நிர்மலா ராகவன்.

தவற்றைத் தவற்றால் திருத்த முடியுமா?

உனையறிந்தால்

கேள்வி:
ஒரு குழந்தை செய்யும் தவற்றை இன்னொரு தவற்றால் திருத்த நினைப்பவர்களைப்பற்றி..?

விளக்கம்:
குழந்தைகளுக்குத் தாம் செய்வதில் சரி எது, தவறு எது என்றெல்லாம் ஆராயத் தெரியாது. தவற்றுக்குத் தண்டனை கிடைத்தாலும், எங்கே தவறு செய்தோம் என்றும் புரியாது. சற்று பெரிய குழந்தைகளானால், தாம் செய்தது குற்றமே இல்லை என்று அவர்கள் நினைக்கும்போது தண்டனை அளித்தல் எதிர்மாறான விளைவைத்தான் அளிக்கும்.

உண்மைக் கதை:
இரண்டு வயதான அந்தக் குழந்தை தெருவில் தனது மூன்று சக்கர சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். பக்கத்திலேயே அவனுடைய தாய். எதிரே அவனைவிடச் சற்றுப் பெரிய நண்பன், சாங், தனது சைக்கிளில் வர, வேடிக்கை என நினைத்துச் சிரித்தபடி, குறுக்கே போய், `ஆக்சிடெண்ட்!’ என்று கத்தினான். அவனும், சைக்கிளும் விழுந்தார்கள். (தொலைகாட்சி விளம்பரங்களில் பார்த்து ரசித்தது). தாய் சிரித்தபடி அவனைத் தூக்கிவிட்டாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சாங்கின் தந்தை ஆக்ரோஷமாக அங்கு வந்தார். `அவன் எவ்வளவு சின்னப் பையன்! உன்னால் கீழே விழுந்துவிட்டான், பார்!’ என்று பையனின் காதைப் பிடித்தார். ` ஸாரி சொல்லு!’

பையன் முறைத்தான். அவன்தானே திடீரென்று குறுக்கே வந்தான்? தான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! `இப்போ கேக்கறியா, இல்லே..,’ தான் கொடுக்கும் தண்டனை என்னவாக இருக்கும் என்று சொல்லாமலே விட்டார். அதற்கும் சாங் மசியவில்லை. ஆத்திரத்துடன், மகனை ஒரு கையால் தூக்கினார். அவனது வாகனத்தை இன்னொரு கையால் இழுத்தபடி வீட்டுக்குள் நுழைந்தார். வயதுக்குரிய வளர்ச்சி இல்லாதிருந்த அந்தப் பையன் இன்னும் சுருங்கிப்போனான் — கிடைக்கப்போகும் தண்டனையை நினைத்து. வீட்டுப் பாடம் பண்ணாவிட்டாலோ, எதிர்த்துப் பேசினாலோ அடிக்கடி கிடைப்பதுதானே!

அடுத்த ஒரு மணி நேரம் அவனை வீட்டின் ஒரு மூலையில் நிற்க வைப்பார். அசையக்கூடாது. வாயே திறக்கக்கூடாது. என்ன அவசரமானாலும், நகரக்கூடாது. அன்று சாப்பாடு வாயிலும் மண். `YOU ARE GROUNDED! ‘ என்று கொக்கரிப்பார் தந்தை. அப்பாவின் தண்டனை சரியா, தப்பா என்று ஆராயும் வயதில்லை அவனுக்கு. அவர் செய்ததுபோல், தான் சொன்னதையெல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என்று நண்பர்களை அதிகாரம் செய்ய ஆரம்பித்ததில், அவனுக்கு நண்பர்களே இல்லாமல் போனார்கள். அவனுடைய சிறிய உருவத்தைப் பிறர் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

தெருவில் பலர் பார்க்க நடந்த `விபத்தை,’ `ஏதோ சிறு பிள்ளைகளின் விளையாட்டு!’ என்று விட்டிருந்தால், சமாசாரம் அத்துடன் முடிந்திருக்கும். வயதானவர் ஒருவரின் அதிகாரப் போக்கால், மகனை இன்னும் தனிமைப்படுத்திவிட்டார். தாயையாவது தன் வழிக்குக் கொண்டுவருவதற்கு அவனுக்கு ஓர் உபாயம் புலப்பட்டது. எல்லாவற்றிற்கும் சிறுபிள்ளைபோல் சிணுங்கி, மூக்கால் அழுவான். சாப்பிடப் படுத்த, அம்மா தனது கவனிப்பை அதிகரித்துக்கொண்டாள், `குழந்தை ஏனோ வளரவே இல்லையே!’ என்ற தாபத்துடன். (இதெல்லாம் இந்தத் தாய் என்னுடன் பகிர்ந்துகொண்டது).

சாங்கின் பெற்றோர் இருவரும் வெளி உத்தியோகத்திற்குப் போகிறவர்கள். சுமார் பன்னிரண்டு மணி நேரம் வீட்டில் இருக்கவிடாது செய்யும் வாகன நெரிசல், மற்றும் வேலை. அவனை இந்தக் காலத்து நாகரீகத்தின் சின்னம் என்று கூறலாம். அதாவது, தான் மகனுடன் அதிக நேரம் கழிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி பெற்றவளுக்கு. அதை ஈடுகட்ட, அவனுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்கள், மற்றும் கார்ட்டூன் வீடியோக்கள் பரிசளிப்பாள். தந்தையோ, ஒரே மகன் எங்கே கெட்டுவிடுவானோ என்ற அச்சத்துடன், தனக்குத் தோன்றிய விதத்தில் அவனுக்கு ஒழுக்கம் கற்பிக்கிறார்!

அம்மா வாங்கி வந்ததிலேயே சாங்கிற்கு மிகவும் பிடித்த கார்ட்டுன் படம் டாம் அண்டு ஜெர்ரி. ஜெர்ரி என்ற குட்டி எலியானது, டாம் என்ற பூனைக்குப் பைத்தியம் பிடிக்கும் அளவுக்குப் பிராணனை வாங்கும். இது குழந்தைகளுக்குப் பெரிய வேடிக்கை. எலியுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்தப் பாடத்தால், பெரியவர்களை தம்மால் இயன்றவரை துன்புறுத்துவது விளையாட்டு என்று தோன்றிப்போகிறது. தம்மையும் அறியாது, தண்டனையைக் கேட்டு வாங்குகிறார்கள்.

தப்பு செய்தால், உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாடத்தைப் புகட்ட நினைத்திருக்கலாம் சாங்கின் தந்தை. ஆனால், கீழே விழுந்த குழந்தையோ, அதன் தாயோ அவன் விழுந்ததைப் பொருட்படுத்தவுமில்லை, காயம் எதுவும் படவில்லை என்ற பட்சத்தில், சாங்கிற்குக் கிடைத்த தண்டனை அதீதம்தான். நடந்ததில் தன் தவறு ஏதுமில்லை என்று புரிந்ததால், சாங் ஒரு முடிவுக்கு வருகிறான்: இந்தப் பெரியவர்களே நியாயமற்றவர்கள்!

மணிக்கணக்காக மூலையில் நின்று, சிறுநீர் கழிக்கக்கூட நகரமுடியாதபடி செய்வது என்ன கொடுமை! ஒரு சிறுவன் தன்னைப்பற்றி மட்டமாக நினைக்கவும், பெற்றோரை அலட்சியப்படுத்தவும் இம்முறை வழிவகுக்கிறது. பெற்றோரிடம் தோன்றிய அவமரியாதையும், வெறுப்பும் பள்ளியில் ஆசிரியர்களிடமும் பரவுகிறது. பிறர் குறைகூறும்போது, `நாங்கள் அவனை எவ்வளவோ கண்டிப்பாகத்தான் வளர்த்தோம்!’ என்று காலங்கடந்து புலம்புவதில் என்ன பயன்!
திட்டோ, ஒரே ஒரு அடியோ அவ்வளவு பாதிப்பை உண்டாக்காது.

அதுகூட எதற்கு!
`அவன்தான் சின்னப் பையன்! இன்னொரு முறை, அவன் குறுக்கே வந்தால், நீ சைக்கிளை ஒடித்துக்கொண்டு வேறு பக்கம் போய்விடு!’ என்ற அறிவுரையே போதுமே!
`மன்னிப்பு கேட்க முடியாதா! உனக்கு மரியாதை தெரியவில்லை!’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டே இருந்தால், அதன்படியேதான் ஆவார்கள் சிறுவர்கள்.
தவறு செய்தால், ஏன் அக்காரியம் தவறு என்று விளக்கலாம். இரண்டு வயதுக் குழந்தைகூடப் புரிந்துகொள்ளும்.

நான் லட்சணமாக குழந்தை வளர்த்த கதை:
என் பேரன் கைதவறி தன் பானத்தைக் கீழே கொட்டிவிட்டான். பெரிதாக அழ, `போனால் போகிறது!’ என்று நான் சமாதானப்படுத்தினேன். `ஓ, இது செய்யக்கூடிய காரியம்தானா!’ என்று நினைத்தவன்போல், மறுநாள் மெனக்கெட்டு அதைக் கொட்டினான். ஆள்காட்டி விரலை நீட்டி, `நோ!’ என்ற ஒரே வார்த்தையில் என் எதிர்ப்பைப் புலப்படுத்தினேன். மூன்றாவது நாளும் அப்படியே செய்ய, பொத்தென்று முதுகில் ஒன்று வைத்தேன்.

அவன் அழவில்லை. என்னையே பார்த்தான். அன்பைக் கொட்டி, கதைகள் சொல்லி சாதம் ஊட்டும் பாட்டி அடிப்பதென்றால், அது செய்யக்கூடாத காரியம் என்று புரிந்திருக்க வேண்டும். அன்றுடன் அந்த விஷமம் நின்றது. புரியாத குழந்தையாக இருந்தால், (உ-ம்: உங்களுக்குப் பிடித்தமான கண்ணாடிப் பொருளை உடைத்தல்) பெரிதுபடுத்தாமல் விடுவதுதான் குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது. ஏனெனில், இந்த வயதிலிருந்துதான் தான் எவ்வளவு நல்லவன், புத்திசாலி என்றெல்லாம், பெரியவர்களின் பாராட்டிலிருந்து உணர ஆரம்பிக்கிறது குழந்தை.

பொருளை மீண்டும் வாங்கலாம். ஆனால் உடைந்துவிட்ட மனத்தை..?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *