என் ஜன்னல்களுக்கு அப்பால்
பாஸ்கர்
எனது தெருவில் தினசரி கிரிக்கெட் ஆடும் ஒரு குழு உண்டு. குழு என்றால் அது சிறுவர்கள் குழு அல்ல. எல்லோரும் கிட்டதட்ட கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள். சிலர் வேலைக்கும் செல்கின்றனர்.
தினசரி மாலை சுமார் ஆறு பேர் அல்லது இன்னும் அதிகமாகவும் சில சமயம் விளையாட வருவார்கள். ஆக்ரோஷமான இளமை பொங்கும் விளையாட்டுப் பிரியர்கள் அவர்கள். வெறித்தனமான ஆட்டம் ஆடும்போது தெருவே அதிரும். இதை நான் தள்ளி நின்று ரசிப்பேன். பந்து பட்டு விடும் என்ற பயம் மற்றும் நின்று கொண்டே பார்க்க வலுவான கால்கள் இல்லை.
சில சமயம் அவர்களை தள்ளி நின்று ஆடச் சொல்லி உபதேசம் செய்வேன். அப்போதைக்குக் கேட்பார்கள். அடுத்த நாள் பழைய இடத்தில் தான் விளையாடுவார்கள். அவ்வளவு தான் எனக்கு மரியாதை என்று நான் ஏதும் சொல்ல மாட்டேன்.
நான் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் போகும்போதும் எனக்கு அடுக்ககத்தின் கதவுகளைத் திறந்து விடுவார்கள். வயசுக்கு மரியாதை எனப் பெருமைப்பட்டுக் கொள்வேன்.
சில சமயம் நான் இரவு நேரம் திரும்பும்போது பெரிய கற்களை சாலையில் பார்ப்பேன். இவர்கள் நினைவு வரும். முடிந்த வரை அவற்றை ஓரமாகப் போட்டுவிடுவேன். அவர்களைக் கோபிக்க மாட்டேன். முதலில் எனக்கு உரிமை இல்லை. அடுத்து என்னை நான் இதற்காக வருத்தப்படுத்தி கொள்வது என்னைப் பாதிக்கிறது.
சில சமயம் எல்லாவற்றிலும் விலகி இருப்பது பெரிய நன்மை. தள்ளி நிற்கும்போது போது தான் புத்தி கொஞ்சம் தெளிவாகிறது. சென்ற வாரம் இரவு திரும்பும்போது பாதாள சாக்கடைக்கு ஏற்படுத்தி இருந்த சிறு சிறு ஓட்டைகள் கற்களை கொண்டு மூடப்பட்டு இருந்தன. மழை பெய்தால் நீர் உள்ளே இறங்காதே என எண்ணி எல்லாக் கற்களையும் எடுத்தேன்.
சட்டென இதனை யார் செய்து இருப்பார்கள் என யோசிக்கையில் இவர்கள் நினைவு வந்தது. பந்து உள்ளே செல்ல கூடாது என்ற முன்னேற்பாட்டில் செய்யப்பட்ட ஒன்று இது. அவர்களின் புத்திசாலித்தனம் இப்போது தெரிந்தது. அவர்களை இப்போது தான் புரிந்து கொண்டு இருக்கிறேன். ஒரு ரைடிஸ்ட் சிந்தனையில் பார்வை பழுதாக வாய்ப்புண்டு என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
எளிமையாக ஒரு விஷயத்தை அணுக வேண்டும் என்பதற்கு இவர்கள் எனக்கு மறைமுகமாக உதவி இருக்கிறார்கள். இதை எழுதும்போது அவுட் என சப்தம் கேட்கிறது. எனக்குள்ளே நான் சிரித்துக்கொண்டேன். அது பேரானந்தம்.