பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11997403_889583034429230_1421497424_n

77764357@N05_rதிவ்யா பிள்ளை எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.09.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

19 thoughts on “படக்கவிதைப் போட்டி – 30

  1. ஆனந்த மழையில்
    நனைகிறேன் 
    என் மகன் 
    என் மேல்
    சிறுநீர் கழிக்கும்
    போதெல்லாம் …

  2. வானம் இல்லை
    மேகம் இல்லை
    மழை பெய்வதற்க்கான 
    எந்தஒரு அறிகுறியும் இல்லை
    ஆனால்
    வீட்டுக்குள்
    நித்தம் மழை 
    குழந்தைகளின் மேல்
    அம்மா பொழியும்
    முத்த மழை !

  3. வான மேடையில்
    மேகக்கூட்டம்
    ஒளி ஒலி யுடன்
    பாட்டுக் கச்சேரி
    நடத்துகிறது
    சில நேரங்களில்
    இதமாகவும்
    சில நேரங்களில்
    பலமாகவும்

  4. நீரில்லா  ஊர் பாழ் !

    சி. ஜெயபாரதன்.

    நீரைச் சேமித்து வை, மழை
    நீரைச் சேமித்து வை.
    ஒவ்வோர் வீட்டிலும்
    தேவை
    ஒரு மழைநீர்க் கிணறு !
    இல்லையேல்
    ஊரில் தாகம் மிகும் !
    நீர்ப் புரட்சி எழும் !
    ஊர்ப் பூகம்பம்  உண்டாகும் !
    தண்ணீருக்குப் பணமா ?
    கண்ணீர் பெருகும். 
    தமிழகத்தில் 
    வரப் போகுது பார்
    தண்ணீர்ப் பஞ்சம் !
    சென்னையில் வந்தது
    ஒருமுறை 
    தண்ணீர்ப் பஞ்சம் ! 
    தவித்துப் போயினர் மக்கள் !
    தனி ஒருவனுக்கு 
    தாகம் தீர்க்க 
    குடிநீர் இல்லையேல்,
    தமிழகத்தில்
    எழப் போகுது 
    எரிமலைக் கிளர்ச்சி !

    +++++++++

  5. கையளவு கடல் நீரெடுத்து 
    மைபோட்டுத் தேடுகிறேன்
    காவு கொண்ட​ உயிர்களின்
    எச்சங்களையாவது பார்க்கலாமென​
    வேவு பார்க்கவில்லை கடலே
    விருந்துண்ண​ வரவில்லை
    உன் பசிக்கு விருந்தான​ 
    என் சுற்றம் தேடுகிறேன்
    நித்தம் நீ உணவு தந்தாய்
    பலருக்கு வாழ்வு தந்தாய்
    சிலர் உயிர் அடங்க​ 
    புகலிடமும் தந்தாய் 
    உன் பெருமை அறிந்திருந்தும்
    உன்னைப் போற்றவில்லையென்றா 
    கொதித்தெழுந்து வாரிச் சென்றாய்
    கையிலுள்ள​ நீரே 
    கதை சொல்வாயா
    ஓர் துளியென்றாலும் நீ
    கடல் நீர் தானே

    ராதா மரியரத்தினம்
    15.09.15

  6. துளி துளியாச் சேமித்தான்
    நிலத்தடி நீரை என் பாட்டன்
    அத்தனையும் தூர்வாரி
    அழிக்காம​ அழிச்சுப்புட்டோம்
    அருகி வரும் மரஞ்செடிகள்
    பெருகி வரும் கட்டிடங்கள்
    அழிவு காலமெனக் 
    கட்டியம் கூறிநிற்க
    வராமல் நின்ற​ மழை
    பிறிதொரு நாளில்
    தன் துயர்கொட்டிப் பெய்ய​
    ஒரு கை நிறைத்தெடுத்தேன் 

    ராதா மரியரத்தினம்
    15.09.15

  7. வண்ண மழை…

    தினம் ஒரு 
    வண்ணத்தில் 
    வந்த மழையில் 
    நனைதல் பற்றிய 
    குறியீட்டுக்குள் 
    ஒரு சங்கேத பாஷையாக 
    நிறமற்ற வெளியின் 
    குடை கொண்டு 
    தடுக்கும் 
    உறுத்தலின் கைக்குள் 
    தங்காமலே கடந்த பின்னும் 
    மிச்சமிருக்கிறது 
    கடந்த மழையின் 
    வண்ணம்…

    கவிஜி 

  8. உள்ளங்கையில் பட்டுத் தெறித்து
    உள்ளொளி பெற்று ஒளியாய்ப்
    பொறிந்து வெண்மை ஒளியாய்ச்
    சிதறி எழுந்து நான் உள்ளே
    வந்தால் முழுதும் நிரம்பிய
    அணைக்கட்டும் உடைந்தே
    தெறிக்கும் என்றே உணர்த்தும்
    ஒரு துளி தண்ணீர் – அது
    வெள்ளை உள்ளம் கொண்டே
    வாழுகின்ற ஏழையின் கண்ணீர்
     
    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  9. குடிநீர்ப் பஞ்சம்

    சி. ஜெயபாரதன்

    கடல்நீர் பேரளவில்
    முடங்கிக் கிடந்தாலும்,
    குடிநீர் இல்லாத
    ஊர்கள்
    கோடி கோடி !
    பசுஞ் சோலை இல்லா
    பாலை வனங்கள் உண்டு. 
    நேற்று
    சிரித்தோடிய 
    சிற்றாறு
    இன்று
    விதவை போல் 
    வெந்நிற ஆடை உடுத்தி
    மண் குவாரி
    ஆனது !
    நாளைய தினம்
    அடுப்பில் கூழ் கிண்ட 
    நீரில்லை !
    குடிக்க நீரில்லை !
    கிணறுகள்
    தோண்டப் பூதங்கள்
    எங்கே ?

    +++++++++++++

  10. “ஒரு உயிரின் பயணம்!”

    கட்டுக்கடங்காப் பருவத்தில் – உடல்
    விட்டகலாத மோஹத்தில் – தினம்
    மெட்டுக்கடங்காக் கவிதையைப்போல் -நானும்
    சிட்டாய்த் திரிந்தேன் ஒருகாலம்.

    கட்டியமனையாள் காலடியில்- நிதம்
    கட்டியணைத்துச் சில‌காலம் – அவளைத்
    தொட்டுத்தடவி இன்பங்கண்டு -நானும்
    பட்டெனப் பறந்தேன் ஒருகாலம்.

    தட்டுத்தடவி நடைதளர்ந்து – பார்வை
    பட்டும்படாமல் தடுமாறி – உடல்
    கட்டுந்தளர்ந்து உருமாறி – நானும்
    பட்டேன் நோயினில் ஒருகாலம்.

    விட்டுப்பறந்தது ஆவியிங்கு -உடல்
    விட்டுப்பிரிந்தது உயிர்க்கோடு – நால்வர்
    தொட்டுத்தூக்கிட சிதையினிலே -நானும்
    சுட்டுக்கரிந்தேன் ஒருகாலம்.

    திட்டாய்க்கலந்தேன் பூமியிலே – ஒரு
    மொட்டாய்மலர்ந்தேன் பூவினிலே – சிறு
    குட்டையில்வீழ்ந்தேன் இதழாக – நானும்
    மட்டறக்கரைந்தேன் ஒருகாலம்.

    சுட்டிடும்சூரிய ஒளியாலே – வெளி
    எட்டிப்பறந்தேன் ஆவியாய் – மேகக்
    கூட்டில்சேர்ந்து மழையெனவே – நானும்
    கொட்டிக்குவிந்தேன் கார்காலம்.

    நீட்டியகரத்தின் குவியலிலே – பல‌
    சொட்டுத்திரளாய் வீழ்கையிலே – சற்று
    எட்டிப்பார்த்தேன் யாரெனவே -நானென்
    துணையினைக்கண்டேன் மகிழ்காலம்.

