என் ஜன்னலுக்கு அப்பால் – காக்கை குருவி எங்கள் ஜாதி

0

பாஸ்கர்

காலை எழுந்தவுடன் சமையல் அறை திறக்கும் சப்தம் கேட்டவுடன் ஒரு காகம் வந்து அமரும். அதற்காகவே கொஞ்சம் சப்தம் கேட்கும்படி கதவைத் திறப்பேன். வந்தவுடன் அது என்னைப் பார்க்கும். நான் அதனைப் பார்ப்பேன். இது நேற்று வந்த ஒன்றா, இது வேறா என எப்படிப் புரிந்துகொள்வது? நமக்குத் தான் பெயர், ராசி, எல்லாம். அவை எங்கு இருந்தாலும் அதற்கு ஒரே பெயர் தான் – இருக்கும் சிறு உணவு அல்லது ஏதாவது பலகாரம். ஒன்றை ஓரத்தில் வைத்தவுடன் அது மெல்ல தத்தி, பின்னோக்கி சென்று நான் உணவிட வசதியாக நகர்ந்து கொள்ளும். சில சமயம் இது நேற்று வந்த ஒன்று தான் எனத் தோன்றும்.

உணவு வைத்தவுடன் தனது உறவுகளை அழைக்கும். அடுத்த நிமிடம் இரண்டு வந்து சேரும். சில சமயம் இந்தக் கூட்டத்தில் புறா அல்லது மைனா வந்து விடும். எந்தப் பிரிவினையும் இன்றி அதனதன் உணவுக் கடமையை முடித்துவிட்டுப் பறந்து போகும்.

பறவைகள் ஞானிகள். அவசியம் என்றால்தான் கூட்டமாய்ப் பறத்தல் நிகழும். மற்ற நேரமெல்லாம் தனிமை. சில பறவைகள் ஒரு கிளையில் உட்கார்ந்தால் கிட்டதட்ட அரை மணி நேரம் இடத்தை விட்டு நகராது. பலமான காற்று அடித்தால் கூட அது கிளையில் ஆடிக்கொண்டு இருக்கும். ஒரு தியான நிலை.

அது போலவே உணவு விஷயத்திலும். ஏதோ ஒரு சமயம் தான் கொஞ்சம் சண்டை அவைகளுக்குள் வரும். பெரும்பாலும் அவை ஒற்றுமையின் சின்னம். அருகருகே அமர்ந்து அன்பு சொல்லும். சில சமயம் உணவு ஊட்டும். சில முறை உணவு போடாத நாளில் என் மனைவி அலுவலகம் செல்லும்போது தலைக்கு மேல் பறந்து ஒரு நினைவூட்டல் செய்யும்.

பறவைகளின் குரல் ஒரு தொடர்வண்டி போல. இங்கு ஒன்று கத்தி அடங்கினால் அதற்கு ஒரு எசப்பாட்டு உடனேயே வரும். அந்தத் திக்கை நோக்கினால் வேறு ஒரு குரல் கேட்கும். அதனைப் பின்தொடர்ந்தால் அது வேறு ஒரு பறவையின் இடத்துக்கு இட்டுப் போகும்.. இதற்காக அல்லாடுவது ஒரு பெரிய சந்தோஷம். எந்தப் பறவை, என்ன குரல், என்ன நிறம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். எனக்குப் பறவைகள் வேண்டும். அதற்கு உணவிட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பு புறாக்கூட்டம் ஒன்று இது போல என்னைக் கவர்ந்தது. இப்போது முன் பின் தெரியாத பறவைகள் இங்கு .

இப்போது இந்தப் பின்னிரவில் அவை எங்கு இருக்கின்றன என்பதை அறியேன்? ஒரு சப்தம் இல்லை. மரங்கள் ஆட்டத்தை நிறுத்தி நேரமாகிறது. அடர் இருட்டு. எங்கே இருக்கிறார்கள், எனது தினசரி காலை விருந்தினர்கள்? நம்மைப் போல அது அடுத்த நாள் பொழுதுக்குத் திட்டம் போடுமா என்ன?

அவை சுதந்திரப் பறவைகள். சிறையை அறியாத ஒன்று? விடுதலையைத் தாண்டி அதற்கு ஒன்றும் தெரியாது. உயிர் வாழக் கொஞ்சம் போராட்டம். அவ்வளவு தான். பறவைகள் உலகம் மர்மம் அற்றது. சூசகம் இல்லாத ஒன்று. என்னை அது சிநேகிதன் ஆகச் சேர்த்துக்கொண்டதே பெரிய விஷயம்.

எனக்கு அதன் நட்பு வேண்டும். ஒரு நாள் ஒரு பறவை எனது தோளில் அமர்ந்துகொள்ள நான் நடந்து செல்ல வேண்டும். இது தான் எனக்கும் அதற்கும் உள்ள உடன்பாடு. என் தோள் தயார். யார் வரப்போகிறார்கள் என்ற மர்மம் எனக்கு விலகவில்லை. ஒரு வேளை இரண்டு தோள்களுக்கும் வருமோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *