செப்டம்பர் 14, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. ரவிக்குமார் அவர்கள்

ravikkumar

சென்ற ஆசிரியர் தின விழாவையொட்டி, தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில் ஒன்றான “மணற்கேணி ஆய்விதழ்” சார்பாக “நிகரி விருது” அளித்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களாக, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களையும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் தலைமைஆசிரியர் துளசிதாசன் அவர்களையும் இனங்கண்டு பாராட்டிய திரு. ரவிக்குமார் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

சமத்துவ ஆசிரியர் விருதுகளை வழங்கிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், “சமுதாய அக்கறையை மாணவர்களிடம் விதைப்பவரே உண்மையான ஆசிரியர்” என்று பாராட்டினார். சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கான மாறுதல்களைக் கொண்டுவர விரும்பினால் அதை இளைஞர்களிடம் இருந்தே துவக்க வேண்டும் எனச் சொன்ன அறிஞர்கள் பலர். “இளைய பாரதத்தினாய் வா வா வா” என்று எழுச்சியூட்டிப் பாடினார் பாரதி, அக்கொள்கையைக் கொண்ட மனிதருள் மாணிக்கம் ஜவஹர்லால் நேருவும் இக்கருத்தைக் குறிப்பிட்டே குழந்தைகளிடம் அன்பு செலுத்தினார், சிறுவர்களுக்கு கல்விக் கண் திறந்து இதனை முயற்சித்தார் கர்மவீரர் காமராசர், இளைஞர்களை கனவுகாணச் சொல்லி ஊக்குவித்தார் அப்துல் கலாம். அறிஞர் அனைவரும் முதிர்ந்த மூங்கில்களைக் காட்டிலும், விளையும் பச்சை மூங்கில்களை வளைப்பது சுலபம் என்பதை அறிந்து தங்கள் அறிவுரைகளை இளைஞர் குழுவிடம் எடுத்துச் சென்றனர்.

அரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல் மிக்கவர் என்றார் அம்பேத்கர். இந்நோக்கில் பள்ளி ஆசிரியர் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணர்ந்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவித்து ஆசிரியர் தின நாளில் அவர்களைக் கௌரவித்து மணற்கேணி ஆய்விதழ் சார்பாக “நிகரி விருது” அளித்து வரும், மணற்கேணி இதழ் மற்றும் அதன் நிறுவனருமான திரு. ரவிக்குமார் அவர்களின் பணி பாராட்டிற்குரியது. விருதின் நோக்கம் குறித்து எழுத்தாளர் ரவிக்குமார் விழாவில் ஆற்றிய உரையில், “மதிப்பெண் மட்டுமே நோக்கமாகக் கொண்டு சென்று கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி வகுப்பறையைச் சமத்துவமாக நடத்துகிற ஆசிரியர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கான பிரக்ஞையுடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்,” என்றார்.

இனி தொடர்வது, தமிழகம் நன்கறிந்த “மணற்கேணி திரு. ரவிக்குமார்” பற்றியும் அவரது “மணற்கேணி ஆய்விதழ்” பற்றியும், அதன் “நிகரி விருது” பற்றியும் ஒரு சிறு அறிமுகம்.

எழுத்தாளர் திரு. ரவிக்குமார் ஒரு வழக்கறிஞர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். மேலும், சமூகப் பணியாளரும், மணற்கேணி பதிப்பகத்தின் நிறுவனரும், மணற்கேணி தமிழ் ஆய்விதழின் ஆசிரியருமான இவர் 1961 இல் சீர்காழி வட்டம், மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் துரைசாமி – கனகம்மாள் இணையரின் மகனாகப் பிறந்து, பள்ளி நாட்களிலேயே ஆசிரியர் மூலம் பகுத்தறிவு சிந்தனைப் பாதையில் நடக்கத் துவங்கியவர். அண்ணாமலை பல்கலைக்கழக நாட்களில் நக்சல்பாரி அரசியலிலும், முற்போக்கு மாணவர் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர். பேராசிரியர் அ. மார்க்கஸ், பொ. வேலுசாமி அவர்களுடன் 1990 களில் இணைந்து நடத்திய “நிறப்பிரிகை இதழில்” இவர் வடித்த எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தி மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். தமிழகத்தின் தலித் அரசியலில், தலித் பண்பாட்டு எழுச்சியில், மனித உரிமை நடவடிக்கைகளில் இவர் காட்டிய ஈடுபாடு, பல ‘உண்மை அறியும் குழு’க்களை நிறுவவும், காவல்துறையினரின் அத்துமீறல்களை வெளிக்கொணரவும் உதவியது.

‘தடா’ ஒழிப்பு, மரணதண்டனை ஒழிப்பு மாநாடு போன்றவற்றில் 1990 ஆண்டுகளில் முன்னணியில் செயல்பட்ட இவர்; ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கம்’, ‘மக்கள் கல்வி இயக்கம்’, ‘மனித உரிமை இயக்கம்’, ‘பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்’ எனப் பல சமுதாய இயக்கங்கள் உருவாக ஆலோசகராகப் பின்னணியில் இருந்தும் பங்களித்துள்ளார். ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ காவல்துறையின் அடக்குமுறைகளைச் சந்தித்த பொழுதும், இந்துத்துவ சக்திகளால் இஸ்லாமியர், கிறிஸ்துவர் பாதிக்க நேர்ந்த பொழுதும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்துப் போராடியவர் திரு. ரவிக்குமார். காட்டு மன்னார் கோவில் சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற வாய்ப்பைத் தக்கவாறு பயன்படுத்தி, சமூகப்பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குப் பாடுபட்டதன் விளைவாக நரிக்குறவர்கள், புதிரை வண்ணார், பதிவுபெற்ற பாரம்பரிய மருத்துவர்கள், அரவாணிகள், நாட்டுப்புற கலைஞர்கள், வீட்டுப் பணியாளர்கள், நலவாரியங்களும் உருவாகின. அந்நாளைய முதல்வராக ஆட்சியில் இருந்த கலைஞரின் கான்கிரீட் வீடுகட்டும் திட்டத்திலும் பெரும் பங்கு வகித்தார். அவரது சமூகப்பணிகளுக்காக, ‘அண்ணா விருதை’ 2010 ஆம் ஆண்டில் பெற்றவர் திரு. ரவிக்குமார்.

ravikkumar with kalaingar

மணற்கேணி: தனித்துவம் பெற்ற மணற்கேணி இருமாத ஆய்விதழ் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் எண்ணிக்கை முப்பதையும் தாண்டியுள்ளது.

மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது:
நிகரி விருது – நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து பாராட்டுவது விருதின் நோக்கம்.

                     manarkaenimanarkaeni logo
2013 ஆம் ஆண்டு பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர்.
2014 ஆம் ஆண்டு பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் ‘ஆயிஷா’ இரா. நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப் பட்டுள்ளனர்.

Untitled

“பள்ளிப் பருவம்” என்ற மணற்கேணி பதிப்பக நூலின் பதிப்புரையில், திரு. ரவிக்குமார் அவர்கள் ‘நிகரி’ விருது தோற்றுவித்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறார், “பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பெற்றோர்கூடத் தம் பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறவேண்டும் என விரும்புகிற காலம் இது. அதனால்தான் ஆட்சியாளர்கள் ‘சமச்சீர் கல்வி’யைப் பற்றி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. சமூக, பொருளாதார பாகுபாடுகளைப் பள்ளிகளுக்குள் அனுமதித்துக்கொண்டு, அதைப்பற்றிக் கவலைப்படாமல், பாடத் திட்டங்களை மட்டும் ஒரேமாதிரியாக அமைத்துவிட்டால் கல்வியில் சமத்துவம் வந்துவிடும் எனக் கூறுவது கல்வியில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மறைப்பதற்கானதொரு தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்நாட்டில், ‘சமச்சீர் கல்வி’ குறித்த கல்வியாளர்களின் பேச்சுகள்கூட பாடத் திட்டங்களைத் தாண்டிச் செல்லாதது நமது துரதிர்ஷ்டம். சமத்துவக் கல்வியை வலியுறுத்தும் நோக்கில் ‘நிகரி – சமத்துவ ஆசிரியர்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவிருக்கும் மணற்கேணி, கல்வி குறித்த நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. அதன் துவக்கமாக “பள்ளிப் பருவம்” என்ற நூல் அமைந்தது,” என்று குறிப்பிடுகிறார்.

தமிழக கல்வி நிறுவனங்களில் நடைபெற்று , கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நாளேடுகளில் வெளியான சாதிவெறி நடவடிக்கைகள் பற்றிய ஒருசில சான்றுகளைக் குறிப்பிட்டு (http://manarkeni.blogspot.com/2014/09/blog-post.html), ஆதிதிராவிட / பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக எத்தனையோ முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தபோதிலும் பொதுவான கல்வியறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இந்தச் சமூகத்தினரில் கல்வி அறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காணமுடிகிறது. இதற்கு அரசாங்கமும் சமூகமும் சேர்ந்து பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில் அரசாங்கம் போடும் சட்டங்கள் சாதிய சமூகத்தின் முன்னால் செயலற்றுப் போய்விடுகின்றன. அவற்றைச் செயல்படவைக்கும் அரசியல் உறுதி இருந்தாலொழிய இந்த நிலையை மாற்ற முடியாது என்கிறார் திரு. ரவிக்குமார். எனவே இந்த மாறுதல் நோக்கிய முயற்சிக்கு செயல்வடிவம் கொடுத்து, சமத்துவத்தை ஊக்குவிக்க எடுத்த நடவைக்கையின்விளைவே ஆசிரியர்களுக்கான நிகரி விருது. இவர் இவ்வாறு சமூகத்தை மாற்றக்கூடிய நம்பிக்கையைத் தனது கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துகிறார்.

வானத்தை நோக்கி விட்டெறியும் கனவு
சிலநேரம்
இன்மையிலிருந்து இன்மையைநோக்கிப் பாயும்
எரிகல்லாய் தடயமற்றுப் போகிறது
சிலநேரம்
மின்மினிப் பூச்சியாய் தலையைச் சுற்றி வருகிறது
சிலநேரம் பனியாக மாறி இலைகளில் படிகிறது

வானை நோக்கி விட்டெறியும் கனவு
நட்சத்திரமாக மாறுவது
எப்போதோதான் நடக்கும்.
என்றபோதிலும் மனந்தளராதே
உன் முன்னோர் எறிந்த கனவுதான் நிலவு
சூரியனும்கூட அப்படியென்றுதான் சொல்கிறார்கள்

தனது சமத்துவக் கனவிற்கு “நிகரி விருது” மூலம் செயல்வடிவம் கொடுத்து, தளரா நம்பிக்கையுடன் சமூகப்பணி செய்து வரும் திரு. ரவிக்குமார் அவர்களைப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

_____________________________________________________________________________________________

மேலதிகத் தகவல்களின் இணைப்பு …

ரவிக்குமார் அவர்களின் படைப்புகள்:

கட்டுரைத் தொகுப்புகள்: –
1.கண்காணிப்பின் அரசியல், விடியல் பதிப்பகம், 1995
2.கொதிப்பு உயர்ந்துவரும் , காலச்சுவடு, 2001
3.கடக்க முடியாத நிழல்,காலச்சுவடு,2003
4.மால்கம் எக்ஸ்,காலச்சுவடு,2003
5.வன்முறை ஜனநாயகம், தலித் வெளியீடு, 2004
6.சொன்னால் முடியும், விகடன்,2007
7.இன்றும் நமதே, விகடன்,2008
8.சூலகம், உயிர்மை, 2009
9.கற்றனைத்தூறும், உயிர்மை, 2009
10.பிறவழிப் பயணம், உயிர்மை,2010
11.பாப் மார்லி, உயிர்மை, 2010
12.அண்டை அயல் உலகம், உயிர்மை,2010
13.ஆள்வதன் அரசியல், உயிர்மை, 2010
14.தமிழராய் உணரும் தருணம், ஆழி பதிப்பகம், 2010
15.துயரத்தின்மேல் படியும் துயரம், ஆழி பதிப்பகம்,2010
16.காற்றின் பதியம், மணற்கேணி,2010
17.கடல்கொள்ளும் தமிழ்நாடு,மணற்கேணி,2010
18. மீளும் வரலாறு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,2010
19.காணமுடியாக் கனவு, ஆழி பதிப்பகம், 2011
20.சொல்லும் செயல், மணற்கேணி, 2011
21.அ-சுரர்களின் அரசியல்,மணற்கேணி,2014

கவிதை: –
1.அவிழும் சொற்கள், உயிர்மை, 2009
2.மழை மரம், க்ரியா,2010

சிறுகதை: –
1.கடல் கிணறு, மணற்கேணி,2014

மொழிபெயர்ப்பு: –
1.உரையாடல் தொடர்கிறது, விடியல்,1995
2.கட்டிலில் கிடக்கும் மரணம்,மருதம்,2002
3.வெளிச்சமும் தண்ணீர்மாதிரிதான்,தலித் ,2003
4.பணிய மறுக்கும் பண்பாடு,காலச்சுவடு,2003
5.வரலாறு என்னும் கதை, மணற்கேணி,2011
6.வலசைப் பறவை, மணற்கேணி,2011
7.அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்,மணற்கேணி,2011
8.மாமிசம்,மணற்கேணி,2014
9.அதிகாரத்தின் மூலக்கூறுகள், மணற்கேணி,2014
10.வெள்ளை நிழல் படியாத வீடு, மணற்கேணி,2014
11.குரல் என்பது மொழியின் விடியல்,மணற்கேணி,2014

ஆங்கிலம்: –
Venomous Touch,Samya,2010

தொகுப்புகள்: –
1.தலித் கலை இலக்கியம் அரசியல், தலித் கலைவிழாக்குழு,1996
2.தலித் என்னும் தனித்துவம், தலித் வெளியீடு ,1998
3.அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், 4 தொகுதிகள், தலித் சாகித்ய அகாடமி,1999
4.ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், தலித் சாகித்ய அகாடமி , 1999
5. தலித் காலம், தலித் வெளியீடு,1998
6.மிகைநாடும் கலை,காலச்சுவடு,2003
7.தொல்.திருமாவளவன் எழுத்துகள், 17 தொகுதிகள்,கரிசல்,2008
8.ஒடுக்கப்பட்ட இந்துக்கள், கரிசல்,2008
9.எங்கள் காலத்தில்தான் ஊழிநிகழ்ந்தது, மணற்கேணி,2010
10.நூர்ந்தும் அவியா ஒளி,மணற்கேணி,2010
11.சுவாமி சகஜானந்தா, மணற்கேணி,2010
12.எல்.இளையபெருமாள், மணற்கேணி,2010
13.பள்ளிப்பருவம், மணற்கேணி,2014
14.நூல் ஏணி,மணற்கேணி,2014

ஆங்கில தொகுப்புகள்: –
1.We the Condemned, PUCL,1998
2.Waking is another dream, Navayana,2011
3.Tamil Dalit writing,Oxford,2012

***

வல்லமையாளரின் தொடர்புக்கு:
திரு. ரவிக்குமார்
ஆசிரியர், மணற்கேணி
எண் 2, நோபிள் மேன்ஷன்
10, டாக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி
சென்னை 600005

Manarkeni Publication
B-1-4 Templeway Avenue
East coast road
Lawspet
Pondicherry 605 008

tamildalithistory@gmail.com
adheedhan@gmail.com
Mobile: 94430 33305

http://manarkeni.blogspot.com/
http://nirappirikai.blogspot.com/

***

கட்டுரைக்கான செய்தி மற்றும் தகவல் பெற்ற இடங்கள்:
செய்தி: சமுதாய அக்கறையை விதைப்பவரே உண்மையான ஆசிரியர்: துணைவேந்தர்
http://www.dinamani.com/edition_trichy/trichy/2015/09/06/சமுதாய-அக்கறையை-விதைப்பவரே-/article3013434.ece

நிறப்பிரிகை மற்றும் மணற்கேணி இணையதளங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. அரசியல்  சார்ந்த செய்திகளைத் தவிர்த்திருக்கலாம்.அரசியலுக்கு வல்லமையில் இடம் உண்டா?

  2. தக்க சான்றுகளுடன் கூடிய நியாயமான, பண்பாடு குறையாத அரசியல் விமர்சனங்களை வல்லமை மறுப்பதில்லை. இந்த வார வல்லமையாளர் விருதிற்கான காரணம் திரு ரவிக்குமார் அவர்களின் நல்லதொரு செயற்பாடான, ஆசிரியர்களிடம் சமத்துவ நெறியை ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுதான். அவரைப் பற்றிய அறிமுகத்திற்காக சில விசயங்களை தேமொழி சேர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இனி வரும் பகுதிகளில் இது போன்று அரசியல் சார்ந்த தனிப்பட்ட செய்திகளை தவிர்த்துவிடுவார் என்று எதிர்பார்ப்போம்.

    திரு ரவிக்குமார் அவர்களின் ஏற்புரை மடல் இதோ:

    வகுப்பறையில் சமத்துவம் என்பது கல்வியில் அக்கறைகொண்ட ஆசிரியர்களாலும் கவனிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. பாடத்திட்டத்தில் சமத்துவம், பொருளாதார சமத்துவம், பாலின சமத்துவம், மத சாதி பாகுபாடுகளற்ற சமத்துவம், நகர்ப்புற, கிராமப்புற மாணவர்களிடையே சமத்துவம் – இப்படி பல கூறுகள் இருக்கின்றன. அரசாங்கமும், ஆசிரியர்களும் இதுகுறித்த புரிதலோடு செயல்பட்டாலன்றி இந்த சமத்துவத்தை ஏற்படுத்த முடியாது.

    இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற்கேணி மேற்கொண்டிருக்கும் முயற்சி மிகவும் சிறியது. அதை அடையாளம் கண்டு நீங்கள் அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    அன்புடன்
    பவள சங்கரி

  3. என்ன தான் அரசியலில் இருப்பவர்கள் சமூகப்பணி ஆற்றினாலும் இணையம் அவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால அதை அவர்கள் மனம் தமது அரசியல் வாழ்க்கைககாகப் பயன்படுத்திக்கொள்ளத்தான் தோன்றும். இது இயல்புதானே மேடம்! இன்றிருக்கும் நிலை பேசவே தேவையில்லாத அனைவரும் அறிந்த ஒன்று. 

  4. @ Lakshmi …

    ///அரசியலுக்கு வல்லமையில் இடம் உண்டா?///

    அரசியல் தலைவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டிகள் வல்லமை இதழில் இடம் பெற்றுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 

    ஒருவரது செயல் சமூக அளவில் தாக்கம் ஏற்படுத்துவது உணரப்பட்டால், அவர் வல்லமைக் குழுவினருக்குப் பரிந்துரைக்கப் பட்டு, முடிவெடுக்கப்பட்டு அவரைப் பாராட்டும் கட்டுரை எழுதப்படுகிறது. 

    அவர் பொது வாழ்வில், அரசியலில் உள்ளவர் என்றால், அவர் பின்னணியைக் குறிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது, அத்துடன் அதில் மறைப்பதற்கும் எதுவுமில்லை. 

    மேலும் உங்கள் கோணத்தை விளக்க விரும்பினால், 
    1. கட்டுரையின் எந்தப் பகுதி(அரசியல்)  பொருத்தமற்றது என்றோ… அல்லது
    2. அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்குவது விரும்பத் தக்கதல்ல என்றோ தோன்றினால் …
    அதனைத் தெளிவாகக் குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

  5. கண்களை இறுக மூடிக்கொண்டால் இந்த உலகம் ஒருபோதும் இருண்டு போகாது. அரசியலற்ற மனிதர் வாழ்வு அரிதிலும் அரிது . அரசியலை .விலக்கி நிற்பதால் மறைமுகமாகவும் நேரடியாகவும் நமக்கும் நம் தலைமுறைக்கும் நாம் இழைக்கும்  துரோகம்  இன்றைய சமூகத்தில் அரசியல் மட்டுமல்ல  எல்லா துறைகளிலும் ஒழுங்கீனமே தலைதூக்கி நிற்கிறது.அனைத்தையும் அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடமுடியாது.ஜனநாயகத்தில் நாம் எழுப்பும் உரத்த குரலே ஒவ்வொன்றையும் நேர் செய்யும்.-  வில்லவன் கோதை

  6. அரசியலுக்கு வல்லமையில் இடம் உண்டா?  –  
    அரசியலில் கருத்துகளை சொல்வது இழுக்கல்ல.சொல்லுகின்ற கருத்துகளை  நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத்திறனோடும் மனதில் உறுதியோடும் பேச வல்லமைக்கு வல்லமை தாராயோ….      – வில்லவன்கோதை

  7. வல்லமையில் பெண்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். பெண்ணிற்கு என்று முழு உரிமையும்,பாதுகாப்பும் கிடைக்கின்றதோ அன்று எல்லாமே வெளிப்படையாகப் பேச இயலும். தான் என்ற சுயநலம் மிகுந்த அரசியல் மாறி வரும் காலமே வள்ளுவம் கூறிய பொன்னான அரசுக்காலம். மாறுவது யார் கையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் மாறுவதற்கு யாரும் தயார் கிடையாது. தமிழ் இனிமையான மொழி என்ற பெயரில் அரசியல் வளர்ப்பு. வெறும் பொழுதுபோக்கிற்காக டீகடை பெஞ்சுபோல அனைவரும் பேசி விட்டுச் செல்வது வாடிக்கையாகிவிட்ட நிலையில் ஏன் தேவையில்லாத பகிர்வுகள்?மௌனத்தின் வீட்டு வாசலில் நின்று செல்வதே மக்களுக்கு வாடிக்கை.

  8. @ Lakshmi … 

    ///தாங்கள் கூறிய இரண்டாவது பாயிண்ட் தான் சரி./// 

    எனது வேண்டுகோளை ஏற்றுத் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி.  
    தனிப்பட்டவர்கள் கருத்துகள் மாறுபடுவது உலக வழக்கம்தான்.  உங்கள் கருத்தையும் கோணத்தையும்  வல்லமைக்குழுவினர் பரிசீலினையில் கொள்வர் என நம்புகிறேன்.  

    பொதுவாக ஆக்கபூர்வமாக செயல்படுபவரைப் பாராட்டி ஊக்குவிப்பதனால் சமூகத்தில்  நல்ல மாறுதல் தரும் நடவடிக்கைகள் பல  அதிகரிக்கும் என்பதே விருதுகள் வழங்குவோரின் குறிக்கோளாகவே இன்றளவும் இருந்து வருவதை நாம் அறிவோம். 

    உலகின் புகழ் பெற்ற நோபல் அமைதிக்கான பரிசும் கூட அந்த அடிப்படையில்தான் மக்கள் நல்வாழ்விற்காகப் போராடும் சமூகப் போராளிகளை பாராட்டி வருகிறது.   

    உங்கள் கொள்கையை தங்கள் கருத்தாக நோபல் குழு கொண்டு அமைந்திருந்தால்……… 
    Barack Obama, Nelson Mandela, Jimmy Carter, Aung San Suu Kyi, Mikhail Gorbachev போன்ற இக்காலத்தில் நாம் அறிந்த தலைவர் எவருமே  Nobel Peace Prize  பெறத் தகுதி அற்றவர்களாகத்தான் போயிருப்பர்.  

    தங்கள் கோணத்தை விளக்கியமைக்கு மீண்டும் நன்றி. 

  9. சொன்னவர் யார் என்பதை விட, சொன்னது சரியா எனப் பார்ப்பதே முக்கியம்; அதே போல் செய்தவர் யார் என்பதை விட, செய்தது சரியானதா எனப் பார்ப்பதே சீரியது; அந்த வகையில் ரவிக்குமார் அவர்களின் பணி, சமூக மாற்றத்துக்கு உழைப்பவர்களை ஊக்குவிக்கும் எனத் திடமாக நம்புகிறோம். நிகரி விருது, அரசியல் லாபம் கருதியதாக இருக்காது என்பதும் நம் நம்பிக்கை. இந்த முயற்சியை ரவிக்குமார், மேலும் ஊக்கத்துடன் முன்னெடுக்கவும் அதன் மூலம் கல்வித் துறை மேன்மேலும் செழிக்கவும் வாழ்த்துகிறோம்.

  10. உண்மையில் தலைவர் , பொது செயலாளர் அண்ணன் உயர் திரு ரவிகுமர் அவர்கள் இந்த பணி பராட்ட கூடியது ,இவர்களின் ஆற்றல் அளப்பரியது ,அவர்களை பாராட்ட வயதில்லை. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *