இரப்பேலின் இரகசிய அனுபவம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.
அது இப்படியிருந்தது.
இரவு.
வானமேகங்களுக்கிடையில் காட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கதவு திறக்கப்பட்டு அதுவழியாக ஒரு அற்புத வெளிச்சம் கடந்து வந்தது.
மிகவும் இரகசியமாக சுயமாக தயாரித்த திராட்சை ரசத்தின் கடுமையான போதையிலிருந்த காவல்காரன் இரப்பேல் முன்பெல்லாம் அதைப்பார்க்க நினைத்ததில்லை. ஆனால் பிறகு பிரகாசத்தின் தீவிரம் காரணமாக இரப்பேலுக்கு இறுக்கமாக மூடியக் கண்களைத் திறக்காமல் வேறுவழியில்லை. வலது கையை உயர்த்தி பிரகாசத்தை முடிந்தவரை வரவிடாமல் எதிர்க்க முயன்றான். அது வீண் முயற்சி என உணர்ந்த இரப்பேல் பொறுமையற்றுப் புலம்பினான். யாருக்கும் தெரிந்து ஒரு துரோகமும் செய்யாத ஒரு சுத்த ஆன்மாவைத் தண்டிப்பது எந்த முறையில் நியாயம் எனக்கேட்டான். பதில் வரவில்லை. டார்ச் வெளிச்சம்……………………. இரப்பேல் நினைத்தது போலவே அது ஒரு பெரிய டார்ச்சின் வெளிச்சமாயிருந்தது. நிறுத்தப்படவுமில்லை.
ஐயே! இரப்பேல் எழுந்திருக்கலாம் என நினைத்து பலமாக முயற்சித்தான். அது அவ்வளவு சுலபமில்லை. நாடி நரம்புகள் முழுவதும் ஓய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் இறுகப் பிடித்துக்கொண்டு இரப்பேல் எழுந்தான்.
அற்புதப் பிரகாசம் கூறியது. ”இரப்பேல் நான் உன்னைத் தேடித்தான் வந்தேன்.”
அதைக் கேட்டு நோஹாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு போல நிறைந்த வெள்ளத்தில் இரப்பேல் ஒரு பாய்மரக்கப்பலுக்கு இணையாக ஆடினான். இமைகள் அதற்குப்பிறகு ஒரு முறைகூட மூடவில்லை. கண்களின் வெண்மைப்பகுதியிலும், கரு விழியிலும் அற்புதப்பிரகாசம் அருமையோடு நின்றது. கடுமையான பரபரப்புக் காரணமாக இரப்பேலுக்குத் தொண்டை வறண்டது. உடல் முழுவதும் புளகாங்கிதம் அடைந்தது.
அற்புத வெளிச்சம் மறுபடியும் பெயர் சொல்லி அழைத்து இப்படிக்கூறியது.
“நான் எதற்காக வந்திருக்கிறேன் தெரியுமா உனக்கு ஒரு சாவி தருவதற்காக”
“சாவியா? ” இரப்பேல் தடுமாறிக்கொண்டே கேட்டான்.
“ஆமாம். உன்னுடைய சேமிப்பு, வானத்தில் எங்குள்ளதோ அதன் சாவி” , அற்புதவெளிச்சம் கூறியது.
இரப்பேலின் கண்கள் அகன்றது. வெளிச்சம் கண்ணிற்குள் கொஞ்சம் கூடுதலாகக் கடந்தது, இரப்பேல் ஆச்சரியத்துடன் நிலைத்து நின்றான்.
“கைகளை நீட்டு” அற்புதவெளிச்சம் அருளியது.
இரப்பேல் அதை அனுசரிப்பவனாக இருகைகளையும் நீட்டினான். அவைகளில் என்ன அதிசயம் ஒரு தங்கத் தாக்கோல் (சாவி) வந்து விழுந்தது. அது சிறப்பான வடிவமுடையதும் தக தகவென மின்னக்கூடியதுமாக இருந்தது. ரப்பேல் பக்திப்பரவசத்துடன் சாவியை கண்களிலும் உதட்டிலும் ஒப்பிக்கொண்டான். சில நிமிடங்கள் சென்றன. இரப்பேல் விழித்துப்பார்த்தான். அற்புத வெளிச்சம்!……….. பார்க்கப்பார்க்க மறைந்தது.
இரப்பேல் மூச்சடக்கி நிற்கவே சுற்றிலும் கூரிருட்டாக இருந்தது. ஒன்றும் பார்க்க முடியவில்லை. கையில் ஒரு சாவி இருக்கிறது என்ற பலத்த நம்பிக்கையில் கையை இறுக மூடிக்கொண்டு இரப்பேல் இருட்டு வழியாகத் தட்டுத்தடுமாறி எங்கென்று தெரியாமல் நடந்து கொண்டிருந்தான்.