’தாய்’ தந்த புரட்சிப் படைப்பாளி!
-மேகலா இராமமூர்த்தி
உலகின் மகத்தான இலக்கியப் படைப்பாளிகளுள் ஒருவராய் இன்றளவும் போற்றப்படுபவர் இரஷ்யாவின் மாக்சிம் கார்க்கி (Maxim Gorky). அவர் படைப்பாளி மட்டுமல்லர்; தம் காலத்தின் சமூக அரசியல் அவலங்களுக்கு எதிராகக் கலகக் குரலெழுப்பியவராகவும் இரஷ்யப் புரட்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய போராளியாகவும் விளங்கியவர்.
கார்க்கியின் இளமைப் பருவமும் செய்த பணிகளும்
இரஷ்யாவின் நிஸ்னி நவ்கரோட் (Nizhny Novgorod) என்ற ஊரில் மார்ச்சு 28, 1868இல் பிறந்தவர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் (Alexei Maximovich Peshkov) எனும் இயற்பெயர் கொண்ட மாக்சிம் கார்க்கி. தம்முடைய ஐந்தாவது வயதில் தந்தையை இழந்தார் கார்க்கி; அதன்பின்னர் அவருடைய தாய் மறுமணம் செய்துகொண்டார். அதனால் தாயின் அரவணைப்பும் அவருக்குக் கிட்டவில்லை. எனவே, அருகிலிருந்த கிராமத்தில் வசித்துவந்த தம்முடைய தாய்வழிப் பாட்டி தாத்தா வீட்டில் வளரவேண்டிய சூழல் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு வாய்த்தது. அங்கும் வறுமையான வாழ்க்கைச் சூழலே நிலவியதால் முறையான பள்ளிக்கல்வி என்பது கார்க்கிக்கு ஒருசில ஆண்டுகளே கிடைத்தது.
சிறுவனாய் இருந்த காலந்தொட்டே உழைத்துப் பிழைக்க வேண்டியவரானார் கார்க்கி. உணவு விடுதிகளில் பாத்திரங்கள் கழுவுவது, இரயில்நிலையத்திலிருந்து வருவோரின் பெட்டி படுக்கைகளைச் சுமப்பது, செருப்புக்கடையில் செருப்புத் தைப்பவருக்கு உதவுவது, ஆலையில் தொழிலாளியாய்ப் பணிபுரிவது, அடுமனையில் உரொட்டி சுடுவோருக்கு உதவுவது எனப் பல்வேறு சிறுவேலைகளைச் செய்துவந்தார் கார்க்கி.
அவரின் பாலைவன வாழ்வில் சோலையாய் அமைந்தவர் அவரின் பாட்டியார் அகுலினா கஷிரினா (Akulina Kashirina). சிறந்த கதைசொல்லியாகவும், நாட்டுப்புறப் பாடகியாகவும் விளங்கிய அப்பாட்டியாரால் கார்க்கிக்கும் அத்திறன்கள் கைவரப்பெற்றன. பின்னாளில் கார்க்கி ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாக இவை அவருக்குப் பேருதவி புரிந்தன என்பதனைக் கார்க்கியின் தன்வரலாற்று நூலின் வாயிலாக நாமறிகின்றோம்.
வோல்கா ஆற்றில் இயங்கிக்கொண்டிருந்த பயணக் கப்பலில் (Volga Riverboat) வாலுவராக (சமையற்காரர்) பணியாற்றிவந்த மிகைல் அகிமோவிச் (Michaël Akimovich) என்பவருக்கு உதவியாளராய்த் தம்முடைய பதினைந்தாவது வயதில் பணியில் சேர்ந்தார் கார்க்கி. அந்த அறிவார்ந்த வாலுவர் தம்முடைய சிறிய அறையில் ஓர் நூலகமே வைத்திருந்தார்; அங்கிருந்த இலக்கிய நூல்களை அவர் கார்க்கிக்கும் படிப்பதற்குத் தந்து இலக்கியம் படிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே கார்க்கியிடம் வளர்த்திருக்கின்றார். தம்முடைய இடைவிடா வாசிப்புப் பழக்கத்திற்கும் இலக்கியப் பயிற்சிக்கும் படைப்பாக்கத் திறனுக்கும் அவ் வாலுவரின் வழிகாட்டுதலும் அவரளித்த நூல்களும் பெருந்துணையாயின என்று தம்முடைய ’My Childhood’ எனும் ’தன்வரலாற்றுப் புனைவில்’ நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றார் மாக்சிம் கார்க்கி.
கார்க்கியின் படைப்புகள்
இயல்பிலேயே இயற்கையை இரசிக்கும் குணமும் கற்பனை வளமும் மிகுந்தவரான கார்க்கிக்குத் தம் பாட்டியாரிடமிருந்து கதைசொல்லும் திறனும், வாலுவரின் உதவியால் இலக்கிய வாசிப்பனுபவமும் கிட்டவே, கார்க்கி எனும் எளிய இளைஞன் ஓர் மகத்தான படைப்பாளியாய் உருவெடுத்தான்.
மாக்சிம் கார்க்கியின் முதல் கவிதை அவரின் 19ஆவது வயதில் இரஷ்ய இதழொன்றில் வெளிவந்திருக்கின்றது. 1892இல் அவரது முதல் சிறுகதையான ’மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. அக்காலகட்டத்தில் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் எனும் தம் பெயரை மாற்றி, ’மாக்சிம் கார்க்கி’ என்பதனைப் புனைபெயராகக் கார்க்கி வைத்துக்கொண்டார். கார்க்கி என்பதற்கு இரஷ்ய மொழியில் ’கசப்பு’ என்று பொருள். குழவிப் பருவந்தொட்டுத் தாம் வாழ்வில் சந்தித்த அவலங்கள் கசந்ததனால் அப்பெயரைச் சூட்டிக்கொண்டார் என்று தெரியவருகின்றது.
கார்க்கி, தாம் எழுதிய புகழ்வாய்ந்த சிறுகதைகளைத் தொகுத்து, ‘படங்களும் கதைகளும்’ (Sketches and stories) எனும் பெயரில் 1898இல் வெளியிட்டார். அவற்றில் சில கதைகள் அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் வேறுசில கதைகள் இரஷ்யாவின் பலவிடங்களுக்கும் அவர் பயணித்தபோது சந்தித்த மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் கருப்பொருளாய்க் கொண்டவை.
கார்க்கியின் எழுத்துக்கள் அவற்றின் இலக்கிய மொழிநடைக்காகவும் மக்களின் மனவுணர்வுகளைத் துல்லியமாய்க் காட்சிப்படுத்தும் சிறப்புக்காகவும் இரஷ்ய இலக்கிய பண்பாட்டுத் தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
கார்க்கியின் முதல் புதினமான ’பாமா கோர்தயேவ்’ (Foma Gordeyev) 1899இல் வெளியாயிற்று. மிகவும் வறிய சூழலில் வளர்ந்த பாமா எனும் இளைஞன் பின்னாளில் புரட்சிகரமான அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டதைப் பேசுபொருளாய்க் கொண்டது இப்புதினம். சமூகநீதி, உழைக்கும் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் ஆகியவற்றை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட இது, இரஷ்ய மக்களின் வரவேற்பைப் பெற்று, தம்மை ஓர் இலக்கிய ஆளுமையாய்க் கார்க்கி நாட்டில் நிலைநிறுத்திக்கொள்ள வழிவகை செய்தது.
மாக்சிம் கார்க்கிக்குப் புகழ்சேர்த்த படைப்புக்களாகப் பல இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை: கீழ்த்தட்டு மக்கள் (The Lower Depths) எனும் நாடகம்; தாய் (Mother) எனும் புதினம்; என் குழந்தைப் பருவம் (My Childhood), இவ்வுலகில் (In the world), என் பல்கலைக்கழகங்கள் (My universities) என மூன்று பகுதிகளாக (trilogy) அவரெழுதிய தன்வரலாற்றுப் புனைவு நூல்கள் ஆகியவை. அவற்றின் உள்ளடக்கம் குறித்துச் சுருக்கமாய்க் காண்போம்.
கீழ்த்தட்டு மக்கள்
இந் நாடகம் கார்க்கியால் எழுதப்பட்டு 1902ஆம் ஆண்டு அரங்கேறியது. வீடு வாசலற்ற ஏழைமக்கள் தங்குவதற்காக, 19ஆம் நூற்றாண்டில் இரஷ்யாவில், கட்டப்பட்டிருந்த விடுதியொன்றில் குடியிருப்போரின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக்கின்றது இந்நாடகம். வறுமை, குடிப்பழக்கம், வாழ்வின்மீதான அவநம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டிருந்த கீழ்த்தட்டு மக்களையும் அவர்களை அலட்சியப்படுத்திப் புறக்கணிக்கும் மேல்தட்டினரையும் இந்நாடகம் துல்லியமாய்க் காட்சிப்படுத்தியது. இரஷ்ய இலக்கியத்தின் தரமான படைப்பாகக் கருதப்படுகின்ற இந்நாடகத்தைத் தழுவிப் பல திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உருவாக்கப்பட்டன.
தாய்
மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ்பெற்ற புதினம் ’தாய்.’ இது, 1906ஆம் ஆண்டு வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணான பெலகேயா நீலவ்னாவையும் (Pelageya Nilovna) அவள் மகன் பாவெலையும் (Pavel) சுற்றிப் பின்னப்பட்டது இப்புதினம்.
கணவனை இழந்த கைம்பெண்ணான நீலவ்னா, தன் குடும்பத்தைக் காப்பாற்ற அரும்பாடு படுகின்றாள். ஆலையில் வேலை செய்துவந்த அவள் கணவன் மிகையில் விலாசவ் (Michael Vlasov) மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தால் குடல்வெந்து இறந்துவிட, தன் மகன் பாவெலை நற்குணமுடையவனாய் வளர்க்க நினைக்கின்றாள் நீலவ்னா. போராட்ட வாழ்க்கையை அவள் வாழ்ந்துவந்த போதிலும் அன்பானவளாகவும், அக்கம்பக்கத்தவர் மதிக்கும் வகையில் நேர்மையும் கடின உழைப்பும் கொண்ட பெண்மணியாகவும் வாழ்ந்து வருகின்றாள்.
உழைக்கும் தொழிலாள வர்க்கத்தினர் படும்பாட்டையும் அவர்தம் இன்னல்களையும் கண்டு நெஞ்சுநொந்த அவளுடைய மகன் பாவெல், அரசாங்கத்துக்கெதிரான புரட்சி அரசியலில் இறங்குகின்றான். ஒடுக்கப்பட்ட தொழிலாளிகளின் நல்வாழ்வுக்குப் பாடுபடும் பொதுவுடைமைப் போராளிகளின் இயக்கத்தில் இணைகின்றான். தன்னுடைய அர்ப்பணிப்பு உணர்வால் ஒரு கட்டத்தில் அப்புரட்சி இயக்கத்தின் தலைவனாகவும் உயர்கின்றான்.
தொடக்கத்தில் தன் மகன் பாவெலின் நோக்கத்தையும் செயற்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறும் அந்தத் தாய், அவனுக்கு இரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னனால் ஏதேனும் தீங்கு நேருமோவென்று அஞ்சுகின்றாள். பின்பு, மகனின் சித்தாந்தத்தையும் அவன் சார்ந்திருக்கும் இயக்கத்தின் உயர்ந்த நோக்கத்தையும் புரிந்துகொண்டு தானும் அப்புரட்சி இயக்கத்தில் இணைகின்றாள்.
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரஷ்யாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் வறுமை, அவர்களுக்கெதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை, அந்த அடக்குமுறைகளாலும் சர்வாதிகாரத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் சமதர்மச் சமுதாயத்தை மலரச்செய்ய மேற்கொண்ட போராட்டங்கள் ஆகியவற்றை இப்புதினம் மிகையின்றி எதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கின்றது.
படைப்பாளிகள் பலரும் கவனிக்கத் தவறும் அல்லது குறிப்பிட மறந்துவிடும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் துணிவையும் இடுக்கண் கண்டு அழியாத மனவுறுதியையும் இப்புதினத்தில் கார்க்கி பதிவுசெய்துள்ளமை பாராட்டுக்குரியது.
புதினத்தின் இறுதியில் அரசாங்கத்துக்கெதிரான தன்னுடைய புரட்சிச் செயற்பாடுகளுக்காகப் பாவெலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது. மகனின் மரணம் அந்தத் தாயை நொறுக்கினாலும் அதற்காகச் சோர்ந்துவிடாமல் அப்புரட்சி இயக்கத்திலிருந்தபடியே சமூக நீதிக்காகத் தொடர்ந்து போராடுகின்றாள் அவள்.
பாவெலும் அவனைப் போன்ற புரட்சியாளர் பலரும் செய்த தியாகத்தின் பயனாய் வருங்கால இரஷ்யாவில் சமூகநீதி மலரும்; உழைக்கும் ஏழைமக்களுக்கு நற்பொழுது புலரும் எனும் நம்பிக்கையை விதைத்து நிறைவுறுகின்றது இப்புதினம்.
தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் இப்புதினம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்களில் திரு. தொ.மு.சி. இரகுநாதன் அவர்களுடையது குறிப்பிடத்தக்க ஒன்று.
தன்வரலாற்றுப் புனைவு நூல்கள்
1. என் குழந்தைப் பருவம்: 1913இல் வெளிவந்த இந்நூலில் தம்முடைய தாய், பாட்டி, மாற்றாந் தகப்பன் ஆகியோருடனான தமது உறவு, வறுமை மிகுந்த இளமை வாழ்க்கை, அக்கம்பக்கத்துச் சிறார்களுடனான நட்பு, பள்ளிநாட்கள், புரட்சி இயக்கத்துடனான தம் தொடக்க காலத்தொடர்பு ஆகியவை குறித்த நினைவுகளைப் பதிவுசெய்திருக்கின்றார் கார்க்கி.
2. இவ்வுலகில்: 1915இல் வெளியான இந்நூல் கார்க்கியின் பதின்மப் பருவம், அவர் செய்த சிறுசிறு வேலைகள், சந்தித்த மனிதர்கள், இரஷ்யாவின் பல பகுதிகளில் அவர் வாழ்ந்த வாழ்க்கை, புரட்சி இயக்கத்துடனான அவரின் நீடித்த தொடர்பு, சமூகத்தில் தமக்கென ஓர் இடத்தைப் பெறுவதற்கான அவருடைய போராட்டம் ஆகியவற்றை ஆவணப்படுத்தியிருக்கின்றது.
3. என் பல்கலைக்கழகங்கள்: கார்க்கியின் தன்வரலாற்றுப் புனைவு நூல்கள் வரிசையில் இறுதி நூலான இது 1925இல் வெளிவந்தது. இதில் தாம் ஓர் எழுத்தாளராகச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டமை, பிற எழுத்தாளர்களுடனான நட்பு, உலகின் பல நாடுகளுக்கும் பயணித்தமை, இலக்கியம், பொதுவுடைமை குறித்த தம் விமர்சனப் பார்வை, ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமை, தாம் இரஷ்யாவிலிருந்து வெளியேறி இத்தாலியில் குடியேறியமை எனப் பல்வேறு விசயங்களைப் பேசுகின்றார் கார்க்கி.
கார்க்கியின் தன்வரலாற்று நூல்கள் இரஷ்ய மாணவர்களுக்கு இலக்கிய வகுப்புகளில் இன்றும் கற்பிக்கப்படுவது இவற்றின் தனிச்சிறப்பையும் இலக்கியத் தரத்தையும் புலப்படுத்துகின்றன.
கார்க்கியின் அரசியல் வாழ்வும் சந்தித்த சிக்கல்களும்
இலக்கிய ஆளுமையாக மட்டுமின்றித் தொடக்க காலம் முதலே ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சியில் இரஷ்ய சமூக சனநாயகத் தொழிற்கட்சியின் (The Bolshevik Party) சார்பில் ஈடுபட்ட போராளியாகவும் விளங்கினார் மாக்சிம் கார்க்கி. 1917இல் போல்ஷெவிக்ஸ், விளாடிமிர் லெனின் (Vladimir Lenin) தலைமையில் மன்னராட்சிக்கு எதிராக நடாத்திய புரட்சியிலும் பங்கேற்றார் அவர். அவ் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பின் ஜார் மன்னராட்சி வீழ்ந்துபட்டது.
மகாகவி பாரதிகூட இப்புரட்சியின் வெற்றியைக் கொண்டாடி,
”மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்” என்று பாடியிருப்பதை நாம் நினைவுகூரலாம்.
அதன்பின்னர் லெனின் தலைமையில் போல்ஷெவிக்குகளின் ஆட்சி இரஷ்யாவில் ஏற்பட்டது. தொடக்கத்தில் கார்க்கிக்கும் லெனின் அரசாங்கத்துக்குமிடையிலான உறவு சுமுகமாகவே இருந்தது. எனினும், படைப்பாளிக்குரிய படைப்புச் சுதந்திரத்தோடு கார்க்கி எழுதியவை லெனின் அரசாங்கத்தால் தணிக்கை செய்யவும் தடைசெய்யவும் பட்டதனால் 1921வாக்கில் லெனினுக்கும் கார்க்கிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. கார்க்கி தம்முடைய போக்கை மாற்றிக்கொள்ளாததால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்; அவரின் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரஷ்யாவைவிட்டு வெளியேறி இத்தாலியில் குடியேறினார் கார்க்கி. 1932இல், அப்போது இரஷ்யாவின் தலைமைப் பொறுப்பிலிருந்த, ஜோசப் ஸ்டாலினின் அழைப்பின் பேரில் இரஷ்யாவுக்குத் திரும்பினார் அவர். அதனைத் தொடர்ந்து இரஷ்ய எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மாக்சிம் கார்க்கி நியமிக்கப்பட்டார்; அவர் பிறந்த இடமான நிஸ்னி நவ்கரோட், ’கார்க்கி’ எனப் பெயர்மாற்றம் பெற்றது.
ஆனால், ஸ்டாலினுக்கும் கார்க்கிக்குமான உறவும் நன்முறையில் தொடரவில்லை. ஸ்டாலினின் எதேச்சாதிகாரப் போக்கையும் அவருக்கெதிரான கருத்துக்களை வெளியிடுவோரை முகாம்களில் (Gulag camps) அடைத்துச் சித்திரவதை செய்யும் அவரின் முறையற்ற நடவடிக்கைகளையும் தம் எழுத்துக்களில் கார்க்கி கடுமையாக விமர்சித்தார். எனவே, மீண்டும் அவரின் எழுத்துக்கள் தணிக்கைக்கும் தடைக்கும் உள்ளாயின.
கார்க்கியின் மரணம்
1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிமோனியா காரணமாக மருத்துவ சிகிச்சையில் கார்க்கி இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 18ஆம் நாள் அவரின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது. அம் மரணம் ஐயத்திற்குரிய ஒன்றாகவும் ஸ்டாலினுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகரித்துவிட்ட நிலையில் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் நிகழ்த்தப்பட்ட ஒன்றாக அஃது இருக்கலாம் என்றும் ஊகங்கள் நிலவுகின்றன. இன்றுவரை விடைகாண முடியாத மர்மமாகவே அது நீடிக்கின்றது.
அவர் மரணத்தையறிந்து, இரஷ்ய மக்களும் கார்க்கியின் உலகளாவிய வாசகர்களும் படைப்புலக நண்பர்களும் பெருந்துயருற்றனர். அவரின் சவ ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்; அவரின் இலக்கிய, சமூக, அரசியல் பங்களிப்புகள் குறித்த விவாத அரங்குகள் பலவிடங்களிலும் நடத்தப்பட்டன.
சோசலிச எதார்த்தவாதத்தின் பிதாமகராகக் கருதப்படும் (Father of socialist realism) மாக்சிம் கார்க்கியின் சிந்தனைப்போக்கும், எழுத்துக்களின் தாக்கமும் உலகம் முழுதுமுள்ள எழுத்தாளர்கள் பலரிடமும் காணப்படுகின்றன. சமூகநீதிக்கும் பொதுவுடைமைக்கும் பாடுபட்டவராகவும், தொழிலாளர்களின் நண்பராகவும், காலத்தால் அழியாத அமர இலக்கியங்கள் பல படைத்த எழுத்தாளராகவும் உலக மக்களால் என்றும் நினைவுகூர்ந்து போற்றப்படுவார் மாக்சிம் கார்க்கி.
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- https://en.wikipedia.org/wiki/Maxim_Gorky.
- https://www.rbth.com/arts/2014/07/15/the_final_days_of_russian_writers_maxim_gorky_36685
- https://theculturetrip.com/europe/russia/articles/maxim-gorky-at-150-12-things-you-need-to-know-about-the-russian-writer/
- https://www.hindutamil.in/news/blogs/37091-10.html
- https://digital.janeaddams.ramapo.edu/items/show/4942
- https://www.britannica.com/biography/Maxim-Gorky