    பட்டவள்கையிற் பட்டவுடன் -உடன்
    சட்டெனஏதோ எனக்குள்ளே -உயிர்ப்
    பட்டெனச்சிலிர்த்தேன் உவகையிலே- நானும்
    ஒட்டிக்கலந்தேன் உணர்காலம்!

  11. இந்தப் பிரபஞ்சத்தின் 
    இறுதி மனிதனின் கைகள்
    அதன் சுருக்கம் சொல்லும் 
    அவன் வாழ்ந்த​ காலங்களை
    நடை தளர்ந்து தள்ளாடி வருகிறான்
    கண்ணுக்கெட்டிய​ தூரம் வரை வறட்சி
    பட்ட​ மரங்கள் விதவைகள் போல் மூளியாக
    நெருப்பில் எரிந்த​ பூமி
    புல் பூண்டுக்கும் இடமில்லை
    வானத்தைப் பார்க்கிறான்
    எந்த​ சலனமுமில்லை 
    பிடி தளர​ நிலத்தில் விழுந்து 
    கதறி அழுகிறான்
    இவன் கைகள் வெட்டிய​
    மரங்களை நினைவு கூருகிறான்
    சிட்டுக் குருவிகள் போட்ட​ சாபமோ
    இன்றும் நீர் இல்லையெனில்
    இவன் மரணம் இன்று தீர்ப்பிடப்பட்டிருக்கும்
    பூஞ்சையான​ கண்களில் நீர் துளித்தது 
    வெடித்து இரத்தம் வடிப்த​ உதடுகளால்
    சிரிப்பொன்றைக் கோடி காட்டினான்
    சுடலை ஞானமோ,,என்றோ ஒரு நாள் 
    தவித்த வாய்க்குத் தண்ணீர் 
    கொடுத்ததாய் ஞாபகம்
    இடி இடித்தது சடசடவென​ கோரமழை
    நடுங்கும் கரங்களில் 
    இறைவனின் கருணையை ஏந்தினான்.

    ராதா மரியரத்தினம்
    16.09.15

  12.   இந்தியா ஒரே தேசம்

    காவேரியை வழி மறித்து
    தமிழகத்தைத் தவிக்கவிட்டு
    சட்டம் பேசி
    சண்டித்தனம் செய்கிறது 
    கர்நாடகம்

    முல்லைப் பெரியார்  என்றாலே
    முகம் சுழித்து
    நகம் கடிக்கிறது
    கேரளா

    ஒவ்வொரு ஆண்டும்
    துப்பாயத் தூவும் மழை
    தப்பாது பெய்யுமாவென
    தலை மேல் கைவைத்து
    காத்திருக்கிறது தமிழகம்

    மேட்டூர் வற்றும் பொழுதெல்லாம்
    பாலைவனமாவது
    பாசன வயல்கள் மட்டுமல்ல
    ஏழைகளின் வாழ்வும்தான்!

    உங்களுக்கு
    உரிமையுள்ள நீரென்றாலும்
    விரல்களைக் கழுவக் கூட
    விட மாட்டோமென
    அடம் பிடிக்கின்றன
    அண்டை மாநிலங்கள்

    இதில் 
    இடக்கரடக்கலாய்
    எங்கிருந்தோ ஒரு குரல்
    இந்தியா ஒரே தேசம்
    இந்தியர் அனைவரும் சகோதரர்

  13. இனி இப்படித்தான்…..
    இனி இவ்வளவு தான்…..
     
    உள்ளங்கையில் தாங்கும்
    ஒவ்வொரு துளிகளாய்
    ஒவ்வொன்றும் உயிர்த் துளிகளாய்…
     
    அருகி வரும் நீர்நிலைகள்
    பெருகிவரும் நீர்த்தேவைகள்….

    இனி இவ்வளவு தான்…
    இனி இப்படித் தான்….

    ஒரு துளி  குடிக்க,
    ஒரு துளி குளிக்க,
    ஒரு துளி களிக்க,
    ஒரு துளி கழிக்க…..

    அறிந்தும் அறியாமலும்…
    தெரிந்தும் தெரியாமலும…
    நீர்நிலைகளில்
    மனிதர் செய்த பிழைகளை
    மறந்தும் மன்னிக்க
    இயற்கை தயாரில்லை…..

    மூண்டெழும்
    மூன்றாம் உலகப் போர்
    வேண்டிடும் நீருக்காக
    விளையும் உண்மையை
    உணர்ந்தால் மனிதர்
     
    உள்ளங்கைகளில் தான்
    உயிர்த்துளிகளாய் மனிதர்
    தாங்கிட வேண்டும் நன்றாய்…
     அதுவரை….அதுவரை….
    இனி இப்படித்தான்….
    இனி இவ்வளவே தான்….

            இளவல் ஹரிஹரன்,மதுரை.

  14. காலத்தின் கோலம்…

    அன்று மழையைக் கையிலேந்த
         அம்மா தடுத்து விடவில்லை,
    அன்பு பாசம் அனைத்தும்நிறை
         அன்னை உருவம் அதுதானே,
    இன்று முதுமைத் துணைதவிர
         இல்லை எவரும் துணையெனவே,
    என்றும் தன்கை தனக்குதவி
         ஏந்திடும் என்கை குடிநீர்க்கே…!

    -செண்பக ஜெகதீசன்…

  15. உழவனோடு மழைத்துளி 

    நேற்று நான் விளையாடிய 
    காடுகளை அழித்துக்
    கட்டிடம் கட்டி என் கனவுகளை 
    சிதைத்தவர்களால் 
    ஆங்காங்கே அடைமழைஎன்று 
    ருத்ர தாண்டவமாடினாலும்  
    என்னைக் கொண்டு பசுமை செய்யும் 
    உழவுத் தோழா நான் 
    உன்கையில் விழும்போதுதான் 
    மீண்டும் குழந்தையாகி விடுகிறேன் 

    நான் வரத் தாமதமானால் 
    கலங்கிப்போகும் 
    என் தாயல்லவா நீ.
    அதுபோல் நான் வந்துவிட்டால் 
    மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் 
    சேயல்லவா நீ.

    விண்ணுக்கும் மண்ணுக்குமான 
    தொப்புள் கொடியுறவல்லவா 
    உனக்கும் எனக்கும்.
    புரட்சி புரட்சி என்று 
    போர்க்கொடி பிடித்து 
    மார்தட்டிக் கொள்ளும் இந்த பூமியில் 
    நீயும் நானும் கைகோர்த்த புரட்சி 
    இல்லாமல் போனால் 
    வரட்சியல்லவா அவர்கள் 
    வயிறும் வாழ்வும்.

    என் வருகைக்கு 
    எதிப்புக் காட்டும் முகமாய் 
    குடையும் கூரையும் போட்டு 
    மறைந்து போகும் அவர்கள் மீதில்லா 
    அன்பும் ஆனந்தமும் 
    உன்மீது எனக்கதிகம் என்பதாலேயே 
    உன் ஓட்டைக்கூரை வழியே 
    உன் வீட்டுக்குள் வந்துவிடுகிறேன்.

    சாப்பிட ஏதாவது கொடுக்காவிட்டாலும் 
    நீதான் உன் சாப்பாட்டுக் 
    கோப்பையிலாவது என்னைத் 
    தங்கவைத்து அனுப்புகிறாய் ..
    ஏய் உழவுத் தோழா 
    எதிர்பார்ப்பு இல்லாமல் 
    உனக்குதவி செய்தாலும் இன்னும் 
    ஏழ்மை என்னும் நிலையில் நின்று நீ 
    என்றென்றும் என்னை மட்டுமே 
    எதிர்பாத்து நிற்கிறாய் 

    யார் கையையும் நம்பி 
    நீ இல்லாதபோதும் 
    உன் கையை நம்பி இருக்கும் 
    உலகத்தார் முன்  நீ உன் 
    நம்பிக்கையை விட்டுவிடாதே!

    நீ என்னை நம்பி
    கையை விட்டாலும் 
    மறையும் நான் உனக்காக
    நாளையும்  வருவேன். 
    நன்றிக் கெட்ட உலகத்தில் 
    நம்பிக்கையை விட்டு விட்டால்
    கைகொடுக்க யாருமில்லை புரிந்துகொள்.

    *மெய்யன் நடராஜ்

  16. மழை ! கேட்ட மாத்திரத்தில்

    உள்ளந்தனில் குதூகலித்து

    தெரித்திடும் – மகிழ்ச்சி அலை !

    மழை அது – மண் சேர்ந்த மாத்திரத்தில்

    பரவுமே உள்ளங்கவர் வாசம் !

    வாசனையில் இலயித்து

    நாசியும் உள்ளிழுக்குமே

    புத்துணர்வு நிறை சுவாசம் !

    உள்ளங்கைதனில் ஏந்தி மகிழ்ந்திட

    உள்ளமும் புதிதாய் பிறந்து

    குதூகலிக்குமே – சிறு கிள்ளையென !

    மழைதனை புறக்கணிக்காது

    வரவேற்போம் மழையை

    மண் நோக்கி ! மழையின் வரவில்

    மகிழ்ந்து மணம் பரப்பட்டும்

    அன்னை பூமி !

  17.                                    பூகம்பம்
    வண்ண வண்ண ஆடைகள்
    காகம் கழுகு உண்ணக் காத்திருக்கும்
    யாக்கை நிலையறியா கூட்டங்களின்
    பாலியல் வன்முறைகள்!
    தாரம் சகோதரி
    வேறுபாடறியா கைக்கிளைக் காதல்
    விஸ்வரூபங்கள்!
    தந்தை தாய் உற்றதுணை
    ஒருவரே என்பதை அறியா விலங்குகள்!
    வண்ண வடிவ நகை வகைகள்
    வழிப்பறி அபசாரங்கள்!
    வண்ண வடிவ அடுக்கக் கட்டிடங்கள்
    அணிவகுப்பில் 
    நிழலாகி வளர்த்த
    மரங்கள்
    அறுவைத் தொழிற்சாலையில்
    மரணித்து விட்டன
    சுயநலக் கூட்ட மனிதப் பதர்களின் 
    பணக் கருவூலக் கொண்டாட்ட 
    பவனி உலா!
    செவிகேள் உணரா கடிகார ஓட்டத்தில்
     ஓடும் மானிடனே!
     நில்லா இயந்திர உலகில்
    தண்ணீர் தேடி ஓடும் காலம்
    என்று முடியும்?
    சுயநலப் பிள்ளைகளின் 
    அர்த்தமற்ற ஆசைகளின்
    விபரீத விளைவு
    என்னுள் ஆரம்பம்!
    வண்ண  விபரீத ஆசைகளின்
    அலங்கோலங்களின் பின்னணியின்
    இறுதிக் காலத்தில்
    உலர்ந்த உதடிற்கு எதைத் தருவது?
    நில்லா உலகில் 
    புகழ் தேடி வாழ்வதுதான்
    நீ காண விரும்பிய மெய்ப் பொருளா!
    நிலந் தேடி வாழ்க்கைப் பொருளை
    தொலைத்து வாழும்
    மானிடனே!
    வாழ்க்கையின் பொய்ப்பொருளை விடாது
    தேடிக் களைத்த மானிடனே!
    வண்ண வண்ணப் பூக்களை
    மட்டும் உன் உள்ளங்கை
    அளவு நீர் ஊற்றி வளர்க்க
    ஏன் மறந்தீர்!
    உழவு மறந்த விவசாயி
    உழைக்க மறுப்பதன்
    காரணம் அறியாயோ!
    இலவசங்களின் வருகை
    சோம்பேறிகளின் கூடாரம்!
    கண்ணீர்ப் பந்தலுக்கு
    அஸ்திவாரம் ஆரம்பம்!
    சட்டதிட்டங்களின்
    பாராமுகத்தினால்
    என் கோரமுகத்தினை
    வெளிக்காட்ட
    காத்திருக்கிறேன்!
    நெகிழிப் பகைவன்
    வளர்த்த உன் உறவுகள்
    தண்ணீர்த் தங்கத்தை
    உருவாக்க மறந்தது
    ஏனோ!
    சாதிக்க நினைக்கும் 
    மனதிற்கு வழிகாட்ட
    சா(தீ)தி வளர்ப்பது
    அரசியல் நோக்காகி
    விட்ட இவ்வுலகில்
    திருநாவுக்கரசனின்
    தண்ணீர்ப் பந்தலும்
    என்றுமே நிலமகளைக் குளிர்விக்க
    சிவார்ப்பணம் ஆகுமோ!
    எனது வருகை
    உனது அழிவன்றோ!
    துன்பங்கள் தொலைக்க
    நீர்வளம் காக்க
    வருவாயா மானிடனே!

  18.                                தண்ணீர் தேடல்
    பாரிஜாதப் பூவில்
    ஒட்டிய வண்ணத்துப்பூச்சியின்
    தண்ணீர் தேடலில்
    தொலைந்து போன
    குளங்கள்
    காக்கையின் விதை
    விதைப்புப் படலத்தில்
    தொலைந்து போன
    ஏரிகள்
    சுயநலமற்ற மரங்களின்
    தாகம் தீர்க்கும் காண்டத்தில்
    தொலைந்து போன
    நிலத்தடி நீர்
    திரண்ட மேகங்களின்
    கருச்சுமையை 
    இறக்கி மதலையாக்கிய
    மழைநீர் இலம்பகத்தில்
    தொலைந்துபோன
    மழைநீர்த் தேக்க நிலைகள்
    மரம் நட மறந்த
    பூகம்ப வருகை விரும்பி
    அடுக்ககவாசிகளின்
    இயந்திரத் தேடலின்
    அசுரப் பசியில்
    தொலைந்து போன
    சுவைநீர்

    மனித நேயம் மறந்த
    மக்களுடன் உறவாட
    வேண்டிய கட்டாயத்தில்
    தொலைந்துபோன
    காற்றையே சுவாசித்து
    வாழும் அடிநீர் குழாய்கள்
    உப்பு நீரால் சூழப்பட்டு
    கண்ணீர்க் கடலில்
    வாழும் மதுக்குடிசைவாசிகளின்
    தொலைந்து போன
    சிரிப்பைத் தேடி
    கூற்றுவனாய்
    அமில மதுத் தண்ணீர்
    உள்ளங்கையில் ஏந்தி
    நிற்பது யார்?
    கால் கடுக்க உணவுப் பொருளுக்கு
    ரேஷனில் நின்ற காலம் போய்
    தண்ணீருக்கும் வண்ணக்குடங்களில்
    நீர் வரையறை அளக்கும்
    காலம் வரும்வரை
    உள்ளங்கையில் இடும் கணக்கீடு
    சொட்டு நீருக்காக
    ஓட்டை லாரியின்
    வருகைக்காக குளிக்க்க் காத்திருக்கும்
    தார் பூசிய 
    சாலை கணக்காய்
    உழவு மறந்த மனிதனாய்
    காத்திருப்போம்!

  19. அவசர நடவடிக்கைஏரிகள் எல்லாம்
    கான்கீரீட் கட்டடமாயின
    ஊற்று நீர் எல்லாம்
    உருமாறி போயின
    வசதி படைத்தோர்
    ஆழ்கிணறு துளைபோட்டு
    நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டார்
    அவசியங்களை
    அலட்சியப்படுத்திவிட்டு
    அவதிப்பட வைக்கிறார்கள்
    அரசியல்வாதிகள்
    கருணனை யாக தருவதற்கு கூட
    கர்னாடகா தயாரில்லை
    நீரின்றி அமையாது உலகு
    வேர்றுருந்து போனால்
    விளையும் பயிரில்லை
    சோர்ந்து நிற்கும் மக்கள்
    சார்ந்து நிற்பது வானத்தை
    விழும் மழை நீரை
    மகிழ்ந்து கையிலேந்தி
    வேடிக்கை பார்க்காமல்
    மழை நீரை சேமிக்க
    மழை நீரைவிதைப்போம்
    தயாராவோம் அடுத்த
    தலைமுறைக்கு
    பணத்தைவிட
    தண்ணீர் அவசியம்
    அவசரகால நடவடிக்கை
    எடுப்போம்

    சரஸ்வதி ராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *