செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(413)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

-திருக்குறள் -159 (பொறையுடைமை)

புதுக் கவிதையில்…

வரம்பு கடந்து நடப்பவர்
வாயில் வரும்
கொடிய சொற்களையும்
கொஞ்சமும் கோபமின்றி
பொறுத்துக்கொள்ளும்
பெருந்தன்மையுள்ளவர்,
இல்வாழ்வில் இருந்தாலும்
இழுக்கில்லாத்
துறவியர் போலத்
தூயரே ஆவார்…!

குறும்பாவில்…

தீய சொற்களால் நெறிகடந்து
திட்டுபவரையும் பொறுத்துக்கொள்வோர் இல்லறத்தில் இருந்தாலும்,
துறவியர் போலத் தூயவராவாரே…!

மரபுக் கவிதையில்…

வரம்பு முறையே இல்லார்தம்
வாயில் வருமே தீச்சொல்லே,
அரமே போலும் அச்சொல்லை
அகத்தில் கொளாமல் பொறுத்தருளும்
தரத்தி லுயர்ந்த மேலோர்கள்,
தாமே உயர்வர் இல்லறத்தில்
பரமன் தேடும் துறவியர்போல்
பண்பால் தூயர் ஆவாரே…!

லிமரைக்கூ…

தீச்சொற்களால் திட்டுவர் தீயவரே,
அதனையும் பொறுத்தருளும் மேலோர் இல்வாழ்விலிருப்பினும்
பற்றற்ற துறவியர்போல் தூயவரே…!

கிராமிய பாணியில்…

பொறுமவேணும் பொறுமவேணும்
வாழ்கயில எதுலயும்
பொங்கியெழாத பொறுமவேணும்..

மொறதவறி நடக்கிற கெட்டவங்க
வாயில வாற
கொடுஞ்சொல்லக் கேட்டாலும்
கோவப்படாம பொறும காக்கிற
பெரியவுங்க குடும்பவாழ்வுல இருந்தாலும்
ஒலக ஆசய உட்டுப்போன
தொறவியளப் போல
நடத்தயில ஒசந்தவங்களே..

அதால
பொறுமவேணும் பொறுமவேணும்
வாழ்கயில எதுலயும்
பொங்கியெழாத பொறுமவேணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *