமாக அவன் அதன் அதனுடைய கொழுப்பைக் கொண்டு யாகம் செய்கிறான். வபையைக் கொண்டு யாகம் செய்து முடித்தபின், அவன் புரோடாசத்தைக் கொண்டு யாகம் செய்கிறான். புரோடாசமே வலிமை. நிச்சயமாக அவன் பசுவின் மத்ய பாகத்தில் வலிமையைப் போடுகிறான். நிச்சயமாக, அவன் பசுவின் உடலில் வெட்டப்பட்ட பாகத்தை மூடுகிறான்………. 

            எனவே, யஜுர் வேதம் மூல வேதத்தின் கருத்தைத் திசை திருப்பி அழைத்துச் செல்வது அறியப்படுகிறது. அதை நீக்கிவிட்டு ரிக் ஸம்ஹிதையை மட்டும் படித்தாலே வேதத்தின் உண்மையான சொரூபத்தை அறியலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

 படங்களுக்கு நன்றி:

http://sidthan.blogspot.in/2013/07/blog-post_5797.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.