Blog

  • என் ஜன்னலுக்கு அப்பால் –  காக்கை குருவி எங்கள் ஜாதி

    என் ஜன்னலுக்கு அப்பால் – காக்கை குருவி எங்கள் ஜாதி

    பாஸ்கர்

    காலை எழுந்தவுடன் சமையல் அறை திறக்கும் சப்தம் கேட்டவுடன் ஒரு காகம் வந்து அமரும். அதற்காகவே கொஞ்சம் சப்தம் கேட்கும்படி கதவைத் திறப்பேன். வந்தவுடன் அது என்னைப் பார்க்கும். நான் அதனைப் பார்ப்பேன். இது நேற்று வந்த ஒன்றா, இது வேறா என எப்படிப் புரிந்துகொள்வது? நமக்குத் தான் பெயர், ராசி, எல்லாம். அவை எங்கு இருந்தாலும் அதற்கு ஒரே பெயர் தான் – இருக்கும் சிறு உணவு அல்லது ஏதாவது பலகாரம். ஒன்றை ஓரத்தில் வைத்தவுடன் அது மெல்ல தத்தி, பின்னோக்கி சென்று நான் உணவிட வசதியாக நகர்ந்து கொள்ளும். சில சமயம் இது நேற்று வந்த ஒன்று தான் எனத் தோன்றும்.

    உணவு வைத்தவுடன் தனது உறவுகளை அழைக்கும். அடுத்த நிமிடம் இரண்டு வந்து சேரும். சில சமயம் இந்தக் கூட்டத்தில் புறா அல்லது மைனா வந்து விடும். எந்தப் பிரிவினையும் இன்றி அதனதன் உணவுக் கடமையை முடித்துவிட்டுப் பறந்து போகும்.

    பறவைகள் ஞானிகள். அவசியம் என்றால்தான் கூட்டமாய்ப் பறத்தல் நிகழும். மற்ற நேரமெல்லாம் தனிமை. சில பறவைகள் ஒரு கிளையில் உட்கார்ந்தால் கிட்டதட்ட அரை மணி நேரம் இடத்தை விட்டு நகராது. பலமான காற்று அடித்தால் கூட அது கிளையில் ஆடிக்கொண்டு இருக்கும். ஒரு தியான நிலை.

    அது போலவே உணவு விஷயத்திலும். ஏதோ ஒரு சமயம் தான் கொஞ்சம் சண்டை அவைகளுக்குள் வரும். பெரும்பாலும் அவை ஒற்றுமையின் சின்னம். அருகருகே அமர்ந்து அன்பு சொல்லும். சில சமயம் உணவு ஊட்டும். சில முறை உணவு போடாத நாளில் என் மனைவி அலுவலகம் செல்லும்போது தலைக்கு மேல் பறந்து ஒரு நினைவூட்டல் செய்யும்.

    பறவைகளின் குரல் ஒரு தொடர்வண்டி போல. இங்கு ஒன்று கத்தி அடங்கினால் அதற்கு ஒரு எசப்பாட்டு உடனேயே வரும். அந்தத் திக்கை நோக்கினால் வேறு ஒரு குரல் கேட்கும். அதனைப் பின்தொடர்ந்தால் அது வேறு ஒரு பறவையின் இடத்துக்கு இட்டுப் போகும்.. இதற்காக அல்லாடுவது ஒரு பெரிய சந்தோஷம். எந்தப் பறவை, என்ன குரல், என்ன நிறம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். எனக்குப் பறவைகள் வேண்டும். அதற்கு உணவிட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பு புறாக்கூட்டம் ஒன்று இது போல என்னைக் கவர்ந்தது. இப்போது முன் பின் தெரியாத பறவைகள் இங்கு .

    இப்போது இந்தப் பின்னிரவில் அவை எங்கு இருக்கின்றன என்பதை அறியேன்? ஒரு சப்தம் இல்லை. மரங்கள் ஆட்டத்தை நிறுத்தி நேரமாகிறது. அடர் இருட்டு. எங்கே இருக்கிறார்கள், எனது தினசரி காலை விருந்தினர்கள்? நம்மைப் போல அது அடுத்த நாள் பொழுதுக்குத் திட்டம் போடுமா என்ன?

    அவை சுதந்திரப் பறவைகள். சிறையை அறியாத ஒன்று? விடுதலையைத் தாண்டி அதற்கு ஒன்றும் தெரியாது. உயிர் வாழக் கொஞ்சம் போராட்டம். அவ்வளவு தான். பறவைகள் உலகம் மர்மம் அற்றது. சூசகம் இல்லாத ஒன்று. என்னை அது சிநேகிதன் ஆகச் சேர்த்துக்கொண்டதே பெரிய விஷயம்.

    எனக்கு அதன் நட்பு வேண்டும். ஒரு நாள் ஒரு பறவை எனது தோளில் அமர்ந்துகொள்ள நான் நடந்து செல்ல வேண்டும். இது தான் எனக்கும் அதற்கும் உள்ள உடன்பாடு. என் தோள் தயார். யார் வரப்போகிறார்கள் என்ற மர்மம் எனக்கு விலகவில்லை. ஒரு வேளை இரண்டு தோள்களுக்கும் வருமோ?

    Share
  • இரப்பேலின் இரகசிய அனுபவம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    இரப்பேலின் இரகசிய அனுபவம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    அது இப்படியிருந்தது.

    இரவு.

    வானமேகங்களுக்கிடையில் காட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கதவு திறக்கப்பட்டு அதுவழியாக ஒரு அற்புத வெளிச்சம் கடந்து வந்தது.

    மிகவும் இரகசியமாக சுயமாக தயாரித்த திராட்சை ரசத்தின் கடுமையான போதையிலிருந்த காவல்காரன் இரப்பேல் முன்பெல்லாம் அதைப்பார்க்க நினைத்ததில்லை. ஆனால் பிறகு பிரகாசத்தின் தீவிரம் காரணமாக இரப்பேலுக்கு இறுக்கமாக மூடியக் கண்களைத் திறக்காமல் வேறுவழியில்லை. வலது கையை உயர்த்தி பிரகாசத்தை முடிந்தவரை வரவிடாமல் எதிர்க்க முயன்றான். அது வீண் முயற்சி என உணர்ந்த இரப்பேல் பொறுமையற்றுப் புலம்பினான். யாருக்கும் தெரிந்து ஒரு துரோகமும் செய்யாத ஒரு சுத்த ஆன்மாவைத் தண்டிப்பது எந்த முறையில் நியாயம் எனக்கேட்டான். பதில் வரவில்லை. டார்ச்  வெளிச்சம்……………………. இரப்பேல் நினைத்தது போலவே அது ஒரு பெரிய டார்ச்சின் வெளிச்சமாயிருந்தது. நிறுத்தப்படவுமில்லை.

    ஐயே! இரப்பேல் எழுந்திருக்கலாம் என நினைத்து பலமாக முயற்சித்தான். அது அவ்வளவு சுலபமில்லை. நாடி நரம்புகள் முழுவதும் ஓய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் இறுகப் பிடித்துக்கொண்டு இரப்பேல் எழுந்தான்.

    அற்புதப் பிரகாசம் கூறியது. ”இரப்பேல் நான் உன்னைத் தேடித்தான் வந்தேன்.”

    அதைக் கேட்டு நோஹாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு போல நிறைந்த வெள்ளத்தில் இரப்பேல் ஒரு பாய்மரக்கப்பலுக்கு இணையாக ஆடினான். இமைகள் அதற்குப்பிறகு ஒரு முறைகூட மூடவில்லை. கண்களின் வெண்மைப்பகுதியிலும், கரு விழியிலும் அற்புதப்பிரகாசம் அருமையோடு நின்றது. கடுமையான பரபரப்புக் காரணமாக இரப்பேலுக்குத் தொண்டை வறண்டது. உடல் முழுவதும் புளகாங்கிதம் அடைந்தது.

    அற்புத வெளிச்சம் மறுபடியும் பெயர் சொல்லி அழைத்து இப்படிக்கூறியது.

    “நான் எதற்காக வந்திருக்கிறேன் தெரியுமா உனக்கு ஒரு சாவி தருவதற்காக”

    “சாவியா? ” இரப்பேல் தடுமாறிக்கொண்டே கேட்டான்.

    “ஆமாம். உன்னுடைய சேமிப்பு,  வானத்தில் எங்குள்ளதோ அதன் சாவி” , அற்புதவெளிச்சம் கூறியது.

    இரப்பேலின் கண்கள் அகன்றது. வெளிச்சம் கண்ணிற்குள் கொஞ்சம் கூடுதலாகக் கடந்தது, இரப்பேல் ஆச்சரியத்துடன் நிலைத்து நின்றான்.

    “கைகளை நீட்டு” அற்புதவெளிச்சம் அருளியது.

    இரப்பேல் அதை அனுசரிப்பவனாக இருகைகளையும் நீட்டினான். அவைகளில் என்ன அதிசயம் ஒரு தங்கத் தாக்கோல் (சாவி) வந்து விழுந்தது. அது சிறப்பான வடிவமுடையதும் தக தகவென மின்னக்கூடியதுமாக இருந்தது. ரப்பேல் பக்திப்பரவசத்துடன் சாவியை கண்களிலும் உதட்டிலும் ஒப்பிக்கொண்டான். சில நிமிடங்கள் சென்றன. இரப்பேல் விழித்துப்பார்த்தான். அற்புத வெளிச்சம்!……….. பார்க்கப்பார்க்க மறைந்தது.

    இரப்பேல் மூச்சடக்கி நிற்கவே சுற்றிலும் கூரிருட்டாக இருந்தது. ஒன்றும் பார்க்க முடியவில்லை. கையில் ஒரு சாவி இருக்கிறது என்ற பலத்த நம்பிக்கையில் கையை இறுக மூடிக்கொண்டு இரப்பேல் இருட்டு வழியாகத் தட்டுத்தடுமாறி எங்கென்று தெரியாமல் நடந்து கொண்டிருந்தான்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(413)

    குறளின் கதிர்களாய்…(413)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(413)

    துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்

    -திருக்குறள் -159 (பொறையுடைமை)

    புதுக் கவிதையில்…

    வரம்பு கடந்து நடப்பவர்
    வாயில் வரும்
    கொடிய சொற்களையும்
    கொஞ்சமும் கோபமின்றி
    பொறுத்துக்கொள்ளும்
    பெருந்தன்மையுள்ளவர்,
    இல்வாழ்வில் இருந்தாலும்
    இழுக்கில்லாத்
    துறவியர் போலத்
    தூயரே ஆவார்…!

    குறும்பாவில்…

    தீய சொற்களால் நெறிகடந்து
    திட்டுபவரையும் பொறுத்துக்கொள்வோர் இல்லறத்தில் இருந்தாலும்,
    துறவியர் போலத் தூயவராவாரே…!

    மரபுக் கவிதையில்…

    வரம்பு முறையே இல்லார்தம்
    வாயில் வருமே தீச்சொல்லே,
    அரமே போலும் அச்சொல்லை
    அகத்தில் கொளாமல் பொறுத்தருளும்
    தரத்தி லுயர்ந்த மேலோர்கள்,
    தாமே உயர்வர் இல்லறத்தில்
    பரமன் தேடும் துறவியர்போல்
    பண்பால் தூயர் ஆவாரே…!

    லிமரைக்கூ…

    தீச்சொற்களால் திட்டுவர் தீயவரே,
    அதனையும் பொறுத்தருளும் மேலோர் இல்வாழ்விலிருப்பினும்
    பற்றற்ற துறவியர்போல் தூயவரே…!

    கிராமிய பாணியில்…

    பொறுமவேணும் பொறுமவேணும்
    வாழ்கயில எதுலயும்
    பொங்கியெழாத பொறுமவேணும்..

    மொறதவறி நடக்கிற கெட்டவங்க
    வாயில வாற
    கொடுஞ்சொல்லக் கேட்டாலும்
    கோவப்படாம பொறும காக்கிற
    பெரியவுங்க குடும்பவாழ்வுல இருந்தாலும்
    ஒலக ஆசய உட்டுப்போன
    தொறவியளப் போல
    நடத்தயில ஒசந்தவங்களே..

    அதால
    பொறுமவேணும் பொறுமவேணும்
    வாழ்கயில எதுலயும்
    பொங்கியெழாத பொறுமவேணும்…!

    Share
  • பாடியும் அழைத்தால் பறந்தோடி வருவான் | முகுந்த இராமானுஜ தாசர்

    பாடியும் அழைத்தால் பறந்தோடி வருவான் | முகுந்த இராமானுஜ தாசர்

    திருநீர்மலை உச்சியில் அமைந்துள்ள ரங்கநாதர் திருக்கோவிலுக்குச் சென்றேன். தற்செயலாக எதிரில் வந்தார், முகுந்த இராமானுஜ தாசர். பாடுங்கள் என்றதும் உடனே இந்தப் பாடலைப் பாடினார். பக்திப் பரவசத்துடன் கூடிய அவரது பாடலைக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பல்லாண்டு – 11 & 12 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருப்பல்லாண்டு – 11 & 12 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் பதினொன்றாம், பன்னிரண்டாம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வருவாய் லட்சுமித் தாயே | வரலட்சுமி விரதம்

    வருவாய் லட்சுமித் தாயே | வரலட்சுமி விரதம்

    இன்று நம் இல்லத்தில் திருமகள் எழுந்தருளிய காட்சிகளுடன், ‘வருவாய் லட்சுமித் தாயே’ என்ற இனிய பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • லக்ஷ்மீ, வாம்மா நம்ம வீட்டுக்கு!

    லக்ஷ்மீ, வாம்மா நம்ம வீட்டுக்கு!

    வரலட்சுமியை வரவேற்று, சுந்தரத் தெலுங்கில் ஒரு பாடல், கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். திருமகளை உங்கள் இல்லத்தில் எழுந்தருளச் செய்யுங்கள்.

    On this auspicious Varalakshmi Vratam, enjoy the beautiful song ‘Lakshmi Raave Maa Intiki’ in the voice of Krishnakumar.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 52

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 52

    -மேகலா இராமமூர்த்தி

    இராவணனுடைய கட்டளையை ஏற்றுக் கும்பகருணனை அழைத்துவர அவன் அரண்மனைக்குச் சென்ற இராவணனின் பணியாளர்கள், அங்கே நீடுதுயிலில் ஆழ்ந்திருந்த கும்பனைக் கண்டனர். எளிதில் துயிலெழுப்ப இயலாதவன் அவன்; ஆகையால், அவனுடைய தலையிலும் செவிகளிலும் தங்கள் கைகளிலிருந்த இரும்புத் தூண்களால் தாக்கி அவனை எழுப்ப முற்பட்டனர்; அவன் எழாதது கண்டு வெகுளியோடு,

    ”உறங்குகின்ற கும்பகர்ணனே! உங்களுடைய பொய்யான வாழ்வெல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டது; அதனைக் காண எழுந்திருப்பாய் எழுந்திருப்பாய்; காற்றாடிபோல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!” என்றார்கள்.   

    உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வெலாம்
    இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
    கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே
    உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்.
    (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7316)

    இப்பாடலின் சந்த நயம் நம் சிந்தை கவர்கின்றது.

    இரும்புத் தூண்களின் அடிகளுக்கு கும்பகருணன் எழவில்லை; அதனைத் தொடர்ந்து இராவணனின் கட்டளைப்படி யானைகளையும் ஆளிகளையும் அவன்மீது விட்டு மிதிக்கச் செய்தும் அவன் எழவில்லை; ஆயிரம் மல்லர்கள் தாரை, சங்கு, சின்னம் முதலிய ஊதுகருவிகளைக் கொண்டு அவன் காதுகளுக்குள் பெருத்த ஓசை எழுப்பியும் அவன் எழவில்லை; அடுத்து அவன் மார்பில் ஓராயிரம் குதிரைகளை நடத்தியும் ஓட்டியும் வந்தனர்; பெருந்துயில் விருப்பினான அவனுக்கு அச்செய்கை உடம்பைப் பிடித்துவிட்டதுபோல் (மசாஜ்) ஆகிவிடவே இன்னும் இனிதாய்த் துயிலலானான்.

    அதன்பின்னர் சூலப்படையாலும் மழுப்படையாலும் வாட்படையாலும் கண்படையில்(துயில்) ஆழ்ந்திருந்த கும்பனைத் தாக்கினர்; பலனில்லை. முயற்சியைக் கைவிடாது ஆயிரம் வீரர்கள் அவன் கன்னங்களில் நீண்ட உலக்கைகளால் விடாது அடிக்கவே இறந்தவன் உயிர்கொண்டு எழுந்ததுபோல் இடத்தைவிட்டு அசைந்து எழுந்தான்.

    அவன் எழுந்ததும் அவன்கொண்ட கடும்பசியும் உடனெழுந்ததால், தன் முன் வைக்கப்பட்ட அறுநூறு வண்டிச் சோற்றையும் பலநூறு குடம் கள்ளையும் விரைவாய் உண்டான்; இவை அவன் பசியை மேலும் தூண்டுவன (appetizers) ஆயின. ஆகவே, அவற்றைத் தொடர்ந்து, எருமைக் கடாக்களையும் களிறுகளையும் தின்று சற்றே பசியாறியவன், அண்ணன் அழைத்த செய்தியறிந்து அவனைக் காணச் சென்றான்.

    அண்ணனைக் கண்ட கும்பகருணன் மலையொன்று கீழே படுத்துக் கிடப்பதைப்போல் அவனை நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். இராவணன் கும்பகருணனை ஆரத் தழுவிக் கட்குடங்களையும் மாமிசத் தசைகளையும் மேலும் கொடுத்துப் பசிபோக்கி, அவனுக்குப் புதிய அணிகளைப் பூட்டினான்; மேனியில் சந்தனக் குழம்பைப் பூசினான். அவன் மார்பிலே கவசத்தைக் கட்டினான். அண்ணனின் செயல்களுக்குக் காரணம் விளங்காத கும்பகருணன், அணிகளும் கவசமும் எனக்குப் பூட்டுவது எதற்காக? என்று வினவ,

    ‘மானிடர் இருவர் வானரப் பெருஞ்சேனையுடையோராய் நம் இலங்கை நகரைச் சுற்றி வளைத்துவிட்டனர்; ஏனையோர் யாரும் பெறாத வெற்றியையும் பெற்றுள்ளனர்; நீ போய் அவர்களின் உயிரை உண்ணும் வேலையை முடித்து வா” என்றான் இராவணன்.

    ”பேசுவது மானம்; இடைபேணுவது காமம்; கூசுவது மானுடரை; நன்று நம கொற்றம்!” என்று மந்திரப் படலத்தில் இராவணனை இடித்துரைத்துச் சீதையை விட்டுவிடுமாறு அறிவுறுத்திய கும்பகருணன், அதன்பின்பு உறங்கச் சென்றுவிட்டான்; இப்போது வலுவில் உறக்கங் கலைத்து அவன் அழைத்துவரப்பட்ட நிலையில், அண்ணனுக்கும் இராமனுக்கும் போர் ஆரம்பமாகிவிட்டதை அறிகின்றான்; வருத்தமுற்ற அவன், ”கொடும்போர் தொடங்கிவிட்டதா? உவமை கூறவியலா கற்புடைய சானகியின் சிறைத்துயர் இன்னும் நீங்கவில்லையா? விண்ணுலகிலும் மண்ணுலகிலும் ஒப்புக்கூற முடியாதபடி வளர்ந்த நம் மிகுபுகழ் அழிந்ததா? அழிவுகாலம் வந்து புகுந்துவிட்டதா?” என்று குமுறுகின்றான்.

    ஆனதோ வெஞ்சமம் அலகில் கற்புடைச்
    சானகி துயர்இனம் தவிர்ந்தது இல்லையோ
     
    வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
    போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே.
      (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7350)

    ”ஐயா! இந்த உலகினைப் பெயர்த்தெடுக்கலாம்; ஏன்…இவ்வுலகம் முழுவதற்கும் வேலிகட்டவும் சொல்லலாம்; ஆனால், பெருவலிமை படைத்த இராமனது தோள் ஆற்றலை வென்றுவிடலாம் என்று நீ நினைப்பது சீதையின் மேனியைத் தழுவலாம் என்பது போலும் (இயலாத காரியம்)” என்றுரைத்தான் கும்பகருணன் இராவணனிடம்.

    கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும்
    சொல்லலாம் பெருவலி இராமன் தோள்களை
    வெல்லலாம் என்பது சீதை மேனியைப்
    புல்லலாம் என்பது போலுமால் ஐயா.  (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7352)  

    தொடர்ந்தவன்…”நம்மோடு போரிட வந்திருக்கும் மானுடர்களின் நெஞ்சமும் செயலும் பேச்சும் அறத்தின்பாற் பட்டதாக அமைந்துள்ளது; நாமோ நெஞ்சில் வஞ்சமும் செயலில் பாவமும் பேச்சில் பொய்யும் வல்லவர்களாயிருக்கின்றோம். நம்மால் அவர்களின் அறத்திற்கு எந்தக் குறையையும் செய்ய இயலுமோ?

    சீதையை இராமனிடம் சேர்ப்பித்துவிட்டு ஐயப்படத்தகாத நம் தம்பி வீடணனோடு நாம் நட்புப் பூணுதலே உய்யும் வழியாகும்; அவ்வாறு செய்வதற்கு உனக்கு உடன்பாடில்லையா? நம் படைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரித்துப் போருக்கு அனுப்பி அவை அழிதல்கண்டு வருந்துவதை விடுத்து அவற்றை மொத்தமாய்ப் போருக்கு அனுப்புவது உசிதமான செயலாகும்” என்றான்.

    கும்பகருணன் சீதையை இராமனிடம் சேர்ப்பிக்குமாறு யோசனை சொன்னதாலும், மானுடரைப் புகழ்ந்தமையாலும் வெகுளியுற்ற இராவணன், ”உன்னை நான் இங்கே வரவழைத்தது மேல் நடக்கவேண்டியது பற்றி அறிந்துகொள்வதற்காக அன்று! எனக்கு அறிவுரை கூறுதற்கு நீ அறிவுபடைத்த என் அமைச்சனுமல்லன்; பகைவர்களைக் கொன்றுவிட்டு வருவதற்காகவே உன்னை வருவித்தேன்; ஆனால் நீயோ போருக்கு அஞ்சுகின்றாய்; உன் வீரம் வீணானது; கள்ளும் கறியும் வேண்டிய அளவுக்கு உண்டுவிட்டாய்; ஆகையால் இரவும் பகலும் நிம்மதியாய்த் தூங்கு போ!” என்று இகழ்ந்துரைத்துவிட்டு ”நானே போருக்குப் போகின்றேன்” என்று இராவணன் போக்குக் காட்டவே, அதுகண்டு, அண்ணன்பால் அன்புடையவனான கும்பகருணன், ”என்னைப் பொறுத்துக்கொள்! நானே போருக்குப் போகின்றேன்” என்றுரைத்துத் தன் சூலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, ”அண்ணா! உன்னிடம் சொல்வதற்கு இன்னும் ஒரு செய்தி உளது!” என்றான். ”என்ன செய்தி?” என்பதுபோல் பார்த்தான் இராவணன்.

    ”தலைவனே! நான் போரில் வென்று மீண்டு இங்கே வருவேன் என்று சொல்லமாட்டேன்; வலிய விதி இடைநின்று என்னைப் பிடர்பிடித்துத் தள்ளுகின்றது; ஆகவே, நான் போரில் இறந்துபடுவேன்; அவ்வாறு நான் இறந்தால் அழகிய தோளுடைய சீதையை விட்டிடுவாய்; அதுவே உனக்கு நன்மை கிட்டிட வழி.

    இலங்கை காவல! நம்மோடு போரிட வந்திருக்கும் பகைவர்கள் என்னை வென்றார்களென்றால் உன்னையும் வென்று உயர்தல் உறுதி; ஆதலால், அதன்பிறகும் அவர்களை வெல்ல வேறு வழிகளை நீ எண்ணுதல் தவறான செயலாகும்; வளையணிந்த மாதான சீதையை விட்டுவிடுவதே நமக்குச் சிறந்த தவப்பயன் அளிக்க வல்லது.

    என்னை வென்றுளர்எனில் இலங்கை காவல 
    உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால்
    பின்னை நின்று எண்ணுதல் பிழை அப் பெய்வளை
    அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய்.  
    (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7368)

    கொற்றவ! நான் இதுவரை ஏதேனும் குற்றங்கள் செய்திருந்தால் அவற்றைப் பொறுத்துக்கொள்; இனி நான் உன் முகத்தில் விழித்தல் என்பது இல்லாமற் போய்விட்டது; விடைபெற்றுக் கொள்கின்றேன்” என்று அண்ணனுக்கு அளிக்கவேண்டிய நல்லுரைகளை அளித்துவிட்டுப் புறப்பட்டான் கும்பகருணன்.

    கும்பகருணனைப் பொறுத்தவரை வீடணனைப்போல் அவனால் அறத்தின் பக்கம் உறுதியாய் நிற்கமுடியவில்லை; மானம், அறம் எனும் இரு கயிறுகளுக்கிடையே ஊசலாடுகின்றது அவன் உள்ளம். இறுதியில் மானத்துக்காக உயிரைத் துறப்பது எனும் முடிவுக்கு வருகின்றான் என்பதே கம்பன் தீட்டும் கும்பனின் குணச்சித்திரம்.

    கும்பகருணனின் உரைகளைக் கேட்ட இராவணனின் இருபது விழிகளிலும் கண்ணீரும் செந்நீரும் தேங்கி நின்றது; உறவினர்களும் அவனை ஏக்கத்தோடு நோக்கிய வண்ணம் நின்றிருக்க, அரண்மனையை விட்டு நீங்கினான் அவன்.

    கும்பகருணன் அவ்வளவு சொன்னதன் பிறகும், சகோதர பாசத்தினால் இராவணன் கண் கலங்கினானே தவிரச் சீதையைச் சிறைவீடு செய்து போரை நிறுத்த வேண்டும்; மீதமுள்ள தன் உறவினரையும் படையினரையும் காக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டானில்லை. காமத்தின் வலிமை அத்தகையது போலும்!

    ஊனையும் கள்ளையும் வழிநெடுகிலும் வாங்கி உண்டவண்ணம் பெரும் படையோடும் எண்ணற்ற படைக்கலங்களோடும் போர்க்களம் நோக்கிச் சென்றான் கும்பகருணன்; அவனது உருவுகண்டு மருண்டது வானரப்படை.

    பிரம்மாண்டமான உருவொன்று தேரேறி வருவதுகண்ட இராமன் வீடணனை நோக்கி, ”இவனுடைய ஒரு தோளிலிருந்து மற்றொரு தோள்வரை முழுவதும் தொடர்ச்சியாய்ப் பார்க்க முயன்றிட்டால் அதற்குப் பலநாள் கழிந்துவிடும்; நடுவிலே நிற்பது கால்முளைத்த மேருமலை கொல்லோ? போர்விரும்பி வந்த ஒரு வீரனாக இவனை உணரமுடியவில்லையே; யார் இவன்?” என்று வியப்போடு வினவினான்.

    தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
    நாள்பல கழியுமால் நடுவண் நின்றது ஓர்
    தாளுடை மலைகொலாம் சமரம் வேட்டது ஓர்
    ஆள்என உணர்கிலேன் ஆர்கொலாம் இவன்.
    (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7382)

    வீடணன் இராமனை வணங்கி, ”ஐய! இவன் இராவணனுக்குப் பின்னோன் (தம்பி); எனக்கு முன்னோன் (அண்ணன்); இவன் பெயர் கும்பகருணன் என்பதாகும். எமனுக்கு எமன் போன்றவன்; இந்திரனை வெருண்டோடச் செய்தவன்; இவன் அதிக காலம் தூங்குவதால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் பிழைத்திருக்கின்றது.

    இன்னொருவன் இல்லுறை தவத்தியை அறம் வழுவிக் கவர்ந்த செயலால் நமக்கு அழிவு வரும் என இராவணனிடம் பன்முறை சொன்னவன் இவன்; இராவணன் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கவே, அவனிடம் உண்ட நன்றிக் கடன் தீர்க்க இங்கு வந்துள்ளான்” என்றான்.

    வீடணன் மொழிந்தது கேட்ட சுக்கிரீவன், ”இவனைக் கொல்வதால் ஒரு பயனுமில்லை; அறத்தில் நாட்டமுள்ள இவனை நம்மோடு சேர்த்துக்கொள்ளுதல் நலம்” என்றான். இராமனும் அக்கருத்தை ஆமோதித்தான். ஒத்த கருத்துடையவர்களை ஓரணியில் சேர்க்க முயலுதல் போர் உத்திகளுள் ஒன்று.

    ”கும்பகருணனை அழைத்து வர யாரை அனுப்புவது?” என்று இராமன் கேட்க, ”நானே போகின்றேன்” என்றான் வீடணன்; இராமனும் அதற்கு உடன்பட, கும்பகருணனைச் சந்திக்கச் செல்கின்றான் வீடணன்.

    போர்க்களத்தில் வீடணன் கும்பகருணன் சந்திப்பு என்பது மூலநூலான வான்மீகத்தில் இல்லாத ஒன்று. கம்பர் இந்தச் சந்திப்பைத் தாமே நேர்த்தியாய் உருவாக்கி உடன்பிறந்தோராகிய இராவணன், கும்பகருணன், வீடணன் ஆகிய மூவருக்கும் இடையிலுள்ள பண்பு வேறுபாடுகளை நாம் துல்லியமாக உணர்ந்துகொள்ள வழிவகுக்கின்றார். கும்பன் வீடணன் உரையாடல் உணர்ச்சிகளின் பிழிவாய் அமைந்து, காப்பியத்தைப் படிப்போரின் கண்களைக் குளமாக்கிவிடும் தன்மையது.

    இனி அச்சந்திப்பையும் அதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த உரையாடலையும் கவனிக்கலாம் வாருங்கள்!

    கடல்போன்ற அரக்கர் சேனையைக் கடந்துசென்று அண்ணன் கும்பகருணனின் வீரக்கழல்களில் வீழ்ந்து வணங்குகின்றான் தம்பி வீடணன். அவனை வாரியெடுத்து அணைத்து விழிநீர் பெருக்கிய கும்பகருணன், வீடணன் வந்த நோக்கத்தை அறியாது, அவன் இராமனைவிட்டுத் தன்னோடு சேருவதற்குத்தான் வந்திருக்கின்றான் என்று தவறாக எண்ணிக்கொண்டு வீடணனுக்கு அறிவுரைகள் கூறத் தொடங்குகின்றான்…

    ”தம்பி! நீ ஒருவனாவது நம் குலத்தில் பிழைத்திருக்கின்றாய் என்று மகிழ்ந்தேனே! அம்மகிழ்ச்சி சிதறும்படி இங்கே வந்தது ஏன்?

    புலத்தியன் மரபு இராவணனின் செயலால் இழிவை அடைந்தது; எனினும், உன்னால் அழிவிலாப் புண்ணியத்தைப் பெற்றது என்று நினைத்திருந்தேனே; நீ இங்குத் திரும்பி வந்தது கண்டு என் உள்ளம் வருந்துகின்றது.

    அறத்தின் மூர்த்தியெனும் பெயர்பெற்ற தலைவனுக்குத் தொண்டனான நீ, அறந்துறந்து பிறன்மனை நோக்கும் எங்களை உம் உறவுகளாகக் கொள்வாயோ?

    ஐய! நீ அயோத்தி வேந்தனுக்கு அடைக்கலமாகிப் பிழைக்காவிட்டால் அரக்கர்கள் எல்லாம் இராமன் கணைகளால் இறந்தபிறகு அவர்களுக்குப் பிதிர்க் கடன்கள் செய்ய யார் இருக்கிறார்கள்?

    நீ எப்போது இலங்கைக்குத் திரும்ப வேண்டும் தெரியுமா? புலையராக உள்ள தீய அரக்கர்கள் அனைவரும் மாண்ட பின்பு, இராமனோடு திரும்ப வேண்டும். இலங்கை அரசச் செல்வத்தை நீ துய்க்கவேண்டும்; ஆதலால், இப்போதே விரைவில் எங்களைவிட்டுப் போய்விடு!” என்றுகூறித் தன் பேச்சை முடித்தான்.

    வீடணனை ஏனைய அரக்கர்களிடமிருந்து வேறுபடுத்தி, உயர்ந்தோனாகவே எண்ணும் கும்பகருணனின் உள்ளம் இங்கே தெளிவாய் வெளிப்படுகின்றது. பிறன்மனை நயக்கும் அரக்கரின் புன்மையை வெறுக்கின்றான் கும்பகருணன்; அத்தகு புலையோர் அழிவது உறுதி என்று நம்புகின்றான். அரக்கரினம் அழிந்தபின்னர் அவர்களுக்கு நீர்க்கடன் செய்வதற்கேனும் தம்பி வீடணன் பிழைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றான். இவ்விடத்தில் கும்பகருணன் பாத்திரத்தின் அரக்கத் தன்மையை நாம் முற்றிலும் மறந்துவிடுகின்றோம்; அவனுள் சுடர்விடுகின்ற உயர் மானுடப் பண்புகளைத் தரிசித்து உள்ளம் நெகிழ்கின்றோம்.

    அண்ணனின் அன்புமொழிகளைக் கேட்ட வீடணன், “அண்ணா! நான் உங்களிடம் சொல்வதற்கு ஒன்று உண்டு!” என்று கூறவே, “சொல்” என்றான் கும்பகருணன்.

    [தொடரும்]  

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • திருப்பல்லாண்டு – 9 & 10 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருப்பல்லாண்டு – 9 & 10 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் ஒன்பதாம், பத்தாம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மோடியின் கண்ணோட்டம், அணுகுமுறை, தாக்கம்

    மோடியின் கண்ணோட்டம், அணுகுமுறை, தாக்கம்

    மோடியின் தலைமை, கண்ணோட்டம், அணுகுமுறை ஆகியவை எப்படி இருக்கின்றன? உலகம் முழுதும் இவர் செலுத்தும் தாக்கம் எத்தகையது? மறவன்புலவு சச்சிதானந்தன் உடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆடிப் பெருக்கு: தண்ணீர் மோட்டாருக்குப் பூஜை

    ஆடிப் பெருக்கு: தண்ணீர் மோட்டாருக்குப் பூஜை

    பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு, இன்று நம் வீட்டில், தண்ணீர் மோட்டாருக்குப் பூஜை நடந்தது. நடந்தாய் வாழி காவேரி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பல்லாண்டு – 7 & 8 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருப்பல்லாண்டு – 7 & 8 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் ஏழாம், எட்டாம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்  ஜன்னல்களுக்கு அப்பால்

    என் ஜன்னல்களுக்கு அப்பால்

    பாஸ்கர்

    எனது தெருவில் தினசரி கிரிக்கெட் ஆடும் ஒரு குழு உண்டு. குழு என்றால் அது சிறுவர்கள் குழு அல்ல. எல்லோரும் கிட்டதட்ட  கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள். சிலர் வேலைக்கும் செல்கின்றனர்.

    தினசரி மாலை சுமார் ஆறு பேர் அல்லது இன்னும் அதிகமாகவும் சில சமயம் விளையாட வருவார்கள். ஆக்ரோஷமான இளமை பொங்கும் விளையாட்டுப் பிரியர்கள் அவர்கள். வெறித்தனமான ஆட்டம் ஆடும்போது தெருவே அதிரும். இதை நான் தள்ளி நின்று ரசிப்பேன். பந்து பட்டு விடும் என்ற பயம் மற்றும் நின்று கொண்டே பார்க்க வலுவான கால்கள் இல்லை.

    சில சமயம் அவர்களை தள்ளி நின்று ஆடச் சொல்லி உபதேசம் செய்வேன். அப்போதைக்குக் கேட்பார்கள். அடுத்த நாள் பழைய இடத்தில் தான் விளையாடுவார்கள். அவ்வளவு தான் எனக்கு மரியாதை என்று நான் ஏதும் சொல்ல மாட்டேன்.

    நான் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் போகும்போதும் எனக்கு அடுக்ககத்தின் கதவுகளைத் திறந்து விடுவார்கள். வயசுக்கு மரியாதை எனப் பெருமைப்பட்டுக் கொள்வேன்.

    சில சமயம் நான் இரவு நேரம் திரும்பும்போது பெரிய கற்களை சாலையில் பார்ப்பேன். இவர்கள் நினைவு வரும். முடிந்த வரை அவற்றை ஓரமாகப் போட்டுவிடுவேன். அவர்களைக் கோபிக்க மாட்டேன். முதலில் எனக்கு உரிமை இல்லை. அடுத்து என்னை நான் இதற்காக வருத்தப்படுத்தி கொள்வது என்னைப் பாதிக்கிறது.

    சில சமயம் எல்லாவற்றிலும் விலகி இருப்பது பெரிய நன்மை. தள்ளி நிற்கும்போது போது தான் புத்தி கொஞ்சம் தெளிவாகிறது. சென்ற வாரம் இரவு  திரும்பும்போது பாதாள சாக்கடைக்கு ஏற்படுத்தி இருந்த சிறு சிறு ஓட்டைகள் கற்களை கொண்டு மூடப்பட்டு இருந்தன. மழை பெய்தால் நீர் உள்ளே இறங்காதே என எண்ணி எல்லாக் கற்களையும் எடுத்தேன்.

    சட்டென இதனை யார் செய்து இருப்பார்கள்  என யோசிக்கையில் இவர்கள் நினைவு வந்தது. பந்து உள்ளே செல்ல கூடாது என்ற முன்னேற்பாட்டில் செய்யப்பட்ட ஒன்று இது. அவர்களின் புத்திசாலித்தனம் இப்போது தெரிந்தது. அவர்களை இப்போது தான் புரிந்து கொண்டு இருக்கிறேன். ஒரு ரைடிஸ்ட்  சிந்தனையில் பார்வை பழுதாக வாய்ப்புண்டு என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

    எளிமையாக ஒரு விஷயத்தை அணுக வேண்டும் என்பதற்கு இவர்கள் எனக்கு மறைமுகமாக உதவி இருக்கிறார்கள். இதை எழுதும்போது அவுட் என சப்தம் கேட்கிறது. எனக்குள்ளே நான் சிரித்துக்கொண்டேன். அது பேரானந்தம்.

    Share
  • சமையல் தொட்டியில் அடைப்பினைத் தவிர்க்க!

    சமையல் தொட்டியில் அடைப்பினைத் தவிர்க்க!

    சமையல் மேடைத் தொட்டியில் அடைப்பு ஏற்படாமல் இருக்க, இதோ ஒரு வழி. மீஷோ என்ற மின்னங்காடி வழியே வாங்கிய பொருள். எப்படி உதவுகிறது என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பல்லாண்டு – 5 & 6 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருப்பல்லாண்டு – 5 & 6 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் ஐந்தாம், ஆறாம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share