திவாகர்

உலகத்திலேயே மிகப் பெரிய வரத்தைப் பெற்றவர் யாரென்றால் உறக்கம் தேவைப்படும்போது அதை எளிதாக வரவழைத்துக்கொண்டு ஆனந்தமாக அனுபவித்து உறங்குபவர்தாம்.

உறக்கம் பெரியதொரு சுகம்தான். உறக்கத்தில் மட்டுமே நாம், நம்மை மறக்கமுடியும். உறக்கம் இறைவன் உயிரினத்துக்குத் தந்த பரிசு.அதை சத்விநியோகம் செய்து கொள்வது கூட பெருங்கலைதான். ஏனெனில் மனிதகுலம் பெரும்பாலும் இந்தக் கலையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல்தான் தவிக்கிறது. அதற்கேற்றாற்போலத்தான் இந்த நவீன காலமும் காலத்தின் மாற்றத்தில் தோன்றிய வசதிகளும் மனித குலத்தை உறக்கத்தின் பக்கம் போகாமல் அலைக்கழிக்கிறது. இயற்கை முறையில் வரவேண்டிய உறக்கம் செயற்கை முறையில் தருவிக்கப்பட்டு அதனால் கிறக்கம் மட்டுமே கிடைக்கிறது என்பதும் நிஜம்தானே..

வாழ்க்கையில் எது குறைந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். உறக்கம் குறைந்தால் நிச்சயம் உடல்நிலைக்குக் கெடுதல்தான். உறக்கம் குறைந்தால் முதலில் எரிச்சல்தான் வரும். நம் மனநிலையும் கெடும்.. இப்படிப்பட்ட உறக்கத்தைப் பற்றி நந்திதா அவர்கள் வேறு வகையில் வல்லமையில் எழுதியது மிகச் சரியாக மனதுக்குப்பட்டது. இதோ நந்திதா அவர்களின் எழுத்தில் உறக்கத்தின் மகிமையைக் கொஞ்சம் படியுங்களேன்.

உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டியது மலை போல் இருக்க என்னை சீண்டிப் பார்ப்பாய். உன் பிடியிலிருந்து விலக பல முயற்சிகள், பல உத்திகள், எல்லாம் பயன் அற்றுப் போயின.சில சமயம் எனது பலஹீனத்தைப் பயன் படுத்த உன் சாகசத்தில் பலியானேன்.

பரிக்ஷை சமயத்தில் நான் இப்படி பலியாவதைக் கண்டு என் அம்மா பதறி எனக்கு காவலாக இருந்திருக்கிறாள். அவளைக் கண்டு நீ ஓடி ஒளிந்து கொண்டாய். பரிக்ஷைக்குப் பிறகு, பள்ளி திறக்கும் வரை நாம் இருவரும் உல்லாச பறவைகளாகி கனவு உலகில் பறந்து மெய் மறந்து இருந்தோம்.

சே! மறுபடியும் பள்ளி திறந்து படிப்பு, அதன் பிறகு, மேல் படிப்பு. பட்டங்கள். பொறுப்புகள் சேர சாதிக்க நினைத்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கொஞ்சம் உன்னிடமிருந்து விலகினேன். ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமானால் மற்றொன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது இயற்கையின் விதி. சத்தியமாக நிரந்தரமாக உன்னை விட்டு விலக நினைக்கவில்லை. தற்காலிகமாகத்தான். சாதனைகள் வெற்றிக​ளைக் குவித்தன. பெரிய வேலைகள் என் வீடு தேடி வந்தன. என் வேலையில் நான் கண்ட வெற்றி, அதைத் தொடர்ந்த பெருமைகள், பரிசுகள், ​கெளரவங்கள், பட்டங்கள் என்னை வெறியனாக்கியது. இப்பெருமைக​ளை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள பேராசைக் கொண்டேன். என் பதவி பணம், வீடு, வாகனம், ஆடம்பர வாழ்க்கையை அள்ளிக் குவித்தன. அதே சமயம் நமக்குள் ஏற்பட்ட விலகல், விரிசலாகி நிரந்தரமாக உன்னை முழுவதுமாக இழந்து தொலைத்தும் விட்டேன். உன்னை மதிக்காத என்னை உதறி விட்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு என்னைப் பழி வாங்குகிறாய். உன் அருமையை இப்பொழுது உணர்ந்து விட்டேன். நீ கொடுத்த தண்டனை போதும்.

நீ முழுவதுமாக என்னை விட்டு விலக என் உடல் கெட்டு விட்டது. உணவு செரிப்பது இல்லை. முன் போல் அலுவலத்தில் வேலையைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் மேலதிகாரிகள் என்னை விட்டு வேறு ஆட்களைத்தேடி செல்ல எனக்கு வேலைப் போய்விட்டது. நண்பர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

அம்மா பாவம். எவ்வளவோ முயற்சி எடுக்கிறாள். நான் பழைய நிலைக்கு வர தினமும் கோவில், அர்ச்சனை, சதா வீட்டில் மந்திர ஓசை, யாகம் ஏன் மாந்திரீகம் கூட பார்த்து விட்டாள். பெரிய பெரிய டாக்டர்களிடமும் சென்றேன். என்னைச் சுற்றி மருந்துகள். இப்பொழுது 24 மணி நேரம் படுக்கையில் புரளுகிறேன்.

கண்ணாடியில் என் முகம்……. எனக்கே சகிக்கவில்லை. கண்கள் சிவந்து கன்னங்கள் ஒட்டி, தோல் சுருங்கி…நடந்தால் தள்ளாட்டம். சில சமயம் ஆள் மாறாட்டமாகத் தெரிகிறது. இதற்கு காரணம் நீதான். நீயேதான். உன்னை விட்டு விலகியதற்கு நீ கொடுக்கும் தண்டனை. கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்குப் பதில் ஒரே அடியாக கொன்று விடு.

ஐய்யோ.. நான் படும் அவஸ்தையைப் பார். எங்கே போய் விட்டாய். உன்னை எங்கே போய் தேடுவது. என் ஆஸ்தி பூராவும் செலவு செய்தால்கூட உன்னைக் கண்டு பிடித்துக் கொடுக்க முடியாது போல் இருக்கிறதே…

டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கூறுவது.. நான் படும் அவஸ்தைக்கு உன் பிரிவே காரணம். எனக்கும் புரிகிறது. ஆனால் உனக்குப் புரிய வில்லையே. அம்மாவின் மடிதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நீ இல்லாததால் அது கூட முள்ளாய்த் தெரிகிறது இப்பொழுது.

கெஞ்சிக் கேட்கிறேன். வந்து விடு.

அழகான எழுத்தில் உறக்கத்தின் பெருமையை வடித்த நந்திதா அவர்கள் இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: ஞா. கலையரசியின் –

1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம் மிஸ் இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் 1984 ல் கே பிரியான்ட் (Gay Bryant) என்பவர் தாம், ஓர் இண்டர்வியூவில் இவ்வாறு சொன்னார் என்றும்,இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

கண்ணாடிக் கூரை என்றால் என்ன?

பெரிய வணிக நிறுவனங்களிலும், கம்பெனிகளிலும் மிக உயர்ந்த பதவிகளுக்கான ஏணியில் ஓரளவுக்குப் மேல் ஆண்களுக்கிணையாக பெண்களால் ஏற முடியாமல், தடுக்கும் நிலையைத் தான் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *